ராமுவின் தீர்மானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 484 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வெள்ளிக்கிழமை. ராமு வால்மீகி ராமாயணம் கேட்டுவிட்டுப் ‘பஸ்ஸில்’ வீடு திரும்பிக் கொண்டிருந்தான். இப்பொழுது சில மாதங்களாய்த்தான் வாரம் ஒரு நாள் தொடர்ந்து நடந்துவரும் ராமாயணக் கதையை அவன் கேட்டுவருகிறான். அது அவனுக்கு ஒரு விதத்தில் ஆறுதல் அளித்து வந்தது என்று சொல்லவேண்டும். முதலாவது, அவனுக்கு யந்திரம் போல் ஆபீசில் உழைப்பதோடு வாழ்நாட்களைக் கடத்திவிட மனமில்லை. கலா ரசிகர்களின் மத்தியிலே தானும் ஒருவனாக விளங்க வேண்டுமென்று அவனுக்குச் சொல்ல முடியாத ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய சௌகரியம் அவனுடைய வாழ்க்கையில் அமையவில்லை. அதனால் அவனுக்கு மிக வருத்தம். நெடுநாளாக இருந்த அந்த ஆசையை இப்பொழுது ராமாயணம் கேட்பதன் மூலம் ஓரளவு நிறைவேற்றுகிறோமென்ற திருப்தி அவன் மனத்தில் உண்டாயிற்று. அதுவும், ராமாயணம் சொல்லுகிற சதாசிவ ஐயர் மிகவும் படித்தவர். பல பாஷைகளிலுள்ள பல காவியங்களை ரசமறிந்து படித்தவர்; விஷயங்களை வெகு அழகாக எடுத்து விளக்குபவர். 

இரண்டாவது விஷயந்தான் மிகவும் முக்கியமானது. அவனுடைய குடும்பத் தொல்லைகளுக்கு நடுவில், அது அவனுக்குப் பெரிய மனச்சாந்தியை அளித்தது. அவன் குடும்பத்தில் அவன் தாய், அவன் தம்பி, அவன் மனைவி, அவன் ஆக இந்த நான்கே பேர்கள். ஆனால், அதிலுள்ள சண்டை சச்சரவுகளோ ஆயிரம். இப்படி வேறு எங்கும் இருக்க முடியாதென்றே அவன் நினைத்தான். அவர்கள் தினசரி வாழ்க்கையில் ஒத்துழையாமை என்னும் கொள் கையை உண்மையிலே கடைப்பிடிக்கத் தீர்மானித்தவர் களாகவே தோன்றினார்கள். அவன் ஆபீசிலிருந்து அலுத்து வீடு வந்தால், ஏதாவது சண்டை சச்சரவு அவனுக்காகக் காத்திருக்கும். தாயும் மனைவியும் தனித்தனியே முறையிடுவார்கள். அவன் அதைத் தீர்த்து வைக்காததற்காக அவன் பேரிலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகும். அவனுக்கென்ன, நீதிபதி உத்தியோகமா கொடுத்திருக்கிறார்கள்; அவன் கூறும் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள? அப்படியில்லாமல், ஒருவர் பக்கம் பேசினால் இன்னொருவருக்குத் தாங்க முடியாத கோபம் உண்டாகும். அதன் பலன் சாப்பாடு கூட அவனுக்குச் சரியாகக் கிடைக்காதது தான். 

அவன் தம்பி சமாசாரமோ, எல்லாவற்றுக்கும் மேலானது. அவனுக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. தப்பிக் கிடைத்த வேலையையும் சரியாகப் பார்க்கத் தெரியவில்லை. அவன் அந்த ஆத்திரத்தில் தாறுமாறாக நடந்து, ராமுவுக்குச் சொல்ல முடியாத தொந்தரவுகள் கொடுத்து வந்தான். பல சமயங்களில் ராமுவையே அவன் குற்றம் சாட்டவும் தொடங்கினான். இந்தக் குடும்ப மாகாத்மியத்தை ஒரு வழியாகச் சரிப்படுத்தலாமென்று ராமு எவ்வளவோ முயன்று பார்த்தான். ஒன்றும் சரிப் படவில்லை. விரோதமான பலனே உண்டாயிற்று. வீணில் வாக்குவாதம், கக்ஷிப் பிரதிகக்ஷி. இம்மாதிரியேதான் முடிந்தது. அவன் தாயும் பல சமயம் அவன் தம்பியின் கக்ஷியில் பேசும்பொழுதுதான் அவனுக்கு வெளிப் படையாகச் சோர்வு தோன்றும். 

இப்பொழுது ராமாயணத்தைக் கேட்கக் கேட்க ராமனுடைய தியாகத்திலிருந்து ஒரு நீதியைத் தான் கற்றுக் கொண்டு விட்டதாக அவன் நினைத்தான். ஒருவ ரிடத்திலும் ஒன்றையும் எதிர்பாராமல், எதையும் பொறுத் துக்கொண்டுபோவது என்கிற தீர்மானம் கொண்டான். ராமன் செய்த தியாகம் சாமான்யமானதா? மறு வார்த்தை கூறாமல் சிறிய தாயின் வார்த்தையைச் சிரமேற் கொண்டு பெரிய ராஜ்யத்தைத் துறந்து, காட்டுக்குச் சென்றானே! அந்தத் தியாகம் அனைவர் உள்ளத்தையும் ராமன்பால் ஈடுபடுத்தி விட்டதல்லவா ! கடைசியில் எந்தப் பரதனை உத்தேசித்து இவ்வளவும் நடந்ததோ அவனே ராமன் கக்ஷியில் சேர்ந்து விட்டான்! அது போலவே தன் சுயநலமற்ற தன்மையால் இனிமேல் தன் வீட்டாரைத் தன் வழிக்குத் திருப்பக் கூடுமென்றும், பிறகாவது மன நிம்மதி ஏற்படலாமென்றும் நம்பினான். பொறுமையைக் கைக்கொண்டு நடக்கத் தீர்மானித்தான். தன் தொல்லைகளைத் தீர்த்துக்கொள்ளப் புது வழி கண்டு பிடித்து விட்டதாக அவனுக்குச் சிறிது சந்தோஷங் கூட ஏற்பட்டது. 

அவன் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியபோது மணி எட்டடிக்கச் சில நிமிஷங்களே இருந்தன. வழக்கத்தை விட இன்று கதை கொஞ்சம் கூடவே நடந்து விட்டது. அவனைப் பசி ஒரு புறமும் களைப்பு ஒரு புறமும் துன்புறுத்தின. வீட்டுக் கதவு சார்த்தியிருந்தது. சாதாரணமான நாட்களில் அவனுக்கு அந்த நிலையில் கோபம் உண்டாகியிருக்கும். கதவைத் தட்டினான்; திறக்கவில்லை. ஓங்கித் தட்டிக் கூப்பிட்டான். வளைகள் குலுங்கும் சப்தத்தால் தன் மனைவி வருகிறாளென்று தெரிந்தது. அவள் தாழ்ப்பாளை நீக்கி விட்டுக் கதவைத் திறக்காமலே போய் விட்டாள். கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றவன், கூடத்தில் பார்த்தான். அவளைக் காண வில்லை. அவள் தன் அறைக்குள் சென்றுவிட்டாளென்று தோன்றிற்று. 

அம்மா இருக்கிறாளோ என்று பார்த்தான். அவளையும் காணவில்லை. தன் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது தன்முன் வராமலும் பேசாமலும் இருக் கிறாள். தன் பேரிலேயே அவளுக்குக் கோபம்போலும் ! இப்படி நினைக்கவும், காலை ஒன்பதரை மணிக்கு அவசர அவசரமாகச் சாப்பிட்டுச் சென்ற அவன் அவளுக்குக் கோபம் வர என்னதான் செய்திருப்பான் என்கிற எண்ணம் உண்டாயிற்று. எப்பொழுதும்போலானால், இதற்கு மனைவியின்பேரில் அவனுக்குக் கோபந்தான் வந்திருக்கும். பகல் இரண்டு மணிக்கு ஒரு வாய் காபி சாப்பிட்டவன் அவன். பசியாக இருக்கும்போது கோபம் வருவது யாருக்கும் சகஜந்தானே! 

ஆனால் இன்று ‘கோபத்திற்கு இடம் கொடுப்பதில்லை, பொறுமையோடு இருப்பது’ என்கிற தீர்மானத்திலல்லவா இருக்கிறான்? அவன் முன்பிருந்த ராமு அல்லவே இப்பொழுது? ராமனுடைய கல்யாண குணங்களில் ஈடுபட்டு அவ்வுதாரண புருஷனைப் பின்பற்ற நிச்சயித்த ராமசாமி அல்லவா ! 

சாவதானமாகச் சட்டைகளைக் கழற்றி வைத்து விட்டு மனை வி இருக்கும் இடம் சென்றான். ”அம்மா எங்கே? நீ மட்டுமா இருக்கிறாய்?” என்று அவன் கேட்டதற்கு ஒரு விம்மல்தான் பதில் வந்தது. ‘இது என்ன இது ? அழுகிறாளா என்ன? சமாதானம் செய்ய வேண்டுமா என்ன?’ அவனுக்கு இருந்த களைப்பில் அதொன்றும் முடியாதென்று தோன்றிற்று. அவனைப் பசியும் களைப்பும் மிதமிஞ்சி அலைத்தன. 

இருப்பினும், “சீதே, என்ன நடந்துவிட்டது?” என்று ஒரு வாறு சமாளித்துக்கொண்டு தான் கேட்டான். “நான் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கு என்ன அக்கறை?” என்று விம்மலுக்கு நடுவில் வெடுக்கென்று ஒரு பதில் வந்தது. பெயரென்னவோ அவன் மனைவிக்கும் சீதைதான். ஆனால் கணவனுடன் நடந்து கொள்ளும் விதத்தில் தான் ராமாயணத்திலுள்ள சீதைக்கும் இவளுக்கும் வித்தியாசம்! 

அவள் வருத்தம், கோபம், இவைகளுக்குக் காரணம்: அன்று வெள்ளிக்கிழமை. முதல் நாள் வாங்கின உமா ராணிப் புடைவையை உடுத்துக்கொண்டு கோவிலுக்குப் போக வேண்டுமென்று அவளுக்கு ஆசை. அது நடக்க வில்லை. மாமியார் அவளை வீட்டில் காவல் வைத்து விட்டுக் கோவிலுக்குப் போய்விட்டாள். அவன் தன் இஷ்டம் போல் கவலையற்றுக் கதையோ இன்னொன்றோ கேட்டு விட்டு, நேரம் பொறுத்து வீடு வருகிறான். இவள் மட்டும் வீட்டில் கிடந்து சாகிறாள். 

இவ்விதம் அவன் பேரிலேயே குற்றம் சாட்டினாள். அவனுக்கு எப்படித்தான் இருக்கும்? ‘ஏதடா,காலையில் சாப்பிட்டுப்போன புருஷன் இவ்வளவு நாழிகை கழித்து வந்திருக்கிறானே, பசியாக இருக்குமே?’ என்கிற விசாரம் இல்லை. முதல் நாள் வாங்கின அந்த அருமையான உமா ராணிப் புடைவையை உடுத்துக்கொண்டு கோவிலுக்குப் போனால்தானா? அதை இப்போது உடுத்துக்கொண்டு முகமலர்ச்சியோடு அவனை வரவேற்கக் கூடாதா? 

அவன் தன் மனத்தில் இதை எண்ணினான். அந்த எண்ணத்தோடு கலந்து மரவுரி தரித்த ராமனும் அவ னருகில் நிற்கும் சீதையும் அந்த உள்ளத்திலே நின் றார்கள். 

காட்டுக்குப் போகிறேன் என்ற ராமனிடம் சீதை என்ன சொன்னாள்? “நானும் உங்களோடு வருகிறேன் என்று மாத்திரந்தான் சொன்னாள். ராமன் ராஜ்யத்தை ஆண்டாலும்,காட்டிலே மரவுரி தரித்துத் திரிந்தாலும் அவளுக்கு ஒன்றும் கவலை இல்லை. அவனை விட்டுப் பிரி யாமலிருக்கும் பாக்கியம் ஒன்றுதான் அவள் விரும்பி னாள். அப்படிக்கின்றி, “நீ ஆண்பிள்ளையாக இருந்து, இப்படி வெட்கங் கெட்டுப்போய் வனவாசத்தை ஏற்று வந்தாயே” என்று இடித்துக் காட்டியிருந்தால் ராமன் பாடும் சங்கடமாகத்தான் முடிந்திருக்கும். பிதாவின் சத்திய வாக்கை நிறைவேற்றி வைக்கும் தீர்மானம் அப் பொழுது எப்படி முடிந்திருக்குமோ! 

ராமு பெருமூச்சு விட்டான். மனைவியைச் சமா தானம் செய்ய முயன்றான். அதொன்றும் சுலபமான காரியமாக இல்லை. இதற்கிடையில், அவன் தாய், கோவில் சென்றிருந்தவள், திரும்பி வந்து சேர்ந்தாள். வரும் பொழுதே அவன் நேரம் பொறுத்து வீடு வந்ததைத்தான் குறைகூறத் தொடங்கினாள். அவளுக்கு ஜன்மம் மாறி விட்டது. போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்ளக் கோவிலுக்குச் சென்று ‘ஹர ஹர ‘ வென்று கன்னத்தில்’ போட்டு வரவேண்டாமா? காலமெல்லாம் வீட்டில் உழைத்துக் கொண்டிருக்க முடியுமா? அவன் வீடே நினைவில்லாமல் நேரம் பொறுத்து வந்தால் அவள் எப்படிக் கோவிலுக்குப் போக முடியும்? அவன் மனைவி சிறிசு. அவளைத் தனியாக விட்டுப்போக முடியவில்லை. இப்படியாக அவள் புகார் சொல்லத் தொடங்கினாள். 

உழைப்பது இவனா, அவர்களா? இவன்தான் அவ் வளவுக்கும் கடமைப்பட்டிருக்கிறான் போலும் ! ‘சாப்பிட்டாயா?’ என்று அவன் தாய் ஒரு வார்த்தை விசாரிக்க வில்லை. தன் குறைகளைக் கூறத் தொடங்கி விட்டாள். ராமன் தாய் கோசலையானால் மகன் பசித்திருக்கும் பொழுது இவ்விதமாக நடந்து கொள்வாளா? சீ! அவனுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. இப்படிப்பட் டவர்கள் மத்தியில் ராமனைக் கடைப்பிடித்து நடப்ப தென்பது சாத்தியமே இல்லை. கைகேசியின் குணமுள்ள வர்களே தன்னைச் சுற்றியிருந்த எல்லோரும். ஒரு கைகேசி யாலே அவ்வளவு நேர்ந்துவிட்டது ராமாயணத்தில். இவர்கள்போல் இருந்தால் இன்னும் எப்படியோ?’ என்று நினைத்தான். 

அவன் தம்பி கோபு வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருப்பவன்; ‘காவல் இருக்கக் கூடாதா?’ என்று மனத்துக்குள் நினைத்தானே தவிர, வாய்விட்டுச் சொல்ல வில்லை. அவன் சங்கற்பம் அதைத் தடுத்தது. ‘எதையும் பொறுத்துக்கொண்டு போகவேண்டும்’ என்ற விரதத்தை என்ன தடை வந்தாலும் கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கிறானே. 

கோபுவைப் பற்றி இவன் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டாள் அவன் தாய். “கோபு வீட்டிலேயே இருக்கிறதில்லை. அப்படி இருந்தாலும் அவனிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதைச் சொன்னாலும் தனக்கு வேலையில்லாததனால் எல்லோரும் இளப்பமாய்த் தன்னை நடத்துவதாக நினைத்துச் சண்டைக்கு வந்து விடுகிறான்.” 

இப்படி அவள் சொல்லி வாய்மூடு முன், கோபுவே வந்துவிட்டான். தன்னைப்பற்றி வீட்டில் எல்லோரும் சேர்ந்து வம்பளப்பதாக நினைத்துக்கொண்டான். அவ னுக்கு அம்மா என்ன சமாதானம் சொல்லியும் அவன் அடங்கவில்லை. 

“என்னைக் கண்டால் இந்த வீட்டில் ஒருவருக்காவது பிடிக்கிறதில்லை. என்னுடைய அம்மாவே என்னைப் பற்றி இப்படி ராமுவிடம் கோள் சொல்ல ஆரம்பித்து விட்டால், நான் என்ன செய்கிறது? ராமுவுக்கு என்னிடம் உள்ள பிரியந்தான் தெரிந்திருக்கிறது. ஏதோ எறிந்ததைத் தின்னும் நாய் என்று என்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த லக்ஷணத்தில், இவள் வேறு சொல்லிக்கொடுக்கிறாள்”.

அவன் மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போனான். 

“இந்த அசட்டுப் பிள்ளைக்கு யார் சமாதானம் சொல்லுகிறது?” என்று அவன் தாய் அலுத்துப் போய்ச் சொன்னாள். 

“ஆமாம், நான் அசடுதான். கையாலாகாதவன் தான். மூத்த பிள்ளை தான் உனக்கு ஒசத்தி, அற்ப உத்தியோகத்துக்காகத் தானே இவ்வளவு பிரமாதப் படுத்துகிறாய்? எனக்கும் கிடைத்தால் உத்தியோகம் பார்க்க மாட்டேனோ? இன்னும் நன்றாகவே பார்ப்பேன்” என்றான். 

அவன் பேசும் பேச்சுக்கு முடிவே இராதென்று தோன்றிற்று. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ராமுவுக்கு ஒரே கலக்கமாக இருந்தது. பசியும் களைப்பும் அவன் கோபத்தைத் தூண்டின. ராமாயணத்தையும் நினைத்துக் கொண்டான். எதிரிலிருக்கும் இவனும் சகோதரன், பரதனும் சகோதரன். பரதன் தன் சகோதரன் தனக்குச் சிம்மாதனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டானே என்று எவ்வளவு அங்கலாய்த்தான்! இந்தக் கோபு அவன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செயதிருப்பான்? ஒரு குதி குதித்துக்கொண்டு சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்திருப்பான். ராமன் ஒழிந்து போனான் என்ற சந்தோஷத்தினால் தலைகால் தெரியாமல் குதித்திருப்பான். 

இப்படி ஒரு தம்பி இருந்தால் அந்த ராமன் பேசாமல் இருப்பானா, தியாகந்தான் செய்வானா? 

இப்படி ராமு இந்த உலகத்திற்கும் ராமாயண உலகத்திற்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தான். அவன் தம்பி இதுவரையில் தாயைப் பார்த்துப் பேசி வந்தவன், இப்போது ராமுவையே நேராகத் தாக்க ஆரம்பித்தான்; ”என்னைத் தூஷித்துவிட்டு நல்லவன் போல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயே. நானும் பொறுத்துப் பொறுத்துத் தான் பார்க்கிறேன். நேரிலே சொல்ல யோக்கியதை இல்லாமல் கோள் சொல்லுகிறாயே. நீ ஆண்பிள்ளை யானால் முகத்துக்கு நேரே சொல்லலாமே! கோழை! இதைக் காட்டிலும் அற்பத்தனம் வேறு இல்லை.” அவன் வசைமாரி நிற்கவே இல்லை. 

ராமு எவ்வளவுதான் பொறுப்பான்? அவனும் மனிதன் தானே! நேற்று வரையிலும் கோபத்திற்கு இடம் கொடுத்தவன். இந்த நிமிஷத்தில் பசியினாலும் அலுப்பினாலும் பலஹீனமடைந்தவன். எவ்வளவு நாழிகை பொறுமையாக இருப்பான்? அதுகாறும் அடக்கி வைத்திருந்த கோபம் வெடிகுண்டைப் போல் வெடித்தது. “சீ! நாயைப் போலக் குரைக்காதே. உன்னைப்பற்றி இங்கே யாரும் பேசவில்லை. வாயை மூடு” என்று சொல்லவே, கோபு அதிகக் கோபங்கொண்டு உதடுகள் துடிக்க, “நாயென்றா சொல்லுகிறாய்?” என்று ராமுவை அடிப்பவன் போல் கிட்ட நெருங்கி முறைத்துப் பார்த்தான். ராமுவின் ஆத்திரம் உச்ச நிலையை அடைந்தது. கோபு வாகாய் நீட்டின கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். 

‘பளீர்’ என்ற சப்தம் கேட்டது. அதுவரையும் ராமனாக இருந்த அவன், பழைய ராமு ஆகிவிட்டான். 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *