ருத்ராபிஷேகம்




பல வருடங்களுக்கு முன் ஒரு சித்ரா பெளர்ணமி தினம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹான்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பதினோரு வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், முல்லைவாசல் மிராசுதார் நீலகண்ட ஐயர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம் மதியம் ஒருமணி அளவில் பூர்த்தியடைந்தது.
காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் அபரிதமான பக்தி கொண்டவர் நீலகண்ட ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார்.
அதன்படி பிரசாதத்தை மிகுந்த பயபக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப்பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக்கொண்டார். தன்னுடைய அம்பாஸிடர் காரில் ஏறி காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நீலகண்ட ஐயர்.
மறுநாள் கலையில் குளித்துவிட்டு மடியாக காஞ்சி மடம் வந்து பிரசாதத்துடன் பெரியவாளின் தரிசனத்திற்காக காத்திருந்தார். பகல் பன்னிரண்டு மணியளவில் ஸ்ரீசந்திரமெளலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மஹா ஸ்வாமிகள். அன்று மடத்தில் ஏகக் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை.
மிராசுதாரரின் தவிப்பையும், பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். மஹா ஸ்வாமிகள் அவரை ஏறிட்டுப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்பதுபோல் புருவங்களை உயர்த்தினார்.
மிராசுதார் பிரசாத மூட்டைகளை பிரித்தபடி, “பிரசாதம், பிரசாதம் பெரியவா” என்று குழறினார். “இதெல்லாம் எந்த ஷேத்திர பிரசாதம்?”
மிராசுதார் தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு மிக வினயமாக, “நேத்திக்கு திருவிடைமருதூர்ல மஹாலிங்க ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் பண்ணினேன். ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம்… அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேள் என்பதற்காக எடுத்துண்டு ஓடிவந்தேன்.. பெரியவா வாங்கிண்டு அனுக்கிரஹனம் பண்ணனும்…” என்றார்.
பெரியவா, “நீலகண்டா நீ பெரிய மிராசுதான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரையேனும் கூட்டு சேர்ந்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தைப் பண்ணினியா?”
“இல்ல இல்ல நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்…”
அந்த ‘நானே’வுக்கு சற்று அழுத்தம் கொடுத்தார். பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
“லோக ஷேமத்துக்காக திருவிடைமருதூர்ல அபிஷேகம் பண்ணியாக்கும்?”
“இல்லே, ரெண்டு மூணு வருஷமாவே வயல்களில் சரியான வெளச்சல் கிடையாது. சில வயல்கள் தரிசாவே கிடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பார்த்தேன்… அவர்தான் சித்ரா பெளர்ணமி அன்னிக்கு மஹாலிங்க ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடத்து, அமோகமா வெளச்சல் கொடுக்கும்னார். அதை நம்பித்தான் பண்ணினேன் பெரியவா…”
எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. பெரியவா இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை.
“அப்படீன்னா, ஆத்மார்த்ததுக்காகவோ, லோக ஷேமத்திற்காகவோ நீ இதைப் பண்ணலைன்னு தெரியறது…” சற்றுநேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார். பத்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு…
கண்மூடித் தியானித்த பத்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டுவிட்ட ஞானப்பார்வை. பெரியவாளையே பார்த்தபடி அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?”
“பதினோரு வேத பண்டிதர்கள்…”
“வைதீகாள் எல்லாம் யார் யாரு? நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?” என்று விடாப்பிடியாக விசாரித்தார்.
இதயெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு பெரியவா என் இப்படித் துருவி துருவி விசாரணை செய்கிறார் என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படிக் கேள்விகள் கேட்க மாட்டார் என்பதையும் புரிந்துகொண்டார்கள்.
“சொல்றேன் பெரியவா… திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள்; சீனுவாச கனபாடிகள்; ராஜகோபால சிரோளதிகள்; மருத்துவக்குடி சந்தான வாத்தியார்; சுந்தர சாஸ்திரிகள்; சுப்ரமண்ய சாஸ்திரிகள்; திருமலங்குடி வெங்கிட்டு வாத்தியார்; அப்புறம்…” என்று இழுத்தார்.
“எல்லாம் பெரிய அயனான வேதவித்துக்கள்தான்… அதுசரி, தேரெழுந்தூர் வெங்கடேச கனபாடிகள் வந்தாரா?” என்று இயல்பாக பெரியவா கேட்டார்.
ஒரே ஆச்சர்யம்!! “ஆமாம் பெரியவா, அவரும் ஜபத்திற்கு வந்திருந்தார்…”
சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு.
“பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகளையும் அழைத்திருந்தாயா? ரொம்ப நல்ல காரியம். மஹா வேதவித்து அவர். அவருக்கு இப்ப ரொம்ப வயசாயிடுத்து, குரல் எழும்பறதுக்கே ரொம்பச் சிரமப்படும்… ஜபத்தை மூச்சடக்கி சொல்வதற்கு ரொம்பக் கஷ்டப்படுவார்”
“ஆமாம் பெரியவா, நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் ருத்ரம் சரியாகவே ஜபிக்கல. சிலநேரம் வாயே திறக்காம கண்ணை மூடிண்டு ஒக்காந்திருக்கார்… அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால ஜபஎண்ணிக்கையும் கொறயறது. நேத்திக்கு அவர் எனக்கு ரொம்ப சிரமம் கொடுத்திட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து…”
இதைக் கேட்டதும் பொங்கிவிட்டார் பெரியவா…
வார்த்தைகளில் கோபம் கொப்புளிக்க, “என்ன சொன்னே, என்ன சொன்னே நீ? பணம் இருந்தா எதை வேணும்னாலும் பேசலாம் என்கிற திமிரா? தேரெழுந்தூர் வெங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சங்கள் பற்றி உனக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவாயா நீ? அவரைப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்? நேத்திக்கி மஹாலிங்க ஸ்வாமி சன்னதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நான் புரிஞ்சுண்டுட்டேன்… நான் கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு…”
“…………………..”
“நேத்திக்கு ஜப நேரத்துல கனபாடிகள் முடியாமல் கண்கள் மூடி உட்கார்ந்திருந்த நேரத்ல அவர்கிட்ட போய் கடுமையாக ஏங்காணும் காசு வாங்கலே நீர்? இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்துருக்கீரேன்னு அவரிடம் கத்தினது உண்டா இல்லியா?” என்று பெரியவா பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றார் நீலகண்ட ஐயர். கூட்டமும் பிரமித்துப் போனது.
கால்கள் நடுங்க பெரியவா முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார் நீலகண்ட ஐயர். பெரியவா ஒன்றுமே சொல்லவில்லை. ஐயர் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக்கொண்டு “தப்புதான் பெரியவா… நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து ஸ்வாமி சன்னதியில் நான் சொன்னது வாஸ்தவம்தான். பெரியவா என்னை மன்னித்து அருள வேண்டும்.” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை.
“நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு தட்சிணை கொடுத்தே?”
“தலைக்குப் பத்து ரூபாய் கொடுத்தேன் பெரியவா.”
“உண்மையைச் சொல்லு, எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூபாயா கொடுத்தே? நேக்கு எல்லாம் தெரியும்.” என்று மடக்கினார்.
“…………..”
“நோக்கு சொல்ல வெக்கமாயிருக்கு போல… வைதீகாளை ஒக்காத்திவச்சு தலைக்கு பத்து ரூபாய் ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே… தேரெழுந்தூர் கனபாடிகள் கிட்டே வந்தபோது இவர்தான சரியாவே ருத்ரம் சொல்லலியே, இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்னு தீர்மானிச்சு ஐந்து ரூபாய் ஸம்பாவனை கொடுத்தே. ஏதோ அவரைப் பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா? நீ கொடுத்ததை அமைதியா வாங்கிண்டார். என்ன நான் சொல்றதெல்லாம் சரிதானே?” உஷ்ணமானார் பெரியவா.
பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்துப் போயினர்.
“தப்புத்தான் பெரியவா… ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்கோ…”
“சாப்பாட்டின் போது சர்க்கரைப் பொங்கல் நீ பரிமாறினியே, அதை பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒன் மனசாட்சி சொல்றதா?”
நீலகண்ட ஐயர் வெலவெலத்துப் போனார்.
“சர்க்கரைப் பொங்கல் ரொம்ப ருசியா இருந்ததாலே வைதீகாள்லாம் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டா. நீயும் போட்டே. ஆனால் தேரெழுந்தூர் வெங்கடேச கனபாடிகள் பல தடவைகள் வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ அவருக்குப் போடாம போனியா இல்லியா? ஒரு வயதான பிராமணருக்கு நீ பந்தி வஞ்சனை பண்ணிட்டியே, இது தர்மமா?”
மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டார் பெரியவா.
மிராசுதார் நீலகண்ட ஐயர் தலைகுனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது.
கண்களை மூடி கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் பெரியவா. அசையவில்லை. சட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம்.
பத்து நிமிடங்கள் அமைதி. பின்பு கண்களை மெதுவாகத் திறந்தார். பிறகு நீலகண்ட ஐயரைப் பார்த்து தீர்க்கமாக. “மிராசுதார்வாள், ஒண்ணு தெரிஞ்சுக்கணும், கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தியேழு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலிருந்து எத்தனையோ ஷேத்திரங்களில் ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மஹான் அவர். அவர்கிட்ட நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம்…”
குரல் உடைந்து மேலே பேச முடியவில்லை பெரியவாளால். கண்மூடி மெளனமாகிவிட்டார்.
“நீ பந்தி பேதம் பண்ணின காரியமிருக்கே, அது கனபாடிகள் மனசை ரொம்பவே பாதிச்சிடுத்து. அவர் நேத்திக்கு சாயங்காலம் நேரா தேரெழுந்தூர் கோயிலுக்குப் போய் செங்கமலத் தாயார் முன்னின்று கண்களில் நீர்வழிய, தாயே நான் உன்னோட பரமபக்தன்… பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவைகள் ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். இப்போ எனக்கு எண்பத்தியேழு வயசாறது, மனசுல பலமிருக்கு,,, ஆனா வாக்குல அந்த பலம் போயிடுத்து தாயே!
இன்னிக்கி மத்யானம் நடந்தது நோக்கு தெரியாம இருக்காது அந்த சக்கரப்பொங்கல் ரொம்ப ருசியா இருந்ததேன்னு இன்னும் கொஞ்சம் போடுங்கோன்னு வெக்கத்த விட்டுக் கேட்டேன். மிராசுதார் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகர்ந்து போயிட்டார். நேக்கு சக்கரைப் பொங்கல்னா உசுருன்னு நோக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டு கேட்டும் அவர் போடலியேன்னு ரொம்ப தாபப்பட்டேன்… இந்த வயசுல இது தப்புதான் தாயே!! இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் எந்த தித்திப்பு வஸ்துவையும் தொடமாட்டேன் தாயே… கண்களில் ஏராளமாக கண்ணீர் வழிய தாயாரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றுவிட்டார்…. இப்போ சொல்லு நீ பண்ணின காரியம் தர்மமா?”
பெரியவா காலில் விழுந்து கேவிக் கேவி அழுதபடி, “நான் பண்ணியது மஹா பாவம். அகம்பாவத்தில் அப்படிப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ பெரியவா. இதுக்கு நான் என்ன பிராயச்சித்தம் பண்ணனும் சொல்லுங்கோ…” கன்னத்தில் அறைந்துகொண்டார்.
பெரியவா விருட்டென்று எழுந்துகொண்டார். “இந்த மஹாபாவத்துக்கு பிராயச்சித்தம் நான் சொல்ல முடியாது. நோக்கு ப்ராப்தம் இருந்தா தேரெழுந்தூர் வெங்கடேச கனபாடிகள் நிச்சயம் உன்னிடம் சொல்வார்….” விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டார். அப்புறம் பெரியவா வெளியே வரவே இல்லை.
நீலகண்ட ஐயர் உடனே மறுநாள் காலையில் தேரெழுந்தூர் சென்று கனபாடிகள் வீட்டைத் தேடிச் சென்றார். ‘எப்படியும் அவரை நேரில் பார்த்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர் சொல்லும் பிராயச்சித்தத்தை நிறைவேற்றிவிட வேண்டும்’ என்கிற வைராக்கியம் நீலகண்ட ஐயருக்கு. எதிரே வந்த ஒருவரிடம் கனபாடிகள் க்ருஹம் எங்கே என்று படபடப்புடன் விசாரித்தார்.
உடனே அவர், வெளியே கூட்டமாக பலர் நின்றிருந்த வீட்டைச் சுட்டிக்காட்டி “துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? பாவம் நேத்திக்கு ராத்திரி திடீர்ன்னு போய்ட்டார்…”
நீலகண்ட ஐயர் பிரமித்து நின்றுவிட்டார்.
பெரியவா நேற்று சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது. “…நோக்கு ப்ராப்தம் இருந்தா தேரெழுந்தூர் வெங்கடேச கனபாடிகள் நிச்சயம் உன்னிடம் சொல்வார்…”
ஆமாம், பெரியவாளுக்கு நேத்திக்கே தெரிஞ்சிருக்கு.
கனபாடிகள் க்ருஹத்திற்கு சென்று மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கனபாடிகள் பூதவுடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். முல்லைவாசல் புறப்பட்டார்.
அதன்பிறகு பலவிதமான துன்பங்களுக்கு ஆளான நீலகண்ட ஐயர், தன் சொத்துக்களையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களில் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணிவிட்டு, இறுதியாகக் காசி ஷேத்திரத்தில் போய் காலகதி அடைந்தார்.
Very True in real life! Money, Power and Ego play a dirty game and the real talents are neglected and brushed aside!. Neela kanda Iyer is an example for killing an Atma.
Good narration, though based on a real story observed by Kanchi Bhaktas.
மிக அற்புதமாக கதாசிரியர் திரு கண்ணன் அவர்கள் ருத்ராபிசேகம் கதையை வரைந்திருக்கிறார். ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. மகா பெரியவா மனதை ஆக்கிரமித்து விட்டார்