கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 85 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்டர்சண்முகநாதன் மிகவும் உற்சாகமாகஇருந்தார். நேற்று நோயாளிகள் அதிகமாக இவரை நாடி வந்திருந்ததால் வருமானம் அதிகமாகக் கிடைத்திருந்தது.

அதே எதிர்பார்ப்புடன் கிளினிக்கை திறந்து வைத்துக் கொண்டு இன்று சுறுசுறுப்புடன் இருந்தார்.

இதுவரை ஒருவரும் வரவில்லை. உற்சாகம் களையிழக்கும் நேரத்தில் ஒரு முதியவர் கிளினிக்கை நோக்கி வந்தார். டாக்டர் உற்சாகமானார். அந்த முதியவர் கிராமவாசிதான் என்பதை அவரது உடை பறைசாற்றியது.

டாக்டர் அந்த முதியவரை வரவேற்று, ‘உங்க உடம்புக்கு என்ன?’ என்று கேட்டார்.

‘டாக்டர் எனக்கு ஒரு வாரமா உடம்பெல்லாம் வலியா இருக்குது.’

‘வேறென்ன பண்ணுது?’ டாக்டர் கேட்டார்.

திடீர் திடீர்னு கழுத்து வலி வருது டாக்டர். அப்புறம் ராத்திரி நேரத்திலே காதுவலி வந்து என் தூக்கத்தைக் கெடுக்குடுது. இனிப்பான பண்டங்கள் எதுவும் சாப்பிட்டுட்டா உடனே பல்வலியும் தொத்திக்கிறது.

‘வேறெதுவும் வலி இருக்குதா?’ டாக்டர் இடைமறித்தார்.

‘அவசரப்படாதீங்க டாக்டர். இன்னும் நெறைய வலிகள் இருக்கு ஒண்ணு ஒண்ணு ஒண்ணா சொல்லிக்கிட்டு வர்றேன். கொஞ்சம் பொறுங்க.’

மேலும் தொடர்ந்தார் முதியவர். “டாக்டர் காலையிலே படுக்கையை விட்டு எழுந்ததும் கண் திறக்க முடியறதில்லே, கண்வலி வந்துடுது. அப்புறம் சின்ன வேலைகள் எது செஞ்சாலும் கை, கால்களில் வலி வந்து உயிரெடுக்கிறது.

டாக்டர் எதுவும் பேசவில்லை. மௌனமாக முதியவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘டாக்டர் கடைசியாக வயிற்றுவலி தன் பங்கையும் விட்டு வைக்கிறதில்லே. அவ்வப்போது வந்துட்டு போகுது. அப்புறம் இன்னும் கடைசியா தினமும் கொஞ்சம் நெஞ்சுவலி வந்து என்னை பயமுறுத்திட்டு போகுது!’

அந்த முதியவர் இடைவிடாது சொல்லி முடித்தார் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் சண்முகநாதன் உற்சாகம் இழந்தவராக இருக்கையை விட்டு எழுந்தார்.

‘கொஞ்சம் இருங்க பெரியவரே இதோ வந்துடறேன்!’ முதியவரிடம் டாக்டர் சொன்னார்.

‘எங்கே போறீங்க டாக்டர்? முதியவர் கேட்டார்.

‘எனக்கு ஒரே தலைவலி. மருந்து சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்’ டாக்டர் சொல்லிக் கொண்டே ஒரு கையை தலையின் மீது வைத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றார்.

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *