வகுப்பறைக் காவியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 816 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

அன்றும் வழமைப்போலவே வகுப்பறையினுள் நுழைந்தப்போது ஆகாஸ், தலையில் ரத்தம் ஒழுக நின்றிருந்ததைப் பார்த்த மாத்திரத்தில் ரவி சேருக்கு கோபம் தலைக்கேறியது. பதட்டத்தில் ஓடி வந்து விசாரித்தப்போது “மொட்டபாஸ் பென்சிலில் குத்திட்டு ஓடிட்டான் சேர்” என்று மாணவர்கள் கோரஸ் இசைத்தனர். காயம் என்னவோ சிறிதாக இருந்தாலும் காலை நேரம் என்பதால் ரத்தம் பீறிட்டுப்பாய்ந்தது. பஞ்சிக் கொண்டு ரத்தத்தை நன்றாக துடைத்து, மருந்திட்டு அவனை சமாதானப்படுத்தும் போதே முதலாம் பாடம் நிறைவடைந்திருந்தது. அந்த பதட்டத்தோடே மாணவர் வரவு டாப்பை கையில் எடுத்து விரித்தப்போது அதன் முகப்பு பக்கம் நாரென கிழித்து ஊசலாடிக்கொண்டிருப்பதைக் கண்ட ரவி சேருக்கு கோபம் இன்னும் அதிகமானது. பல்லைக்கடித்துக் கொண்டு ஆகாசை அழைத்தார். “என்னடா இதெல்லாம் இப்பிடி கிழிஞ்சி கெடக்கு என்று கத்திய மாத்திரத்தில் அவன் மீண்டும் அழத்தொடங்கினான். அப்போது மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியப்படி டயானா எழுந்து “சேர் சேர் காலையில நம்ம மொட்டபாஸ் ஒப்பீஸ்ல இருந்து ரெஜிஸ்டர நல்லாத்தான் எடுத்துக்கிட்டு வந்தான். ஆகாஸ்தான் அடிச்சிப்புடுங்கினான். 

அதுனாலத்தான் ரெஜிஸ்டர் கிழிஞ்சி சண்ட வந்துச்சு” என்று ஒரே மூச்சில் கூறி அமர்ந்து விட்டாள். அப்போது கண்களில் நெருப்பை கொட்டி அவள் மீது பார்வையை வீசினான் ஆகாஸ். அது ஸ்கூல் விடட்டும் ஒனக்கு இருக்கு என்பது போலவே இருந்தது. 

அதுவரைக்கும் மொட்டபாஸ் என்கிற பிரதீபன் பற்றி சிந்திப்பதற்கு ரவிசேருக்கு நேரம் இருக்கவில்லை. பொறிதட்டினாற் போல் சுருக்கென்று அவன் ஞாபகம் விழுந்து உள்ளத்தை உழுக்க, மெதுவாக எழுந்து வந்து பாடசாலையின் மைதானத்தில் விஸ்வரூபமாய் நிழல் பரப்பி நிற்கும் மூத்திரக்கா மரத்துக்கு பின்னால் பார்த்தப்போது வாய் மூடி அழுதுக் கொண்டு, மரத்தோடு மரமாய் சாய்ந்து, தேம்பி அழுதுக் கொண்டிருந்தான். பிரதீபன். ரவிசேரைக் கண்ட மாத்திரத்தில் ஓவென அழத்தொடங்கிய அவன் கைகள் இரண்டையும் மடித்து முகத்தை மூடிக்கொண்டு தேம்பினான். அத்தேம்பலோடு “நான் வேணுமுனு கிழிக்கல சேர் கடவுள் சத்தியமா சேர் நான் வேணுமுனு கிழிக்கல ஆகாஸ்தான் அழிச்சாட்டம் பண்ணி பொய் சொன்னான் சேர் அதான் குத்திட்டேன் சேர்” என்றுத் தேம்பினான். அவனை சமாதானப்படுத்துவதற்கு போதுமென்றாகி விட்டப்போதும் இடையிடையே தலைகாட்டும் தேம்பல் அவன் கழுத்து நரம்புகளை புடைக்கச்செய்தது. 

ரவி சேருக்கு நெஞ்சு கலங்கி விட்டது. அவனின் முகத்தை உயர்த்திப்பிடித்து “இங்க பாரு பிரதீப் ஏய் இங்க பாருடா” என்று ஆறுதல் சொல்ல முயன்றார் ஆனால் குற்ற உணர்ச்சியில் தலையை தொங்கவிட்டுக் கொண்டு அப்போதும் அழுதுக்கிடந்தான் அவன். யாருக்கும் அடங்காமல் கட்டாக்காலிப் போல திரிந்து கிடக்கும் மொட்டபாஸ்க்கு எல்லா மாணவர்களும் பயந்துக்கிடப்பர். கையை ஓங்கி ஒரு குத்து குத்தினால் போதும் உயிர் போய்விடும் அவ்வளவு ஸ்ரோங்காய் அடித்து எல்லோரையும் துன்புறுத்தி விடுவான். முழு மொட்டையாய் கிடக்கும் அவனது தலையில் பிறப்பில் இருந்தே மயிர் துளிர்க்கவில்லை என்தை மாணவர்கள் அவப்போது பேசிச்சிரிப்பர். அதுவே ஏனைய மாணவர்களில் இருந்து அவனை வேறுபடுத்திக் காட்டுவதால் பிரதீபன் என்றால் யாருக்கும் புரியாது மொட்டபாஸ் பிரதீப் என்றால்தான் எல்லோருக்கும் புரியும். ஆசிரியர்களும் கூட அவனை பாராமுகமாய் கண்டும் காணாமல் இருந்து விடுவதால் சில நேரங்களில் அவன் தன்னை சீண்டும் மாணவர்களை அடித்து காயப்படுத்தி விடுவதும் உண்டு. காலத்தின் மாற்றத்தோடு ரவி சேர் அவனை எவ்வளவோ மாற்றியிருந்தப்போதும் ஆரம்ப நாட்களில் அவன் செய்த சேட்டைகளை மறக்கமாட்டார். 

இப்படித்தான் இடமாற்றம் பெற்று முதல்நாள் பாடசாலை வளாகத்தினுள் நுழைந்த ரவி சேரினுள் இனம் புரியாத ஒரு நெருடல் நெஞ்சை நிறைத்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை பள்ளி பருவத்தில் ஓடியாடி சுற்றித் திரிந்த மண்ணில் இருபது வருடங்களுக்குப்பின் ஆசிரியராய் கால்பதித்தப்போது இலேசாய் கால்கள் நடுங்கின. ஒரு மாணவனாய் இருந்தப்போது கிடைத்த சந்தோசங்களை விடவும் இன்று இன்னும் மனசு நெகிழ்ந்துக் கிடந்தது. 

ஒரு பாடசாலையில் இருந்து இன்னொரு பாடசாலைக்கு டமாற்றம் பெற்றுச் செல்லும் போது என்னதான் அனுபவங்களையும், சாதனைகளையும் பெற்றிருந்தப் போதும் ஓரிரு வாரங்களுக்கு ரேகிங் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ரிலீப் டைம்டேபிளை கையில் கொடுத்து வகுப்புகளுக்கு அனுப்புவதே பெரிய ரேகிங் போலாகிவிடுகிறது. 

அப்படித்தான் ரிலீப் டைம்டேபிளோடு முதல் நாள் எட்டாம் வகுப்புக்கு அனுப்பப்பட்ட போது மாணவர்கள் காட்டாறு போல அங்குமிங்கும் ஓடித்திரிந்துக் கொண்டிருந்தனர். அந்த மண்டபத்தில் ஆசிரியர்கள் யாரும் இருக்கவில்லை. ரவிசேரைக் கண்டதும் சில மாணவர்கள் பம்மி பயந்து வகுப்புகளில் வந்து அடங்கினாலும் மண்டபத்துள் சத்தம் குறைந்திருக்கவில்லை. 

ஒரு மாணவன் மட்டும் மேசையில் இருந்து இறங்காமல் அப்படியே உறைந்து நின்றான். மரியாதை தெரியாத மாணவனாய் இருப்பான் போலும் என்று எண்ணிக் கொண்டு ஆசிரியர் எட்டாம் வகுப்பு எது என்று கேட்டப்போது வாய்திறக்காமல் ஆட்காட்டி விரலை உயர்த்தி வகுப்பை காட்டிவிட்டு அமர்ந்தான். மற்றொரு மாணவன். அப்போதும் மேசையில் இருந்து இறங்காமல் நிற்கும் அந்த மாணவன் ஆசிரியர் பார்க்காத போது அவரை வெறித்துப் பார்ப்பதும் அவர் பார்க்கும் போதெல்லாம் தலையை தொங்கவிட்டுக் கொண்டு ஒன்றும் அறியாதவன் போல் நிற்பதையும் கவனிக்கத் தவறவில்லை. பொறுமையாய் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ரவிசேரின் தலை கொஞ்சம் மறைந்ததும் மேசையில் குதித்து நடனமாடத்தொடங்கிய மாணவனை சுற்றி நின்ற ஏனைய மாணவர்கள் “மொ-ட்-ட-பா-ஸ் மொ-ட்-ட-பாஸ்” என்று கூச்சலிடுவதும் அவர்களின் தாளகட்டுக்கு தன் இடுப்பை வளைத்து அவன் ஆடுவதையும் கண்ட ரவி சேரின் தலை கோபத்தால் நிறைந்தது. வாசற்கதவை உதைத்துத் தள்ளிவிட்டு பாய்ந்து உள்ளே வந்த வேகத்தில் மேசையில் ஆடிக்கிடந்த அவனை பிடித்திழுத்து அறையத் தொடங்கினார். மொட்டபாஸ் தடுமாறிப்போனான். ஆனால் அப்போதும் அவன் முகத்தில் சலனமில்லை. அழாமல் ஆசிரியரை வெறித்துக்கிடந்தான். 

நொடிக்குள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் சக ஆசிரியர்கள் அங்கு குழுமி, தந்த ஆறுதலும் எச்சரிக்கையும் அவரை கொஞ்சம் நிலைகுலையச் செய்தது. “என்னா சேர் நீங்க அவசரப் பட்டுடீங்க” அவென் கோயில் மாடு சேர் அடிச்செல்லாம் அவன திருத்த முடியாது” வந்தமா வேலய பாத்தமானு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்” இதுகள் எல்லாம் திருத்துற வேல நமக்கெதுக்கு?” என்று அள்ளி இறைத்த அட்வைஸ்களோடு அனைவரும் வகுப்புகளுக்கு சென்று விட்டனர். 

இடைவேளையின் போது சிற்றுண்டிச்சாலையில் அதிபர் என் தலையை கண்ட மாத்திரத்தில் “என்னா ரவி கோபப்பட்டுடீங்கப் போல” நாங்க எப்பவும் அவன கண்டுக்கிறது இல்ல கொஞ்சம் நிதானமா கென்டில் பண்ணவேணும்” “வெரி டேஞ்ஜரஸ் பெலே” நல்லவொரு சந்தர்ப்பம் பாத்துக்கிட்டு இருக்கிறேன். ஸ்கூல விட்டு நிப்பாட்டுறதுக்கு பொறுமையாப் போங்க” என்றதும் அதே குழப்பங்களோடு வகுப்பறைக்கு திரும்பினார் ரவிசேர். இவ்வளவு நேரமும் கத்தி இரைந்துக் கொண்டிருந்த வயிறு தேநீரை வாங்கிக் கொண்ட திருப்தியோடு அமைதியாகிப் போயிருந்தது. அப்போதும் அவன் மேசைக்கு மேலேறி நின்றிருந்தான். 

வரவு இடாப்பை பதிந்துவிட்டு, பிரதீபனை கீழே இறக்கி விசாரித்தப்போதுதான் ரவி சேருக்கு உண்மை புரிந்தது. தாரைத் தாரையாக கண்ணீரைக் கொட்டிக் கொண்டே “நானா மேசையில ஏறல சேர் பின்ஸ்பல்தான் வகுப்புல டீச்சர் இல்லாட்டி நீ மட்டும் மேசையில் ஏறி நிக்கணுமுனு சொல்லியிருக்கார்” “அப்படி நிக்கலனா குண்டியில அடிப்பாரு சேர்” என்று வெளிப்படையாக வார்த்தையை இரைத்தப்போது கொல்லென்று வெடித்த சிரிப்பொலி வகுப்பறையை சலனப்படுத்தியது. அப்போது தன்னை காட்சிபொருளாக்கி மாணவர்கள் ஏளனப்படுத்துவதை பொறுக்கமுடியாத சந்தர்பங்களில் தான் பிரதீபன் வெகுண்டெழுகிறான் என்பதை புரிந்துக் கொள்வதற்கு ரவி சேருக்கு நீண்ட நேரம் தேவையாகப்படவில்லை. 

முடியுமான பலம் கொண்டு அவனை அறைந்த கைகள் இப்போதும் வலித்துக்கொண்டிருந்தன. அப்போது உள்ளத்தில் சுரந்த கருணை அவன் தலையை தடவ, ஏதோ தீண்டவொன்னாதவன் போல் அவன் நெளிந்தது இன்னும் மனசை ரணமாக்கியது. 

அன்றைய நாள் முழுவதும் மனசு அவனுக்காக அல்லாடியது. அச்சம்பவத்துக்கு பிறகு சில பல நாட்களாய் பிரதீபனை வகுப்பறையில் காணவில்லை. மாணவர்களிடம் விசாரித்தப்போது “அவென் ஒழுங்கா ஸ்கூலுக்கு வரமாட்டான் சேர்” “அவுங்க சித்தப்பாவோட கள்ளுக்கடைக்கெல்லாம் போவான் சேர்” கொலனி கடையில் பொகயெல் சுத்தவும் போவான் சேர்” என்று மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராதுகளை அடுக்கினர். அப்போது அவன் பற்றி தனக்கு இருக்கும் மதிப்பீடு தவறானதோ என்று ரவி சேருக்கு மனசு குழம்பியது. பாடசாலை வளாகத்தில் தேடியறிந்ததில் பிரதீபனின் குடும்பம் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்ததென்றும் நண்பர்களோடு கடலுக்கு குளிக்கச் சென்ற அவனது தந்தை கடலுக்கு இரையாகிப் போனதால் தாய் சிற்றப்பனிடம் இவனை அடைகலப்படுத்தி விட்டு குடும்ப வருமானத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடியது தெரிய வந்தது. அன்று முதல்தான் ரவிசேரின் பார்வையில் முழுமையாய் விழுந்தான் பிரதீபன். 

ஓரிரு மாதங்களாய் பாடசாலை பக்கமே தலை வைத்துப்படுக்காமல் திடுமென மீண்டும் பிரதீபன் பாடசாலையில் பிரசன்னமானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அன்றும் வழமைப்போலவே இயங்கிக் கொண்டிருந்த பாடசாலையின் மெயின் ஹோலில் ஏதோ துர்மணம் வீசுவதாக ஆசிரியர்களும் மாணவர்களும் விசனப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எல்லா மாணவர்களும் பிரதீபனிடம் இருந்துதான் துர்மணம் வீசுவதாக புகார் கொடுத்ததும் அவன் கண்களில் பயம் கவிழ்ந்துக் கிடந்தது. 

ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளை தீவிரமாக சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பிரதீபனின் பையில் கிடந்த போத்தல் வெளியில் எடுக்கப்பட்டது மூக்கை அறுக்கும் துர்நாற்றம் அதிலிருந்துதான் கிளம்பிக் கொண்டிருந்தது. மாணவர்களை வகுப்பறைகளில் ஒழுங்குப்படுத்திவிட்டு பாடசாலை விசாரணை கொமிஷன் பிரதீபனையும் அவனிடம் இருந்த கசிப்பு போத்தலையும் கைப்பற்றிக் கொண்டனர். 

காரியாலயத்தில் பல மணி நேரங்களை வீணடித்து விசாரனை நடத்தியவர்கள் இறுதியாகத் தந்த அறிக்கை “கல்லுளி மங்கென் வாய தொறந்து எந்த உண்மையையும் சொல்லல” என்பதாகும். அடித்தும், மண்டியில் இருத்தியும், பயமுறுத்தியும் உண்மையை கறக்க முயன்றவர்கள் அவனின் அழுத்தம் கண்டு வாயடைத்து நின்றனர். 

பாடசாலை நிர்வாகம் அவனை இடைநிறுத்தி இருந்தது. மீண்டும் பாடசாலை இயல்புக்கு திரும்பிய நிலையில் வெளியாகியிருந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அதிபருக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காலைக்கூட்டத்தில் பாடசாலையின் வரலாறுகளையும், அதன் வெற்றிகளையும் அடுக்கிக் கொண்டே போனார் அதிபர். வெற்றிக்களிப்பில் சில மாணவர்கள் தங்கள் முகங்களை இறுக்கமாய் வைத்துக் கொண்டு முன்வரிசையில் நின்றிருந்தனர். 

ரவி சேர் மட்டும் தன் கையில் கிடக்கும் பிரதீபனின் மடலில் கரைந்து மூழ்கியிருந்தார். 

மதிப்புக் குரிய ஆசிரியருக்கு பிரதீபன் எழுதிக்கிறது நான் நல்ல சொகம் நீங்க சொகமா வாழ கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். சேர், ஒங்கக்கிட்ட தனியாகப் பேசுறதுக்கு பலமுறை முயச்சி செஞ்சேன் ஆனா முடியல. இந்த கடுதாசி ஓங்க கையில கெடைக்கிறப்ப நான் எங்க இருப்பேனு எனக்கே தெரியல ஸ்கூல்ல எல்லோரும் என்ன தப்பாத்தான் பாக்குறாங்க அது ஏன்னுதான் எனக்கு புரிய மாட்டிக்கிது. அன்னக்கி என்னோட பேக்குல கசிப்பு போத்த இருந்தது உண்மதான் சேர் எங்க சித்தப்பா கசிப்பு விக்கிறனால கொண்டு வந்து வெச்சிருக்கிறாறு எனக்கு சத்தியமா தெரியாது இத நான் சொன்னாலும் யாரும் நம்பமாட்டீங்க. காலையில் வார அவசரத்துல இது தெரியாம பேக்க எடுத்துக்கிட்டு வந்துட்டேன். இந்த விசியம் சித்தப்பாவுக்கு தெரிஞ்ச நால கம்பிய பழுக்க வச்சி சூடு வச்சி, என்ன வீட்டவிட்டு வெரட்டிட்டாறு எனக்கு வாழவே புடிக்கல சேர் அதுக்கு சுட்டி நான் கொழும்புக்கு வேலக்கி போறேன். இனி ஒங்கள சந்திக்க கெடைக்குமானு தெரியல அதுனால ஒங்கக்கிட்ட ஒன்னு மட்டும் சொல்லனுமுனு தோனிச்சி “தெறமையான புள்ளைகளுக்கு மட்டுந்தான் பள்ளிக் கொடத்துல எடம் கொடுக்கிறாங்க எனக்கெல்லாம் அது ரெம்பத் தூரம் இல்லயா சேர்?” 

என்று நீளும் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டிக் கொண்டு தலையில் அடித்தது போல் அவரினுள் விழ பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காய் காலைக்கூட்டம் எழுப்பிய கரகோஷம் வானைப் பிளந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் ரவி சேர் மட்டும் வகுப்பறைகளில் புதைந்துக்கிடக்கும் துயரக் காவியங்களுக்காய் அழுதுக் கிடந்தார். 

– வெண்கட்டி ஆண்டுமலர்

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *