வசந்த காலங்கள்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 666
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜானகி பெரிய மனுசியாகி ஐந்து வருஷங்கள் முடிந்துவிட்டன…….
அவள் வாலிப வனப்பு நிறைந்த….. குமரியாகக் காட்சி தந்தாள்…!
இப்போதெல்லாம் அர்ச்சுனன் அவளிடம் நெருங்கிப் பேசுவதற்குக் கொஞ்சம் கூச்சப்பட்டான்…. மிக அபூர்வமாகவே அவளிடம் பேசுவான்……. இந்த ஒதுங்கிய இடைவெளி……. அவர்களது பாசத்தையும் புரிந்துணர்வுகளையும் இறுக்கமாக்கின…….அர்ச்சுனன் ஜானகியை ‘சின்னத் தாயாகவே’ நினைத்தான். பாஞ்சாலியும் அவளைத் தன் ‘தங்கச்சியாக’ நினைத்தாள். அவளை “மக”. என்று வாயார அழைப்பாள்.
“பொம்புளப் புள்ளகள வளக்கணுமுன்னா…….. உள்ளங்கைக்குள்ள மடிச்சி வச்சிக் கிட்டுத்தான் வளக்கணும்” என்று ‘பெரிசுகள்’ சொல்லுவது வழக்கம்.
ஜானகி வயசுக்கு வந்ததிலிருந்து பாஞ்சாலி கண்ணிலே வெண்ணையை தடவிக்கிட்டுக் கவனித்தாள். ஜானகி வீட்டிலும் வெளியிலும்……. எப்படி நடமாடுகிறாள் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வந்தாள்.
ஒரு நாள் மாலை நேரம்…….
நடேசன் மச்சானும் தங்கச்சி அமிர்தமும் பழனி மாமாவோடு அர்ச்சுனன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
என்ன திடீர் விஜயம்…….? அர்ச்சுனன் வாசலுக்கு அப்பால் போய் அவர்களை வரவேற்றான்.
“பழனி மாமு!…. மச்சான்! தங்கச்சி…….! வாங்க வாங்க……..!” வாஞ்சையோடு வரவேற்றவன் பாஞ்சாலியைக் கூப்பிட்டான்.
“பாஞ்சாலி…….! ஒங்கண்ணனும் அண்ணியும் பழனி மாமானும் வந்திருக்காங்க!” என்றான். பாஞ்சாலி எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து அமிர்தத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். ஆண்கள் மூவரும் இஸ்தோப்பில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
பழனி இருமி…. தொண்டையைக் கனைத்தார்……. அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்று மரியாதை தவள நடேசனும் அர்ச்சுனனும் எதிர்பார்த்தார்கள்.
2
“அர்ச்சுனா…… ஒம் மருமவன் அழகேசன் எளந்தாரியாகிட்டா அவன் இனிமே……. கண்ட மாதிரி ஊர் சுத்த உட முடியாது…… மாமன் ராமு சொன்ன மாதிரி இனி அவன கட்டிப் போடணும்” என்றார்.
“மச்சான்…! ஒங்க ஊட்டுக்குப் பொண்ணு கேக்க வந்திருக்கோம்…….!” என்று நேரடியாக உடைத்துச் சொன்னான் நடேசன்.
“ஆமாண்ணே…….! அதுக்குத் தான் வந்திருக்கோம்…….! ராமு தம்பியும் வரச் சொன்னான்…..” என்றாள் அமிர்தம்.
“அடேங்கப்பா…….! என்னா சம்பிரதாயம் கெட்டுப் போச்சு! இந்தப் பொண்ணு ஒங்க ஊட்டுக்குத் தானே……” என்றான் அர்ச்சுனன்.
“இன்னைக்கே கூட்டிட்டுப் போங்களேன்…..” என்றாள் பாஞ்சாலி.
“அப்படி சாதாரண சங்கதியில்ல இது……! இன்னைக்குப் பரிசம் போடுறதுக்கு நாளு குறிக்க மட்டும் தான் வந்திருக்காங்க… நாளைக்குத்தான் நல்ல நாளாம்……!” என்றார் பழனி.
“அப்படியே செய்ங்க பழனி மாமு….! ஜானகி…எங்க போகணுமோ….அங்கயே போகட்டும். “
வெற்றிலை போட்டுக் கொண்டு நடேசனும் அமிர்தமும் புறப்பட்டார்கள்.
அர்ச்சுனனிடமும் பாஞ்சாலியிடமும் ஏதோ ‘அறிவுரை’ சொல்லணும் என்ற பழனி மாமன் கொஞ்சம் நின்றார்.
“அர்ச்சுனா……! ரொம்ப சந்தோசம்…… நீ நல்லா பேசினே……! நாளக்கி அவுங்க நல்ல நேரம் பாத்து வருவாங்க…… நல்லா சமச்சி வைய்யி…..அமிர்தத்துக்கு ஒரு நல்ல சேல வாங்கி குடுக்கணும். அதையும் வாங்கி வைய்யி…… அமிர்தத்த நல்லா கவனிக்கும்படி ஜானகி கிட்டே சொல்லி வைய்யீ…… வெளங்கிச்சா பாஞ்சாலி?” என்றார்.
“நல்லதுங்க மாமா……!” என்றாள் பாஞ்சாலி.
“நடேசனும் எனக்கிட்டே சொன்னான் …… கல்யாண செலவுல பாதி ஏத்துக்கிறானாம். நீ என்னா சொல்றே……!” என்று அர்ச்சுனனிடமும் பழனி மாமன் கேட்டார்.
‘முடியாது மாமா! அது முடியவே முடியாது! நான் பிச்சக்காரனா இருந்தாலும் அத செய்ய வுட மாட்டேன்……” என்றான் அர்ச்சுனன்.
3
‘எம் புள்ளைக்கு எங்கண்ணன் செலவு செஞ்சா என்ன…….’ பாஞ்சாலி குறுக்கிட்டாள்.
‘ஏய் மனுஷி……..!” அர்ச்சுனன் அதட்டினான். “நீ யாரு வூட்டப் பத்தி பேசுறே..! ஒங்கப்பன் வூட்டப்பாத்தியா? எங்கப்பன் வூட்டப் பாத்தியா…….? நம்ம கலியாணத்துக்கு ஒங்கப்பன் எங்கக் கிட்ட ஒரு சதமும் எதிர்பார்க்கல. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு……. அது தான சரி…….!” என்றான் அர்ச்சுனன்.
‘மாமா…….! இந்த மாதிரி விசயத்துல எப்ப பேசினாலும் இந்த மனுஷன் மனசு நோகுற மாதிரி தான் பேசுறது……! எம் புள்ளைக்கு எங்கண்ணன் செலவு செஞ்சா என்னா…..?” பாஞ்சாலி ரொம்பவும் வத்தப் பட்டாள்.
“இங்க……இங்க……! நிப்பாட்…..! ரெண்டு பேரும்……! அந்த காலத்துல நம்ம பழயவங்க…… இப்படித்தான் தீர்மானிச்சாங்க…..நீ இந்த ஊட்டு உரிமைகள், கௌரவத்தப் பாதுகாக்க வந்திருக்க….. அர்ச்சுனன்…… அன்னிக்கு ஒங்கப்பன் வூட்டுல வாங்கியத… இப்ப அவன் செய்யப் போறான்……!” என்றார் பழனி.
நேரம் சென்றது.
அர்ச்சுனனும் பழனி மாமனும் நாளைக்கு வேண்டிய சாமான்களை வாங்குவதற்கு கடைப் பக்கம் புறப்பட்டார்கள்.
மறுநாள் பின்னேரம் பழனி மாமனை விசேஷமாக அழைத்திருந்தான் அர்ச்சுனன். நடேசன் குடும்பத்தினரும் மற்றவர்களும் வருவதைப்
பழனியும் அர்ச்சுனனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
***
-இன்று
பாஞ்சாலி குத்துவிளக்கு ஏற்றினாள். அந்த விளக்கு அவள் தகப்பன் வீட்டிலிருந்து கொண்டு வந்தது! அந்த ‘பத்து பன்னிரண்டு’ வீடு.. விளக்கேற்றியதும் வெளிச்சத்தைக் கண்டது……!
ஜானகி மஞ்சள் சேலை உடுத்தி சிவப்பு ரவிக்கை அணிந்திருந்தாள்.
சூரியன் இறங்குவதற்கு முன்பு …..நடேசன் ….. அவன் மனைவி அமிர்தம்…… அவளுடைய தம்பி ராமு…… இன்னுமொரு சிறுமி மொத்தம் நான்கு பேர் வந்தார்கள்…… சாஸ்திரப்படி நல்ல காரியங்களுக்கு மூன்று பேர் போகக் கூடாது……! அதற்காகப் பிள்ளை ஒன்றைச் சேர்த்துக் கொண்டார்கள்……!
4
அமிர்தம் குடும்பத்தினர் பரிசத்தட்டு கொண்டு வந்திருந்தாகள். வெள்ளைச் சேலை ஒன்று….. அது கூறைச் சேலையாகும். ஐந்நூறு வெற்றிலை…… பாக்கு…..ஒன்பது தேங்காய்…… வாழைப்பழங்கள்….
தாய் மாமன் ராமு முதலில் பழனி மாமனை வணங்கினன். மற்றவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டார்.
பாஞ்சாலி அமிர்தத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
குத்து விளக்கு ஜெகஜோதியாக அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தது.
ஜானகி, அத்தீை அமிர்தத்தின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள்.
இரவுச் சரிப்பாட்டுக்குப் பிறகு பழனி மாமன் ஏற்பாட்டின் படி பரிசம் போடுவதற்கு எல்லோரும் விளக்கின் முன்னால் கூடினார்கள். தட்டில் சாம்பிராணி புகைந்தது.
ஜானகியை விளக்கின் முன்னால் சம்மணம் போட்டு உட்காரும் படி செய்தார்கள். அவளுக்குத் தீருநீர் பூசிய நடேசன்…… “இவ அழகேசன் பொண்ணு” என்ற நாமம் சூட்டினான். பின்னால் நின்ற ஜானகியின் பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
”நடேசா……! கலியாணத்துக்கு நேரங்காலம் பாத்திட்டியா……?’ என்றார் பழனி.
‘அடுத்த ரெண்டு மாசத்துக்கு உள்ளுக்கு…… ஜனவரி பதினோராம் தேதி ஒண்ணு தான் நல்ல நாளு……” என்றான் ராமு.
“பொருத்தம் கிருத்தம் எல்லாம் பாத்திட்டியா……?’ பழனி கேட்டார்.
“ஆமா……! பொருத்தமெல்லாம் சரி……! அவ அவனுக்கு……அவன் அவளுக்குன்னு இருக்கு… .? தாய் மாமன் செய்ய வேண்டிய காரியமெல்லாம் ஒழுங்காச் செஞ்சிட்டேன். இனி எல்லாம் ஒங்கல பொறுத்தது…… மத்தவங்கள வழி நடத்த வேண்டியது எல்லாம் பெரியவங்க பொறுப்பு……” என்றான் ராமு.
“நல்லது……! ஜனவரி மாசம் 11ம் தேதி முகூர்த்தம் எல்லாரும் ஏத்துக்கிட்டீங்களா……?” பழனி மாமன் கேட்டார்.
”ஆமா! ஆமா! எல்லாரும் ஏத்துக்கிட்டோம்……” என்றார்கள்.
“கல்யாண கார்டுகள ரொம்ப வெள்ளண அனுப்பணும்……! எல்லா காரியங்களையும் செய்றதுக்கு நெறய நேரங் காலம் இருக்கு…… எல்லாம் சரி…… எட வசதிதான் பத்தாது……!
5
மூணு பரம்பர கலியாணத்தையும் இந்த பத்துக்குப் பன்னெண்டு எலி பொந்துல தான் நடத்தியிருக்கோம்……! நல்லது……! டக்டருகிட்ட பேசி உத்தரவு வாங்கி….. பெரிய பந்தல் ஒண்ணு வாசல்ல கட்டுவோம்……! என்றார் பழனி மாமன்.
“மாமு…….நாங்க இருட்டுக்கு முந்திக் கெளம்பணும்……! என்றார்கள் நடேசன் குடும்பத்தினர்.
“ஆமா……! நீங்க பொறப்புடலாம்……! ஜானகி இங்க வா…….! மாமனா மாமியாவ வழியனுப்பி வை……! இன்னயிலயிருந்து அவுக தான் ஒனக்கு தாயும் தகப்பனும் புரியுதா….?” என்றார் பழனி. ஒரு தட்டில் வெற்றிலை பாக்கோடு ஒரு சேலையை வைத்து அமிர்தம் மாமியிடம் கொடுத்து ஜானகி வணங்கினாள்.
பரிசை வாங்கிக் கொண்ட அமிர்தம் ஜானகிக்கு திருநீர் பூசி ஆசீர்வதித்தாள்.
“பதனாறும் பெத்து பெரு வாழ்வு வாழணும்…..!” என்றாள்.
“நலுங்கு கிலுங்கு எல்லாம் எப்ப வைக்கப் போறீங்க……?” என்று பழனி அங்கு நின்ற பெண்களிடம் கேட்டார்.
“ரெண்டு வீட்டு தாய் மாமனுங்களும் சொந்த காரவுங்களுக்கு சொல்லாம்……” என்றான் ராமு
அவர்கள் எல்லோரும் குத்துவிளக்கை வணங்கிவிட்டுப் புறப்பட்டார்கள்.
***
கலியாணத்துக்கு முன்பதாக…. அந்த இளம் தம்பதிகளுக்கு பத்துக்கு மேலாக நலங்கு விருந்து வைத்தார்கள்.
அழகேசனும் ஜானகியும் அவர்களது உறவினர் வீடுகளுக்கும் தகப்பன் வழி வீடுகளுக்கும் சென்று வந்தார்கள்.
பாஞ்சாலியும் அர்ச்சுனனும் இஸ்தோப்பில் அமர்ந்திருந்தார்கள். எதிர்த்த லயத்து பக்கம் அழகேசனை நலுங்கு செய்ய அழைத்துச் சென்றார்கள். பாஞ்சாலி ஜானகியை ஜாடை காட்டினாள்.
“வெளியே வராதே……! நலுங்குக்கு ‘யாரையோ ‘ கூட்டிக் கிட்டுப் போறாங்க……” என்று சிரித்தாள்.
பழனி மாமனின் தம்பியும் தோட்டத்திலே பெரிய தமாஷ் பேர்வளி முத்தையாவும் சேர்ந்து பழைய பாட்டு ஒன்றை எடுத்து விட்டார்கள்……!
6
காளைன்னா கறுப்புக்காளை……!
கண்ணாடி மினுங்கும்
இளந்தாரிக் காளை
புது சூடு போட்ட காளை
புது தழும்பு ஏற்ற காளை
பட்டப் பகலிலும்……
பக்கமெல்லாம் சுற்றும் காளை……!
லயன் முழுவதும் பாட்டைக் கேட்டுச் சிரிப்பொலி பிறந்தது. அர்ச்சுனன் எதையும் அறியாதவனாய்ப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.
“பாவம் அந்தத் தம்பி……!” பாஞ்சாலி மாத்திரம் பெருமிதத்தோடு மருமகனுக்காகப் பரிந்து பேசினாள்.
ஜானகி….. அமைதியாகச் சிரித்தாள்.
– ஆங்கில தொகுதி: Happy tidings, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.