வாழ்வின் நோக்கம்
அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு பணக்காரர். அவரது பல்துறை சார்ந்த அறிவு, மதி நுட்பம், நிர்வாகத் திறன், முடிவு எடுக்கும் விவேகம், ஆலோசனை அளிக்கும் பாங்கு, நற்குணங்கள் ஆகியவற்றைப் பற்றி மக்கள் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர்.

தனது அறிவினாலும், திட்டமிட்ட உழைப்பினாலும் படிப்படியாக முன்னேறி, தற்போது இருக்கும் உயரிய அந்தஸ்துக்கு வந்தவர் அவர்.
ஆனால், அவரது மகனான இளைஞன், மிகுந்த சோம்பேறியாக இருந்தான். அவனது பகல் நேரங்களைத் தூக்கத்திலும், நண்பர்களுடனான வெட்டிப் பொழுது போக்குகளிலும் கழித்துக்கொண்டிருந்தான். எந்த வேலையும் செய்வதில்லை. தந்தையாரும் மற்றவர்களும் சொல்கிற அறிவுரைகளைக் கேட்பதும் இல்லை.
வருடங்கள் கழிந்துகொண்டிருந்தன. தந்தையாருக்கு வயோதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. தன்னுடைய காலத்திற்குப் பிறகு மகன் எப்படி வாழப்போகிறானோ என்கிற கவலை அவருக்கு ஏற்பட்டது.
எனவே அவர் அவனை அழைத்து, “இன்னமும் நீ குழந்தை அல்ல. எப்படி பொறுப்பாக நடந்து கொள்வது என்பது பற்றி நீ கற்றுக்கொள்ள வேண்டியதும், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். அதற்காக நான் உனக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்”என்று கூறி, அவனிடம் ஒரு பயணப் பையைக் கொடுத்தார்.
அதில் நான்கு பருவங்களுக்கும் தகுந்தபடியான நான்கு வித ஆடைகள், வழிச் செலவுக்கான பணம், உலர் உணவு வகைகள் கொஞ்சம், மற்றும் ஒரு வரைபடம் ஆகியவை இருந்தன. அந்த வரைபடத்தில் ஒரு இடம் சிவப்பு மையால் அடையாளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த இடத்தில் புதையல் இருக்கிறது. நீ இதைக் கண்டுபிடித்து எடுத்து வந்தால், அது உனது வாழ்க்கை முழுதுக்கும் போதுமான பொக்கிஷமாக இருக்கும். அதுதான் உனக்கு நான் வைத்திருக்கும் திட்டம். நீ உன்னுடைய நண்பர்களையோ, மற்றவர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ளாமல் தனியாகச் சென்றால்தான் அந்தப் புதையல் கிடைக்கும்” என்றார்.
அவனுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. புதையல் என்றதும் உடனே புறப்பட்டான்.
இவர்களின் ஊர் இருந்தது நாட்டின் ஒரு கோடியில் என்றால், அவன் செல்ல வேண்டிய இலக்கு மறு கோடியில் இருந்தது. இடையே பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளி. அதில் சமவெளி, மலைப் பிரதேசங்கள், வனப் பகுதிகள், பாலைவனம் எனப் பலவிதமான நிலவெளிகள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள். பல்வேறு விதமான கலாச்சாரங்களும் பழக்க வழக்கங்களும் கொண்ட மாநிலங்கள். மாறிக்கொண்டே இருக்கும் இவற்றைக் கடந்து அவன் பயணிக்கும்போது, பருவ காலங்களும் மாறிக்கொண்டே இருந்தன.
பெரும்பாலும் அவன் எங்கும் ஓய்வு எடுக்க விரும்பாமல் தனது இலக்கில் கவனமாக, அதை அடையும் நோக்கத்தோடு மட்டுமே பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இரவுகளில் மட்டும் தங்கி, பகல் முழுக்க பயணம் தொடர்வான். மழைக் காலங்களில் பயணம் தடைபடும். மற்றபடி வெயில், காற்று, பனி எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், பயணித்துக்கொண்டிருந்தான்.
அறியப்படாத இடங்களில், அறிமுகமற்ற மனிதர்கள் பலரும் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், சில மோசடிக்காரர்கள் அவனை ஏமாற்றவும், திருடர்கள் அவனிடமிருந்து திருடவும் முயன்றனர். அவர்களிடமிருந்து சில சமயம் தப்பித்தும், சில சமயம் எதையேனும் இழந்தும் அவனது பயணம் தொடர்ந்தது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு தனது இலக்கு இடத்தை அடைந்தான். அது மிகவும் ஆபத்தான செங்குத்து மலைப் பகுதி. அதன் உச்சியில் உள்ள ஒரு மரத்தின் அடியேதான் புதையல் இருப்பதாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற அவன், அந்த மரத்தடியில், குறிக்கப்பட்டிருந்த இடத்தில், தோண்டிப் பார்த்தான். புதையல் எதுவும் இல்லை.
இடம் மாறியிருக்கலாம் என மரத்தைச் சுற்றி பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே தோண்டிப் பார்த்தான். இரண்டு நாள் தங்கியிருந்து தோண்டியதில், மரத்தைச் சுற்றிலும் பள்ளங்கள் ஆனதுதான் மிச்சம். மற்றபடி அங்கே புதையல் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. தன்னுடைய தந்தை பொய் சொல்லி ஏமாற்றி விட்டார் என்பது அவனுக்குத் தெரிந்தது. அவர் மீது கடும் கோபம் உண்டாயிற்று.
பிறகு அங்கிருந்து திரும்பி வந்தான். வருகிறபோது அவன் தனது பயணத்தில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இப்போது அவனுக்கு ஏதோ ஒன்றை அடைய வேண்டிய நோக்கம் இல்லாததால், மனம் மிகவும் தளர்வாக இருந்தது. அதனால், இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டும், சிறப்பிடங்கள் இருந்தால் தங்கி பொறுமையாக பார்த்துக்கொண்டும் வந்தான்.
சில சமயம் ஏதேனும் ஓர் இடத்தில் சந்திரோதயமோ, சூரிய அஸ்தமனமோ மிக அழகாக இருந்தால், அதைப் பார்ப்பதற்காகவே அங்கு தங்கினான். வழி ஓரங்களில் இதுவரை பார்த்திராத செடி, கொடி, மரங்கள் பூக்கள், இலைகள், பறவைகள், பிராணிகள் போன்றவை தட்டுப்பட்டால், அவற்றையும் கூட மணிக்கணக்காக இருந்து ரசித்துக்கொண்டிருப்பான்.
மேலும் அவன் போகும் போது அவனுக்கு உதவி செய்த மனிதர்கள் எந்தெந்த ஊரில் இருந்தார்களோ, அவர்களை எல்லாம் மீண்டும் சந்தித்து, அவர்களோடு தங்கி இருந்து, அவர்கள் செய்த உதவிக்குக் கைமாறாக தன்னால் செய்யக் கூடியதை செய்தான்.
அப்படி இருந்தும் கூட, வழிப்போக்கர்களாக உள்ள பல மனிதர்கள், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், அவனுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வது அவனுக்கு ஆச்சரியமளித்தது.
ஒவ்வொன்றையும் ரசித்து லயித்து அனுபவித்தபடி அவனது திரும்புதல் பயணம் தொடர்ந்தது. இதனால் அவன் இலக்கு இடத்தை அடைவதற்கு ஆன காலத்தைவிட, ஊர் திரும்புவதற்கு மூன்று மடங்கு காலம் ஆனது. அப்படியாக அவன் சுமார் இரண்டரை வருடத்திற்குப் பிறகு வீடு திரும்பினான்.
அவனைக் கண்டதும் தந்தை மகிழ்ச்சியோடு விரைந்து வந்து, அவனை அணைத்துக்கொண்டு வரவேற்றார்.
அவனை நலம் விசாரித்துவிட்டு, “புதையல் கிடைத்ததா?” என்று கேட்டார்.
“இல்லை அப்பா! மரத்தைச் சுற்றி பல இடங்களிலும் தோண்டிப் பார்த்துவிட்டேன். புதையல் கிடைக்கவில்லை. ஒருவேளை, முன்பே யாராவது வந்து அதை எடுத்துச் சென்றுவிட்டார்களோ என்னவோ!” என்று அவனது வாயிலிருந்து, அவனே எதிர்பாராத பதில் வந்தது, அவனுக்கே வியப்பாக இருந்தது. தந்தை தன்னிடம் பொய் சொல்லிவிட்டார் என அவர் மீது இருந்த கோபம் இப்போது அவனுக்கு சிறிதும் இல்லை.
“சரி,… அது இருக்கட்டும்! பயணம் எப்படி இருந்தது?”
“போகும்போது புதையல் பற்றிய எண்ணத்திலேயே விரைந்து சென்றுகொண்டிருந்ததால், வழித் தடங்களில் எதையும் கவனிக்கவில்லை. ஆனால், திரும்பி வரும்போது ஆங்கங்கே தங்கி, ஒவ்வொன்றையும் ரசித்து, மக்களோடு பழகி, ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!” என்றான் குதூகலமாக.
தந்தையும் மகிழ்ந்தார்.
“உண்மையில் அந்த வரைபடத்தில் நான் குறிப்பிட்டிருந்தபடி அங்கு புதையல் எதுவும் இல்லை. ஆனால் உண்மையான புதையல் என்ன என்பதை இந்தப் பயணத்தில் நீ கண்டு கொண்டிருப்பாய். வாழ்க்கைக்கு ஒரு இலக்கு தேவை. அதே சமயம், அந்த இலக்கில் மட்டுமே குறியாக இருந்து, மற்ற எதிலும் கவனம் செலுத்தாமல் தவறிவிடக் கூடாது.
“மனிதர்களாகிய நாம்தான் இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்கிறோமே தவிர, வாழ்க்கைக்கு என்று இலக்கு எதுவும் கிடையாது. எனவே, நாம் வாழ்கிற நாளில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வதும்; மற்றவர்களோடு இனிமையாகப் பழகுவதும், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவதும்தான் உண்மையான வாழ்க்கை.
“வாழ்க்கையின் நோக்கம் எந்த இலக்கையும் அடைவதல்ல; வாழ்க்கையை வாழ்வதுதான்! அதைப் புரிந்துகொண்டால், வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணங்களும், தனக்குள் விதவிதமான புதையல்களை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்!”