வதந்திகள் ஜாக்கிரதை!




சாக்ரடீஸின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. ஏதென்ஸ்வாசி ஒருவுர் சாக்ரடீஸிடம் வந்து, “உங்களுடைய நண்பரைப் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதை உங்களிடம் சொல்வதற்காக வந்தேன்” என்றார்.

சாக்ரடீஸ் அவரிடம், “ஒரு நபரைப் பற்றி என்னிடம் யாராவது சொல்வதாக இருந்தால் மூன்று விஷயங்களை அறிந்த பிறகே நான் அதைக் கேட்பது வழக்கம். முதலாவதாக, நீங்கள் சொல்ல வந்த விஷயம் உண்மையானது என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?” என்று கேட்டார் சாக்ரடீஸ்.
“இல்லை!”
“அடுத்த கேள்வி: நீங்கள் சொல்ல வந்தது நல்ல விஷயமா?”
“இல்ல!.”
“மூன்றாவது கேள்வி: நீங்கள் சொல்ல வந்த விஷயத்தால் எனக்கு ஏதாவது நன்மை உண்டா?”
“இல்லை!”
“ஆக, நீங்கள் சொல்ல வந்த விஷயம் உண்மையா – பொய்யா என்பது உங்களுக்குத் தெரியாது; அது நல்ல விஷயமும் அல்ல; எனக்குப் பயன்படக் கூடியதும் அல்ல என்றால், எதற்காக நீங்கள் அதை என்னிடம் சொல்லவேண்டும்? அப்படிச் செய்வது வீண்பழி சுமத்துவதாகவும் ஆகிவிடக் கூடும் அல்லவா! மக்கள் இப்படித்தான் வீண் வதந்திகளைப் பரப்புவதில் தங்களது நேரத்தையும், ஆற்றலையும் விரயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு அற்ப மகிழ்ச்சி. ஆனால் இது போன்ற வதந்திகளைக் கேட்க எனக்கு நேரமோ, விருப்பமோ, அதில் மகிழ்ச்சியோ இல்லை” என்றார் சாக்ரடீஸ்.
அடுத்தவர்களைப் பற்றி எவரேனும் உங்களிடம் பேசினால் நீங்களும் இதைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவதாக இருந்தால், இந்த மூன்று கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மூன்று கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதில் வந்தால் மட்டும் பேசுங்கள்; ஏதேனும் ஒரு கேள்விக்கு, ‘இல்லை’ என்கிற பதில் வந்தாலும், அதைப் பற்றிப் பேசவே வேண்டாம்.