வால்மீகி ராமாயணச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 8,502 
 
 

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யுத்த காண்டம்-1 | யுத்த காண்டம்-2 | உத்தர காண்டம்

47. கும்பகர்ணன் வதை

ஒருவராலும் வெல்லமுடியாத மஹாபராக்கிரம சாலியாகிய கும்பகர்ணன் தூக்கம் தனது கண்ணைச் சுழற்ற பலவகைச் சம்பத்துக்கள் நிரம்பியிருக்கும் அந்நகரத்து வீதிகளின் வழியாகச் சென்றான். பல அரக்கக் கூட் டங்களையுடைய தனது உடன்பிறந்தவனது அரண் மனையைச் சேர்ந்து புஷ்பக விமானத்தின்மேல் வெகு விச னத்துடன் வீற்றிருந்த தமையனைக் கண்டான். 

இராவணனும் தனக்குச் சமீபத்தில் கும்பகர்ணன் வந்ததைப் பார்த்து வெகுசந்தோஷமடைந்து சரேலென்று எழுந்து அவனைத் தனக்கருகில் அழைத்துக்கொண்டான். கும்பகர்ணனும் கட்டிலிலுட்கார்ந்த தனது தமையனுடைய பாதங்களை வணங்கி “என்ன சமாசாரம்? வேந்தரே ! என்ன காரணத்திற்காக என்னை எழுப்பினீர் கள் ? யாரிடமிருந்து தங்களுக்கு பயம் உண்டாயிருக்கின். றது? யார் இன்றையதினமே மடிய வேண்டும்? சொல் லுங்கள்” என்றான். இராவணனும் கோபமடைந்திருந்த தனது தம்பியை கோபத்தாற் சுழன்றுகொண்டிருந்த கண்களாற் பார்த்து பின் வருமாறு சொல்லலுற்றான் :- மஹாபலசாலியே! சுகத்திலே மூழ்கியிருக்கும் நீ எனக்கு இராமனிடமிருந்து வந்திருக்கும் பயத்தை கொஞ்சமே னும் உணரமாட்டாய். தசரத குமாரனாகிய இராமன் சுக்கிரீவனுடனும் அவனது சேனையுடன் சமுத்திரத்தைத் தாண்டிவந்து நம்மை வேருடன் அழிக்கின்றான்.அந்தோ! இலங்கையின் தோட்டங்களும் தோப்புக்களும் இராம னால் சேதுவின் வழியாகச் சுகமாக வந்த வானர சமுத் திரங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. காண். அரக்கர் களில் முக்கியமாக இருந்தவர்களை வானரர்கள் போரில் வதைத்திட்டார்கள்; போரில் வானரர்கள் மடிந்ததை நான் ஒருகாலும் பார்க்கவில்லை. சிறு குழந்தைகளும் கிழ வர்களும் மாத்திரம் உயிருடன் மிகுந்திருக்கப்பெற்ற இந் நகரத்தைக் காப்பாற்றுக. மகாபாகுவே! தமையனார் பொருட்டாக ஒருவராலும் செய்யமுடியாத காரியத்தை செய்க”’ என்றான். 

இராவணன் புலம்பியதைக் கேட்டு கும்பகர்ணன் சிரித்துப் பின் வருமாறு சொல்லலுற்றான்:-” முன்பு நாம் மந்திராலோசனை செய்த காலத்தில் ‘சத்துருக்களால் உமக்கு ஆபத்து விளைந்தே தீரும்’என்று யாங்கள் நிச்ச யித்திருந்தபடியே நன்மையை நாடுபவர்களின் சொல்லைக் கேளாத தங்களுக்கு அவ்வாபத்து இப்பொழுது நேரிட் டது. கொடிய பாதகங்களைச் செய்தவனுக்கு நரகத்தில் வீழ்தல் எவ்வாறு நிச்சயமோ அவ்வாறே சீதையைக் கவர்ந்ததாகிய பாவச்செயலின் பயன் தங்களைச் சடுதியில் நிச்சயமாக அணுகிற்று; மகாராஜரே! தங்களுடைய வல்லமையின் செருக்கொன்றை மாத்திரங்கொண்டு முன் னமே இத்தொழிலைப் பற்றி நீர் கொஞ்சமேனும் ஆலோ சிக்கவில்லை ; இதனால் விளையுந் தோஷங்களைப்பற்றியும் ஆலோசிக்கவில்லை. எவனொருவன் ஐசுவரியத்தின் செருக் கால் ஒரு காரியம் ஆரம்பிக்குமுன் செய்யவேண்டிய மந்திராலோசனை முதலியவற்றைப் பின்பு செய்கிறானோ, தான் பின்னால் செய்ய வேண்டிய காரியங்களை முன்பு செய்கின்றானோ, அவன் நியாயம் அநியாயம் என்ற இவை களை அறியாதவனாவான். எவ்வரசன் உரிய மந்திரிக ளுடன் ஆராய்ந்து காலத்துக்குத் தக்கபடி அறம்பொருள் இன்பங்களை அனுபவித்து விடுகின்றானோ அவ்வரசன் இவ் வுலகத்தில் ஒருபொழுதும் விசனமென்பதை அடையவே மாட்டான். இதற்கு முன் உங்களது தம்பியாகிய விபீஷ ணன் சொன்னபடி செய்வதுதான் நமக்கு நன்மையான காரியமென்று நமக்குத் தோன்றுகின்றது. அப்புறம் தங்களுக்கு எப்படி இஷ்டமோ அப்படிச் செய்யுங்கள்” என்றான். 

இவ்விதமாகக் கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு, இராவணன் புருவங்களை நெரித்துக்கொண்டு வெகு கோபத்துடன் அவனை நோக்கி சொல்லலானான்:-“அடா கும்பகர்ணா! கௌரவிக்கத் தகுந்தவனும் ஆசாரத்தை நடப்பிப்பவனுமான குருவைப்போல நீ எனக்கு கட்டளை யிடுகிறாய். இது உனக்குத் தகுதியோ? உனது வாய் நோக நீ இவ்வளவு சொன்னதில் என்ன லாபம்? இக்காலத் திற்கு ஏற்றதைச் சொல்வாய்; புத்தி மயக்கத்தாலோ ஞானமில்லாமையாலோ பலம் வல்லமை என்னும் இவை களினாலுண்டான செருக்கினாலோ செய்யத்தகாத காரி யத்தை நான் செய்துவிட்டேனென்றால் அதைத் திருப் பித்திருப்பி சொல்வது வீணேயாம். ஆகையால் இ காலத்தில் எதைச்செய்தால் தகுதியோ அதை விதிப்பாய். கடந்துபோன விஷய்த்தைப்பற்றி அறிஞர் துக்கப்பட மாட்டார்கள்; ஏனெனில் போனது போனதேயன்றோ! நீ என்னிடத்து அன்பு வைத்திருப்பது உண்மையானால் உனது வல்லமையை நீ அறிகிறாயானால் எனது அநியாயத்தால் நேர்ந்த தீமையை நீ உனது வல்லமையால் சீர் திருத்துவாயாக” என்றான். 

இவ்விதமாய்க் கொடுமையாகவும். கம்பீரமாகவும் இராவணன் சொன்னதைக் கேட்டு. கும்பகர்ணன் இவன் கோபங்கொண்டுவிட்டான் என்று தெரிந்துக் கொண்டு மெதுவாகச் சமாதானஞ் சொல்லலானான்: அரக்கவேந்தரே! தாங்கள் துயரப்பட வேண்டாம். தங்களுடைய கோபத்தைவிட்டிட்டு ஸ்வஸ்தராக இருங் கள்.நான் உயிருடனிருக்கின்றவரையில் கீழ் நடந்ததைப் பற்றித் தாங்கள் மனதிற் கவலைகொள்ள வேண்டாம். எவரைப் பற்றித் தாங்கள் வருந்துகின் றீர்களோ அவரை நானே நாசஞ்செய்துவிடுகின்றேன். இராமனிட மிருந்து பயப்படுவதை விட்டிடுங்கள். இராமன் இலக்ஷ் மணன் மகாபலம்பொருந்திய சுக்கிரீவன் முன்பு இலங்கை யைக் கொளுத்தி அரக்கர்களைக் கொன்ற அனுமான் என்ற இவர்களெல்லாரையும் நான் ஒருவனே இப்போதே அழிக்கின்றேன்; இன்னும் நம்முடன் போரிட வரும் வானரர்களையெல்லாம் நான் வதைக்கின்றேன்; மற்றையோர்க்கு இல்லாத பெரும்புகழை தங்களுக்கு விளைவிக்கக் கருதியிருக்கின்றேன். வெகு நாளாகத் தூங்கின கும்ப கர்ணனுடைய வல்லமையை நாற்புறத்திலும் என்னால் உண்ணப்படுகின்ற பிராணிகளெல்லாம் பார்க்கட்டும்.” 

இவ்வாறு புத்திமானான கும்பகர்ணன் சொன்னதை இராவணன் கேட்டு சந்தோஷத்தோடு மறுமொழி சொல்ல லானான். என்னிடம் நட்பிலும் வல்லமையிலும் உன் னைப்போன்றவன் ஒருவனுமில்லை. கும்பகர்ணனே! சத்துருக்களை வதைத்துப் போரில் வெற்றிகொள்ளப் புறப்படுவாய். எனது பயத்தைப் போக்கும்பொருட்டு நான் உன்னை அகாலத்தில் எழுப்பினேன். நண்பர்களான அரக்கர்கள் நட்பை எனக்குக் காண்பிக்க இதுதான் தக்க காலம்” என்றான். மகாபலம் பொருந்திய கும்பகர்ணனை பார்த்து இராவணன் இவ்வாறு சொல்லிவிட்டு, தான் மறு படியும் பிறந்ததாக எண்ணிக்கொண்டான். 

இவ்வளவு தூரம் தனது தமையன் கூறவே கும்ப கர்ணன் உத்சாகங்கொண்டு இராவணனை நோக்கி “நான் ஒருவனாகவே செல்லுகின்றேன். எனது சைனியம் இவ்விடத்திலே இருக்கட்டும். கோபங்கொண்டிருக்கும் நான் என்னைக்கண்டு பயந்தோடும் அந்த வானரர்களை இன்றையதினமே புசித்துவிடுகின்றேன் என்றான். கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு இராவணன் ரத்ந ஹார மொன்றைக் கும்பகர்ணனுடைய கழுத்தில் அணிந் தான். தனது உடம்பு முழுவதிலும் பலவகை யணிக ளணிந்து கையிற் சூலத்தைப் பிடித்த அவ்வரக்கன் தனது தமையனை வலம்வந்து நமஸ்காரம் பண்ணி போர்புரியப் புறப்பட்டான். பேரொலி செய்பவர்களும் பெருவலி படைத்தவர்களும் பயங்கரமான கண்களுள்ளவர்களும் ஆயுதங்களைக் கையிலேந்தியவர்களுமான பல அரக்கக் காலாள் விரர்கள் அவனுடன் சென்றார்கள். கும்பகர்ணன் விரைந்து புறப்பட்டபொழுது வெகு பயங்கரமான அப சகுனங்கள் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டன. அவ்வாறு மயிர்க்கூச்செறியும்படி தோன்றிய பெரிய அப சகுனங்களைக் கொஞ்சமேனும் மனத்தில் எண்ணாமலே கும்பகர்ணன் காலத்தால் ஏவப்பட்டவனாய் போருக்குப் புறப்பட்டான். அவன் நகரத்தினின்று வெளியில் வந்து இடியையுண்டாக்குபவன்போலவும் மலைகளை யெரிப்பவன் போலவும் சமுத்திரமும் பிரதி தொனி செய்யுமாறு பெரு முழக்கம் செய்தான். இந்திரன் வருணன் யமன் இவர் களாலும், கொல்லமுடியாதவனும், கொடுங்கண்ணனு மான அவ்வரக்கன் வருவதைப் பார்த்து வானரர்கள் பயந்தோடினார்கள். 

இராமர் இதைக் கண்டு மலைபோன்ற பெருந் தோற்றமுடைய அவ்வரக்கன் கும்பகர்ணன் வருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்து விபீஷணரை பின் வருமாறு வினவலானார்:-” கிரீடமணிந்து மலைக்கு ஒப்பான வடிவம் படைத்த அந்தப் பூனைக்கண்ணள் யார்? இவனைக் கண்டு பயந்து வானரர்கள் எல்லோரும் அங்கும் இங்கும் நிலை கெட்டு ஓடுகின்றார்களே ” என்றார். இராமர் இவ்வண்ணம் கேட்டதும், மகா புத்திமானான விபீஷணர் அவரைப் பார்த்து ”எவனொருவன் சூரியபகவானுடைய குமார னாகிய யமனையும் இந்திரனையும் போரில் வென்றானோ அப்படிப்பட்ட பிரதாபமுள்ள இவன் லிசிரவசின் குமார னாகிய கும்பகர்ணன் என்பவன். இவனுடைய ஆக்ருதிக்கு ஒப்பான அரக்கன் மற்றொருவனுமில்லை; இராகவரே! இவன், யுத்தத்தில் பலமுறை தேவர் தானவர் யக்ஷர் புஜங்கர் அரக்கர் கந்தர்வர் வித்தியாதரர் கின்னரர் என்ற இவர்களைத் தோற்கடித்திருக்கின்றான்” என்றார். 

அப்போது வாலியின் புதல்வனான அங்கதன், நளன், நீலன் கவாக்ஷன் மகாபலம் பொருந்திய குமுதன் முதலி யோரைப் பார்த்து “வானரர்களே, சாதாரண வானரர் கள் போல அச்சத்தால் மனம் நடுங்கி எங்கு ஓடுகின்றீர்கள்? நீங்கள் வீரத்தள்மையின்றி அஞ்சி இவ்வாறு ஓடி னால் நீசர்களாவீர்களே! பெரியோர்கள் நடக்கும் வழியில் நடவுங்கள் ; பயத்தை விட்டிடுங்கள். நாம் உயிர்மாய்ந்து போர்க்களத்தில் விழுவோமேயானால் பெறுதற்கு அரிய பிரமலோகம் போய்ச் சேர்வோம்; அல்லது நமது சத்துரு வைப் போரில் வதைத்துக் கீர்த்திபெறுவோம். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை யணுகி விட்டிற்பூச்சிகள் எவ்வண்ணம் திரும்பமாட்டாவோ அதுபோலவே கும்ப கர்ணனும் நமது இராமர் முன்னிலையில் வந்து உயிருடன் திரும்பிப்போகமாட்டான்” என்றான். 

வானரர்களெல்லாரும் அங்கதன் சொன்ன சொற்க ளைக்கேட்டு தங்கள் பராக்கிரமத்தைச் சொல்லியவண்ணம் தங்கள் வல்லமையை உறுதி செய்துக்கொண்டு தமது உயிரில் விருப்பமொழிந்து மிகவும் நெருக்கமாகப் போர் புரியலானார்கள். பிறகு அவ்வானரர்கள் பெருமரங்களை யும் மிகப்பெரிய மலைச்சிகரங்களையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்து ஓடி னார்கள். அப்பொழுது வீரியமுள்ள மஹாகாயனான அந்தக் கும்பகர்ணன் வெகு கோபங்கொண்டு தனது கதையினால் ஓங்கிப் புடைத்துத் தன் பகைவர்களை நாற் புறத்திலும் வீழ்த்தினான். மலைக்கு ஒப்பான அவ்வரக்க வீரன் வெகு கோபங்கொண்டு வானரர்களெல்லாரையும் புசித்துக்கொண்டு காலாக்கினிபோல சேனையின் நடுவிற் சஞ்சரிக்கலானான். பலவிதமாக அவ்வரக்க வீரனால் வதைக்கப்பட்டவர்களான அவ்வானரவீரர்கள் துயரத்தால் மனம் வருந்தி இராமரை சரணமடைந்தார்கள். 

அப்போது, சத்துருக்களின் சேனையை யடக்கி பகைவ ரது பட்டணத்தை வெல்பவரும் சுமித்திரையின் குமாரரு மான இலக்ஷ்மணர் கோபங்கொண்டு போர்புரியலானார். இலக்ஷ்மணர் ஏழு பாணங்களை எடுத்து கும்பகர்ணன்மேற் பிரயோகித்து தைக்கச் செய்தார் ; மஹாபலவானான கும்ப கர்ணனோ இலக்ஷ்மணரிடமிருந்து தப்பிக்கொண்டு பூமி யையே பிளந்துவிடுகின்றவன் போல் இராமரிருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடினான். கொழுந்துவிட் டெரியும் நெருப்புபோன்ற தேஜஸையுடைய அவ்வரக்க வீரனை இராமர் பார்த்து தமது வில்லைத் தட்டினார். அரக்க வேந்தனே! வருக : வியசனமடையவேண்டாம். நான் கையில் வில்லேந்தி வந்திருக்கின்றேன்.இந்திரசத் துருவே! என்னை இராமனென்று அறிவாய். உனது பிராணனை ஒரு முகூர்த்தத்துக்குள் வாங்கிவிடுகின்றேன்” என்றார். 

கும்பகர்ணனும் தன்னைப் பார்த்துப் பேசினவரை இராமரென்று தெரிந்துகொண்டு பெருங்குரலால் நகைத்து வானரர்கள் யாவரையும் பயமுறுத்திக்கொண்டு அப் போர்களத்தில் வெகு கோபத்துடன் எல்லா வானரர்களு டைய இருதயங்களையும் தள்ளிவிடுபவன் போன்று சஞ் சரிக்கலானான். அப்போது இராமர் சிறந்த வாயவ்யாஸ் திரத்தை யெடுத்து அவ்வரக்கன்மேல் விடுத்து முத்கரத் தைப் பற்றியிருந்த அவன் கையை வெட்டினார். தனது கை வெட்டுண்டதும் அவ்வரக்கன் பெருங்குரலோடு கதற் லானான். அஸ்திரத்தினாலறுப்புண்ட ஒற்றைக்கையனான கும்பகர்ணன் தனது ஒரு சிகரத்தை யிழந்த பெரிய இமய மலைபோல் விளங்கிக்கொண்டு மற்றொரு கையால் பெரிய மரத்தைப் பிடுங்கி யெடுத்து அப்போர்க்களத்தில் இராமரை நோக்கி ஓடிவந்தாள். ஆச்சாமரத்தை ஓங்கிக் கொண்டிருந்த பாம்பின் உடல்போன்றுள்ள மற்றொரு கையின் மேலும் இராமர் ஸ்வர்ணமயமான மற்றொரு பாணத்தில் ஐந்திராஸ்திரத்தை அபிமந்திரித்து விடுத் தார். மலைபோலிருந்த அந்தப் புஜமும் அதனால் வெட்டப் பட்டுப் பூமியில் விழுந்தது. அது புரண்டபொழுது மரங் களையும் மலைகளையும் பாறைகளையும் அவ்வாறே வானரர் களையும் அரக்கர்களையும் அழித்தது. கும்பகர்ணன் தனது இரு கைகளும் வெட்டுண்டும் மிக்க பயங்கரமாக கத்திக் கொண்டு தம்மை நோக்கி ஓடிவருவதைக்கண்டு இராமர் உடனே கூரான இரண்டு அர்த்தசந்திர பாணங்களை விடுத்து அவ்வரக்கனது கால்களை வெட்டியெறிந்தார். 

கைகளும் கால்களும் அற்றுப்போன கும்பகர்ணன் உடனே வடவையின் முகக்கனல்போல தனது வாயைப் பிளந்து கர்ச்சித்துக்கொண்டு ஆகாயத்தில் இராகுவென்ற கிரகம் சந்திரபகவானை நோக்கி விரைந்து செல்வதுபோல் இராமரை நோக்கி விரைந்துசென்றான். முனையிற் பொற்கட்டமைந்த கூரான பாணங்களால் அவ் இராமரும் வரக்கனது வாயை நிரப்பினார்; அவ்வாறு தனது வாய் நிரம்பியதும் அவன் பேசமுடியாமல் வருத்தத்தோடு மிக வும் கூக்குரலிட்டு மூர்ச்சையடைந்தான். 

அப்பால் இராமர் சூரிய கிரணங்களைப்போல விளங்குவதும் பிரமதண்டத்தையும் பிரளயகால யமனை யும் போன்றதும் சத்துருக்கட்கு கேட்டை விளைப்பதும் கூரானதும் உறுதியான முனையையுடையதும் வாயுபக வான் போல் வேகமாகச் செல்வதுமான ஐந்திராஸ் திரத்தை விடுத்தார். அப்பாணமானது பத்துத் திசை களையும் தனது ஒளியால் விளக்கி புகையற்ற தழல்போல் வெகு பிரகாசமாகப் புலப்பட்டுக்கொண்டே இடிபோல் மிக்க வேகமாகவும் பலமாகவும் பாயலாயிற்று. முற் காலத்தில் இந்திரபகவான் விருத்திராசுரனுடைய தலையை யறுத்ததுபோல இப்பொழுது அந்த அஸ்திரமானது கோரப்பற்கள் வெளிவிளங்க இரு குண்டலங்களசைய விளங்கி பெரு மலைச்சிகரம்போலப் புலப்படுவதான அவ் வரக்கனது தலையை அறுத்தெறிந்தது. கொடிய பலம் பெற்று கிட்டுதற்கரியவனான தங்கள் சத்துரு ஒழிந்ததும் வானரர்கள் பலரும் மிக்க சந்தோஷ மடைந்தவர்களாய் இராமரைக் கொண்டாடினார்கள். 

மகாபலம் பொருந்திய கும்பகர்ணன் யுத்தத்தில் வதைக்கப்பட்டதைக் கேட்டு இராவணன் சோகத்தால் வருந்தி மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான். பிறகு அரக் கர் தலைவன் அரிதினில் தேறி கும்பகர்ணன் வதையை நினைந்து நினைந்து எளிமையுடன் புலம்பலானான்:-“மஹா வீரனே! மாற்றாரது செருக்கை யழிக்கின் றவனே! கும்ப கர்ணனே! மகாபலம் பொருந்தியவனே! நீ காலத்தின் கொடுமையால் என்னைவிட்டு யமனது மாளிகைக்குச் சென்றுவிட்டாயே! நீ வச்சிராயுதத்தின் மோதுதலையும் லக்ஷ்யஞ்செய்ய மாட்டாயே! அப்படிப்பட்ட நீ எவ்வாறு இராமபாணத்தால் அடிபட்டு பூமியில் இறந்து கிடக்கின் றாய்? வானரர்கள் மிகவும் மகிழ்ந்து இதுதான் சமய மென்று நாற்புறத்திலும் இலங்கையின் வாயில்களிலும் துர்க்கங்களிலும் இப்போதே ஏறிவிடுவார்களே: இது திண்ணம். இனிமேல் எனக்கு நாடே வேண்டாம் சீதையால்தான் எனக்கு என்ன பயன்? கும்பகர்ணன் இறந்துபோன பிறகு பிழைத்திருப்பதிலும் எனக்கு ஆசையில்லை. என் தம்பியைக் கொன்ற இராகவனை நான் போரிற் கொல்லாவிட்டால் மரணமே எனக்கு மேன்மையைக் கொடுக்கும்; வீணான இந்தப் பிராண னால் நன்மையுண்டாகாது. என்னைப்பார்த்து விபீஷ ணன் சொன்ன நற்போதனைகள் இப்பொழுது உண்மை யாக முடிந்தன. ஐயோ! அந்த மகாத்துமா சொன்ன சொற்களை புத்தியின்மையால் 

புத்தியின்மையால் அப்போது உண்மை யென்று கொள்ளாது விட்டேனே! கும்பகர்ண பிரஹஸ் தர்கட்கு கொடுமையான கேடு விளைந்தபிறகு விபீஷணன் சொன்ன சொல் என்னை வருத்துகின்றது” என்று கும்ப கர்ணன் மாண்டதை நினைத்து பலவாறு புலம்பி இராவ ணன் பூமியில் விழுந்தான். 

பின்னர் அரக்க மன்னவன், மிகவும் ஏக்கமடைந்து இவ்வாறு சொல்லலுற்றான். “என் கட்டளைப்படி வெகு சூரர்களான எந்த அரக்க வீரர்கள் போர்க்களத்திற்குச் சென்றார்களோ அவர்களெல்லாரும் அதிகபலம் பொருந் திய வானர வீரர்களால் வதைக்கப்பட்டார்களே! இப் பொழுது இராமன் இலக்ஷ்மணன் சேனையுடன்கூடிய சுக் கிரீவன் விபீஷணன் என்ற இவர்களைப் போரில் வெல்ல வல்லவன் ஒருவனையுங் காணோமே! ஆச்சரியம்! இராமன் பலசாலியே; அவனுக்கு அஸ்திரபலமும் வெகு அதிகம். அவன் வல்லமைக்கு முன்னே நிற்க முடியாமலன்றோ பல அரக்கர்கள் நாசமானார்கள்? இவ்வண்ணம் மஹாவீரனான அவ்விராகவனை ஒரு பொழுதும் அழியாத நாராயண னென்றே நினைக்கின்றேன். இனிமேல், இவ்விலங்கைக்கு வெளி வருதலும் உட்புகுதலும் நமக்குத் தெரிந்தே எப் பொழுதும் நடக்கவேண்டும். அங்கங்கு நீங்கள் உங்க ளுடைய சேனைகளுடன் இருக்கவேண்டும். அரக்கர்களே! எந்த வேளையிலும் வானரர்களின் கருத்தை வெகு கவ னத்துடன் அறியவேண்டும்” என்றான். அரக்க மன்னன் இராவணன் அவ்விதமாக அவர்கள் யாவர்க்கும் திட்டஞ் செய்துவிட்டு கோபத்தாலும் துக்கத்தாலும் வெகுவாக வருந்தியவனாய் தனது மாளிகைக்குச் சென்றான். 

48. இந்திரஜித்தின் யுத்தம் 

அவ்வாறு அரக்கவேந்தன் வெகு பரிதாபமாக சோகக் கடலில் மூழ்கியதைக் கண்டு அவ் வேந்தன் மகனாகிய ரதி கரிற் சிறந்தவனான இந்திரஜித்து தனது தந்தையை நோக் கிப் பின்வருமாறு சொல்லலானான்:- “தந்தையே! அரக் கர்கட் கரசே! இந்திரஜித்து என்னும் நான் உயிருடனிருக் கும் வரையில் தாங்கள் இவ்விதமான துக்கத்தை யடை தல் சிறிதும் தகுதியன்று. இன்றையதினமே இராமனை யும் இலக்ஷ்மணனையும் பாணங்களால் நிரப்பி ஒழித்துவிடு கின்றேன்;” என்று சொல்லி எளிமையில்லாத வலிமை தங்கிய இந்திரஜித்து இராவணனிடம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு காற்றுக்கொப் பான வேகம் பொருந்தியதும் நல்லசாதி கோவேறு கழுதை கள் பூட்டியதுமான இரதத்தில் ஏறினான். அவ்வரக்க வீரன் போர்க்களம் சேர்ந்ததும் அரக்கர்களை தனது இர தத்தைச் சுற்றிலும் நிறுத்தினான். அதன் பிறகு அரக்க ரிற் சிறந்தவனாய் அக்கினிக்கொப்பான இந்திரஜித்து சாஸ் திரப் பிரகாரம் சில மந்திரங்களால் அக்கினிபகவானைக் குறித்து ஓமம் பண்ணலானான். அங்கு ஆயுதங்கள் தர்ப்பைகளாகவும் தான்றிமரச் சுள்ளிகள் சமித்துக ளாகவும் அவனது ஆடை செந்நிறவாடையாகவும் ஸ்ருவம் இரும்பு மயமாகவும் இருந்தன. அவ்விந்திரஜித்து நாண விலையுடன் தோமரங்களைப் பரிஸ்தரணமாகப் பரப்பி கறுப்புவர்ணமாயிருந்த உயிரோடுகூடிய ஆடு ஒன்றின் கழுத்தை அறுத்துப் பலிகொடுத்தான். அவ்வாறு ஒரு தரத்திலேயே ஜ்வலிக்கச்செய்து ஹோமம் பண்ணுகை யில் புகையற்றுப் பெருத்தஜ்வாலையுடன் விளங்கிய அந்த அக்கினியானது வெற்றிக் குறிகளைக் காட்டிற்று. தனது ஜ்வாலை வலமாகக் சுழன்றுகொண்டெரிய ஆபர ணங்களைப்பூண்ட புருஷரூபத்துடன் அக்கினிபகவான் நேராகவே தோன்றி இந்திரஜித்து கொடுத்த அவிசைப் பெற்றுக்கொண்டான். இந்திர சத்துரு அப்போது பிர மாஸ்திரத்தை யழைத்தான்; தனது வில் இரதம் முதலிய எல்லாவற்றையும் அங்கு அபிமந்திரித்தான். 

அவ்விதமாக அக்கினியில் ஹோமஞ்செய்த பின்பு தனது வில் அம்பு வாள் இரதம் தேர்ப்பாகன் என்ற வைகளுடன் ஆகாயத்தில் மறைந்தான். அதன் பிறகு குதிரைகள் இரதங்கள் இவைகள் நிரம்பி பெருங்கொடி களும் சிறு கொடிகளும் விளங்க போர்புரிய வேணுமென் னும் விருப்பத்தினால் அட்டகாசம் பண்ணிக்கொண்டு அவ்வரக்கசேனை புறப்பட்டது. அவ்வரக்க வீரர்கள் கூரானவையும் வேகமாகச் செல்லுகின்றவையும் அலங்கரிக்க பட்டவையுமான அழகிய பல அம்புகளாலும் தோமரங்கள் அங்குசங்கள் இவைகளாலும் வான ரர்களை அப்போரிற் புடைத்தார்கள். பின்னும், வரபல புஜபலங் களையுடைய இந்திரஜித்து பல பாணங்களையும் மற்றும் பல ஆயுதங்களையும் விடுத்து, அவ்வானர சேனையை விரை வாகக் குமைத்தான். வானர சேனாபதிகள் யாவரையும் அவன் மந்திரத்துடன் கூடிய ஈட்டி, சூலம், கூரான பாணங்கள் என்ற இவைகளினால் புடைத்தான். 

வானர வீரர்களை அவ்வாறு அடித்த பின்பு இந்திர ஜித்து சூரியனுக்கொப்பான உயர்ந்த பாணங்களைக் கொண்டு இராமரையும் இலக்ஷ்மணரையும் நோக்கி சரமாரி பொழியலானான்.மிகவும் ஆச்சரியமான தைரியத் தையுடைய இராமர் தமது ஸ்வபாவத்தைப்பற்றி அந்தப் பிரமாஸ்திரத்திற்கு மாறுசெய்யக்கருதிய இலக்ஷ்மணரைக் குறிப்பாகப்பார்த்து பின்வருமாறு சொல்லலுற்றார்: “இலக்ஷ்மணா! இந்திரசத்துருவாகிய இவ்வரக்கன் பிரமாஸ் திரத்தைக் கைப்பற்றி அதன் வல்லமையால் எல்லாவானர வீரர்களையும் கீழ்விழுத்தி இப்பொழுது நம்மையும் இம்சிக்க ஆரம்பித்திருக்கின்றான். இவ்வரக்கனை நாம் இன்று எவ்வாறு வதைக்க முடியும்? ஆகையால், புத்தி மானே நீ இன்று இங்கு ஒருவகைக் கலக்கமும் மனதிற் கொள்ளாமல் வீழ்கின்ற இவ்வஸ்திரத்தை என்னுடன் தாங்கிக்கொள். கோபமும் சந்தோஷமும் நீங்கினவர் களாய் போர்செய்தலைத் தவிர்த்து அறிவொழிந்து மூர்ச் சையடைந்து பூமியில் விழுந்த நம்மைப் பார்த்து இந்திர ஜித்து போர்முகத்தில் வெற்றி தனக்குண்டாய்விட்ட தாக எண்ணிக்கொண்டு தனது நகரத்துக்குச் சந்தோஷத் துடன் திரும்பிவிடுவான்; இது திண்ணம்” என்றார். 

பிறகு, அவ்வாறே அவ்விருவரும். இந்திரஜித்தின் அஸ்திரக் கூட்டங்களால் ஹிம்ஸிக்கப்பட்டவர்கள் போலானார்கள்; இந்திரஜித்து அவர்கள் அவ்வண்ணம் விழுந்ததைக் கண்டு வெகுசந்தோஷத்துடன் முனை முகத் தில் அட்டகாசம்பண்ணினான். அவன் இவ்வாறு வானர சேனை முழுமையையும் இராமர் இலக்ஷ்மணர் என்ற இவர்களுடன் போர்க்களத்தில் வருத்திவிட்டு இரா வணனாற் பாதுகாக்கப்பட்ட இலங்கைமாநகருக்குள் விரைவாகப் புகுந்தான். 

புத்திமானும் வாயுபுத்திரனுமான அநுமான், பிரம் மாஸ்திரத்துக்குக்கட்டுப்பட்டிருந்து அதை கௌரவித்து பிறகு விபீஷணருடன் ஜாம்பவனைத் தேடலானான். அநு மான் ஜாம்பவானிடஞ் சென்று முறைப்படி அவனது பாதங்களில் விழுந்து வணங்கிநின்றான். அநுமானது குரலைக் கேட்டதும் ஜாம்பவன் இப்பொழுது எவ். வளவோ சங்கடமடைந்து இந்திரியங்கள் குழம்பியிருந்த போதிலும் தான் மறுபடியும் உயிர்பிழைத் தெழுந்து விட்டதாகவே கருதினான். அப்பால் ஜாம்பவன் அநு மானைப் பார்த்து பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்:- வானரப்புலியே! இங்கு வருக. நீ எல்லா வானரர்களை யும் காப்பாற்றவேண்டும். ஏனெனில் பூர்ணமான பராக் கிரமமுடையவர் உன்னைத்தவிர வேறொருவரும் இல்லை. அன்றியும் நீ இவர்களுக்குச் சிறந்த நண்பன். சமுத்திரத் துக்கு மேலே வெகுதூரம் நீ சென்று பர்வதங்கட்குட் சிறந்த இமயமலையைச் சேர வேண்டும். பகைவரையழிப் பவனே! அவ்விடத்தில் பொன்மயமாய் மிகச் சிறந்த ரிஷபமென்ற பெரிய மலைச் சிகரத்தையும் கைலாஸ மென்ற மலைச்சிகரத்தையும் நீ காண்பாய். வீரனே! அவ் விரு சிகரங்களுக்கும் நடுவில் ஒப்பற்ற காந்தியால் வெகு அதிகமாக மின்னிக்கொண்டு எல்லாவகை யோஷதிகளா லும் நிரம்பியதாய் ஓஷதிமலை யிருப்பதை நீ பார்ப்பாய். அம்மலையினுச்சியில் நான்கு மூலிகைகள் தோன்றியுள்ளன : அவைகள் தமது காந்தியால் பத்துத்திசை களையும் விளங்கச் செய்துகொண்டிருப்பதை நீ பார்க்கலாம். அம்மூலிகைகளின் பெயராவன :-ம்ருதஸஞ்ஜீவநீ [இறந்தவர்களைப் பிழைப்பிப்பது), விசல்யகரணி [அம்பினால் தோன்றிய புண்ணை யாற்றுவது], ஸாவர்ண் யகரணி (பட்டபுண்வாயிலைத் தெரியவொட்டாது ஒரே நிறமாக்குவது), ஸந்தாநகரணி (அறுபட்ட உறுப்பை ஓட்டச்செய்வது) என்பன. வாயுகுமாரனே! அவைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இங்கு நீ வெகு சடிதியில் வந்து சேரவேண்டும்.”

ஜாம்பவன் சொன்னதைக்கேட்டதும் அநுமான் இராமரின் பொருட்டு நமஸ்காரம் செய்துவிட்டு எல்லாத் திசைகளையும் தனது அட்டகாசத்தால் நிரப்பிக்கொண்டு செல்லலானான். பல நீரருவிகளாலும் அநேக குகைக ளாலும் பலவகை விருக்ஷங்களினாலும் சோபித்துக்கொண் டிருந்த அவ்விமயமலைக்கு வந்து சேர்ந்தான். அம்மூலிகை கள் இவைகளென்று தெரியாதவனாய் மனம்குழம்பி “நாம் மலையின் சிகரத்தையே இப்பொழுது எடுத்துக்கொண்டு போவோம்’ என்று நிச்சயித்து அநுமான் அம்மலையின் சிகரத்தை அதிலிருந்த குன்றுகள் யானைகள், பாம்புகள், பொன், பலவகைத்தாதுப்பொருள்கள் என்ற இவை களுடன் தாழ்வரை சிதறவும் நெருப்புப்பொறி கிளம்பவும் உறுதியாகப் பிடித்து வேர்ப்பிடுங்கலாகப் பெயர்க்க லானான். அவன் அவ்வாறு அம்மலையைப் பெயர்த்து தேவ அசுர இந்திரர்களுடன் இவ்வுலகத்தையே பயமுறுத் திக்கொண்டு திரிகூடமலையில் வானரசேனையின் மத்தியில் இறங்கினான். அதன் பிறகு உத்தமர்களான வானரவீரர் களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு அநுமான் விபீஷண ரைக் கட்டித்தழுவினான். இராஜ் குமாரரும் வீரர்களு மான அந்த இராம இலக்ஷ்மணர் அம்மலையி லிருந்த உயர்ந்த மூலிகைகளின் மணத்தை மோந்ததும் சல்லிய மற்றவரானார்கள். மற்ற வானரவீரர்களும் அவ் வண்ணமே எழுந்திருந்தார்கள். உயிரற்றும் விரணப் பட்டு மிருந்த எல்லாவுானரவீரர்களும் ஒரு நொடியில் உயர்ந்த மூலிகைகளின் மணத்தால் தங்கள் விரணங் களாறி நோயற்றவர்களாய் விடியற்காலத்தில் துயில் நீங்கி எழுந்திருக்கின்றவர்கள் போல சுகமாக விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்கள். 

அதன் பிறகு வெகுவல்லமை பொருந்திய வானரராஜ் னான சுக்கிரீவன் சிறந்த பொருளுடன் கூடிய சொல்லை இராமரிடத்து விண்ணப்பஞ்செய்து பின்பு அநுமானை நோக்கி இவ்வாறு சொல்லலானான்:-“கும்பகர்ணன் வதைக்கப்பட்டபடியாலும் அதிகாயன் முதலான தனது குமாரர்கள் கொல்லப்பட்டபடியாலும் இராவணன் இப் பொழுது எதிர்த்துவந்து போர்புரியமாட்டான். ஆகை யால் வெகு சுருசுருப்பாகச் சஞ்சரிக்கும் மஹாபலவான்களான வானரவீரர்களெல்லாரும் இப்பொழுதே தங்கள் கைகளிற் கொள்ளிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு மதிலைத்தாவிக் கடந்து இலங்கையிற் புகுந்து தீயிட வேண்டும்” என்றான். 

அதன்பிறகு இருள் செறிந்த அந்த இராத்திரியின் முதல்யாமத்தின் முடிவில் அவ்வானரவீரர்கள் கைகளிற் கொள்ளிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு அவ்விலங்கை மாநகரினுள்ளே நுழைந்தார்கள். கோபுரங்கள் கொத் தளங்கள் வீதிகள் பலவகை நாற்சந்திகள் மாளிகைகள் என்ற இவைகளிலெல்லாம் அவ்வானரவீரர்கள் மகிழ்ச்சி யுடன் தீயை மூட்டினார்கள். அப்பொழுது அரக்கர்களின் ஆயிரக்கணக்கான வீடுகளைத் தீ யெரிக்கலாயிற்று.நெருப் பெரிந்து கொண்டிருந்தபொழுது இடிந்து விழுந்த மாளிகைகள் இந்திரனது வச்சிராயுதத்தால் அடியுண்டு காணப்பட்டன. விழும் பெருமலைச்சிகரங்கள் போலக் நெருப்புப்பற்றியெறிந்த மேன்மாளிகைகளினால் அவ் விலங்கா நகரமானது அன்றை இரவு நன்றாகப் பூத்து விளங்கும் முண்முருங்கைமரம்போலப் புலப்பட்டது. 

சல்லியமற்றவர்களாய் மகாத்துமாக்களாகிய இராம லக்ஷ்மணர்கள் கொஞ்சமேனும் மனங்கலங்காதவர் களாய் சிறந்த விற்களை கைப்பற்றி நின்றார்கள். அப் பொழுது இராமர் தமது உயர்ந்த வில்லின் நாணியைத் தட்டவே அந்நாணியின் சத்தமானது அரக்கர்களுக்கு பயத்தை உண்டாக்கிக்கொண்டு பேரொலியாகத் தோன் றிற்று. இராமர் வில்லினின்று எய்த பாணங்களால் கைலாசமலையின் சிகரம்போலிருந்த அந்நகரத்தின் கோபுரமானது சிதறுண்டு பூமியில் விழுந்தது. அதன் பிறகு இராமருடைய பாணங்கள் மாளிகைகளிலும் வீடு களிலும் விழுவதைக் கண்டு அரக்க வீரர்கள் தாங்கள் போரிடுமாறு மிக்க முயற்சியுடையவர்களானார்கள். அவ் வாறு முயற்சிசெய்துகொண்டு அட்டகாசம் பண்ணின அரக்க வீரர்களுக்கு அவ்விரவு காள ராத்திரியாக விருந்தது. இவ்வாறு அப்பொழுது அரக்கர்களுக்கும் வானரர்களுக்கும் வெகுபயங்கரமான யுத்தம் நடக்க லாயிற்று. 

இராவணன், ‘இனி என்ன செய்யலாம்?’ என்று சற்று ஆலோசித்து பிறகு மிகுந்த கோபத்துடனே தனது சிறந்த குமாரனாகிய இந்திரஜித்தை போர்க்களத்துக்குச் செல்லுமாறு கட்டளையிடலானான் :-” வீரனே! வெகு பலசாலிகளான இராமலக்ஷ்மணர் இருவரையும் அவர் கள் கண்முன்பாக நின்றாவது மறைந்து நின்றாவது கொன்றுவிட்டு வா. எல்லாவிதத்திலும் நீ பலத்தில் மேலானவன். ஒப்பற்ற பராக்கிரமமுள்ள இந்திரனையே நீ போரில் வென்றிருக்கின்றாய். அப்படியிருக்க அற்ப மனிதர்களைப் பார்த்த மாத்திரல் நீ போரில் ஏன் வதைக்க மாட்டாய்?” என்றான். 

தனது தந்தை இராவணன் அவ்வாறு சொன்ன வுடனே இந்திரஜித்து அப்படியே செய்தற்கு உடன்பட்டு ஆகாயத்திற் சஞ்சரித்தலையுடையவனாய் கண்களுக்குப் புலப்படாமல் நின்று இராமலக்ஷ்மணர்களை கூரான பாணங்களால் வருத்தலானான். இராமலக்ஷ்மணரிருவரும், அவனுடைய பாணவேகத்தாற் சூழப்பெற்றவர்களாய் தங்கள் விற்களை நாணேற்றி திவ்வியாஸ்திரங்களை விடுக் கலானார்கள். மகாபலம் பொருந்திய அவ்விருவரும் தங் கள் பாணங்களால் ஆகாயத்தை மறைத்தனரேயன்றி சூரியனுக்கு ஒப்பான தங்கள் பாணங்களைக்கொண்டு அவ் வரக்கனை மட்டும் தொட முடியவேயில்லை. சீமானான் அவ்வரக்க வீரன் புகையால் இருண்ட ஆகாயத்தை மறைத் ததுமன்றி பனியிருளால் மூடப்பட்டிருந்த எல்லாத் திசை களையும் மறைத்தான். அவ்விரு புருஷப் புலிகளும் நாரா சங்களா லடியுண்டவர்களாய் அவன் மீது பொன்மயமாக அடிப்புறம் வாய்ந்த கூரிய அம்புகளைப் பிரயோகித்தார் கள். பறவைகளின் இறகுகள் கட்டப்பட்டிருந்த அவ் வம்புகள் பறவைகள்போன்ற வேகங்கொண்டு ஆகாயத் திற்சென்று இந்திரஜித்தையறுத்து இரத்தத்துடன் கூடிய வையாய் பூமியில் விழுந்தன. இராமலக்ஷ்மணர்கள் இந் திரஜித்தினது பாணக்கூட்டங்களால் அதிகமாகப் பீடிக் கப்பட்டவர்களாய் தங்கள் மேல் விழுந்த அம்புகளைப் பலவான பல்லங்களால் அறுத்துத்தள்ளினார்கள்.அந் தத் தாசரதிகள் கூரிய பாணங்கள் எத்திசையினின்று வந்தனவோ அத்திசையைக் குறித்து உயர்ந்த அஸ்திரங் களை விடுத்தார்கள். அதிரதனாகிய இந்திரஜித்து தனது இரதத்தைப் பலதிசைகளிலும் ஓட்டி அப்பாணங்களுக் குத் தப்பித்துக்கொண்டு எளிதிற் பிரயோகிக்கக்கூடிய அஸ்திரமுடையவனாய் கூரான பாணங்களால் தசரத குமாரர்களிருவரையும் அடிக்கலானான். 

மேகத்தில் மறைந்த சூரியனை எவ்வாறு காணமுடி யாதோ அதுபோல இந்திரஜித்தின் போக்கையாவது அவனுடைய உருவத்தையாவது வில்லையாவது அப்புகளை யாவது அவனைச் சேர்ந்த மற்றும் எதையாவது ஒருவராலும் அறியமுடியவில்லை. அவனால் அடிக்கப்பட்ட வான ரர்களும் நூற்றுக்கணக்காக கொலையுண்டு உயிரிழந்து பூமியில் விழுந்தார்கள். அப்பொழுது இலக்ஷ்மணர் வெகு கோபங்கொண்டு தமது தமையனாரை நோக்கி, அரக்கர் யாவரையும் வதைப்பதற்காக இதோ நான் பிரமாஸ்திரத் தைப் பிரயோகிக்கின்றேன்” என்றார். அப்பொழுது இராமர் நல்ல குறிகளமைந்த அந்த லக்ஷ்மணரை நோக்கி இவ்வாறு சொல்லலானார்:-“ஒரு அரக்கனுடைய குற் றத்திற்காக இவ்வுலகத்திலுள்ள எல்லா அரக்கர்களையும் வதைப்பது நியாயமன்று. போர் செய்யாதவனையும், மறைந்திருக்கிறவனையும், கைகளைக் கூப்பிக்கொண்டு சரணமென்று வருகின்றவனையும்,போரில் நிற்கமாட்டா மல் புறங்கொடுத்து ஓடுகின்றவனையும், பைத்தியம் பிடித் தவனையும், ஒரு பொழுதும் கொல்லக்கூடாது. மஹாபலம் பொருந்தியவனே! இவனொருவனையே கொல்லவகை தேடுவோம்.” என்றார். 

அப்பொழுது இந்திரஜித்து மகாத்துமாவான இரா மரது எண்ணத்தைத் தெரிந்து கொண்டு அப்போர்க்களத் தைவிட்டுத் திரும்பி இலங்கை நகரினுட் புகுந்தான். அவன் தனக்கு வெற்றியைத் தரவல்ல ஓமத்தைச் செய்து முடிக்க எண்ணங்கொண்டவனாய் சைத்தியத்தோட்டத்தி லிருந்த நிகும்பிலையென்ற ஆலயத்துக்குச் சென்றான். நிகும்பிலையைச் சேர்ந்ததும், இந்திரஜித்து அக்கினியை வளர்த்து ஓமம் பண்ணலானான். யாகசாலையில் முறைப் படி ஓமஞ்செய்யப்பட்ட தீயும் மாமிசங்களையும் இரத்தத் தையும் உண்டு அப்போது அதிகமாக ஓங்கி யெரியலா யிற்று. அப்பொழுது செய்யவேண்டிய முறைமையை யுணர்ந்த அவ்விந்திரஜித்து அரக்கர்களுடைய க்ஷேமத் தின் பொருட்டு சாஸ்திரப் பிரகாரம் ஹவ்யத்தை ஹோமம் பண்ணினான். 

49. இந்திரஜித்தின் வதை

விபீஷணர் எல்லாச் சேனைகளையும் அவ்வவ்வற் றிற்கு உரிய இடங்களில் நிறுத்திவிட்டு நான்கு மந்திரி மார்கள் புடைசூழ மகாத்மாவான இராமரை அணுகி இந்திரஜித்து எல்லா வானரர்களையும் மாயையால்வஞ் சித்து இப்போது நிகும்பிலை யென்னும் கோயிலுக்குச் சென்றிருக்கின்றான். அங்குதான் அவன் ஓமம் பண்ணு. வான். அவன் ஓமத்தை சரிவர முடித்து மட்டும் போர்க் களம் புகுவானேயானால் தேவர்கள் யாவருடனுங் கூடிய இந்திரபகவானாலும் அவனைப் போரில் வெல்ல முடியாது. வீரனான இந்திரஜித்தோ கொடுந்தவங்கள் புரிந்து பிரம தேவரிடமிருந்து பிரமசிரமென்ற அஸ்திரத்தையும் கருதிய படி செல்லும் புரவிகளுடன் கூடிய இரதத்தையும் வரம் பெற்றுள்ளான். மஹாபாகுவே! ஆனால் எவனாயினும் ஒரு பகைவன் நீ.ஹோமத்தை முடித்துவிட்டு நிகும்பிலை யென்னும். ஆலமரத்தடியைச் சேருவதற்கு முன்னமே படைக்கலமேந்திய உன்னை கொல்ல முயல்வானேயானால் அவன்தான் இந்திர சத்துருவாகிய உன்னைக்கொல்லத் தக்கவன் என்று பிரமதேவர் முன்னொருகாலத்தில் அவனை நோக்கி வாக்களித்திருக்கின்றார். வேந்தரே! ஆகவே அவ்விந்திரஜித்தினுடைய வதத்தின்பொருட்டு இலக்ஷ்மணரை ஏவுங்கள். அவன் அவ்வோமத்தை முடிக்கு முன்னமே நாம் சேனைகளுடன் அவ்விடம் செல்லவேண் டும். இலக்ஷ்மணரை சேனாபதிகளுடன் என்னோடு அனுப் புங்கள்; இவர் தமது கூரான அம்புகளால் அவன் செய் கின்ற ஓமத்தை அழிப்பார். ஓமம் அழிந்த மாத்திரத் தில் இந்திரஜித்து எளிதில் வதைக்கத் தக்கவனாவான் என்றார். 

விபீஷணர் சொன்னதைக் கேட்டதும் இராமர் இலக்ஷ்மணரை நோக்கிச் சொல்லலானார்:”லக்ஷ்மணா! வானரராஜருக்கு எவ்வளவு சேனைகளுண்டோ அவ்வள வையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு அநுமான் முத லான சேனாபதிகளுடனுங் கூடியவனாய் சேனைகளுடன் கூடிவரும் ரிக்ஷராஜனான ஜாம்பவனையும் அழைத்துக் கொண்டு சென்று மாயாபலத்தில் தேர்ந்திருக்கும் இந்திர ஜித்தை வதைசெய்வாய். இந்திரஜித்து இப்பொழுது சென்றிருக்கும் இடத்தை நன்றாகத்தெரிந்த மகாத்துமா வாகிய இவ்வரக்கவீரர் மந்திரிமாருடன் உன்னைப் பின் தொடர்ந்து வருவார்” என்றார். இராமர் அவ்வண்ணங் கட்டளையிட்டதைக் கேட்டதும் இலக்ஷ்மணர் அவரை வலம்வந்து இந்திரஜித்து பாதுகாத்து வந்த நிகும்பிலையை நோக்கி விபீஷணருடன் கூட வெகுவேகமாகப் போனார். 

அப்பொழுது இலங்கையில் எல்லாப்பக்கங்களிலும் எதிரொலி யுண்டாகுமாறு பேரொலியுடன் அரிக்கர்களுக் கும் வானரர்களுக்கும் வெகு பயங்கரமான யுத்தம் நடக்க லாயிற்று. பகைவர்களால் வெல்லுதற்கு அரிய இந்திர ஜித்து தனது சேனை மிக்க சங்கடத்திலிருப்பதையும் அத னைச் சத்துருக்களழிப்பதையும் கேள்விப்பட்டு தான் தொடங்கிய ஒமம் முடியு முன்னமே அவ்வோமத்தை விட்டுப் போருக்கு எழுந்தான். தான் உட்கார்ந்திருந்த செறிந்த மரக்கூட்டத்தினிடையிலிருந்து வெளிக்கிளம்பி தனக்காக முன்னமே குதிரை கட்டி சித்தமாகவிருந்த அழகான இரதத்தின்மேல் ஏறினான். இந்திரஜித்து கவ சம் அணிந்து வில்லையேந்தி கொடிவிளங்குகின்ற அக்கினி றமான தனது தேரின் மீது தோன்றினான். போரில் எவராலும் வெல்லப்படாத புலஸ்திய வமிசத்தவனான அவ்வரக்கனை நோக்கி மஹா பராக்கிரமசாலியான இலக்ஷ் மணர் “உன்னை நான் போரிடக் கூப்பிடுகின்றேன். ஆகையால் உன்னாற் கூடியமட்டும் நீ முயன்று என்னுடன் போர் செய்வாய் என்றார். 

வெகுபலமும் திடசித்தமுமுள்ள இந்திரஜித்து இவ்வண்ணம் சொல்லப்பட்டு அங்கு விபீஷணரைக்கண்டு கடுமையாக சொல்லலானான்: ‘ இவ்விலங்கையில் நீர் பிறந்து வளர்ந்தவர்; எனது தந்தைக்கு நேர் தம்பி.அரக் கரே! இவ்வாறிருக்க, எனக்குச் சிற்றப்பனாரான நீர் புத்திரனான எனக்குத் துரோகம்பண்ணலாமா? நீர் உமது ஜனங்களை விட்டு மாற்றானிடம் அடிமையாகப் புகுந்து விட்டதனால் உம்மைக்குறித்து விசனப்பட வேண்டியதாக விருக்கின்றது. அன்னியன் நற்குணங்கள் நிறைந்தவனாக இருந்தாலும் நம்மைச் சேர்ந்தவன் குணங்களற்றவனாக இருந்தாலும் குணமற்ற நமது பந்துக்களுடன் சேர்ந்திருப் பதுதான் நன்மை ; அன்னியனென்பவன் அன்னியனே யன்றோ! எவன் ஸ்வபக்ஷத்தைவிட்டு பரபக்ஷத்தையடை கின்றானோ அவன் ஸ்வபக்ஷம் நாசமான பிறகு அந்த மாற்றாராலேயே நாசமுறுகின்றான். அரக்கரே ! இராவண னார்க்குத் தம்பியே! உமது தயையின்மை எவ்வளவு பயங் கரமாக விருக்கின்றதோ அவ்வளவு கொடுமையான தயை யின்மையால் மாற்றானுக்கு ஸ்வஜனத்தைக்காட்டிக் கொடுத்தலாகிய செய்கை உம்மையன்றி வேறு யாரால் தான் செய்ய முடியும்?” என்றான். 

இவ்விதமாக இந்திரஜித்து சொன்னதும் விபீஷணர் பதில் சொல்லலானார்:- “அரக்கா! இதற்கு முன்னே எனது நடக்கையைத் தெரியாதவன் போல் ஏன் நீ பிதற்றுகின்றாய்? ராக்ஷச ராஜ குமாரா! துஷ்டா!நான் உனது சிற்றப்பனென்ற கௌரவத்தாலாவது இவ்வண் ணம்பேசுவதை விட்டிடு. கொடுஞ்செயல்கள் செய்யும் அரக்கக்குலத்தில் நான் பிறந்தவனென்றாலும் எனது நடத்தை அரக்கர்களுடைய நடத்தையல்லவே; என்னி டத்திலுள்ள இக்குணந்தான் ஸத்புருஷர்கள் முதன் மையாகக் கொண்டாடும் குணம். கொடுந்தொழிலினாலே ஒருபொழுதும் சந்தோஷப்படேன். தர்மத்துக்கு விரோதமான செயலினாலும் நான் சந்தோஷங் கொள்ளேன். மேலும் மாறுபாடான நடக்கையுடைய எனது தமையனார் உடன்பிறந்தவனான என்னை ஏன் துரத்திவிட்டனர்? தருமத்தினின்று வழுவியவனாய்ப் பாவத்தொழில்களையே புரிகின்றவனை தனது கையில் விழுந்த பாம்பை உதறுவதுபோல உதறிவிட்டு எவன் விலகிவருகின்றானோ அவன்தான் சுகமடைவான். மஹரிஷி களின் சித்திரவதையும் தேவர்கள் யாவருடனுஞ் சண் டையும் கர்வமும் கோபமும் பகைமையும் பிரதிகூலனாக விருத்தலும் என்னும் இவ்வகைத் துர்க்குணங்கள் எனது தமையனாருடைய ஆயுளையும் ஸம்பத்தையும் நாசஞ்செய்ய தோன்றி அவரிடமுள்ள நற்குணங்களை மேகங்கள் மலையை மூடுவதுபோல மறைத்து விட்டன. இவ்வகைத் தோஷங்களுக்காகத்தான் நான் எனது உடன்பிறந்தவ ரான உனது தந்தையை கைவிட்டேன். இனி மேல் இவ் விலங்கை விரைவில் அழிவடையப்போகின்றது; நீயும் உயிருடன் பிழைத்திருக்கப் போகின்றதில்லை; உனது தந்தையும் பிழைத்திருக்கப் போகின்றதில்லை. அடா அரக்கா ! நீ வெகு கர்வங்கொண்ட சிறுபிள்ளை: வணக்க மற்றவன்.காலபாசம் உன்னை இறுக்குகின்றபடியால் நீ உன்மனத்தில் தோன்றிய படியெல்லாம் என்னைப் பேசுகின்றாய். நீ தெய்வப்பிறப்பையுடைய மனிதரான இலக்ஷ் மணருடன் போர்புரிவாயாக. அவரால் வதைக்கப்பட்ட பிறகு நீ யமலோகத்திற்சென்று தேவகாரியமாகிய யாகத்தை முடித்துக்கொள்ளலாம்” என்றார். 

இவ்வாறு விபீஷணர் சொன்னதைக் கேட்டு இந்திர ஜித்து வெகு கோபங்கொண்டு இலக்ஷ்மணர் விபீஷணர் வானவீரர்கள் எல்லாரையும் பார்த்து வெகு கோபத் துடன் பின் வருமாறு சொல்லலானான்:- நீங்களெல் லாரும் இன்று எனது வல்லமையைப் பாருங்கள். இன்று என்னுடைய வில்லினின்று புறப்படும் பாணங்கள் ஒருவராலும் அணுகமுடியாதவண்ணம் ஆகாயத்தினின்று மழை பொழிவதுபோல போரில் விழுவதை நீங்கள் தடை செய்யுங்கள்.நான் கூரான பாணங்களாலும் சூலங்கள் சக்திகள் குண்டாந்தடிகள் தோமரங்கள் என்ற ஆயுதங் களாலும் உங்கள் தேகங்களைப்பிளந்து உங்களெல்லோ ரையும் யமனுடைய மாளிகைக்கு அனுப்புகின்றேன் என்றான். 

இந்திரஜித்து அவ்வளவு கர்வத்துடன் சொன்னதைக் கேட்டு இலக்ஷ்மணர் கொஞ்சமேனும்பயமில்லாமல் வெகு கோபத்துடன் அவ்விராவணகுமாரனை நோக்கி மறுமொழி சொல்லலானார்:-” அரக்கா! நீ அசாத்தியமான காரி யங்களை வாயினால்மாத்திரஞ் சொல்லுகின்றாய்; எவனொருவன் செயலினால் தன் காரியத்தை முடிக்கின் றானோ அவனல்லவோ நல்ல புத்திமான். கெடுமதியுடை யாய்/ பகைவனை வெல்லமாட்டாத நீ ஒருத்தனாலும் செய்து முடிக்கக்கூடாத காரியத்தை வாயினால்மட்டுஞ் சொல்லி அம்மட்டிலேயே தொழிலைச் செய்து முடித்தவன் போல கிளிக்கின்றாயே! இன்று நான் உனது பாணங்கள் விழும் வழியில் நிற்கின்றேன்; உனது வல்லமையை நீ இப்பொழுது காட்டு. நீ வீணாகக் கர்வப்படவேண்டாம் என்றார். இப்படி இவர் சொல்லவே இந்திரஜித்து தனது பயங்கரமான வில்லிலே கூரான அம்புகளைத் தொடுத்து இலக்ஷ்மணர்மேல் விடுத்தான். சீறின சர்ப்பங்கள்போல் வெகுவேகமாக வந்த அந்த அம்புகள் இலக்ஷ்மணர் மீது பட்டுப் புவியில் விழுந்தன. ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவ்வரக்க வீரனும் அம்மனித வீரரும் போர் புரிந்தபோது அந்த யுத்தம் வெகு பயங்கரமாக இருந்தது. அவ்விருவரும் மிகுதியாகப் பலமைமந்தவர்கள்: அவ்விரு வரும் வெகுபராக்கிரம முள்ளவர்கள்: அவ்விருவரும் மிக்க வல்லமையுள்ளவர்கள்; ஆயுதங்களெல்லாவற்றி லும் வல்லவர்கள். அவ்விருவரும் ஒப்பற்ற பலமும் காந்தியும் அமைந்து ஒருவராலும் வெல்லமுடியாதவர்கள். அவ்விருவரும் அச்சமயத்தில் ஆகாயத்தில் இரண்டு கிர கங்கள் போரிடுவதுபோல போரிடலானார்கள். 

சத்துருக்களை வதைக்கும் வல்லமை தங்கிய இலக்ஷ்ம ணர் வெகுகோபங்கொண்டு சர்ப்பம்போல் சீறி அவ்வ ரக்க வீரன்மேற் பாணமொன்றைத் தொடுத்து விடுத் தார்: அவ்விராவணகுமாரன் இலக்ஷ்மணருடைய வில் நாணியின் சத்தத்தைக் கேட்டதும் முகவொளி குன்றிய வனாய் இலக்ஷ்மணரை ஒரு பார்வை பார்த்தான். அவ் வாறு இந்திரஜித்தின் முகவொளி மாறியதை விபீஷணர் கண்டு போர்புரிய முயன்று நின்ற இலக்ஷ்மணரை நோக்கி பின்வருமாறு சொல்லலானார்:-“நான் இப்போது இரா வணகுமாரனாகிய இவ்விந்திரஜித்தின் முகத்திற் சிலகுறி களைக்காண்கின்றேன்: புஜபராக்கிரமமமைந்தவரே! அதனால் இவன் இப்போது தோற்றானென்பதற்கு ஐயமே யில்லை : ஆகையால் இவனை வதை செய்ய விரைவு கொள்க என்றார். அதன்பிறகு இலக்ஷ்மணர் தழல் போல ஜ்வலித்துக்கொண்டும் அதிக விஷமமைந்த சர்ப் பங்கள்போல விளங்கிக்கொண்டு மிருந்த தமது கூரான பல பாணங்களை வில்லில் தொடுத்து இந்திரஜித்தின் மேல் விடுத்தார். இந்திரஜித்து உடம்பு முழுமையும் அம்புகள் தைத்து விரணடைந்தபொழுது அப்போர்க்களத்தில் மர மடர்ந்த மலைபோலக் காணப்பட்டான். அதன்பிறகு அவன் வெகுகோபங்கொண்டவனாய் ஆயிரக்கணக்காகப் பாணங்களைவிடுத்து மகாவீரராகிய இலக்ஷ்மணரைப் பிளக்கலானான். அப்போர்க்களத்தில் இலக்ஷ்மணர் இந்திர ஜித்தையும் இந்திரஜித்து இலக்ஷ்மணரையுமாக ஒருவரை யொருவர் பலமுறை அடித்துக்கொண்டபோதிலும் அவ் விருவரும் சிரமத்தையடையவில்லை. 

அவ்விருவரும் பொருகையில் ஹஸ்தலாக வத்தால் அவர்கள் பாணங்களை அம்பறாத்தூணியிலிருந்து எடுப்பதும், நாணியில் தொடுப்பதும், வில்லை வலக்கையிலும் இடக்கையிலும் பிடிப்பதும்,பாணங்களை விடுப்பதும், நாணியை யிழுப்பதும், பலவகைநிலையில் தங்குவதும், வில்லின் நாணியிற் கைப்பிடியை வைத்திருத்தலும், இலக் கைக் குறித்தலும் என்னும் இவற்றில் ஒன்றாவது ஒரு வருக்கும் அங்கு புலப்படவில்லை. நூற்றுக் கணக்காக பாணங்களை அவ்விருவரும் எய்த பொழுது பெருந் திக்குக் களும் மூலைத் திக்குக்களும் பாணங்களால் நிரம்பின. சூரியன் அஸ்தமிக்கும்பொழுது தோன்றுங் காரிருள் போல எங்கும் பேரிருள் தோன்றி எல்லாரையும் நடுங்கச் செய்தது. இந்திரஜித்தினது தேரில் பூட்டப்பட்டிருந்த கருங்குதிரைகள் நான்கையும் இலக்ஷ்மணர் நான்கு பாணங் களை விடுத்துப் பிளந்தார். அதன்பிறகு பல்லமென்னும் பாண விசேஷத்தால் தேர்ப்பாகன் தலையைத் தேகத் தினின்று பிரித்தெறிந்தார். 

மஹாபராக்கிரமசாலியான இந்திரஜித்து தனது இர தத்தின் குதிரைகள் வதைக்கப்பட்டதும் அரக்கர்கள் யாவரையும் உற்சாகப்படுத்துபவனாய் இவ்வாறு சொல்ல லானான்:-“இப்பொழுது எல்லாத் திசைகளும் பேரிரு ளால் மூடப்பட்டிருக்கின்றன : ராக்ஷசோத்தமர்களே! இதில் நமது கட்சிக்காரன் இவன், நமது சத்துரு இவன் என்பதுகூட விளங்கவில்லை.நீங்களெல்லோரும் வானரர் களை ஏமாற்றும்பொருட்டு வெகு தைரியமாக யுத்தஞ் செய்யுங்கள்.நான் இலங்கையிற் புகுந்து தேரிலேறி ஒரு நிமிஷத்தில் வருகின்றேன்” என்று சொல்லி விட்டு வான ரர்கள் யாவர்க்கும் தான் போவது தெரியாதபடி மோசஞ் செய்து இரதமேறித் திரும்பி வருமாறு இலங்கைக்குட் புகுந்தான். போரில் வெல்பவனும் மஹாபராக்கிரமசாலியு மான அவ்விராவணி அழகியதாய் பொன்னாபரணங்கள் அலங்கரிக்கப் பெற்ற வேறு இரதமொன்றில் ஏறி நக ரத்தைவிட்டு வெளிக்கிளம்பி ஒரு நொடியில் வெகு வேகமாகச் செல்லும் புரவிகளை நடத்திக்கொண்டு விபீஷண ருடன் இலக்ஷ்மணரிருந்த இடம் திரும்பிவந்து சேர்ந்தான். இந்திரன் மழையை இடைவிடாமற் பொழிவதுபோல இலக்ஷ்மணர் மீது வெகு சாமர்த்தியமாக சரமாரி பொழிய லானான். ஒருவராலும் சகிக்கமுடியாத இந்திரஜித்து விடுத்த அவ்வளவு அம்புகளை இலக்ஷ்மணர் கொஞ்ச மேனும் கலங்காமல் தடுக்கலானார். அவ்விரண்டு வீரர்க் கும் நடந்த பெரும் போரானது வெகு ஆச்சரியமாக இருந் தது. அப்பொழுது ஒருவராலும் வெல்லப்படாத ஐந்தி ராஸ்திரமாகிய சிறந்த அம்பை இலக்ஷ்மணர் வில்லில் தொடுக்கலானார். அப்பாணத்தை தமது வில்லில் தொடுத்து, நாணியை யிழுத்து விடுபவராய், அந்த அஸ்தி ரத்தை நோக்கி பின்வருமாறு சொல்லலானார்:-“தசரத ருடைய புதல்வரான இராமர் தருமாத்துமாவென்பதும், உண்மையையே நோன்பாகக் கொண்டவரென்பதும் உண்மையானால், போர்புரிவதில் அவருக்கு ஒப்பானவர் ஒருவருமில்லையானால், பாணமே! நீ இந்த இந்திரஜித்தை வதைப்பாயாக” என்று சொல்லி அப்போர்க்களத்தில் வீரரான இலக்ஷ்மணர் அந்தப் பாணத்தை ஐந்திராஸ்திர மந்திரத்தால் அபிமந்திரித்து காதுவரையில் நன்றாக இழுத்து இந்திரஜித்தின் மேற் பிரயோகித்தார். அவ்வைந் திராஸ்திரம் அழகான குண்டலங்களணிந்து தலைப்பாகை யுடன் விளங்கிய இந்திரஜித்தின் தலையை அறுத்து கீழே தள்ளிற்று. 

அவன் மாண்டதும் விருத்திராசுரன் மாண்டவுடனே சந்தோஷத்தால் தேவர்கள் சத்தமிட்டதுபோல எல்லா வானரர்களும் விபீஷணருடன் களித்துச் சத்தமிடலானார் கள். இந்திரஜித்து மாண்டதை யறிந்துகொண்ட ராக்ஷச சேனை தமது உணர்வு அழிய இலங்கையை நோக்கி ஓட்ட மெடுத்தது. அப்போது ஒப்பற்ற வல்லமையமைந்த அவ் வரக்க வீரன் அவ்வாறு போரில் வதைக்கப்பட்டதைக் கண்டு விபீஷணர் அனுமான் ரிக்ஷமன்னவனாகிய ஜாம்ப வன் என்னும் இவர்கள், இலக்ஷ்மணருடைய வெற்றிக்காக பேரானந்தமடைந்தவர்களாய் இலக்ஷ்மணரைப் புகழ்ந்தார்கள். 

உத்தமவிலக்கணமமைந்த இலக்ஷ்மணர் இரத்தத் தாற் பூசப்பட்ட தேகத்தையுடையவராய் இந்திரனை வென்றவனான இந்திரஜித்தைக் கொன்று சந்தோஷ மடைந்தார். அதன் பிறகு இலக்ஷ்மணர் ஜாம்பவனுட னும் அனுமானுடனும் மற்ற வானரர்களுடனும் ஒன்று கூடி விபீஷணரைப் பற்றிக்கொண்டு சுக்கிரீவனுடன் இராமரிருந்த விடத்துக்கு விரைவாக வந்தார். பிறகு சுமித்திராகுமாரர் இராமரை வலம் வந்து நமஸ்காரம் பண்ணி இந்திர பகவானிடம் பிருகஸ்பதிபோல தமது தமையனாரருகிலிருந்தார். அப்பொழுது வெகு சந்தோஷத் துடன் விளங்கிய விபீஷணர் இளைய பெருமாள் இந்திர ஜித்தினுடைய தலையை யறுத்ததை இராமரிடம் விவர மாகத் தெரிவித்தார். அம்மகாவீரரும் இந்திரஜித்து இலக்ஷ்மணரால் வதைக்கப்பட்ட பெருஞ்சந்தோஷ சமா சாரத்தைக் கேட்டு வெகுமகிழ்ச்சி யடைந்து பின்வருமாறு சொல்லலானார்:-இலக்ஷ்மணா! நன்று; நான் உனது வீரச் செயலாற் களிக்கின்றேன். சிறந்த நற்காரியஞ் செய்தாய்; எப்பொழுது இந்திரஜித்து மடிந்தானோ அப்பொழுதே நாம் இராவணனை வெற்றி கொண்டோமென்று கருதுக” என்று சொன்னார். 

பிறகு இராமர், இலக்ஷ்மணரை உச்சி மோந்து கட்டித் தழுவி வெகு சந்தோஷத்துடன் ஸுஷேணனை நோக்கிப் பின்வருமாறு சொல்லலுற்றார்:-“பேரறிவுடைய யவனே! நண்பரிடத்தில் அன்பு காட்டுகின்ற இலக்ஷ் மணன் இப்போது அம்புகளால் விரணப்பட்டிருப்பதனால் அவ்வருத்தத்தை நீக்குதற்கு உரிய சிகித்ஸைகளை உடனே செய்ய வேண்டும். இலக்ஷ்மணன் விபீஷணர் என்னும் இவ்விருவர்மேலும் தைத்திருக்கின்ற அம்புகளை வாங்கி விரணங்களை உடனே ஆற்றுவாயாக. அவ்வாறே மரங் களைக்கொண்டு போர்புரிபவர்களான ரிக்ஷவானர வீரர் களில் இப்போரில் எவர்கள் அம்புமுனைகளால் விரணப் பட்டிருக்கின்றார்களோ அவர்களெல்லாரையும் தக்க முயற்சி செய்து சௌக்கியப்படுத்துக’ என்றார். இவ்வாறு இராமர் மகாத்துமாவாகிய அவ்வானர சேனாபதியைப் பார்த்துச் சொன்னதும், அவன் இலக்ஷ்மணருடைய மூக்கிற் சிறந்த ஓஷதியொன்றை வைத்தான். இலக்ஷ் மணர் அதன் வாசனையை மோந்தவுடனே சல்லியமற்ற வரும் வேதனையற்றவரும் விரணப்பட்ட இடங்கள் கூடப் பெற்றவருமாயினார். அவ்வானர. சேனாபதி விபீஷணர் முதலான நண்பர்களுக்கும் வானர வீரர்கள் யாவர்க்கும் வைத்தியஞ் செய்தான். இலக்ஷ்மணர் தமது திருமேனியில் தைத்த சல்லியங்களும் வேதனையும் கொதிப்பும் நீங்கி முன்புபோல் ஒரு நொடியில் சௌக்கியமாகி மகிழ்ந்திருந்தார். 

50. இராம இராவண யுத்தம் 

அதன் பிறகு இராவணனுடைய மந்திரிமார் இந்திர ஜித்தின் வதையைக் கேள்விப்பட்டு அச்செய்தியை இரா வணனிடம் வெகு துக்கத்துடன் “மஹாராஜரே! இலக்ஷ் மணன் இந்திரஜித்தை வதைத்து விட்டான். தங்களது புதல்வன் இலக்ஷ்மணனைப் போரில் எதிர்த்து அவனை வேண்டிய மட்டும் தனது பாணங்களால் வருத்தி விட்டு வெகு உயர்ந்ததான வீர சுவர்க்கஞ் சேர்ந்தான்” என்றார். கள். இராவணன், தனது புத்திரனான இந்திரஜித்து போர்க்களத்தில் மடிந்த வெகு கொடிய சமாசாரத்தைக் கேட்டு. சோகம் தாங்கமாட்டாமல் மூர்ச்சையடைந்தான். அவ்வரக்க மன்னவன் வெகு நாழிகைக்கு அப்பால் மூர்ச்சை தெளிந்து புத்திர சோகத்தால் அறிவு தடுமாறி வெகுவாக வருந்தியவனாய் மிகவும் பரிதாபமாய் புலம்ப லானான்: உனது இளவரசு பட்டத்தையும் இலங்கை யையும் அரக்கர்களையும் தாயையும் என்னையும் மனைவி யையும் விட்டு, அடர் குழந்தாய்! நீ எங்குப் போயினாய்? வீரனே! நான் யமலோகத்துக்குச் சென்றால் நீ எனது உத்தரகிரியைகளைச் செய்ய வேண்டியவன்; இதற்கு மாறாகவல்லவோ இப்பொழுது எல்லாக் காரியங்களும் முடிந்தன என்று புலம்பினான். 

இவ்வாறு பலவிதமாக இராவணன் புலம்பிக் கொண் டிருந்தபொழுது புத்திரனை யிழந்த சோகமானது. அவ னுக்குப் பெருங்கோபத்தை மூட்டிற்று. அப்பொழுது அவன் சீதையை வதைக்கலாமென்று எண்ணங்கொண் டான். வெகு கோபத்துடன் கத்தியை கையிலெடுத்துக் கொண்டு தனது மனைவிமார்களும் மந்திரிமார்களும் தன்னை சூழ்ந்துவர, சீதையிருந்த இடத்தை நோக்கி வெகுவேகமாகக் கிளம்பினான். அப்போது இராவணனுடைய மந்திரிகளில் வெகு புத்திமானும் நல்லொழுக்க முள்ளவனுமான சுபார்சுவனென்ற அரக்கன் “தசக் கிரீவரே! தாங்கள் வைசிரவணருடைய நேரான தம்பியா யிருந்து தர்மமென்பதைக் கோபத்தால் மறந்து விட்டு சீதையைக்கொல்ல எவ்வாறு கருதுகின்றீர்? இப்பொழுது தங்களுக்கு உண்டாயிருக்குங் கோபத்தை எங்களுடைய உதவியுடன் இராமனிடம் திருப்புங்கள். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியாகையால் இன்றைய தினமே யுத்தத் துக்கு ஏற்பாடு செய்யுங்கள்; நாளை அமாவாசை வெற்றியை யடையும் பொருட்டுப் புறப்படுங்கள். வெகு சூரரும் புத்திமானும் அதிரதவீரரும் கத்தியை யேந்திய வருமான தாங்கள் சிறந்த தேரிலேறிச் சென்று இராமனை வதை செய்து விட்டுச் சீதையை யடைவீர்கள்” என்றான். 

இறந்தவர்கள் போக எஞ்சி நின்ற அரக்கர்கள் கண்ணாற் பார்த்தும் காதாற் கேட்டும் பயத்தால் மனங் குழம்பி விட்டார்கள். தங்கள் கணவர்களை யிழந்து கைம் பெண்களாய் விட்ட அரிக்க மடந்தையர்கள் அங்கு வந்து எளிமை யடைந்து கவலையாற் கலங்கியவரானார்கள். கணவனை யிழந்தவர்களும் பிள்ளைகளைப் பறிகொடுத்தவர் களும் மற்றும் பந்துக்களை யிழந்தவர்களுமான ராக்ஷஸிகள் ஒன்று சேர்ந்து துக்கத்தாற் பரிதவித்துக் கொண்டு கதறு பவர்களாய் பின்வருமாறு புலம்பலானார்கள்:-“இராவண னார் தமது நாசத்துக்கென்றே சீதாதேவியைத் தூக்கி வந்தார்; இந்தத் தசக்கிரீவர் ஜனக மகாராஜாவின் குமாரி யான சீதையை ஒரு நாளும் அடையப் போகின்றதில்லை. சீதையின்மேல் ஆசைகொண்ட விராதனென்ற அரக்கனை இராமர் ஒருவராகக்கொன்றாரே; அதுவொன்றே இராம ருடைய வல்லமைக்குப் போதுமான திருஷ்டாந்தமாம். கொடிய செயல்கள் புரிந்து வந்த பதினாலாயிரம் அரக் கர்களை ஜனஸ்தானத்தில் தழலுக்கொப்பான தமது பாணங்களால் இராமர் ஒருவரே வதைத்தாரே, கரன் தூஷணன் திரிசிரஸ் என்ற இவ்வரக்க வீரர்களைச் சூரிய னுக்கொப்பான அம்புகளால் இராமர் வதைத்தாரே, அவைகளே இராமரது வல்லமைக்குப் பூர்ணமான திருஷ் டாந்தங்கள். ஒரு யோசனை நீளமான கைகளமைந்தவ னாய் இரத்தத்தைக் குடித்துக்கொண்டு கோபத்தாற் கர்ச் சிப்பவனாயிருந்த கபந்தனையும் இராமர் வதைத்தாரே, அதுவே இராமருடைய வல்லமையைத் தெரிவிக்கப் போதுமான திருஷ்டாந்தம். வெகு பலவானாய் இந்திர டைய குமாரனாய் மேருவுக்கு ஒப்பானவனாயிருந்த அதுவே அவருடைய வாலியை இராமர் கொன்றாரே வல்லமையை யறிந்து கொள்ளப் போதுமான ஒரு திருஷ் டாந்தம். ரிசியமூக மலையில் வசித்துக் கொண்டு தனது மனோரதங்கள் ஒன்றும் கைகூடாமல் வெகு பரிதாபமாக விருந்த சுக்கிரீவனை இராமர் வானரவேந்தனாக முடிசூட்டி வைத்தாரே, அவர் மகிமை இப்படிப்பட்டதென்பதைத்  தெரிந்து கொள்ள அதுவே போதுமான ஒரு திருஷ்டாந் தம். தர்மத்துடனும் அர்த்தத்துடனும் கூடியதும் எல்லா அரக்கர்களுடைய க்ஷேமத்தையும் நாடியதும் நியாய மானதுமான விபீஷணருடைய நற்போதனை அவ்வீராவண னார்க்கு மோஹத்தால் மனத்திற்குப் பிடிக்கவில்லை. விபீ ஷணர் சொல்லியபடி இராவணனார் செய்திருந்தால் இவ் விலங்கை துயரத்தால் வருத்தப்பட்டு சுடுகாடாகப் போகாமலிருக்குமே! என் குமாரன் மாண்டானே. என் உடன் பிறந்தோன் மாண்டானே என் கணவன் போரில் மடிந்தானே!” என்று வெகு கடோரமாகப் புலம்பினார்கள். 

வீடுகள் தோறும் எழும்பிய அவ்வழுகையொலி அவன்காதில் விழுந்ததும் இராவணன் பெருமூச்சுவிட்டு கொஞ்சநேரம் ஒன்றுந் தோன்றாமல் ஆலோசிக்கலானான்; அதன்பிறகு வெகு கோபங்கொண்டவனாய் சமீபத்திலிருந்த அரக்கர்களை நோக்கி “சீக்கிரம் போரிடப் புறப் படும்படி நான் கட்டளையிட்டதாகச் சேனாதிபதிகட்குத் தெரியப்படுத்துங்கள் ‘ என்றான். அவ்வரக்கர்களும் அவன் அவ்வாறு சொன்ன சொல்லைக் கேட்டு அச்சத்தால் நடுநடுங்கியவர்களாய் அஜாக்ரதையாக இருந்த அரக்கர் களை நோக்கி அரக்கமன்னவனுடைய கட்டளைப்படியே ஏவினார்கள். பயங்கரமான தோற்றமுள்ள அவ்வரக்கர் கள் யாவரும் அப்படியே யென்று உடன்பட்டு தங்களுக்கு க்ஷேமமுண்டாக ஸ்வஸ்தியயனஞ் செய்துகொண்டு யுத்தஞ்செய்யுமாறு புறப்பட்டார்கள். அவ்வரக்கர்கள் யாவரும் இராவணனிடம் வந்து அவனுக்கு முறைப்படி மரியாதைகளைச் செய்து தமது தலைவனுடைய வெற்றியை விரும்பினவர்களாய் கைகளை அஞ்சலிபண்ணிய வண்ணம் நின்றார்கள். 

அப்பொழுது கோபம் மிகுந்தவனாய் இராவணன் பரி காசமாகக் சிறிது சிரித்து மகோதரன் மகாபார்சுவன் விரூ பாக்ஷன் என்ற இவர்களைப் பார்த்து பின்வருமாறு சொல்லலானான்:-“நான் இன்று என்னுடைய வில்லி னின்று பிரயோகிக்கப் போகின்றனவாய்ப் பிரளயகாலத் தில் தோன்றுஞ் சூரியன் போன்ற பாணங்களால் இராமன் இலட்சுமணன் என்ற இவ்விருவரையும் யம னுடைய மாளிகைக்கு அனுப்புகின்றேன். இன்று நான் எனது மாற்றாரை வதைப்பதனால் கரன் கும்பகர்ணன் பிரஹஸ்தன் இந்திரஜித்து என்ற இவர்களைக் கொன்ற பழியைத் தீர்த்துக் கொள்ளுகிறேன். எவர்கள் ‘கணவன் மாண்டான், உடன்பிறந்தவன் மாண்டான், ‘குமாரர் கள் மாண்டார்கள்’ என்று புலம்புகிறார்களோ அவ்வரக்கி களுடைய கண்ணீரை நான் இன்று, சத்துருவைக்கொல் வதனால் துடைக்கின்றேன். எனது இரதத்தை சீக்கிரங் கொண்டு வந்து நிறுத்துங்கள்; எனது வில்லைச் சடிதியிற் கொண்டுவந்து வையுங்கள். இன்னும் எஞ்சிநிற்கின்ற அரக்கர்களெல்லாரும் என்னைத் தொடர்ந்து வரட்டும் என்றான். 

உடனே ஒரு முகூர்த்தத்துக்குள் பயங்கரமான தோற்றமும் மிகவுங்கொடுமையான முகங்களுமுள்ள அரக்கர்கள் யாவரும் பலவகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கர்ஜ்ஜிப்பவர்களாய் புறப்படலானார்கள். தனது இரதத்தின்மேல் மிகவும் பயங்கரமான தோற்ற முள்ள இராவணன் ஏறினான். பிறகு பல அரக்கர்களாற் சூழப்பட்டு இராவணன் தனது பலத்தாலும் காம்பீரியத் பிளந்து விடுகின்றவன் போன்று தாலும் பூமியையே போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். இராமலக்ஷ்மணர் எங்கு இருக்கின்றார்களோ அவ்வாயில் வழியாக வெளிப் புறப்பட்டான். அப்பொழுது, சூரியபகவான் ஒளியை யிழந்தரன்; திசைகள் இருளால் மூடப்பட்டன; பறவை கள் பயங்கரமாகக் கூச்சலிட்டன. பூமி அசையலாயிற்று. இராவணனுடைய இடக்கையும் இடக்கண்ணும் துடித் ன அவனுடைய முகமும் வெளுத்தது; குரலும் கம்மிற்று. இவ்வாறு பயங்கரமாகத் தோன்றிய அபசகுனங் களில் ஒன்றையும் தனது புத்திமாறாட்டத்தினாற் சிறிதுங் கவனிக்காமல் தனது விதியால் ஏவப்பட்டனவாய் தனது சத்துருக்களை நாசம் பண்ணுதற்பொருட்டுப் போரிடப் புறப்பட்டான். 

அதிரதனாகிய இராவணன் தனது இரதத்தின் சத்தத் தால் எல்லாத் திசைகளிலும் எதிரொலி யுண்டாக்கிக் கொண்டு வெகுவேகமாக இராமரிருந்த இடத்தை நாடி அடைந்தான். 

வெகுபராக்கிரமசாலியும் பலசாலியுமான இராமர் இலக்ஷ்மணருடன் கூட நின்று இராவணன் தம்மைக் குறித்து விரைந்து வருவதைப் பார்த்து வெகுசந்தோஷங் கொண்டு தமது வில்லை நடுவிற் பிடித்தார். பிறகு இராமர் நாணியையிழுத்து வில்லிலேற்றினார். இராமர் நாணேற்றிய சத்தத்தால் அங்கிருந்த அரக்கர்களெல் லாரும் நடுநடுங்கி நூற்றுக்கணக்காய் கீழே விழலானார் கள். சக்கரவர்த்தித் திருமகர்களான அவ்விருவருடைய பாணங்களின் முன்னிலையில் வந்துசேர்ந்த இராவணன் சந்திரசூரியருடைய சமீபத்திலிருக்கும் இராகுபோல காணப்பட்டான். அவன் இராமரிடம் வந்துசேர்ந்து கோபத்தாற் கண்கள் சிவந்தனவாய் அவர்மீது சரமாரி பொழியலானான். இராமர் இராவணனையும் இராவணன் இராமரையுமாக ஒருவரையெருவர் வெகு கூரான பல வகைப்பாணங்களால் விரைவாக அடித்துக்கொள்ள லானார்கள். ஒருவரையெருவர் வதைக்க முயன்ற அவ்விரு வீரருக்குள்ளும் அப்பொழுது நடந்த போரானது தேவேந் திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த பெரும்போர் போல வேறொருவராற் செய்யமுடியாததாகவும் மனத்தி னாலும் இன்னபடியென்று நினைக்கமுடியாததாகவு மிருந்தது. 

இச்சமயத்தில் பகைவரை வெல்லுந்தன்மையுள்ள வெகு பலசாலியான இராமருடைய தம்பியாகிய இலக்ஷ் மணர் வெகு கோபங்கொண்டவராய் ஏழு பாணங்களை யெடுத்து வெகு வேகமாகச் செல்லும் அப்பாணங்களைக் கொண்டு மானுடத்தலை யுருவமெழுதிய இராவணனது தேர்கொடியைப் பல துண்டமாக அறுத்தெறிந்தார். அன்றியும் இலக்ஷ்மணர் ஒரு பாணத்தைவிடுத்து அழகான குண்டலங்க ளணிந்திருந்த அரக்கமன்னவனது தேர்பாக னுடைய தலையை நறுக்கித் தள்ளினார் ; மேலும் ஐந்து கூரான பாணங்களை விடுத்து யானையின் துதிக்கைபோல் விளங்கிய இராவணனது வில்லையும் வெட்டியெறிந்தார். நீலமேகங்கள் போலக் கறுத்து மலைகள்போல் வெகு உன்னதமாக விளங்கிய அவ்விராவணனது சிறந்த குதிரைகளை விபீஷணர் தாம் தாவிப் பாய்ந்து கதாயுதத் தினால் அடித்துக் கொன்றார்.இராவணன் புரவிகள் மாண்ட இரதத்திலிருந்து வெகுவேகமாகக் கீழிறங்கி தனது தம்பியின்மேற் கொடுங்கோபங்கொண்டான். பிறகு பல உபசாரங்களால் நன்றாக பூஜிக்கப்பட்டதாய் யம னாலும் அணுகமுடியாததாய் தனது ஒளியால் மிகுதியாக மின்னிக்கொண்டிருந்ததான பெரியதொரு சக்தியெனும் ஆயுதத்தைக் கையிற்பிடித்தான். இராவணன் அப்பெருஞ் சக்தியை கையாற் சுழற்றிய பொழுது அது வெகு பயங் கரமாக மின்னிற்று. அச்சமயத்தில் அச்சக்தியால் விபீ ஷ்ணருடைய உயிருக்கு அபாயமுண்டாகுமென்று சந்தே கித்து இலக்ஷ்மணர் விபீஷணரை மறைத்துக்கொண்டு அவருக்கு முன்பாக நின்று விபீஷணரை விடுவிக்கக் கருதி சக்தியைக் கையிற்கொண்டிருந்த இராவணன்மேல் தமது வில்லை வளைத்துப் பாணங்களை வருஷிக்கலானார். இலக்ஷ் மணர் விடுத்த பாணங்கள் வந்து துளைத்தலால் இராவ ணன் தனது பராக்கிரமங் குன்றி தனது தம்பியின் மேல் அச்சக்தியை விடவேண்டுமென்ற எண்ணத்தை மாற்றினான். 

இலக்ஷ்மணர் அவ்வாறு தன் தம்பியைப் பாதுகாத்த தற்காக அச்சக்தியை வெகு கோபங்கொண்டு இலக்ஷ்மணர் மேல் விடுத்து அட்டகாசம் பண்ணினான். அச்சக்தியால் இலக்ஷ்மணர் மார்புபிளப்புண்டு புவியில் விழுந்தார். அவ் விதமான அவஸ்தையை யடைந்த இலக்ஷ்மணரை அவருக் குச் சமீபத்திலிருந்த இராமர் பார்த்து வெகு தைரியசாலி யாக விருந்தும் தம்பியின்மேல் வைத்திருந்த அன்பினால் மிக்க வருத்தமடைந்தார். அந்த துக்கத்தாற் கண்ணீர் வடி கின்ற கண்களுடன் அம்மகாத்துமா கொஞ்ச நேரம் ஆலோசித்து உடனே வெகுகோபங்கொண்டவராய் பிரளயகாலத்தீப்போலக் கொதிக்கலானார்: ‘இதுவன்று துக்கப்படவேண்டிய சமயம்’ என்று நினைத்து இரா வணனை வதைக்கக் கருதியவராய் வெகுபயங்கரமான யுத்தத்திலிறங்கினார். 

அநுமான் சுக்கிரீவன் இவ்விருவரையும் பார்த்துப் பின்வருமாறு சொல்லலானார்:-“வானரோத்தமர்களே! நீங்கள் இலக்ஷ்மணரைச் சூழ்ந்துகொண்டு இவ்விட மிருங் கள். நான் வெகுநாளாக எதிர்பார்த்திருந்ததாகிய என் வல்லமையை வெளிக்காட்டுஞ் சமயம் இப்பொழுதுதான் நேர்ந்திருக்கின்றது. எப்பொழுதும் பாவச்செயல்களையே புரியும் இப்பாவியை வதைக்கவேண்டும். கோடை நீங்கி னதும் சாதகப்பறவை மேகத்தை ஆவலுடன் எதிர்பார்ப் யதுபோல நான் இந்த சமயத்தைத்தான் இதுவரையில் எதிர்பார்த்திருந்தேன். வானரர்களே! வெகுசடிதியில் இதே முகூர்த்தத்தில் இவ்வுலகத்தைவிட்டு ஒன்று இரா வணனாவது ஒழியவேண்டும்; இராமனென்ற நானாவது ஒழியவேண்டும். இவ்வண்ணம் நான் சத்தியமாகப் பிரதிஜ்ஞை செய்கின்றேன். என் பார்வையிலகப்பட்ட பிறகு இவன் ஒருபொழுதும் உயிர்தப்பமாட்டான்” என்றார். இராமர் இவ்வாறு சொல்லி மனந்தேறி பொன்னா பரணங்களையணிந்த கூரான பாணங்களை இராவணன் மேல் விட்டார். இராமரும் இராவணனும் அவ்வாறு ஒருவர்மேல் ஒருவர் பாணங்களை விடுத்துக்கொண்ட பொழுது அவ்விருவருடைய பாணங்களின் ஒலியும் நெருக்கமாகக் கேட்கலாயிற்று. 

இராவணனது சக்தி யென்கின்ற ஆயுதத்தால் இலக்ஷ்மணர் வருத்தப்பட்டு இரத்தம் பெருக விழுந்த தைப் பார்த்த பிறகு, இராமர் கொடிய அவ்வரக்க வேந்த னுடன் வெகு பயங்கரமான யுத்தம் பண்ணி அவன்மேற் வண்ணமே சுஷேணனைப்பார்த்து சரமாரி பொழிந்த பின் வருமாறு சொல்லலானார்:-” இராவணனுடைய வல் லமையால் இலக்ஷ்மணன் பூமியில் விழுந்துகிடக்கின்றான்; எனது துக்கத்தைப் ‘பெருகப் பண்ணிக்கொண்டு இவ் வீரன் சர்ப்பம்போலப் புரள்கின்றான். எனது உயிரை விட எனக்குச் சிறந்த இவ்வீரன் தனது உடம்பு முழுமை யும் இரத்தத்தால் நனைந்திருப்பதைப் பார்த்த பிறகு மனங்குழம்பிவிட்ட எனக்கு இனிமேல் யுத்தஞ்செய்ய என்ன வல்லமை யிருக்கின்றது? போரில் வல்லவனாய் என் தம்பியாய் உத்தமவிலக்ஷணங்கள் பொருந்தியவனா யிருக் கும் இலக்ஷ்மணன் தனது பிராணனை யிழந்தானென்றால் அதன் பிறகு என்னுயிராலும் மற்றைச் சுகங்களாலும் எனக்கு என்ன பிரயோஜனம்? இனிமேல் எனக்கு யுத்தத் தால் ஒருவித பிரயோஜனமுமில்லை ; எனது உயிராலுமில்லை; சீதையாலுமில்லை. எனக்கு ராச்சியத்தினால் ஆகவேண்டுவது என்ன? எனது தம்பி மடிந்து விழுந்தான்; இனி போர்செய்வதிலும் யாதொருகாரியமுமில்லை. வேண்டுமானால் தேசந்தோறும் ஒவ்வொரு மனைவியை விவாகஞ்செய்து கொள்ளலாம்; வேண்டுமானால் தேசங் தோறும் பந்துக்களை சம்பாதிக்கலாம்; ஆனால் எந்தத் தேசத்தில் எனது உடன்பிறந்த தம்பி எனக்குக் கிடைப் பானோ அப்படிப்பட்ட தேசம் மாத்திரம் எனக்குப் புலப்படவில்லை” என்றார். 

இவ்வாறு இராமர் புலம்புகையில் சுஷேணன் அவ ருக்குப் பின் வருமாறு தேறுதல் சொல்லலானான்:-“புஜ பராக்கிரம முள்ளவரெ? எல்லாவகைச் சம்பத்துக்களும் நிரம்பிய இலக்ஷ்மணர் இறந்துபோகவில்லை ; அவரது முகம் நிறம் மாறியதாகவேனும் காந்தி குறைவுபட்டதாக வேனும் ஆகவில்லை; ஒரு வகை விகாரத்தையும் அடைய வில்லை.” பிறகு அவ்வானரன் அனுமானை நோக்கி பின் வருமாறு வெகு விரைவுபடுத்திச் சொல்லலானான்:- ” அடக்கமுடையோனே! இவ்விடம்விட்டுச் சடுதியிற் கிளம்பி ஜாம்பவன் முந்தி சொல்லியிருக்கும் ஓஷதி பர்வதமென்னும் மூலிகை மலைக்குப் போய் விசல்யகரணி யென்னும் பச்சிலையையும் ஸாவர்ண்யகரணீ என்னும்மூலிகையையும், ஸஞ்சீவி யென்ற ஓஷதியையும், ஸந்தாநகரணி யென்ற பச்சிலையையும் மகாத்துமாவாகிய இலக்ஷ்மணரைப் பிழைப்பிக்கும் பொருட்டு இம்மூலிகை களை சடிதியில் இவ்விடம் கொண்டுவர வேண்டும்” என்றான். 

இப்படி அவன் சொன்னதும் சீமானான அநுமான் அச்சிகரத்தினிடம் சடிதியில்வந்து அச்சிகரத்தை மூன்று தரம் அசைத்துத் தனது கையிலேந்தி ஆகாய மார்க்கமாக திரும்பினான். வெகு வேகமாய் வந்துசேர்ந்து அம்மலை சிகரத்தை சேனையின் நடுவிற் கீழே வைத்துக் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்டு பிறகு அநுமான் சுஷேணனைப் பார்த்து பின் வருமாறு சொல்லலானான்:-” வானர வீரனே ! நீ குறித்த பச்சிலைகள் எனக்குத் தெரியவில்லை ; ஆகையால் அம்மலைச் சிகரத்தையே இங்குக் கொண்டுவந்தேன்” என்றான். இப்படிச் சொன்ன அனுமானை சுஷே ணன் புகழ்ந்து தனக்கு வேண்டிய மூலிகையைப் பிடுங்கி யெடுத்துக்கொண்டான். பிறகு சுஷேணன் அந்தப் பச்சிலையை நன்றாகக் கசக்கி மஹா தேஜஸ்வியாகிய இலக்ஷ்மணருடைய மூக்கினால் மோக்கும்படி செய்தான். சக்தியாற் பிளப்புண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த பகைவீரரை யழிக்க வல்லவரான இலக்ஷ்மணர் அதை மோந்த மாத்திரத்தில் வேதனைகள் அவ்வளவும் நீங்கி விரணமாறி பூமியிலிருந்து எழுந்தார். அவ்விதமாக அவர் பூமியிலிருந்து எழுந்ததை எல்லா வானர வீரர்களும் பார்த்துக் களித்து ‘நன்று, நன்று’ என்று சொல்லி சுஷே ணனைக் கொண்டாடினார்கள். 

அப்போது பகைவரையழிக்கவல்ல இராமர் இல மணரைப் பார்த்து வருக, வருக என்று சொல்லி கண் களில் நீர் ததும்ப அவரை அன்பினால் இறுகத் தழுவிக் கொண்டார். அவ்வாறு அவரைக்கட்டிக்கொண்ட பிறகு இராகவர் அவரை நோக்கி ”வீரனே! என்னுடைய பாக் கியத்தால் மாண்ட நீ மீண்டும் பிழைத்திருக்கக் காண் கின்றேன். நீ மட்டும் மாண்டிருந்தால் என்னுயிரால் எனக்கு என்ன இலாபம்? சீதையால்தான் என்ன லாபம்? எனது வெற்றியால்தான் என்ன பயன்?” என்றார். இவ்வாறு இராமர் சொன்னபொழுது வீரத் தன்மையைவிட்டு நழுவிக் கோழை மனத்துடன் இராமர் பேசியதற்காக இலக்ஷ்மணர் வெகு விசனமடைந்தவராய் மறுமொழி சொல்லலானார்:-” உண்மையையும் வல்ல மையையும் உடையவரே ! * அவ்வாறு தாங்கள் வாக்குக் கொடுத்து இவ்வாறு பேசுவது நியாயமா? மாசற்ற வீரரே! சாதுக்கள் வீணாக வாக்குதத்தம் செய்யார்கள். பிரதிக்ஞையை நிறைவேற்றுவதல்லவோ பெருந்தன் மைக்கு உரிய அடையாளம். குற்றமற்றவரே! எனக் காகத் தாங்கள் எல்லாவற்றிலும் ஆசையை யொழித்து விடுவது நீதியல்ல ; இன்றைக்குத் தாங்கள் இராவணனை வதைத்து செய்த பிரதிக்ஞையை நிறைவேற்றுக.” 

-“இராவணனைக் கொன்று விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்கின்றேன்” என்பது, இராமர் செய்த பிரதிக்ஞை. 

பகைவர்களின் செருக்கை யடக்கும் வீரரான இராமர் இலக்ஷ்மணரது சொல்லைக் கேட்டு வில்லை வளைத்து நாணேற்றி பயங்கரமான அம்புகளைத்தொடுத்து சேனாமுகத்தில் இராவணன்மேல் விடுத்தார். பூமியில் நின்றுகொண்டிருக்கும் இராமருக்கும் இரதத்திலிருந்து கொண்டு போர் புரிகின்ற இராவணனுக்கும் இப்போது நேர்ந்துள்ள போர் சரியான தன்றென்று தேவ கந்தர்வ கின்னரர்கள் சொல்லலானார்கள். அப்பொழுது தேவேந் திரன்தனது சாரதியான மாதலியைப் பார்த்துக் கட்டளை யிடவே தங்கத்தினால் அழகாகச் செய்யப்பட்டதும், நூறு சிறுமணிகளா லலங்கரிக்கப்பட்டதும், இளஞ் சூரியனுக்கு ஒப்பானதும், வைடூரிய இரத்தினங்களாற் செய்யப்பட்ட பொன்னாபரணங்களா லலங்கரிக்கப் பாருள்ளதும், பட்டுச் சூரியனுக்கொப்பாகி வெண்சரமரங்களுடன் கூடிய பச்சை நிறமுள்ள நற்குதிரைகள் பூட்டப்பட்டதும், பொன் மூங்கிலின்மேற் பறக்கின்ற கொடிச்சீலையை யுடையதும், செல்வச் சிறப்பைத் தெரிவிக்கின்றதுமான தேவேந்திரனது ரதத்திலே ஏறிவந்து மாதலி ஆகாயத்தி லிருந்து இறங்கி இராமர் முன்பாக அதை நிறுத்தி அஞ் சலி பண்ணிக்கொண்டு தனது கையிற் சாட்டையைப் பிடித்தவண்ணமே இராமரைப் பார்த்து, “காகுத்தரே! இப்பொழுது தாங்கள் வெற்றியடையும் பொருட்டு தேவேந்திரர் இந்த ரதத்தைத் தங்களுக்கு அனுப்பியிருக் கிறார். சீமானே! பெருவலிபடைத்தவரே! சத்துருக் களின் செருக்கைப் போக்கவந்தவரே! இந்திரபகவான் தம்முடைய இப்பெருவில்லையும் அக்கினிக்கு ஒப்பான இக் கவசத்தையும் சூரியனுக்கு ஒப்பான இந்த அம்புகளையும் வெகு கூரான முனையுடன் கூடிப் பிரகாசிக்கும் இந்தச் சக்தியையும் தங்களுக்காக அனுப்பியிருக்கின்றார். வீரரே! இந்த இரதத்தின்மேலேறி நான் சாரத்தியம் பண்ண தேவேந்திரர் தானவர்களை யழித்ததுபோல் தாங்கள் இராவணனை வதையுங்கள் என்று கூறினான். 

இப்படி மாதலி சொன்னதும் இராமர் அந்த இரத்த்தை வலம் வந்து நமஸ்காரம் செய்து உலகத்தைத் தமது காந்தியால் விளக்கிக்கொண்டு அவ்விரதத்திலேறி னார். அப்போது மஹா வீரராகிய இராமருக்கும் அரக்க னான இராவணனுக்கும் பார்த்தவர்கள் மயிர்க்கூச்செறியும் படிஅற்புதமாய் நெருக்கமான பெரும்போர் தொடங்கிற்று. இராவணன் எளிதாகத் தொழில் செய்ய வல்ல இராமரை தனது ஆயிரக் கணக்கான பாணக் கூட்டங்களாற் புடைத்துவிட்டு தனது பாணக்கூட்டங்களால் மாதலியை இம்சிக்கலானான். ஒரு பாணத்தை இராவணன் தங்கக் கொடியின்மேல் விடுத்து வெட்டி அதை இரதமத்தியில் வீழ்த்தினான். ஆகாயத்திலிருந்து மேகமானது மழையைப் பொழிந்து தடாகத்தை நிரப்புவது போல, இராவணன் சரமாரியால் இராமரை நிரப்பினான். 

அதன்மேல் வெகு கோபங்கொண்ட இராமர் இராவ ணன் மீது பாணங்களைத் தூவினார். சத்துருவின் நாசத்தை மனத்தாற் கருதிய இராமருக்கு வீரியமும் பலமும் உற்சா கமும் அஸ்திர பலமும் அப்போது முன்னிலும் இருமடங் காயின. தம்மிடம் அவ்விதமான நற்குறிகளையறிந்து ராவணனை மீண்டும் இம்சிக்கலானார்; வானரவீரர் கள் ஒரு பக்கம் தன்னைப் பாறைகளாற் புடைக்க, இராமர் ஒரு டக்கம் தன்மீது சரமாரி பொழிய, இராவணன் மனங்குழம்பி ஒன்றுந் தோன்றாது திகைத்து நின்றிட்டான். அதன்பிறகு போரைப் பார்க்க தேவர் களுடன் சேர்ந்துவந்த அகஸ்திய பகவான் இராமரை யடைந்து சொல்லலானார்:-“இராமராம்! மகாபாகுவே! குழந்தாய்! எதனால் எல்லாப் பகைவர்களையும் போரில் வெல்வாயோ அநாதியான இரகசியத்தைக் கேட்பாயாக. ஆதித்யஹ்ருதயமென்ற பெயரையுடையதும் புண்ணிய, மானதும் சத்துருக்களெல்லாரையும் வெல்லவல்லதும் வெற்றியையே கொடுப்பதும் குறையாத பயனை யளிப்பதும் பரமபாவனமானதும் மங்களங்களுக்கும் மங்கள மானதும் எல்லாப்பாவங்களையும் நாசம் பண்ணுவதும் கவலையையும் நோயையும் ஆற்றுவதும் வாழ்நாட்களைப் பெருக்குவதும் ஜபிக்கக்கூடிய. மந்திரங்களுக்குள் உத் தம்முமான இது ஜபிக்கக்கடவது தேவாசுரர்களால் நமஸ் காரஞ் செய்யப்படுகின்றவரும், ஆயிரங்கிரணங்களுடன் நன்றாக உதயமாகி யிருக்கின்றவரும், தமது ஒளியால் மற்றையொளிகளை மறைப்பவரும், ஒளியைக் கொடுக் கின் றவரும், உலகங்களுக்கெல்லாம் ஈசுவரருமான சூரிய பகவானை பூஜைசெய்க. தேஜஸ்வியாகிய இவர் எல்லாத் தேவதைகளுக்கும் ஆத்துமாவாக விளங்குகின்றாரன்றோ! இவர் தேவர்கூட்டங்களின் வடிவாயு மிருக்கின்ற ஜனங் கள் எல்லாரையும் தமது கிரணங்களினால் ரக்ஷிக்கின் றார். இவர்தாம்.பிரமா : விஷ்ணு: சிவபெருமான்; ஸ்கந்தன் ; நவப்ரஜாபதிகள்; மஹேந்திரன்; குபேரன்; காலன்; யமன்; சோமன்; வருணன் : பிதிருக்கள்; வசுக்கள் ; சாத்தியர்கள்; அசுவி நீதேவதைகள் ; மருத் துக்கள்; மனுக்கள்; வாயு அக்கினி; ஐந்துக்களின் உயிர்; பருவங்களை யுண்டாக்குகின்ற ப்ரபாகரர்.” 

“நீர்-ஆதித்யர் [அதிதியின் புதல்வர் அல்லது. ஸம ஸ்தபூமிக்குந் தலைவர்): ஸவிதா (ஜகத்தை யுண்டாக்கு பவர்]: ஸூர்யர் (ஜனங்களைக் தொழில் செய்யுமாறு ஏவுபவர்] ககர் (உலகத்தின் நன்மைக்காக ஆகாயத் திற் சஞ்சரிப்பவர்] பூஷா [ஜகத்தை மழையாற் போஷிப்பவர்]; கபஸ்திமான் [கிரணங்களையுடையவர்): ஸ்வர்ணஸத்ருஸர் [பொன்னின் நிறமானவர்]; பாநு [பிரகாசிப்பவர் ]; ஹிரண்யரேதஸ் (பொன்மயமான பிரமாண்டத்தைச் செய்தவர் திவாகரர் (பகலைச் செய் பவர் ] : ஹரிதஸ்வர் (பச்சைநிறக் குதிரைகளையுடைய வர்]; ஸஹஸ்ரார்ச்சிஸ் [ஆயிரங்கிரணங்களையுடைய வர்]:ஸப்தஸப்தி [ஸப்தமென்ற குதிரைகளையுடையவர்] மரீசிமான் [பிரகாசத்தை யுடையவர்.] திமிரோந்மதநர் ; [இருளைப் பிளக்குங் கிரணங்களமைந்தவர்]; சம்பு [சுகத்தையுண்டாக்குபவர்]: த்வஷ்டா [ஸர்வஸம்ஹார கர்த்தா];மார்த்தாண்டர் [ஸர்வஸம்ஹாரத்தில் அழிந்த வற்றைப் படைக்குமாறு மீண்டுந் தோன்றியவர்]; அம்சு மான் [பிரகாசிப்பவர்] : ஹிரண்யகர்ப்பர் (இந்தப் பிர மாண்டத்தின் நடுவில் விளங்குபவர்]: சிசிரர் (தம்மை வணங்குபவர்களி னுள்ளத்தைக் குளிரச் செய்பவர்]: தபநர் [வெயிலால் விளங்குவர்]; பாஸ்கரர் [ஒளியை யுண்டாக்குபவர்]; ரவி [எல்லாராலும் ஸ்தோத்ரம் பண்ணப்பட்டவர்]; அக்நிகர்ப்பர்.(பகலில் அக்கினி யைத் தம்மிடம் வைத்துக்கொண்டிருப்பவர்]: அதிதிபுத் ரர் (அதிதியின் புதல்வர்]: சங்கர் (சாயங்காலத்தில் சுயமாகவே தணிவையடைபவர்]: சிசிரநாசனர் (பனியை நாசம்பண்ணுபவர் ] : வ்யோமநாதர் [ஆகாயத்துக்குமன்ன வர்] தமோபேதீ (ராஹுவைப்பிளப்பவர் ] ;ருக்யஜுஸ் ஸாமபாரகர் [ருக் யஜுஸ் ஸாமம் என்னும் வேதங்களின் கரையைக் கண்டவர்]; கனவ்ருஷ்டி [பெருமழையை யுண்டாக்குபவர்): அபாம்மித்ரர் (தண்ணீர்க்கு நண் பர்]; விந்த்யவீதி [ விந்தியமலையைத் தக்ஷிணாயகத் திற் செல்லும்வழியாகக்கொள்பவர்]: ப்லவங்கமர் [புணை போல் ஆகாயமாகிய சமுத்திரத்திற்செல்பவர்]: ஆதபீ [வெயிலையுடையவர்]; மண்டலீ [வட்டவடிவமானவர்]; ம்ருத்யு [அடைந்தவரது பகைவர்களை நாசம்பண்ணு பவர்]: பிங்களர் (உதய காலத்திற் பொன்னிறமான வர்]; ஸர்வதாபநர் [மத்தியான்னத்தில் எல்லாரையும் எரிக்கின்றவர்): கவி (எல்லாச் சாஸ்திரங்களையும் நடைபெறச் செய்பவர்] விஸ்வர் [இவ்வுலகத்தை நிர் வஹிக்கின்றவர்]; மஹாதேஜஸ் [பெருங்காந்தி பொருந்தியவர்];ரக்தர் (எல்லாரிடமும் அன்பு பாராட்டுபவர் ]; ஸர்வபவோத்பவர் [எல்லாரது ஸம்ஸாரத்துக்கும் உத்பத்திக்காரணர்]: நக்ஷத்ர க்ரஹதாராதிபர் [நட்சத் திரங்கள் கிரகங்கள் தாரைகள் இவைகளுக்குத் தலை வர்]: விஸ்வபாவனர் [எல்லாவற்றையும் நிலைநிறுத்து பவர்]: தேஜஸாம் தேஜஸ்வீ [ஒளிபொருந்திய அக்கினி முதலியவற்றிற்குள் மிக்க ஒளிபொருந்தியவர்) த்வாத ஸாத்மாவே! (இந்திரன் -தாதா-பகன் பூஷா-மித் திரன் – வருணன் – அர்யமன் – அர்ச்சிஸ் – விவஸ்வான்- த்வஷ்டா – ஸவிதா -விஷ்ணு என்ற பன்னிரண்டு மூர்த்தி களாக இருப்பவர்!] உமக்கு நம்ஸ்காரம்: கிழக்கு மலையை (உதிக்குமிடமாக) உடையவர்க்கு நமஸ்காரம். மேற்குமலையை . (அஸ்தமிக்குமிடமாக) உடையவர்க்கு நமஸ்காரம். ஜ்யோதிஸ்ஸு க்களின் கூட்டங்களுக்கு மன்னவரான பகற்காலத்தின் அதிபதிக்கு நமஸ்காரம். ஜீயரும் [உபாஸகர்க்கு வெற்றிகொடுப்பவரும்] ஜய பத்ரருமான வெற்றி க்ஷேமம் ஹர்யஸ்வர்க்கு [பச்சைவரு ணமுள்ள குதிரைகளை களை யுடையவர்க்கு] நமோநம்: ஸஹஸ்ராம்ஸோ [ஆயிரங் கிரணங்களையுடைவரே)! நமோநம : ஆதித் யர்க்கு நமோநம்: உக்ரரான [உபாஸியாதவர்களிடம் கொடுமையைக்காட்டுகின்ற] வீரர்க்கு [ஜனங்களைப் பல தொழிலில் மூட்டுகின்றவர்க்கு] நமஸ்காரம் ஸாரங்கர்க்கு [வெகு வேகமாக ஆகாயத்திற் சஞ்சரிப் பவர்க்கு] நமோநம:. பத்மப்ரபோதருக்கு (தாமரை மலர் களை எழுப்புகின்றவர்க்கு நமஸ்காரம்; மார்த்தாண் டர்க்கு நமோநம: ப்ரஹ்மேஸாநாச்யுதேஸரும் [பிரமா வையும் சிவபெருமானையும் எல்லாவாபத்துக்களிலும் பாலனம் பண்ணுகின்றவரும்] ஸூர்யருமான ஆதித்ய வர்ச்சஸ்ஸும் (ஆதித்யரூபமான காந்தியையுடைய வரும்], பாஸ்வாநும் (காந்தியையுடையவரும், ஸர்வ பக்ஷருமான (எல்லாவற்றையும் அழிப்பவருமான] ரௌத்ரவபுஸ்ஸுக்கு (எல்லாவற்றையும் அழிக்கையில் கடுமையான வடிவத்தை யுடையவர்க்கு], நமஸ்காரம். தமோக்கரும் (இருளைப்போக்குகின்றவரும்], ஹிமக்கரும் (பனியைப்போக்குகின்றவரும்], சத்ருக்கரும் (தம்மை யடைந்தவரது பகைவரை யழிப்பவரும்], அமிதாத்மாவும் [அளவிடக்கூடாத ஸ்வரூபத்தையுடையவரும்), க்ருதக் நக்கரும் [நன்றியற்றவர்களை நாசஞ்செய்கின்றவரும்], தேவருமான (விளங்குபவருமான] ஜ்யோதிஷாம்பதிக்கு நமஸ்காரம். தப்தசாமீகராபரும் (உருக்கிவிட்ட தங்கத் தின் நிறமாக விளங்குபவரும், வஹ்நியும் (அக்நிரூப மாக நின்று ஹவிஸை வஹிப்பவரும்], விஸ்வகர்மாவும் [எல்லா ஜகத்துக்கும் கர்த்தாவும்], தமோபிநிக்கரும் [அஜ்ஞாநவிருளைப் பிளப்பவரும்), ருசியுமான (ஒளி வடிவமானவருமான] லோகஸாக்ஷிக்கு [அந்தர்யாமியா யிருத்தலால் ஜனங்களின் புண்ய பாவங்களுக்குச் சாக்ஷி யானவர்க்கு] நமஸ்காரம்.” 

“இக்கடவுள் பிரளய காலத்தில் ஜகத்தை யழிக்கின் றார்; அதையே மறுபடியும் உண்டாக்குகின்றார்; இவர் ரக்ஷகர். இவர்தாம் எல்லாவற்றையும் வற்ற அடிக்கின் றார்; எரித்துவிடுகின்றார்; தமதுகிரணங்களால் மழையைப் பொழிகின்றார். இவர்தாம் எல்லாப் பிராணிகளும் உறங் கும்பொழுது அந்தர்யாமியாகவிருந்து விழித்திருக்கின் றார். இவர்தாம் அக்கினிஹோத்ரம்; அக்கினிஹோத்ரஞ் செய்கின்றவர்களுக்குப் பயனும் இவரே. வேதங்களும், யாகங்களும், யாகங்களின் பயனும், இன்னும் இவ்வுலகத் தில் நடக்கின்ற செயல்களும் எல்லாமும் இந்தச் சூரிய பகவானே.”

“இராகவரே! எவன் ஒருவன் தான் ஆபத்திலிருக்கும் பொழுதும் கஷ்டப்படும்பொழுதும் கடத்தற்கு அரிய வழி யில் அகப்பட்டுக்கொண்டு விழிக்கும்பொழுதும் மனத்திற் குப் பயமுண்டாகுஞ் சமயங்களிலும் இந்த ஆதித்ய ஹ்ருதய மந்தரத்தை ஓதுகிறானோ அவன் ஒருபொழுதும் வருத்தமடைய மாட்டான். ஒரே மனத்துடனிருந்து கொண்டு தேவர்களுக்குந்தேவராகவிருக்கின்ற இந்த ஜகத் பதியான சூரியபகவானை பூசைசெய்க; ஆதித்யஹ்ருதய மென்ற இம்மந்திரத்தை மூன்றுதரம் ஜபஞ்செய்க; போரில் வெற்றிபெறுவாய். மகாபாகுவே! இந்தக்ஷணமே இராவணனை வெல்வாய்” என்று சொல்லிவிட்டு அகத் தியமகாமுனிவர் தாம் வந்தவழியே திரும்பிப்போனார். 

வெகு பராக்கிரமசாலியாகிய இராமர் இதைக்கேட்டு துயரமற்றவரானார். சூரிய தேவரைப் பார்த்து ஜபம் பண்ணி மூன்றுதரம் ஆசமனஞ் செய்துவிட்டு ஆனந்த மடைந்தவராய் வில்லைக் கையிலேந்தி மனோதைரியங் கொண்டு நின்றார். பிறகு இராமர் இராவணனைக் கண் ணுற்று வெகு உற்சாகங்கொண்ட உள்ளத்துடன் போரிடு மாறு வந்தார். அதிக சத்தத்தோடு ஓடிவந்த இராவண னுடைய இரதத்தை பார்த்தார். இராமர் பாலசந்திரன் வடிவமாக வளைத்துள்ள தமது கோதண்டத்தை டங்காரஞ் செய்து இந்திரபகவானுடைய சாரதியாகிய மாதலியைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லலானார் “மாதலியே! சத்துருவினிரதம் வேகமாக வருகின்றது. காண். நீ இப்பொழுது கொஞ்சமேனுங் குழப்பமில்லா மல் சத்துருவினிரதத்தை எதிர்கொள்க. மிகுதியாகக் கிளம்பியிருக்கும் மேகத்தை வாயுவானது கலைப்பதுபோல நான் இராவணனை நாசம்பண்ண விரும்புகின்றேன்.நீ எளிமையில்லாமலும் மனங்குழம்பாமலும் உள்ளத்தை யும் பார்வையையும் ஒரே நிதானமாக வைத்துக் கொண் டும் கடிவாளத்தைச் சரிவரக் கைப்பற்றியும் வெகு வேக மாக இந்த இரதத்தை ஓட்டுக. தேவேந்திரனுடைய இரதத்தையோட்டுகின்ற உனக்கு நான் ஓட்டும் வகையை உபதேசிக்கவேண்டுவதில்லை. ஆயினும் போரிடுவதற்கு மனங்கொண்டிருக்கும் நான் உனக்கு இரதத்தைச் செலுத்தும் வகையை நினைவுமூட்டுகின்றேனேயல்லது உனக்குக் கற்றுக்கொடுக்க இவ்வாறு சொல்லவில்லை” என்றார். தேவேந்திரனுக்குச் சாரத்தியம் பண்ணித் தேர்ச்சியடைந்த மாதலியும் இராமர் சொன்னதைக் கேட்டுச் சந்தோஷமடைந்து அவ்விரதத்தை யோட்டி னான். அவன் இராவணனுடைய இரதத்தை தன்னிரதத் திற்கு இடப்பக்கத்திற் செல்லச் செய்து தனது இரதத் தின் சக்கரத்தினா லுண்டாகுந் தூளியால் இராவணனை மறைத்தான். 

அப்பொழுது வெகு கோபங்கொண்ட இராவணன் சிவந்து மலர்ந்த கண்களை யுடையவனாகி தனக்கெதிரில் வந்த இராமரை பாணங்களினாற் பிளக்கலானான். தம்மை இராவணன் எதிர்த்ததைக் கண்டு வெகு ரோஷங் கொண்ட இராமர் வெகு வேகத்துடன் கூடிய தேவேந்திர னது வில்லையும் சூரியனுடைய கிரணங்களுக்கு ஒப்பான காந்தி பொருந்திய பாணங்களையும் கைப்பற்றினார். அப்போது பரஸ்பரம் விரோதங்கொண்டு சண்டை செய் கின்ற கொழுத்த சிங்கங்களிரண்டிற்கு நேர்ந்த சண்டை போல ஒருவரையொருவர் வதைக்கக் கருதிப் போர்புரிந்த அவ்விருவர்க்கும் பெரும்போர் உண்டாயிற்று. அச்சம் யத்தில் மயிர்க்கூச்செறியும்படி பயங்கரமான அபசகுனங்கள் பல இராவணனுடைய நாசத்தையும் இராமரது வெற்றியையும் வெளிக்காட்டிக்கொண்டு தோன்றலாயின. 

இராமருக்கும் இராவணனுக்கும் உலகங்களெல்லா வற்றுக்கும் அச்சத்தை யுண்டாக்குவதும் அவர்களது இரண்டு இரதங்களினாற் செய்யப்பட்டதுமான வெகு கொடிய பெரும்போர் தொடங்கிற்று. இராக்ஷச சேனை மலர்ந்த கண்களால் இராவணனைப் பார்த்துக்கொண்டும், வானர சேனை மலர்ந்த கண்களால் இராமரைப் பார்த் துக்கொண்டும் திகைத்தனவாய் சித்திரத்தில் எழுதிய சைனியம்போல அசைவற்று நின்றன. அப்பொழுது இராமரும் இராவணனும் அப்போர்க்களத்தில் தோன்றிய பல நிமித்தங்களைப் பார்த்து நிலைநின்ற கோபத்துட னும் மிக்க உறுதியுடனும் யுத்தஞ்செய்யலானார்கள். இராமர் தாம் அவசியம் வெற்றியடைய வேண்டுமென்றும் ராவணன் தான் மடிந்துபோவது நிச்சயமென்றும் உறுதிகொண்டவர்களாய் தங்கள் முழுவல்லமையையும் யுத்தத்திற் காட்டலானார்கள். 

தசக்கிரீவன் உத்ஸாஹங்குறையாமல் ஆயிரக்கணக் கான பாணங்களை கலங்காத மனத்துடன் இடைவிடாது பொழியலானான் ; அதனால் ஆகாயமும் இடைவெளியற்ற தாயிற்று. பிறகு அவ்வண்ணம் போரில், ஊக்கத்துடன் முயல்கின்ற இராவணனைக்கண்டு இராமர் புன்னகை செய்பவர்போல ஆயாசமின்றிக் கூரான பாணங்களைத் தமது வில்லில் தொடுத்து நூற்றுக்கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் விடுக்கலானார்.இராமரது குதிரைகளை இராவணனும் இராவணனது குதிரைகளை இராமரும் ஹிம்ஸிக்கலானார்கள். அவ்விருவரும் வெகுகோபத்துடன் இவ்வாறு ஆச்சரியமாகப் போர் புரிந்தனர். 

அப்போது இராமரும் இராவணனும் போர்புரிகின்ற தைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் ஆச்சரியமடைந்த மனத்துடன் பார்த்தன. பாணங்களை விடுத்துக்கொண்டு போர்புரிந்த அவ்விரண்டு வீரர்களின் உத்தமமான ரதங் களும் அப்போர்க்களத்தில் மழை பொழிகின்ற மேகங் களிரண்டுபோலச் சஞ்சரித்தன. அப்போர்க்களத்தில் அவர்களிருவரும் அவ்வாறு பலவகையான போக்கைக் காட்டி மீண்டும் ஒருவருக்கொருவர் எதிர்முகமாக நிற்கலா னார்கள். அப்பொழுது இராமர் கூர்மையாய் எரிகின் நான்கு பாணங்களை விடுத்து இராவணனுடைய நான்கு குதிரைகளைப் பின்னடையச் செய்தார். அவ்வரக்கன் இராமர் தன் குதிரைகளைப் பின்னே போகச்செய்ததைப் பார்த்து பெருஞ்சினமடைந்து கூரான பாணங்களை இரா கவர்மேற் பொழியலானான். வெகு பலசாலியாகிய இராவணனால் அவ்வாறு அடிக்கப்பட்டபோதிலும் இராமர் கொஞ்சமேனும் வருத்தமடையவில்லை; அவைகளை ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை. 

அப்பொழுது தேவர்கள், கந்தர்வர்கள். சித்தர்கள், மஹரிஷிகள், கின்னரர்கள், மஹோரகர்கள் என்ற யாவ ரும் கவலை யடைந்தார்கள். “பசுக்களுக்கும் அந்தணர் களுக்கும் க்ஷேமம் உண்டாகுக : உலகங்கள் அழிவின்றி நிலைநிற்பனவாகுக. இப்போரில் அரக்க மன்னவனாகிய இராவணனை இராமர் வெல்லட்டும் என்று ஜபித்துக் கொண்டு தேவர்கள் முனிவர்களின் கூட்டங்களுடன் பயங்கரமாய் மயிர்க்கூச்செறியும்படி இராமருக்கும் இரா வணனுக்கும் நடந்த பெரும்போரைப் பார்த்தார்கள். கந்தர்வர்களின் கூட்டமும் அப்ஸரஸுக்களின் கூட்டமும் நிகரற்ற அப்போரைப் பார்த்து “ஆகாயம் ஆகாயத்தின் வடிவையே யுடையது; சமுத்திரம் சமுத்திரத்தையே உபமானமாகக்கொண்டது: அதுபோலவே இராமருக்கும் ராவணனுக்கும் நடக்கும் போரானது இராமருக்கும் இராவணனுக்கும் நடக்கும் போரையே போலும் ” என்று பேசிக்கொண்டு இராம இராவணர்கள் செய்யும் போரைப் பார்க்கலானார்கள். 

அப்பொழுது மகாபாகுவும் இரகுவம்சத்தின் கீர்த் தியை வளர்க்க வந்தவருமான இராமர் வெகு கோபங் கத்திமுனை கொண்டவராய் சர்ப்பத்துக்கு ஒப்பான யம்பை கோதண்டத்தில் தொடுத்து அதைவிடுத்து வெகு அழகாய்க் குண்டலமணிந்து விளங்கி நின்ற இராவண னுடைய தலையை வெட்டினார். அத்தலையும் இம்மூவுல கத்தாரும் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே பூமியில் விழுந்தது; ஆனால் அத்தலைபோல மற்றொரு தலை இரா வணனுக்கு உடனே உண்டாயிற்று. ஆயுதப் பயிற்சியில் வெகு சுருசுருப்புள்ள இராமர் அத்தலையைச் சடிதியிற் கூரான பாணங்களை விடுத்து வெட்டியெறிந்தார்; அவ்விரண்டாவது தலை வெட்டுண்ட மறுநிமிஷத்தில் மற் றொரு தலை தோன்றிற்று. அதையும் இடிக்கு ஒப்பான பாணத்தால் இராமர். வெட்டினார்: இவ்வாறு ஒரே மாதிரி யாக விளங்கிய நூறு தலைகளை இராமர் அவ்வப்போது வெட்டித்தள்ளியும் இராவணனுடைய அந்திமகாலத் திற்கு ஓர் எல்லையும் ஏற்படவில்லை. 

அப்பொழுது இராமர் “எவ்வம்புகளால் மாரீசன் மாய்ந்தானோ, எவ்வம்புகளால் கரன்தூஷணன் என்னும் இவர்கள் மடிந்தார்களோ, எவ்வம்புகளால் க்ரௌஞ்சா வனத்தில் விராதனும், தண்டகாரணியத்தில் கபந்தனும் உயிரிழந்தார்களோ, அவ்வாறு எனக்குப் பலமுறையாக போரில் நம்புதலை யுண்டாக்கிய அந்த அம்புகள் இப் பொழுது இராவணனைக் கொல்லாமல் ஒளிமழுங்கியிருப் பதற்குக் காரணம் என்ன?’ என்று சிந்தையில் மூழ்கி போரில் ஜாக்கிரதையுள்ளவராக விருந்தார். அப் பொழுது மாதலியானவன் இராமருக்கு நினைப்பு மூட்ட லானான் :-“வீரரே! தாங்கள் பிரமாஸ்திரத்தை யுண் ராதவர்போல இவ்விராவணன் ஓரஸ்திரத்தைப் பிர யோகிக்க அதற்குமாறான அஸ்திரத்தை மாத்திரம் ஏன் பிரயோகிக்கின் றீர்கள்? பிரபுவே! இவ்விராவணனை வதைக்கும்பொருட்டு பிரமாஸ்திரத்தைப் பிரயோகியுங் கள். தேவர்கள் கூறிய விநாச்காலம் இப்பொழுது இவ னுக்கு வந்துவிட்டது” என்றான். 

முக்காலங்களையறிந்த அகஸ்திய மஹரிஷி தமக்கு முன்பு கொடுத்ததும் ஒப்பற்ற காந்தியுடன் விளங்குகின்ற பிரமாஸ்திரத்தை இராமர் மாதலியால் நினைப்பூட்டப் பெற்று கையிலெடுத்துக்கொண்டார்; அப்பெரும் பாணத் தை அபிமந்திரித்து, வேதத்திற்சொல்லிய முறைப்படி வில்லில் தொடுத்தார் ; அந்த அஸ்திரத்தை இராவணன் மேல் விடுத்தார். வெகுவேகமாகப் பிரயோகிக்கப்பட்ட அந்த அம்பானது துராத்துமாவான இராவணனுடைய சரீரத்தை யொழிப்பதாய் மார்பைப் பிளந்தது. மஹா பராக்கிரமசாலியான அவ்வரக்கர் தலைவன் உயிரை யிழந்தவனாய் வச்சிராயுதத்தாற் கொல்லப்பட்ட விருத் திராசுரன்போல இரதத்திலிருந்து பூமியில் விழுந்தான். 

அவன் அவ்விதமாகப் பூமியில் விழுந்ததை அங்கு மிகுந்திருந்த அரக்கர்கள் பார்த்து தங்கள் யஜமானனே வதைக்கப்பட்டபடியால் மிகவும் பயந்தவர்களாய் நான்கு பக்கங்களிலுஞ் சிதறியோடினார்கள். வானரர்கள் இரா வணன் வதைக்கப்பட்டதையும் இராமர் வெற்றியடைந்த தையும் பார்த்து அட்டகாசம் பண்ணிக்கொண்டும் மரங் களை யோங்கிக்கொண்டும் ஓடினவர்களை துரத்தினார்கள். ஆகாயத்தில் வெகு அழகாக தேவதுந்துபி முழங்கிற்று; இனிதாக திவ்யமான வாசனையுடன் மந்தமாருதம் வீசிற்று : பிறரால் அடையமுடியாததும் மனமகிழச் செய் வதுமான மலர் மாரியும் ஆகாயத்திலிருந்து பூமியில் இராம ருடைய இரதத்தின்மேற் பொழிந்தது. இராமரது புக ழுடன் கூடியதும் “வெகு நன்றாகச் செய்யப்பட்டது, வெகு நன்றாகச் செய்யப்பட்டது” என்று சொல்லி இராம ரைக் கொண்டாடியதுமாகிய மகாத்துமாக்களான தேவர் களின் வாக்கு வானத்திற் கேட்டது. அப்பொழுது சுக் கிரீவன் விபீஷணர் முதலான நண்பர்கள் இலக்ஷ்மண ருடன் கூட ஒன்றுசேர்ந்து இராமரது வெற்றிக்காகச் சந் தோஷமடைந்து அப்போர்க்களத்தில் இராமரிடம் வந்து நின்று அவரை முறைப்படி கொண்டாடலானார்கள். 

51. விபீஷணர் பட்டாபிஷேகம் 

விபீஷணர் தமது தமையன் இராமரால் வெல்லப் பட்டு உயிர் மாண்டு போர்க்களத்திற் கிடப்பதைப் பார்த்து சோகம்கொண்டு “வீரரே! வல்லமையிற் புகழ் பெற்றவரே! வித்தைகளை நன்றாகக் கற்றறிந்தவரே! ராஜநீதிகளைச் செவ்வையாக ஆராய்ந்தறிந்தவரே! விலையுயர்ந்த சயனங்களிலே எப்பொழுதும் படுத்துறங்கு பவரே! இப்பொழுது தாங்கள் கொல்லப்பட்டு செய்கை யற்று தோள் வளைகளணிந்து நீண்டுள்ள கைகளைப் பரப் பிக்கொண்டு சூரியனைப்போன்ற ஒளியுடன் கிரீடம் சிறிது சாய வெறுந்தரையில் ஏன் படுத்திருக்கிறீர்கள்? வீரரே! நான் முன்னமே சொன்னது தங்கள்மனதிற் சிறிதும் ஏற வில்லையே” என்று நற்பொருள் நிரம்பிய பல சொற் களைச் சொல்லி துயரத்தில் மூழ்கி புலம்பினார். 

இராமர், அதனைப் பார்த்து பின்வருமாறு சொல்ல லானார் :-“இவர் ஒரு தொழிலுஞ் செய்யாமற் போரில் மடியவில்லை; மிகக்கொடிய வல்லமையையும் மிகவுயர்ந்த பேருற்சாகத்தையுங் கொண்டு விளங்கி, போரில் இவர் சத்துருவுக்கு அஞ்சாமலே விழுந்தார். இவ்விதமாக க்ஷத் திரிய தருமத்திலுறுதியாக நின்று போர்புரிந்து மடிந்தவர் களைப்பற்றித் துக்கப்படலாகாது; ஏனெனில் இவர்கள் மறுமையிலும் தங்கள் நன்மையை நாடியே போர்க்களத் திற் பின்வாங்காமல் நின்று மடிவார்கள். எந்தத் தீரர் இந்திரனையும் இம்மூவுலகங்களையும் போரில் நடுநடுங்கச் செய்தாரோ அவர், தமது காலத்தின் முடிவால் மாண் டால் அவரைப்பற்றித் துவரப்படவேண்டிய சமயமன்று இது. அன்றியும் யுத்தத்தில் வெற்றியென்பது எப்போதும் ஒருவன்பங்காக முன்பு எப்போதும் உண்டாகவில்லை. வீரன் சத்துருக்களைக் கொல்வதுமுண்டு; அவனே ஒரு சம யத்திற் சத்துருக்களாற் கொல்லப்படுவதுமுண்டு. போரிற் கொல்லப்பட்ட சூரனைப்பற்றித் துயரமடையலாகாதென் பது உறுதியாக ஏற்பட்டுள்ள விஷயம். நீங்கள் இவ்வா றான உறுதியை அறிந்து மனத்தை தைரியப்படுத்திக் கொண்டு இனி செய்யவேண்டிய காரியங்களைப்பற்றி ஆலோசியுங்கள்” என்றார். 

மகாத்துமாவாகிய இராமரால் இராவணன் கொல் லப்பட்ட சமாசாரத்தைக் கேட்டதும் அந்தப்புரத்திலுள்ள அரக்கியர்கள், சோகத்தால் வாடியவர்களாய், பலபெயர்கள் பலவிதமாகத் தடுத்துங் கேளாமல் மண் ணில் விழுந்து புரண்டுக்கொண்டும், கூந்தலை விரித்துக் கொண்டும், கன்றுகளை இழந்த பசுக்கள் கதறுவது போலக் கதறிக்கொண்டும், அந்தப்புரத்தை விட்டு வெளிப் புறப்பட்டார்கள். பூமியில் மாண்டு விழுந்து கிடந்த தங்கள் கணவனான இராவணனைப்பார்த்து, அவ்வரக்கி யர் வெகு துக்கப்பட்டுக்கொண்டு கண்ணீரை வடித்துக் கொண்டு அன்றிற்பேடுகள் போல வீரிட்டுக் கதறிப் புலம்பினார்கள்.. 

அவ்வாறு அரக்கியர் புலம்பிக்கொண்டிருந்தபொழுது இராவணனுடைய பட்டமஹிஷியாகிய மண்டோதரி வெகு பரிதாபமான தோற்றத்துடன் அவ்விடம்வந்து ஒப் பற்ற வல்லமை படைத்த இராமராற் பத்துத்தலைகளைப் பெற்ற தனது கணவன் கொல்லப்பட்டது கண்டு வெகு பாக்கியம் துக்கத்துடன் புலம்பலானாள்:- “பெரும் பெற்றவரே! குபேரனுடைய சகோதரரே! தாங்கள் கோபங்கொண்டால் தங்களுக்கு முன்பாக நிற்கவும் தேவேந்திரனும் நடுங்குவானே; மஹரிஷிகளும் அந்தணர் களும் கந்தர்வர்களும் பயப்படுவார்களே! தங்களிடத்தில் அச்சத்தினாலே சாரணர்களும் திசையெல்லையை யடைந் தார்களே! அப்படிப்பட்ட தாங்கள் மனிதராகிய இராம ராற் போரில் வெல்லப்பட்டீர்கள். ஜனஸ்தாநத்திலே பல அரக்கர்களுடன் கூடியிருந்த தங்கள் தம்பியாகிய கரனா ரை எப்பொழுது ஸ்ரீராமர் கொன்றாரோ அப்பொழுதே அவரை சாதாரண மனிதரல்லரென்று நான் எண்ணிவிட் டேன். எப்போது தேவர்களாலும் நுழைய முடியாத இலங்கைக்குள் அநுமான் தனது பலத்தின் மகிமையாற் புகுந்தானோ அப்பொழுதே நமக்கு நாசம் விளைந்ததென்று நான் அஞ்சினேன். எப்பொழுது பெருங்கடலில் பயங்கர மான வானரர்கள் அணையைக் கட்டினார்களோ அப் பொழுதே நான் இராமரை அமாநுஷராக எண்ணினேன் 

“மகாயோகியும் எப்பொழுதும் அழியாமலிருப்பவரும் ஆதியும் நடுவும் அந்தமும் அற்றவரும் இந்திரன் முதலான தேவதைகளினும் மேம்பட்ட பிரமன் முதலிய தேவர் களைப்பார்க்கிலும் சிறந்தவரும், வைகுண்ட வாசியும். சங்கம் சக்கரம் கதை இவைகளைத் தரித்தவரும், போஷ கரும், அழகைத் தருகின்ற வத்ஸமென்னும் மச்சத்தை இடதிருமார்பி லுடையவரும், எப்போதும் விட்டுப்பிரி யாத திருமகளை வலத்திருமார்பி லுடையவரும், ஒரு பொழுதும் வெல்லக்கூடாதவரும், விகாரமற்றவரும், உறுதியாய் நிற்பவரும், எல்லாவுலகங்கட்குந் தலைவரும், சத்தியமான பராக்கிரமத்தையுடையவருமாகிய ஸாக்ஷாத் விஷ்ணுபரமாத்மா எல்லா உலகங்களுக்கும் நன்மை செய் யும்பொருட்டு மானுட உருவங்கொண்டு வானர் வடிவங் கொண்ட தேவர்களாற் சூழப்பட்டு இவ்விடம் வந்து எல்லா வரக்கக்கூட்டங்களுடனும் தங்களைக் கொன்றார். இராகவருடன் நமக்குப் பகை வேண்டாமென்று நான் என்ன சொல்லியும் கேளாததன் பயன் இப்பொழுது வந்து விளைந்தது. அரக்கர் தலைவரே! தங்களுடைய சம் பத்தும் தேகமும் பந்துக்களும் நாசமடையுமாறு தாங்கள் திடீரென்று சீதாதேவியின்மேற் காதல் கொண்டீர்கள். அந்தப் பதிவிரதையின் தவத்தினால் தாங்கள் எரிந்து போனீர்கள். பாவகாரியங்களைச் செய்பவன் அவற்றின் பயனை அவசியம் அனுபவிப்பான். நன்மை செய்தவன் நன்மையை யடைவான். சீதாதேவி துயரம் நீங்கி இராம ருடன் சுகமாக வாழப்போகின்றாள். சொற்ப புண்ணிய முள்ளவளான நானே கொடிய சோகசாகரத்தில் விழுந் திட்டேன். வெகு நயமாக விபீஷணர் சொன்ன சொற்கள் ஒன்றும் தங்கள் காதில் ஏறவில்லை. மாரீசன் கும்பகர் ணன் என் தந்தை என்ற இவர்கள் சொன்ன நற்போதனை களையும் வல்லமைச்செருக்கால் தாங்கள் கேட்கவில்லை. அவ்வாறு நற்புத்திகளைத் தள்ளியதன் பயன். இப்பொழுது விளைந்திட்டது. எல்லாராலும் எளிதில் நடக்க முடியாத பெருவழியில் தாங்கள் சென்று விட்டீர்கள்; துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் என்னையும் அவ்விடம் அழைத்துச்செல்லுங்கள். தாங்கள் இறந்துவிட்ட சோகத்தினால் ஆயிரந்துண்டுகளாக இன்னுஞ் சிதறாமல் என் இதயம் இருக்கின்றதே! நான் கெட்டேன் !!” என்று மண்டோதரி அழுதுகொண்டு தனது கண்களில் நீர் தாரை தாரையாய் வடிய தனது கணவன்மீது தான் கொண் டிருந்த மிக்க நட்பினால் மோகம் மேலிட்டவளாய் விழுந்தாள். 

இப்படியிருக்கையில் இராமர் விபீஷணரைப் பார்த்து தங்களுடைய தமையனாரது உத்திரகிரி யைச் செய்யுங்கள் ; இந்தப் பெண்டுகளையும் அப்புறம் செல்லுமாறு.கட்டளையிடுங்கள்’ என்று சொன்னார். விபீஷணர் இதைக்கேட்டு இராவணனுக்குத் தக்கபடி உத்திரகிரியை செய்யலானார்; சாஸ்திரப்பிரகாரம் நெருப் பிட்டார். தர்ப்பணஞ்செய்து சிதையை நோக்கித் தலை யால் வணங்கி இராமரிடம்வந்து, வெகு வணக்கமாக அவர் பக்கத்தில் நின்றார் : இராமரும் தமது வானரசேனை யுடனும் சுக்கிரீவர் இலக்ஷ்மணர் இவர்களுடனும் வெகு சந்தோஷமடைந்து தேவேந்திரன் தனது சத்துருவாகிய விருத்திராசுரனைக் கொன்ற பிறகு ஆனந்தமடைந்தது. போல விளங்கினார். பிறகு இலக்ஷ்மணரை நோக்கி இரா மர் “என் அன்பனே! நம்மிடம் அன்பும் அபிமானமும் வைத்து நமக்கு. உபகாரஞ்செய்த விபீஷணரை இலங் கைக்கு மன்னவராகப் பட்டாபிஷேகஞ் செய்வாயாக. என்றார் – இலக்ஷ்மணர் அவ்வாறே பரிசுத்தமான மனமுடைய விபீஷணருக்கு இலங்கா ராஜ்யத்திற் பட்டாபி ஷேகம் பண்ணினார். 

அதன்பிறகு, தமக்கருகில் வந்து நின்ற அனுமானைப் பார்த்து இராமர் பின்வருமாறு சொல்லலானார்:-ஸௌம்யனே! மகாராஜாவாகிய விபீஷணரிடம் விடைபெற்று, இலங்கைக்குட் சென்று, விபீஷணருடைய அனுமதியினால் இராவணனது மாளிகையிற் புகுந்து, நமக்கு வெற்றியுண் டான சந்தோஷ சமாசாரத்தைத் தெரிவித்து சீதையை மகிழ்வித்து,நான் சுக்கிரீவருடனும் இலக்ஷ்மணனுடனும் க்ஷேமமாக விருப்பதையும், இராவணன் என்னால் வதைக் கப்பட்டதையும் சொல்லுக. வானரவீரனே ! அவள் தெரி விக்கும் பதில் ‘சமாசாரத்தை என்னிடம் வந்து சொல்லுக” என்றார். 

அவ்வாறு கட்டளையானதும் அநுமான் இலங்கைமா நகரிற் புகுந்து இராவணனுடைய மாளிகையில் நுழைந்து, அவ்விடத்தில் தேகம் மாசுபடிந்து ஒரு மரத்தினடியில் சீதாதேவி அரக்கியராற் சூழப்பட்டு மகிழ்ச்சியின்றியிருப் பதைக் கண்டு, அவளை வணங்கி தரழ்ச்சியோடும் விந யத்தோடும் நிச்சலமாய் நின்றான். அநுமான் தன்னை நாடிவந்ததைக் கண்டு அவனை இன்னானென்று நினைந்து வெகு மகிழ்ச்சி யடைந்தவளாய் சீதாதேவி ஒன்றும் பேச நாவெழாமலிருந்தாள். முகம் சந்தோஷக் குறி யுடன் விளங்குவதைப் பார்த்து அநுமான் இராமர் தன்னிடஞ் சொல்லியிருந்த சமாசாரங்களைச் சொல்ல லானான்:-“வைதேஹி! இராமர் இலக்ஷ்மணருடனும் சுக்கிரீவருடனும் விபீஷணருடனும் வானர சேனைகளு டனும் க்ஷேமமாகவிருக்கின்றார். இரகுவின் வம்சம் சந் தோஷிக்குமாறு அவதரித்த இராமர் தமது காரியத்தை செய்துமுடித்து தங்களது க்ஷேமத்தை இவ்வாறு விசா ரிக்கச் சொன்னார்: “தேவி! நான் இச்சந்தோஷ சமா சாரத்தைத் தெரிவித்து, மிகுதியாக உன்னைக் களிக்கும் படி செய்கின்றேன். தருமத்தை யுணர்ந்தவளே! இது வரையில் தெய்வாதீனமாக வாழ்வுபெற்றிருக்கின்றாய். எனது பராக்கிரமத்தினால் நமக்கு வெற்றியுண்டாய்விட்ட படியால் இனி, நீ விசாரமில்லாமலும் துக்கப்படாமலுமிருக்கலாம். இலங்கையின் சம்பத்து முழுமையும் விபீ ஷணரைச் சேர்ந்ததாகக் செய்யப்பட்டதன்றோ! ஆகையால் சீதே! உனது துயரத்தை ஆற்றிக்கொள்வாய்” என்றார். 

இவ்வாறு அநுமான் சொன்னதும், சீதை, அதிக சந் தோஷமடைந்தவளாய் எழுந்து ஆனந்தத்தால் தழு தழுத்த வாக்குடன் பின்வருமாறு சொல்லலுற்றாள்:- எனது கணவர் வெற்றி யடைந்தாரென்ற சந்தோஷ சமாசாரத்தைக் கேள்வியுற்று மிக்கமகிழ்ச்சி யடைந்து கொஞ்சநேரம் ஒன்றுஞ்சொல்ல நாவெழாதவளாக இருந் தேன். வானரரே! இந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொன்ன உமக்கு என்ன சொல்லலாமென்று ஆலோசித் துப் பார்த்தும் சரியான மறுமொழியொன்றுந் தோன்ற வில்லையே! ஸௌம்யரே! இந்த சமாசாரத்தைச் சொன்ன உமக்கு தக்க வெகுமானங் கொடுக்க இம்மூவுல கத்தில் ஒரு வஸ்துவையும் காணேனே! பொன்னும் வெள்ளியும் பலவகை இரத்தினங்களும் இம்மூவுலகவாட்சி யும் இவைகளில் ஒன்றும் தாங்கள் சொன்ன சந்தோஷ சமாசாரத்துக்கு ஈடான வெகுமானமாக எடுத்துச் சொல்லவுந் தகா” என்றாள். 

இவ்விதமாகச் சீதாதேவி சொன்னதும் அநுமான் சலிபண்ணியபடியே சீதாதேவியின் முன்னிலையில் நின்றுகொண்டு பின்வருமாறு சொல்லலானான்:-“கண வரின் இனிய நன்மையிலேயே கருத்தூன்றியிருக்கும் உத்தமியே! கணவருடைய வெற்றியையே விரும்பியிருக் கும் பதிவிரதையே! தங்களையன்றி வேறொரு பெண் பிள்ளை இவ்வண்ணமான சொல்களைச் சொல்லவல் லரோ? முன்பு தங்களைப் பலவாறு வெருட்டிய இவ் வரக்கிய ரெல்லாரையும் நான் இப்போது கொல்ல விரும்புகின்றேன். இவ்வரத்தை எனக்குத் தாருங்கள் ” என்றான். 

அநுமான் சொன்னதைக் கேட்டு சீதாதேவி மறு மொழி சொல்லலானாள்:-” வானரர்களுக்குள் உத்தமரே! இவ்வரக்கியர் தமது அரசருக்குப் பரவசர்கள்: பிறனது ஏவலின்படி தொழில்புரிபவர்கள்; அவ்வாறு தொழில் செய்யாவிடில் தண்டனைக்கு உரியவர்கள், அடியவர்கள்: இவர்களிடம் யார்தான் கோபிப்பார்கள்? இராவணனது கட்டளையால் இவர்கள் என்னை வெருட்டினார்கள் ; எனது பாக்கியத்தின் குறைவினாலும் முற்பவத்திற் செய்த தீவினையினாலும் நான் இவ்வாறெல்லாம் அனுபவித்தேன்; எல்லாரும் தத்தம் வினைகளின் பயனை அனுபவித்தே தீர வேண்டுமன்றோ’! என்றாள். அவ்வாறு சீதை சொன் னதும், அநுமான் சீதையை நோக்கி “தாங்கள் இரா மருக்கு ஏற்ற மனைவியாவீர். தேவீ! எனக்குச் சொல்ல வேண்டிய சமாசாரத்தைச் சொல்லி யனுப்புங்கள்.நான் இராமரிடம் போய்வருகின்றேன்” என்றான். இப்படி அநுமான் சொல்லவே சீதாதேவி வானரோத்தமரே! எனது. கணவரை நான் பார்க்க விரும்புகின்றேன்” என் றாள். இதைக்கேட்டு அநுமான் அவளைச் சந்தோஷப் படுத்த பின்வருமாறு மறுமொழி சொல்லலானான்: “இந்தி, ராணி தேவேந்திரனைப் பார்ப்பதுபோல சத்துருக்களை வதைத்த இராமரை, விசுவாசமுள்ள நண்பர்களுடன் இலக்ஷ்மணருடனும் தாங்கள் சடிதியிற் பார்ப்பீர்கள் ” என்று சொல்லிவிட்டு அப்பிராட்டியினிடம் விடைபெற்று வெகுவேகமாக அனுமான் இராமரிடம் திரும்பிவந்தான். 

52. சீதாதேவியை ஸ்ரீராமரிடம் விபீஷணர் அழைத்து வருதல் 

அதன் பிறகு அனுமான் இராமரை யடைந்து பின் வருமாறு பேசலானான்:-“யாவர் பொருட்டு இவ்வளவு காரியங்கள் செய்தோமோ வெற்றியும் நமக்குக் கைகூடிற்றோ அந்தத் தேவியைத் தாங்கள் இப்பொழுது பார்க்கவேண்டும். இதுவரையில் துக்கத்தால் ஏங்கி கண்ணுங்கண்ணீருமாகத் தவித்த அவ்வுத்தமி தங்க ளுடைய ஜயத்தைக் கேட்டு வெகு சந்தோஷமடைந்திருக் கின்றாள். முன்னமே அவ்வம்மணிக்கு என்னிடமுண்டா யிருக்கும் விசுவாசத்தினால் அவ்வுத்தமி என்னிடம் எனது கணவரைப்பார்க்க விரும்புகின்றேனென்றாள்” என்றான். 

இராமர் அனுமான் அவ்வாறு சொன்னதைக் கேட்ட தும் கண்களில் நீர் ததும்பத் திடீரென்று சிறிது நாழிகை மனத்திற்குள்ளேயே சிந்தித்து பெருமூச்செறிந்து பூமி யைப் பார்த்துக்கொண்டு, தமக்கருகிலே நின்ற விபீஷண ரை நோக்கி பின் வருமாறு சொல்லலானார் :-“தலைக்கு ஸ்நானஞ் செய்வித்தும், திவ்வியமான கலவைச் சாந்தைப் பூசியும் திவ்வியமான ஆபரணங்களை யணிந்தும், சீதையை இவ்விடம் சீக்கிரமாக வருமாறு செய்க; விளம்பம் வேண் டாம்’ என்றார். உடனே விபீஷணர் அந்தப்புரத்துக்குட் புகுந்து தம்மைச் சேர்ந்த மடந்தையரைக் கொண்டு சீதா தேவிக்குத் தெரியப்படுத்தினார். அதன் பிறகு ஸ்நானஞ் செய்து, மடந்தையரால் அலங்கரிக்கப் பெற்று, விலை யுயர்ந்த ஆபரணங்களை யணிந்து பட்டாடை யுடுத்திருந்த சீதா தேவியை உயர்ந்த பட்டாடையால் மூடப்பட்டு விளங்குவதொரு பல்லக்கிலேற்றி பல அரக்கியர்கள் பாது காத்துவர.அதை இராமரிடம் விபீஷணர் கொண்டுவரச் செய்தார். 

விபீஷணர் இராமரை நெருங்கி தமது வரவை யறிந் தும் ஆலோசனையிலிருந்த அவரை வணங்கி சீதாதேவியை அழைத்துவந்த சங்கதியை வெகு சந்தோஷமாகத் தெரி வித்தார். சீதாதேவி வந்ததைக் கேட்டதும் இராமரது மனத்திலே சந்தோஷமும் எளிமையும் கோபமும் ஒருங்கே உதித்தன. பிறகு, விபீஷணரைப் பார்த்து ‘விபீஷணரே! சடிதியில் அவளை இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னை எனது நண்பர்கள் நான்கு பக்கங்களிலுஞ் சூழ்ந்திருக்க அவள் காணட்டும்” என்று கூறினார். இராமர் அவ்வாறு சொல்லவே விபீஷணர் சிறிது ஆலோசனை கொண்டவராய் வெகு வணக்கத்துடன் சீதாதேவியை இராமர் முன்பாகக் கொண்டுவந்து சேர்த்தார். 

வெட்கத்தால் தேகத்தினுட் பதுங்கியள்ளாய் சீத்ா தேவி விபீஷணரைத் தொடர்ந்து நடந்து கணவரருகில் வந்து சேர்ந்தாள். அந்தக் கூட்டத்தில் இராமரை யடைந் ததும் சீதாதேவி, ‘பெரியோர் மகரே!” என்று சொல்லி நாணத்தினால் ஆடையைக்கொண்டு தன் முகத்தை மறைத்தவண்ணம் அழலானாள். அன்றியும் அவ்வுத்தமி தனது கணவரையே தமக்குத் தெய்வமாகக் கொண்டவ ளாகையால் வியப்போடும் சந்தோஷத்தோடும் நட்போ டும் அவரது இனிய முகத்தைப் பார்க்கலானாள். 

வெகு வணக்கத்தோடு தமது பக்கத்திலிருந்த சீதையை பார்த்து இராமர் உள்ளத்திலிருந்து எழுந் தோங்கிய சினத்தாற் பின்வருமாறு சொல்லத் தொடங்கி னார்:-“மங்களகரமானவளே! போரில் எனது சத்துருவை வென்று உன்னை மீட்டேன்; எனது வல்லமையாற் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடித்தேன். கோபத்தின் முடிவை நான் அடைந்தேன்; பகைவன் என்னை வலியவந்து ஹிம்ஸித்ததையும் நான் சாந்தப்படுத் தினேன்; எனக்கு நேரிட்ட அவமானத்தையும் என் சத்து ருவையும் நான் ஏககாலத்திற் போக்கி விட்டேன்.இன்று என் வல்லமையை எல்லாரும் அறிந்தார்கள். இன்றுதான் என் முயற்சியும் பயன் பெற்றது. உன்னைத் தனியாகப் பிரித்துச் சபலசித்தனான இராவணன் தூக்கிப் போகும் படி நேர்ந்த தெய்வக்குற்றமானது மனிதனாகிய என்னால் ஒருவாறு அகற்றப்பட்டது. தனக்கு நேரிடும் அவமான தை எவனொருவன் தனது வல்லமையால் விலக்கிக் கொள் ளாமலிருக்கின்றானோ அவனுக்கு எந்தப் புருஷார்த்தந் தான் கைகூடும்? சமுத்திரத்தைத் தாண்டியதும் இலங்கையை யழித்ததுமாகிய அநுமான் செய்த காரியங்கள் இன்றுதான் பயனுள்ளனவாயின. சுக்கிரீவன் தன் சேனை யுடன் போரிற் காட்டிய பராக்கிரமமும் எனக்குச் சொல் லிய நல்ல ஆலோசனையும் இன்றுதான் பயன்பெற்றன வாயின. நற்குணமற்ற தமது தமையனாகிய இராவணனைத் தாமாகவே வெறுத்துவிட்டு என்னிடம் வந்து சேர்ந்து என்னிடத்து அன்பைக் காட்டிய விபீஷணர் பட்ட சிரமம் இன்றுதான் பயன்பெற்றது. 

“சீதே! ஒரு மனிதன் சத்துருவினிடமிருந்து தனக்கு நேரிட்ட அவமானத்தை யகற்றுதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சிகளும் என்னாற் செய்யப்பட்டன. எனது நண்பர்களுடைய பலத்தால் நான் இப்போரில் நேர்ந்த பரிசிரமத்தைக் கடந்தது உனக் காகவன்றென்பதை நீ தெளிவாயாக. சத்துருவின் மனை யில் வசித்ததனால் நல்லொழுக்கமுடைமையிற் சந்தேகப் படுமாறு உள்ள நீ என் கண்ணெதிரில் நிற்பதானது கண்ணோய் வந்தவனது கண்ணுக்குத் தீபம் எவ்வளவு நோயை யுண்டாக்குமோ அவ்வளவு வருத்தத்தை உண் டாக்குகின்றது. இராவணனாற் கவரப்பட்டும் அவனு டைய கொடுங் கண்களாற் பார்க்கப்பட்டும் சீலத்தை யிழந்த உன்னை பெரிய குலத்திற் பிறந்த நான் மறுபடி யும் எவ்வாறு அங்கீகரிப்பேன்? உன்னிடத்தில் ஆசை யில்லை. ஆகையால் நீ இவ்விடம் விட்டு உன்னிஷ்டமான இடத்துக்குப் போகலாம்” என்றார்.

53. சீதாதேவி அக்கினியிற் பிரவேசித்தல் 

இராமர் இப்படி சொல்ல அவ்வுத்தமி மிகவும் நொந்தவளானாள். தான்’அதுவரையில் ஒருபொழுதும் கேட்டிராத கொடுஞ் சொற்களைத் தனது கணவர் சொல் லக் கேட்டு சீதாதேவி அப்பெருஞ் சபையில் நாணத்தால் மிகவுந் தலை கவிழ்ந்தவளானாள்; வெட்கத்தினால் தனது தேகத்திலேயே ஒடுங்கியவளாய் மிகவுங் கண்ணீர் வடித்தாள். அதன் பிறகு தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு, தழுதழுத்த சொற்களாற் பின்வருமாறு தனது கணவரை நோக்கி மெல்லச் சொல்லலானாள்:-” வீரரே! அற்ப புருஷன் அற்ப குணமுள்ள ஒரு ஸ்திரீயைப் பார்த் துப் பேசுவது போல தாங்கள் என்னைப் பார்த்து கேட்ப தற்கும் அச்சத்தையுண்டாக்குகின்ற தகாதகொடியவார்த் தைகளை ஏன் சொல்லுகின் றீர்கள்? மகாபாகுவே! தாங் கள் எண்ணுகின்றபடி நான் இல்லை; இதை எனது ஸுக் ருதத்தின்மேல் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். தாங் கள் என்னை நம்புக. வேறொருவன் பரவசையான என் னைத் தொட்டானென்று என்மீது குற்றஞ்சொல்வீர்களே யானால் அக்குற்றம் நான் வேண்டுமென்று செய்ததல்ல; என் மனப்பூர்வமாக நடவாத அவ்விஷயத்தில் தெய்வத் தின்மீதுதான் குறைகூற வேண்டும். எனது வசத்தி லுள்ள எனது உள்ளம் எப்பொழுதும் தங்களிடமே குடி கொண்டிருக்கின்றது; வல்லமையற்ற நான் எனது உடம் பின் விஷயத்தில் என்ன செய்யமுடியும்? மகாவீரரே! என் னைப் பார்த்துவரும்படி அநுமானை இலங்கைக்கு அனுப்பி னீர்களே, என்னை அப்போதே ஏன் விட்டிருக்கக்கூடாது? அனுமான் என்னிடம் இவ்வாறு தங்களுடைய அபிப் பிராயமென்ற சமாசாரத்தை அப்பொழுதே சொல்லி யிருந்தால் தாங்கள் என்னைக் கைவிட்ட பின்பு இப் பிழைப்பால் எனக்கு என்ன பயனென்று எண்ணி என் பிராணனை அப்பொழுதே அவன் முன்பே விட்டிருப் பேனே! எனது விசுவாசமும் எனது நடத்தையும் இவைக ளெல்லாவற்றையும் மறந்தீர்களே!’ என்று வருத்தத் தோடு சொல்லி அழுதுக்கொண்டே கண்களில் நீர் ததும்ப சீதாதேவி தனக்கு முன்பாக வெரு பரிதாபமான நிலையிற் சிந்தை கொண்டிருந்த இலக்ஷ்மணரைப் பார்த்துச் சொல்லலானாள்:- “இலக்ஷ்மணரே! எனக்காகச் சிதை யொன்று அடுக்கி அதில் நெருப்பு மூட்டுங்கள்; எனக்கு இப்பொழுது உண்டாயிருக்கின்ற வருத்தத்திற்கு இது தான் ஏற்ற மருந்து. பொய்யான அபவாதத்தால் வருத்த மடைந்த நான் இனிப் பிழைத்திருக்கப் பொறேன்” என்றாள்.

சீதை அவ்வாறு சொன்னதும், இலக்ஷ்மணர் இராம ரது முகத்தைப் பார்த்தார்; அவருடைய முகக்குறியால் அவரது கருத்தை யுணர்ந்து அவரது இஷ்டப்படியே சிதையை அடுக்கினார். சீதாதேவி தமது தலையை வணக் கிக்கொண்டு குனிந்திருந்த இராமரை மெதுவாக வலம் வந்து, கொழுந்துவிட்டெரிகின்ற அக்கினியைக் கிட்டி. தெய்வங்களுக்கும் அந்தணர்களுக்கும் நமஸ்காரம்பண்ணி, அஞ்சலியுடன் அவ்வக்கினியின் சமீபத்தில் நின்று கொண்டு பின்வருமாறு சொல்லலுற்றாள் :-” எனது உள் ளம் என்றென்றைக்கும் இராமரைவிட்டு வழுவாமலிருந்த தென்பது உண்மையானால், இவ்வுலகத்துக்கே சாட்சியாக இருக்கும் அக்கினிபகவான் என்னைப் பாதுகாக்கட்டும். இராகவர் நன்னடத்தையுடைய என்னைத் துஷ்டை யென்று நினைப்பதனால். இவ்வுலகத்துக்குச் சாட்சியாக விளங்கும் அக்கினிபகவான் என்னை இரட்சிக்கட்டும். செய்கையினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் நான் எல் லாத் தருமங்களையும் அறிந்த இராகவரைவிட்டு விலகா தவளென்பது உண்மையானால், இவ்வக்கினிபகவான் என் அக் னைக் காப்பாற்றட்டும்.” என்று சபதஞ்செய்து கினியை வலம்வந்து கொஞ்சமேனும் மனக்குழப்ப மில்லா மல் அதனுட்குதித்தாள். அவள் தீயிற் குதித்தபொழுது அரக்கக் கூட்டங்களிலிருந்தும் வானரக்கூட்டங்களிலிருந் தும் ‘ஹா! ஹா!’ என்று பெருஞ்சத்தம் யாவரும் வியப் படையுமாறு உண்டாயிற்று. இராமர் அவ்வண்ணம் அரக் கர்களும் வானரர்களும் கதறிக்கொண்டு சொன்னதைக் கேட்டு மனக்குழப்பமடைந்தவராய் தமது கண்களில் நீர் ததும்பி நிற்க கொஞ்சநேரம் தமக்குள்ளேயே ‘ஏன் இவ் வளவு கொடிய செயலை செய்தோம்?’ என்று ஆலோ சிக்கலானார். 

அப்பொழுது, குபேரனும், யமதருமராஜனும், மகேந் திரனும்,வருணனும், மகாதேவரும், பிரமதேவரும், சூரிய னுக்கொப்பான விமானங்களில் ஏறிவந்து சேர்ந்தார்கள். தமது முன்பாக அஞ்சலியுடன் நின்ற இராமரைப்பார்த்து பின்வருமாறு சொல்லலானார்கள் -“இவ்வுலகங்களெல் லாம் உண்டாக்கினவரே!,ஞானிகளுக்குள் உத்தமரே! தேவதேவராகிய தாங்கள் சீதை அக்கினியிற் குதிக்கையில் உபேட்சை செய்யலாமா? ஒன்றுந் தெரியாத மனிதன் போல சீதாதேவியை இவ்வண்ணம் அவமதிக்கலாமா?” என்றார்கள். 

அவர்களெல்லாரும் அவ்விதமாகச் சொன்னதும் இராமர் அத்தேவதைகளை நோக்கி பின்வருமாறு சொல்ல லானார்:-“என்னை நான் தசரத மகாராஜருடைய குமா ரனாகிய இராமனென்னும் மானிடனென்றே கருதியிருக் கின்றேன். ஆனால் எனது ஸ்வரூபம் என்ன? யாருடன் சம்பந்த முடையேன்? எதற்காகப் பிறந்தவன்? இவை களைப்பற்றி விவரமாகத் தாங்கள் சொல்லவேண்டும் என்றார். 

காகுத்ததர் அவ்விதமாகச் சொன்னதை, பிரம தேவர் கேட்டு பின்வருமாறு சொல்லலானார் :-“இரா மரே! நான் உண்மை கூறுகின்றேன்; கேளுங்கள்: தாங் கள் தான் இலட்சுமியை யுடையவரும், சக்கரத்தைப் படைக்கலமாக வுடையவரும், எங்கும் பரந்துறைகின்ற வருமான நாராயணன் ; தாமாகவே தோன்றி இம் மூவுல கங்களையும் முதன் முதலிற் படைத்தீர்கள்; உலக முண் டாவதற்கு முன்னமே தோன்றி சித்தர்கள் சாத்தியர்கள் என்ற இவர்களுக்கெல்லாம் அடைக்கலமாக விருக்கின்றீர்கள். யஜ்ஞமும் தாங்கள் ; அந்தயஜ்ஞத்தின் வஷட்கார மந்திரமும் தாங்கள் ; ஓங்கார மந்திரமும் தாங்கள் ; பெரிய தவசிகளால் வணங்கப்பட்டவர்கள் தாங்கள். தங் களுக்கு உற்பத்தியென்றதும் நாசமென்பதும் கிடையாது. தாங்கள் இன்னபடியுள்ளவரென்பதை எவர்கள்தாம் கண்டறிந்திருக்கின்றார்கள்? இராமரே! நான் பரப்பிரம மாகிய தங்களுடைய இருதயம் ; ஸரஸ்வதீ தேவி தங்க ளுடைய நாக்கு ; மற்றைத் தேவதைகள் தேகத்திலுண் டான உரோமங்கள். சீதாதேவி யென்பவள் இலக்ஷ்மி தாங்களோ விஷ்ணுவின் அவதாரம்; கிருஷ்ணனென் பவரும் தாங்களே ; பிரமதேவரும் தாங்களே; இரா வணனை வதைக்கவேண்டு மென்றே தாங்கள் மனித ரூபங்கொண்டு அவதரித்தீர்கள். இராவண வதமாகிய எங்கள் காரியத்தை தாங்கள் செய்துமுடித்தீர்கள். இராமரே! தங்களால் இராவணன் கொல்லப்பட்டான். இனித் தாங்கள் சந்தோஷமாக தேவலோகத்துக்குத் திரும் பலாம். தங்களிடம் பக்திபண்ணும் மனிதர்களுடைய மனோர தங்களும் ஒருபொழுதும் வீண்போகமாட்டா. இம் மையிலும் மறுமையிலும் தங்களுக்கு வேண்டிய எல்லா வகைச் சுகங்களையும் அடைகின்றார்கள்” என்றார். 

அவ்வாறு பிரமதேவர் சொன்ன இனிய சொல்லைக் கேட்டு அக்கினிபகவான் சிதையை உதறிவிட்டு புருஷ ரூபத்துடன் சீதையை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பி னார். இளஞ் சூரியன் போன்ற நிறமுள்ளவளும், பத்தரை யணிந்த மாற்றுத் தங்கத்தாற்செய்த ஆபரணங்களை வளும், நெறிந்த கருங்குழலுடன் விளங்குபவளும், மலர் களும் அணிகளும் உருக்குலையாதிருக்கப் பெற்றவளும், தீக்குதித்த சமயத்தில் தானிருந்த உருவத்துடன் அப் படியே சோபிக்கின் றவளும், சிறுமியுமான சீதாதேவியை, அக்கினிபகவான், மடியில் வைத்துக்கொண்டு வெளியில் வந்து இராமரிடங் கொடுத்தார். 

பிறகு அக்கடவுள் பின்வருமாறு சொல்லலானார்:- ‘இராமரே! இவள்தான் சீதாதேவி; இவளிடம் ஒரு வகைப் பாவமுமில்லை. இவ்வுத்தமி வாக்கினாலாவது மனத் தினாலாவது ஸங்கல்பத்தினாலாவது பார்வையினாலாவது தங்களையன்றி வேறொருவனைக் கருதியவகளல்லள்; பரிசுத்த மான மனமுள்ளவளும் பாபமற்றவளுமான இத்தேவியை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அதைக்கேட்டு இரா மர் சந்தோஷமடைந்து, அக்கினிபகவானை நோக்கிப் பின் வருமாறு சொல்லலானார் :-” சீதையினிடம் பாவமில்லை யென்பது இம்மூவுலகங்களிலும் திண்ணம். ஆனாலும் அவள் இராவணனுடைய அந்தப் புரத்தில் வெகு நாள் வசித்திருந்தாள். நான் சீதையை இவ்விதமாகப் பரி சோதியாமல் ஒத்துக்கொள்வேனேயானால் அப்போது பெரியவர்களெல்லாரும் ‘தசரதகுமாரனான ராமன் காம பரவசனான மூடன் போலும்’ என்று என்னைப்பற்றி பழித் துச் சொல்வார்கள். சீதை என்னையன்றி வேறொரு வனைத் தனது மனத்தாலும் கருதாதவள் என்றும், ‘என் னிடம் மிக்க அன்புள்ளவள்’ என்றும், ‘என்னுடைய உள்ளத்தைத் தொடர்ந்து நடப்பவள் என்றும் எனக்கும் நன்றாகத்தெரியும்; ஆனால் நான் இம்மூவுலகங்களும் நம்பும்பொருட்டு சீதை அக்கினி பிரவேசம் செய்யும் போது உபேட்சித்திருந்தேன். நண்பர்களும் உலகத்திற் கௌரவம் பெற்றவர்களுமான நீங்களெல்லீரும் எனது நன்மையை நாடி இவ்வண்ணஞ் சொல்லும்போது நான் அதைத் தட்டுதலும் தகாததொன்றாம்” என்றார். 

இராமர், அவ்வளவு அழகாகச் சொன்ன சொல்லைக் கேட்டு மகேசுவரர் அதனினும் அழகாக பின்வருமாறு சொல்லலுற்றார்: இராமரே! இவ்வுலகத்தை முற்றி லும் மூடியிருந்த இராவண பயமென்னும் பேரிருளை தாங்கள் தெய்வாதீனமாகப் போரில் அகற்றினீர்கள். இனி மேல் தாங்கள் வெகு பரிதாபகரமான நிலையிலிருக்கும்  பரதருக்கும் கௌசல்யைக்கும் தேற்றறிவு கூறி, கைகேயி யையும் சுமித்திரையையும் கண்டு, அயோத்தியில் அரசாட் சியைக் கைக்கொண்டு, அந்நகரத்திலுள்ள நண்பர்களைக் களிப்பித்து, இக்ஷ்வாகு வமிசத்தை நிலைநிறுத்தி, அசுவ மேத யாகஞ் செய்துமுடித்து, ஒருவராலும் அடையக் கூடர்த பெரும்புகழைப் பெற்று, அந்தணர்களுக்குப் பல வகைப் பொருள்களைத் தானஞ்செய்து, அதன்பிறகு திவ் வியலோகத்துக்குப் போகவேண்டும். தங்கள் தந்தை தச ரத மகாராஜர் விமானத்திலேறி இதோ வந்திருக்கின்றார்; இலட்சுமணருடன் அவரை நமஸ்கரியுங்கள்”. 

மகாதேவர் சொன்னதைக் கேட்டு இராமரும் இல மணருடன் தமது தந்தைக்கு நமஸ்காரஞ் செய்தார். தச ரத ராஜரும் தமது உயிருக்கும் மேலாகத் தாம் மதித்து அன்புவைத்த தமது குமாரரைக் கண்டு, வெகு சந்தோஷ மடைந்து அவரைத் தமது மடியின்மே லுட்காரவைத்து தமது கைகளினால் தழுவிக்கொண்டு, அவரை வோக்கிப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார் :- “ராம! தேவ ரிஷிகளின் சம்மானமாவது, சுவர்க்கலோகத்திலிருப்பா வது, உன்னை விட்டுப்பிரிந்த பிறகு, எனக்கு விருப்பமான தன்று. இன்று இலக்ஷ்மணனுடன் நீ க்ஷேமமாகவிருப் பதைக்கண்டு உன்னை ஆலிங்கனஞ் செய்த பின்புதான் நான் துக்கத்திலிருந்து நீங்கினேன். இராவணனது வதைக் காகவே உனது பட்டாபிஷேகத்துக்கு தடையுண்டான தென்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். நற் காரியஞ்செய்து உயர்ந்த புகழையும் அடைந்தாய்; உனது தம்பிகளுடன் இராச்சிய பரிபாலனம் பண்ணி நீடூழி வாழ்வாயாக’ என்றார். 

இவ்விதமாகத் தசரதர் சொன்னதும் இராமர் அஞ் சலி பண்ணிக்கொண்டு பின்வருமாறு சொல்லலுற்றார்: “தருமங்களை யாராய்ந்தறிந்த எனது தந்தையே! கைகேயியினிடமும் பரதனிடமும் மனமிரங்குக. அக்காலத்தில் கைகேயியைப் பார்த்து உனது குமாரனுடன் உன்னை நான் கைவிட்டேன் என்ற சாபம் கைகேயியை யும் அவள் குமாரனையும் அணுகாதிருக்கவெண்டும்’ என்று விண்ணப்பஞ்செய்தார். தசரதமன்னவரும், “அப் படியே யாகுக என்று மறுமொழி யளித்து, அஞ்சலி பண்ணிக்கொண்டு தமக்கருகிலே நின்ற இலக்ஷ்மணரைக் கட்டித் தழுவி, சீதாதேவியை நோக்கி பின்வருமாறு சொல்லலானார் .-” வைதேகி! இராமன் உன்னை முதலில் ஒத்துக்கொள்ளாமலிருந்தானென்று நீ அவனிடத்திற் சிறி தும் வருத்தமடைய வேண்டாம். இராமன் உனது நன் மையைக் கருதியே உன்னைப் பரிசுத்தமுள்ளவளென்று இவ்வாறு காட்டினான். நீ உனது புருஷனுக்குப் பணி விடை செய்ய வேண்டுமென்பது நான் உனக்குச் சொல்ல வேண்டுமா? எனது கடமையென்று நான் சொல்லுகின் றேன். இவன் தான் உனக்குச் சிறந்த தெய்வம்” என் றார். இவ்விதம் தசரத் ராஜர் தாம் சொல்லவேண்டிய வைகளைச் சொல்லிவிட்டு இந்திரலோகத்திற்கு மீண்டுஞ் சென்றார். 

தசரதர் புறப்பட்டுப்போனதும் மஹேந்திர பகவான் அஞ்சலி செய்துகொண்டு, இராமரைப்பார்த்து மிக்க அன் புடனே பின்வருமாறு சொல்லலானார்:-” இராமரே! தங் களுடைய தரிசனமானது இராவணனுடைய வதையால் எங்கள் விஷயத்திற் பயனுள்ளதாக முடிந்தது; அதனால் நாங்கள் மகிழ்ச்சிகொண்டுள்ளோம். தாங்கள் எதை விரும்புகின் றீர்களோ அதை வெளியிடுங்கள் என்றார். மகேந்திரன் இப்படிச் சொன்னதும் இராமர் இலட்சு மணருடனும் சீதாதேவியுடனும் அஞ்சலி பண்ணிக் கொண்டு பின்வருமாறு சொல்லலானார் :- தேவர்களின் மன்னவரே! என்னிடம் அவ்வளவு அன்பு இருக்கும்பட் சத்தில் நான் கேட்டுக்கொள்ளுகின்றபடி செய்யவேண் டும். எந்த வானரர்கள் என்னிமித்தமாகப் போர்செய்து யமன் மாளிகைக்குச் சென்றார்களோ அவர்களெல்லோரும் மறுபடியும் உயிர்பெற்று எழுந்திருக்கட்டும். என் பொருட்டு எந்த வானரர்கள் தங்கள் மனைவிகளை, குழந் தைகளை விட்டுப் பிரிந்துவந்து எனது விருப்பத்தின் பொருட்டுத் தம்முயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாம் லிருந்தார்களோ அவ்வானரர்கள் மறுபடியும் தங்கள் மனைவி மக்களுடன் சேருமாறு கருணைகூரவேண்டும்; இது தான் நான் கேட்கும் வரம். என்னைச் சேர்ந்த கொண்டை முசுக்களையும் ரிக்ஷர்களையும் ஒருவிதநோயுமில்லாமலும் ஒருவித விரணமுமில்லாமலும் வல்லமையும் பலமும் குன் றாமலும் பார்க்க நான் வேண்டுகின்றேன். அன்றியும் இவ்வானரர்கள் எவ்விடத்திற் சஞ்சரித்தபோதிலும் அவ் விடத்தில் அகாலத்திலும் பழங்களும் கிழங்குகளும் உண் டாகவேண்டும்: அவ்விடத்தில் நதிகளும் தெளிந்த நீருடன் பெருகவேண்டும்” 

இராமர் அவ்வாறு சொன்னதை மகேந்திர பகவான் கேட்டு பின்வருமாறு சொல்லலுற்றார் :”இரகு நந்தனரே! தாங்கள் இப்பொழுது கேட்டது பெருவரம். நான் ஒரு பொழுதும் இரண்டுவகை சொன்னவனல்லனாகையால் தாங்கள் கேட்டுக் கொண்டவை அப்படியே உண்டா கட்டும்” என்றார். 

அப்பால் வானரவீரர்கள் யாவரும் தூங்கி விழிக்கின் றவர்போல எழுந்திருந்தார்கள். அப்போது இறவாது பிழைத்திருந்தவர்கள் அதனைக்கண்டு இதென்னவென்று ஆச்சரியமடைந்தார்கள்.உடனே பிழைத்தெழுந்த அவர்க ளெல்லாரும் இராமருக்கு நமஸ்காரஞ்செய்தார்கள். தேவர்களெல்லாரும் தங்கள் தங்கள் விமானங்களிலேறி தேவலோகஞ் சென்றார்கள். 

இராமர் அன்றிரவு சுகமாகத் தூங்கி யெழுந்ததும், விபீஷணர் அஞ்சலி பண்ணிக்கொண்டு வெற்றிவினவி பின்வருமாறு சொல்லலானார். ”அறிஞரே! தாங்கள் இலஷ்மணருடனும் சீதாதேவியுடனும் இங்கு வசித்து நான் செய்யும் உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு பிறகு புறப்படலாம். இராகவரே! அன்பினாலும் அபிமானத் தினாலும் நட்பினாலும் பக்தியினாலும் நான் தங்களை வேண்டிக் கொள்ளுகின்றேனே யன்றி தங்களுக்குக் கட் டளை யிடுவதாகக் கருதக்கூடாது” என்றார். 

இவ்வண்ணம் விபீஷணர் சொன்னதும், எல்லா வரக்கர்களும் வானரர்களும் கேட்குமாறு இராமர் அவ் வரக்கவேந்தரை நோக்கி பின்வருமாறு சொல்லலானார்: “நண்பரே! தாங்கள் செய்த மந்திராலோசனைகளாலும், ஆண்மைத் தொழில்களாலும், சிறந்த நட்பினாலும், எல்லாவிதமும் நான் முன்னமே தங்களால் வெகுமானம் பண்ணப்பட்டிருக்கின்றேன். தங்களுடைய வசனத்தைக் கேட்கக்கூடாதென்ற எண்ணம் எனக்குச் சிறிதுமில்லை; ஆனால் எனது மனம் எனது தம்பி பரதனைப் பார்க்க ஆவல் கொண்டிருக்கின்றது; கௌசல்யையையும், சுமித்திரை யையும், கைகேயியையும், என்னுடைய குருமார்களையும், நண்பர்களையும், தேசத்துக்குடிகளையும் பார்க்க வெகு ஆவலுட னிருக்கின்றேன். தாங்கள் எனக்குச் செய்ய வேண்டிய வெகுமானங்களெல்லாம் செய்தாயின; நான் திரும்பிப் போக விடை தருக. என்றார். இராமர் சொன்னதை விபீஷணர் கேட்டு தன் விமானத்தைச் சடிதியிற் கொண்டுவந்தார்; அது வந்ததாக தெரிவித்து அவர் கட்டளையை நோக்கிக்கொண்டு நின்றார். 

இராமர் விமானத்தின்மீது ஏறி, சிறிது வெட்கப் பட்டுக்கொண்டிருந்த சீதாதேவியைத் தமது மடியின் மேல் வைத்துக்கொண்டார். இலக்ஷ்மணரும் விற்பிடித்து அவர் பின்னே விமானத்தில் ஏறினார். அதன் பிறகு இராமர் விமானத்தி லிருந்தபடியே சுக்கிரீவனுக்கும் விபீஷணருக்கும் மற்றை வானரவீரர்களுக்கும் மரியாதை செய்து அவர்களெல்லாரையும் நோக்கிப் பின்வருமாறு சொல்லலானார்:-“வானரவீரர்களே! நீங்களெல்லாரும் எனக்குச் செய்யவேண்டிய உபகாரத்தைச் செய்து விட்டீர்கள்; இனிமேல் நீங்களெல்லாரும் உங்கள் மனம் போனபடி சஞ்சரிக்க நான் விடைகொடுக்கின்றேன். சுக்கிரீவரே! தாங்கள் என்னிடம் வைத்த அன்புக்கும் நட்புக்கும் தக்கபடி வெகு அழகாக நடந்துகொண்டீர்கள். தாங்கள் கிஷ்கிந்தை போய்ச் சேரலாம். விபீஷணரே! தாங்கள் இவ்விலங்கையிலேயே சுகமாக வாசஞ் செய்யுங் கள். நான் அயோத்திக்குப் போகின்றேன். நீங்களெல் லாரும் எனக்கு விடைகொடுக்க வேண்டும்”.

இவ்விதமாக, இராமர் சொன்னதும் வானரவீரர் களும் அரக்கர்களும் விபீஷணரும் அஞ்சலிசெய்து கொண்டு பின்வருமாறு சொல்லலானார்கள்:- “நாங்க ளெல்லோரும் அயோத்திக்குத் தங்களுடன் போவதற்கு ஆசைகொண் டிருக்கின்றோம். ஆதலால் எங்களையும் தாங்கள் உடனழைத்துப் போகவேண்டும். தங்களுடைய பட்டாபிஷேக மகோத்ஸவத்தைச் சேவித்துவிட்டு கௌசல்யையை வந்தனஞ் செய்து விடைபெற்றுக் கொண்டு திரும்பிவிடுவோம்” என்றார்கள். இதைகேட்டு இராமர் அவர்களை நோக்கி “உங்களைப்போன்றவர் களாற் சூழப்பட்டு நான் எனது நகரத்துக்குச் செல்வனே யானால் எனக்கு மிகுமகிழ்ச்சி யுண்டாகும். சுக்கிரீவரே! எல்லா வானரர்களுடனும் சடிதியிற் புஷ்பகவிமானத்தி லேறுங்கள். விபீஷணரே! தாங்களும் தங்கள் மந்திரி மார்களுடன் ஏறுங்கள் என்றார். அதன்பிறகு சுக்கிரீ வனும் விபீஷணர் தமது மந்திரிகளுடனும் விமானத்தி லேறினார்கள். அதே விமானத்தில் வானரர்கள் யாவரும் அரக்கர்களும் வெகு சுகமாக நெருக்கமின்றி உட்கார்ந்தார்கள். 

விமானமானது இராமராற். கட்டளையிடப்பட்டு காற்றாற் செலுத்தப்படும் பெருமேகம்போல் ஆகாயத்தில் ஓடலாயிற்று. இராமர் தம்மைச்சுற்றி நன்றாகப் பார்த்து சீதாதேவியை நோக்கி பின்வருமாறு சொல்லலானார்: “வைதேகி! அதோ பார்! கைலாச மலையின் சிகரம் போல் விளங்குந் திரிகூடமலையினது சிகரத்தில் இலங்கை விளங்குகின்றது. இதோ காண்கிறதே சமுத்திரத்தின் துறைமுகம் ; இங்குத்தான் சமுத்திரத்தைத் தாண்டி அன்றிரவு கழித்தோம். இதோ இச்சமுத்திரத்தினிடத் தில் விளங்குகின்றதே, விசாலாக்ஷி! இச்சேதுவை உனது நிமித்தம் நான் நளனுடைய சகாயத்தினாற் கட்டினேன். இதோ அழகான காடுகளமைந்ததாகக் காண்கின்றதே சுக்கிரீவனுடைய இதுதான் கிஷ்கிந்தை; இதுதான் பட்டணம். இவ்விடத்தில்தான் நான் வாலியைக்கொன்றேன்”. 

கிஷ்கிந்தையைக் கண்டதும் சீதாதேவி வெகு அன்புட னும் அச்சத்துடனும் இராமரைப் பார்த்து ‘வேந்தரே! தாரைமுதலான சுக்கிரீவருடைய மனைவிமார்களீேடும் இன்னும் மற்றை வானர வீரர்களுடைய மனைவிகளோடும் கூட நான் அயோத்திக்குப் போக விரும்புகின்றேன் என்று வணக்கமாகக் கூறினாள். இராமரும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தமது விமானத்தைக் கிஷ் கிந்தையில் நிறுத்தி சுக்கிரீவனைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லலானார்:-“வானர சிங்கமே! வானரவீரர்கள் யாவரும் தமது மனைவிமார்கள் சீதையுடன்வர அயோத் திக்கு வரவேண்டுமென்று சொல்லுங்கள்; அப்படியே தாங்களும் தங்களுடைய மனைவிமார்களைச் சடிதியில் அழைத்து வாருங்கள். எல்லாருடனும் நாம் அயோத் திக்கு ஏகுவோம்”. 

இவ்வாறு சொன்னதும் வானரராஜன் அந்தப்புரத்துக்குச் சென்று தாரையைப் பார்த்துச் சொல்லலானான்:- சீதாதேவியை மனங்களிப்பிக்க இராமர், காதலி ! நீ மற்றை வானரவீரர்களின் மனைவியருடன் அயோத்திக்கு வருமாறு கட்டளையிடுகின்றார்: ஆகையால் நீ வானரமகளிர் யாவரையும் விரைவாக அழைத்து வருக: அயோத்தியையும் தசரத மன்னவரது மனைவிமாரையும் பார்த்துவருவோம்’ என்றான். இவ் வண்ணம் சுக்கிரீவன் சொன்னதைக் கேட்டதும் ஸர் வாங்க சுந்தரியான தாரை வானரமடைந்தைமா ரெல்லா ரையும் கூப்பிட்டுப் பின்வருமாறு சொல்லலானாள்: “இப் பொழுது நீங்கள் யாவரும் எல்லா வானரர்களுடனுங் கூட அயோத்திக்கு வருமாறு சுக்கிரீவர் கட்டளை இப் டிருக்கின்றார். அயோத்தியையும் இராமர் அந்நகரத்திற் பிரவேசிக்குங் காட்சியையும் தசரத மன்னவருடைய மனைவிமாரின் பாக்கியத்தையும் கண்டுகளிக்க வேண்டு மென்று எனக்கும் எண்ணமிருக்கின்றது ” தாரை சொன்னதைக் கேட்டதும் எல்லா ஸ்திரீகளும் தங்களைச் சிங்காரித்துக்கொண்டு வெளிவந்து, விமானத்தை வலஞ் செய்து, சீதாதேவியைக் காணவேண்டுமென்ற ஆவலு டன் விமானத்தின் மீது ஏறினார்கள். 

54. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் 

ஸ்ரீராமர் விமானத்திலிருந்தபடி அயோத்திமாநகரத் தைப் பற்றிச் சிந்தித்து அநுமானைப் பார்த்துச் சொல்ல லானார் :-“நீ அயோத்தி சென்று, அரண்மனையில் எல் லாரும் சௌக்கியமா?’ என்பதை அறிந்து கொள்க. பரதனிடம் க்ஷேமசமாசாரத்தை நான் சொன்னதாகச் சொல்லுக. நான் என் காரியத்தைச் சரியாக முடித்துக் கொண்டு இலக்ஷ்மணனுடனும் சீதையுடனும் திரும்பி வந்ததும் ஆகிய எல்லாவற்றையும் பரதனிடம் தெரிவி. அரக்கவேந்தராகிய விபீஷணருடனும் எல்லா வானரவீரர் களுடனும் வந்திருக்கின்றோ மென்பதையும் சொல்லுக. இச்செய்தியைக் கேட்டுப் பரதன் என்னிடம் என்ன கருத்துடனிருக்கின்றா னென்பதை நீ அவனது முகக்குறிகளா லறிந்துகொள்ள வேண்டும். அவனுடைய முகத் தில் தோன்றுங் குறிகளாலும், பார்வையாலும், பேச்சா லும், அவன் கருத்து முழுவதையும் தெரிந்து கொள்ள லாம். எல்லாவகை யின்பங்களும் நிரம்பிய யானை குதிரை தேர் இவைகளடங்கிய சேனையுள்ள தாய் வம்ச பரம்பரை யாக வந்திருக்கும் இராச்சியத்தில் யாருக்குத்தான் ஆசை யிருக்காது? பரதனுக்கு இராச்சியத்தில் ஆசையிருக்கும் பட்சத்தில் அவனே ஆளட்டும். ஆகையால் வானர வீர னே! அவனது எண்ணத்தை அறிந்து, அவனது ஏற்பாடு களையும் தெரிந்துகொண்டு யாங்கள் அயோத்திக்குச் சமீ பத்தில் வருவதற்கு முன்னமே நீ என்னிடம் வந்து தெரி விக்க வேண்டும்”. 

இவ்விதமாக இராமர் கட்டளையிட்டதும் அநுமான் மனிதரூபங்கொண்டு வெகு வேகமாக அயோத்தியிலிருந்து ஒரு குரோச தூரத்திலிருந்த நந்திக்கிராமத்துக்கருகில் பல மரங்களடர்ந்து விளங்குந் தோட்டமொன்றைச் சார்ந் தான். அங்கு மரவுரியும் மான்தோலும் தரித்தவராய், வெகு பரிதாபமான தோற்றமுள்ளவராய், தமது மயிர் முடியை ஜடையாகத் தரித்தவராய், மேனி முழுதும் மாசு படிந்தவராய், தமையனாரை விட்டுப்பிரிந்த துக்கத்தினால் மெலிந்தவராய், கனிகளையும் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டவராய், ஐம்புலன்களையும் வென்றவராய், ராமர் தமக்கு அளித்த மரவடியிரண்டையும் தமது முன்பாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதையும் அரசாள்பவராய், விளங்கிய பரதரை, அநுமான். பார்த்து அஞ்சலி செய்துகொண்டு பின்வருமாறு சொல்லலானான்:- தண்டகாரணியத்தில் மரவுரியணிந்து ஜடைமுடியுடன் வசித்துக் கொண்டிருக்கின்றாரே யென்று எவரொருவரை நினைத்துத் தாங்கள் இவ்வளவு துயரப்படுகின்றீர்களோ அவ்விராமர் தங்களுக்கு க்ஷேமத்தைத் தெரிவிக்கச் சொன் னார். வேந்தரே! தங்களுக்கு இந்தச் சந்தோஷசமாசாரம் சொல்லவந்தேன். இனி துக்கத்தை அகற்றுங்கள். இராமர் இராவணனை வதைத்துச் சீதாதேவியை அடைந்து, தமது காரியங்களை முற்றிலும் நிறைவேற்றி, தமது நண்பர் களுடனும் பெருஞ்சேனையுடனும் இவ்விடத்துக்கு வந்து கொண்டிருக்கின்றார். இலட்சுமணரும் சீதாதேவியும் வருகின்றார்”. 

இவ்வாறு அநுமான் சொன்னதும், பரதர், சந்தோஷ மிகுதியால் திடீரென்று பூமியில் விழுந்து மோகமடைந் தார். சிறிது நேரத்துக்குள் மூர்ச்சை தெளிந்து எழுந்து தமக்கு அவ்வாறு அன்பான செய்தி சொன்ன அனுமானை கட்டிக்கொண்டு பின்வருமாறு சொல்லலானார்:-“இவ் வளவு கருணையை என்னிடம் காட்டிக்கொண்டு இவ்விடம் வந்த தாங்கள், தேவரா? அல்லது மனிதரா? இச்சந்தோஷ சமாசாரத்தைத் தாங்கள் சொன்னதற்காக, நண்பரே! நூராயிரம் பசுக்களையும் உத்தமமான நூறு கிராமங்களை யும் தங்களுக்குக் கொடுக்கின்றேன். எனது தமையனார் பெருவனத்துக்குச் சென்று பல வருஷங்கள் ஆயினவே! அவரைப்பற்றிய சமாசாரம் என் காதில் இப்பொழுதல்ல வா விழுந்து என் அன்பைப் பெருகச் செய்கின்றது. ஒரு மனிதன் உயிருடன் மட்டுமிருப்பானே யானால் நூறு வரு ஷத்துக்குப் பிறகாவது அவனுக்குச் சந்தோஷமுண்டாகு மென்ற உலகச்சொல் உண்மையென்றே எனக்குத் தோன்றுகின்றது. அநுமானே! இராமருக்கும் வானர வீரர்களுக்கும் சேர்த்தி எவ்விடத்தில், என்ன காரணத் திற்காக உண்டாயிற் றென்பதை எனக்குச் சொல்ல வேண்டும்.’பரதர் இவ்வாறு கேட்க அநுமான் இராமரது வனவாச சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லினான். பரதர் இச்சமாசாரத்தைக் கேட்டு தம்மைப்போலவே சந்தோஷத்தில் மூழ்கியிருந்த சத்துருக்கினரை நோக்கி கட்டளையிடலானார்:-“வாசனை பொருந்திய பலவகை மலர்களாலும் வாத்திய கோஷங்களாலும், எல்லாக் கோயில்களிலும், நாற்சந்திகளிலிருக்கும் மண்டபங்களி லும், தக்க மானிடர்கள் வெகு ஆசாரத்துடன் பூஜை செய்யட்டும். எல்லாவகைத் தோத்திரங்களையும் புரா ணங்களையும் அறிந்த ஸ்துதி பாடகர்களும் வைதாளிகர் களும், வாத்தியங்களிற் சமர்த்தர்களான வாத்தியக்காரர் களும், கணிகையர்களும், கூட்டங்கூட்டமாக இராம ருடைய முகத்தைப் பார்க்கும் பொருட்டுப் புறப்படட்டும்’ என்றார். 

அப்பால் தசரத மன்னவருடைய மனைவிமார்கள், கௌசல்யையையும் சுமித்திரையையும் முன்னிட்டுக் கொண்டு, பலவித வாகனங்களிலேறி வெளிப்புறப்பட் டார்கள். எல்லாரும் நந்திக்கிராமத்தைச் சேர்ந்தார்கள். அயோத்திமாநகரம் முழுவதுமே அப்போது அங்கு வந்து சேர்ந்தது. பரதரை, அந்தணர்கள், கைத்தொழிற்காரர் கள், வியாபாரிகள், மலர்களையும் மோதகங்களையும் கைகளிற் சித்தமாக வைத்துக்கொண்டிருந்த மந்திரிகள் இவர்களெல்லாரும் சூழ்ந்து நின்றார்கள். சங்கம் பேரிகை இவைகளி னொலிகளாலும், வந்தியராலும், பரதர் வணங் கப்பெற்று. இராமருடைய பாதுகைகளை முடியின்மே லணிந்தவராய், வெண்மலர் மாலையால் விளங்கும் வெண் குடையையும் ராஜசின்னமான தங்கப்பிடியுள்ள இரண்டு வெண்சாமரங்களையும் எடுத்துக்கொண்டு, தமது மந்திரி மார்களெல்லாரும் தம்மைச் சூழ்ந்துவர இராமரை எதிர் கொண்டு சென்றார். 

இராமரை பார்த்த உடனே பரதர் அஞ்சலி செய்த படியே வெகு சந்தோஷமாக இராமரெதிரில் நின்று கொண்டு மனப்பூர்வமாக நல்வரவு விசாரித்தார் ; நமஸ்கா ரஞ்செய்தார். அதன்பிறகு விமானம் இராமருடைய கட் டளைப்படி பூமியிலிறங்கி நின்றது. பரதரை இராமர் தமது கைகொடுத்து அவ்விமானத்தி லேற்றிவிட்டார். வெகுநாளாய்த் தாம் காணாத தம்பி பரதரை இராமர் தமது மடியின்மேல்வைத்து சந்தோஷத்தாற் கட்டித்தழு வினார். அதன்பிறகு பரதர் இலக்ஷ்மணரைப் பார்த்து விட்டு சீதாதேவியை நமஸ்காரஞ்செய்தார். அப்பால் பர தர், சுக்கிரீவன் ஜாம்பவன் அங்கதன் மைந்ததுவிவிதர் நீலன் விருஷபன் ஸுஷேணன் முதலான எல்லா வானர வீரர்களையும் சந்தோஷத்தாற் கட்டிக்கொண்டார். இஷ்டமான உருவங்கொள்ளும் அவ்வானர வீரர்களும் மானிடவுருவத்துடன் வெகு சந்தோஷமாக பரதரை க்ஷேமம் விசாரித்தார்கள். 

பரதர் சுக்கிரீவனைக் கட்டிக்கொண்டு “சுக்கிரீவரே!. சகோதரர்களாகின்ற எங்கள் நான்கு பெயர்களுக்கும் பின்பிறந்த ஐந்தாவது சகோதரர் தாங்கள்; உபகாரஞ் செய்வதுதான் நண்பர்களென்று சொல்லுவதற்குக் கார ணம்; அபகாரமானது சத்துருக்களென்பதற்கு அடை யாளம் என்றார். அதன்பிறகு பரதர் விபீஷணரை நோக்கி:-“தெய்வாதீனமாக தங்களது உதவியால்ல்லவா ஒருவராலுஞ் செய்யமுடியாத காரியத்தை எனது தமையனார் செய்துமுடித்தார்?” என்றார். சத்துருக்கினர், இராமரையும் இலக்ஷ்மணரையும் நமஸ்காரஞ்செய்து சீதாதேவியினிடம் வந்து அடிபணிந்து நின்றார். 

சோகத்தில் மூழ்கி இளைத்திருந்த தமது தாய். நின்ற விடத்துக்கு இராமர் வந்து அவ்வுத்தமியின் பாதங்களில் நமஸ்காரஞ்செய்து அவளது மனத்தைக் குளிரச்செய்தார். பிறகு சுமித்திரையையும் கைகேயியையும் மற்றுமுள்ள தாய்மாரையும் இராமர் நமஸ்காரம்பண்ணி, தமது குரு விருந்த இடத்தை நோக்கிச் சென்றார். அப்போது “கௌசல்யையின் ஆனந்தத்தைப் பெருகப் பண்ணு கின்ற இராமரே! தங்களுடைய வரவு நல்வரவா?” என்று வினவி, எல்லாக்குடிகளும் அஞ்சலி பண்ணிக்கொண்டு இராமரைப் பார்த்து முகமன் கூறினார்கள். 

பரதர் அப்பொழுது இராமர் தமக்கு கொடுத்திருந்த அவ்விரண்டு பாதுகைகளையும் எடுத்துவந்து அவருடைய திருவடிகளிற் பூட்டினார். பின்னர் அவர் அஞ்சலிபண் ணிக்கொண்டு இராமரை நோக்கி சொல்லலானார்:- “அரசரே! தங்களது நாட்டை நான் இதுவரையிற் பாது காத்தேன். இப்போது தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இன்று தாங்கள் மறுபடியும் அயோத்திக்கு மன்னவராகத் திரும்பி வந்ததை எனது கண்களாற் பார்த்தபிறகு, நான் பிறந்த பிறப்பின் பயனைபெற்றேன்” என்றார். இராமரும் பரதரைத் தமது மடியிலுட்கார வைத்துக்கொண்டு விமா னத்திலேறி யிருந்தபடியே தமது சேனையுடன் பரதருடைய ஆச்சிரமத்துக்குச் சென்றார். அவ்வாச்சிரமம் சேர்ந்ததும் இராமர் தமது சேனையுடன் அவ்விமானத்தை விட்டு இறங்கி விமானத்தை நோக்கி “விமான தேவ தையே ! நீ திரும்பிப்போக நான் விடையளிக்கின்றேன்” என்றார். 

அதன் பிறகு பரதர் தமது தலையின்மேல் கரங்களைக் கூப்பிக்கொண்டு இராமரை நோக்கிச் சொல்லலானார்:- இந்த நாட்டை எனக்கு அளித்துக் காட்டுக்குப்போய் எனது தாயை தாங்கள் கௌரவித்தீர்கள். பிறகு சித்ர கூடத்தில் இந்த ராஜ்யத்தை என்னிடத்தில் அடைக்கலப் பொருளாகவைத்தீர்கள் ; அந்த ராஜ்யத்தை நான் இப் பொழுது தங்களிடம் திருப்பிக்கொடுக்கின்றேன். இவ் விராஜ்யத்திற் பட்டாபிஷேகஞ் செய்யப்பெற்ற தங்களை இவ்வுலகம் கண்ணெடுத்துப் பார்க்கட்டும்” என்றார். இராமர் பரதர் சொன்னதைக்கேட்டு, “அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புக்கொண்டு அழகான ஓர் ஆசனத்தி லுட்கார்ந்தார். 

பிறகு சத்துருக்கினருடைய கட்டளைப்படி சுமந்திரர் இரதத்தைக் கொண்டுவந்து நிறுத்தினார். இராமர் அந்த இரத்திலேறினார். பரதர் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துத் தேரைச் செலுத்தினார். சத்துருக்கினர் ஒற்றை வெண்கொற்றக்குடை பிடித்தார்; இலக்ஷ்மணர் இராம ருடைய தலைக்கு மேலாக வெண்சாமரம் வீசினார். விபீஷ ணர் மற்றொரு வெண்சாமரத்தை எடுத்துக்கொண்டு இராமருக்கு முன்பாக நின்று வீசினார். ஆகாயத்தில் ரிஷிகளும் தேவர்களும் மருத்துக்களும் இராமரைப் புகழ்ந்த இன்னொலி கேட்கலாயிற்று. மந்திரிமார்களாலும் அந்தணர்களாலும் குடிகளாலும் சூழப்பட்டு விளங்கிய இராமர் தம்முடைய வரவைக் கண்டு சந்தோஷத்தாற் பூரித்திருந்த ஜனங்கள் நிரம்பிய அயோத்திநகரிற் புகுந் தார்; தமது தந்தையின் அழகிய அரண்மனைக்குட் பிரவேசித்தார். 

அவ்விடஞ் சென்றதும், பரதர் சுக்கிரீவனைப் பார்த்து, “பிரபுவே! இராமருடைய பட்டாபிஷேகத் துக்குத் தீர்த்தங்கள் கொண்டுவர தங்களுடைய தூதர் களுக்குக் கட்டளையிட வேண்டுகின்றேன் என்றார். அவ்வாறே தீர்த்தங்கள் வந்து சேர்ந்ததை சத்துருக்கின ரும் மந்திரிமாரும் கண்டு தங்கள் புரோகிதருக்கும் நண் பர்களுக்கும் தெரிவித்தார்கள். அதன்பிறகு இராம பட் டாபிஷேகத்துக்கு வெகு முயற்சியுடனிருந்த வசிஷ்டமா முனிவர், அந்தணர் பலருடன்கூட எழுந்துநின்று, இராம ரைச் சீதாதேவியுடன் இரத்தின சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க வைத்தார். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கௌதமர்,விஜயர் இவர்கள் கூடி, அஷ்டவசுக்கள் ஆயிரங் கண்ணனான் தேவேந்திரனுக்கு அபிஷேகஞ் செய்வதுபோல, நல்ல வாசனையுடையதாய்த் தெளிந்த நீரினால் இராமருக்குப் பட்டாபிஷேகஞ் செய்தார்கள். 

வசிஷ்டர் முதலியோரது கட்டளையினால் மந்திர விதிப் பிரகாரம் முதலில் ருத்விக்குகளும் அந்தணர்களும் இராமருக்கு அபிஷேகம் செய்தார்கள். ஆகாயத்தில் நான்கு லோகபாலர்களும் எல்லாத் தேவதைகளும் வந்து நின்று கொண்டு திவ்வியங்களான எல்லா மூலிகைகளுடைய இரசங்களினாலும் இராமருக்கு அபிஷேகஞ் செய்தார்கள். பலவகையிரத்தினா பரணங்களை யணிந்த மஹாஜனங்கள் கூடிய பொன்மயமான சபையில் பொற்பீடத்தின்மேல் இராமரை உட்காரவைத்து, முன்பு பிரம்மதேவனால் நிருமிக்கப்பட்டு இரத்தினங்களினால் விளங்கி, மனுவி னால் அணியப்பெற்றுக் குலமுறையாக வந்த இரத்தின கிரீடத்தை, வசிஷ்டர் இராமருக்குச் சூட்டினார். சத்துருக் கினர் வெகு அழகான வெண்குடை ஒன்றை இராமருக் குப் பிடித்தார். வானர வேந்தனாகிய சுக்கிரீவன் வெண் சாமரம் வீசினான். மற்றொரு வெண்சாமரத்தை விபீஷ ணர் வீசினார். இந்திரபகவானுடைய கட்டளைப்படி வாயு பகவான் எல்லாவித ரத்தினங்களும் கலந்திழைக்கப் பெற்று நாயகமணியாற் சோபித்துக்கொண்டிருந்த முத்து மாலை யொன்றை இராமருக்குக் கொடுத்தார். இராமருடைய பட்டாஷேகத்தில் தேவர்களும், கந்தர்வர்களும் கானம் பண்ணலானார்கள். அப்ஸரஸுக்களின் கணங்கள் கூத்தாடின. 

இராமருடைய பட்டாபிஷேக மகோத்ஸவம் நடந்தவுடன், பூமி தானியங்கள் நிரம்பியதாகவும், விருக்ஷங்கள் கனிகள் நிரம்பியனவாகவும், மலர்கள் வாசனை நிரம்பியனவாகவும் விளங்கின. 

அதன் பிறகு, இராமர் நூறாயிரங் குதிரைகள். நூறாயிரம் பசுக்கள், நூறாயிரந் தேனுக்கள், நூறு காளைமாடு கள் இவைகளை ஹிரண்யதானத்துக்கு முன்பு அந்தணர் கட்குத் தானம்பண்ணினார். முப்பதுகோடி பொன்னையும் பலவகை யாபரணங்களையும், விலையுயர்ந்த வஸ்திரங்களையும் பிராமணர்களுக்குத் தானஞ் செய்தார். பின்னர் சூரியனுடைய கிரணங்கள்போல மின்னிக் கொண்டு, தங்கமும் இரத்தினமுமிழைக்கப்பட்டு வெகு அழகாய் விளங்கிய மாலை யொன்றைச் சுக்கிரிவனுக்குக் கொடுத்தார். வைடூரியகற்கள் அழகாக இழைக்கப்பட்டு நடுவில் வைரமும் இரத்தினமும் பதிக்கப்பெற்ற இரண்டு தோள்வளையல்களை அங்கதனுக்கு கொடுத்தார். சிறந்த மணிகளிழைக்கப்பட்டுச் சோபித்துக் கொண்டிருந்த முத் தாஹாரமொன்றை சீதாதேவிக்குக் கொடுத்தார். சீதா தேவி தனது கழுத்தினின்றும் அந்த ஹாரத்தை கழற்றி கொண்டு எல்லா வானரவீரர்களையும் பார்த்து விட்டு தனது கணவனாருடைய திருமுகத்தையும் பார்த்தாள். முகக்குறியால் இராமர் அவ்வுத்தமியின் இங்கிதத்தை அறிந்துகொண்டு, அவளைப் பார்த்துப் சொல்லலானார்: “இனிய அழகுடையவளே! எவனொருவனிடம் வல்லமை பலம் புத்தி இவைகளெல்லாம் அதிகமாக விருக்கின்றன வென்று சந்தோஷமடைந்திருக்கிறாயோ, அவனுக்கு இந்த ஹாரத்தை நீ வெகுமதியாகக் கொடுக்கலாம்” என்றார். உடனே அவ்வுத்தமி அந்த ஹாரத்தை அநுமானுக்குக் கொடுத்தாள். அனுமானும் அந்த ஹாரத்தை அணிந்து கொண்டு சோபிக்கலானான். எல்லா வானர விருத்தர் களும் வஸ்திரங்களாலும் ஆபரணங்களாலும் அவரவர் களுக்குத் தக்கபடி மரியாதை செய்யப்பெற்றார்கள். 

விபீஷணர் சுக்கிரீவர் அநுமான் ஜாம்பவன் மற்று முள்ள வானர சேனாதிபதிகள் எல்லாரும் இராமரால் அவரவர்களுடைய பதவிக்குத் தக்கவாறு இஷ்டப்படி இரத்தினங்களாலும் மற்றைவித மரியாதைகளாலும் பூஜிக்கப்பட்டார்கள். எல்லாரும் மிகவும் ஆனந்த மடைந்து தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப லானார்கள். 

தமது சத்துருக்களை நாசம்பண்ணி இராமர் வெகு கம்பீரமாய் வெகு சந்தோஷத்துடன் அந்நாடு முழுமையும் பரிபாலனம் பண்ணலானார். அம்மன்னவர் பௌண் டரீகம் வாஜபேயம் அசுவமேதம் முதலான பல யாகங்களைப் பலதரஞ் செய்து முடித்தார். இராமர் இராச்சிய பரிபாலனம் பண்ணிவந்த காலத்தில், கைம்பெண்கள் புலம்பினார்க ளென்பதே கிடையாது; துஷ்டமிருகங் களாற் பயமுண்டாயிற்றென்ற சொல்லே இல்லை. வியாதி யினாற் பயமுண்டாயிற்றென்பதும் இல்லாமலிருந்தது. உலகத்தில் திருடனென்ற குற்றவாளியே இல்லை. ஒருவித சங்கடமும் உலகத்துக்கு உண்டாகவேயில்லை. பெரியவர் கள் சிறிய குழந்தைகளுக்கு உத்திரகிரியை செய்தார்க ளென்பதே இல்லாமலிருந்தது. எல்லாரும் சந்தோஷ மாகவே யிருந்தார்கள். எல்லாரும் தருமகாரியத்திற் பிர வேசித்தவர்களாகவே விளங்கினார்கள். குடிகளுக்குள் ராமர் என்ற எங்கு பார்த்தாலும் ‘ராமர், ராமர். கதையாகவே இருந்தது, ஜகத்துமுழுதும் இராம மய மாகவே தோன்றிற்று. அந்தந்தக் காலங்களில் மேகங்கள் அந்தணர்கள் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் மழை பொழிந்தன. எப்பொழுதும் இளங்காற்று வீசிற்று. எல்லோரும் உலோப குணமின்றி தங்கள் தொழிலைச் செவ்வையாக நடத்தி சந்தோஷமடைந்தவர்களாக இருந் தார்கள். எல்லாரும் சகல லட்சணங்களும் பொருந்தியவர் களாயும் எல்லாரும் தருமத்தைச் செய்கின்றவர்களாயும் இருந்தார்கள். இவ்வாறு இராமர் பதினாயிரத்து நூற்றுப் பத்து வருஷகாலம் தமது தம்பிமார்களுடன் ஒருவகைக் குறையுமின்றி இராச்சியபரிபாலனஞ் செய்துவந்தார்.

– தொடரும்…

– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *