கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 7,232 
 
 

(2019ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

யாருக்குத்தான் மரண பயம் இல்லை. எவருக்குத்தான் பண ஆசை இல்லை. முத்துலட்சுமிக்கு தொற்றியது.

பணத்தை எடுத்து இடுப்பில் வைத்து மறைத்து சைக்கிளை வேகமாக வீடு நோக்கி விட்டாள்.

அம்மா அப்பா தங்கையெல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்துவிட்டு தன் பெட்டியில் யாருக்கும் தெரியாமல் பணத்தை வைத்துவிட்டு திரும்பினாள்

‘வழியில் எப்படியெல்லாம் சொர்ணா கருவிற்கு ஆபத்து ஏற்படுத்தலாம்!’ என்று மனசுக்குள் யோசனை.

மூன்று மாதக் கரு. அன்னாசிப் பழம், பப்பாளி பழம் பப்பு வேகாது. இரவு படுக்கப் போகும் போது குடிக்கும் பாலில் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி கரைத்து கொடுத்தால் வேலை சுலபம். இருந்தாலும் மூன்று மாதமென்பது கடினம். வேறு என்ன செய்யலாம் ? மூளையைக் கசக்கிக் கொண்டே சென்று வாசலில் சைக்கிளை நிறுத்தினாள்.

“ஏன் லட்சுமி இவ்வளவு லேட்டு ?”- சொர்ணா கேட்டாள். காரணம் வீட்டில் அவளுக்கு இவள்தான் பேச்சு, துணை

“எப்போதும் போல வீட்டுக்குப் போனேன். கொஞ்சம் நேரமாயிடுச்சு.” – பதில் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள்.

“இன்னைக்கு வெள்ளிக் கிழமை சாம்பாரா ?”- சொர்ணா கேட்டுக் கொண்டே அவள் பின்னால் சென்றாள்.

“ஆமாம் !“ – சொன்ன முத்துலட்சுமி, “இன்னைக்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ், கத்தரிக்காய் சாம்பார், கொத்து மல்லி துவையல்“ – பட்டியல் போட்டாள்.

“அதையே செய்!” – அவளைவிட்டு சொர்ணா கொல்லைப் பக்கம் சென்றாள்.

பின்னாலும் கொரியன் புற்கள். கண்ணுக்கெட்டிய துாரத்தில் காம்பௌன்ட் சுவர். அதைத் அதைத் தாண்டி தாண்டி……கவனித்த முத்துலட்சுமிக்கு மூளையில் பளீர் வெளிச்சம் அடித்து முகம் பிரகாசித்தது.

‘வரட்டும்! இப்போதே சாம்பிராணி போட்டு வேலையை ஆரம்பித்தால்தான் இரவு தீபாரதனைக் காட்டலாம்!’ – முடிவு செய்து கொண்டே சமையல் வேலைகள் கவனித்தாள். மனசுக்குள் திட்டங்கள் வகுத்தாள். சாப்பிட்டப் பிறகுதான் இருவரும் சேர்ந்து உட்காரும் வாய்ப்பு கிடைத்தது, முத்து லட்சுமி ஆரம்பித்தாள்.

“சொர்ணா!” – அழைத்தாள்.

“என்ன?”

“காலையில நான் ஒரு விசயம் கேள்விப் பட்டேன். சந்தேகப்பட்டது சரியா இருக்கு.”

“என்ன கேள்விப்பட்டே, சந்தேகப்பட்டே?“

“எனக்கு முன்னால உனக்கு இங்கே வேலை செய்ஞ்சவ பேரென்ன?“

“ராசாத்தி!. அவளுக்கென்ன?”

“எதுக்குத் திடீர்ன்னு வேலையை விட்டு நின்னா?“

“உன்னை போல யோக்கியமா நடக்கலை அரிசி பருப்புல கை வைச்சா தூக்கிட்டாங்க.”

“அதெல்லாம் நடிப்பு. உள் விசயம் வேற சொன்னா நீ பயப்படுவே.”

“பயப்படமாட்டேன் சொல்லு?”

“அவளுக்கு உசுர் மேல ஆசை. வேலையை விட வேண்டிய நிர்பந்தம். விட்டுப் போறேன்னாலும் விடமாட்டீங்க. காரணம் சொன்னாலும் நம்பமாட்டீங்க. சண்டை போட்டு நிக்கிறதும் சரியில்லே. திருடின்னு பேரெடுத்தா கண்டிப்பா யாரும் நிறுத்திடுவாங்க. திட்டம் போட்டு நின்னுட்டாள்!“

“என்ன புதுக் கதை?” – சொர்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“புதுக் கதை இல்லே. நடந்த கதை.”

“சரியாய்ச் சொல்லு ?”

“இங்கே பேய் உலாவுறதைப் பார்த்திருக்கா. பயந்துகிட்டு போயிட்டா.”

கேட்ட சொர்ணாவிற்குச் சட்டென்று முகம் வெளிறியது.

“ஆமாம். பின்னால இருக்கிற கல்லறையிலேர்ந்து இங்கே பேய் வருதாம்!“ – குரலைத் தாழ்த்திச் சொன்னாள். அதுவே பயமாக இருந்தது.

தொடர்ந்தாள், “ராத்திரி நேரத்துல நானே ரெண்டு மூணு தரம் பார்த்திருக்கேன். ஆனா விசயம் இப்புடின்னு தெரியாது. கறுப்பா சன்னலுக்கு அந்தண்டை போகும். அடுப்படியில கூட சமயத்துல பாத்திரம் பண்டம் உருள்ற சத்தம் கேட்கும். எலி, பூ னையோன்னு பூ நெனைப்பேன். ஆனா பேய் வேலைன்னு இன்னைக்குத்தான் தெரியும்.“ – நிறுத்தினாள்.

கேட்க கேட்க அடிவயிற்றில் பயம் எழுந்து சொர்ணாவின் முகம் வெளுத்தது,

தொடர்ந்தாள், “இதனாலதான் கீதாம்மாவுக்குக் கூட குழந்தை இல்லேன்னு கேள்வி. பின்னே!…ஒரு குறையும் இல்லாதவங்களுக்கு குழந்தை இல்லேங்குறது எப்படி சாத்தியம் ? இங்கே புள்ளைதாச்சியா இருக்கிறவங்களுக்கும் ஆபத்தாம். பிரசவத்துல தாயும் புள்ளையும் சேர்ந்து செத்துப் போவாங்களாம்! இதனாலதான் சொந்த பந்தத்துல ஆள் தேடாம சோதனைப் பண்ணிப் பார்க்க பணத்தை வீசி உன்னைக் கொண்டு வந்திருக்காங்க.” – முத்துலட்சுமி இவளை எந்த அளவிற்குப் பயமுறுத்த முடியுமோ அந்த அளவிற்குச் சொன்னாள்.

இந்த பயம் இரவில் துாக்கம் வராது. மனம் தடக் தடக்கென்று அடிக்கும். சின்ன சத்தம் கேட்டால்கூட மனதில் சொரேரென்ங்கும்.. காற்றில் ஏதாவது அசைந்தாலும் பேயோ உலுக்கும். அப்போது பல்லி பூரான் எது விழுந்தாலும் வீலென்று கத்தி கரு கலைந்து இரத்தம் வெளியேறி…

“இந்த விபரமெல்லாம் உனக்கு யார் சொன்னா லட்சுமி? ” கேட்கும்போதே சொர்ணா குரலில் நடுக்கம் தொற்றி இருந்தது,

‘மருந்து சரியாக வேலை செய்கிறது’ – முத்துலட்சுமிக்குள் சின்னதாக சந்தோசம் முளைத்தது.

“காலையில மார்கெட்டுக்குப் போற வழியில ராசாத்தியோட தோழி ஒருத்தியைப் பார்த்தேன். போட்டு உடைச்சாள்.” முத்து கற்பனையாய்ச் சொன்னாள்.

‘பங்கஜம் அக்காவா இப்படி நம்பிக்கை துரோகம் செய்வாள் ! படுகுழியில் தள்ளுவாள்?!’ – சொர்ணாவால் நம்ப முடியவில்லை. மனம் ஏற்கவில்லை.

“உன் கஷ்டம் அதுக்குப் பொறுக்கலை. அதே சமயம் உனக்கு உதவவும் ஆசை. நீ செத்தாலும் பின்னால புள்ளைங்க நல்லா இருக்கனும்ங்குறதுக்காக தாய் இறந்தா நஷ்ட ஈடாய் ஒரு தொகை பேசி இருக்கும். அக்ரிமென்ட்ல கையெழுத்தும் வாங்கி இருக்கும். நீ ஏதாவது பத்திரத்துல கையெழுத்துப் போட்டியா?”

“போட்டேன்!” – சொர்ணா ஒத்துக் கொண்டாள்.

“அதுல என்ன எழுதி இருந்துது படிச்சியா?”

“எல்லாம் இங்கிலீசுல எழுதி இருந்துது. மாசம் அஞ்சாயிரம் சம்பளம். குழந்தைகளோட இங்கே குடி வரனும். செத்தா நஷ்ட ஈடு அம்பது லட்சம்ன்னு சொன்னாங்க. கையெழுத்துப் போட்டேன்.”

“இதுதான் சமாச்சாரம்!” – முத்துலட்சுமி முற்றுப் புள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.

சொர்ணா பிரம்மைப் பிடித்தவளாய்ப் போனாள். வசமாய் வந்து மாட்டிக் கொண்டோம். நினைத்தாள்.

“ஏம்மா உம்ன்னு இருக்கே?” – மணிகண்டன், மணிமொழி வந்து கேட்டதிற்கும் சரியான பதில் இல்லை. சூரியன் மறைய மறைய திக் திக்கென்றது. ராத்திரி பொழுது எப்படி போகும் நினைக்க திகிலாய் இருந்தது. தனக்கு ஏதாவது ஆனாலும் பரவாயில்லை மணிகண்டன் மணிமொழிக்கு ஒன்றும் ஆகக் கூடாது வேண்டினாள். இரவு குழந்தைகளுடன் சேர்ந்து படுத்தாள். அப்படியும் திருப்தி இல்லாமல், “முத்து! நீயும் வந்து என்கூட படுத்துக்கோ” – அழைத்தாள். அவளும் வந்து படுத்தாள்.

ஆனாலும் சொர்ணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை. கண்ணை மூடினாலும் இருட்டு திறந்தாலும் இருட்டு. தவித்தாள்.

தடக் தடக் அவள் இதய ஒலி அவளுக்கே கேட்டு பயத்தை அதிகப்படுத்தியது.

மணி பன்னிரண்டைத் தாண்டிய நேரம்…தெரு விளக்குகள் வெளிச்சத்தில் சன்னல் ஓரம் ஒரு உருவம் அசைந்து மறைந்தது.

“வீல்…!” கத்தினாள்.

அத்தியாயம்-5

சொர்ணா கண்விழிக்கும் போது கட்டிலில் படுத்திருந்தாள். வீடு ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. கட்டிலைச் சுற்றி சுதாகரன், கீதா, மணிமொழி, மணிகண்டன், முத்துலட்சுமி.

“என்ன சொர்ணா நடந்தது?” – கீதாதான் வாயைத் திறந்து கேட்டாள்.

“பே…பேய்…பேய்….” – மலங்க மலங்க விழித்தாள்.

“பேயுமில்லே பிசாசுமில்லே. ராத்திரியில ராத்திரியில கூர்க்கா எப்போதும் ரவுண்ட்ஸ் வருவான். இன்னைக்குப் பார்த்து பயந்துட்டே.” – சுதாகரன் நடந்ததைச் சொன்னான்.

சொர்ணா நம்ப முடியாமல் கீதாவைப் பார்த்தாள்.

அவள், “ஆமாம்!” -தலையசைத்தாள்.

சொர்ணாவிற்கு இன்னும் நம்பிக்கை இல்லை.

“ஆமாம்மா. நீ கத்தினதும் நாங்களும் முழிச்சுட்டோம். கூர்க்கா மாமாதான் இங்கே மொதல்ல ஓடி வந்து கதவைத் கதவைத் தட்டினாரு அடுத்துதான் ஆண்ட்டியும் அங்கிளும் வந்தாங்க.” – மணிமொழி தான் பார்த்ததைச் சொன்னாள்.

முத்துலட்சுமி பேசவில்லை. மௌனமாக இருந்தாள்.

டாக்டர் சந்திரகேரன் வந்தார். எல்லாரும் கூடி இருப்பதைப் பார்த்து, “நகருங்க. என்ன நடந்தது?” கேட்டார்.

“ஒன்னுமில்லே டாக்டர் சொர்ணா ஏதோ பயத்துல கத்தினா. அதனால குழந்தைக்கு ஏதாவது ஆபத்து ஆகியிருக்குமோன்னு நான்தான் உங்களைப் போன் செய்து வர வழைத்தேன்.” – சுதாகரன் சொன்னான்.

‘அப்பா ! எவ்வளவு ஆர்ப்பாட்டம்!‘ – சொர்ணாவிற்கு மலைப்பாக இருந்தது,

டாக்டர் அவள் அருகில் வந்தார்.

“ஏம்மா ! வயித்துல ஏதாவது வலி இருக்கா?” – வயிற்றைத் தொட்டார்.

“இல்லே டாக்டர்.”

“மயக்கமாகி கீழே விழுந்தியா?”

“இல்லே டாக்டர்.“

“இப்போ மயக்கமா இருக்கா?”

“இல்லே டாக்டர்.”

“வேற ஏதாவது உபத்திரவம் ?”

“இல்லே.”

டார்ச் அடித்து கண்களை விரித்துப் பார்த்தார். கையைப் பிடித்து நாடி பரிசோதித்தார். முகத்தில் திருப்தி வந்தது.

“ஒன்னுமில்லே பயந்திருக்கா அவ்வளவுதான்!” – சொல்லி சென்றார்.

அவர் நகர்ந்ததும், “இனி ஒன்னும் பயமில்லியே?“ – சுதாகரன் சொர்ணாவைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லே.”

“இருந்தா சொல்லு. கேட்ல நிக்காம கூர்க்காவை வாசல்ல கொண்டு வந்து நிக்க வைக்கிறேன்” – என்றான்.

“வேணாம்.”

“அப்போ நிம்மதியா துாங்குறீயா?”

“ம்..ம்” – தலையசைத்தாள்.

அவர்கள் அகன்றார்கள்.

“என்ன முத்துலட்சுமி நடந்துது?” – சுதாகரன், கீதா தலை மறைந்ததும் கேட்டாள்.

முத்துலட்சுமிக்கு உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. மணிமொழி வேறு நடந்தது தெரியும் விழித்துக் கொண்டிருந்ததால் நடந்ததைச் சொன்னாள்.

“அப்போ பேய் பிசாசு?”

“இல்லே.“

“அந்த பொண்ணு பயந்து போனது?”

“இதைப் பார்த்துதான்னு நினைக்கிறேன்.”

சொர்ணாவிற்கு இப்போதுதான் முழு நம்பிக்கை வந்து, முகத்தில் தெளிவு வந்தது.

மணிகண்டன், மணிமொழி ஆளுக்கொரு பக்கம் படுக்க நிம்மதியாக கண்ணை முடினாள்.

நல்ல திட்டம் பாழாகிப் போனதில் முத்துலட்சுமிக்கு ஏகப்பட்ட வருத்தம். படுத்தும் துாக்கம் வரவில்லை.

‘அடுத்து என்ன செய்யலாம்?’ – சிந்தித்தாள்.


காலை எப்போதும் போல் விடிந்தது. சுதாகரன், கீதா அக்கறையாய் வந்து சொர்ணாவை விசாரித்துச் சென்றார்கள். மணிமொழி, மணிகண்டன் ஆட்டோ வருவதற்கு முன்பே வாசலில் போய் நின்று பள்ளிக்கூடம் சென்றார்கள். முத்துலட்சுமி எப்போதும் போல் மார்க்கெட்டிற்குச் சென்றாள். ராஜசேகரன் கண்ணில் பட்டு சேதி கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆளைக் காணவில்லை. திரும்பும் போது வழக்கம் போல் தன் வீட்டிற்குச் சென்றாள்.

அப்பாவைக் காணவில்லை. அம்மாவிற்கு ஆஸ்துமா ரொம்ப இழுப்பாக இருந்தது. தங்கையுடன் உட்கார்ந்து கொஞ்ச நேரம் கவலைப் பட்டாள். குழந்தை சர்மிளாவைப் பள்ளிக்கூடம் சென்று பார்த்து திரும்பினாள். வந்து சமையல் வேலையில் இறங்கினாள்.

சொர்ணாவிற்கு வெறுமனே அமர்ந்திருக்கப் பிடிக்கவில்லை. தண்ணீர் குழாயுடன் ரப்பர் குழாயை இணைத்து தோட்டத்துச் செடிகளுக்கு நீர் பாய்ச்சினாள். குழாயின் முனையை அழுத்திப் பிடித்து பூ ந்துகிள்களாய் கொரியன் புற்களுக்கு மழை பெய்வித்தாள். பங்களாவிலிருந்து பார்த்த கீதாவிற்குச் சந்தோசமாக இருந்தது. இப்படி சின்னச் சின்ன வேலைகள் செய்வதைப் பற்றி அவளுக்கு வருத்தமில்லை. அதிக பளு தூக்காமல் கர்ப்பிணி இப்படி முடிந்தவரையில் வேலை செய்தால் குழந்தை ஆரோக்கியமாய் சுகப் பிரசவம் ஆகும் என்று டாக்டர் அவளுக்குச் சொல்லி இருந்தார்.

சமையல் வேலையை முடித்த முத்துலட்சுமிக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று நேற்று போல மண்டைக் குடைச்சல். தலையை வாரி முடிய தேங்காய் எண்ணெயைத் தொட்ட போது அவளுக்கு அடுத்து செய்வதற்கு வழி கிடைத்தது.

‘வழுக்கி விழுந்தால் வயிற்றில் அடிபடும். கண்டிப்பாய் கர்ப்பம் கலையும்!’ – நினைத்தாள். கொஞ்சம்கூட தன் மீது சந்தேகப்படாமல் எப்படி செய்யலாம்? தீவிர சிந்தனையில் இறங்கினாள்.

கீதா சொர்ணாவிடம் வந்தாள்.

‘தண்ணீர் விட்டது போதும் என்கூட கிளம்பு” – என்றாள்.

“எங்கேம்மா?”

“நான் ஷாப்பிங் போறேன் துணைக்கு வா” – அழைத்தாள். “முத்து! நீயும் வர்றீயா?” – பின்னால் வந்து நின்றவளைக் கேட்டாள்.

“நான் வரலைம்மா. சொர்ணாதான் வீட்டைவிட்டு எங்கேயும் போகாம அடைஞ்சிருக்கு அழைச்சிக்கிட்டுப் போங்க காலாற நடந்தா உடம்புக்கு நல்லது.” – என்றாள்.

சொர்ணாவிற்கும் தின்று தின்று துாங்குவது பிடிக்கவில்லை. எங்காவது வெளியில் சென்று திரும்பினால் தேவலை போல் தோன்றியது. குழாயை நிறுத்திவிட்டு அவுட் ஹவுசிற்குச் சென்றாள். தன் துணிமணிகளில் நல்லதாக உள்ளதை தேடி பிடித்து உடுத்தி முகத்திற்குப் பவுடர் பூ சி வந்தாள். கீதா மாருதியை எடுத்துக் கொண்டு வர…. இருவரும் புறப்பட்டார்கள்.

‘எந்த இடத்தில் எண்ணெயைக் கொட்டினால் சொர்ணா வழுக்கி விழுவாள்?’ – முத்துலட்சுமி ஆராய்ந்தாள்.

வாசல், ஹால், சமையலறை, பாத்ரூம் ஒவ்வொன்றாக பார்த்தாள். பெருச்சாளி வலையில் சுண்டெலி விழுந்த கதையாய் பள்ளிக்கூடம் விட்டு வரும் பிள்ளைகள் விழுந்து களேபரபடுத்திவிட்டால் காரியம் குட்டிச்சுவர். துல்லியமாக நோட்டமிட்டாள்.

சொர்ணா உள்ளே வந்ததும் முதலில் அறைக்குச் சென்று புடவை மாற்றுவாளா, பாத்ரூம் செல்வாளா ஹாலில் கொட்டினால் சரி வருமா? யோசித்தாள்.

எப்படி வந்தாலும் முதலில் ஹாலுக்கு வந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். இங்குதான் கொட்ட வேண்டும் தீர்மானித்தாள்.

எண்ணெய் நடு ஹாலுக்கு வரக் காரணம்? – பிறர் தன் மீது சந்தேகப்படாதிருக்க யோசித்தாள்.

‘தலைவாற எடுத்து வந்தேன் கொட்டிவிட்டது! துடைச்சு சுத்தம் செய்ய மறந்துட்டேன்!’ – சமாளிக்க வேண்டியதுதான். முடிவிற்கு வந்தாள். தன் திட்டப்படி தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து கொட்டினாள். வலையை விரித்து வைத்து காத்திருக்கும் வேடன் போல் காத்திருந்தாள்.


கீதா தா நல்ல பஜாரில் காரை ஓரம் கட்டி நிறுத்தினாள். பெரிய ஜவுளி கடையாய் பார்த்து ஏறினாள். சேலை பிரிவிற்குச் சென்று, “சொர்ணா! உனக்கு நாலு புடவை எடு”. – சொன்னாள்.

கீதா தனக்கோ தன் கணவருக்கோதான் எடுக்கப் போகிறாள் என்று எதிர்பார்த்த சொர்ணாவிற்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

“எனக்கு ஏம்மா?” – துணுக்குற்றாள்.

“நாளைக்கு எனக்குப் பொறந்த நாள் உனக்கு என் பரிசு.”

“அம்மா! நீங்க கட்டிக்காம எனக்கு…”

“நான் எடுத்து வைச்சிருக்கேன். ஒரு மாற்றமா உனக்கு பரிசளிக்கப்போறேன்.”

“அதுக்கு ஏன்ம்மா எனக்கு நாலு புடவை?”

“உன்கிட்ட இருக்கிறதே நாலு புடவை அதைதான் மாத்தி மாத்தி கட்டிக்கிறேங்குறதை இப்பதான் கவனிச்சேன். அது எல்லாம் சரி இல்லே. எடு” – உத்தரவிட்டாள்.

சொர்ணாவிற்குத் தயக்கமாக இருந்தது.

“எடு சொர்ணா. மணிமொழி, மண்கண்டனுக்கும் எடுக்கனும்.”

“அவுங்களுக்கு எதுக்கும்மா?”

“இதுவும் என் பிறந்தநாள் பரிசுதான். தாய் புதுசு கட்டிக்கிட்டா புள்ளைங்களுக்கு வருத்தம் வரும்” என்றவள் சொர்ணாவை மிக நெருங்கி, “நீ எங்க வாரிசை வேற வைச்சிருக்கே விலையைப் பத்தி கவலைப்படாம எடு. இந்த செலவு என் வீட்டுக்காரருக்குப் பாக்கெட் மணி” – என்றாள்.

மனசே இல்லை. தயங்கினாள் சொர்ணா.

“நீ சரி படமாட்டே!” – என்று முணுமுணுத்த கீதா ஆயிரம் ரூபாய் விலையில் நாலாயிரத்திற்கு நான்கு புடவைகள் எடுத்தாள்.

“அம்மா இது அதிகம்!“ சொர்ணா தடுத்தும் கீதா கேட்கவில்லை. பில் போடச் சொன்னவள் அடுத்து ரெடிமேடு பிரிவிற்குச் சென்று அவர்களுக்கும் அதிக விலையில் துணிகள் எடுத்தாள்.

ஜவுளிகள் முடித்து இருவரும் காரில் ஏறினார்கள்.

வீடு…வா! வா! என்றது.

அத்தியாயம்-6

போர்டிகோவில் காரை நிறுத்தியும் அவுட் ஹவுஸிலிருந்து ஆள் வராதது ஆச்சரியமாக இருந்தது.

‘என்ன ஆச்சு! முத்துலட்சுமியைக் காணோம்?’ – யோசித்தவாறே சொர்ணாவும் கீதாவும் அங்கு சென்றார்கள். அது பூட்டி இருந்தது.

‘எங்கு போனாள்? சொல்லாமல் எங்கும் செல்லமாட்டாளே!‘

நினைத்த கீதா, “லட்சுமி! லட்சுமி!” – அழைத்தாள்.

பதிலைக் காணோம்.

“கூர்க்கா!”

அவன் ஓடி வந்தான். “என்னம்மா ?”- கேட்டான்.

“முத்துலட்சுமி எங்கே?”

“அதோட தங்கச்சி அதைப் பார்க்க இங்கே வந்துதும்மா. வாசல்ல எண்ணெயோ ஏதோ கொட்டியிருக்கும் போல வழுக்கி விழுந்துடுச்சி. தலையில அடி மண்டை உடைஞ்சிடுச்சு. பாவம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் கூட்டிப் போயிருக்கும்மா. சாவியை சன்னல் ஓரம் வைச்சிருக்கு.”

சொர்ணா சன்னல் ஓரத்திலிருந்து சாவியை எடுத்தாள். பூட்டைத் திறந்தாள். கதவைத் திறந்து கொண்டு கீதா முதலில் நுழைய….முத்துலட்சுமி ஆட்டோவை விட்டு இறங்கினாள். பார்த்தவளுக்குப் பகீரென்றது.

“உள்ளே போகாதீங்க” – கூவி ஓடி வந்தாள்.

கீதா, சொர்ணா திடுக்கிட்டு நின்றார்கள்.

“தலைவாற தேங்காய் எண்ணெய் எடுத்தேன் கைதவறி கொட்டிடுச்சி. என்னைப் பார்க்க வந்த தங்கச்சி விழுந்து மண்டையை உடைச்சிக்கிட்டா ஆஸ்பத்திரி போற அவசரத்துல சுத்தம் கூட செய்யலை. நீங்களும் அப்புடி விழுந்துடக் கூடாதுன்னுதான் தடுத்தேன். இருங்கம்மா சுத்தம் செய்துடுறேன்.”

கீதா பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தாள். அடுப்படியிலிருந்து அழுக்குத் துணி எடுத்து வந்து எண்ணெய் இருந்த இடத்தை மாங்கு மாங்கென்று அழுந்த துடைத்தாள்.

கீதாவும் சொர்ணாவும் ஒதுங்கி உள்ளே நுழைந்தார்கள்.

கீதா தன் கையிலுள்ள துணிப் பையை சொர்ணாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினாள். கடையேறிய களைப்பு. சொர்ணா அப்படியே வைத்து விட்டு ஆயாசமாக சாய்ந்தாள்.

துடைத்து முடித்து முத்துலட்சுமி எழுந்து வந்து, “என்ன இது?“ – கேட்டாள்.

“உனக்கும் எனக்கும் துணிமணி!” – விபரம் சொன்னாள். எடுத்து பிரித்து விலைகளையும் துணிகளையும் பார்த்த முத்துலட்சுமிக்கு முகம் சுண்டியது.


“என்னம்மா! பணம் வாங்கி மாசம் ஒன்னுக்கு மேல ஆகுது என்ன செய்ஞ்சே?” – மறுநாள் ராஜசேகரன் இவளைக் காய்கறி மார்க்கெட்டில் மடக்கினான். விபரம் சொன்னாள்.

“கவலைப் படாதே. யார் மேலேயும் சந்தேகப்படாதபடி காரியத்தைக் கச்சிதமா முடி. எத்தினி மாசமானாலும் சொர்ணா வயித்துல குழந்தை முழுசா இருக்கப்படாது, அப்படியே இருந்து பொறந்தாலும் அது உசுரோட பொறக்கப் படாது” – கறாராகச் சொல்லி நகர்ந்தான்.

முத்துலட்சுமிக்கு ஏன் வம்பில் மாட்டினோம் என்றிருந்தது.

பணம் நினைக்க மனசு மாறியது.


கம்பெனி விசயமாக மும்பைக்குச் சென்றிருந்த சுதாகரன் திரும்பி வந்தான்.

ஞாயிற்றுக் கிழமை மனைவி, சொர்ணா, அவள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான்.

சொர்ணாவை அவன் வீட்டோடு அடைத்து வைத்திருக்க விருப்பமில்லை.

கர்ப்பமாக உள்ளவள் மனம் சந்தோசமாக இருந்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்கிற பொதுப்டையான கருத்தை அவன் கடைப்பிடித்தான்.

பெண்களைப் பின்னால் விட்டு மணிமொழி, மணிகண்டன்களை ஆளுக்கொரு கையில் பிடித்துக் கொண்டு தன் சொந்த குழந்தைகளைப் போல் உல்லாசமாக கூட்டிச் சென்றான். அவர்களைச் சுதந்திரமாக விளையாட விட்டு கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் மனைவி பக்கத்தில் அமர்ந்தான். அடுத்து சொர்ணா.

அடிமை போலவோ, வேலைக்காரி போலவோ நடத்தாமல் மனித உணர்வுளைப் புரிந்து சொந்தம் போல் நடத்தும் கீதா, சுதாகரனை நினைக்க இவளுக்கு மலைப்பாக இருந்தது. நாட்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் நினைக்க வியப்பாய் இருந்தது. நாளை இவர்களை விட்டுப் பிரிந்தால் குழந்தைகள் இதையெல்லாம் நினைத்து ஏங்கும் நினைக்க கவலை வந்தது. அலைகளையே பார்த்தபடி இருந்தாள். “நம்ம குழந்தை எப்போ இப்படி விளையாடும்?” – சுதாகரன் கீதாவின் காதில் குசுகுசுத்தான்.

“இன்னும் அஞ்சு மாசம் ஆறு நாள்ல பொறக்கும். அப்புறம் இப்புடி விளையாட மூணு வருசமாகும்” – கீதா நாள் மாதங்களைக் கூட துல்லியமாக தெரிந்து வைத்திருந்தாள்.

“என்ன சரியா சொர்ணா?” – தன் கணக்கை சரி பார்த்தாள்.

எத்தனை எதிர்பார்ப்பு! சொர்ணா “ம் ம்” – தலையசைத்தாள்.

“ஐயாவுக்கு ரெட்டை மாடுடா!” – இவர்களை ஒட்டி நடந்த நாலைந்து இளைஞர்களில் ஒருவன் கமெண்ட் அடித்தான்.

சுதாகரனுக்கு அந்த வார்த்தை கோபத்தை வரவழைக்க வில்லை. விபரம் புரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். சகஜமாக எடுத்துக் கொண்டான். கீதாவும் முகம் சுளிக்கவில்லை. அவர்கள் படித்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள். அதனால் அந்த பேச்சு இவர்களுக்கு மனதில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

புரியாமல் பேசுகிறார்களே! – கேட்ட சொர்ணாவிற்குத்தான் வருத்தமாக இருந்தது.

அவள் முகவாட்டத்தைப் புரிந்து கொண்ட சுதாகரன், எழுந்து கடலில் விளையாடும் குழந்தைகளை நோக்கிச் சென்றான். அவர்களை அழைத்துக் கொண்டு சுண்டல் ஐஸ்கிரீம் கடைகளுக்குச் சென்றான். அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தான்.

சொர்ணாவிற்குக் குழந்தைகளைப் பற்றிய கவலை மீண்டும் வந்தது.

“என்ன யோசனை?” – கீதா கேட்டாள்.

‘எப்படி சொல்வது?’- “ஒன்னுமில்லே” – சமாளித்தாள்.

“மனசுல எதையும் மறைக்காம சொல்லு சொர்ணா?” – கீதா விடவில்லை.

“இது நிரந்தரம்ன்னு நெனைச்சிக்கிட்டிருக்கிற குழந்தைங்க நாளைக்குப் பழைய வாழ்க்கைக்குப் போகும் போது அதுங்க மனசு என்ன நினைக்கும்ன்னு யோசனைப் பண்ணிப் பார்த்தேம்மா.”

நியாயமான யோசனை – கீதாவிற்கும் அதை நினைக்க வருத்தமாக இருந்தது.

“வயித்துல புள்ளையை வைச்சிக்கிட்டு இப்புடியெல்லாம் யோசனை செய்யக் கூடாது. இப்போதைய பணக்காரன் திடீர்ன்னு அடுத்து நிமிசம் ஏழை. குஜராத் பூகம்பம் இதுக்கு ஒரு நல்ல உதாரணம். அதனால நடப்பு வாழ்க்கையை சந்தோசிக்கிறதுதான் சரி.” – கீதா அவளைத் தேற்றினாள்.

“எனக்கு நிலைமை புரியுதும்மா. அதுங்களுக்குத்தான், புரியாது தெரியாது”.

“…..”

“இந்த குழந்தையை நான் என் இடத்திலிருந்தே பெத்து கொடுத்திருந்தா குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லே பாதிப்பு இல்லே. உங்களுக்கும் கஷ்டமில்லே” – என்றாள்.

“செய்யலாம் சொர்ணா. ஒரு பணக்கார வாரிசு குப்பத்துல வளர்றதான்னு யோசனை. அடுத்து வாரிசு இல்லாத சொத்தை அடைய எங்க சொந்தங்கள்லேயே போட்டி. பாழாகிறதுனால குழந்தைக்கு ஆபத்து வரலாம். அதனால சுமக்கிறவளுக்குச் சங்கடம், ஆபத்து வரலாம். வீண் பிரச்சனை வேணாம் பாதுகாப்பா இருக்கட்டும்ன்னுதான் இந்த யோசனை. இன்னொன்னு குழந்தை வளர்றதை நாங்க கண்ணால பார்க்கனும்ங்குற ஆசை வேற” – சொன்னாள்.

சொர்ணாவிற்கு எல்லாம் யோசித்துதான் செய்திருக்கிறார்கள். புரிந்தது.

“இன்னொன்னு சொர்ணா. எங்களால ஒரு ஏழை குடும்பம் கொஞ்ச நாளாவது நல்லா இருக்கட்டுமேங்குற ஆசை வேற. ஒருத்தருக்கும் உதவாம எதுக்குப் பணத்தைக் கட்டிக்கிட்டு வாழனும்?“

சொர்ணாவிற்கு இந்த பெரிய மனசு, பெருந்தன்மை பிடித்திருந்தது.

“போகலாமா?” – சுதாகரன் எதிரில் வந்து கேட்டான். மணிமொழி, மணிகண்டனுக்குக் கையில் வைத்திருப்பது எத்தனையாவது ஐஸ்கரீம் என்று தெரியவில்லை. சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

“போவலாம்!” – கீதா எழுந்தாள். அவளைத் தொடர்ந்து அமர்ந்திருந்த சொர்ணாவும் எழுந்தாள். குழந்தைகள் குழந்தைகள் இவர்களிடம் ஒட்டவில்லை. வாங்கிக் கொடுத்தவனையே பிடித்துக் கொண்டு நடந்தார்கள்.

காரில் கூட ஓட்டிக் கொண்டு வந்த சுதாகரனுக்குப் பக்கத்தில் முன் இருக்கையில்தான் பயணம் செய்தார்கள். சொர்ணாவிற்கு வேறு வகையில் யோசனை ஓடியது.

வயிற்றில் வளரும் குழந்தை நாளைக்கு சுதாகரன் கீதாவுடன் இப்படி முன்னோ பின்னோ பயணம் செய்யும். தான் சாலையில் நடப்பதைக் கண்டு இவள்தான் உன்னைப் பெத்த அம்மா இவர்கள் அறிமுகப்படுத்துவார்களா? பெருந்தன்மை… அப்படியே இவர்கள் அறிமுகப்படுத்தினாலும் பிள்ளை பிச்சைக்காரியா அம்மா என்று நம்பும்?!. நம்பாது! முகம் சுளிக்கும். பெற்ற பாசம் அம்மா அழைக்காது. குடிசைக்குப் பக்கம் வந்து மணிமொழி, மணிகண்டன் இவர்களை அக்கா அண்ணன் சொல்லி அழைக்காது. நினைக்க நெஞ்சு கனத்தது.

“என்ன யோசனை?” – கீதா அவளை உசுப்பினாள்.

‘எப்படி சொல்ல முடியும்?’ – “ஒன்னுமில்லே!” – மறைத்தாள். இப்படி ஒரு சம்பவம் எங்காவது நடந்ததா படித்தோமா சிந்தித்தாள்.

வீடு வந்தது. கூர்க்கா கேட் திறந்துவிட்டான். காரியம் முடிந்ததும் இவர்கள் எச்சிலையாய் துாக்கி எறிந்தால் நாளைக்கு இவனே கேட் திறக்கமாட்டான்! கார் போர்டிகோவில் நிற்க இறங்கினாள். காத்திருந்த முத்துலட்சுமி குழந்தைகளைக் கூட்டிச் சென்றாள்.

கைகால் கழுவ பாத்ரூம் சென்ற சொர்ணா சுவிட்ச் போர்டில் கை வைத்ததும் ஆ…ஆ!!

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *