வண்டார்குழலி





(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 | அத்தியாயம் 04
”அம்மா! நீ எதற்கு இன்னும் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? எனக்கு ஏற்பட்டுவிட்ட இந்தக் கதியைப் பார்த்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கவா? நீ புறப்பட்டுப் போ!”
“எங்கே போகச் சொல்கிறாய்?”
“பாண்டிய நாட்டுக்கே திரும்பப் போயேன். இங்கே என்ன சாதிக்கப் போகிறாய்?”
“உன்னை இங்கே விட்டு விட்டா?”

“பின்னே? என்னை உடன் அழைத்துச் செல்ல முடியுமா என்ன? உனக்கு இன்னும் புரியவில்லையா? என் கலையுடன் சேர்ந்து நானும் இங்கே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று நீ இன்னும் உணரவில்லையா?” அவள் விசும்பினாள். அடக்க மாட்டாமல் கண்ணீர் பெருகிக் கன்னங்களின் வழிந்தது.
“என் கண்ணே! உன் கதி இப்படியாகிவிட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள் தாய். அவள் கண்ணீரைத் துடைத்து விட்டபடியே, “அப்போதே சொன்னேன்…” என்று ஆரம்பித்தாள்.
அவளை இடைமறித்து “அப்போது சொன்னதைப் பற்றி இப்போது என்ன?” என்று சீறினாள் மகள். இங்கும் மங்கும் தன் வட்டக் கருவிழிகளை ஒரு முறை சுழல விட்டு, தனிமையை உறுதிப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்: “அம்மா! எனக்கு சேரமான் பாஸ்கரனைப் பழிவாங்கியாக வேண்டும். அதற்கு நீ உதவுவாயா மாட்டாயா அதைச் சொல்!” என்றாள்.
“என்னை என்ன செய்யச் சொல்கிறாய் குழலி?”
“நீ பாண்டிய நாட்டுக்கே திரும்பிப் போ. ஏன், எதற்கு என்று யாரும் கேட்க மாட்டார்கள். மகளைப் பற்றிய பொறுப்பு இனி உனக்கு இல்லை. அதனால் சொந்த நாடு திரும்புகிறாய் என்று எண்ணுவார்கள். அங்கே போய் மன்னரைப் பார்த்து….”
“அமரபுஜங்கனையா?”
“சே! அவரைப் பார்த்து என்ன பயன்? அவர்தாம் பாஸ்கர ரவிவர்மனுகு உற்ற நண்பராயிற்றே!”
“பின்னர்?”
“பாண்டிய நாட்டுக்கு உரிமை கோரிக்கொண்டு இன்னொரு வீரபாண்டியன் அவ்வப்போது தலையெடுப்பதும், ஒடுக்கப்பட்டால் தலை மறைவதுமாய் இருக்கிறாரே அவரை நீ சந்தித்து…..’
“அவரை நான் எங்கு போய்த் தேடுவேன், எப்படிப் பார்ப்பேன்?”
“அதுதான் உன் சாமர்த்தியம். அவருக்கு உன்னால் உதவ முடியும் என்பதைத் தக்கவரிடம் தெரியப்படுத்தினால் செய்தி மெல்ல மெல்ல அவருக்கு எட்டும். அவருக்கும் ஆவல் கிளர்ந்தெழும். அவரைச் சந்திக்கும் மார்க்கம் உனக்கு தன்னால் தெரிய வரும். அல்லது யாரேனும் உன்னை நாடி வந்து அழைத்துப் போவார்கள். மதுரையிலேயே வீரபாண்டியனுடைய ஆட்கள் இருக்கிறார்கள். பூசாரி, மந்திரவாதி, கொல்லன் என்று பலவாறாகவும் காட்சி தருவார்கள். தொழில் நடத்துவார்கள். குறிப்பாக எனக்குத் தெரிந்த ஓரிடத்தைப் பற்றி மட்டும் விவரிக்கிறேன். நீ கேட்டுக்கொள்கிறாயா?”
“மாட்டேன் என்று சொன்னால்தான் விடப்போகிறாயா?” என்றாள் தாய். “வீரபாண்டியனைச் சந்திக்கும்போது அவனிடம் நான் என்ன கூறவேண்டும்?”
“விரோதியின் நண்பன் விரோதி” என்று உணர்த்த வேண்டும். ‘அமரபுஜங்கனின் நண்பன் பாஸ்கர ரவிவர்மன் வீரபாண்டியனின் விரோதி என்பதை எடுத்துச் சொல். சேரமானைத் தொலைத்துக்கட்டி அதே நேரத்தில் அமரபுஜங்கனையும் ஒழித்து வீரபாண்டியனே பாண்டிய நாட்டுக்கு மன்னனாகும் நாளை எதிர்பார்த்திருக்கலாம் என்று சொல்லு. அவனுக்காக நான் இங்கு வேவு பார்த்துக் கொண்டிருப்பேன் என்பதையும் தக்க சூழ்நிலையினை உருவாக்கி உரிய நேரத்தில் செய்தி கூறி அனுப்புவேன் என்பதையும் தெரிவி.”
“நம்புவானா?”
“இங்கு நடந்ததை நடந்தபடி விளக்கிக் கூறு. அடிபட்ட பெண் புலி பழிவாங்காமல் ஓயாது என்பதை உணர்வான்” என்று கூறித் தாயை அனுப்பி வைத்தாள் வண்டார் குழலி. அதன் பின்னர் அவள் சாகசங்கள் ஆரம்பமாயின.
கிழவன் சோமேசுவரனுக்கு வயதுதான் ஏறியதே தவிர ஆசைகள் வடியவில்லை. அந்த ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள அவன் உடலில் சக்தியும் இல்லை. இதையெல்லாம் அறிந்து அதற்கேற்பத் திட்டமிட்டு நடந்து கொண்டு அவனது நம்பிக்கையைப் பரிபூரணமாகப் பெற்றாள் வண்டார் குழலி. சோமேசுவரன் ரவிவர்மனால் மிகவும் மதிக்கப்பட்ட காரணத்தால் நாளடைவில் பல ராஜாங்க ரகசியங்கள் அவளுக்குத் தெரிய வந்தன.
கிழவன் தனக்கிருந்த ஆசை நாயகிகள் பலரை ஒதுக்கி வண்டார் குழலியையே அதிகம் நேசித்தான். இதனால் அசூயையுற்ற அவர்கள் அவனிடம் குழலியைப் பற்றி புகார் கூறினார்கள். குழலிக்கு அரசவையில் இருந்த சில இளைஞர்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறினர். பொறாமையால் அவர்கள் பிதற்றுவதாகச் சீறின சோமேசுவரன் அவர்களை மேலும் வெறுத்து ஒதுக்கினான்.
ஆனால் அவர்கள் கூற்றில் ஓரளவு உண்மை கிழப் பூனையிடம் இல்லாது போகவில்லை. அகப்பட்டிருந்த அந்த யெளவனக் கிளியிடம் பல இளைஞர்கள் அனுதாபம் கொண்டு கொஞ்சு மொழி பேசினார்கள். வண்டார் குழலி பட்டும் படாமலும் நடந்து கொண்டாள் சாமர்த்தியமாக. அவர்களை மறுத்து விலக்கவும் இல்லை. ரொம்ப நெருங்கவும் விடவில்லை. அபவாதத்துக்கு இடம் தராமல் காலத்தை ஓட்டி வந்தாள். சேரமான் ஒருவனைத் தவிர பாக்கி அனைவரையும் சுண்டுவிரலால் ஆட்டுவிக்கக் கூடிய தன் அபார சக்தியில் இறுமாப்புக் கொண்டாள்.
வனபோஜனத்துக்கு என்றும் வேட்டையாட என்றும் இளைஞர் கோஷ்டி அரண்மனையிலிருந்து புறப்படும்போது கணவரின் அனுமதி பெற்று அதில் கலந்து கொள்வாள் வண்டார் குழலி. சோமேசுவரனும் சில சமயம் வருவான். ஆனால் பெரும் பாலான தருணங்களில் அவரது தளர்ந்த உடல் அதற்கு இடம் தராது. இதற்காக அவள் சென்று வருவதற்கு அவர் என்றும் தடை விதித்தது இல்லை. ‘இளம் நங்கை, அவளை நான்கு சுவர்களுக்கு இடையில் அடைத்துப் போட்டுவிடக் கூடாது. அது அநீதி’ என்று எண்ணினார். தன்னிடம் அவளுக்குள்ள காதல் கரை காண முடியாதது என்றும் கனவிலும் அவள் தனக்குத் துரோகமிழைக்க மாட்டாள் என்றும் நம்பினார்.
ஒரு முறை வனபோஜனத்துக்கும் வேட்டைக்கும் பாஸ்கர ரவிவர்மனே வந்திருந்தான். மந்திரி, சேனாதிபதிகள், உயர் அதிகாரிகள், அவர்களது மனைவியர், குமரத்திகள் ஆகியோருக்கு இடையில் இருந்த இவள் மீதும் யதேச்சையாக அவன் பார்வை விழுந்தது. “வண்டார் குழலி!” என்று விளித்தான். “பிரபோ!” என்று அவள் அருகில் வந்ததும் “உன் நாட்டியம் நடந்து ரொம்ப நாட்களாகிவிட்டனவே? நாளை மறுதினம் வைத்துக்கொள்வோமா?” என்றான். அவன் கண்களில் சபலம் லேசாக எட்டிப் பார்ப்பதை உணர்ந்தாள் அவள். வசீகரமான ஒரு புன்னகையை உதிர்த்து விட்டுச் சொன்னாள்:
“மன்னா! எனக்குத் தேவையான நடன அரங்கினை நான்தான் தேர்ந்தெடுப்பேனே யொழிய எனக்காக நாட்டிய அரங்கினை யாரும் தேர்ந்தெடுக்க அனுமதிப்பதில்லை.”
இந்தப் பதிலைக் கேட்டுச் சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ந்தனர்.
அவளுடைய பதில் சவுக்கடியாக விழ விசுக்கென்று நிமிர்ந்தான் பாஸ்கரன். “பெண்ணே! யாரிடம் பேசுகிறாய் தெரிகிறதல்லவா? உன்னை ராஜ நர்த்தகியாக நியமித்த சேரமான் நான்!”
“தெரியும் பிரபோ! என்னைச் சோமேசுவரரின் ஆசை நாயகியாக நியமித்தவரும் தாங்கள்தான். இரண்டாவது நியமனத்தால் இயல்பாக முதல் நியமனம் அடிபட்டுப் போகிறது.”
“உன்னை நாடு கடத்திவிட முடியும் என்னால்!”
“உத்தரவிடுங்கள் மன்னா! கூடவே சோமேசுவரரையும் இழக்கத் தயாராகுங்கள். என்னை விட்டுப் பிரிந்திருக்க என் இன்னுயிர்க் காதலர் சம்மதிக்கவே மாட்டார்.”
ரவிவர்மன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவனால் சோமேசுவரரையும், அவரது அறிவாற்றலையும் எவ்வாறு இழந்து விட்டிருக்க முடியும்? சேர நாட்டின் பொக்கிஷங்களுள் ஒன்றாயிற்றே சோமேசுவரரின் மூளை.
“பெண்ணே! உன்னைச் சோதித்துப் பார்த்தேன். வென்றுவிட்டாய்” என்று சமாளித்தான் மன்னன்.
“சோதனைகளில் வண்டார் குழலி என்றுமே தோல்வி கண்டதில்லை” என்றாள் அவள் விட்டுக் கொடுக்காமல். சேரனுக்கு அவளிடம் இலேசான அச்சம் தோன்றியது. தான் அவளுக்குப் பெரிய அநீதி இழைத்துவிட்டதாக உணர்ந்தான். அந்தக் குற்ற உணர்வு காரணமாகவே அவளுக்குப் பல சலுகைகள் தந்தான்.
குழலி தனியே பல்லக்கேறிச் சேர சேர நாடு முழுவதும் சுற்றி வரலானாள். தன் அந்தரங்கத் தோழி ஒருத்தியும், பல்லக்கைச் சுமப்போரும், ஒரு மெய்க்காப்பாளனும் மட்டும் உடன் வரச் சென்றாள். சேர நாட்டின் எழிலையெல்லாம் கண் குளிரக் காண விரும்புவதாகக் காரணம் கூறினாள். அவளைத் தடுப்பாரில்லை. வேவு பார்க்கும் நோக்கில் அவள் நடத்திய இத்தகைய பயணங்கள் ஒன்றின் போது ஒரு நாள் மாலை நேரத்தில் அவள் சிவலோகநாதனைச் சந்தித்தாள்.
– தொடரும்