வர்ணமில்லா வானவில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 4,517 
 
 

(2003ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

ஆனந்தன் அழகுசுந்தரத்திடம் ஆகாஷ் மனைவி பேர், ஊர் தெரியும் என்று சொன்னாலும் சுகுமாரி வந்த புதிதில் சொன்னதை இப்போது மறந்து விட்டிருந்தான். இந்த நேரத்தில் சுகுமாரியிடம் கேட்டால் சொல்லமாட்டாள் மேலும் அவன் கொடுத்து விசிட்டிங் கார்டையும் அவன் எங்கோ தொலைத்து விட்டிருந்தான்.

விசாரிக்க வேண்டியதுதான் ! ‘ முடிவுடன் பக்கத்து ஊர் பங்களப்பட்டிக்குச் சென்றான்.

ஊர் புதிதாக இருந்தது. எதிரே வேட்டி சட்டையில் கிராமத்தான் போல் ஒருவன் வந்தான்.

அவன் அருகில் வந்ததும்…

“சார்…!” அவனைத்தான் ஆனந்தன் அழைத்தான்.

அவன் புரியாமல் நின்றார்.

“இங்கே ஆகாஷ் என்கிறவர்…” இழுத்தான்.

“இன்ஜினியரா..?”

“அ…ஆமாம்!”

“குரங்குக் கார் வச்சிருக்கிற ஆளா..?”

புரியாமல் பார்த்தான்.

“அட! அதான்ப்பா மாருதி!”

புரிந்தது.

“அ… ஆமா…”

“வெள்ளைக் கலர்”

“ஆமா…”

“ஆள் சிவப்பா… உசரமா…?”

‘டேய்….! ‘ இவனுக்குள் கடுப்பு ஏறியது.

“என்ன முழிக்கிறே..? சரியான ஆள் தெரிந்தால்தான் சரியான விலாசம் சொல்ல முடியும். இங்கே நாலைந்து ஆகாஷ் எஞ்சினியர்கள் இருக்கங்க..”

“ஓஓ….”

“ஏன்னா..நானும் ஒரு ஆகாஷ். விவசாயி!”

“நீங்க சொன்ன ஆள்தான் சார்” என்றான் ஆனந்தன்.

“ஆள் வேணுமா..?”

“இல்லே. அவர் வீடு..”

“அங்க யாருமில்லே..”

“அவர் மனைவி….”

“அருணா அது புள்ளையைத் தூக்கி அம்மா வீட்டுக்குப் போய் ஆறுமாசம் ஆகுது.”

“ஏ….ஏன்…?”

“அந்தக் கொடுமையை ஏன் கேட்குறீங்க..? இவனே…ஒரு மொள்ளைமாரி, முடிச்சவிழ்க்கி. அவனுக்கும் ஒருத்தன் ஏமாந்து பொண்ணு கொடுத்தான். இவன் அந்த பொண்ணை நல்லவிதமா வைச்சி குடித்தனம் நடத்தத் தெரியலை. எவனோ ஒருத்தன் துபாய்ல இருக்கானாம். அவனுக்கு வீடு கட்டிக் கொடுக்க இவன் போனானாம். அவன் பொண்டாட்டிக்கும் இவனுக்கும் தொடுப்பாம். பொண்டாட்டி கண்டிச்சிருக்கு. அடி உதை. ரொம்ப பட்டு ‘போடா ! நீயும் வேணாம். உன்னோடு வாழ்க்கையும் வேணாம்!’ ன்னு சொல்லி பெத்தப் புள்ளையைத் தூக்கிகிட்டு அம்மா வீட்டுக்குப் போய்ட்டு.” மொத்தக் கதையையும் சொன்னான்.

ஆனந்தன் எச்சில் கூட்டி விழுங்கினான். தான்தான் அவன்! வெளியே சொல்ல பயம்.

“அருணா அம்மா வீடு எங்கே இருக்கு..?” கேட்டான்.

“திருநெல்வேலி பக்கம் சாத்தூர். டவுன் பஸ் புடிச்சி போகனும்..”

”சரி சார்” நகர்ந்தான்.

“நில்லுங்க சார். நான் ஊரைச் சொன்னதும் சட்டுன்னு போனால் என்ன அர்த்தம்..?” என்றான் அவன்.

இவன் புரியாமல் விழித்தான்.

“அங்கே போய் அருணா வீடு எதுன்னு கேட்பீங்களா.? ஆகாஷ் மனைவி வீடு, மாமனார் வீடு எதுன்னு விசாரிப்பீங்களா..?”

குழம்பினான்.

“யாரும் சரியாய்ச் சொல்ல மாட்டாங்க. ஊர்ல இறங்கி தர்மலிங்கம் வீடு எதுன்னு விசாரிங்க. அதுதான் அருணா வீடு. அருணா அப்பா பேர் தர்மலிங்கம்.” விளக்கம் சொன்னான்.

‘சரியான ஆள். தெளிவான வழிகாட்டி!’-

“ரொம்ப நன்றி சார்!” சொல்லி அகன்றான்.

அன்றைய நிகழ்விலிருந்து சுகுமாரிக்கும் ஆனந்தனுக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. அதனால் இவன் எங்கு சென்றாலும் சொல்வதில்லை.


மறுநாள் அவளிடம் சொல்லாமல் புறப்பட்டு திருநெல்வேலி சென்றான். சாத்தூரில் இறங்கினான்.

சரியான மாடி வீடு. வீட்டு முகப்பிலேயே ‘அருணா இல்லம் ‘ எழுதி இருந்தது.

அழைப்பு மணி அழுத்தினான்.

பெண் திறந்தாள்.

“யாரு…?” கேட்டாள்.

“அருணா…?” இழுத்தான்.

“நான்தான் . நீங்க…?”

“துபாய்க்காரன். சுகுமாரி கணவன்.”

‘அவனா இவன்.?! ஏன் வந்தான்..? எதற்கு வந்தான்..?’ அவள் மனதுக்குள் ஓடியது.

“அம்மா, அப்பா இருக்காங்களா..?”

“ஏன்…????”

“உள்ளே போங்க . கொஞ்சம் பேசுவோம்.”

‘சமாதானமா..?”

“வாசலிலேயே நிறுத்தி கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்..?”

“உள்ளே வாங்க…” நடந்தான்.

தொடர்ந்தான்.

கூடத்தில் தாத்தாவும், பாட்டியும் பேத்தியை வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அருணா அவர்களுக்கு இவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“உட்காருங்க சார்.” என்றார் தர்மலிங்கம்.

அமர்ந்தான். எப்படி ஆரம்பிப்பது புரியவில்லை.

“சொல்லுங்க சார்…?” அவரே கேட்டார்.

“நான் வெளிநாட்டில் இருந்ததால என் குடும்பம், உங்க மகள் வாழ்க்கை பாழாய்ப்போச்சு சார்.” சொல்லும்போதே இவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

மூவரும் இறுக்கமானார்கள்.

“முடிவு சார்..?” இவன் கேட்டான்.

“ஏதாவது பண்ணனும்..”

“மன்னிப்பா..? பிரிவா..?”

“புரியலை..?!”

“நான் அவனோட வாழ முடியாதுப்பா..?” அருணா கண்டிப்பான குரலில் சொன்னாள்.

“பொறும்மா…! நீங்க..?” தர்மலிங்கம் இவனை ஏறிட்டார்.

“புரியலை சார். ரெண்டு பேரும் ரொம்ப ஒட்டி இருக்காங்க. புள்ளைங்க இருக்கு. நான் சம்பாதித்த பணம், சொத்து முழுவதும் அவர் பெயரில் இருக்கு.” ஆனந்தன் அழுது விடுபவன் போல் சொன்னான்.

ஆனந்தன் நிலையை உணர்ந்த அவர்கள் மௌனமாய் இருந்தார்கள்.

“ரெண்டு பேரையும் பிரிக்கனும் சார். எங்கள் வாழ்க்கையை மீட்கனும் சார்….”

“பார்த்தியம்மா ! வீட்டுக்காரியைப் பறி கொடுத்தவரே…மன்னிக்கிறது, மறக்கிறது சரின்னு நினைக்கிறார். நீ விவாகரத்துன்னே பிடிவாதமாய் இருக்கே..?” என்று சொல்லி தாய் விசாலாச்சி மகளைப் பார்த்தாள்.

“ஆமாம் அருணா.. சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களைத் தப்பு செய்ய வைத்து விட்டது. நாம அவர்களை உருட்டி மிரட்டி பிரிக்கலாம்ன்னு தோணுது” என்றான் ஆனந்தன்.

“எப்படி..?”

“அருணா..! நீங்க… உங்கள் தம்பியை அழைத்து வந்து முதலில் என் வீட்டிற்கு வந்து என் மனைவியோடு சண்டை போடுங்க. இந்த மிரட்டலில் அவள் பயப்படலாம்.” என்றான்.

அருணா, தர்மலிங்கம், விசாலாச்சி கம்மென்றிருந்தார்கள்.

“சார்.! பிரிவு சுலபம். அந்த பிரிவிற்குப் பிறகு அருணா வாழ்க்கை கஷ்டம். அதான் இந்த யோசனை. ” என்றான்.

மௌனமாய் இருந்தார்கள்.

“முயற்சி செய்வோம். பிரித்துவிடலாம். நான் வந்தது தெரியவேணாம். நீங்க வர்றதுக்கு முன் எனக்கு போன் பண்ணிவிட்டு வாங்க.” தன் கைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து விட்டு எழுந்தான்.

அத்தியாயம்-8

கபாலிக்கு எதையும் எப்போதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் காசு பார்க்க வேண்டும். அவனுக்குக் காசு பார்க்கவில்லையென்றால் தூக்கம் வராது.

இப்போதும் ஒரு முக்கியமான சேதியைத் தூக்கிக் கொண்டுதான் வந்தான்.

வீட்டில் ஆகாஷ் யாருடனோ செல்லில் பேசிக் கொண்டிருந்தான். முடித்ததும்… “தலைவா!”- அழைத்தான்.

“என்ன?”- ஏறிட்டான்.

“உங்க ஆளோட ஆள் திருநெல்வேலி பேருந்துல ஏறினதைப் பார்த்தேன்.” சேதியைச் சொன்னான்.

“எந்த ஆள்?”- ஆகாஷ் குழப்பமாகப் பார்த்தான்.

“அதான் அன்னைக்கு அந்த பொம்பளைக் கிட்ட தகராறு பண்ணினானே அவன்..!”

“ஆனந்தனா?”

“அவனேதான்!”

“எப்போ ஏறினான்?.”

“காலையில பத்துமணி சுமாருக்கு.”

“ஏன்?”

“யாருக்குத் தெரியும்?”

“பரவாயில்லே. கண்டுபிடிச்சுடலாம்!” – என்றவன் செல்போன் எண்களை அழுத்தினான்.

சுகுமாரிதான் எடுத்தாள்.

“ஆனந்தன் இருக்காரா?”

“இல்லியே?”

“எங்கே?”

“தெரியலை.!”

“திருநெல்வேலிக்குப் போயிருக்கார்.!”

“ஏன்?!”

“தெரியலை. ஏதோ மறைமுகமா சூழ்ச்சி செய்யறான்னு நெனைக்கிறேன்.”

“அப்படி இருக்காது. அந்த ஆள் செத்த பாம்பு.!”

“இல்லே. நாம உயிரோட விட்டிருக்கோம். அங்கே போகக் காரணம் ?”

“அவரோட வெளிநாட்டுல வேலை செய்யிறவரோட நண்பர் வீடு இருக்கு. வந்ததும் சாமான் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டிருந்தார். அதைக் கொண்டு கொடுத்து வந்தார். அங்கே போயிருப்பார்.”

“போய்…?”

“இங்கே அவர் நிலைமை தெரிஞ்சு போச்சு. திரும்பிப் போகக் கூடாதுன்னு ஏற்பாடெல்லாம் செய்துட்டு வந்தார். திரும்பிப் போகலாம்ன்னு நண்பர்கிட்ட யோசனை கேட்கப் போயிருப்பார். அந்த ஆள் அம்மா செத்துப் போச்சின்னு ஒரு வாரத்துக்கு முன் வந்தார்.”

“அப்படின்றே ?!…”

“அப்படிதான் என் மனசுக்குப் படுது.”

“அப்போ செத்த பாம்பை அடிக்க வேண்டாம்ன்றீயா?”

“அடிச்சாகனும்.”

“இன்னைக்கு வழியில மடக்கி முடிச்சிடலாம். பணம் இருக்கா?”

“இருக்கு.”

“சரி நான் அப்புறம் பேசறேன்.” – செல்லை அணைத்தான். யோசனையுடன் அப்படியும் இப்படியும் உலாவினான்.

“என்ன தலைவா யோசனை?” – கபாலிக்குப் பொறுக்க முடியவில்லை.

“சுகுமாரி புருசனையே தூக்கி எறிஞ்சவள். சம்பாதிச்சு கொடுத்தவனையே சுலபமாய்க் கடாசினவள். என்னைத் தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்ன்னு யோசிக்கிறேன்.”

“நியாயம்தான் தலைவா.”

“எனக்கு சுகுமாரி தேவை இல்லே. அவ மொத்த சொத்து பணம் என் கைக்கு வரனும்.”

“சரிதான் தலைவா.”

“என்ன செய்யலாம்?”

“உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி செய்யலாம் தலைவா.”

ஆகாஷ் மறுபடியும் உலாவினான். கொஞ்ச நேரத்தில் முகம் பிரகாசித்தான்.

“நாம சுகுமாரியையே கடத்தினாலென்ன?” – கேட்டான்.

“கடத்தி?”

“அடிச்சி உதைச்சி வெத்துப் பத்திரத்துல கையெழுத்து வாங்கினா வேலை முடிஞ்சுது.!”

“இதுக்கு ஆளைக் கடத்த அவசியமே இல்லே. நீங்க ஒன்னா இருக்கும்போதே நைசா பேசி வேலையை முடிச்சிடலாமே!?”

“முடிக்க முடியலை. ஆள் ரொம்ப சுதாரிப்பு. நானும் என் முகம் காட்டலை. காட்டினா எச்சரிக்கையாகிடுவாள். என்னையே நெருங்க விடமாட்டாள். அவளுக்கென்ன பணத்துக்குப் பத்து ஆள் பிடிப்பாள். இது நான் கடத்தினா இருக்கக் கூடாது. நீங்களா கடத்தி வேலையை முடிக்கனும். முடியலைன்னா முடிச்சிடனும்.!”

“முடிச்சா சொத்து?!”

“வெத்து தாள்ல கைநாட்டு வைக்கிறதுக்கு ஆள் உசுரோட இருக்கனும்ன்னு அவசியமில்லே. சாகடிச்சும் மை தடவி அழுத்திக்கலாம்.!”

‘ஆக நாளைக்குக் கொலை, கொள்ளை என்று மாட்டினால் தான் தப்பிக்க நினைக்கிறான்!’ – கபாலிக்குத் தெளிவாகத் தெரிந்தது. உடனே குறுக்குப் புத்தி இன்னொரு வகையில் வேலை செய்தது.

“சின்ன யோசனை தலைவா..” – என்றான்.

“சொல்லு?”

“கன்னுக்குட்டிங்களைக் கடத்தினா தாய்ப்பசு தானா வந்துடும்.”

“இது தப்புக் கணக்கு. அவளுக்குப் புள்ளைங்க மேல பாசம் கெடையாது. சூடு வைச்சிருக்காள். கடத்தினா விட்டது சனியன்னு விடுவாள். அவளைக் கடத்தனும் இவனைக் கொல்லனும்.”

“என்ன தலைவா ரெண்டு வேலை சொல்றீங்க?!”

“ஆனந்தன் பூனைபோல இருந்து மறைமுகமா ஏதாவது நடவடிக்கை எடுத்தான்னா எனக்கும் ஆபத்து. அவனை ஒழிச்சா நிம்மதி. முன்னாடி இவனை ஒழிச்சி அவளைக் கடத்தினா பழி தானா சுகுமாரி மேல போடலாம்.”

“அவ மேல எப்படி தலைவா பழி போடுறது?”

“முன் விரோதம். வழி மடக்கி யாரோ போட்டுத் தள்ளிட்டாங்கன்னு சொல்லலாம்.”

“எப்புடித் தலைவா?”

“கபாலி ! ஆனந்தன் ஆரம்பகாலத்துல வெளி நாடு போகனும்ன்னு ரெண்டு ஏஜெண்டுகிட்ட பணம் குடுத்து ஏமாந்திருக்கான். இவன் அவுங்களைக் கேட்கப் போய்… அப்பவே அவுங்களுக்குள்ள முன் விரோதம், தகராறு. அதைக் காரணம் காட்டலாம். இல்லே…. ஆனந்தன் இப்போ பணம் காசோட தெம்பு தைரியமா வந்திருக்கான். கேட்டா ஆபத்துன்னு போட்டுத் தள்ளிட்டாங்கன்னும் சுகுமாரியை விட்டே சொல்லச் சொல்லலாம். சுகுமாரி என் கையில இருக்கிற வரை ஆனந்தனை எப்படி வேண்டுமானாலும் போட்டுத் தள்ளலாம். சுகுமாரி நான் சொல்லிக் குடுத்தா மாதிரி சொல்வாள். தப்பிச்சுடலாம்.”

“சரி உங்க விருப்பப்படியே முடிக்கலாம் தலைவா.”

“சரி நம்ம ஆட்களைக் கூட்டிப் போய் அவனை எப்படி முடிக்கனுமோ முடிச்சிடு.” – அனுப்பினான்.

கபாலி அகன்றான்.


கபாலி நண்பர்களைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.

ஜெயபால், பக்கிரி, ரவி… மூவரும் வழக்கமாய்க் கூடும் தனி இடத்தில் மங்காத்தா ஆடிக்கொண்டிருந்தார்கள். நண்பன் தலையைக் கண்டதும் ஆட்டத்தை நிறுத்தினார்கள்.

“நமக்கு வேலை வந்துடுச்சி.” கபாலி சொல்லி அவர்களை ஒட்டி அமர்ந்தான்.

பார்த்தார்கள்.

“ஆகாஷ் வேலை குடுத்திருக்கார். ஆனந்தனைப் போட்டுத் தள்ளனும். ஆள் திருநெல்வேலி போயிருக்கான். இன்னும் திரும்பலை. பேருந்துலதான் திரும்பறான். அதனால நாம பேருந்து நிலையம் போய் அங்கிருந்து ஆளைப் பின் தொடர்ந்து தனியிடம் பார்த்து முடிக்கனும்.”

“பேருந்து நிலையத்திலேயே போட்டு முடிச்சிடலாம்.”- ஜெயபால் சொன்னான்.

“வெட்டு விழுந்ததும் மக்கள் சிதறிடுவாங்க.” என்றான் ரவி.

“அதெல்லாம் அந்தக் காலம். இப்போ மக்கள் விழிப்பு, துணிச்சலா இருக்காங்க. குண்டு வைக்கிறவன், கொலைக்காரன், திருடனையெல்லாம் மக்களே புடிச்சி அடிச்சி உதைச்சி போலீஸ்ல ஒப்படைக்கிறதை டி.வியில காட்றான். மக்கள் நம்மைப் புடிச்சா ஆபத்து. தர்ம அடி தாங்காது. கண்டவனும் வளைச்சி வளைச்சி அடிப்பான். வெறி கொண்டவன் போல தாக்குவான். அதுக்குப் போலீஸ் அடி பரவாயில்லே. அடுத்தடுத்து வருவான்ங்க. வெளியில மாட்டினா தொலைச்சிடுவானுங்கங்குற பயத்துல கொஞ்சமா அடிப்பானுங்க.”

“ஆமாம்!” – பக்கிரி நடுக்கத்துடன் சொன்னான்.

அதைக் கற்பனை செய்து பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. மின்கம்பத்தில் கட்டி, ரத்தம் ஒழுக ஒருத்தனை மக்கள் அடித்ததை டி.வியில் பார்த்தது இன்னும் அவன் கண்ணுக்குள்ளேயே இருந்தது.

“தனியிடத்துல வெட்டிப் போறதுதான் நல்லது. தப்பிக்கவும் சரி”- என்று ரவி மனம் மாறி ஆமோதித்தான்.

“சரி போகலாம்.”

எல்லோரும் எழுந்தார்கள். அங்கே மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்தார்கள்.

கபாலி வீச்சரிவாளை எடுத்து முதுகில் சொருகி சட்டை மறைப்பில் மறைத்தான்.

ஜெயபால் உருட்டுக்கட்டையை எடுத்து அவ்வாறே மறைத்தான்.

ரவி கத்தியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டான்

பக்கிரிக்குச் சைக்கிள் செயின். இடுப்பில் பெல்ட் போல சுற்றி… சட்டையால் மறைத்தான்.

கபாலியும் ரவியும் தங்கள் ஹீரோ ஹோண்டா, யமஹாவை உயிர்ப்பித்தார்கள். ஜெயபாலும் பக்கிரியும் ஆளுக்கொன்றில் தொற்றினார்கள். பேருந்து நிலையம் நோக்கி பறந்தார்கள்.


பேருந்து நிலையம் வழக்கம் போல் கூட்டமாக இருந்தது. மக்கள் வெள்ளம் பேருந்துவிலிருந்து இறங்கவும் பிடிக்கவும் அலைமோதினார்கள். இளசுகள் சிறிசுகளை வட்டமடித்தார்கள். பெரிசுகள் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்டார்கள்.

அடுத்து பழம் விற்பவன், தண்ணி விற்பவன், சுண்டல் விற்பவன் மாணவர்கள் மாணவிகள்.

கபாலியும் ரவியும் பேருந்து நிலைய ஓரத்தில் வண்டியை விட்டார்கள். உள்ளே வந்து எல்லா பேருந்துகளையும் கவனிக்கும்மாறு வசதியாய் ஓரிடத்தில் நின்றார்கள்.

ஆனந்தன் தலை தென்படுகிறதா என்று கவனித்தார்கள். குறிப்பாய் எந்த பேருந்து வந்து நின்றாலும் இறங்கும் பயணிகளில் அவனைத் தேடினார்கள். இருக்கும் இடம் விட்டு அகலாமல் கண்கொத்தி பாம்பாக கவனித்தார்கள்.

“ஆனந்தன் தப்பிச்சுப் போகக்கூடாது!”- கபாலி நண்பர்களுக்கு மெல்ல குசுகுசுத்து எச்சரித்தான்.

எல்லாரும் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இருக்கும் ஆபத்து தெரியாமல் ஆனந்தன் 4.30 மணிக்கு திருநெல்வேலி பேருந்தைவிட்டு இறங்கினான்.

ஜெயபால் கண்களில்தான் பட்டான்.

“ஆள் வந்தாச்சு..” அவன் மெல்ல சொல்லி மற்றவர்களை உஷார் படுத்தினான்.

கபாலி, ரவி, பக்கிரி…. எங்கே என்று பார்க்க கண் ஜாடையால் காட்டினான்.

ஆனந்தன் பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் நோக்கி நடப்பதைப் பார்த்தார்கள்.

இருக்கும் இடத்தைவிட்டு கழன்றார்கள்.

ஆனந்தன் பேருந்து நிலையத்தை ஒட்டி நிற்கும் டாக்ஸி ஒன்றில் ஏறினான். காத்திருந்தவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை.

“பின்னால போய் வழியில மடக்கிடலாம் !”- கபாலி சொல்லி தன் வண்டியை எடுத்தான்.

ரவியும் எடுக்க… தொடர்ந்தார்கள்.

நகரத்தை விட்டு தாண்டாமலேயே டாக்ஸி ஒரு வீட்டு காம்பௌண்டிற்குள் புகுந்து போர்டிகோவில் நிற்பதைப் பார்த்ததும் திகைத்தார்கள்.

வீட்டைப் பார்க்க அரண்டார்கள்.

அத்தியாயம்-9

“ஆள் தப்பிச்சுட்டான் தலைவா..!” இரவு பத்து மணிக்கு ஆகாஷ் வீட்டு கதவைத் தட்டி கபாலி சேதி சொன்னான்.

“என்ன கபாலி சொல்றே..?” அதிர்ச்சியாய்க் கேட்டான்.

“ஆமாம் தலைவா. அவன் அழகுசுந்தரம் ஆள்!”

எதிர்பாராத செய்தி.

“‘அப்படியா..??!” ஆகாஷ் துணுக்குற்றான்.

“நிசம் தலைவா. இன்னைக்குவழியில் முடித்துவிடலாம்ன்னு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். அவன் பேருந்தை விட்டு இறங்கி உடனே வாடகை கார் பிடித்து அவர் வீட்டுக்கு வந்துவிட்டான். இதை நாங்க எதிர்பார்க்கவில்லை. அவர் ஆளுங்கட்சியில் முக்கியமான ஆள். அதோடு மட்டுமில்லாமல் நம்ப எதிரி காத்தவராயன் அவருக்குக் கையாள். கோஷ்டி என்னைக்கு நாங்க வசமாய் மாட்டுவோம்ன்னு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக்கிட்டிருக்கு. நாம இந்த ஆள் விசயத்தில் எச்சரிக்கையாய் இருக்கனும். நாம மூச்சு விடுறது தெரிந்தாலும் காத்தவராயன் கோஷ்டியால் நமக்குக் கஷ்டம். நான் பலதடவை பட்டிருக்கேன். போன முறை எசகுபிசகாய் மாட்டியபோது… இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை ன்னு சொல்லி விட்டிருக்கான்.” சொன்னான். சொல்லும்போதே அவன் கண்களில் பயம் தெரிந்தது.

ஆகாசுக்கும் அவர்களைப் பற்றித் தெரியும். எதிரிக்குத் தெரியாமலேயே அவன் தலையை சீவுவார்கள். அதைக் கையில் பிடித்துக் கொண்டு தைரியமாய் சென்று போலீசில் சரணடைவார்கள். ஆகாசுக்குக் கலக்கமாக இருந்தது.

“அப்போ ஆனந்தனைத் தொட முடியாது சொல்றீயா..?” கபாலியைப் பார்த்த யோசனையுடன் கேட்டான்.

“அவனால நமக்கு ஆபத்துன்னா சமாளிக்கலாம் தலைவா. வீணா தொட்டால் நமக்குத்தான் ஆபத்து. தலைக்கு மேல் கத்தி. நாம தானா போய் ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேணாம். இதுக்குப் பேசாமல் சுகுமாரியைக் கடத்தி காரியம் சாதிக்கலாம்.” என்றான்.

“…..”

“ஆனந்தன் கையில் ஏதுமில்லை. உங்களுக்குத் சுகுமாரி தேவை இல்லே. சொத்துதான் குறி. எல்லாம் அவள் கையில் இருக்கு. எதுக்கு இவனைக் கொலை செய்யனும்…? அதுக்கு அவளையேக் கடத்தி உருட்டி மிரட்டி, அடித்து உதைத்து, கையெழுத்து வாங்கினால் சரியாய்ப் போச்சு. இதுல நாம ரெண்டு பேரும் தலையிடனும்ன்னு அவசியம் இல்லே. சுகுமாரிக்கு என்னைத் தவிர பக்கிரி, ஜெயபால், ரவி தெரியாது. அவர்களை வைத்து கடத்தினால் ஆனந்தன் கடத்தினதாய் நினைப்பாள். அவளுக்கு உங்கமேல சத்தியமாய் சந்தேகம் வராது. புருசன்தான் எதிரி. அடுத்து ஆனந்தனும்… மனைவி காணாமல் போய்ட்டாள். போலீசுக்கு தன் மீதுதான் சந்தேகம் வலுக்கும் பயம் வரும். அப்படியேவும் ஆக்கலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!” சொன்னான்.

“ஆனந்தன், அழகுசுந்தரத்திடம் சென்று விசயம் இப்படி! பழி என் மேல் வரும்.! காப்பாத்தனும், கண்டுபிடிக்கனும் என்று சொல்லி காத்தவராயன் ஆட்கள் களத்தில் குத்திக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..?” ஆகாஷ் கேட்டான்.

“கஷ்டம்தான். இருந்தாலும் சீக்கிரம் காரியம் முடித்து சுகுமாரியைக் காலி செய்தால் போலீஸ் ஆனந்தனைத்தான் சந்தேகப்படும். நம் மேல் வர வாய்ப்பு குறைவு.” என்றான்.

ஆகாஷ் சிந்தனையில் ஆழ்ந்தான். சிறிது நேரம் கழித்து…

“அப்படியே செய்யலாம். சுகுமாரியைக் கடத்த வழி சொல்றேன்.”

“சொல்லுங்க…?”

ஆகாஷ் உடன் கைபேசி எடுத்து சுகுமாரியைத் தொடர்பு கொண்டான்.

“ஆனந்தன் வந்தாச்சா..?” கேட்டான்.

“ஆறுமணிக்கே வந்தாச்சு. அசதி அறையில் தூங்கறார்.”

“ஆனந்தன் சம்பந்தமா நாம பேசனும்.”

“எப்போ..?”

“இப்போ..”

“சரி வாங்க..”

“வீட்ல வேணாம். வெளியில.”

“இருட்டில் எங்கே..?”

ஆகாஷ் மணியைப் பார்த்தான் 11.00

‘சரி வராது. வரமாட்டாள்!’ மனத்தில் பட்டது.

“சரி நாளைக்கு நாம வழக்கமா சந்திக்கிற பயணியர் விடுதியில் பேசலாம்.”

”சரி.”

“புள்ளைங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பத்து மணிக்கு ஆட்டோ பிடித்து வா.”

“உங்க கார்..?”

“நான் ஒரு வேலையாய் வெளியில் அனுப்பி இருக்கிறேன். கண்டிப்பா வந்துடு. வைக்கிறேன்.” அணைத்தான்.

கபாலி குழம்பினான்.

“என்ன தலைவா. நீங்களே கடத்துறீங்கா..?” கேட்டான்.

“ஆமாம். வேற வழி இல்லே. காத்தவராயன் ஆட்கள் சம்பந்தப்படும் என்கிறதை நினைக்க கொஞ்சம் நடுக்கமாய் இருக்கு. சீக்கிரம் வேலையை முடித்து சொத்து கைக்கு வரனும். இதுக்கு என் முகமூடி கிழிக்கனும். சுகுமாரி நம்மிடம் மாட்டி உசுரோடு இருக்கப் போறதில்லே. இதனால் என் சுயரூபம் அவளுக்குத் தெரியறதைப் பத்தி எனக்குக் கவலை இல்லே.” சொன்னான்.

“அப்போ… நாங்க சம்பந்தப்பட வேணாம் சொல்றீங்களா..?”

“நீங்க இல்லாமல் காரியம் நடக்காது. அடித்து உதைத்து நீங்கதான் கையெழுத்து வாங்கனும். அதனால் நீங்க பதினோரு மணிக்கெல்லாம் பயணியர் விடுதிக்கு வந்துடுங்க. இந்தா முன் பணம்” என்று சொல்லி ஒரு இரண்டாயிரம் கட்டை எடுத்துக் கொடுத்தான்.

கபாலி அகன்றான்.


மறுநாள்.

காலையிலேயே ஆனந்தன் எங்கோ புறப்பட்டுச் சென்றான்.

சுகுமாரி அருணையும், தருணையும் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளப்பினாள். அவர்கள் ஆட்டோவில் புறப்பட்டுச் செல்ல…. குளித்து முடித்தாள். தன்னை நன்றாக அலங்காரம் செய்து கொண்டாள். வழக்கம் போல் தன் எடுப்பான அழகை நிலைக்கண்ணாடி முன் நின்று சிறிது நேரம் ரசித்தாள். திருப்தியாக இருக்க வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆனந்தனைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை.

ஆகாஷ்! ஆகாஷ்!!

இவள் படியை விட்டு இறங்கவும் ஒரு ஆட்டோ வரவும் சரியாக இருந்தது. கைகாட்டி நிறுத்தினாள்.

“சவாரியாம்மா..”

“ஆமாம் விரசவாக்கம்.” ஏறி அமர்ந்தாள்.

சிறிது தூரம் சென்றபிறகு வண்டி பாதை மாறி சென்றது.

சுகுமாரி துணுக்குற்றாள்.

“ஏன்ப்பா..! பாதை இது இல்லையே!” என்றாள்.

“நீங்க சொல்ற இடத்துக்குத்தான்ம்மா வண்டி போகுது. அந்த வழியில் இன்னைக்குப் பேரணி ஊர்வலம்.” என்றான்.

‘வர்றேன்.’ – ஆகாசுக்குச் சேதி சொல்ல தன் கைப்பையைத் திறந்தாள்.

கைபேசி இல்லை!

‘எங்கே வைத்தோம்…?! ‘ எப்படி மறந்தோம்..?’ மூடினாள்.

அதற்குள் ஆட்டோ ஒரு தனி பங்களா முன் நின்றது.

ஓட்டுநர் இறங்கினான். காம்பௌண்டு சுவர் ஓரம் நின்ற இருவர் ஆட்டோ அருகில் வந்தார்கள்.

“இறங்கும்மா..” என்றான் ஓட்டுநர்.

விழித்தாள்.

“இறங்குடி..!” அருகில் நின்றவன் கரகரத்தான்.

அவன் கையில் கத்தி பளபளத்தது.

மிரண்டு பார்த்தாள்.

அடுத்தவன் கையிலும் கத்தி பளபளத்தது!!

– தொடரும்…

– ஏப்ரல் 2003ல் Top-1 பாக்யா மாத இதழில் பிரசுரமான குறுநாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *