வலிமை குறைந்தது…
அரசர் ஒருவர் யானை மீது அமர்ந்து நகர்வலம் வருவது வழக்கம். ஒருநாள் நகரத்தின் வீதி வழியே வரும்போது, சிறுவன் ஒருவன் ஓடிவந்து யானையின் வாலைப் பிடித்து, அதை அசையவிடாமல் நிறுத்திவிட்டான். யானை அசையாமல் நின்றதைக் கண்டு, தன் பலத்தை எண்ணி மகிழ்ந்தான். அதன்பின் பிடியைத் தளர்த்தி யானையைப் போகவிட்டான்.
அந்தச் சிறுவனின் தந்தை எல்லோரிடமும் நற்பெயர் பெற்றவர். பரம ஏழை. அதனால் அரசர் அந்தச் சிறுவனுக்கு எந்தவித தண்டனையும் கொடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் அரசர் நகர்வலம் வரும்போதெல்லாம் அந்தச் சிறுவன் இப்படிச் செய்து வந்தான். அவனை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று அமைச்சரிடம் ஆலோசனை கேட்டார் அரசர்.
நூறு நாட்கள், அத் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்து, அதற்குக் கூலியாக நாள் ஒன்றுக்கு ஒரு தங்கக் காசு அந்தச் சிறுவனுக்குக் கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார் அமைச்சர்.
அரசருக்கு அது சரியெனப்பட்டது. உடனே அதை நிறைவேற்றும்படி ஆணை பிறப்பித்தார்.
சிறுவனுடைய கவனமெல்லாம் இப்போது கோயில் பணிகளிலும் மாலையில் கூலியாகப் பெறும் தங்கக் காசு மீதும் திரும்பியது.
அரசர் வழக்கம்போல ஒருநாள் நகர்வலம் வந்தார். அன்று, என்ன நினைத்தானோ அந்தச் சிறுவன் யானையின் பின்னே ஓடிவந்தான். வாலைப் பிடித்து நிறுத்த முயன்றான். யானை நிற்கவில்லை. சிறுவனை இழுத்துக் கொண்டு நடந்தது.
இந்தக் காட்சியைக் கண்ட அரசருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அமைச்சரைப் பார்த்து, “”அமைச்சரே, இந்தச் சிறுவனின் வலிமை எங்கே போயிற்று? அவனால் யானையை நிறுத்த முடியவில்லையே?” என்று கேட்டார்.
“”அரசே, சிதறாமல் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனைக்குத்தான் உன்னத ஆற்றல். சிறுவனின் சிந்தை வாலைப் பிடித்து நிறுத்த வேண்டும் என்று ஒருமுகமாய் குவிக்கப்பட்டிருந்தவரை அவனிடம் ஆற்றல் மிகுந்திருந்தது. இப்போது நாம் கொடுக்கும் தங்கக் காசு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டான். எத்தனை காசுகள் கைவசம் உள்ளன? நூறு தங்கக் காசுகள் சேர இன்னும் எத்தனை நாட்களாகும்..? என்றெல்லாம் அவனது கவனம் சிதறிவிட்டது. அதன் காரணமாக வலிமை குறைந்துவிட்டது. இனி அவன் பட்டத்து யானையின் வாலைப் பிடித்து நிறுத்த முயற்சிக்க மாட்டான்” என்றார் அமைச்சர்.
கிழவன் ஏரி.
– செ.சத்தியசீலன் (அக்டோபர் 2012)