கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2025
பார்வையிட்டோர்: 193 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிற? “

“இப்போஉன்னோட ‘ச்சேட்’ (chat) பண்ணிக்கிட்டிருக்கிறேன்…”

“அதற்கு முன்னால?”

“அவசர அவசரமா ‘ஹோம்வொர்க்கை’ (homework) முடிச்சேன்..”

இது, கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரத்தில் நடைபெறும் ‘ஓன் லைன் ச்சேட் (online chat).

“அன்றைக்கு நீ அனுப்பி வச்ச படம் தெளிவா இல்லே.. இருந்தாலும் நீ அழகாத்தான் இருக்கே..”

“இன்னொன்றை அனுப்பி வைக்கவா?.. மூக்குக் கண்ணாடி போடாமே!..”

“ம்.. சரி.. அனுப்பி வையேன்..”

“அதற்கு முன்னாலே.. உன் படத்தை அனுப்பு.. என்ன?”

“ஹு..ஹும் நான் படத்துல அசிங்கமா இருப்பேன்…நேருலதான் நல்லா ‘ஹேன்சம்மா’ (handsome) இருப்பேன்..”

“ஓ அதனாலேதான் உன் பேரு ‘கியூட் கியூபிட்’ டா (cute cupid)?…ஹா.. ஹா..”

“திரிஷா.. திரிஷா.. அறைக்குள்ளே இருந்துக்கிட்டு இன்னும் என்ன பண்றே?.. சாப்பிட வா.. மணியாகுது”

தாயின் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள் திரிஷா. கணினியில், ‘ஓன்லைன்’ மூலமாக அந்த நபருக்குக் காரணம் கூறினாள்.

“பிறகு ‘ச்சேட்’ செய்றேன். அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க..”

“ஓகே ‘ஸ்பைஸ் கேர்ல் (spice girl) ‘.. டேக் கேர் (take care)!”

“நோ ஐம் நாட் ‘ஸ்பைஸ் கேர்ல்’ பாய்! (No! I’m not spice girl, bye!)”

மடிக்கணினியை மடித்துவிட்டு அறைக்கதவைத் திறந்து இரவுச்சாப்பாட்டுக்குத் தயாரானாள் திரிஷா. ஜி.சி.இ (G.C.E) சாதாரண நிலைத் தேர்வை இந்த ஆண்டில் எழுதவிருக்கும் தம் மகள் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணத்தில், அவள் கேட்ட மடிக்கணினியை உடனே வாங்கித் தந்தார் ஆறுமுகம். அது அது மட்டுமல்லாமல், படிப்புக்கு இன்னும் என்னென்ன தேவையோ அனைத்தையும் வாங்கித் தரவும் தயாராக இருந்தார் அவர். உயர்நிலை மூன்றில் நன்கு சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதற்காகத் திரிஷாவுக்குக் கிடைத்த பரிசு அது. வழக்க நிலை பிரிவில் உயர்நிலை இரண்டில் படிக்கும் தம் இளைய மகளைவிட விரைவுப் பிரிவில் படிக்கும் மூத்த மகள் திரிஷாவின்பால் தந்தை ஆறுமுகத்துக்குச் செல்லம் அதிகம். இதை இளைய மகள் அல்காவும், தாயார் மரகதமும் நன்கு அறிவர். திரிஷாவும் தந்தையின் இந்தப் பலகீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறுவதில்லை.


அறைக்குள் செல்லும் மாணவர்களின் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டாள் திரிஷா. எங்கே ஆசிரியர் ‘இரு வாரங்களுக்கு முன் கொடுத்த ஒப்படைப்பை முடித்துவிட்டாயா’, என்று கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் அவரின் பார்வையிலிருந்து விலகியே இருக்கின்றாள். பொதுவாக, திரிஷா மீது எல்லா ஆசிரியர்களுக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பவள் என்றும் கெட்டிக்கார மாணவி என்றும் சக மாணவர்களும் அறிவர். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறிக்கொண்டுவருவதைத் தோழி வதனா உணராமல் இல்லை. அதிலும் மடிக்கணினியை வைத்துக்கொண்டு அடிக்கடி தனியிடம் தேடிப் போகும் புதுப்பழக்கமும் அவளிடம் தற்போது குடிகொண்டிருந்தது.

“சரி.. ஏன் இந்த ‘லேப்டாப்’ (laptop) பையையே தூக்கிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கிறே?”

“எல்லாம் ‘புரோஜெக்ட்’, (project) வேலையாத்தான் வதனா.. உனக்குத்தான் தெரியுமே.. அப்புறம் பாடத்துக்கான ‘ரிசர்ச்சும்’ (research) பண்ணிக்கணும்..”

“கூகல்’ (google) பண்ணுனா அல்லது ‘விக்கிபீடியா’ (wikipedia) இணையத் தளத்துக்குப் போனா நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாமே.. நீயும்தான் சமயத்துல அது வேணும் இது வேணும்ணு கேட்பீயே?..” திரிஷாவின் பதிலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. சமயத்தில், அவளுடைய மடிக்கணினியைத் தானும் பாடத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதை நினைத்துப் பார்த்தாள் வதனா. பள்ளியில் இருக்கும் கணினியை அடித்துப்பிடித்துப் பயன்படுத்துவதைவிட இது எவ்வளவோ வசதி. எங்கும் எப்பொழுதும் பயன்படுத்தலாம்.

திரிஷாவின் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அவ்வளவு நன்றாக இல்லாததைக்கண்டு தந்தை ஆறுமுகத்துக்கு மட்டுமன்று; அவளுடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. திரிஷாவுக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ‘ஓன் லைன் ச்சேட்’ (online chat) மூலமாக அந்த நபரிடம் அது பற்றிப் பகிர்ந்து கொண்டாள்.

“கவலைப்படாதே.. இது அரையாண்டுத் தேர்வுதானே.. இப்பொழுதிலிருந்து கடுமையாக உழைத்தால் நிச்சயமா நீ இறுதியாண்டுத் தேர்வை நல்லா செய்யலாம்.. உன்னால் முடியும்.. எனக்கு நம்பிக்கை இருக்குது..”, என்றது ‘கியூட் கியூபிட்’.

“நான் நெனைக்கவே இல்லை கணிதத்துல இவ்வளவு மோசமா செய்வேன்னு…”

“அதற்கு நிறையப் பயிற்சி செய்யணும்.. கணிதத்தைக் கத்துக்கிறதுல சில வியூகங்கள் இருக்கின்றன.. எது உனக்குக் கஷ்டமா இருக்குது, ‘ஏ மேத்ஸா’, (A Maths),’ ஈ மேத்ஸா’ (E Maths?”

“ஈ மேத்ஸ்’தான் பிரச்சினை, ‘ஏ மேத்ஸ்’ கொஞ்சம் பரவாயில்லே..”

“ஈ மேத்ஸ்’ எனக்குத் தண்ணிபட்ட பாடு.. லெவல்ல’ (O level)’டிஸ்டிங்ஷன்’ (distinction) வாங்கியிருக்கேன்!”

“அப்படின்னா எனக்குச் சொல்லிக்கொடுக்கிறீயா?..”

“தாராளமா.. பெரும்பாலும் சனிக்கிழமை இரவு எல்லாம் நான் ஓய்வாகத்தான் இருப்பேன்..”

“அப்படின்னா இந்தச் சனிக்கிழமையே ஆரம்பிச்சிடலாமா?.. நானும் இதுவரைக்கும் உன்னைப் பார்த்ததே இல்லை.. நானாவது என் படத்தை அனுப்பி வச்சிருக்கேன்.. நீ அனுப்பவே இல்லே..”

“சரி.. சரி.. அதுதான் நேருல பார்க்கப் போறியே.. சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு ‘யீஷூன் எம். ஆர். டி.’ நிலையத்துத்துக்கு வா..உனக்காக நான் காத்திருப்பேன்..!”

‘ஓ! நீ ‘யீஷூன்’ லியா குடியிருக்கிறே?”

‘ஆமாம்..”

“எப்படி உன்னை அடையாளங் கண்டுக்கிறது?”

“ம்.. கறுப்பு டி-சட்டை, நீலப் பேன்ட்ஸ்.. ஓகே”

“உருவம்?.. கண்ணாடி போட்டிருப்பியா.. போட மாட்டியா?”

“ம்.. மற்றவை நேரில்.. ‘பாய்’!’

‘கியூட் கியூபிட் கொடுத்த ஆறுதலால் மனம் பூரித்துப்போனாள் திரிஷா. அதை விட இரண்டு மாதங்களாகத் தன் கற்பனையில் உருப்பெற்றிருந்த ‘கியூட் கியூபிட்’டை நேரில் பார்க்கப்போகிறோம் என்னும் துடிப்புக்கு மனம் துடுப்புப் போட, மனம் துடுப்புப் போட, ‘அவன் எப்படி இருப்பான்? நான் நினைத்ததுபோல் இருப்பானோ அல்லது..’ என்னும் எண்ணங்களும் அலைமோதின. பொங்கு கடல் மடிதனில் நிலவாட, அதில் அவன் கற்பனை உருவம் அவள் மனத்திரையில் சதிராடியது. நாளுக்கு நாள் அது மெருகேறிக்கொண்டே வந்தது. கூடவே சிறு சிக்கலும் தலை தூக்கியது. ‘அவனைப் பார்ப்பதற்கு வீட்டில் என்ன காரணம் சொல்வது?’, சிறிது யோசித்தாள். அப்பா தன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தை இதிலும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முடிவெடுத்தாள். சனிக்கிழமை இரவு ஏழு மணியாவதற்கு இன்னும் சுமார் 72 மணி நேரம் இருக்கிறது!


தொலைபேசி தொழில் நுட்பர்களான ஆறுமுகமும் குமரனும் மதிய நேர உணவுக்குப் பின், தங்கள் அலுவலகத்திற்குப் பின்புறம் இருக்கும் கடையில் சுவைநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

“உஷ்.. என்ன புழுக்கம் என்ன புழுக்கம்.. இன்னும் இரண்டு வீட்டுக்குப் போக வேண்டியிருக்குது.. ம்.. சீக்கிரம் குடி..” அவசரப்படுத்தினார் ஆறுமுகம்.

“என்னப்பா சொல்ற? ஒரு வீடுதானே பாக்கி!.. அந்தப் புக்கிட் பாத்தோக் வீட்டுக்கு நாளைக்குப் போகலாம்னு ஆபீஸிலிருந்து ஃபோன் வந்ததே.. நான்தான் உனக்கு முதல்லேயே சொன்னேனே..” பதிலளித்தார் குமரன்.

“அட ஆமாம்பா மறந்தே போயிட்டேன்..!”

“நாளைக்குச் சனிக்கிழமை காலையிலே பதினோரு மணியிலிருந்து ஒரு மணிக்குள்ள அங்கே போய்த் தொலைபேசி ‘லைனை ச்செக்’ (line check) பண்ணனுமாம்..” என்றார் குமரன்.

“அப்படின்னா இன்னொரு சனிக்கிழமையும் போச்சா?..’

“20 வருஷமா இந்த வேலையிலே இருக்கிறே.. இதேல்லாம் உனக்குப் புதுசா என்ன..” என்றார் குமரன்.

ஆம், இந்த 20 ஆண்டுகளில், தன்னால் இயன்ற அளவு சம்பாதித்துச் சேர்த்து வைத்துத் தன் இரு பெண்களுக்கும் எந்தக் குறையும் வைக்காமல் வளர்த்து வருகிறார் ஆறுமுகம். அதுவும் படிப்பு விஷயத்தில் படு கறாராக இருப்பார். ஆனால், மூத்த பெண்ணின் அண்மைய தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அவர் முகத்தில் திடீரென்று சோக அலைகள் வீசின. பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

“என்னப்பா.. உட்கார்ந்திட்டே.. திடீர்னு என்ன யோசனை?” இழுத்தார் குமரன்.

“ஒன்னுமில்லேப்பா.. என் பிள்ளைங்கள நெனச்சுக்கிட்டேன்..அதுதான்..”

“உன் பிள்ளைங்களுக்கென்னப்பா. முத்தான ரெண்டு பெண் பிள்ளைங்க.. இரண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க..!” என்றார் குமரன்.

“ஆமாம்பா, ஆனால், இப்போ மூத்த பெண்ணோட கவனம் எல்லாம் வேறு எங்கேயோ போகிற மாதிரி தெரியுது.. அரையாண்டுத் தேர்வுல அவள் நல்லா செய்யலே.. அதுதான் நாளைக்கு ஏதோ தெரிஞ்சவ வீட்டுக்கு ‘டியூஷனுக்குப்’போறாளாம்.. அவள் இதுவரைக்கும் ‘டியூஷனுக்கே’ போனதில்லே.. சொந்தமா படிச்சு நல்லா பாஸ் பண்ணுவா”. மனதில் தேங்கியிருந்த கவலையைச் சிறிது இறக்கி வைத்தார் ஆறுமுகம்.

“இந்தக் காலத்துப் படிப்பெல்லாம் இப்படிதான்பா.. ரொம்பக் கஷ்டம்.. என் பையனைப் பாரு.. ஏதோ ‘ஓ லெவெல்’ (‘O’ level) முடிச்சுட்டு இப்போ தொழில் நுட்பக் கல்லூரியிலே படிக்கிறான்.. ஏதோ ‘ஏரோஸ்பேஸ்’ (Aerospace) பாடமாம்!.. இரண்டு வருஷம் படிக்கணுமாம்… நல்லா பாஸ் பண்ணுனா ‘போலிக்குக்குப்’ (Poly) போய் டிப்ளோமா எடுக்கலாமாம்.. பிறகு ‘ஏலைன்ஸ்ல’ (Airlines) நல்ல வேலை கிடைக்குமாம்..”

“ப்படியா?.. பரவாயில்லையே! சரி, கிளம்புவோமா?..”

இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.


வானத்தில் மேகக்கூட்டங்கள் உருவம் வரையத் தொடங்கின! மழை வருவதற்கான அறிகுறி. கடும் வெயிலும் கடும் மழையும் உடனுக்குடன் மாறி மாறி வருவது இங்கே வாடிக்கைதானே! மரக்கிளைகளின் அலங்கோலங்கள் ஈரச்சாலைகளை மறைத்துக் கொண்டிருந்தன. அந்த இரு சக்கர வண்டி மிக லாவகமாக மிதமான வேகத்தில் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

“எத்தனை மணிக்கு ‘அப்போயின்ட்மன்ட்’? (Appointment)” கேட்டார் குமரன்.

“பதினோரு மணிக்கு. இன்னும் அரை மணி நேரம் இருக்குது. நீ பார்த்துப் போ..” மோட்டார் சைக்கிளின் இரைச்சலைக் கிழித்துக்கொண்டு சத்தமாகப் பதிலளித்தார் ஆறுமுகம். குமரன் நிதானமாகவே மோட்டார் சைக்கிளைச் செலுத்தினார். இப்படிப் பல முறை சனிக்கிழமை காலையில் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். திடீரேன்று சாலையோர அங்காடி நிலையத்தில் இருந்த ஓர் இளம் பெண்ணின் மீது ஆறுமுகத்தின் பார்வை நிலைகுத்தி நின்றது.

“யப்பா கொஞ்சம் வண்டியை நிப்பாட்டு.. இதோ ஒரு நிமிஷத்துல வந்துடறேன்..” என்று சொல்லிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக அந்த அங்காடி நிலையத்தை நோக்கி நடந்தார் ஆறுமுகம். குமரன் குழப்பத்தோடு திரும்பிப்பார்த்தார்.

“இங்கே என்னம்மா செய்றே?..”

திடீரென்று பின்னாலிருந்து ஆறுமுகத்தின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள் திரிஷா!

“அப்பா நீங்களா.. நீங்க எங்கேப்பா இங்கே.. நீங்க வேலைக்குப் போகலே?..” தட்டுத் தடுமாறிகொண்டு முட்டி மோதிக்கொண்டு வந்தன வார்த்தைகள்.

“அதிருக்கட்டும் நீ எங்கே இங்கே?”

“இல்லேப்பா, தோழிக்குக் ‘கிஃப்டு’ (gift) ஒன்னு வாங்கிறதுக்காக வந்தேன்..” எச்சிலை விழுங்கிகொண்டு பேசினாள் திரிஷா.

“அப்படியா?..”

“இன்னைக்கு முதல் நாள் ‘டியூஷனுக்குப்’ போறேனில்லையா.. அதுதான் வெறுங்கையோட போகாம் ஏதாவது வாங்கிகிட்டுப் போலாம்னு வந்தேனம்பா..”

“சரி.. சரி.. சீக்கிரம் வாங்கிட்டுப் போ.. எத்தனை மணிக்கு அங்கே போகிறதா சொன்னே?”

“ஏழு மணிக்குப்பா..!”

“சரிம்மா நான் வர்றேன்.. இன்னும் வேலையை முடிக்கல..” என்று சொல்லிக்கொண்டே சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த குமரனை நோக்கி ஓடினார்.

ஏதோ ஒரு பிரளயத்திலிருந்து தப்பித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது திரிஷாவுக்கு. அதற்குச் சாட்சியாக நெற்றியில் வேர்வைத் துளிகள். இதற்கு முன்பு எத்தனையோ முறை அப்பாவை வெளியில் பார்த்திருக்கிறாள் அவள். ஆனால், இன்று மட்டும் ஏன் இந்தத் தயக்கம்? ஏன் இந்தப் படபடப்பு? ஏன் இனம் புரியாத ஒரு பயம் என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. உண்மையை மறைப்பதாலா?

ஆறுமுகத்தின் நெஞ்சத்திலும் ஒரு துடிப்பு. தன் மகளைப்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ‘தன் தோழிக்காகக் ‘கிஃப்டு’ (gift) வாங்குவதற்கு நான் தடையா சொல்லப்போறேன்.. ஏன் என்னைப் பார்த்ததும் ஒரே பதற்றமா இருந்தாள்?..’ மோட்டார் சைக்கிள் காற்றைக் கிழித்துகொண்டு சாலையைக் கடந்துபோக, பின் இருக்கையில் இருந்த ஆறுமுகத்தின் எண்ணங்களும் அவ்வாறே சிந்தனைத் திரையைக் கிழித்துச் சென்றுகொண்டிருந்தன.


மாலை ஐந்து மணிக்கெல்லாம் திரிஷாவின் அறையிலிருந்து சுகமான நறுமணம் வீசத்தொடங்கியது. வாசனைத் திரவியத்தில் குளித்ததுபோல்! மெல்லிய இசை அவள் உதடுகளிலிருந்து ஒலித்தது. ‘அப்பாவும் வீட்டில் இல்லாத சமயம். இப்பொழுது கிளம்பினால்தான் சரி’ என்னும் எண்ணத்தில் விரைவாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

“வாவ் (VOW!).. அக்கா எங்கே போறதுக்கு இந்த அலங்காரம்?” கேள்வி கேட்ட தங்கையிடம் வாயை மூடும்படி ஜாடை காட்டினாள் திரிஷா.

“என்னம்மா.. எங்கே கிளம்பிட்டே?..” தாயின் கேள்வி.

“அதுதான் அன்றைக்கே சொன்னேனேம்மா.. என் தோழி வீட்டுக்குப் படிக்கப்போறேன்னு..” சொல்லிக் கொண்டே தாயின் முகத்தை உற்றுப் பார்த்தாள். கண நேரத்தில் அவள் நிலைமையைப் புரிந்துகொண்டாள்.

“அப்பாவுக்கும் இது பற்றித் தெரியும்..!” என்று போட்டு வைத்தாள். அதுதான் வீட்டின் மந்திரச்சொல். மின்னல் வேகத்தில் உடுத்தியதைச் சரி பார்த்துக்கொண்டு புறப்பட்டாள் திரிஷா.


சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. ஆனால், ஆறுமுகத்தின் ஆழ்மனத்தில் எழும் கவலை அலைகள் மட்டும் ஓயவில்லை. அவை விநாடிக்கு விநாடி ஆழிஅலைகள்போல் மாறிக்கொண்டிருந்தன. மனைவியும் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

“என்றைக்குமே அவள் இவ்வளவு தாமதமா வந்ததே இல்லையே.. டியூஷன் எத்தனை மணிக்கு முடிஞ்சுதோ.. அப்படி வர்றதாக இருந்தாலும் ஃபோன் பண்ணிடுவாளே.. என்ன ஆச்சுன்னு தெரியிலேயே!” என்று ஆறுமுகம் முணுமுணுத்தார்.

“என்னங்க, போஸீசுக்குச் சொல்வோமா?.. ரொம்பப் பயமாக இருக்குது..”, மரகதத்தின் தவிப்பை ஆறுமுகமும் உணர்ந்தார்.

“இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்..” என்று சமாதானப்படுத்திக்கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கதவு மணி ஒலித்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள் அல்கா.

திரிஷா நின்றுகொண்டிருந்தாள்.

“அக்கா ஏன் இவ்வளவு ‘லேட்டு’ ‘லேட்டு’ (late) ?.. ஃபோன் பண்ணிருக்கலாமில்லே..”

“ஆமாம்மா, நாங்களெல்லாம் எப்படிப் பதறிப்போயிட்டோம்.. ஏன் இப்படித் தலைமுடி எல்லாம் கலைஞ்சிருக்குது?.. வேர்த்துக் கொட்டுது?”

ஆறுமுகம் அக்கறையுடன் கேட்டார்.

“இல்லேப்பா, தவறான எம். ஆர். டி எடுத்துட்டேன்.. அது வேறு வழியா சுற்றிக்கிட்டுப் போயிடுச்சு.. அப்புறம் அதுலயிருந்து இறங்கி, ரொம்பத் தூரம் நடந்து, சரியான எம். ஆர். டியை எடுத்து வரதுக்கு ‘லேட்டாயிடுச்சு”, என்றவாறே தன் அறைக்குள் விரைந்து சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள் திரிஷா.

“சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..” என்றார் தாயார்.

“இல்லேம்மா நான் சாப்பிட்டுட்டேன்.. எனக்குச் சாப்பாடு வேண்டாம்..” என்று அறைக்குள்ளிருந்தே பதிலளித்தாள் திரிஷா.


சில வாரங்கள் சென்றன. மகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஆறுமுகமும் மரகதமும் உணர்ந்தனர். மிகவும் அமைதியாகக் காணப்பட்டாள். எப்பொழுதும் அறைக்குள்ளேயே ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள். கேட்கும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள். சாப்பாடும் சரியாக சாப்பிடுவதில்லை. இப்படியே ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள், திரிஷாவின் வகுப்பாசிரியர் ஆறுமுகத்தை நேரடியாக அழைத்துப் பேசினார்.

“உங்கள் மகள் திரிஷாவுக்கு ஏதோ மனப்போராட்டம் இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். அவள் உங்களிடம் ஏதாவது மனம் திறந்து பேசினாளா?” என்றார் ஆசிரியர்.

“இல்லை நீங்கள் சொல்வதுபோல.. வீட்டிலும் அவள் கொஞ்ச நாளாகவே யாரிடமும் அவ்வளவாகப் பேசுவதில்லை. மிகவும் அமைதியாக இருக்கிறாள்…

“இங்கேயும் அப்படித்தான்.. முன்பு இருந்த கலகலப்பு இல்லை.. வகுப்பில் அளவுக்கு மீறிய அமைதி. சொல்லிக்கொடுப்பதை உள்வாங்கிக் கொள்கிறாளா என்று தெளிவாகத் தெரியவில்லை. பாடத்திலும் முன்னேற்றம் இல்லை. எதையோ பறிகொடுத்ததைப் போலக் காணப்படுகிறாள். இதை உடனே கவனிப்பது நல்லது. இன்னும் சில மாதங்களில் மிக முக்கியமான தேர்வு வருது. அதற்கு அவள் முழு மூச்சுடன், எந்த மன உளைச்சலும் இல்லாமல் தயார் செய்துகொள்ள வேண்டும். அதனால், அவள் நலன் கருதி அவளுக்குத் தக்க ஆலோசனை கூறும்படி பள்ளியில் நான் பரிந்துரை செய்திருக்கிறேன். அவள் தன் பழைய நிலைமைக்கு வரவேண்டும். அவளுக்கு உதவியாக ஓர் ஆலோசகர் நியமிக்கப்படுவார்” என்று அமைதியாக, ஆறுதலாகக் கூறிவிட்டு ஆறுமுகத்தின் முகத்தைப் பார்த்தார் ஆசிரியர்.

“அப்படின்னா அவளுக்கு மனநிலை சரியில்லையா?” என்று கேட்டார்.

“இல்லையில்லை.. அப்படிச் சொல்ல முடியாது. அவளுக்கு ஏதேனும் மனப்போராட்டம் இருந்திருக்கலாம்; அவ்வளவுதான். அதை யாரிடத்திலும் சொல்லத் தெரியாமல் அல்லது சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம். அது என்னவென்று அறிந்து கொண்டு அதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்”

“என் மகள் என்கிட்டே எதையும் மறைக்கமாட்டாளே.. இப்போ ஏன் இப்படி மாறிட்டாள்னு தெரியலேயே!.. சரி நீங்க சொல்றபடியே செய்யுங்க”

ஆசிரியரிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்த ஆறுமுகத்தை நோக்கி ஒரு மாணவி ஓடி வந்தாள்.

“அங்கள், என் பேரு வதனா. நான் உங்க மகள் திரிஷாவோட தோழி.. திரிஷா கொஞ்சம் நேரம் பள்ளியிலே படிச்சுட்டு வர்றதா உங்ககிட்ட சொல்லச் சொன்னாள்..”

“ஓ நீதான் அந்த வதனாவா?.. உன்னைப் பற்றித் திரிஷா சொல்லியிருக்கிறாள்… உன்கிட்டே கொஞ்சம் நேரம் பேசலாமா?”

“ஓ தாராளமா, வாங்க அங்கள் அப்படிக் ‘கேன்டீன்’ பக்கமா உட்காரலாம்…” பெற்றோரிடம் சொல்ல முடியாத விஷயத்தைப் பதின்ம வயதுப் பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை ஆறுமுகம் அறிந்திருந்தார். அதனால், தோழி வதனாவிடம் திரிஷாவின் நடவடிக்கை பற்றி மெல்ல விசாரித்தார். வதனா நடந்ததை விவரிக்கத்தொடங்கினாள்:

“ஒரு நாள் திரிஷா, தன் தோழியுடன் ‘ஓன் லைன் ச்சேட் (online)’ செய்துகொண்டிருந்தபோது, இடையில், ‘கியூட் கியூபிட்’ (cute cupid) என்னும் பெயரில் ஒரு ‘ச்சேட்'(chat) இடைமறிச்சுது. அழகான பெயரா இருக்குதேன்னு நெனச்சு அவளும் சும்மா அவனோட ச்சேட்'(chat) செய்ய ஆரம்பித்தாள். நட்பு வளர்ந்தது. சுமார் இரண்டு மாதங்களாக அது தொடர்ந்தது. அவனுடைய வாசகத்துல மயங்கிய திரிஷா அவனிடம் பல அந்தரங்கமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டாள். அவன் கேட்டதற்கு இணங்க அவளும் தன் புகைப்படத்தைக் கணினி வழி அனுப்பிவைத்தாள். ஆனால், அவன் தன் படத்தை மட்டும் அனுப்பவே இல்லை..” பேசுவதை நிறுத்திவிட்டு மெல்ல ஆறுமுகத்தின் முகத்தைப் பார்த்தாள் வதனா. அவர் முகத்தில் ஆச்சரிய ரேகை தாண்டவமாடியது.

“ம்.. பிறகு..” என்று வினவினார் அவர்.

“அரையாண்டுத் தேர்வுல திரிஷா நல்லா செய்யாததைச் சாக்கா வச்சு, அவளுக்குக் கணிதத்துல உதவி செய்தறதா சொல்லித் தன்னைப் பார்க்க வரச் சொன்னான்.. அவளும் அவனைப் பார்க்கச் சென்றாள்”

வதனா சொல்லச் சொல்ல ஆறுமுகத்துக்குப் படிப்படியாக நடந்தது நினைவுக்கு வந்தது.

“அவன் யார்? என்ன வயது? எப்படி இருப்பான்? என்ன நிறம்? எங்கு வேலை செய்கிறான்? என்ன பெயர் என்று எதுவும் தெரியாத நிலையில்தான் திரிஷா ஒரு நாள் அவனைப் பார்க்கப்போனாள்!”

சற்று நிறுத்தினாள். மீண்டும் ஆறுமுகத்தின் முகத்தை மெல்லப் பார்த்தாள்.

“என்னம்மா.. திரும்பவும் நிறுத்திட்டே.. தயங்காமல் சொல்லு..” என்றார் ஆறுமுகம்.

“அங்கள் இதையெல்லாம் நான் சொன்னதா திரிஷாகிட்டே சொல்லிடாதீங்க. அவள் யாருகிட்டேயும் இதைப் பற்றிச் சொல்லக் கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டாள்..”

“கவலைப்படாதேம்மா! நீ சொன்னதா நான் அவகிட்டே சொல்லமாட்டேன்.. என்னை நம்பு.. ம்.. தைரியமா சொல்லும்மா..” என்று தட்டிக்கொடுத்தார்.

“அன்று இரவு ‘சீமெய்’க்கு (Simei) அவளை வரச்சொல்லி..”

“சீமெய்க்கா? ‘யீஷூன்’னு சொன்னாளே?”

“யீஷூன்லே சந்திச்சுப் பிறகு அவளைச் ‘சீமெய்’க்குக் கொண்டு சென்றிருக்கிறான். திரிஷாவும் நம்பிக் கூடச் சென்றிருக்கிறாள். அங்கே ஒரு அடுக்குமாடி வீட்டின் வெற்றுத் தளத்தில் அமர்ந்து கணிதப் புத்தகத்தை எடுக்கச்சொல்லிப் பாடம் சொல்லிகொடுக்கும் சாக்கில், அவளைத் தொட்டுத் தொட்டுப் பேச ஆரம்பித்தான். திரிஷாவுக்கு என்னவோ மாதிரி இருந்தது. மெல்ல மெல்ல அவள் உடலின் பல இடங்களையும் தொட்டுப் பேச ஆரம்பித்தவுடன் திரிஷாவுக்குப் பயம் ஏற்பட்டது. உடனே கிளம்பத் தொடங்கினாள். அவன் பலவந்தமாக அவள் ஆடைகளை அகற்ற முற்பட்டான். அவள் தடுக்கப் போராடினாள். அவன் விருப்பப்படி நடக்காவிட்டால், தன்னிடம் இருக்கும் அவள் புகைப்படத்தை மற்ற இணையத் தளங்களுக்கு அனுப்பிக் கேவலப்படுத்தப் போவதாகக் கூறி மிரட்டினான். திரிஷாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதற்கிடையே அவன் அவள் ஆடையை ஓரளவுக்குக் அகற்றி, அவளைத் தன் கைத் தொலைபேசியிலே படம் பிடிக்கத்தொடங்கினான்.. அந்தச் சமயம் பார்த்துத் திரிஷா எப்படியோ கத்திக்கொண்டே தப்பித்து ஓட ஆரம்பித்தாள்.. கண்மண் தெரியாமல் வெகு தூரம் ஓடிய பிறகே தான் தெரியாத ஓரிடத்துக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள். பிறகு அங்கிருந்து எப்படியோ பஸ் எடுத்து வீடு வந்து சேர்ந்தாள். வெளியே இது தெரிந்தால் அவன் சொன்ன மாதிரி எங்கே தன் புகைப் படத்தை மற்ற இணையத் தளங்களுக்கு அனுப்பி வைத்து அசிங்கப் படுத்திடுவானோ என்று பயந்துதான் உங்ககிட்டகூட அவள் நடந்ததைச் சொல்லலே. ஆனால், அதுக்காக அவள் ரொம்ப வருத்தப் படுறாள்.. அங்கள் அவளை ஒண்ணும் செஞ்சிடாதீங்க அங்கள்.. அவள் பாவம்..!” என்று ஒருவாறாகச் என்று ஒருவாறாகச் சொல்லி சொல்லி முடித்தாள் வதனா. ஆறுமுகத்துக்கு அதிர்ச்சியில் பேச முடியவில்லை. வதனாவுக்கு அவர் கலங்கிய கண்களோடு நன்றி கூறிவிட்டு மீண்டும் போய் ஆசிரியரைப் பார்த்து நடந்ததைக் கூறினார்.

ஆசிரியர் உடனே திரிஷாவை அழைத்து விசாரித்தார். ஆரம்பத்தில் மறுத்த அவள் பிறகு ஒப்புக்கொண்டாள். இதற்கிடையில், தலைமை ஆசிரியருக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவரும் வந்து சேர்ந்துகொண்டார்.

“திரு ஆறுமுகம், பிள்ளைங்களுக்கு வீட்டில் கணினியை மட்டும் வாங்கிக் கொடுத்தா போதாது. அவங்க எப்படி அதைப் பயன் படுத்துறாங்க அப்படிங்கிறதையும் பெற்றோராகிய நீங்கள் பார்த்துக்கணும். அதற்கு அந்தக் கணினியை ஹால் பக்கமாக எல்லாரும் பார்க்கும்படியாக வைப்பது நல்லது. மடிக்கணினியாக இருந்தாலும் அதை ஹாலுக்கு வந்துதான் பயன்படுத்தச் சொல்ல வேண்டும். அடிக்கடி அவங்க கணினியைச் சோதிக்கணும். அதைத் தவிரப் பிள்ளைங்ககிட்டே இது போன்ற சம்பவங்களை எடுத்துச் சொல்லி வைக்கணும். இது ரொம்ப முக்கியம். உங்க மகள் மாதிரி எத்தனையோ பெண்கள் இப்படி ‘ஓன் லைன் ச்சேட்ல’ (online chat) மாட்டிக்கிட்டு வருத்தப்படுறாங்க. இளம் பெண்களுக்கு இந்த முறையில வலைவிரித்து வேட்டையாடிக் கவர்ந்து, பிறகு அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து இணையத்துல பரப்பப்போவதாக அச்சுறுத்தித் தங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் கும்பல் இருக்குது… நீங்க ரொம்ப ஜாக்கிறதையா இருக்கணும்… திரிஷாவுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூற நான் ஏற்பாடு செய்றேன். மன ரீதியாக அவள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியுது… நான் அவளிடம் தனியாகப் பேச வேண்டும். அதன் பிறகு போலீசுக்குத் தெரியப்படுத்தலாமா வேண்டாமா என முடிவு செய்வோம். நீங்கள் சற்று நேரம் வெளியில் காத்திருங்கள், திரு ஆறுமுகம்”, என்றார் தலைமை ஆசிரியர்.

நீண்ட விரிவுரை நிகழ்த்தப்பட்டாலும், ஆறுமுகத்துக்கு அது நல்ல பாடமாக அமைந்தது. வெளியே வந்து, கல்லிருக்கையில் அமர்ந்து தன் மகளுக்காகக் காத்திருக்கிறார் அவர்.

– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *