ரேவதம்
கதையாசிரியர்: அனந்த் ரவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2026
பார்வையிட்டோர்: 457

இருள் விலக ஆரம்பித்திருந்தது. வெளிச்சப் புள்ளிகள் ஆங்காங்கே தென் படத் தொடங்கியிருந்தன. கழுத்து மணிகளின் சப்தத்துடன் பெருநடையில் வந்து கொண்டிருந்தன காளைகள். காளைகளின் காலடி சப்தம் கேட்டு அசிரத்தையாக கழுத்தைத் திரும்பின இருளின் கடைசி இழைகளைச் சுவைத்துக் கொண்டு தரையில் கிடந்த மாடுகள். காளைகளின் காலடிப் பட்டு புழுதி எழும்பி நாலாபுறமும் பரவிக் கொண்டிருந்தது. வண்டியின் அடியில் கட்டியிருந்த லாந்தர் விளக்கு வெளிச்சத் தூண்களை அந்த மண் புகையின் ஊடே இப்படியும், அப்படியுமாக வீசிக் கொண்டிருந்தது.
வண்டியின் ஆட்டத்திற்கேற்ப ரேவதியின் தலை ஆடி ஆடி மீண்டது. ஆனால் அவள் மனதில் அப்பியிருந்த உணர்ச்சிகளோ எதையும் பொருட்படுத்தவில்லை. “இதோ, இதோ” என்று பரபரத்துக் கொண்டிருந்தாள் அவள். உடல் முழுவதுமே என்னவென்றுத் தெளிவாக சொல்லிவிட முடியாத உணர்ச்சிப் பரவிக் கிடந்தது. பயமா,சந்தோஷமா, என்னவென்று அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கை கால்கள் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தன. அம்மாவின் உணர்ச்சி ஓட்டங்களை கொஞ்சமும் புரிந்துக் கொள்ளாதவளாக, பைரவி கண்ணயர்ந்திருந்தாள்.
சில தெரு நாய்கள் சந்தேகத்துடன் பார்த்துப் பின் இலேசான உறுமலுடன் விலகிக் கொண்டன. ஒரு வேளை இன்னமும் ரேவதியின் வாசம் அந்த கிராமத்து மண் புழுதியில் விரவிக் கிடக்கிறது போலும். “பதினைந்து வருடங்கள்..!! ஹப்பா”என்று சிலிர்த்துக் கொண்டாள் ரேவதி. வண்டி ஓட்டியின் “ஹோ! ஹோ!” என்கிற இரைச்சலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பெரு நடையாகவே நடந்துக் கொண்டிருந்தன காளைகள். கிராமம் விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே சாணி நீரை தெருவில் இறைக்கும் மணம் அவளை சூழ்ந்தது.
மசமசவென்று கண்ணுக்கு கிராமம் தெரிய ஆரம்பித்த பொழுது அந்த வண்டி இடத்தை அடைந்து விட்டிருந்தது. கண்களை மூடி ஒரு கணம் பிரார்த்தனை செய்து விட்டு, மெல்ல வண்டியிலிருந்து கீழே குதித்தாள் ரேவதி. அம்மாவை தொடர்ந்து பைரவியும். அவர்களின் வருகையை எதிர்பார்த்து திண்ணையில் அமர்ந்திருந்த தாத்தா கைத்தடியை வாகாகப் பிடித்துக் கொண்டு எழுந்திருந்தார். கனத்து வெளுத்திருந்த இமைகளின் மேல் தன் கைகளைக் குவித்து பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார்.
“தாத்தா!”என்று குரலை எழுப்பி அவரை நெருங்கினாள் ரேவதி.
“ரேவதி!”என்று மென்மையாக ஆச்சரியப் பட்டுக் கொண்டார் தாத்தா. அவளின் தலையை தடவினார். வயதான உடல் நடுங்க கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவளை உற்று நோக்கினார்.
“எப்படி தாயி இருக்கே?”
“இருக்கேன் தாத்தா!” புன்முறுவல் பூத்தபடியே அவரின் கால்களைத் தொட்டு வணங்கினாள் ரேவதி.
“இதுதான் உன் புள்ளயா!?” நெருங்கிய பைரவியை இடுங்கிய கண்களால் பார்த்தபடி கேட்டார் தாத்தா. பைரவியும் தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கினாள்.
அந்த வீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. அவளின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. கண்ணீரால் பார்வை தடுமாறியது.
“வா தாயி”என்றபடி வீட்டினுள் நுழைந்தார் பெரியவர். தாத்தாவின் உபயத்தால் வீடு வெள்ளை அடிக்கப் பட்டிருந்தது.தன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தபடி குமுறும் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டவளாக நடந்தாள் ரேவதி ஒரு தெய்வத்தின் சன்னிதானத்தில் நுழைவதைப் போல. மகிழ்ச்சியும், துயரமும் அவளை அலைகழிக்க உணர்ச்சிகள் அழுத்திக் கொண்டிருந்தன.
வேகமாக உள்ளே செல்ல முடியாமல், புதை மணலில் நடப்பது போல ரேவதியின் கால்கள் துவண்டுக் கொண்டன. பழைய நினைவுகள் புகை போல அவளை சூழ்ந்து கொண்டு அவஸ்தைப் படுத்த முன்னும் பின்னுமாக கால்கள் தள்ளாட தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மிகவும் சிரமப் பட்டாள் ரேவதி. அவளின் தடுமாற்றத்தைப் புரிந்துக் கொண்டவராக மெதுவாக நகர்ந்து வெளியே வந்து கொண்டார் தாத்தா. “அவுக தனியாவே இருக்கட்டும்.”
வீடு சுத்தமாகத்தான் இருந்தது. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல நகர்ந்தாள். அந்த படம் அதே இடத்தில் மாட்டப் பட்டிருந்தது. எங்கிருந்து கழட்டி வீசப் பட்டதோ அங்கேயே. அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அவள் கண்கள் குளமாகின. முழங்கால்கள் அவளை வீழ்த்தி விடுவது போல துவண்டன. “அப்பா!” என்றுக் கலங்கினாள். ஒரு கணம் தான் சிறுமியாக அந்த வீட்டில், புகுந்து புகுந்து வந்தது அவள் மனக் கண்ணில் தெரிந்தது. “எத்தனை ஆண்டுகள்!” கலங்கியக் கண்களை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் ரேவதி. எதுவுமே புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் பைரவி. சிறிது நேரத்தில் தன்னை ஆசவாசப் படுத்திக் கொண்டவளாக கூடத்தில் இருந்து நகர்ந்து அறைக்குள் நுழைந்தாள் ரேவதி. தியாகராஜ ஸ்வாமிகளின் படம் கூட பளிச்சென்று இருந்தது. நேற்று மாலையிலோ இரவிலோ போடப் பட்டிருந்த மாலை வெகுவாக வாடாமலேயே இருந்தது.
அவளை வீழ்த்தியது அந்த தம்புராதான். குப்பை இல்லாமல் துடைத்து வைத்திருந்தார் தாத்தா. அதைக் கண்டவுடன் பசுவைக் கண்ட கன்றைப் போல ஓடினாள் ரேவதி. அதைத் தன்னோடு சாய்த்துக் கொண்டு அப்படியே வீழ்ந்தாள். மாறி மாறி அதை தன்னோடு இணைத்துக் கொண்டாள். “அம்மா என்னம்மா இது?” என்று படபடத்தாள் பைரவி.
ஆனால் அதெல்லாம் ரேவதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. வெள்ளமாகக் கண்ணீர் பெருக அந்த தம்புராவை இறுக அணைத்துக் கொண்டிருந்தாள். கேவிக் கேவி தன்னை கரைத்துக் கொண்டிருந்தாள். “அப்பா, அப்பா” என்று அவள் நடுங்கும் உதடுகள் முனகிக் கொண்டே இருந்தன. சில வினாடிகளில் கண்களை ஒரு வெறியோடு திறந்தவள், பைரவியைப் பிடித்து இழுத்தாள். “வாடி இங்கே. பிடி இதை. கூட்டு ஸ்ருதியை”என்று கத்தினாள். மிகவும் பய பக்தியோடு, ஒரு கண்ணாடிப் பேழையை தொடுவது போல மெல்ல அந்த தம்புராவை வாங்கித் தன் மடியில் இருத்திக் கொண்டாள் பைரவி. அவளுக்கும் என்னவோ போல இருந்தது. ஏதோ ஒரு சக்தி தன்னை உந்துவதைப் போல, ஒரு இனம் காண முடியாத மயக்கத்தில் தான் விழுந்துக் கொண்டிருப்பது போல.
கண்களை மூடி, மெல்ல தம்புராவின் கம்பிகளை வருடினாள் பைரவி. குப்பென்று அந்த வீடே உயிர் பெற்று எழுந்ததைப் போல இருந்தது ரேவதிக்கு. . பதினைந்து வருடங்களுக்குப் பிறகு….மீட்டாமலேயே கிடந்த அந்த தம்புரா மெல்லத் துடிக்க ஆரம்பித்தது. வாசமும், மென்மையும் தன்னகத்தே ஏராளமாகக் கொண்ட ஏதோ ஒன்று, ஒரு புகையாக இருக்கலாம், அந்த வீட்டை, அந்த மனிதர்களை இதமாக சூழ ஆரம்பித்தது. துள்ளியெழுந்த அந்த ஆதார சுருதி ரேவதியை அப்படியே புரட்டிப் போட்டது. கண்களில் கண்ணீர் மல்க அப்படியே பிரமை பிடித்தவள் போல அமர்ந்தாள். ஜில்லென்ற தரை அவளை குளிர்வித்தது. ஏதோ ஒன்று, வெகு காலமாக பொத்தி பொத்தி வைத்த ஒன்று பீறிட்டுக்கொண்டு வெளிப் பட்டதைப்போல உணர்ந்தாள் ரேவதி. இண்டு, இடுக்கெல்லாம் நுழைந்து அந்த வீட்டை நிரப்பியது தம்புராவின் கணீரென்ற நாதம்.
“இதோ, இதோ”என்ற துடிப்பில் இருந்தாள் ரேவதி. எது நடக்க வேண்டும் என்று பதினைந்து வருடங்களாகக் கனவு கண்டுக் கொண்டு இருந்தாளோ அது நடக்கப் போகிறது, நடக்கிறது என்பது அவளை சிலிர்க்க வைத்தது. கண் பார்வையை கண்ணீர் மறைக்க பைரவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
சிலிர்த்து எழும் அந்த தம்புராவின் நாதத் துளிகளோடு தன் குரலை இழைக்க தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தாள் பைரவி. சா, பா, சா என்று அகாரத்தில் மேலும் கீழுமாக ததும்பிக் கொண்டிருந்தாள். தாத்தாவும் உள்ளே வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார். திரும்பி ரேவதியைப் பார்த்து “நீயும்தான் பாடேன்”என்பது போல கண்களை இடுக்கிப் பார்த்தார். “ஐயோ”என்று வாயைப் பொத்திக் கொண்டாள் ரேவதி. சட்டென்று ஏதோ நினைவு வந்தவளைப் போல தம்புரா மீட்டுவதை நிறுத்தி விட்டு, எழுந்து நின்று கண்களை மூடி தன் தாத்தாவின் படத்தைப் பார்த்து ஏதோ வேண்டிக் கொண்ட பைரவி, இலேசாகக் கலங்கும் கண்களோடு அப்படியே விழுந்து நமஸ்கரித்தாள்.
அடுத்த நிமிடத்தில் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது தம்புரா. “உம்ம்”என்று சில வினாடிகள் தன் குரலை ஸ்ருதியோடு இழைத்தாள் பைரவி. தன்னுடைய அழுத்தமான குரலில் “கஜவதனா கருணா சதனா” என்ற ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை மென்மையாகக் குரலை உயர்த்திப் பாட ஆரம்பித்தாள் பைரவி. அந்த நேரத்தில் அந்த கிராமமே அமைதியாக இருந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே நின்று அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெகு நாட்களுக்குப் பிறகு ரேவதியைப் பார்த்தவர்கள் அவளோடு பேசவேண்டும் என்று முதலில் நினைத்து, பின் அவளின் உணர்ச்சிகளைப் புரிந்தவர்களாக நகர்ந்து நின்று கொண்டனர். மிகவும் மென்மையான, அதே சமயம் பாடாந்தரத்தால் பண் பட்ட தன் குரலை வளைத்து நெளித்து உணர்ச்சிகளையும் ஊடே ஊடே தெளித்து பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தாள் பைரவி. ஸ்ரீரஞ்சனியை முடித்துக் கொண்டவள், ஒரு சில விநாடி நேரங்களே எடுத்துக் கொண்டு, மீண்டும் பேகடாவில் “வல்லப நாயக” கீர்த்தனையை எடுத்துக் கொண்டாள். அம்மாவின் கனவு, கோபம், அவளுக்கும் கொஞ்சம் தெரியுமாதலால், அந்த உணர்ச்சியை முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு தன்னையும் அந்த யாகத்தில் அழுத்திக் கொண்டு உணர்ச்சிக் கொந்தளிப்போடும் இழைந்து இழைந்து பாடினாள் பைரவி.
தம்புராவின் நாதமா அல்லது அந்த சிறுமியின் குரலா என்ற வேறுபாடே தெரியாமல் சுருதி சேர்ந்து பாடலில் தன்னையே மறந்து அந்த சூழ்நிலையால் உந்தப் பட்டவளாகப் பாடிக் கொண்டிருந்தாள் பைரவி. அவளுக்கும் அம்மாவின் கனவுகள் தெரியும். சபதம் தெரியும். தன்னை கரம் பிடித்தவனால் தடை செய்யப் பட்ட சங்கீதத்தை தான் மீண்டும் பாடுவதே இல்லை என்று சபதம் செய்திருந்தாள் ரேவதி. எந்த சங்கீதம்தான் தன் உயிர் என்று எண்ணியிருந்தாளோ அந்த சங்கீதம் இல்லாமலேயே ஒரு வறண்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாள்.
மண வாழ்க்கை தன் சங்கீதத்தைக் கொன்று விடும் என்பது அவள் சற்றும் எதிர்பாராதது. சங்கீதத்துக்காகவே வாழ்ந்த ரேவதியின் தந்தை ஏமாந்துதான் போனார். ரேவதியும்தான். அவளுக்குக் கிடைத்த பேரும், புகழுமே அவளின் மணவாழ்க்கையை முறித்து எறிந்தன.
“நா தானே பாடக் கூடாது!?”
இரண்டு வயது பைரவியை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டாள் ரேவதி.
கணவனைப் பிரிந்த பிறகு ஒருவித வெறியோடு நல்ல தேர்ந்த வித்வானிடம் பைரவியை சேர்த்து சங்கீதத்தை சொல்லிக் கொடுத்தாள். புலிக்கு பிறந்தது புலியாகவேதான் இருந்தது. அம்மாவை அச்செடுத்ததைப் போல அப்படியே சங்கீத சிரோன்மணியாகப் பிறவி எடுத்திருந்தாள் பைரவி. வெகு சீக்கிரத்தில் கற்றுத் தேர்ந்து சங்கீதம் என்ற மகாஞானம் கை வரப் பெற்றாள் குழந்தை.
தன்னை அழுத்தும் நினைவுகளில் இருந்து மெதுவாகத் தன்னை மீட்டுக் கொண்டாள் ரேவதி. அங்கிருந்த அந்த கிராமத்து மனிதர்களுக்கு அந்த கீர்த்தனைகளோ ராகமோ ஒன்றும் புரியவில்லை என்றால் கூட, அந்த வார்த்தைகளுக்கு, அந்த குரலுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். அந்த அமைதியான காலை வேளையை அந்த பாட்டு மேலும் இனிமையாக்கியது.
ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் பைரவி சங்கீதத்தில் ஆழ்ந்திருந்த பிறகு, ரேவதி அவளின் தோளைத் தொட்டாள். தன்னை மறந்து இசைக் கடலில் மூழ்கியிருந்த சிறுமி மெல்லக் கண் திறந்தாள். அவள் கண்களும் கலங்கித்தான் இருந்தன. தம்புரா மேலும் இரண்டு நிமிடங்களுக்கு இசையைப் பரப்பி விட்டு மெல்ல ஓய்ந்தது. அதற்கு பிறகும் கூட, அந்த தம்புராவின் குளுமை இரை தின்று முடித்த ஒரு மலைப்பாம்பு கிடப்பதைப்போல அங்கே பரவிக் கிடந்தது.
அப்பாவின் காலடியில், அவருடைய ஆன்மா உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே வீட்டில், தன் பெண்ணின் அரங்கேற்றம் நிகழ்ந்து விட்டது என்பது ரேவதிக்கு பெருமிதமாக இருந்தது. தன்னுடைய சங்கீதம் காட்டுத்தனமாக நிறுத்தப்பட்டு விட, அதை விட பன்மடங்கு மிளிர்வோடும், உயிர்ப்போடும், இனிமையோடும் பைரவியின் குரல் வழியாக புகுந்துப் புறப்பட்டு விட்டாள் ரேவதி. சங்கீதமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த அப்பாவின் உயிர் பிரிந்த அதே வீட்டில், தன் மகளைக் கொண்டுவந்து பாட வைத்தே ஆக வேண்டும் என்கிற அவளுடைய வெறி படிப்படியாக அடங்கியது.
“தாத்தா”என்று திரும்பினாள்.
“என்ன தாயீ?”
“இனிமே இந்த வீட்டை வித்துடலாம் தாத்தா”
சில வினாடிகள் மௌனமாக நின்றவர், “ஆகட்டும் தாயீ” என்றார்.
தொடர்புள்ள சிறுகதைகள்
கல்விக்கண்
நெல்லை அன்புடன் ஆனந்தி
October 29, 2026
பரிகாரம்
இரா.துரைமாணிக்கம்
October 29, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 29, 2026