வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 90 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உங்களுக்கு என்னெ கட்டி வெச்சு எங்க வாப்பா என்னெ இப்படி கஷ்டப்பட வெச்சுட்டாகளே’ மனைவி சபீனாவின் வார்த்தைகள் ரஹீமை நெருப்பாய் சுட்டது.

‘நான் உனக்கு என்ன குறை வெச்சுட்டேன்னு இப்படி அழுது புலம்பறே?’ ஆவேசமாகக் கத்தினான் ரஹீம்.

‘நான் எங்க வீட்லே வாழ்ந்த வாழ்க்கையென்ன, உடுத்தின உடையென்ன, இருந்த சுதந்திரம் என்ன. கல்யாணம் முடிஞ்சப்புறம் எல்லாம் போச்சு!’

‘இதோ பார் சபீனா. நீ இதுக்கு முன்னாடி உங்க வீட்ல எப்படி வேணும்னாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனா நீ புகுந்த வீட்டுக்கு வந்திட்டப்புறம் இங்குள்ள சூழ்நிலையை அட்ஜஸ்ட் பண்ணிதான் வாழ்ந்தாகணும்’ ரஹீம் அமைதியாக கூறினான்.

‘அதற்கென்ன அவசியம் வந்திருக்கு எனக்கு’ கூறிய சபீனா முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

சபீனாவை சமாதானப்படுத்த முடியாத ரஹீம் அலுவல்களை கவனிக்க அலுவலகம் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

பணக்காரத் தனத்திலேயே வாழ்ந்து பழகிவிட்ட மனைவி சபீனாவை நினைத்து தினம் நொந்து கொண்டிருந்தான்.

ஏழ்மைத் தனத்திலேயே வாழ்ந்து பழகிவிட்ட ரஹீமோ, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன், வயதாகிவிட்ட தாயார், வயதுக்கு வந்துவிட்ட தங்கை இவர்கள்தான் அவனின் உலகமாய் இருப்பது!

தான் படித்த பட்டப் படிப்பைக் கொண்டு ஒரு பெரிய அலுவலகத்தில் மாதா மாதம் – நடுத்தர சம்பளத்தை பெற்றுக் கொண்டிருந்தான்.

ஊரிலே பண்பானவன் என்று பெயரெடுத்தவன். அந்தப் பெயர்தான் சபீனாவுடன் ரஹீமை இணைய வைத்தது!

திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சபீனாவால் இரண்டுபட்டுக் கொண்டிருந்தது ரஹீமின் வீடு.

அலுவலகம் சென்றுவிட்டு களைப்பாய் வீடு வந்து சேர்ந்தான் ரஹீம். அதைக் கண்டும் கவனியாதவளாய் நடந்து கொள்வதை வழக்கமாக்கிவிட்டிருந்தாள், சபீனா.

சபீனாவின் பேச்சும், போக்கும் நாளுக்கு நாள் உதாசீனப்படுத்திக் கொண்டே வந்தது. பொறுமையின் எல்லையையே தொட்டு விட்ட ரஹீம், சபீனாவுக்கு எவ்வளவோ புத்திமதிகள் கூறினான்.

‘இங்கே பார் சபீனா வாழ்க்கை இரண்டு வகையிருக்கு. இப்படித்தான் வாழணுங்கிறது ஒண்ணு. எப்படியும் வாழலாங்கிறது இன்னொன்னு. இதிலே முதல் வகையிலே வாழ்ந்தா தான் வாழ்க்கை முதல் தரமா இருக்கும்! அமைதியாகக் கூறினான்.

பலமுறை ரஹீமின் பேச்சுக்களை மதிக்காதவளாய் ஆகிவிட்ட சபீனா இதையும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

தன் இஷ்டத்துக்கு தான் விரும்பிய இடத்துக்குச் சென்று வருவதும், வீடு வீடாய் வீடியோ பார்க்க அலைவதும் சபீனாவின் பொழுது போக்குகளாய் அமைந்தது. வாயால் கடிந்தும், கையால் அடித்தும் சபீனாவை திருத்தப் பார்த்த ரஹீம் தோல்வியையே தழுவினான்.

நாளுக்கு நாள் அவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டது. சபீனாவின் போக்கை அவர்களது உறவினர்களும் கண்டு கொள்வதாக இல்லை.

ரஹீமிற்கும் மன அமைதியே இல்லாமல், அவற்றை தொலைத்திருந்தான். நீண்ட நாளைய தீவிர யோசனைக்குப்பின் சபீனாவை ‘தலாக்’சொல்லிவிட தீர்மானித்தான்.

ஊரில் உள்ள பெரியவர்களிடம் விஷயத்தைச் சொன்னபோது, ரஹீமின் பொறுமையையே மெச்சினார்கள். இனி சேர்ந்து வாழ சித்தம் இல்லையென அவர்களும் தீர்மானித்து, ரஹீமின் முடிவு சரியெனவே சொன்னார்கள்.

குறிப்பிட்ட நாளில் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் ‘தலாக்’ சொல்லப்பட்டது.

ஆனால் இந்நிகழ்ச்சியை சபீனா ஆமோதித்தவளாகவே இருந்தாள். அவள் முகத்தில் சோகம் இழையோடவில்லை.

விவாகம் சரியில்லாததால் ஏற்பட்ட இந்த விவகாரம் ரஹீமை மிகவும் பாதித்தது. எதிலும் நாட்டமில்லாதவனாகவே இருந்தான். மறு திருமணம் பற்றி கூட அவன் யோசிக்கவேயில்லை.

‘தலாக்’விவகாரத்தை தூசியாகத் தட்டிவிட்ட சபீனாவின் தகப்பனார்… அதை சவாலாகவும் ஏற்று வெளியூரில் மாப்பிள்ளை பார்த்து சபீனாவிற்கு திருமணத்தை முடித்து வைத்தார்.

பணம் கிடைத்து விடும். ஆனால் குணம்? அது இல்லாத அந்த வெளியூர் மாப்பிள்ளை ஒரு குடிகாரனென்று பிறகுதான் தெரிந்து கொண்டாள் சபீனா.

அந்த மாப்பிள்ளையின் கொடுமையில் தினம் மனம் வெந்து போனாள் சபீனா. அந்த வேகலில் ரஹீமின் பெருமையை உணர்ந்து கண்ணீர் வடிப்பதே அவளின் வழக்கமானது!

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *