வால் நட்சத்திரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2025
பார்வையிட்டோர்: 1,120 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஜானா…?” 

“ஆ..ம; ஜானா, ஜாவன்னா! ம்க்ஹும்.” 

ஜானு உடம்பைக் குலுக்கி விடுவித்துக்கொண்டாள். இவள் எனக்கு மச்சினி. 

‘கம்மங்கதிரைக் கண்டா கை சும்மாயிருக்காது; மாமன் மகளைக் கண்டா வாய் சும்மாயிருக்காது’ என்பது சொலவடைச் சொல். ஆனால் சொன்னவன் சரியாகச் சொல்லலை; மாமன் மகளைக் கண்டா கை சும்மா இருக்காது என்று சொல்லியிருக்கணும். 

ஜானுவின் அக்கா சாருவை நான் கல்யாணம் கட்டிக் கொண்டபோது இவள் ‘இம்புட்டுப்பிள்ளை’யாகத்தான் இருந்தாள். பெண் வளர்ச்சி பசலைக்கொடி என்பார்கள். ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும்’ என்கிறது இதுகளுக்குத்தான் செல்லும். 

கேட்டவர்களுக்குத்தான் தெரியும் சோளப்பயிரின் வளர்ச்சி. மத்தியான வெயிலில் செழித்த சோளப் பயிருக்குள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பயிர் குருத்தை இலைவிரிக்க வெளியே தள்ளும் சத்தம் நெருக் நெருக் என்று கேட்கும். நேற்றுப் பார்த்த பயிர் இன்று ஒரு ஒட்டை வளர்ந்திருக்கும். பயிருக்குப் பக்கத்தில் போனால் ஒருவித சாராய நெடி வீசும். இந்தப் பெட்டைப்பிள்ளைகளும் அப்படித்தான்; அதுகளுக்கென்று ஒரு வளர்ச்சி; அதுகளுக்கென்று ஒரு நெடி. 

ஜானு சுண்டக்காய்ச்சிய பாலின் ஆடையின் நிறம் கொண்டவள். அவளுடைய நகங்கள் இளஞ்சிவப்பு அரளிப்பூவின் நிறம்மாதிரி இருக்கும். மஞ்சள் பூசிய விரல்களில் பாதிவரை மருதாணியின் செம்மை படர்ந்திருப்பதால் அவைகள் பார்ப்பதற்குக் கார்த்திகைப்பூ இதழ்கள் போலிருக்கும். 

தனிமையில் சிக்கும்போதெல்லாம் அவள் இடுப்பை நோண்டாமல் இருக்கமுடியாது என்னால். பித்தளைக் குடத்தின் கழுத்து மாதிரி அப்படி ஓர் அமைப்பான இடுப்பு. 

அவள் என் நோண்டுதலை வேண்டாததுமாதிரியும் இருக்கும்; விரும்புகிறமாதிரியும் இருக்கும். எங்கள் ஊர் கண்ணன் பிறப்புத் திருவிழாவில் விளையாடும் உறிமாதிரி ஏமாற்றிச் சிரிப்பாள். இந்தச் சிரிப்புக்காகவே 

உண்டு. வர்ணிக்க நெருங்குவது அவளை வார்த்தைகள் இல்லாத அப்படி ஒரு சிரிப்பு; மாயச்சிரிப்பு. 

ஒரு நாள் சாருவும் அவளது அம்மாவும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு “ஜானு சீக்கிரம் உட்கார்ந்துவிடுவாள் போலிருக்கே!” என்று சொல்லிக் கொண்டிருப்பதை மாடிப்படியில் இறங்கி வரும் போதே கேட்டேன். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. அவர்கள் எதிரே உட்கார்ந்து முல்லை அரும்புகளைத் தொடுத்துக்கொண்டிருந்த ஜானு பார்த்துவிட்டாள். அப்போது அவர்களுக்குத் தெரியாமல் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவளுடைய சிரிப்பும் அவளோடு வளர்ந்துகொண்டே வருகிறது. 

பிறந்த மேனியாக, தங்க அரைஞாண் கொடி மட்டும் இடையில் மின்ன, தவழ்ந்துகொண்டே என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வந்தது. 

அரைஞாண் கொடியில் அரசிலை மட்டும் தொங்க அண்ணாந்து சிரித்துக்கொண்டே ஓடிவந்து என் முழங்காலைக் கட்டிக்கொண்டது. 

இடுப்பில் பட்டுப்பாவாடை மட்டும். மேலே வெறும் உடம்பு கையில் முழக் கரும்பு பற்களுக்கிடையில் கரும்புத்துண்டு, பற்களின் வெண்மையோடு போட்டியிட, சாறு சொட்டும் வாயோடு சிரித்துக் கொண்டே இரண்டு கைகளை அகலித்து ஒரு காலை மடக்கி நொண்டி யடித்துக்கொண்டே என்னை நோக்கி வந்து என் இடுப்பைக் கட்டிக் கொண்டது. 

நீலநிறக் குட்டைப் பாவாடை, வெண்ணிற மேல்சட்டை. கையில் அலுமினியப் புத்தகப் பெட்டி. நாணம் வேண்டாத அந்த வயசில், என்னைக் கண்டதும் நாணத்தோடு சிரித்துக்கொண்டே விலகிக் கடந்து பள்ளிக்கூடம் போனது. 

பின்னொரு நாள், பள்ளிவிட்டுத் தெருவில் சேக்காளிகளுடன் வரும்போது என்னைப் பார்த்துவிட்டுத் தரையை நோக்கிச் சிரித்துக் கொண்டே அவர்களுடன் பேசிக்கொண்டு சென்றது. 

ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குள் நுழைகின்றேன். திண்ணையில் சாருவும் அவளுடைய அம்மாவும் இருக்கிறார்கள். வலதுபக்கம் மதிற் சுவரை ஒட்டிய கதவில்லாத குளிப்பறையில் குளித்துக்கொண்டிருப்பது ஜானுதான் என்று தெரிந்தே அங்கு போனேன். ‘ஐயோ! வராதீங்கோ, இங்கே நா குளிச்சிட்டிருக்கேன்!’ என்று கூக்குரலிடுகிறாள். அவள் அப்படிச் சொன்னதே எனக்கு ஒரு தைரியம். “ஆ.மாம், நீ பெரிய்ய மனுசி குளிச்சிட்டிருக்கே; வரப்படாது,” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்குகிறேன். திண்ணையிலிருந்து பெரிதாகச் சிரிக்கும் இரண்டு பெண் குரல்கள் கேட்கிறது. 

ஜானுவின் பெண்வளர்ச்சியை இந்தக் கால்வாய்க் கண்கள் தொடர்ந்து கவனித்து வந்திருக்கின்றன. 

அரை நெல்லிக்காய். 

தெல்லுக் காய். 

பாதி எலுமிச்சம் பழம். 

பணியாரம். 

வட்டுக் கருப்பட்டி. 

கடுமையான கோடைக்காலத்தில் ஒருநாள் மத்தியானம், சாருவும் நானும் பரமபதசோபனம் விளையாட்டில் மூழ்கியிருந்தோம். சாருவின் வீட்டு ஏகாலி வந்து நின்றான். 

கரிய நிறம். நெடிய உருவம். சலவை அங்கவஸ்திரத்தால் தலையில் கட்டிய லேஞ்சி. தண்ணீரில் நின்று கொண்டே துணிகளை வெளுப்ப தால் நேர்ந்த கால்களிலும் கைகளிலும் – தண்ணீர்ப்பத்து. கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகையோடுகூடிய பவ்யம். 

“சின்னம்மா ருது ஆயிட்டாங்க,” 

மங்கலச் செய்தி கொண்டுவந்தவனுக்கு சாரு, வளமைப்படி அரை ரூபாய் 

ரூபாய் நாணயமும் வெற்றிலை பாக்கும் வைத்துக் கொடுத்தனுப்பினாள். 

நாங்கள் கருப்பட்டியும் நல்லெண்ணெயும் கதலி வாழைப்பழமும் கொண்டு போனோம். 

அங்கே வீட்டின் பின்புறத்தில் கம்மந்தட்டையினால் ஒரு சிறிய பர்ணகசாலைபோல வேய்ந்து கொடுத்த குடிசைக்குள் ஜானு ‘உட்கார்ந்து’ இருந்தாள். 

குடிசையின் வாசலில் குறுக்காக ஒரு உலக்கையைப் போட்டிருக் கிறார்கள். அவள் கையில் ஒரு இரும்புச் சினுக்குவலியைப் பிடித்துக் கொண்டிருந்தாள். 

நான் போய் நின்றது, பார்க்காதது போலப் பார்த்தாள். 

ஒரு அந்நியமாகிவிட்ட பார்வை. எனக்கு நா எழவில்லை. எனக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவா வந்திருக்கேன்’ 

அவளுடைய முகத்தில் எந்தவிதச் சலனமும், குறுஞ்சிரிப்புக்கூட இல்லை. 

பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். 

அவள் எங்கே, என் ஜானாவைக் காணோம்? 

மீண்டும் குடிசையில் பார்க்கிறேன். 

வாசலில் குறுக்கே அங்கே உலக்கை போடப்பட்டிருக்கிறது. 

– குமுதம். டிசம்பர் 1974.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *