வள்ளியின் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 128 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வள்ளி கணவன் பேரை 
வழிப்போக்கர் சொன்னாலுமே 
உள்ளம் குழையுதடி-கிளியே 
ஊனும் உருகுதடி!”

என்ற கிளிக்கண்ணியைக் கொண்டுவந்து கொடுத்த மாணவன், ‘க்’ என்னும் மெய்யெழுத்தைத் தெளிவு படுத்திக் கொள்ள விரும்பி, அது ‘வள்ளி கணவனா அல்லது ‘வள்ளிக் கணவனா’ என்று சந்தேகம் கேட்டான். அன்றைய வகுப்பில் வேற்றுமை உருபும், அது தொக்கி நிற்கிற இடங்களும் பற்றிய பாடம்! 

தமிழ்ப் பண்டிதர் தருமலிங்கம் மாணவனுக்குப் பதில் சொல்லவில்லை. இடத்திலே போய் உட்காரும்படி சொல்லிவிட்டு, மனக்குதிரையின் வேகத்தை அடக்க முடியாமல் நினைவுலகிலே வட்டம் சுற்றினார். 

2 

சரித்திர காலத்துப் பெண்ணரசியாக இருந்தால் அவளுடைய பெயரை வைத்துத்தான் வள்ளியூர் கிராமமே நிர்மாணம் ஆயிற்று என்று ஆராய்ச்சியாளர் முடிவு கட்டக்கூடும்! ஆனால் நம்முடைய வள்ளியோ இருபதாம் நூற்றாண்டுக் கன்னி. ஆனாலும் ஜாதகம் பொய்த்தா போய்விடும்! இந்த வள்ளி ஒருத்தி பிறக்கப் போகிறாள் என்பதற்காகவே அந்தக் கிராமம் ‘வள்ளியூர்’ என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டு காத்திருந்தது என்று, தருமலிங்கம் பல முறை எண்ணி வியந்ததுண்டு. உண்மையில் வள்ளியூர் கிராமத்துக்கு இதயம் என்று ஒன்று இருந்தால், அந்த இதயத்தின் ராணி வள்ளிதான் என்று சொல்ல வேண்டும்! 

வள்ளியூர் சுடலை முத்துத்தேவரின் மகள் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. “தாழம்பூ வள்ளி’ என்று சொன்னால்தான் தெரியும். இன்றைக்கும், இந்த ஐம்பது வயதிலும், அவளுடைய கொண்டையிலே தாழம்பூ இருந்துகொண்டு, வள்ளியூர்ப் பிரதேசத்தில் மட்டுமில்லை, கடல் கடந்த கொழும்புச் சீமைவரை அவ ளுடைய புகழின் மணத்தை அள்ளி வீசிக்கொண் டிருந்தது! 

கொழும்புச் சீமை வரை என்றால் அது வீண்பேச்சு இல்லை. கொழும்பு நகரத்துக்கும் அவளுக்கும் ஒரு தொந்தம் இருந்தது என்ற விஷயம் அந்தக் கிராமத்தில் பலருக்குத் தெரியும். ஆனால் அதன் விவரம் மட்டும் ஒருவருக்கும் சரியாகத் தெரியாது. 

சிலர் அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது என்றும், அவள் புருஷன் கொழும்பில் இருக்கிறான் என்றும் சொன்னார்கள். வேறு சிலர் அவள் கழுத்தில் ஒரு நூல் – சரடுகூட இல்லாததால் அவள் கணவன் வெகு வெகு நாளைக்கு முன்பே காலமாகி விட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலரோ, வள்ளிக்கு ஒரு மன அதிர்ச்சி ஏற்பட்டு அது காரணமாக அறிவிருந்தும் ஒரு பித்துக்கொளிபோல இருக்கிறாள் என்று சொன்னார்கள். தமிழ்ப் பண்டிதர் தருமலிங்கமோ என்றால், அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒளவைப் பிராட்டியைத்தான் நினைத்துக்கொள்வார்! 

அந்தக் காலத்தில், அதாவது சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பெல்லாம், சுடலை முத்துத் தேவருக்கு வள்ளியூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ‘வாட்ச்மன்’ என்னும் ஆங்கிலப் பட்டம் பெற்ற காவலாளி உத்தியோகம். பகல் முழுதும் உறங்க முயற்சிப்பார். இரவு முழுதும் உறங்காமல் இருக்க முயற்சிப்பார். இந்த இரண்டு முயற்சிகளிலுமே அவருக்கு வெற்றிதான். ஆனால் ஒன்று: பகல் முயற்சிக்கு வெற்றி இரவிலும், இரவு முயற்சிக்கு வெற்றி பகலிலும் சித்திக்கும்! 

அல்லும் பகலும் இவ்விதம் உழைத்துவந்த தேவருக்கு, ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்று ஒரே மகள், அந்தத் தாயில்லாப் பெண் வள்ளி! 

‘கண்களை இமை காப்பதுபோல்’ என்று உவமை சொல்வார்களே, அந்த முறையிலே, ‘வாட்ச்மன்’ சுடலை முத்துத் தேவர் தம்முடைய கண்மணி வள்ளியையும் கண் காணித்து வந்தார். அவளுக்குக் கல்யாண வயது வந்ததும், சரியான கணவன் எங்கிருக்கிறான் என்று, கண்ணும் கவனமுமாய்ப் பார்த்து வந்தார். 

சுடலை முத்துத் தேவருக்கு இந்தக் கலிகாலத்தின் ‘பண மகாத்மியம்’ நன்றாகத் தெரியும். “சேராதன உளவோ திருச் சேர்ந்தார்க்கு” என்ற பாடலைத் தமிழ்ப் பண்டிதர் கரும் பலகையிலே எழுதிப் போட்டிருந்ததை ஒரு நாள் இரவு பார்த்துவிட்டு, உடனே அதை அவர் மனப்பாடம் பண்ணிக் கொண்டார். அந்தப் பாடல் இந்த அகில உலகத்தையுமே அவருக்குக் கண் திறந்து காட்டியது மாதிரி ஒரு விழிப்பைக் கொடுத்தது. 

வள்ளிக்குக் கணவனாக வருகிறவன் ‘நாலு காசு’ உள்ளவனாக இருக்கவேண்டும் என்று, தேவர் கண்ணாக இருந்தார். இதையே திரும்பத் திரும்ப வள்ளியிடம் சொல்வார். ‘வாய்ப்பேச்சின் எழிலைக் கண்டு மயங்கி விடக் கூடாது, பணம் என்ற ஒன்றினால் எல்லாமே சாதனை ஆகிறது’ என்றெல்லாம் மேற்கோளுடன் எடுத் துக் கூறுவார். மெய்யாகவே தம்முடைய மகளை நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால் பணம் உள்ளவன் இவரிடம் வந்து சம் பந்தம் செய்துகொள்வானா? வள்ளி அழகாகத்தான் இருந்தாள். சந்தேகமேயில்லை. நின்றெரியும் தீபச்சுடர் போல ஒரு வனப்பு. “பச்சரிசி மாம்பழம்” பழுத்து வரும்போது அதில் ஒரு கவர்ச்சிகரமான செக்கர் நிறம் படருமே, அதுபோல ஒரு குங்குமச் செந்நிறம், அவளுடைய கன்னங்களில் ஊடாடியது. இதெல்லாம் கவிஞர்கள் தங்கள் கவிதையிலே வர்ணிக்கலாம். ஆனால் அவளைப் பெண் கொள்கிறவன் அந்த வள்ளியூர் கிராமத்தில் இந்தக் காவிய எழிலைக் கண் திறந்து பார்க்க வேண்டுமே! அதை நினைத்தால் தேவருக்குக் கண் கலங்கியது. ஒரு நாள் பாவம், இந்த ஏக்கத்திலேயே கண்ணை மூடி விட்டார். 

ஆமாம்; சுடலை முத்துத் தேவரின் மரணம் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாகவே இருந்தது. முந்திய இரவு பள்ளிக்கூடத்துக்குப் போனவர் மறுநாள் வீடு திரும் பாமல் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார் என்றால், யாரால் நம்ப முடியும்? அவருடைய சடலத்தைப் பார்த்தவர்களுக்குக்கூடத் தங்கள் கண்களை நம்ப முடிய வில்லை. காரணம் முகத்தில் எள்ளளவு விகாரம் இல்லை. ஏதோ பாடலை முணு முணுத்தவாறு கண்களை மூடியது போல் இருந்தது அந்த முகம். 

வள்ளியின் துயரத்துக்கு ஒரு அளவே இல்லை. பருவம் என்ற கண்ணற்ற வனாந்தரத்தில், பூத்துக் குலுங்கி நின்றாள் அந்த வள்ளிக்கொடி, தாழம்பூவும் கொண்டையுமாக. 

அதே சமயம், தேவர் வீட்டுத் தோட்டத்தில் வள்ளியைப் போன்றே செல்லமாக வளர்ந்த கறி வேப்பிலைக் கன்று ஒன்று இருந்தது. அது இப்பொழுது ‘தளதள’ வென்று பருவமாகிக் கம்மென்று வாசனை வீசிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு, வள்ளி தன்னுடைய ஜீவனத்துக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டாள்! 

“கறிவேப்பிலை வாங்கலையா கறிவேப்பிலே எஎஎ…” என்று வள்ளியூர் கிராமத்தின் அக்கிரகாரக் கோடியில் ஒரு மோகனக் குரல் கேட்கும். உடனே பெண்டுகள் எல்லாம் அரிசியும் சுளகும் கையில் ஏந்தி, வாசற்கடை யில் வந்து நின்று, “ஏ, வள்ளி!” என்று கூப்பிடுவார்கள். அந்த ஊரில் வள்ளியின் கறிவேப்பிலைக்கு ஒரு தனியான மணம் இருந்தது. ஆனால் அவளுடைய திருமணம்? 

“ஏ, தாழம் பூ!” என்று பிள்ளையார் கோவில் கிணற்றடியிலிருந்து யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பரர்த்தாள் வள்ளி. 

அரையிலே சாய வேட்டியும், தலையில் மேலப் பாளையம் துண்டை அலட்சியமாக ஒரு சுற்றுச் சுற்றி விட்ட தலைப்பாகையும், மார்பகலத்தை ஊடுருவிக் காட்டும் வெள்ளை மஸ்லின் சட்டையுமாக ஒரு இருபத்தைந்து வயதுச் சண்டியன் நின்றுகொண்டிருந்தான், அவனைப் பார்த்தும் பாராதது போலத் தலையைக் குனிந்துகொண்டு மேலே நடக்க ஆரம்பித்தாள் வள்ளி.

“ஏ புள்ளே! உன்னியேத்தானே! கூப்பிட்டா என்னமோ ரொம்பக் கிராக்கி நடை நடக்கியே!” என்றான் மிடுக்கோடு அந்த விடலை! வள்ளி நின்றாள். ஆனால் பேசவில்லை. 

“தாழம்பூ எப்படியம்மா குடுக்கியாம்?” என்று குரலில் கொஞ்சம் இளக்கம் கொடுத்தான் அந்தக் கட்டு மஸ்தான காளை! 

“இது தாழம்பூ இல்லையப்பா, கறிவேப்பிலை. அரிசிக்குத்தான் கொடுக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே, மேலே அடியெடுத்து வைத்தாள் வள்ளி. இதுவரை கிணற்று வளைவுச் சுவரின்மேல் குந்தியிருந்தவன், இப்பொழுது சட்டென்று தாவி அவளுக்கு எதிரில் வந்து நின்றுகொண்டான்! 

“ஏம்மா. கறிவேப்பிலைக் கொழுந்து! காசுன்னா என்ன கசக்குதோ? இறக்கம்மா கொஞ்சம் கூடையை!” என்று சொல்லியவாறு, வள்ளியின் இடுப்பிலிருந்து தானே அந்தக் கூடையைச் செந்தூக்காகத் தூக்கிக் கீழே வைத்தான். வள்ளிக்கு இந்தப் புதிய அனுபவம் மனசையும் உடம்பையும் என்னவோ செய்தது. அவனோ இதற்குள் ஒரு கறிவேப்பிலைக் கொத்தை எடுத்து வாசனை பார்த்தான்! 

“என்னா புள்ளே இது! இந்தக் கறிவேப்பிலை தாழம்பூ வாசனை அடிக்குது!” என்று குறும்புத்தனமாகச் சொல்லிக்கொண்டே, வள்ளியின் கொண்டையிலிருந்த தாழம்பூவை ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தான். அப்பொழுது வள்ளிக்கு ஏற்பட்டது கோபமில்லை. ஆத்திரமில்லை. சிரிப்பும் இல்லை. பின் என்னதான் அது? 

கொழும்பு ஐந்தாம் குறுக்குத் தெரு நானா மூனா சேயன்னா விலாசத்தில் ‘நைட் வாட்ச்மன்’ ஆறுமுகத் தேவன், மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்கிற கணக்கில், வயதில் இளைஞனேயானாலும், பெரிய பெரிய ‘கோப்பன்’களையும் புரட்டி எடுத்துவிடக் கூடிய சாயவேட்டிச் சிங்கன் ! இப்பொழுது ஒரு மாத விடு முறையில் தனது ஜன்ம பூமியான வள்ளியூருக்கு வந்திருக்கிறான்; இல்லை, விஜயம் செய்திருக்கிறான்! இந்த ஆனானப்பட்ட ஆறுமுகத்தின் முன்பு இப்பொழுது வள்ளி எதிர்ப்பட்டு விட்டாள்! பிறகு சொல்ல வேண்டுமா? அன்றிலிருந்து இந்த ஆறுமுகத் தேவனும், வேலன் வேடன் விருத்தன் என்று பல உருவங்களில், அவளை வளைய வளைய வர ஆரம்பித்து விட்டான்! 

சுடலை முத்துத் தேவரின் மகளுக்கு அதிகமாக வார்த்தை வளர்ப்பதில் நம்பிக்கை கிடையாது. ஒரு நாள் சொன்னாள் : 

“நாலு காசு சம்பாதிச்சுக்கிட்டு இந்த வள்ளியூர் மண்ணிலே வந்து மிதி. இதே பிள்ளையார் கோவில் முன்னாலே மேளந் தட்டிப் புடுவோம். என்னமோ பெரிசாக் காசுன்னாக் கசக்குதோன்னு அன்னிக்கு கேட்டியே!” 

ஆறுமுகத் தேவன் விடுமுறைக்கு வந்தவன் மறுபடி கொழும்புக்குப் புறப்படும்பொழுது, ஒரு தீர்மானத்தோடு தான் கப்பல் ஏறினான். திரும்பினால் நாலு காசை அந்தச் சாய வேட்டியிலே கட்டிக்கொண்டு திரும்புவது: இல்லையென்றால் அந்தப் பெரிய கடல் இருக்கவே இருக்கிறது என்று, கச்சை கட்டிக் கொண்டுதான் கப்பலிலே உட்கார்ந்தான்! 

5 

மனக் குதிரையிலேறி, வள்ளியின் வாழ்க்கை நினைவு களிலே சென்ற தமிழ்ப் பண்டிதர் தருமலிங்கம், இந்த இடத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டார். காரணம், கப்பலேறிச் சென்ற ஆறுமுகம் பிறகு திரும்பிவரவே இல்லை. 

வாழ்க்கை என்ற நெருடான செய்யுளை எத்தனையோ தடவைகள் நமது ஆசிரியர் அலகிட முயன்றதுண்டு. ஆனால் ஒவ்வொரு தடவையும் ‘தளை தட்டுகிறதே’ என்று உட்கார்ந்து விடுவார். அதிலும், வள்ளியின் வாழ்க்கை, அவர் பயின்றுள்ள அத்தனை இலக்கண விதிகளுக்கும் அடைபடாத புதுமைச் செய்யுளாக இருந்தது! 

கன்னி வள்ளிக்கு இப்போது வயது ஐம்பது. குழி விழுந்த கண்கள். கன்னத்தில் சுருக்கங்கள். நெற்றியிலே கோடுகள். தாழம்பூச் சூடியிருந்தாலும் அந்தக் கேசம் பிச்சிப் பூவாக வெளிறியிருந்தது. ஆனாலுங்கூட அவளுடைய உள்ளத்தில் மட்டும் ஒரு மாறாத பசுமை, ஒரு தளராத நம்பிக்கை, காய்ந்துபோன கறிவேப்பிலைக்குள் ஒரு விவரிக்க முடியாத வாசனை இருப்பது போல! 

தருமலிங்கம் எத்தனையோ தடவை வள்ளியைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவளுடைய புருஷனைப் பற்றிக் கூட விசாரித்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவள் ஒரே பதிலைத்தான் சொல்லுவாள்:- 

“நாலு காசு சம்பாதிக்கப் போயிருக்காரு. திரும்பி இதே பிள்ளையார் கோவிலுக்கு வருவாரு!”

இப்படி அவள் சொல்லும்போது, அவநம்பிக்கை என்பதே சற்றும் இல்லாத உறுதி அவளுடைய குரலிலே தொனிக்கும்! அது ஒரு குழந்தையின் பேதைமையை நினைவூட்டும். உண்மையில் அது பேதைமையா, அல்லது வைராக்கியத்தில் ஏற்படும் பிடிவாதமா? அல்லது கபட மற்ற மனத்தின் அந்தரங்க சபலமா? இல்லை, அவளுடைய புத்தியிலேயே ஒருவகையான கோளாறு ஏற்பட்டு விட்டதா? – தருமலிங்கம் பன்னிப் பன்னி யோசிப்பார். ஆனால் தன்னுடைய நித்தியப்படியான காரியங்களில் வள்ளி சற்றும் பிசகாமல் நடந்துகொள்கிறாளே! கறி வேப்பிலை வியாபாரத்திலே தான் ஒரு சிறு இணுக்கு விட்டுக் கொடுத்து விடுகிறாளா? கிடையாது! புத்தியெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அப்படியானால்? 

யோசித்துக்கொண்டேயிருந்த தருமலிங்கத்தின் மனக்கண் முன்பு கொழும்பு நகரம் தெரிந்தது. அந்தப் பெரிய நகரத்தில் ஒரு பெரிய வீதி தெரிந்தது. அந்த வீதியில், ஒரு பெரிய கடைக்கு முன்னால், சாய வேட்டி கட்டிய வீரன் ஒருவன், ‘நாலு காசு சம்பாதிக்கவேண்டும்’ என்ற ஒரே தவயோகத்தில் இரவும் பகலும் விழித்த கண் மூடாமல், ஒற்றைக் காலில் நிற்பதுபோன்ற ஒரு காட்சி தெரிந்தது. மறுகணம். ‘ஆண்களாவது இத்தனை தூரம் ஒரு மனப்பட்டு நிற்பதாவது’ என்று எண்ணியவராய் மனப் பலகையில் தோன்றிய, அந்தச் சித்திரத்தை அழித்து உதறுகிறதுபோல, ‘டஸ்டரை’ எடுத்து வேகமாக உதறினார். ‘என்ன பொடி போட்டானோடி கிளியே’ என்ற கண்ணியை வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டே, ஓடுகிற மனக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தார். அப்பொழுது அவருடைய சிந்தனையைக் கலைப்பதுபோல் தெரு வீதியிலே குரல் கேட்டது: “கறிவேப்பிலை வாங்கலையோ, கறிவேப்பிலே எ எ எ……!” அந்த ‘லே’யில் விழுந்த இன்னிசை அளபெடை, பண்டிதர் அவர்களைப் பூரண நினைவுடன் பூமியின் மேலே தமது வகுப்பு அறையிலே கொண்டு வந்து நிறுத்தியது! 

விழித்து எழுந்தவரைப்போல, “அது வள்ளிக் கணவன் இல்லை; வள்ளி கணவன் தான்” என்று தொக்கி நின்ற மெய்யைப் பையன்களுக்கு விளக்கினார் அவர்! 

இந்த வள்ளி திருமணத்துக்கு, இந்த வள்ளியூர் விநாயகர் ஏன் இன்னும் உதவி செய்யாமல் இருக்கிறார் என்பது, தமிழ்ப்பண்டிதர் தருமலிங்கம் அவர்களுக்கும் ஒரு ‘தொக்கி நிற்கும் மெய்’யாகவே நாளது தேதி வரை இருந்து வருகிறது! 

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *