ரிக்ஷா வண்டி மர்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 895 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முன்னுரை

எனக்குச் சில சமயங்களில் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுவது உண்டு. ஒரு முறை சைனா பஜார் ரோட் வழியாய்ப் போய்க்கொண் டிருந்தேன். ஒரு காப்பி ஹோட்டலுக்கு எதிரில் வந்ததும் வயிறு ‘கொடுக்கா கொடுக்கா’ என்றது. காப்பி சாப்பிட லாம் என்று ஹோட்டலுக்குள் நுழையப் படிக் கட்டின்மேல் காலை வைத்தேன். ‘முதலில் பொரு ளாதார நிலைமை எப்படி இருக்கிறது பார்ப்போம்’ என்று தோன்றவே சட்டைப் பைக்குள் கையை விட்டு வெளியில் எடுத்தேன். வெறுங்கை வெளி வந்தது. “தூ! தரித்திரம்! எப்போதும் இப்படித் தான்; நம் தரித்திரம் விடியாது” என்று முணு முணுத்துக்கொண்டு மேலே நடந்தேன். ஒரு ரிக்ஷா வண்டிக்காரன் வெறும் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு எனக்கு எதிர்ப்புறமாக வந்துகொண்டிருந்தான். அவன் ரிக்ஷாவை நிறுத்தி, “வண்டி. ஓணுமா, சாமி?” என்றான்.

“என்ன விலை?” என்று கேட்டேன்.

“விலைக்கு விக்கிறது இல்லிங்க, சாமி. நீங்க எங்கேயானும் போகணுமானா இதில் உக்காந்துண்டா நான் இழுத்துண்டு போவேன்” என்றான் அவன். அவன் பேச்சிலிருந்தும் புன்னகையி லிருந்தும் அவன் என்னை ஏதோ நாட்டுப்புறம் என்று நினைத்துக்கொண்டது நன்றாகத் தெரிந்தது.

‘நம்மைவிட இந்த ரிக்ஷா வாலாவின் பாடு தேவலையே!’ என்று நினைத்துக்கொண்டு நான் ரிக்ஷாவில் ஏறிப் பேசாமல் உட்கார்ந்தேன்.

“எங்கே போகணும்?” என்றான் ரிக்ஷாக்காரன்.

“உனக்கு எங்கே இஷ்டமோ அங்கே போ” என்றேன்.

ரிக்ஷாவாலா என்னைக் கீழே இறக்கிவிட்டான். கொஞ்சநேரம் என்னை முறைத்துப் பார்த்தான். பிறகு வெகு வேகமாக ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு போய்விட்டான்.

‘நல்ல காலம், அந்தப் பைத்தியத்தினிட மிருந்து தப்பினேன்!’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த ரிக்ஷாக்காரனை ஏழெட்டு நாளைக்கு அப்புறம் மறுபடியும் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

ஒரு நாள் ராத்திரி ஸினிமாப் பார்த்துவிட்டுக் கொட்டகையை விட்டு வெளியில் வந்தபோது “சாமி, ரிக்ஷா ஓணுமா?” என்று கேட்டுக்கொண்டு அந்த ஆள் என் முன் வந்து நின்றான். மறு விநாடியில் என்னை அடையாளம் கண்டுகொண்டு அவசர அவசரமாக நடந்தான். நானும் அவன் பின்னாலேயே போய், “ரிக்ஷா வேண்டும். பார்க் ஸ்டேஷனுக்கு எவ்வளவு சத்தம்?” என்றேன்.

“இல்லிங்க. ஒத்தர் கூலி பேசிவிட்டுப் போயிருக்காரு. அவருக்காகக் காத்துண்டு இருக்கேன். இப்போ வர முடியாது” என்று பதில் சொன்னான்.

நான் வேறு வண்டி ஏதாவது அகப்படுமா என்று சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், ”ரிக்ஷா ஓணுங்களா?” என்று அந்த ரிக்ஷா வண்டிக்காரன் போகிறவர் வருகிறவர் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டு அலைந்தது என் காதில் விழுந்தது.

“சரிதான், அவன் நம்மிடம் சொன்னது பொய். நம்மை இழுத்துக்கொண்டு போக அவனுக்கு இஷ்ட மில்லை போலிருக்கிறது” என்று எனக்குள் சொல்லிக் கொண்டு, அவன் ரிக்ஷாவிடம் போய் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

“சாமி, சாமி,என்னால் இப்போ பார்க் ஸ்டேஷனுக்கு வர மாளாதுங்க” என்று ரிக்ஷா வண்டிக் காரன் பல்லைக் காட்டினான்.

“என்ன அப்பா, வலுவில் வருகிற கிராக்கியை வேண்டாம் என்கிறாயே? இந்தா அரை ரூபாய்” என்று அரை ரூபாயை ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். வேண்டா வெறுப்பாய் அதை வாங்கிக்கொண்டு ரிக்ஷாவை இழுக்க ஆரம்பித்தான்.

என் கைக் கடிகாரத்தில் மணி 12-30 ஆயிற்று. ஜனநடமாட்டம் இல்லாத வீதிகளின் வழியாக ரிக்ஷா வண்டி ஓடிற்று. ஓடிற்று’ என்று சொல்வது முற்றும் சரியல்ல. ஒரு சமயம் நடந்தது; ஒரு சமயம் ஊர்ந்தது; ஒரு சமயம் நின்று தூங்கிப்போய் விட்டது; மற்றச் சமயங்களில் ஓடிற்று. இந்த அநுபவங்கள் எல்லாம் ஆன பிறகுதான் ரிக்ஷா இழுப்பவன் சுய அறிவுடன் இல்லை என்று எனக்குத் தெரிய வந்தது. “ரிக்ஷாவாலா குடித்திருக்கிறான்” என்றேன். நல்ல காலமாக என் மனசுக்குள்சொல்லிக்கொண்டேன்.

“உங்களுக்கு எந்த ஊருங்க?” என்று முத்தையன் (இதுதான் அந்த ரிக்ஷாவாலாவின் பெயர்) கேட்டான். நான் பதில் சொல்லாமல் இருக்கவே பேச்சை மாற்றினான். “இந்த மாதிரி ஜனங்கள் இல்லாத இடத்திலே வண்டி இசுக்க எனக்கு எப்பவும் பயங்க” என்றான்.

“ஏன், விளக்கு வெளிச்சம் இருக்கிறபோது என்ன பயம்?”

“என்னாங்க? விளக்கு வெளிச்சமா? நீங்க ரிக்ஷா இஸ்துக்கினு போறச்சே மூணு தடியங்க சேத்து மடக்கி அடிச்சா இந்த விளக்கு என்னாங்க பண்ணும்?” என்று கேட்டான் முத்தையன்.

“பகவானே! நான் ரிக்ஷா வண்டிக்காரனைப் பார்த்துப் பொறாமைப் பட்டது வாஸ்தவந்தான். இருந்தாலும் எனக்கு எந்த விதமான கஷ்டத்தை வேண்டுமானாலும் கொடு; என்னை ரிக்ஷா இழுக்க மாத்திரம் செய்யாதே. அப்படிச் செய்தாலும் நான் தனியாக ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகும்போது மூன்று தடியர்களை விட்டு மடக்கி அடிக்கச் சொல்லாதே” என்று பிரார்த்தித்தேன்.

ரிக்ஷாவாலா மேலும் சொன்னான் :

“ஆமாங்க. ஒத்தனை மூணு பேர் சேந்து அடிச்சா அவன் என்னாத்தெப் பண்ணுவான்? ஆனால் நான் அவங்களைச் சும்மா விட்டேனா? மூணு பேருக்கும் நல்லா செலவுக்குக் கொடுத்தேங்க. ஆமாங்க, கொடுத்தேங்க.”

“உன்னை ஏன் மூன்று பேர் அடிக்கவேணும்? நீ விரோதியா அவர்களுக்கு?”

“நன்னாச் சொன்னீங்களே! முன்னே பின்னே நான் அவங்களைப் பார்த்தது கூடக் கிடையாது, சாமி.”

“பின் ஏன் உன்னை அடிக்கவேணும்? ஆள் மாறாட்டமா?”

“அது பெரிய கதெங்க” என்றான் முத்தையன். அவன் இப்படிச் சொல்லிவிட்டு நிறுத்தினதிலிருந்து “அது என்ன கதை?” என்று நான் கேட்கவேண்டும் என்று அவன் எதிர் பார்த்ததாகத் தெரிந்தது. உடனே, “அது என்ன கதை ? சொல் பார்க்கலாம்!” என்று நான் அவனை வேண்டிக்கொண்டேன். அவன் ஐந்து நிமிஷம் கிராக்கி செய்துவிட்டுப் பிறகு தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவன் சொன்ன கதையை இங்கே என் சொந்த நடையில் எழுதுகிறேன்.

1

முத்தைய ரெட்டிக்கு வண்ணாரப் பேட்டையில் ஒரு சின்ன வீடு இருந்தது. அந்த வீட்டில் தன் மனைவி குழந்தைகளுடன் அவன் ஏகபோகமாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மோட்டார் கம்பெனியில் ‘கேட் கீப்பர்’ வேலை. கையில் ஒரு தடிக் கம்புடன் கேட் அருகில் நின்றுகொண்டிருக்க வேண்டும். கம்பெனியின் சொந்தக்காரர் வரும் போதும் போகும்போதும் ‘அடென்ஷ’னில் நின்று ஸலாம் செய்யவேண்டும். நாள் முழுவதும் இதேதான் வேலை. மாசம் பதினைந்து ரூபாய் சம்பளம். இப்படி ஐந்து வருஷமாய் வேலையில் இருந்தான். திடீரென்று அந்த வேலைக்குச் சனியன் பிடித்தது. ஒரு நிமிஷ நோட்டீஸ்கூடக் கொடாமல் ஒரு மாசம் முதல் தேதியன்று அவன் கையில் சம்பளத்தைக் கொடுத்து, ‘முத்தைய ரெட்டியார்வாள், வீட்டுக்குப் போம். திரும்பி வராதேயும்!” என்று சொல்லிவிட்டார்கள். அவனுக்குப் பதில், பத்து ரூபாய் சம்பளத்தில் வடக்கேயிருந்து வந்த குள்ளன் ஒருவனை வைத்து விட்டார்கள். முத்தையன் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

“என்ன? இன்னிக்கிக்கூட இன்னிக்கிக்கூட லீவா?” என்று விசாரித்தாள் ஸ்ரீமதி செங்கமலம் முத்தையன்.

முத்தையன் உதட்டைப் பிதுக்கினான். “வேலை காலி. ஊட்டுக்குப் போகச் சொல்லிட்டானுங்க” என்றான்.

அவன் சொன்னதற்கு அர்த்தம் தெரியாமல் செங்கமலம் சிறிது நேரம் இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு நின்றாள். பிறகு விஷயம் புரிந்ததும், “வேலை பூட்டுதா? வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கினியா?” என்று கேட்டாள்.

“ஏ! நான் என்ன செய்யறது? கெஞ்சிக் கூத்தாடித்தான் பார்த்தேன். முடியாதுன்னு ஒரே அடியாச் சொல்லிட்டாங்க. என்னை என்ன செய்யச் சொல்றே?”

செங்கமலம் ஒன்றும் தோன்றாமல் வெகு நேரம் யோசித்தாள். பிறகு, “பொன்னுசாமி மகன் முனிசாமி இருக்கான் பாரு. அவன் ரிக்ஷா பழசாப் போச்சாம். புச்சா ஒண்ணு வாங்கணும்னு சொன்னான். அஞ்சோ பத்தோ கொடுத்தால் பழசை வித்துடுவான். போய்க் கேளு, ஓடு!” என்றாள்.

“என்ன? ரிக்ஷா இஸுக்கறதா! நன்னாச் சொன்னயே ! பொறுக்கிப் பயன்னு பாத்தியா என்னை?” என்று முத்தையன் கோபத்துடன் கேட்டான்.

“இல்லாட்டா ஈரத் துணியை நனைச்சு உன் பிள்ளை குட்டி வவுத்திலே போட்டுட்டு, நீயும் ஒண்ணு போட்டுண்டு குந்திக்கினு இரேன். நான் என் அப்பன் வீட்டுக்குப் போறேன். உனக்குக் ‘கவுணர்’ வேலை கிடைக்கும்னு பாத்துக்கிட்டு இருக்கியோ?” என்று சொல்லிவிட்டு, ஐக் என்று தலையை ஒருபுறம் அசைத்துவிட்டு, செங்கமலம் அழுகிற குழந்தையை எடுக்கப் போய்த் தன் கோபத்தில் அதற்கு இரண்டு அறை விட்டு இன்னும் அழ வைத்தாள்.

முத்தையன் வெகு நேரம் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தான். கடைசியில் பிழைப்புக்கு ஒரு வழியும் தெரியாமல் போகவே ரிக்ஷா இழுத்து வயிறு வளர்ப்பதைத் தவிர வேறு விதியில்லை என்று முனிசாமியின் பழைய ரிக்ஷா வண்டியை வாங்கத் தீர்மானித்தான். செங்கமலம் புடைவை வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாயை அவளிடம் கேட்டு வாங்கிக்கொண்டு முனிசாமியின் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அப்போது முனிசாமி வீட்டில் இல்லை. அவன் ரிக்ஷா மட்டும் வீட்டுக்கு வெளியில் கிடந்தது.

“முனிசாமி பூந்தமல்லிக்குப் போயிருக்கான். நாளைக்குத்தான் வருவான். என்ன சமாசாரம்?” என்று முனிசாமியின் தகப்பன் பொன்னுசாமி கேட்டான்.

“ஒண்ணுமில்லே; அவன் ரிக்ஷாவை வித்துடப் போறேன்னு சொன்னானாம். அதை விலைபேசி வாங்கலாம்னு நான் வந்தேன்” என்று முத்தையன் சொன்னான்.

“சரி; அதோ பாரு, அதுதான் ரிக்ஷா. வேணு மானா விலை கேளு. ரூவா கொடுத்துட்டீன்னா இப்போ வேண்ணாலும் ரிக்ஷாவை இழுத்துண்டு போகலாம்.”

“முனிசாமி இல்லாமே விலை பேசலாமா ?”

“அதுக்கென்ன? முனிசாமி வேறே? நான் வேறேயா? அதுவும் நான் வாங்கிக் கொடுக்காமே முனிசாமிக்கு ரிக்ஷா ஆகாசத்திலே யிருந்தா குதிச்சுது? நீ சும்மா விலை கேளப்பா!”

முத்தையன் ரிக்ஷாவை நன்றாக ஆராய்ந்தான். கொஞ்ச தூரம் இழுத்தும் பார்த்தான். பிறகு, “என்ன விலை வந்தால் கொடுப்பே?” என்று கேட்டான். பொன்னுசாமி பதினைந்து ரூபாய் சொல்ல, முத்தையன் ஏழு ரூபாய் கேட்கக் கடைசி யில் பத்து ரூபாயில் பேரம் முடிந்தது.

முத்தையனுக்குச் சொற்ப விலையில் ரிக்ஷாவை வாங்கிவிட்டதாக எண்ணம். அவசர அவசரமாகத் தான் கொண்டுவந்திருந்த பத்து ரூபாய் நோட்டைப் பொன்னுசாமியிடம் கொடுத்தான்; பிறகு, முனிசாமி வந்தபின் எங்கே அதிகம் கேட்பானோ என்று பயந்து பொன்னுசாமியிடம், “இனிமே வார்த்தை தவறப்படாது; ஆமாம்! முனிசாமி வந்து ஏதாவது சொன்ன என்னைக் கேட்காதே” என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவைத் தன் வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனான்.

2

மறு நாள் காலை ஒன்பது மணி இருக்கும். முத்தையன் பல் தேய்த்து, தோசை இட்லி சாப்பிட்டுக் ‘காப்பித்தண்ணி’யும் குடித்தானபின், இப்போ அஞ்சு ரூபாய் கொடுத்தால்தான் ஆச்சு என்று தன் மனைவியிடம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான். ரிக்ஷா பழையதாகையால் வர்ணம் எல்லாம் உதிர்ந்து போயிருந்தது. அதற்கு வர்ணம் வாங்கி அடித்தான. பின்புதான் அதை வெளியில் கொண்டுபோக வேண்டும் என்பது முத்தையன் உத்தேசம். இதற்குத்தான் பணம் வேண்டி யிருந்தது. ஆனால் செங்கமலம் லேசில் சம்மதப்படுகிறவளாய் இல்லை. “வர்ணமும் வாணாம், கிர்ணமும் வாணாம். முனிசாமி இத்தனை நாள் இழுக்கவில்லையா?” என்றாள்.

இப்படித் தம்பதிகள் தர்க்கித்துக்கொண்டிருக்கையில் வாசலில், “முத்தையா!” என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. முத்தையன் வெளியே வந்தான். வாசலில் பொன்னுசாமியும் முனிசாமியும் நின்று கொண்டிருந்தார்கள். முத்தையன் மனம் திக் என்றது. தன் சந்தேகத்தை வெளிக்குக் காட்டக் கூடாது என்று சிரித்துக்கொண்டே, “என்ன சமாசாரம்?” என்று கேட்டான்.

பொன்னுசாமி தலையைச் சொறிந்துகொண்டு அசட்டுச் சிரிப்புடன், “நேத்து உனக்கு ரிக்ஷா வித்தேன் பாரு, அதுதான். முனிசாமி இப்போதான் பூந்தமல்லிலேருந்து வந்தான். ரிக்ஷாவ ஏன் வித்தேன்னு என்னைத் திட்றான். அவன் இத்தனை நாளா வச்சுண்டிருந்தான் பாரு, அந்தப் பாசம், வித்துட மனசு வல்லே. ரூபாயை வாங்கிண்டு ரிக்ஷாவைக் கொடுத்துடு” என்றான்.

முத்தையன் சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தைக் கோபமாய் வைத்துக் கொண்டு, “பார்த்தயா? உங்கள் புத்தியைத்தானே காண்பிச்சுட்டீங்க? எனக்குத் தெரியும் உங்கள் சேதி! இதுக்குத்தானே நேற்றுத் தொளாயிரம் தரம் கேட்டேன்? இனிமே வார்த்தை தவறப்படாதுன்னு சொல்லல்லையா நான் ? போங்க போங்க! புது ரிக்ஷா வாங்கிக்குங்க!” என்று கூறினான்.

“பதினைந்து ரூபாய் வாங்கிண்டு கொடுத்துடையா” என்று முனிசாமி சொன்னான்.

“ஆமாம். அதுதான் நானும் சொல்றேன்” என்று பொன்னுசாமி ஒத்து ஊதினான்.

முத்தையன் யோசனை செய்தான். எவ்வளவு அதிக ரூபாய் வந்தாலும் ரிக்ஷாவை விட அவனுக்கு மனம் இல்லை; “அதெல்லாம் ஏனையா! வேறே ரிக்ஷா வாங்கிக்கிங்க, போங்க!” என்றான்.

முனிசாமியும் பொன்னுசாமியும் ஏதோ ரகஸ்யமாய்ப் பேசிவட்டு, “இருபது ரூபாய் வாங்கிண்டு கொடுத்துடு” என்றார்கள்.

முத்தையனுக்கு அந்தப் பழைய அந்தப் பழைய ரிக்ஷாவில் ஏதோ அதிருஷ்டம் இருக்கவேண்டும் என்று தோன்றிற்று. ஒன்றும் இல்லாவிட்டால் அந்தப் பழைய வண்டிக்காக அவர்கள் ஏன் அவ்வளவு ரூபாய் நஷ்டப்படவேண்டும்?

பொன்னுசாமியையும் முனிசாமியையும் பார்த்து, “லக்ஷ ரூபாய் கொடுத்தாலும் இனிமேல் ரிக்ஷாவைத் தரமாட்டேன். அடிக்க வர்ணங்கூட வாங்கியாச்சு. நீங்க போங்க!” என்று சொல்லிவிட்டான். அந்த இரண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு போனார்கள்.

3

முத்தையன் ரிக்ஷா இழுக்க ஆரம்பித்துப் பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு புதன்கிழமை. இன்று தான் நம் கதையில் மிகவும் ருசிகரமான சம்பவம் நடக்கப் போகிறது. மத்தியான்னம் சுமார் மூன்று மணி இருக்கும். வெயிலின் கொடுமை இன்னும் குறைந்த பாடில்லை. அனற்காற்று இரக்கமில்லாமல் அடித்துக்கொண்டிருந்தது. முத்தையன் காலி ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு இரும்பு வாராவதிக்கு அருகில் போய்க்கொண்டிருந்தான். பருத்த செட்டியார் ஒருவரை ஏற்றிக்கொண்டு போனதில் அவனுக்கு ஆறணாக் காசு கிடைத்தது. நாள் முழுவதும் அலைந்த அலைச்சலும் கடுமையான வெயிலும் சேர்ந்து அவன் உடம்பில் சோர்வை உண்டாக்கின.

அப்போது திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவர்கள் போல மூன்று தடியர்கள் தோன்றி அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். முத்தையனுக்கு முதுகிலும் மார்பிலும் இரண்டு குத்துகள் விழுந்தன. முதலில் அவனுக்கு ஏற்பட்ட திகைப்பும் பயமும் குத்து விழுந்ததும் எங்கோ பறந்தன. தன்னை மார்பில் குத்தினவனை எட்டி இரண்டு உதை விட்டான். மற்ற மற்ற இரண்டு பேரிடமும் நாலைந்து குத்துகள் வாங்கிக்கொண்டான். கோபத்துடன் தன் இடுப்பில் இருந்த ‘பெல்டை’ அவிழ்த்து ‘விர் விர்’ என்று சுழற்றினான். அந்த முரடர்கள் முகத்திலும் உடம்பிலும் பளார் பளார் என்று அடிகள் விழுந்தன. முத்தையன் ஒருவனுக்கு ஜவாப் சொல்ல முடியாமல் அந்த மூன்று பேரும் பின் வாங்கினார்கள். இரண்டு பேர் முதுகைக் காட்டாமல் பின் பக்கமாகவே அடி எடுத்து வைத்துக் கொஞ்ச தூரம் போனதும் ஓட்டம் பிடித்தார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்ததும் மூன்றாவது தடியன் என்ன ஆனான் என்று திரும்பித் தன் ரிக்ஷா இருந்த இடத்தைப் பார்த்தான். அங்கு ரிக்ஷா இல்லை! முத்தையனிடம் உதை வாங்கிக்கொண்டவன் அதை இழுத்துக்கொண்டு வேறொரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்தான். “டோய்! டோய்!” என்று கத்திக் கொண்டு முத்தையன் அவனைத் துரத்தவே, அவன் பயந்து ரிக்ஷாவை விட்டுவிட்டுத் தலைகால் தெரியாமல் ஓடினான்.

முத்தையன் ரிக்ஷாவண்டை போய் நின்றான். அந்த மூன்று பேரும் தன்னை மடக்கி அடிக்கக் காரணம் என்ன என்று யோசித்தான். ஒன்றும் தே தோன்றவில்லை. பிறகு, “நல்ல காலம்! இதோடே தப்பினேன்!” என்று முணுமுணுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் போனான்.

4

அதற்கு அடுத்த சனிக்கிழமை காலை ஏழு மணி. முத்தையன் தினமும்போல் இட்டிலியும் காப்பியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். செங்கமலம், “சரி தான், ஜல்தி ஆவட்டும். பொன்னுசாமியும் அவன் மவனும் வாசலில் வந்து காத்துண்டு இருக்கிறாங்க. போய் என்னான்னு கேளு” என்று சொன்னாள்.

“அவன்களுக்கு என்ன வேலை?” என்று முணு முணுத்துக்கொண்டு முத்தையன் தெருவுக்கு வந்தான். திண்ணையில் பொன்னுசாமியும் முனிசாமியும் உட்கார்ந்திருந்தார்கள்.

“என்ன விசேஷங்க? ரிக்ஷா விலை பேச வந்துட்டீங்களா?” என்று முத்தையன் எரிச்சலுடன் கேட்டான்.

“இல்லை. உன்னுடன் ஒரு விஷயம் பேசணும்” என்றான் பொன்னுசாமி. “சீக்கிரம் பேசிவிடு. எனக்கு நாழி ஆவுது. வேலைக்குப் போவணும். அப்புறம் அவள் பார்த்தால் திட்டுவா.”

முனிசாமி இரண்டுதரம் கனைத்துத் தன் தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு, “இல்லை, எங்கிட்டே ஒரு காயிதம் இருந்தது. அதைப் பத்திரமா வைக்கணும்னு, ரிக்ஷாவிலே மெத்தை போட்டிருக்கு பாரு, அதுக்கு அடியிலே வெச்சேன். அது எங்க நாயனாவுக்குத் தெரியாது. அதனாலே அதை எடுத்துக்காமல் ரிக்ஷாவை உன்னிடம் வித்துட்டாரு. அந்தக் கடுதாசை எடுத்துக் கொடுத்துடு” என்றான்.
“அட. இதுக்குத்தானா இவ்வளவு? முன்னையே கேட்டிருக்கப்படாதா? இப்போதான் ஞாபகம் வந்ததா?”

முனிசாமி, “இல்லை, அந்தக் காயிதத்திலே ஒரு ரகசியம் எழுதியிருந்தது. உனக்குத் தெரியக்கூடாதுன்னு நினைச்சோம்- என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டினான்.

முனிசாமி அதற்குமேல் ஒன்றும் பேசாமல் இருந்ததைப் பார்த்த பொன்னுசாமி பேசத் தொடங்கி, “ஆமாம்; அதில் ஒரு ரகசியம் இருக்கு. அதை முதலில் உங்கிட்டே சொல்லப் படாதுன்னு நினைச்சோம். அதற்காகத்தான் ரிக்ஷாவை மறுபடியும் வாங்கிக்கலாமனு விலை கேட்டது” என்று சொன்னான். முத்தையன் ஆச்சரியத்துடன் ஆச்சரியத்துடன் சிறிது நேரம் யோசனை செய்தான். பிறகு திடீரென்று ஞானோ தயம் ஆனவன்போல, “ஓஹோ! அப்படியானா ஆளை விட்டு என்னை அடிக்கச் சொன்னதுகூட நீங்க சொல்லுங்க” என்று கோபத்துடன் தான் கூறினான்.

“ஐயையோ! மூணுபேரை உட்டு உன்னை இரும்பு வாராவதிக் கிட்டே மடக்கி அடிக்கச் சொன்னது நாங்க இல்லியே!” என்று உளறினான் முனிசாமி.

முத்தையன் கோபாவேசத்துடன் எழுந்து, “நிஜத்தைச் சொல்றீங்களா, போலீசுக்குப் போவட்டுமா?” என்று அதட்டினான். அவன் மீசை துடிததது. முத்தையன் மீசையிடம் பொன்னுசாமிக்கும் முனிசாமிக்கும் ஏற்கனவே கொஞ்சம் பயபக்தி உண்டு. இப்போது அது கோபத்தில் துடிக்கும்போது கேட்பானேன்? பொன்னுசாமி நடுக்கத்துடன் இடத்தை விட்டு எழுந்து முத்தையன் கையைப் பிடித்துக்கொண்டான். “ஆமாம், ஆமாம். நாங்கதான் செஞ்சோம். தப்புத்தான்; மன்னிச்சுக்கோ. நாங்கள் உன்னை அடிக்கச் சொல்லல்லை. அந்தக் கடுதாசியைத்தான் எடுத்துண்டு வரச் சொன்னோம்” என்று கெஞ்சிக் கூத்தாடி முத்தையனை மறுபடியும் திண்ணைமேல் உட்கார வைத்தான்.

“ஐயோ! உனக்கு ரொம்ப அடிபட்டதா! அடிச்சா கையை முறிச்சுடுவேன்னு சொல்லியனுப்பினேனே! சோதாப் பசங்கள்!” என்று துக்கம் விசாரித்தான் முனிசாமி.

அந்தக் காகிதத்தில் அவ்வளவு முக்கியமான விஷயம் என்ன இருக்கும் என்று முத்தையன் மூளை யோசித்துக்கொண்டிருந்தது. பிறகு அவன், “சரி, அந்தக் காயிதத்தை எடுத்துத் தரேன். அதிலே என்ன ரகசியம் இருக்குன்னு முதலில் என் கிட்டே சொல்லணும்” என்றான்.

“அதுதான் ரகசியம்னு சொன்னேனே. உனக்கு அது உபயோகமில்லை; கொடுத்துடு, நாயனா” என்றான் பொன்னுசாமி. இது முத்தையனுடைய ஆவலை அதிகமாக்கிவிட்டது; “சரி, நீங்க சொல்லாமப் போனா நானே காயிதத்தை எடுத்துப் பார்த்துக்கறேன்” என்று அவன் சொல்ல, அப்பனும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தார்கள்.

கடைசியில் முனிசாமி, “சொல்லிடு நாயனா; முத்தையனுக்கும் ஒரு பங்கு கொடுக்கலாம்” என்று தன் தகப்பனைத் தூண்ட, பொன்னுசாமி பின் வருமாறு கூறினான்:

“மூணு மாசத்துக்கு முன் எங்கள் வீட்டுக்கு ஒரு சாமியார் வந்தாரு. அவருக்குப் பழையது போட்டோம். சாப்பிட்டதும் அவர் ‘ரெண்டு ரூபாய் கொடுத்தீங்களானால் உங்களுக்கு ஒரு புதையல் இருக்கிற இடம் சொல்றேன்’னு சொன்னாரு. அப்படியே கொடுத்தோம். புதையல் இருக்கிற இடத்தைக் கடுதாசிலே எழுதித் தந்தாரு. அந்தக் கடுதாசிதான் இப்ப ரிக்ஷா வண்டி மெத்தைக்கு அடியில் இருக்கு.”

“புதையல் எங்கே இருக்கிறதாகச் சாமியார் சொன்னார்?” என்று முத்தையன் கேட்டான். பொன்னுசாமி கொஞ்சம் தயங்கிவிட்டுப் பிறகு முத்தையன் காதோடு காதாய் ஏதோ கூறினான்; “ரொம்ப ரகசியமாய் இருக்கணும். வெளிக்குத் தெரிந்தால் ஆபத்து” என்று முடித்தான்.

புதையலை என்றைக்குப் போய் எடுப்பது என்ற கேள்வியை முத்தையன் கிளப்ப, பொன்னுசாமி, “சாமியார் மூணு மாசம் கழிச்சுப் போய்ப்பார்த்தால் அகப்படும்னு சொன்னார். போன புதன்கிழமை யோடே மூணு மாசம் ஆயிடுத்து; இனிமேல் என்னிக்கு வேணுமானாலும் போவலாம். முதல்லே நீ அந்தக் காயிதத்தை எடுத்துக்கொடு. கிழித்துப் போடலாம். யார் கையிலாவது அகப்பட்டா ஆபத்து” என்றான்.

சிறிது நேரத்துக்கு முன் துடி துடியென்று துடித்த முத்தையன் மீசைக்கு அடியில் இப்போது புன்னகை அரும்பியது; “ரிக்ஷாவை வாங்கின உடனே அதுக்கு வர்ணம் அடிச்சேன் பாரு, அப்போ மெத்தைக்கு அடியில் இருந்த குப்பையை எல்லாம் தட்டிச் சுத்தம் பண்ணினேன். அந்தக் காயிதம் குப்பையோடு போயிருக்கும். எந்தக் குப்பைத் தொட்டிக்குப் போச்சோ!” என்றான் அவன். தங்களை முத்தையன் ஏமாற்றிவிட்டது தெரிந்ததும் பொன்னுசாமிக்கும் முனிசாமிக்கும் முகத்தில் அசடு வழிந்து ஓடிற்று.

பொன்னுசாமியையும் முனிசாமியையும் தான் ஏமாற்றினதைப் பற்றிச் சொன்னபின் முத்தையன் ரிக்ஷாவை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி ஒரு கம்பீரமான பார்வை பார்த்தான். பிறகு பேசாமல் திரும்பி மறுபடியும் ரிக்ஷாவை இழுக்க ஆரம்பித்தான்.

“என்ன, கதையைப் பாதியில் நிறுத்தி விட்டாயே? அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லவில்லையே?” என்று கேட்டேன்.

முத்தையன் தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக் கொண்டான். “அப்படிக் கேளுங்க. சுவாரச்யமாக் கதை கேட்க ஒருத்தர் இருந்தால்தான் நான் சொல்றது வழக்கம். கதையை எங்கே நிறுத்தினேங்க?” என்றான்.

“கடிதம் உன்னிடம் இல்லையென்று சொன்னதும் அவர்கள் என்ன செய்தார்கள்?”

“ஓ! அவங்க என்ன செய்யக் கிடக்கிறது? பேசாமே குரங்குக் கணக்காக முழிச்சாங்க. அப்புறம் நாங்க மூணுபேரும் ஒரு நாள் ராத்திரி அந்த இடத்துக்குப் போய்ப் புதையலை எடுத்தோம்.”

“நிஜமாகவே புதையல் இருந்ததா, என்ன?”

“சொல்றத்துக்குள்ளே அவசரப் படறீங்களே! பத்தடி ஆழம் மண்ணை வெட்டினதும் ஒரு பெரிய பானை ஆப்புட்டுதுங்க. அது நிறையத் தங்க நகையும் வைர நகையுந்தானுங்க. அப்பப்பா, எவ்வளவு நகை போங்க! வைர ஒட்டியாணம், கிட்டியாணம், செயின், கியின்; அது, இது, லொட்டு லொஸ்கு – “

என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை. “அடேயப்பா! நீ ரொம்பப் பணக்காரன் என்று சொல்லு.இந்த ரிக்ஷா வண்டியைக் கட்டிக்கொண்டு ஏன் இன்னும் மாரடிக்கிறாய்?” என்று கேட்டேன்.

“பணக்காரனும் இல்லே, ஒண்ணும் இல்லேங்க” என்றான் அவன்.

“அதென்ன அப்படிச் சொல்கிறாய் ? வைர நகை என்றால் சும்மாத்தானா?”

“ஆமாங்க, வைர நகைதாங்க. ஆனால் நிஜ வைரம் இல்லிங்க. தங்கமெல்லாம் கில்டுங்க.”

“த்ஸொ, த்ஸொ ! இவ்வளவுதானா?”

முத்தையன் மௌனமாக இருந்தான். அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. “அந்தக் கில்டு நகைகளை எல்லாம் என்ன செய்தாய்? அதை விற்றால் கூட இருபது முப்பது கிடைக்குமே!” என்றேன்.

“பிரயோஜனம் இல்லிங்க; எப்போ பண்ணினதோ? எல்லாம் துருப் புடிச்சுப் போயிடிச்சு. பேரீச்சம்பழக்காரனுக்குக்கூட உபயோகப்படலீங்க.”

இதற்குள் ரிக்ஷா வண்டி பார்க் ஸ்டேஷனை அடைந்தது. வண்டியிலிருந்து கீழே இறங்கினேன். அப்பொழுது விளக்கு வெளிச்சத்தில் ரிக்ஷா வண்டியின் வர்ணம் பளிச்சென்று கண்ணில் படவே, “அந்தப் பழைய ரிக்ஷாவா இது?” என்று அதிசயத்துடன் முத்தையனைக் கேட்டேன்.

“இது பழசு இல்லிங்க; புச்சுங்க. வாங்கி ஒரு வருஷங்கூட ஆகலிங்க” என்று அவன் கூறினான்.

“அந்தப் பழைய வண்டி என்ன ஆயிற்று? உடைந்து போயிற்றா?”

“எந்தப் பழைய வண்டிங்க?”

“நீ முனிசாமியிடமிருந்து வாங்கினாயே, அது தான்.”

முத்தையன் என்னைச் சந்தேகத்தோடு முறைத்துப் பார்த்தான். பிறகு, “என்னாங்க சாமி, இப்படிக் கேக்கறீங்களே? கதைக்குக் கால் ஏதுங்க?” என்றான். பின்பு தலையை வருத்தத்துடன் பலமாக ஆட்டிவிட்டு ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு, நான் பதில் பேசுமுன் ஓடி மறைந்தான்.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *