ராயரால் வந்த வினை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 413 
 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ஒரு ஊரிலே…” என்று கனகரத்தினம் தொடங்கினான். 

“ஒரு கழுதை இருந்ததாம்…” என்று வாக்கியத்தை முடித்தாள் அவன் மனைவி கமலினி. அதோடு நிற்கவில்லை ; மேலே தொடர்ந்தாள். “உங்களிடம் கதை கேட்கிற ஆசையெல்லாம் பறந்துபோய் எவ்வளவோ காலமாகிவிட்டதே! இந்தக் கழுதையும் குட்டிச் சுவரும் ஏன்தான் இப்படி என் உயிரை வாங்கவேணும் !” 

“இந்தா, கமலி! என்னைக் கழுதை என்றா சொல்லுகிறாய்?” 

“அப்படி ‘ ன்னா…? நான் குட்டிச் -சுவரா ?…”

இப்படியாக அவர்கள் பேசிக்கொள்வது இது முதல் தடவையல்ல. இதோடு குறைந்தது ஆயிரம் முறையாவது மேற்படி உரையாடல் நடந்திருக்கும். 

கலியாணம் ஆனதிலிருந்து கதை கதை யென்று நச்சரிப்பாள் கமலினி. எத்தனை பத்திரிகைகள், கதைப் புத்தகங்கள் கொண்டு வந்து போட்டாலும் அவள் பொழுதுபோக்குக் குக் கட்டிவர முடியாது. அத்தனையும் படித்து விட்டுக் கனகரத்தினம் பக்கத்தில் வந்து உட் கார்ந்து கொண்டு, அத்தான், ஒரு கதை சொல்லுங்களேன் என்று கேட்க ஆரம்பித்து விடுவாள். 

கல்லூரி மாணவர்களின் கட்டுரை ஏடு களைத் திருத்துவதற்கே நேரம் எங்கேயாவது கடன் வாங்கமுடியுமா என்று பார்க்கிற கனகரத் தினத்துக்குக் கதை சொல்லப் பொறுமை எங்கே இருக்கப்போகிறது! இதிலிருந்து தப்பத் தான் பத்திரிகைகளும் கதைப் புத்தகங்களும் கொண்டுவந்து குவித்தான். கமலியின் கதைப்பசி காயசண்டிகையின் ஆனைத்தீயைவிடப் பெரிதாயிருந்தது. “அத்தான் ஒரு கதை………” என்ற அவள் வந்து உட்காருவதைப் பார்த் தால், பாலுக்குக் கெஞ்சும் குழந்தைபோல இருக்கும். 

கடைசியில் அவனுக்கு வேறு வழியிராது; ஏதாவது கதை சொல்லுவான். எத்தனை நாளைக்குத்தான் சொல்லமுடியும் ! பத்திரிகையில் கதை எழுதுவது என்றால் பரவாயில்லை. பத்துக் கதை தயார் பண்ணிவிட்டால், அவற்றைப் பதினாயிரம் கதைகளாகக்கூட எழுதலாம். பேரையும் ஊரையும் மாற்றிவிட்டால் போது மல்லவா? இந்தத் தந்திரம் கமலியிடம் பலிக்க வில்லை. 

“ஹுக்கும்! முந்தாநாள் சொன்ன கதை தானே இது ? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர் கள் ? வேறே கதை சொல்லுங்கள் ” என்று பாதியிலேயே ஆரம்பித்துவிடுவாள். 

வேறு வழி திகையாமல் கோமாளித்தனமான ஒரு முறையைக் கையாள ஆரம்பித்தான் கனகரத்தினம். 

இந்தப் புது நாடகம் ஒரு நாள் மாலை ஆரம்பித்தது. கமலி அடுக்களையில் வேலையாக இருந்தாள். கனகரத்தினம் வலியச் சென்று ” கமலி, ஒரு கதை சொல்லட்டுமா” என்று கேட்டான். கமலி, “ என்ன, கதையா ? இருங்கள் இதோ வந்துவிட்டேன் ” என்று சொல்லி ஓட்டமாக வெளியே போய் எதையோ பார்த்து விட்டு வந்தாள். 

“வெளியே போய் என்ன பார்த்து வந்தாய்?” 

“மழை வருகிறதோ என்று பார்த்தேன்.” 

“ஏன் ?” 

“இல்லை, நீங்களாக வந்து கதை சொல்லு கிறேன் என்கிறீர்களே, மழைதான் வருகிற தோ என்று பார்த்தேன்……” என்று சிரித்தாள். 

கனகரத்தினம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.  

“சரி, இப்போ என்ன, கதை வேணுமா வேண்டாமா ?” என்று முடுக்கினான். 

“அடியம்மா! கிராக்கியைப் பாரேன்….’ என்று சொல்லிக்கொண்டே, கையைக் கழுவி விட்டுக் கதை கேட்கத் தயாரானாள். 

கதை ஆரம்பித்தது: 

தஞ்சாவூரிலே நடந்தது இந்தக் கதை. அப்போது சரபோஜி மகாராஜா ஆண்டு கொண்டிருந்த காலம்…….. 

“ஏது பெரிய சரித்திரப் பின்னல் போல் இருக்கிறதே……..” என்று குறுக்கே ஒரு பேச்சை வீசினாள் கமலி. 

“உஷ், பேசாமல் கேட்கவேண்டும். நடுவிலே பேசினால் ஒன்றும் சரிப்படாது ……..” 

“சரிசரி, இனிமேல் இல்லை. கதை மேலே போகட்டும்….” 

“என்ன சொன்னேன் ஓகோ….. ஆமாம்…….. சரபோஜி மகாராஜாவின் அரண் மனைக் கிட்ட ஒரு குட்டிச்சுவர் இருந்தது. குட்டிச் சுவருக்குப் பக்கத்திலே….”

கனகரத்தினம் தயங்கினான். “ஏன், மேலே சொல்லுங்கள். நான் தூங்கவில்லை……” என்று அவனைத் தூண்டிவிட்டாள். வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மேலே கதையைச் செலுத்தினான். 

“குட்டிச் சுவர் இருந்ததா? அதன் பக்கத் திலே எப்போது பார்த்தாலும் ஒரு கழுதை நின்றுகொண்டே இருக்கும். அப்புறம் ஒரு நாள் அந்தக் கழுதை செத்துப்போயிற்று….”

மேலே கதை வளரவில்லை. 

“அப்புறம் ?” என்றாள் கமலி. 

“அவ்வளவுதான். அதுதான் கதாநாயகனான கழுதையே செத்துப்போச்சே. பிறகு எப்படிக் கதை வளரும் ? அவ்வளவுதான்.” 

கமலிக்கு வந்த ஆத்திரம் இவ்வளவுதான் என்று சொல்லமுடியாது. ‘ மோவாய்க் கட்டை’ யைத் தோளிலே இடித்த இடிப்பு……..! இரண்டு நாளைக்காவது வலி இருந்திருக்கும். 

இதற்கப்புறம் அவள் ஏன் கதை கேட் கிறாள்? ஆனாலும், கனகரத்தினம் அடிக்கடி வலிய வந்து ‘கதை’ பண்ணுவான். எல்லாம் பழைய கழுதையும் குட்டிச் சுவருமாகவேதான் முடியும். 

ஒருநாள் வருவான். ” கேட்டாயா கமலி, நேற்றுக் காலையிலே…”

“என்ன என்ன’” என்று கேட்டால் போதும். உடனே, “ஒரு கழுதை…” என்று ஆரம்பிப்பான். “குட்டிச் சுவருக்குப் பக்கத்தில் இருந்தது” என்று கமலி முடித்துவிட்டு, ஒரு வெட்டுப் போட்டுக் கழுத்தைத் திருப்பிக் கொள்வாள். இப்படி எத்தனையோ வகை யான பீடிகைகள் போடுவான். பழையபடி கழுதையும் குட்டிச்சுவரும் வந்து சேரும். இதன் விளைவுதான், எந்நேரமும் அவன் கட்டுரை நோட்டுகளையே கட்டி அழுவது ! 

இன்றைக்கோ உண்மையாகவே ஒரு கதை அவளிடம் சொல்லவேண்டியிருந்தது. ஆனால், கேட்கத் தயாராயிருந்தால்தானே? அவன், “கமலி, ஒரு ககதை கேட்கிறாயா…”என்றான். 

“போதுமே! உங்கள் கழுதையும் குட்டிச் சுவரும். எனக்கு ஒன்றும் வேண்டாம்….” 

அவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த் தான். பயன் ஒன்றும் இல்லை. கடைசியில், கதையை எழுதிவிடுவ தென்று உட்கார்ந்தான். 

அவனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந் தது. ஒரு அழுக்கு வேட்டி; அதைவிட அழுக் கான துண்டு. மீசை தாடிக் கெல்லாம் ஒரு குறைவுமில்லை. என்னதான் பரதேசிக் கோல மாக இருந்தாலும் அவன் முகத்திலே அறிவு ஒளி பிரமாதமாக இருந்தது. 

கல்லூரி அலுவலகத்துக்கு வந்து, “நான் பிரின்ஸ்பாலைப் பார்க்க வேண்டும் ” என்றான்.. ‘இந்தக் கோலத்தோடு அவரிடம் இவனுக்கு என்ன வேலை’ என்று தயங்கிய குமாஸ்தா, என்ன நினைத்தாரோ, “உள்ளே இருக்கிறார், போய்ப் பாருங்கள் ” என்று கல்லூரி முதல்வரின் அறையைக் காட்டிவிட்டார். 

“ஸாரி எக்ஸ்க்யூஸ் மீ….” என்று அப்பழுக் கற்ற ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான், உள்ளே நுழைந்த அந்த வாலிபன். 

‘இவ்வளவு அருமையாக ஆங்கிலம் பேசு கிறான் என்றால், நன்றாகப் படித்தவனாக இருக்க வேண்டுமே என்று எண்ணிகொண்டே, முதல்வர் அவனை உட்காரச் சொன்னார். அவன் பேசப் பேச அவனைப்பற்றிய நல்ல எண்ணம் வளர்ந்துகொண்டே போயிற்று. 

“எனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் மிகவும் கடமைப்பட்டவன் ஆவேன் என்றான் அந்த இளைஞன். 

“உம்மால் என்ன வேலை பார்க்க முடியும்” என்று இரக்கத்தோடு கேட்டார் கல்லூரித் தலைவர் தருமநாதர். 

“நான் எம். ஏ. படித்தவன். ஆங்கில இலக்கியத்தைப் பட்டத்துக்கு உரிய பாடமாக எடுத்துப் படித்திருக்கிறேன்….” 

“ஆமா….படித்துப் பட்டமெல்லாம் வாங்கியிருக்கிறீரே, உமக்கு ஏன் இந்தக் கோலம்?” 

“அது பெரிய கதை சார். தங்களுக்குத் தடை இல்லையென்றால் சொல்லுகிறேன்.” 

“சொல்லுவதிலே தடையில்லை யென்றால் கேட்க நான் தயார்.” 

“என் பெயர் ரவீந்திரன். என் அப்பா சென்னையில் பெரிய டாக்டர். டாக்டர் மோகன் என்றால் எல்லோருக்கும் தெரியும். நல்ல வரும் படியுண்டு….” 

“அப்படி யிருந்தும் இந்த மாதிரி நீர் புறப் படக் காரணம் என்ன ?” 

“அதுதானே சொல்ல வருகிறேன். நல்ல வர்கள் என்று நாம் நினைப்பவர்கள் எல்லோருமே அப்படியே இருந்துவிடுவ தில்லை யல்லவா ? எங்கள் அப்பாவுக்கு வாமதேவராயர் என்று ஒரு நண்பர். அவர் சொன்ன சொல்லுக்கு மறு பேச்சு என்பதே எங்கள் வீட்டில் கிடையாது. 

“எனக்கு மட்டும் அவரைக் கண்டாலே பிடிப்பது இல்லை. அவ்வளவு வயதான கிழவருக்கு என்னத்துக்கு ஜவ்வாதுப் பொட்டும், நாள் தவறாமல் முக க்ஷவரமும்! எவ்வளவு தான் தன்னை அழகு செய்துகொண்டாலும் மனிதனுடைய தன்மை கண்ணிலே தெரிந்து தானே தீரும் !” 

கதையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ரவீந்திரன் இருமினான். “சார் கொஞ்சம் வாட்டர் கிடைக்குமோ ?…….. தருமநாதர் சேவ கனை அழைத்துக் காப்பி வாங்கி வரச் சொன்னார். 

கதை மேலே போயிற்று. 

“அந்த ராயருடைய கண்களைப் பார்க்கும் போது ஷேக்ஸ்பியரின் ஐயாகோதான் என் மனக்கண்முன் எழுந்து நிற்பான். அந்தப் படுபாவி ராயர் இல்லையென்றால் இந்தக் கதி எனக்கு வந்திருக்குமா ?……..” 

“காப்பி வந்துவிட்டது. குடித்தபின் சொல்லும்” என்றார் தருமநாதர். அவன் காப்பி குடிக்கும்போது, “ஆமா, அந்த ராயரால் உமக்கு என்ன வினை வந்துவிட்டது?” என்று கேட்டார். காப்பி குடித்து முடிந்தது. 

“அதைத்தானே சொல்ல வருகிறேன்… காப்பி ரொம்ப நன்றாயிருந்தது. மெனி தாங்க்ஸ் உங்களைப் போலப் பொறுமையா இருந்து அனுதாபத்தோடே என் துயரத்திலே பங்கு கொள்கிறவர்களைப் பார்க்கும்போதுதான், வாழ்க்கையைப்பற்றியும் கொஞ்சம் நல்ல கருத்து உண்டாகிறது. அன்பில்லை என்றால், சார், இதென்ன வாழ்க்கை! நானுந்தான் ஒரு வேலை கிடைக்காதா என்று ஒரு வருஷமாக அலைகிறேன்….” 

தருமநாதர் மனம் ‘ஐயோ பாவம்’ என்று அவர் தலையை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. “அப்புறம்….? ” என்றார். ரவீந்திரன் கதை சொன்னான் 

“எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு மாடி வீடு. அந்த வீட்டிலே ஒரு மலையாளக் குடும்பம். என் னுடைய அறையிலிருந்து பார்த்தால் அவர்கள் வீட்டு மாடியின் முன் அறை நன்றாகத் தெரியும். ஆனால், அந்த அறையின் ஜன்னல் எப்போதுமே மூடித்தான் கிடக்கும். 

“ஒரு நாள் இரவு ஏனோ எனக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்து உலாவிக்கொண் டிருந் தேன். நிலா பால்போலக் காய்ந்துகொண் டிருந்தது. திடீரென்று ஏனோ எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தேன். ஐயோ, அது வழக்கம் போல் மூடிக்கிடந்திருக்கக் கூடாதா? என்ன செய்வது! என் விதி? 

“அந்த மாதிரியும் ஒரு பெண் அழகாய் இருக்க முடியுமா? மலையாளத்துப் பெண்கள் அழகாக இருப்பார்கள்தான். ஆனாலும், அந்த அழகு பிரமதேவனின் முழுத்திறமையையும் வேலை வாங்கியிருக்க வேண்டும். 

“அவள் தூங்கிக்கொண் டிருந்தாள். ஜன்னலை ஒட்டிக் கிடந்த கட்டிலில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். கூந்தல் அவிழ்ந்து தலையணையை அழகு செய்ய, அவளுடைய தாமரைக் கண்கள்….மன்னிக்கீ வேண்டும்…. அழகியின் வர்ணனை தங்களிடம் எதற்குச் சொல்லவேண்டும்…. 

“அத்தனை நாளும் எதிரெதிர் வீடுகளில் இருந்தும் நாங்கள் பழகியதில்லை. ஏன், நான் அவளைச் சரியாகப் பார்த்ததுகூட இல்லை. அன்று இரவிலே அந்த அழகுக் கொலுவைக் கண்டபிறகு என் உள்ளம் என் வசத்தில் இல்லை. எப்படியாவது அவளைப் பழக்கம் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 

“பழகுவதில் எனக்கு ஒன்றும் சங்கடமே ஏற்படவில்லை. அவள் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். சென்னையில் கல்லூரி மாணவ மாணவிகள் பழகுவதில் அவ்வளவு கஷ்டம் இல்லையல்லவா? 

” லில்லி- ஆமாம் அவள் பெயர் அது தான் – லில்லியும் நானும் நெருங்கிவிட்டோம். எங்கள் வீட்டாருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், நான் இல்லையென்றால் அவளும் இருக்க மாட்டாள். அவள் இல்லையென்றால் நானும் இருக்கமாட்டேன். எங்கள் இருவரையும் பிரித்தவை இரண்டுதாம். கல்லூரி ஒன்று; வீடு இன்னொன்று. 

“எங்களைப் பிரித்தவை இரண்டுதாம் என்றா சொன்னேன் ? இல்லை. இந்தச் சமூகக் கட்டுப்பாடு என்ற அர்த்தமில்லாத என்னவோ ஒன்று இருக்கிறதை நாங்கள் மறந்துவிட வில்லை. அதனால்தான் எங்கள் காதலை வீட்டாருக்குத் தெரியாமலே வளர்த்துவந்தோம். 

அவள் மலையாளக் கிறிஸ்தவப் பெண். நான் தமிழ் இந்து. ஜாதியைப்பற்றித் தெரிய வேண்டியதே இல்லை. காதல் முற்றி வளர்ந்து விட்டால், படித்து அறிவு முதிர்ந்த பெற்றோர் களிடம் சம்மதம் பெற்றுவிடலாம் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால், அந்தப் படுபாவி ராயரின் கண் எங்கள் காதல் கோட்டையை அந்தரத்தில் தொங்கும் ஆகாயக் கோட்டை யாக்கி விட்டது.” 

ரவீந்திரனின் முகத்தைக் கவனித்த தரும நாதர் சேவகனை அழைத்துச் சிற்றுண்டி கொண்டுதரச் சொன்னார். ரவீந்திரன் கதையை மேலே நடத்தினான். 

“ஒரு நாள் நானும் அவளும் ‘பேதிங் ப்யூட்டி’ பார்க்கப் போயிருந்தோம். படம் நடந்துகொண் டிருந்தது. திடீரென்று லில்லி, எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவரைக் காட்டி அதோ ராயர் வந்திருக்கிறார்போல் இருக்கிறதே, நான் தனியாகப் போய் உட் கார்ந்துகொள்கிறேன் ‘ என்றாள். “சும்மா இங்கேதான் இரு. அவரெல்லாம் இங்கே ஏன் வருகிறார்? அவர் வீட்டிலே பெண்களே கிடை யாதே! நீ காட்டுகிற ஆசாமி யாரோ, குடும்பத் தோடல்லவா இருக்கிறார்போல் இருக்கிறது? மேலும், அவர் இன்று யார் வீட்டிலோ அனுமார் பூஜைக்குப் போவதாகச் சொன்னாரே ” என்று அவளை என் பக்கத்திலேயே இருத்திவிட்டேன். 

“இடைவேளைக்காகப் படம் நின்றது. வெளிச்சம் வந்தது. இருட்டிலே தெளிந்திருந்த என் மனம் வெளிச்சத்தில் கலங்கிவிட்டது. ராயரேதான் அங்கே எவளோ ஒருத்தியோடு வந்திருந்தார். நாங்கள் பிரிவதற்கு முன்னால் அந்தக் கழுகுக் கண்கள் எங்களைக் குறிபார்த்து விட்டன. புறாக்கள் இராஜாளிப் பறவைக்கு இரையாகாமல் எப்படித் தப்ப முடியும்…. 

“வாமதேவ ராயர் வைத்த தீ வெகு விரை வாக வேலை செய்தது. மறுநாள் மாலையில் நான் வெளியே கிளம்பியபோது என் தந்தை ‘144’ பிறப்பித்தார். நான் புரிந்துகொண்டேன். ‘சரி, இனி என்ன? சொல்லிவிட வேண்டியது தானே’ என்று என் கதையைச் சொல்ல ஆரம் பித்தேன். “போதுமடா உன் கதை. எதிர் வீட்டுச் சிறுக்கியோடு நீ அடிக்கிற கூத்தெல்லாம் எனக்குத் தெரியாதா ?…. என்னதான் முன் னேற்றம் முற்போக்கு என்றாலும் இப்படித் தறி தலைத்தனமாகவா சுற்றுவது….” என்று தாம் படித்தறிந்த பகுத்தறிவை யெல்லாம் குப்பைக் கூடையிலே எறிந்துவிட்டு என்னைக் கண்டபடி ஏசினார். ‘சாவகாசமாக இன்னொரு சமயம் பேசிக்கொள்ளலாம்’ என்று பேசாமல் என் அறைக்குப் போய்விட்டேன். 

“ஆனால், அப்படிச் சாவகாசமாகப் பேசி என் காரியத்தைச் சாதித்துக்கொள்ள ஒரு அவசியமும் இல்லாமலே போய்விட்டது. ராயர் வைத்த தீ எதிர் வீட்டிலும் எப்படித்தான் பற்றியதோ, தெரியவில்லை. எதிர் வீட்டு வேலைக் காரன்மூலமாக லில்லி கொடுத்தனுப்பிய கடிதத்தி லிருந்து அவளுடைய பெற்றோர்கள் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்றும் அந்த மாதத்திலேயே எவனாவது ஒருவன் கழுத்திலே அவளைக் கட்டி அனுப்பிவிடுவதாக முடிவு செய்துவிட்டார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். 

“பிறகு ஒரு தடவைகூட நானும் லில்லியும் சந்திக்கவே இல்லை. ஒருநாள் நள்ளிரவிலே தூக்கம் வராமல் அறையிலே குறுக்கும் நெடுக்கு மாக நடந்துகொண் டிருந்தவன், எதிரே அவள் அறையைப் பார்த்தேன். காரியம் எங்களை மிஞ்சிவிட்டது. என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருவுருவம் உத்தரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது.” 

ரவீந்திரன் கண்ணைத் துடைத்துக்கொண்டான். தருமநாதர் ஒரு பெருமூச்சு விட்டார். 

“அட பாவமே!” என்று கூறிய தரும நாதர் ரவீந்திரனைப் பார்த்து “உம்மைப் பார்த் தால் மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது…. அவள் இறந்ததி லிருந்து இப்படி மாறி விட்டீராக்கும் ” என்று கேட்டார். 

“பின் என்ன சார், இந்த உலகத்திலே? நான் எங்கள் அப்பாவுக்கு ஒரே பிள்ளை. செல்லமாய்த்தான் வளர்ந்தேன். ஒரே பையன் நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை பெற்ற வருக்கே இல்லை. இந்த உலகமே இரக்கம் அற்றது சார். அந்த ராயர் எவளையோ கூட்டி வந்திருந்தாரே, அதை நான் சொல்லியிருந் தால் ….. ! அதற்கு இடம் இல்லாமல் போக வேண்டு மென்றுதான் அவர் முந்திக்கொண் டார்! நான் வீட்டைவிட்டு வெளியேறி ஊர் ஊராகச் சுற்றுகிறேன்…”

தருமநாதர் முகத்திலே இரக்கம், கவலை…. எல்லாம் மாறி மாறி வந்தன. பக்கத்திலே இருந்த ஓட்டலிலிருந்து மிதந்துவந்த இசைப் பாடல், உலகை நம்பாதே மனமே, உலகை நம்பாதே” என்று அலறிக்கொண்டிருந்தது. 

கனகரத்தினத்தின் கதை கமலி கண்ணிலே படாமலா போய்விடும் ? படித்துப்பார்த் தாள். ஒரு நாள் மாலை தன் கணவனைக் கேட்டாள்: ஆமா, அந்தக் கதையை ஏன் அப்படி முடித்தீர்கள் ?” 

“எப்படி?” 

“உலகை நம்பாதே, மனமே உலகை நம்பாதே என்று பாட்டு வந்ததாக முடித்திருக்கிறீர்களே, ஏன் ?” 

“நானா அப்படி முடித்திருக்கிறேன்? இல்லை. அந்தக் கதையே அப்படித்தான் முடிந்தது.” 

“சரி சரி, ஆரம்பித்துவிட்டீர்களா உங்கள் சிலம்ப வீச்சை? ரவீந்திரனைப் பார்த்தால் பரிதாபமாய் இல்லையா? அவன் கதையை அப்படியா முடிக்கிறது?” 

“வா அம்மா, நீ தான் பெரிய பேர்ள் பக் ஆச்சே ! நீ எப்படி முடிப்பாய் ? சொல்லேன், கேட்கலாம்.” 

“எப்படி முடிக்கிறதா? தருமநாதர் இரக் கப்பட்டு அவனுக்கு ஒரு வேலை கொடுத்தார். அவனும் ஒரு மாதிரியாகக் காதலியின் நினைவை வளர்த்துப் பிரமசாரியாகவே இருக்க முனைந் தான்- இப்படி முடித்துவிட்டால் என்னவாம்?” 

“முடிக்கலாம், முடிக்கலாம். ஆனால், நான் தான் சொன்னேனே, முடிவு நம் கையிலே இல்லை. கதை தானாகவே அப்படி ஒரு முடிவிலே வந்து நின்றுவிட்டது.” 

“நீங்கள் சொல்வது ஒன்றும் புரிய வில்லையே ?” 

“நான் எழுதினது என் கற்பனை இல்லை. உண்மையாகவே அப்படி ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் சொன்னதையே எழுதி விட்டேன்”. 

“அவனே ‘உலகை நம்பாதே’ என்று முடித்தானா?’ 

“இல்லை ” 

“பின்னே…?” 

” அவன் சொன்ன கதையைக் கேட்டு எங்கள் பிரின்ஸ்பால், பாவம், இரக்கப்பட்டு அவனுடைய அப்பா விலாசத்தைக் கேட்டுப் ‘பையன் நிலைமை மோசமாய் இருக்கிறது. உடனே வந்து அழைத்துப் போங்கள் என்று தந்தி அடித்தார். அப்பா வந்து அழைத்துப் போகிறவரைக்கும் பையனை மாணவர் இல்லத் திலே இருக்கச் சொல்லியிருந்தார். தந்தி திரும்பி வந்துவிட்டது. அந்த மாதிரி ஆளே கிடையா தாம். ரவீந்திரனை அழைத்துவரச் சொல்லிச் சேவகனை மாணவர் விடுதிக்கு அனுப்பினார். அவன் அங்கே இல்லை. இந்தக் கதையைத் தான் அப்படி எழுதியிருக்கிறேன்”. 

“அதுதானே பார்த்தேன்! நீங்களாவது முழுசா ஒரு கதை எழுதுவதாவது! கழுதையும். குட்டிச் சுவரும் தவிர உங்களுக்கு வேறே என்ன தெரியும்!”

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *