நிகழ்ச்சியும் பாடமும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 86 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘என்னெ தனிக்குடித்தனம் வெச்சிட்டு மறு வேலையெல்லாம் பாருங்க. இதுக்கும் மேலே இந்த வீட்டிலே என்னால இருக்க முடியாது’ – என் மனைவியின் அங்கலாய்ப்பு பெரிதாக இருந்தது!

‘உன் பொஞ்சாதியை தனிக் குடித்தனம் வெச்சுடுப்பா. இதுக்கு மேலே என்னாலும் தாக்குப் பிடிக்க முடியாது.’ என் தாயாரின் வார்த்தை வருத்தமாக வெளிவந்தது.

நான் துபாயிலிருந்து வந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது. கல்யாணத்தை முடிச்சுட்டு அவசர அவசரமாக ஓடியவன். இரண்டு வருடங்களை அங்கு கழித்துவிட்டு ஆசையாய் இங்கு வந்தால், பூகம்பமே உருவாகியிருக்கிறது இங்கு.

எனக்கு என் மனைவியை தனிக் குடித்தனம் வைக்க கொஞ்சங்கூட விருப்பமில்லை. என் தாயாரும், மனைவியும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்வதையே விரும்புகின்றேன். ஆனால் பாருங்கள் இவர்களுக்குள் சண்டை. நான் என்ன செய்வது!

‘நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்து ஆளாக்கினத்துக்கு, உள் பொஞ்சாதி கேட்குற கேள்வியை பார்த்தியாடா’ தாயாரின் வார்த்தை நெருப்பாய் என் நெஞ்சைச் சுட்டது.

என் மனைவி ஓவென்று அழுகின்றாள். அவளுக்கு சமாதானம் சொல்கிறேன். கேட்பதாக இல்லை.

‘எல்லாம் என் தலைவிதி. எங்க வாப்பா என்னெ உங்களுக்கு கட்டி வெச்சு இப்படியெல்லாம் கஷ்டப்பட வெச்சுட்டாங்க மீண்டும் புலம்புகின்றாள்.

யாருக்கு என்ன சமாதானம் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. தலையை பிய்த்துக் கொள்ளும் நிலையில் சாய்வு நாற்காலியில் சாய்கிறேன்.

நினைவுகள் சுழல்கின்றது.

அவசர அவசரமாக சாப்பிடுகிறேன். பள்ளிக் கூடத்துக்கு நேரமாகிவிட்டது என்று. எனக்கு தலைவாரி. பவுடர் போட்டு விடுகிறாள் என் தாய். தாயாரிடம் விடை கொடுத்துவிட்டு புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறேன். பத்துக் காசும் கொடுத்தனுப்புகின்றாள் என் தாய்.

மதிய உணவுக்காக வீடு வருகின்றேன். நல்ல விதத்தில் சாப்பாடு போட்டு அனுப்புகின்றாள். மீண்டும் மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வருகின்றேன். தின்பண்டங்கள், காபி கொடுக்கின்றாள்.

பழைய நினைவுகளிலிருந்து திரும்புகின்றேன். இப்படியாக சிறுவயதிலிருந்தே மிகவும் செல்லமாக வளர்த்தவள் என் தாய். நான் தகப்பன் இல்லாத பிள்ளையென்பதாலும், ஒரே மகன் என்ற காரணத்தாலும் என் தாய் என்னை அடித்தது கூட கிடையாது.

அந்தப் பள்ளிக்கூட நாட்களில் மிகவும் கவலையற்றவனாக எத்தனை சுதந்திரப் பறவையாக இருந்தேன்? ஆனால் இப்போது…!

பள்ளிக் கூட நாட்களில் படிப்பு ஏறாமலில்லை. நன்றாகத் தான் படித்தேன். குடும்ப சூழ்நிலை கருதி. படிப்பை நிறுத்திவிட்டு அரபு நாடு செல்ல வேண்டியதாயிற்று,

நான் இப்போது வந்திருப்பது இரண்டாவது சபுரு. போன சபுரில்தான் எனக்கு கல்யாணம் முடித்து வைத்தார்கள். தாயாருக்கும், மனைவிக்கும் ஒத்துக் கொள்ளவில்லை போலும். நான் என்ன செய்வது!

ஒரு புறம் எனக்காகவே கஷ்டப்பட்டு, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வளர்த்து ஆளாக்கிய என் தாயைப் பார்க்கிறேன். மறுபுறம் என்னையென்று நாடி வந்துவிட்ட என் மனைவியைப் பார்க்கிறேன். நான் யார் பக்கம் பேசுவது.

இந்த இரண்டு வருடத்தில் இவர்கள் ஓரளவாவது ஒத்து, சண்டை போடாமல் தானே வாழ்ந்திருக்க வேண்டும்?

நான் ஊருக்கு வந்திருப்பதால்தானே இந்தப் பிரச்சனையே ஆரம்பமாயிற்று.

அப்படியே தனிக்குடித்தனம் வைப்பதென்றாலும் அந்த அளவுக்கு என்னிடம் பணம் வேறு இல்லையே!

ஆகவே, ஒரு முடிவுக்கு வருகிறேன்! உடன் மீண்டும் துபாய் சென்று விடுவதென்று.

‘தோசை’என்று சொல்வார்களே அந்த மாதிரி மீண்டும் செல்வதற்கு விசாவுடன் தான் வந்திருந்தேன்.

குறைந்தது மூன்று மாதம் ஊரில் தங்கலாம் என்று வந்தவன். ஒரு மாதத்திலேயே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விட்டேன்.

கம்பெனியில் ஆள் இல்லையென்றும், இன்னும் 25 நாட்களில் பயணம் செல்ல வேண்டும் என்றும் தாயிடமும் மனைவியிடமும் சொல்லப் போகின்றேன்.

இன்று இரவே, பிளேன் டிக்கட் ஒ.கே. செய்வதற்காக சென்னை செல்லவும் தீர்மானித்துவிட்டேன். பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டதில் சிறு குதூகலம் மனதில் தோன்றினாலும், என் மனதில் இழையோடியுள்ள பெரும் சோகத்தை, யார் அறிவார்கள்?

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *