கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 8,017 
 
 

(2019ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

காலை நேரம். பெரிய நிலப்பரப்பின் நடுவில் பணக்கார பங்களா. எதிரே கொரியன் புற்கள், குரோட்டன்ஸ்கள். பச்சைப் புல் வெளியில் பஞ்சுப் பொதியாய் நாய்க்குட்டி. எதையோ துரத்தி விரட்டி அங்குமிங்கும் ஓடி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

போர்டிகோவில் மாருதி 800. வெள்ளை நிற டாடா சுமோ.

பாம் !…பாம்!..

வாசலில் ஆட்டோ அலறியதைக் கேட்ட சுதாகரன் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு ஐம்பது. அவன் இளம் தொழிலதிபர். வயது முப்பது. நல்ல அழகு.

ஆட்டோக்காரன் மீண்டும் ஹாரன் அடித்தான். அவனுக்கு அவசரம் இன்னும் இரண்டு வீடுகளில் நின்று பிள்ளைகளை ஏற்றிச் செல்ல வேண்டும். சரியாய் ஒன்பது மணிக்கெல்லாம் அவர்களைப் பள்ளியில் விடவேண்டும்.

சுதாகரன் வேகமாக வெளியே வந்தான். பங்களாவை ஒட்டி பத்தடி துாரத்தில் இருக்கும் அவுட் ஹவுஸ் பக்கம் சென்றான்.

‘முத்துலட்சுமி ! முத்துலட்சுமி!’ – வாசலில் நின்று குரல் கொடுத்தான்.

“இதோ வந்துட்டேன்….!” வேலைக்காரி அரக்க பரக்க வெளியே ஓடி வந்தாள்.

“ஆட்டோ வந்து ஹாரன் அடிக்கிறது காதுல விழலை?” – இரைந்தான்.

“இதோ கிளம்பிட்டாங்க எசமான்!“ – அவளுக்கு எசமானே வந்து அழைத்ததில் வேர்த்தது.

“ஆட்டோ வர்றதுக்கு முன்னாடியே குழந்தைகளை நிறுத்த வேண்டியதுதானே ஏன் இவ்வளவு லேட்டு?“

இவள் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே ஆட்டோக்காரன் மறுபடியும் பொறுமையை இழந்து ஹாரனை அழுத்தினான். வண்டி நிறைய மலர்க்கொத்துகளாய் மழலைக் குழந்தைகள்.

“புள்ளைங்க சாப்பிட நேரமாச்சுங்கைய்யா..” – அவள் உதறலுடன் சொல்லி உள்ளே ஓடினாள். நிமிடத்தில் திரும்பினாள். கூடவே சீருடையில் பத்து வயது மணிமொழி. மணிமொழி. அடுத்து ஆறு வயது மணிகண்டன். முதுகில் புத்தகப்பை சுமந்து கையில் வாட்டர் பாட்டில் எடுத்து வந்தார்கள்.

“சாப்பாட்டுக் கூடை?” – சுதாகரன் முத்துலட்சுமியைப் பார்த்தான்.

“இதோ இருக்கு…” – அவள் கையில் எடுத்து வந்தாள். குழந்தைகளை முன்னேவிட்டு பின்னே நடந்தாள்.

கூர்க்கா இவர்களுக்காகவே கேட்டைத் திறந்து வைத்திருந்தான்.

மணிமொழி, மணிகண்டன் ஆட்டோவிற்குள் நுழைந்தார்கள். முத்துலட்சுமி அவர்களிடம் சாப்பாட்டுக் கூடையை ஒப்படைக்க…ஆட்டோ புறப்பட்டு வேகமாக சென்றது.

அவள் திரும்பி வரும்வரை சுதாகரன் நின்றான்.

“இதுதான் கடைசி. இனிமேல் ஆட்டோ வர்றதுக்கு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி குழந்தைங்க வாசல்ல நிக்கனும். நம்ப குழந்தைங்களால மத்தப் புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு தாமதமா போக்ககூடாது தெரிஞ்சுதா?” – உறுமினான்.

“சரிய்யா..” – முத்துலட்சுமி பணிவாய்த் தலையாட்டி பங்களா பக்கம் சென்றாள்.

“எங்கே போறே ?”

‘கீ…கீதாம்மா…”.

“அவ எப்பவோ எழுந்திரிச்சு எல்லா வேலைகளையும் முடிச்சுட்டா. நீ சொர்ணாவைக் கவனிச்சுட்டு வந்தா போதும். அவ எழுந்திரிச்சாச்சா?” – கேட்டான்.

“ஆச்சு….”

“காபி டீ குடிச்சிட்டாளா?”

“குடிச்சாச்சு“

“டிபன்?“

“இ….இன்னும் இல்லே.”

“டிபன் முடிச்சு சரியா ஒன்பது மணிக்கெல்லாம் மாத்திரை மருந்து முழுங்கி இருக்கனுமே? ஏன் முடியலை?”

“குழந்தைங்களை அனுப்பிட்டு சாப்பிடுறேன்னு சொன்னாங்க..”

“அவ சொல்லுவா. நீதான் டாக்டர் சொன்னபடி அவளுக்குச் செய்ய வேண்டியதைச் சரியா செய்யனும். பொறக்கப் போறது இந்த வீட்டு வாரிசு என் குழந்தை தெரியுமா?” – அதட்டினான்.

“அங்கே என்ன கலாட்டா?“ – கீதா.

வயது இருபத்து ஆறு. சுதாகரன் மனைவி. அவனைவிட இவள் அழகு கடைந்தெடுத்த பளிங்குச் சிலை. கணவன் அதட்டல் உருட்டல் பொறுக்க முடியாமல் பங்களாவிலிருந்து வெளியே வந்தாள்.

“ஒண்ணுமில்லே கீதா. சொர்ணாவை இவ சரியா கவனிக்கலை. அதான் சத்தம் போட்டேன்.” – சுதாகரன் அவளுக்குப் பதில் சொன்னான்.

“என்ன சரியா?” என்பது போல் கீதா முத்துலட்சுமியைப் பார்த்தாள்.

“இன்னைக்குச் சொர்ணாம்மா எழுந்திரிக்க லேட்டுங்கம்மா. குளிர்ல குழந்தைங்களும் குளிக்க நேரமாகிடுச்சு. புள்ளைங்களை அனுப்பிட்டு மருந்து மாத்திரை சாப்பிடுறேன்னு சொன்னாங்க. ஐயா வந்து…” – இழுத்தாள்.

‘எந்த வேலையையும் தினம் சரியாய்ச் செய்ய முடியாது. என்றாவது ஒருநாள் முன் பின் ஆகும்.’ உணர்ந்த கீதா, “சரி. ஐயா சொன்னபடி செய்!” – கணவனை விட்டுக் கொடுக்காமல் அவளுக்கு உத்தரவிட்டுவிட்டு, “சொர்ணா எப்படி இருக்கா?” -விசாரித்தாள்.

“நல்லா இருக்காங்கம்மா.”

“போய் வேலையைப் பார்!” – என்று அவளை அனுப்பிய கீதா கணவன் பக்கம் திரும்பி, “என்னைக்காவது ஒருநாள் முன்னே பின்னே ஆகும் வாங்க” – சுதாகரனை அழைத்துக் கொண்டு பங்களாவிற்குள் நுழைந்தாள்

‘தன்னுடைய சின்ன தவறு, அலட்சியத்திற்கு வேலைக்காரிக்குத் திட்டு!‘ – அவுட் ஹவுஸ் ஜன்னலிலிருந்து கவனித்த சொர்ணாவிற்கு இதயம் வலித்தது.

‘தன் மீது எவ்வளவு அன்பு, பாசம்! எல்லாம் வயிற்றில் வளரும் பிள்ளையின் பாக்கியம்! நினைக்கும் போதே அவளுக்கு நெஞ்சுக்குழி அடைத்தது. ஆயாசமாக வந்து கூடத்திலுள்ள பெஞ்சில் அமர்ந்தாள். அப்படியே அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். மூன்று மாத கரு சின்னதாய் மேடிட்டிருந்தது.

உள்ளே நுழைந்த முத்துலட்சுமிக்குச் சொர்ணா மேல் கோபம் இல்லை. எசமானர்களிடம் வேலைக்கார்கள் திட்டு வாங்குவது சகஜம். நினைத்து நேராக அடுப்படிக்குச் சென்றாள். மல்லிகைப் பூ வாய்ச் சுட்டு அடுக்கி இருந்த இட்லிகளில் நான்கை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதில் தேங்காய்ச் சட்னியை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து, “சாப்பிடு சொர்ணா” – எதிரில் வைத்தாள்.

முத்துலட்சுமியின் கை மணம். இட்லியும் சட்னியும் மணத்தது.

‘தினம் வயிற்றுச் சோற்றிற்கே திண்டாடிய காலம் மாறி… இப்போது ராஜ உபச்சாரம், மரியாதை.’ – சொர்ணாவிற்கு அவளையும் மீறி தன்னிலை வந்து போனது.

“லட்சுமி! நீ சாப்பிடலை?!” – அதை மறைக்க முத்துலட்சுமியைக் கேட்டாள்.

“இல்ல. இதோ வர்றேன்!” – அவள் அடுப்படிக்குள் நுழைந்து தனக்கும் ஒரு தட்டில் இட்லி சட்னி எடுத்து வந்தாள். சொர்ணா எதிரில் அமர்ந்தாள்.

“நான் அப்பறம் சாப்பிடுறேன்னு சொன்னதால ஐயாகிட்ட நீ வாங்கிக் கட்டிக்கிட்டே?” – சொர்ணா தனக்குள் எழுந்த வருத்தத்தைத் தெரியப் படுத்தினாள்.

“இதெல்லாம் சகஜம்!” – சொன்ன முத்துலட்சுமி, “நீ சாப்பிடு” – சாப்பிட்டாள்.

இருவரும் முடித்தார்கள். அடுத்து முத்துலட்சுமி மாத்திரை எடுத்து வர சொர்ணா விழுங்கினாள்.


கீதா என்றைக்கும் பளிங்கு சிலை. பருவ அழகு. சுதாகரனுக்கு அவளுடன் நடப்பதே கர்வமாகவும் பெருமையாகவும் இருக்கும்.

பங்களாவில் நுழைந்த அடுத்த வினாடியே சோபாவில் அமர்ந்தவன், “உட்கார் கீதா!” – அவளையும் பக்கத்தில் அமர வைத்தான்.

“என்ன விசேசம்?”

“ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே?!” கண்களை விரித்தான்.

“இந்த தலைப்புல படம் வந்தாச்சு”

“நான் நிஜத்தைச் சொல்றேன்.”

“இதைத்தான் தினைக்கும் சொல்றீங்களே?“

“சரி விடு விசயத்துக்கு வர்றேன். உனக்கு என்ன குழந்தை பிடிக்கும்?”

“பெண்!”

“ஏன்?“

“அழகழகா உடுத்தலாம் விதவிதமா அலங்காரம் செய்யலாம்“.

“அப்புறம்?”

“பெண் குழந்தைங்களோட அழகே அழகு. அதுங்க குழந்தையாய் இருந்தாலும் குமரியாய் ஆனாலும் தனிக்களை.” – சொல்லும்போதே கீதாவிற்குக் கண்கள் மின்னியது.

“அப்போ ஆண் குழந்தைப் பொறந்தா துாக்கி எறிஞ்சுடலாமா?“

“துாக்கி வைச்சு கொஞ்சலாம்.”

“எனக்கு இப்போவே குழந்தையைக் கொஞ்சனும் போலிருக்கு”

“சொர்ணா இப்போதான் மூணு மாசம் இன்னும் ஏழு மாசம் பொறுக்கனும்.”

“அவ வயித்துல வயித்துல என்ன குழந்தை இருக்குன்னு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாமா?“

“சட்டப்படி குத்தம்!”

தொலைபேசி மணி அடித்தது. சுதாகரன் சுதாகரன் எடுத்து காதில் வைத்தான். முகம் இறுகியது. வைத்தான்

“என்ன?”

“கம்பெனியில பிரச்சனை வர்றேன்.!” – விடுவிடுவென்று வெளியில் வந்து காரை எடுத்தான்.

அத்தியாயம்-2

‘குடிசை வீடு. குப்பத்து வாழ்க்கை!’ – தனித்து அமர்ந்திருந்த சொர்ணாவிற்குத் தன் கடந்த கால வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது

குடிகார கணவன். இரண்டு பெற்றும் பெற்றும் நிம்மதி இல்லை. கோவிந்தன் நல்ல வாட்ட சாட்டமான ஆள். ரிக்ஷா வலிப்பு. நல்ல சம்பாத்தியமென்றாலும் பைசா புண்ணியமில்லை. எல்லாம் கள்ளச் சாராயம், டாஸ்மாக் கபளீகரம். இவள்தான் நான்கு வீடுகளில் பற்றுப் பாத்திரம் தேய்த்து, ஐந்து வீடுகளில் காலை மாலை தண்ணீர் தெளித்து கோலம் போட்டு…சம்பாத்தியம்.

கோவிந்தனுக்குத் தொழிலில் சரியான வருமானம் வரவில்லையென்றால் அமுதசுரபி மனைவி.

“சொர்ணா ! சொர்ணா!” – இவளைப் பிடிப்பான்.

“என்ன?”

“இடுப்புத் துணியில எவ்வளவு வைச்சிருக்கே?”

“என்கிட்ட ஏது?”

“உன்கிட்ட இல்லேன்னா உலகத்துலேயே இல்லே” – …சடக்கென்று இவள் முந்தானையைப் பிடித்து இழுப்பான்.

அது கழல இவள் பதறிப் பிடிப்பாள்.

‘கொடுக்க மறுத்து இறுக்கிப் பிடிக்கிறாள்!’ நினைப்பு அவனுக்கு வரும்.

“அடி நாயே!” – பிடியை விடாமல் ஓங்கி ஒரு உதை விடுவான்.

“அம்மா ..ஆ!” – சுருண்டு விழுவாள்

முந்தானை முடிச்சில் காசு இருந்தால் அவன் கண்கள் பிரகாசிக்கும். சாராயத்தேவைக்குச் சரியாய் இல்லையென்றால் “அட பிச்சைக்கார நாயே!” – மறுபடியும் ஒரு எத்துவிட்டுவிட்டு சட்டிபானைகளை உருட்டுவான். கிடைப்பதைச் சுருட்டுவான்.

“வந்து பேசிக்கிறேன்!” – எச்சரித்து விட்டுச் செல்வான். அவனுக்கு மனைவி மக்கள் பசி பட்டினியாய்க் கிடப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. சாராயம் குடிக்க வேண்டும் வீட்டில் வந்து ரகளை நடத்த வேண்டும். மனைவியை அடி உதை பின்ன வேண்டும். இரவானால் இவள் வீட்டில், “ஐயோ! அம்மா!” கூக்குரல்தான்.

“பாவிப்பய ! செத்துத் தொலைஞ்சாலாவது ரெண்டு நாள் துக்கம் கொண்டாடிட்டு சம்பாதிச்சோமா புள்ளைங்களுக்குப் பொங்கிப் போட்டு சாப்பிட்டோமான்னு புண்ணியவதி நிம்மதியாய் இருப்பாள்!” – பக்கத்து வீட்டு பங்கஜம் வாய்விட்டே வேதனை விசனப்படுவாள்.

சொர்ணாவின் ஏங்கல் தாங்கலுக்கு இவள்தான் உதவி ஒத்தாசை. சொர்ணா கேட்காமலேயே செய்வாள். கேட்டும் செய்வாள். பங்கஜத்திற்கு இவள் மேல் மகள் பாசம். சொர்ணாவிற்கு அடி விழுந்தால் அவளுக்கு அடி வயிற்றில் வலி வரும். பங்கஜம் பெண்ணைப் பெற்றவள் அதையும் பாதி வயசிலேயே வாரிக் கொடுத்தவள் வலி வராமல் என்ன செய்யும் ?

கோவிந்தனும் ஒரு நாள் காணாமல் போனான். காலை சென்றவன் இரவு திரும்பவில்லை. நேரம் ஆக ஆக…’எங்கே குடிச்சிட்டு குப்புற கெடக்கோ தெரியலையே!’ சொர்ணா கவலைப் பட்டாள். அடுத்த நாள் பகல் ஏற ஏற…’கள்ளச் சாராய கேஸ் எந்த போலிஸ்காரனாவது புடிச்சிக்கிட்டுப் போயிட்டானா?’ – விசனப் பட்டாள். மறாவது நாளும் வராமல் போக…‘எங்காவது ஆக்சிடெண்ட் ஆகி அனாதைப் பொணமா கெடக்கா?’ – தேடினாள்.

“அட! சனியன் தொலைஞ்சிதுன்னு விட்டுத் தள்ளுவியா?” – பங்கஜம் சொல்லியும் கேட்கவில்லை. அவன் வாடகைக்கு ரிக்ஷா எடுக்கும் இடத்திற்குச் சென்றாள். விசாரித்தாள்.

“ராத்திரி கோவிந்தன் ரிக்ஷா விட்டுப் போனதோட சரி. எடுக்க வரலையே!” – உரிமையாளர் சொன்னார்.

நாலாம் நாள்தான் குட்டு உடைந்தது.

“சொர்ணா! உன் வூட்டுக்காரன் எவளோ ஒரு ஆட்டக்காரியைப் புடிச்சிக்கிட்டுப் போயிட்டானாம்.!’ – கடைசி வீட்டு கோமளம் வந்து சொன்னாள்.

“அது சைக்கிள் ஓட்டி வித்தைக் காட்டுற கூட்டமாம். அதுல ஒருத்தி ரெக்கார்ட் டான்ஸ் ஆடினாளாம் உன் புருசன் அவளை இழுத்துக்கிட்டு ஓடித்தான் அந்த கூட்டத்துப் பொழப்புக்கே மண்ணையள்ளிப் போட்டுட்டானாம்!“ – பங்கஜம் விபரம் அறிந்து சேதி சொன்னதும் இவள் ஆடவில்லை அசையவில்லை.

“விட்டுதுடி உனக்கு திருநள்ளாறு சனி!” – அவள் தேற்றின பிறகுதான் இவளுக்குள் கொஞ்சம் சாந்தம் வந்தது.

மணிமொழி, மணிகண்டன் அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகச் சென்றார்கள். சொர்ணாவிற்கும் சம்பாதித்தோமா பிள்ளைகளுக்கு நிம்மதியாய் பொங்கிப் போட்டோமா வாழ்க்கை. காலங்கள் ஓட….சொர்ணாவிற்கு எந்த வீட்டிலும் நல்ல பேர். இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை.

“சொர்ணா! ஒரு சேதி” – பங்கஜம்தான் ஒரு நாள் இவளை நெருங்கி வந்தாள்.

“என்னக்கா?”

“உனக்கு ஒரு நல்ல வேலை. எனக்கு சரியாப் படுது உனக்கு எப்புடியோ?“

“விபரம் சொல்லுக்கா?”

“நீ குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் முடிச்சிட்டியா?”

“பண்ணலை ஏன்?”

“அப்போ உன் கஷ்டம் தீர நல்ல வழி.”

புரியாமல் பார்த்தாள்.

“கஷ்டமான வேலை இல்லே சுலபமான வேலை. வயித்துல புள்ள வாங்கி வளர்த்து பெத்து குடுக்கனும்”.

“அக்கா!”

“ஏன்டி அலர்றே ? தப்பான பாதை இல்லேடி சரியான வழி!”

“…..”

“குழம்பாதே! ஆம்பளைத் தொடாம, தப்புத்தண்டா நடக்காம, வயித்துல புள்ள வாங்கி பெத்துக்க வழி இருக்காமே!…அந்த வழி. கருவை ஊசி வழியா கர்ப்பப்பையில வைப்பாங்களாம். ஒரே சிரமம் பாசம் வைக்காம பத்து மாசம் சுமந்து பெத்து எடுத்துக் குடுத்துத் திரும்பனும்.”

‘வாடகைத் தாய் முறை!’ சொர்ணாவிற்குப் புரிந்தது,

இவள் கொஞ்சம் படிப்பாளி. ஒன்பதாம் வகுப்பைத் தொட்டவள். அதனால் வேலைகளுக்குச் செல்லும் வீடுகளில் நேரம் இருந்தால் கையில் கிடைக்கும் வார தின…என்று எல்லா ஏடுகளையும் புரட்டுவாள். ஆகையால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளெல்லாம் தெரியும்.

மேலை நாடுகளில் நடக்கும் வாடகை தாய் முறை. இப்போது நம் நாட்டிலும் நடைமுறை – சொர்ணாவிற்குத் தெளிவாகத் தெரிந்தது.

பங்கஜம் தொடர்ந்தாள், “தெரியாத இடமில்லே. நான் வேலை பார்க்கிற வீடு. பங்களா மாதிரி இருக்கும். காசு பணத்துக்குப் பஞ்சம் கெடையாது. ரெண்டு கம்பெனிக்கு மொதலாளி. அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, மாமனார், மாமியார் எந்த பிக்கல் பிடுங்களும் கெடையாது. புருசன் பொஞ்சாதி தனிக்கட்டை. ஒரு கொறையும் கெடையாது. குழந்தை மட்டும் இல்லே. பண்ணாத வைத்தியம் வேண்டாத தெய்வம் இல்லே. ஒரு பலனுமில்லே. தத்து எடுக்கவும் இஷ்டமில்லே. இப்புடி நேரடியாப் பெத்துக்க ஆசைப்டுறாங்க.” – நிறுத்தினாள்.

சொர்ணா மௌனமாக இருந்தாள்.

“புள்ளையப் பெத்து அவுங்க கையில குடுக்கிறவரைக்கும் அங்கே இங்கே நகராம அவுங்க சொல்படி கேட்டு அவுங்க கண்காணிப்புலேயே இருக்கனும். அங்கே பக்கத்துல இருக்கிற அவுட் ஹவுசுக்குக் குடும்பத்தோட குடி போகனும். புள்ளைக் குட்டி பராமரிப்பு, படிப்பு, சாப்பாட்டு செலவெல்லாம் போக மாசம் அஞ்சாயிரம் சொளையா சம்பளம். தினசரியில விளம்பரம் குடுத்து நல்ல பொம்மனாட்டியா தேர்வு செய்யனும் சொந்த பந்தத்துல தேடனுமெல்லாம் யோசனை கெடையாது. கௌரவக் குறைச்சல் பின்னால சிக்கல்லாம் வரும்ன்னு யோசனை பண்றாங்க. காதும் காதும் வைச்சா மாதிரி இப்புடி பெத்து சொந்த புள்ளையா வெளிக்காட்டிக்னும்ன்னு ஆசைப்படுறாங்க. அதனால என்னைக் கூப்பிட்டு இது ரகசியம்ன்னு விசயத்தைச் சொல்லி கொஞ்சம் அழகா நாகரீகமான பொண்ணு வேணும் ஏழையா இருக்கனும், கஷ்டப்படுற குடும்பமா இருக்கனும்ன்னு சொன்னாங்க. எனக்கு சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்துது.” – முடித்தாள்.

சொர்ணாவிற்கு, ‘இது சரி வருமா?‘ – யோசனை ஓடியது,

“இந்த வேலையும் சட்டுன்னு கெடைக்கும்ன்னு நெனைக்காதே! மொதல்ல அவுங்களுக்கு உன்னைப் பிடிக்கனும். அடுத்து நீ ஆரோக்கிமா இருக்கியா, நல்லா குழந்தை பெத்துத் தர உன் கர்ப்பப்பை சரியா இருக்கான்ல்லாம் அவுங்க குடும்ப டாக்டர் சோதனை செய்வார். அவர் சரின்னு சொன்னாத்தான் உனக்கு வேலை” – என்றாள்.

இவளுக்கு இது சரிபடும் போல தெரியவில்லை. ‘இப்படி எப்படி குழந்தை பெறுவது?’ – நினைக்கவே அருவருப்பாய் இருந்தது,

“சொர்ணா! இதுக்கு நீ சம்மதிச்சா உன் கஷ்டத்துக்கெல்லாம் விடிவு காலம். உன்னோட கஷ்டம் நீ நல்லா இருக்கனும்ன்னு ஆசைப் படுறேன். நீயும் உன் குழந்தைங்களும் ஒரு வருசத்துக்காவது நல்ல சோறு நல்ல கறி திங்கனும்ங்குறது என் விருப்பம்.” – பங்கஜம் தன் பெரிய மனதைத் திறந்து காட்டினாள்.

‘தன் மீது எவ்வளவு அக்கரை!‘ – இவளுக்கு அவளை நினைக்க நெக்குருகியது.

“உடனே பதில் சொல்ல வேணாம். நல்லா யோசிச்சு நாளைக்குச் சொல்” – சொல்லிவிட்டு அகன்றாள்.


சொர்ணாவிற்கு இரவு துாக்கம் பிடிக்கவில்லை. நிறைய யோசனைகள். ஓடிப் போன கணவன் நாளைக்குத் திடீரென்று முளைத்து ‘தேவடியா நாயே !’ உதைத்தால் ?…. நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.

ஓடிப் போனவன் வருவானா. புதிதாய்த் தொட்டவள் விடுவாளா. வந்தாலும் தன்னைத் தட்டி கேட்க என்ன நியாயம் ?

கழுத்துல கெடக்குடி என் உறவு! என்றால்?

அஞ்சு வருச காலமா பொண்டாட்டி புள்ளைக்குட்டிங்க இருக்கா இல்லியான்னு நெனைச்சுப் பார்க்க துப்பில்லே. உறவாம் உறவு? கழற்றித் துாக்கி எறிந்தால்? அப்படித்தான் செய்ய வேண்டும்! – முடிவிற்கு வந்தாள்.

திருடவில்லை பொய் சொல்லவில்லை. தப்பு செய்யவில்லை. வீட்டு வேலை செய்வது போல இதுவும் ஒரு வேலை. செய்தாலென்ன மனசுக்குள் மெல்ல துணிவு எட்டிப் எட்டிப் பார்த்தது. பின் அதுவே விஸ்வரூபமெடுத்து…

மறுநாள் சரி சொன்னாள்.

பங்கஜம் சொர்ணாவை பங்களாவிற்குக் கூட்டிச் சென்றாள். சுதாகரன், கீதாவிற்கு இவளைப் பார்த்ததும் பிடித்துப் போயிற்று. அடுத்து மருத்துவர் பரிசோதனையிலும் ஜெயித்தாள்.

“டாக்டர் கறார் பேர்வழி. இதோ பார்ம்மா. நீ வயித்துல சுமக்கப் போறது சாதாரண குழந்தை இல்லே. பல கோடி சொத்துக்கு வாரிசு. குழந்தை எந்த வித குறையுமில்லாம ஆரோக்கியமா பொறக்கனும்ன்னா முதல்ல உன் மனசுல உள்ள கவலை, துக்கம் எல்லாத்தையும் துாக்கி எறியனும். அடுத்து ஒரு முக்கியம் உனக்கு குழந்தை மேல கொஞ்சம்கூட பாசம் நேசம் கூடாது. தப்பித் தவறி ஒரு அசம்பாவிதம் நீ இந்த பிரசவத்துல உயிரிழக்க நேரிட்டால் நஷ்ட ஈடு உண்டு தனித் தொகை. உன் வாரிசுங்களைப் பராமரிச்ச ஒப்படைப்போம். அதெல்லாம் எழுத்து மூலமா நடக்கும். சம்மதமா?“ – கேட்டார்.

சம்மதித்தப் பின் கையெழுத்து இடமாற்றம் இவளைக் கவனித்துக் கொள்ள முத்து லட்சுமி.

சில புரியாத இளசுகள்தான் “என்ன சின்ன வீடா?”- கேலி. மத்தப்படி எந்தவித கஷ்டமுமில்லை.

சொர்ணா நினைவுகளை முடித்தாள்.

அத்தியாயம்-3

முத்துலட்சுமி சைக்கிளில் ஒயர் கூடையை மாட்டிக்கொண்டு காய்கறி மார்க்கெட்டை நோக்கி மிதித்தாள்.

மனசுக்குள் என்னென்ன காய்கறிகள் வாங்குவது என்று பட்டியல், யோசனை. ஞாயிறு ஆடு. புதன் கோழி. செவ்வாய், வெள்ளி சாம்பார். திங்கள், சனி மீன். சைவ நாட்களில்தான் என்ன குழம்பு, பொரியல், கூட்டு வைப்பதென்று சங்கடம்.

இவளும் கொஞ்சம் படித்தவள். சொர்ணா வயசு. வரதட்சணைக் கொடுமை. தகப்பன் வீட்டில் வாழாவெட்டியாய் வந்து இருந்தவளை இழுத்துப் போட்டவளும் பங்கஜம்தான்.

நல்லவர்களையெல்லாம் நல்ல இடத்தில் சேர்த்த திருப்தி உழைத்தது போதுமென்று ஓய்வெடுத்துக் கொண்டு விட்டாள்.

முத்துலட்சுமியின் முழு கவனமும் சொர்ணாதான். இவள் வேலையில் சேர்ந்த அன்றே கணவன் மனைவி எச்சரித்து விட்டார்கள்.

“இதோ பார். நீ சொர்ண்வுக்குத்தான் வேலைக்காரி. அவள் சொல்படி கேட்கனும். அவளுக்கு நல்லது கெட்டது செய்யனும். எங்களுக்கு நீ பத்துப் பாத்திரம் தேய்ச்சி குடுத்தா போதும்.” – சொல்லிவிட்டார்கள். சுதாகரனுக்கு என்றைக்கும் மனைவி கையினால்தான் சமைத்துச் சாப்பிட விருப்பம்.

நாயாய்ப் பொறந்தாலும் நல்ல நேரத்துல பொறக்கனும். வேலை செய்ஞ்சாலும் இப்படிப்பட்ட நல்ல மனசு பணக்காரங்ககிட்ட வேலை செய்யனும் முத்துலட்சுமிக்கு மட்டுமில்லாமல் அவள் தாய் தகப்பன் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

முத்துலட்சுமிக்குச் சமையலில் ரொம்ப உற்சாகம். தினம் மார்க்கெட்டிற்கு வந்து புது காய்கறிகளில் சமைப்பது அலாதியானப் பிரியம்.

முத்துலட்சுமி காய்கறி வாங்கித் திரும்பும்போது இன்றைக்கும் அந்த இளைஞன் கண்ணில் பட்டு தன்னைக் கவனிப்பது தெரிந்தது.

நான்கு நாட்களாக தன்னைத் தொடர்கிறான். ‘கெட்ட ஆசையா?’ நினைக்கும் போதே இவளுக்குச் சொரக்கென்றது. வேகமாக சைக்கிளை மிதித்தாள்.

அதற்குள் அவனே இவள் முன் வந்து, “ஒரு நிமிசம்!” – சொல்லி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.

இவளுக்கு அவனைத் தாண்டிப் போக முடியாத நிலை. உதறலுடன் நின்றாள்.

“உன்கிட்ட தனியா பேசனும்.”

“எ…எதுக்கு ?” – பயம் வேர்த்தது.

“பயப்படாம அப்படி ஒதுக்குப்புறமா வந்தா சொல்றேன்.” – சாலையோரம் உள்ள மரத்தடியை நோக்கிச் சென்றான்.

முத்துலட்சுமிக்குத் துணிவு வந்தது. சைக்கிளை விடாமல் தள்ளிக் கொண்டு சென்றாள்.

“நான் யார்ன்னு சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி. கீதா வீட்டுலதானே உனக்கு வேலை?” – கேட்டான்.

“அ…ஆமா”

“அப்படின்னா உனக்கும் எனக்கும் நல்ல நேரம்…!” புரியாமல் பார்த்தாள்.

“அதாவது நான் சொல்றபடி கேட்டா உனக்கு நல்ல நேரம். நான் சொன்னது நடந்தா எனக்கு மகிழ்ச்சி”

இவளுக்குள் பயப் பந்து உருண்டது,

”நான் ராஜசேகரன். சுதாகரன் மனைவி கீதாவோட முன்னாள் காதலன்!“ – இடியை இறக்கினான்.

முத்துலட்சுமி அவனை அரண்டு பார்த்தாள்.

“நான் சொல்றது நிஜம். ஆறு வருசத்துக்கு முன் நானும் கீதாவும் ஒரே கல்லுாரியில படிச்சோம். உயிருக்குயிராய் நேசிச்சோம். சுதாகரன் வலுவான வரனாய் வந்ததும் மனசு மாறி அவனைக் கலியாணம் கட்டிக்கிட்டா.”

இவளால் நம்பவே முடியவில்லை.

“நீ நம்பினாலும் நம்பலைன்னாலும் இது நிசம் சத்தியம்! இப்போ எனக்கு ஒரு சின்ன உதவி.” – நிறுத்தினான்.

‘என்ன?’ என்பது போல் ஏறிட்டாள்.

“கீதா செய்த துரோகத்துக்கு நான் அவளைப் பழி வாங்கனும். அதுவும் உன் வழியா முடிக்கனும்.” – அடிக்கண்ணால் பார்த்தான்.

முத்துலட்சுமிக்குத் துாக்கிவாரிப் போட்டது. ஆடிப் போய் பார்த்தாள்.

“சொர்ணா கருவை நீ கலைக்கனும். கீதா சாகிறவரைக்கும் வாரிசு கூடாது. ஏங்கி நொந்து நுாலாகி சாகனும். கருவைக் கலைக்கிறது ரொம்ப சுலபம். சாப்பாடு, குடிக்கிறதுல ஏதாவது மாத்திரை மருந்து கலந்து கொடுத்தா கலைஞ்சிடும். திடீர் அதிர்ச்சி, பயம் காட்டினாக்கூட வெளியேறிடும். வழுக்கியும் விழ வைக்கலாம்.”

முத்துலட்சுமிக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

“உனக்கு நல்ல மனசு. எசமான விசுவாசம் நீ செய்யுற வேலைக்கு வாங்குற சம்பளம் அதிகம். இந்த சம்பளத்துக்கு நீ துரோகம் செய்யக் கூடாது, செய்ய முடியாது. ஆனா அந்த சம்பளத்தைவிட உனக்கு அதிக சம்பளம் தர்றேன். மொத்தத் தொகை ஒரு லட்சம். முன் பணம் இருபத்தஞ்சாயிரம். சரியா செய்ஞ்சு முடிச்சா மீதி.”

இவள் ஆடவில்லை அசையவில்லை. பணத்தைக் கேட்டு முகம் மலரவில்லை. “முத்து! நீ என்னைப் பத்தி கீதா சுதாகரன்கிட்ட போட்டுக் குடுத்து மாட்டிவிடலாம்ன்னு கனவு காணாதே. உன்னால முடியாது. இந்த வேலையை என்கிட்ட நீ முடியாதுன்னு மறுப்பு சொல்லவும் முடியாது.”

‘எப்படி?’ – என்பது போல் திகைப்பாய்ப் பார்த்தாள்.

”நான் இந்த காரியத்துல இறங்குறதுக்கு முன்னாடி உன்னைப்பத்தி தீர விசாரிச்சுட்டேன். பெத்த அப்பன் ஒரு குடிகாரன். அம்மா நோயாளி. உன் குழந்தை மதிய சோத்துக்குப் பள்ளிக்கூடம் போறா. உன் பதினாறு வயசு தங்கச்சி எல்லாருக்கும் பொங்கிப் போட்டு வீட்டுல இருக்கா.”

‘அடப்பாவி! ஜாதகத்தையே கையில வைச்சிருக்கானே!‘ – முத்துலட்சுமிக்குள் திகைப்பு வந்தது.

“உன் அப்பனுக்கு சாராயத்துல துளி விஷம் கலந்தா போதும். மண்டையைப் போட்டுடுவான். கள்ளச் சாராய சாவுன்னு கேஸ் திரும்பிடும் எனக்குப் பாதிப்பு இல்லே. பள்ளிக்கூடம் விட்டு வர்ற உன் குழந்தையை ஆத்துல, குளத்துல வீசலாம். அதுவும் காலி. யார் வீசனாங்களோ தவறி வழுந்திருக்கலாம்ன்னு தப்பிக்கலாம். அடுத்து உன்னைக் கற்பழிக்கலாம். நீ கவலைப்படலைன்னாலும் வயசுக்கு வந்த உன் தங்கை படு சூப்பர்.” – கண் சிமிட்டினான்.

முத்துலட்சுமிக்கு உலகம் தலைகீழாய் கவிழ்வது போலிருந்தது.

“இப்ப சொல்லு. உன்னால என்னைக் காட்டிக் குடுக்க முடியுமா? நான் சொல்றதை முடியாதுன்னு மறுக்க முடியமா?” – எகத்தாளமாகப் பார்த்தான்.

‘கண்டிப்பாய் முடியாது!’ – இவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது.

“அப்புறம் முத்துலட்சுமி! நீ கருவைக் கலைக்கிறாப் போல நடிச்சு ஏமாத்த கூடாது. எனக்கு விசயம் தெரிஞ்சா உன் குடும்பமே குளோஸ். அடுத்து ரொம்ப முக்கியம். சொர்ணா வயித்துல வளர்ற கருவுக்குத்தான் ஆபத்து, சேதம் வரனும். தப்பித் தவறி சுமக்கிறவுளுக்கு எந்த பாதகமும் வரக்கூடாது, பாவம் ஏழை. நான் ரொம்ப நல்லவன் முத்து, கீதா தான் எனக்கு எதிரி. அவதான் கஷ்டப்படனும். மத்தவங்க கூடாது”.

‘இவன் நல்லவனில் கெட்டவனா?‘ – மனசுக்குள் கொக்கிப் போட்டாள்.

“நான் நல்லவன்தான் கெட்டவனா மாறிட்டேன். ஏன்? பாதிப்பு!” – அவனே சொன்னான்.

“…..”

“நீ மறுபடியும் உன் புருசனோட சேர்ந்து வாழனும்ங்குற நல்ல மனசு எனக்கு இருக்கு. அதனால தான் இந்த வேலைக்குக் கூலி ஒரு லட்சம் வைச்சேன். வந்தா இந்த தொகையோட வா இல்லேன்னா வராதேன்னு துரத்தி அடிச்சான் பாரு உன் புருசன் அவன் முகத்துல நீ இதை விட்டெறிஞ்சு சந்தோசமா வாழனும்” என்றவன் அவளே எதிர்பாராத வண்ணம் இவள் கண்ணுக்கெதிரில் இரண்டாயிரம் ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து அதில் பதிமூன்றை எண்ணி அவள் காய்கறி கூடையில் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

முத்துலட்சுமிக்கு என்ன செய்வதென்று தெரியாத வியப்பு, திகைப்பு, அதிர்ச்சி.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *