ராஜா ராணி




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா.

அடேயப்பா. உஸ்! – ரொம்ப நாளாச்சு இதுமாதிரி ஆரம்பிச்சு. ஆ! அப்படி வாருங்கள் வழிக்கு! அத்தனை முகமும் இந்தப் பக்கம் திரும்பினீர்களா?
பெரியவர்களிலிருந்து சிறியவர்களிலிருந்து ராஜா ராணி கதை பிடிக்காதவர் யார்? குழந்தைகளைக்கூட நம்புவதற் கில்லை ஆயிரம் கேள்வி கேட்கிறதுகள். “அது எப்படி அப்படி நடக்கும்? போ தாத்தா, காது குத்தறே!”ன்னு மரியாதைகூட அடகு போய்விடுகிறது.
ஆனால் இன்று நாட்டு நடப்பின் தினசரிச் சுழலினின்று தப்ப, சற்று நேரம் எதிலேனும் வழி கிடைத்தால் சரி என்று தேடுபவர்களுக்கு.
ஒரு ஊரில் ஒரு ராஜா. ராஜாவுக்கு ஒரு ராணி. ஒரு ராணிதான்.
ராணி வருமுன், ராஜா ராஜகுமாரனாயிருக்கையிலேயே, மிகப் புத்திமான் என்று பேர் வாங்கிவிட்டான். யானை யேற்றம், குதிரையேற்றம், வில்லேற்றம், திக்விஜயம் செய்த விடமெல்லாம் அவன் கொடியேற்றம். ஏற்றங்களோடு ஏற்றமாக விலையேற்றம், வரியேற்றம் எனச் சொல்லும்படி யில்லை. நாளும் நாடும் வளமிக்கதோடன்றி, அகோ வாரும் பிள்ளாய் மதியூக மந்திரியே, மாத மும்மாரி பெய்கிறதா? மக்கள் ஆறில் ஒரு பங்கு வரி செலுத்துகின்றனரா? எனும் கேள்விக்குப் பதிலுடன் அரசு திருப்தி அடைந்துவிட்டது.
பிறகு ராணி வந்தாள். வந்தபோதும் ராஜகுமாரியாகத் தான் வந்தாள் – பின் எப்படி? ராஜகுமாரன் மனைவி ராஜ குமாரி.
ராஜாவுக்கு வயது எழுபது ஆனாலும் கழுந்து மாதிரி யிருந்தார். குத்தினால் கை எகிறிற்று. கல் சதை. கெட்டிப் பல். கட்டுப்பல் அல்ல.
இன்னும் இருபத்தி அஞ்சு வருட ஆட்சிக்குப் பஞ்ச மில்லை என்று பார்த்தவர் முகஸ்துதிக்குச் சொன்னாலும் சரி, எரிச்சலில் சொன்னாலும் சரி, உண்மை அதுதான்.
ஒருநாள் சபைக்கு ஒரு சாமியார் வந்தார், அவதூதர். தரை புரண்ட சடையும் தாடியும் முடிந்தவரை மானங் காத்தன. முடியாவிட்டாலும் அவருக்கு அக்கறை என்ன? உடல் குளிகண்டு எந்நாள் ஆச்சுதோ?
வந்தார். வந்து, அரசன் பக்கலில் வீற்றிருந்த அரசிளங் குமரனைப் பார்த்து, தன் ஆள்காட்டி விரலைக் கொக்கி வளைத்ததும் ராஜகுமாரன் தூண்டில் வாய் மீன்போல், அப்பவே, அப்படியே எழுந்து பின்தொடர்ந்து போய் விட்டான்.
யாரேனும் எழுந்து தடுக்க ‘தில்’லைப் பின்னால் தேடலாம். அசைக்கக் கை கால் வேண்டாமா? அத்தனை பேரும் கல்.
போனவன் போனான்டீ! ஒரு பாட்டு இருக்கு அல்ல?
காணாமல் போய், ஏழு வருடங்கள் கழித்துத் திரும்பி வந்தான்.
பிரிவாற்றாமையில் படுத்துவிட்ட ராஜாவுக்கு, மகனைத் திரும்பக் கண்ட சந்தோஷத்தில் மார் வெடித்துவிட்டது.
ராஜகுமாரன் ராஜாவானான்.
ராஜகுமாரியும் ராணி ஆனாள். ஆகவேண்டியதுதானே! ராஜா மனைவி ராணி.
தன் ராஜா வரும் வரை ராஜகுமாரி, புக்ககத்தில்தான் இருந்தாள். பட்டம் மாமனார் படுக்கையில். ஆட்சி அவளு டையது. விலையேற்றம், வரியேற்றம், அவசரச் சட்டம் அவசரத் தீர்ப்பு, அப்பீலுக்கு நேரம் கொடுக்காமல் தண் னையின் அவசர நிறைவேற்றம் – ப்ரஜைகள் முதன் முறையாக என்னவென்று உணர்ந்தார்கள். சுவை கனக்கு முன் ராஜா வந்துவிட்டாரே!
புருஷன் திரும்பி வந்ததால் சமுதாயத்தில் தன் அந்தஸ்தை மீண்டும் பெற்றதில் சந்தோஷம்தான். (வாழா வெட்டி, தாலியிறங்காக் கைம்பெண் பட்டம் யாருக்கு வேண்டியிருக்கும்?) ஆனாலும் ஆட்சியைக் கணவரிடம்- உரியவரே ஆனாலும் — ஒப்படைக்கச் சந்தோஷமாயி ருந்ததோ?”அப்பாடா, வந்தேளோ! எனக்கு ராஜ்ய பாரம் விட்டதென்று ஒப்புக்குச் சொல்லிக்கக்கூட நா எழவில்லை. ருசி கண்ட பூனையின் ஏக்கம் அவளைக் குடிகொண்டது. பூனை, வளர்த்தவனை மறந்துவிடும். குடிகொண்ட இடத்தை விடாது.
ராஜா ஆவதற்கென்றே திரும்பி வந்த ராஜகுமாரன். ராஜாவான பிறகு,ஏன்,திரும்பி வந்ததிலிருந்தே பழையபடி இல்லை. ராஜ ரிஷியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதிலும் ராஜாவைக் காட்டிலும் ரிஷிகூட என்றால் மிகையாகாது.
நன்றாய்த்தான் பேசினார், சிரித்தார், பழகினார். மக்களுக்கு ஏழு ஆண்டுகளாகக் கழுத்தை அழுத்திக்கொண்ருந்த நுகத்தடி இறங்கியதே ஒரு புது அனுபவமாக இருந்தது. சன்னியாசி பின்னால் போனவன் சாதுவாய்த் வாலை ஆட்டிய திரும்பி வந்திருப்பான் என்று எண்ணி வெளிநாட்டு எதிரிகளும், உள்நாட்டுச் சதிகாரர்களும், ஆளின் விழிப்பும் வாளும் துளிகூடக் கூர்மங்கவில்லை என்று பட்டு, உணர்ந்து அடங்கினர்.
மனைவிக்குச் சேரவேண்டிய தேகதருமங்கள், மற்ற உரிமைகள் எதிலும் வஞ்சனையில்லை.
போகும்போது விட்ட குழந்தை ஏழு வருடங்களில் சிறுவனாக வளர்ந்துவிட்ட தன் மகனை முறையே அடை யாளம் கண்டுகொண்டதிலும் குறைவில்லை. ஆனால் விரல் வைத்துப் பார்க்கமுடியாத ஏதோ ஒரு ஒதுக்கம் அவரிடம் இருந்தது. கடமைகள் தவறாமல் ஒழுங்காக நிறைவேற்றப்பட்டன. ஆனால் கடமைகள்.
ஆனால் கடமையின் தன்மை, நியாயம், வரைக் கோடுகள் என்றுமே தெளிவாய்த் தெரிந்ததில்லை. நாக்கைத் தொட்டுக்கொண்டு வரைந்த கோடுகள், ஒருவனுக்கு உண்டி மற்றவனுக்கு நஞ்சு. நன்டுக்குத் திண் டாட்டம்,நரிக்குக் கொண்டாட்டம். ஓங்கின கை அடிக்க ஒருவன் இருந்தே ஆகவேண்டும். ஒருவனுக்குக் கடமை எதிராளிக்குக் கொடுமை. கடமையின் கொடுமை என்கிற தலைப்பில் பழைய மேற்கோள்களைக் காட்டியே இன்று ஒரு பி.எச்டி.க்கு வழியிருக்கிறது.
ஆகவே ராணி மனம் வெதும்பியதில் ஆச்சரியமில்லை. என் ஆட்சியைப் பிடுங்க இவன் யார்?” என்று அவள் கேட்கவில்லை. தாலி கட்டிய புருஷன், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், காணாமல் புருஷன் கண்டெடுத்த புருஷன், பிரிந்திருந்த வரை அவள் நெஞ்சத் தின் கள்ளப் புருஷன் – எல்லாமே அவர்தானே! படுக்கை அறையின் அந்தரங்கத்தில், “நீங்கள் தான் பைராகி பின்னால் ஓடிப் போனீர்கள். நாம் பிரிந்திருந்தவரை, நாதா!
நான் வேறு யாரையும் நினைத்ததுகூட இல்லை -” என்றால்,என்றிருந்தால், உண்மையே நவின்றாள். ஆனால் அப்படிச் சொன்னாளா, இல்லையா, படுக்கையறையில்- யார் கண்ட து?
இருந்தாலும் ராணி நெஞ்சு முள்ளில் ஏதோ சிலாம்பு இடறிற்று. அதுதான் ருசி கண்ட பூனையின் “மியாவ் மியாவ்” பூனைப் பசி. திருட்டுப் பசி. பால் பசி. திருட்டுப் பால் பசி. ஓயாப் பசி.
கணவன் மேல் அவளுடைய அன்பு நேரங்கள் திடீரென அதிகரித்தன. அவைகளுக்கு அவருடைய ஈடுகொடலும் அவளுக்குக் குறையாமல் இருந்தது. ஆனால் அவைகளில், அவள் அவரிடம் தூண்டிவிட முயன்ற வெறி, அந்த வெறியில் அவள் நாடிய ஏமாந்த நேரங்கள் அவளுக்குக் கிடைக்க வில்லை. கைகேசி ஆயினும் ஏற்கெனவே தனக்குக் கடன் பட்டிருந்த வரங்களைத்தான் கேட்டாள். அதற்கும் வழி இங்கில்லையே!
ஆயினும் ஆசை விடுகிறதா? அதுபோன்ற ஸாஹஸ சமயங்களில் ஒரு சமயம் வாய் விட்டே கேட்டுவிட்டாள்:
“கிரீடம் உங்களுக்கு அழகாயிருக்கிறது. உங்கள் அப்பா வைக் காட்டிலும் உங்களுக்கே பொருத்தமாக இருக்கிறது. அதை நீங்கள் அணிந்துகொண்டேயிருக்க வேணும்.
கட்டிலின் பக்கலில் சிற்ப வேலை மலிந்து நின்ற வட்ட மேஜை மேல், பெரிய வெள்ளிப் பேலாவில் புலுபுலு பொங்கி வழிந்த கறுப்புத் திராக்ஷைக் கொத்திலிருந்து இரண்டு பழங்கள் பறித்து ராஜா வாயில் போட்டுக்கொண்டார். அவர் விழிகள் திராக்ஷை போன்றே பளபளத்தன.
“நாதா”
இங்கே சற்று நேரம் ஆயக்கால் போட்டுக்கொள்கிறேன்.
ஸீதை ராமனை “ஆர்ய” என விளித்தாள்.
புத்தகங்களில், கல்யாணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் “அத்தான்!” என்று அழைக்கப் படிக்கிறோம்.
அந்தணக் குடும்பங்களில் ‘ஏன்னா? உங்களைத்தானே!
அந்தணரல்லாதார் “தே.ஏ புள்ளே!”
பேரைச் சொல்லாமலே “ஹல்லோ, ஹல்லோ என்னாங்க?’ இது ஒரு பாணி.
இன்னும் முன்னேறிவிட்ட இடங்களில் Mr. ஹரி நாம்!
“Yes Lolita darling”
இந்தக் கதை நடக்கும் காலம் எனக்குத் தெரியாது. எதற்கும் ‘நாதா!” என்று போட்டு வைத்தேன். எதற்கும் பத்திரம் அதுதான். தவிர மாயா வினோதக் கதை. சரித்ர நிரூபணை தேவையில்லை. இப்பவும் எங்கேனும் காலத்துக் கேற்ற ரூபத்தில் நடந்துகொண்டிருக்கும்.
நாதா! செங்கோலை மட்டும் என்னிடம் கொடுத்துப் பாருங்களேன்! எனக்குப் பொழுதே போகமாட்டேன்கிறது!”
ராஜா பதிலே பேசவில்லை. புன்னகை பூத்தார். மேல் வரிசையில் முன் பற்கள் இரண்டு மட்டும் லேசாகத் தெரிந்தன. அவளுடைய ப்ரமையா? நிஜம்தானா? எல்லோரையும்போல் சதுரமாக இருப்பதற்குப் பதிலாக அம்புத் தலைபோல் நுனி கூரிட்டிருந்தன. அந்தப் புன் சிரிப்பில் ஒரு பதில் மட்டுமல்ல. சொல்லாத பதில்கள்தான் எப்பவுமே கூட. அச்சம் தரும் பதில்கள். அத்துடன் அவர் ஒருமுறை மேல் உதட்டை நக்கிக்கொண்டதும் வேறு எதுவோ ஞாபகம் வந்தது. வந்ததை மறக்க முயன்றாள்.
உள்ளங்கையுள் அடங்குகிற மாதிரி ஒரு புத்தகம். அதன் பக்கங்களுள் அடையாளத்துக்கு நொழுந்திய ஒரு விரல் அந்த ஒரு புத்தகம். ஒரே புத்தகம்தான். அதே புத்தகம்தான்.
விழித்திருக்கையில் கையுள். இரவு வேளை தலையணை கீழ். அப்படி அடைகாக்க அதில் என்ன? அவளுக்கு எரிச்சலாய்க் கூட வந்தது. ஒரு இரவு அவர் உபாதைக்கு வெளியே சென்ற சமயம் தலையணை கீழிருந்து அவசரமாகப் புரட்டிப் பார்த் தாள். அத்தனையும் வெற்றுப் பக்கங்கள். ஒருமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டாள். பக்கங்கள் வெறிச்சோ தான். ஒன்றுமே புரியவில்லை. திரும்பி வரும் அரவம் கேட்டு, எடுத்த இடத்துக்கு, எடுத்ததைத் திருப்பிவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டாள். நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கெளரவமா? பயமா? ஒன்றுமே புரியவில்லை.
பிறகு ஒருநாள் நந்தவனத்தில், கதை சம்பிரதாயம் கோணாமல் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு காக்கை யுடன் அவர் பேசிக்கொண்டிருக்கக் கண்டாள். அண்டங் காக்கை. பூவரசங் கிளைமேல் அமர்ந்த வண்ணம் ** SIT. கா -கர் கர்” என்றது. இவர் பக்தியுடன் கைகட்டிக் கீழே நின்றபடி ‘கார்’ருக்கும் ‘கா’வுக்கும் ஆமாம்; இல்லை; சரி; அப்படியே என்கிற முறையில் தலையை ஆட்டிக்கொண்டிருக் கிறது. என்ன நடக்கிறது? நிச்சயம் சம்பாஷணைதான்.
அவர்கள் அல்ல அவைகளா? – தன்னைப் பார்க்குமுன்னர் பின்னுக்கு வாங்கினாள்.
அன்றிலிருந்தே அவள் அவருக்குப் பின்வாங்கல்தான். அவசியமான பேச்சோடு சரி.
நாளா வட்டத்தில் தன் படுக்கையை வேறு அறைக்கு மாற்றிக்கொண்டாள். இனி அவளுக்கு அகாள் பிள்ளைதான் துணை.
அதற்கும் அவர் ஏன் என்று கேட்டுக்கொள்ளவில்லை.
“ஆம்” என மாட்டான். “உம்” என மாட்டான். ஹும்’ எனவும் மாட்டான். ஆனால் ஆளப்பிறந்தவன். தனிப் பாதை மனிதன். அவள் ஆசைகள், குறிக்கோள், எல்லாம் மகன்மேல் திரும்பின. முயற்சி பூராவும் அப்பன் மகனை, அம்மா பிள்ளையாக மாற்றுவதில் முடிந்தன.
எறும்பு ஊரக் கற்குழியும்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
கொட்டிக் கொட்டிக் குளவியும் தேளாச்சு.
பழமொழி வாழ்க! பழமொழியைவிடவா நான் கதை சொல்லிவிடப் போகிறேன்?
நமக்கு ஒரு வருடம் தேவர்க்கொரு நாள்.
எந்தச் செயலிலும் உடல்பாடைக் குறைத்துக்கொள்ள வழிகளைத் தேடித் தேடிச் சாதிக்கச் சாதிக்க, அதன் விளை வால் மிஞ்சிப்போகும் வேளையும் சுலபமாகிவிட்ட இந் நாட்களில் நாளுக்குச் சமகதி போய்விட்டது. ஒரு சமயம் ஒருநாள். இன்னொரு நாளைக் கட்டி இழுத்துச் செல்கிறது. இன்னொரு சமயம் ஒருநாள் இன்னொரு நாளை முதுகில் தள்ளி தான் முன்னிட அவசரப்படுகிறது. ஆனால் அந்த நாட்கள் அப்படியில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தேவர் நாட்கள் பதினைந்து ஓடியே போய் விட்டன.
அந்த வயிற்றில் அந்த வித்துக்கு முளைத்தது சாதா வாகுமா? ஏற்கெனே ராஜ பரம்பரை.
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி.
அவரை போட்டால் துவரை முளைக்குமா?
மகன்- (காலியிடங்கள் வாசகருக்கு. வாடகை இஷ்டத்துக்கு நிரப்பிக்கொள்ள.)
பழமொழி வாழ்க ஆனால்…
பழமொழிகள் இருக்கின்றன. கூடவே, ஆனால் என்பதும் உண்டே! உண்டென்று உளனெனில் ஆனாலும் உண்டென்பது உள்ளளவும் உண்டு. (சபாஷ்! என் முதுகு – தட்டுவதுடன் இருக்கட்டும்.)
பெற்றோரின் உட்பகை பையனைப் பாதிக்காமல் இருக்குமா? குழந்தைப் பிராயத்தினில் தந்தையின் தோளிலும் மடியிலும் கன்னத்துடன் கன்னம் சேர்த்த கொஞ்சலிலும் (“அப்பா? தாடி சொர சொரங்கறதே!) தன் பங்கு தவறிப் போன தவிப்பு, வெந்நீரூற்றுக் கரைமேல் செடிபோல் வெதும்பல். வெளித் தோற்றத்திலேயே வயதுக்கு மீறிய வாட்டம். உள் புகைச்சலில் விழியோரங்களில் நிரந்தரச் சிவப்பு நரம்புக் கொடி. வாயில் கடுப்பு. இந்த அடையாளங்களின்றி, அவனே தன்னை முகம் பார்க்கும் கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
அவன் தந்தையின் பாதை எங்கேயோ பிரிந்து போயாச்சு. மெளனம் அவரை மலைப் பாம்புபோல் தன் ஆலிங்கனத்தில் குழைத்து படிப்படியாக விழுங்கிக்கொண் டிருந்தது. நாள் கணக்கில் உணவைத் தொடர்ந்துத் துறந்தார். மாதக் கணக்கில் அவர் அறைக் கதவு அடைத்துக் கிடக்கும். எப்போது வெளியே புறப்பட்டார்? அரசு அலுவல் களை எப்படி எப்போது கவனித்தார்? பத்திரங்கள், அதிகா ரங்கள் எப்போது ராஜமுத்திரையை வாங்கிக்கொண்டன? கேள்விகள் நம்முடையது. பதில் அவருடையது. அதுவும் ஒரே பதில். செயலே பதில். ஆட்சி, மாட்சி குறையின்றி ஆட்சி,மாட்சி நடைபெற்றன.
இந்தப் பதினைந்து வருடங்களில் ராணிக்கு நெற்றிப் பொட்டில் அடை நரை கண்டது. பாவம், அவள் கவலை அவளுக்கு. அவள் வதங்க வதங்க அவர் மேனியாகிக்கொண்டு வரும் மர்மமென்ன? இத்தனைக்கும் இத்தனை மெய் வருத்தல் நடுவில்! சில சமயங்களில் இன்னதென்று விரல் வைத்துச் சொல்ல இயலாத பரிமீளங்கள் உடலினின்று வீசின. சிக்கொள்ளாமலே எப்படி வந்தன? எந்தக் கணப்பில் இந்தத் தகதகப்பு?
மாலை வேளையில், நந்தவனத்தில் சுற்றி வருகையில், சோலையழகுடன் வானத்தின் வர்ணஜாலங்களின் கலவியில் நேர்ந்த மன மயக்கத்தில் ராணி நினைப்பாள்: ‘என் அவசரத் தில் காயைக் கடித்த கசப்பில் கனியை ஏமாந்தேனோ? ஆனால் இது ஒருகண நேர மயக்கம்தான். பச்சாதாபங்கள் அவள் இயல்பில் அல்ல. ஜலத்தின்மேல் லேசாகக் காற்றின் விதிர் விதிர்ப்பு. அவள் பிள்ளை மனதின் முழு நஞ்சாக்கம் தான் அவள் குறிக்கோள்.
ராஜகுமாரன், வேட்டைக்குப் போன இடத்தில் ஒரு வேட குமாரிமேல் காதல் கொண்டு அரச நியாயத்தில் கந்தர்வ மணம் கொண்டு கையோடு அரண்மனைக்கு அழைத்தும் வந்துவிட்டான்.
ராணி கூந்தலில் நரை ஆறாய் ஓடிற்று. என்றேனும் ஒருநாள் போட்டிக்கு ஒரு சிறுக்கி வரப்போகிறவள்தான். ஆசைப்பட்ட பொம்மையுடன் கொஞ்ச காலம் விளையாட வேண்டியதுதான். அது கை தவறிக் கீழே விழுந்து தானாக உடையாவிட்டால் பொட்டென்று கீழே போட்டு உடைக் கவும் வேண்டியதுதான்; அது அதுக்குக் காலக் கிரமம் என்று உண்டே. நியாயம் தெரியாதவரை ராணி? ஊர்ப் பிடாரியை ஒண்டவந்த பிடாரி விரட்டுவது நியாயமா? அப்படி அதுக்கு இடம் கொடுக்கலாமா?
அடே! இவள் இன்று வந்தவளடா?
நீ என் ரத்தத்தின் ரத்தமடா!
ராணி வெளியில் சொல்லவில்லை. வெளியில் சொன் னால் டயலாக்காக அத்தோடு பொரிந்து போச்சு. உள்ளேயே குமைந்தால் எரிமலை. தன் தனிமையில் ராணி நீலமானால், விஷ நீலம்.
தன்னறியாமை வேடகுமாரிக்கு ஒரு குழந்தைத்தனத் தைத் தந்தது. கூடவே புதுச் சூழ்நிலை அவளுக்கு அச்சத் தையும் தந்தது. அரசகுமாரனை இடுப்பில் அணைத்தபடி குதிரைமேல் அரண்மனையுள் நுழைகையிலேயே, மதிலின் கண் வைத்த வளைவுகள் அவள் கழுத்தை நெரிக்க முடங்கிய விரல்கள் போல் தோன்றின. அகழியில் முதலைகள் பிளந்த வாயுடன் வரவேற்றன. வானமும் வையமும், தன்னிச்சை யின் கால்வீச்சாகப் பழகிப்போனவளுக்குக் கல் கட்டிடம் சிறையெனப்பட்டது. காட்டில் ஒட்டினாற்போல் ஓங்கி வளர்ந்த ஒரு அரசு, ஒரு வேம்பின் கிளைகளின் நடுவில் கட்டிய ஓலைக் குடிசைத் திடீரென ஏக்கம் கொண்டாள். நள்ளிரவில், அடவியில், சிம்ம கர்ஜ்ஜனைக்கும், சிறுத்தை யின் தும்மலுக்கும், யானைப் பிளிறலுக்கும், கழுதைப் புலி யின் சிரிப்புக்கும் பழகிப்போன செவி, திரைமறைவிலிருந்து அவள் மனதை மயக்க,பத இழைவில் அரும் பாடுபட்ட யாழையும் தும்புருவையும் மறுத்தது. புலி நகமும் நரிப் பல்லும் பாசி மணியும் யானைத் தந்தமும் பன்றிக் கொம்புமே மதிக்கத்தக்க அணிகள். இந்தப் பொன்னும் கற்களும் யாருக்கு வேணும்?
தனியாக, நதியோரம், காலாற நடந்து அப்பவே பிடித்த மீனை, அப்பவே அடித்த முயலை, மரத்தடியில் தோண்டியா பள்ளத்தில் வைக்கோலால் மூடி, முட்டி, அவித்து, அங்கனே கொழுப்பு தேனாய்க் கசியப் பிய்த்துத் தின்னும் ருசிக்கு வெள்ளி ஏனங்களில் அரண்மனையின் உண்டிகள் ஈடாகுமா? இதுகாறும் காட்டில் இன்பமாய்க் கழித்த எந்நாட்கள் திரும்பி வருமா? தன்னையறியாமல் வெறுப்பில் நாக்கின் சூல்கொட் டலுக்கு நாலு பணிப்பெண்கள் நான்கு மூலைகளிலிருந்து எப்படியோ தோன்றினர். ஒரு கதவைகூடத் தானாகத் திறக்க வழியின்றி ஏவலாளிகளின் பணிவிடையே, இடை விடாது தன்னைக் காணிக்கும் காவலாகக் கண்டாள். அவள் ஒரு வனவிலங்கு, கைவிலங்கினும் கொடுமை இந்தக் கண் விலங்கைத் திமிறினாள்.
வந்து பதினெட்டு நாட்கள்கூட ஆகவில்லை. வேட குமாரி காணாமல் போய்விட்டாள். இத்தனை காவலின் விரலிடுக்கில் எப்படி மாயமாய் மறைந்தாள்? தேடாத இடமில்லை. ஆனால் வேடுவ குலமாதலின் அவளும் போர் வழி களில் வல்லுநள். தப்ப வழிகள் தெரியாமலிருக்குமா? அவள் கழுத்தில் கறுப்பு மணி மாலையில் தொங்கிய குட்டிக் கொப்பி யைத் திறந்தாலே ஒரு படையையே வீழ்த்த வல்ல மயக்க மருந்து இருக்கலாம். ஏனெனில், அரண்மனையின் மேற்கு வாசலில் காவலர் இருவர் நினைவிழந்து கிடந்தனர். மூன் றாமவன் முதுகில் ஒரு கத்தி, பிடிவதை அழுந்தியிருந்தது. இன்னொருவனின் விலாசம் அடியோடு தெரியவில்லை.
அன்றைய பராக் அனைவருமே அரசகுமாரன் கட்டளை, சிரச்சேதமாயினர். அகப்பட்டவர்மேல் அதிகாரம் பழி தீர்த்துக்கொள்ளலாம். அத்துடன் சரி. தப்பிப் போகிற வளைப் பிடிக்க முடியவில்லை.
ராணி பெருமூச்சுவிட்டாள். கூந்தலில் நரைமயிர் ஒன் றிரண்டு கருமைக்கு மீண்டது. சாத்தியமா? கேட்காதீர்கள், இது மாயா வினோதக் கதை. இப்படி விழுந்துவிட்ட வரியைக் கலைக்காதீர்கள்.
இளவரசியின் நிலை கண்டு பயப்படுவதா? பரிதாபப் படுவதா?
மது, மாது, வேட்டை, கொடுமை மறதியே உன்னை அடைய வழி என்ன? மனமே உன் உலைக்கு மூடியே கிடை யாதா? அதற்கும் வழி உன்னையேதான் கேட்க வேண்டுமா? அனுபவிக்க அவமானங்கள் இன்னும் என்னென்ன?
-அரசனிடம் குமாரன் வந்தான். ‘தந்தையே, நீங்களோ தவத்தில் இறங்கிவிட்டீர்கள். எனக்கும் வயதாகிக்கொண் டிருக்கிறது. பொழுதும் போகவில்லை. அரச நிர்வாகத்தை என்னிடம் ஒப்படையுங்களேன்! நானும் பழகவேண்டியவன் தானே.
ராஜன், மகனைச் சிந்தித்தார். ஆஜானுபாகு, அழகன். கொடுத்துவிட வேண்டியதுதானே! நான் என்ன நித்தியமா? நானில்லாமல், மக்கள் என்ன ஆவர் என்ற நினைப்பே அகந்தைதானே! எத்தனையோ சூரியர், சந்திரர், நேற்று முளைத்த சூரியனேதான் இன்றும் வந்தான் என்று என்ன நிச்சயம்? சூரியனே விட்டிற்பூச்சியெனில் நாம் யார்? நடப்பது நடந்தே தீரும். மகுடத்தைக் கழற்றி மகன் தலையில் வைத்தார். கிரீடம் நெற்றிக்கும் தாழச் சரிந்து பார்வையை மறைத்தது.
பிள்ளைக்குப் பின்னால் பிரியாவிடையாக நின்ற ராணி, பரவாயில்லை, உங்களுக்குத் துணி தைத்தோ, கொடுத்தோ சரிபண்ணிக்கொள்ளலாம்” என அவசரமாக மறித்தாள். முடி பொருந்தவில்லை என்று மன்னன் மனம் மாறிவிட்டால்? என்று அவள் கவலை. அந்த நிமிடம், வருடங்கள் உதிர்ந்து, அரசி அழகில் பொலிந்தாள் என்றே கூறலாம்.
இடையில் முழங்கால்வரை துண்டுடன், ராஜா நாட்டை விட்டு அகன்று காட்டை அடைந்தார்.
ராஜ ரிஷி, இப்போ ரிஷிராஜ் ஆனார்.
உருவங்கள், உணர்ச்சிகள் தடவாளங்கள் தாண்டி
உண்டு, இல்லை நிலைகள், யூகங்கள் தாண்டி
நாமாக்களின் எல்லைகள் தாண்டி
இப்போது அவரை நிரம்பி வழிந்தது கருணா பாவம்
ஒன்றுதான்
ஏரியின் அமைதி மனதில் அதில் அவ்வப்போது மீன்களின்
துள்ளல்கள்
காற்றின் பெருமூச்சில் சிற்றலைகளின் விதிர் விதிப்பு வானின்று கழன்று உதிர்ந்த ஒன்றிரண்டு நட்சத்திரங்
களின் சுழிப்பு
தவிர்க்க முடியாதவை
மனமே உன்னை முற்றிலும் வெல்வது இல்லை. மனமே
உனக்கு மரணம் இல்லை
கனவுகள் கண்டு
முத்தியென்றும் கடவுள் என்றும் துறவு என்றும்
கடைசியில் மனமே உனக்குத்தான் பலியாகிறோம்
எனும் இந்தத் தெளிவேதான் – ஓடத்தின் கவிழ்தல்தான்
ஞானத்தின் தரிசனமா?
எதை விடுகிறோம்? எங்கே போகிறோம்? எதற்காகக்
காத்திருக்கிறோம்
ஆனால் காத்திருக்கிறோம். உயிரே காத்திருக்கும் நேரம்தான்.
உயிரே, தன்னையே தின்றுகொண்டிருக்கும் பசி வேளை
தான்.
கற்களைத் தட்டிப் பொறியெழுப்பி, சருகு மூட்டி, தீயைப் பெரிதாக்கி, குண்டத்தில் குதித்து விளையாடும் தீ நாக்குகளைச் சிந்திப்பதில் ரிஷிக்கு அலுப்பே இல்லை. மஞ்சள், சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, நீலம்,கறுப்பு,கரு நீலம்,
எத்தனை சேர்க்கைகள், எத்தனை அசைவுகள் அசைவுகளும் வர்ணங்களும் தெரிவிக்கும் சேதிகள்!
ஒரு சிறு பொறி காட்டையே எரிக்கும் தீ.
தன்னையும் எரித்துக்கொண்டும் தன்னில் கொடுக்கும்
பண்டங்களின் அழுக்கையும் எரித்துக்கொண்டு,
அவிப்பாக தேவதைகளைத் தன்னில் வரவழைக்கும் தீ.
அக்கினியே சாட்சி. அக்கினியே பிராணன். அக்கினியே
தெய்வம். சிதையே மஹாயக்ஞம்.
சூர்யன் அக்னி. தவம் அக்னி.ஞானம் அக்னி-
குளம்போசை கேட்டுக் கவனம் கலைந்தது. தலை நிமிர்ந்தால் அவர் குமாரன் குதிரைமேல் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான். குதிரைக்கு மூச்சு இறைத்தது. ராஜனுக் குத் தள்ளாடிற்று. குடி மயக்கம். அவன் கண்களில் மூட்டம் சூழ்ந்தது.
‘தந்தையே உங்களைத்தான் காணவந்தேன் – நீங்கள்
ஒன்று பாக்கி.’
அவர் கண்களில் கருணை வழிந்தது. ஆனால் தன்னிடம் ஏதுமிலையே என்னும் முறையில் அவர் விழித்தார்.
“இல்லை. உங்களிடம் ஒரு புத்தகம் இருக்கிறதாம்
அம்மா வாங்கி வரச் சொன்னாள்.
ரிஷி வலது கையைத் திறந்தார். உள்ளங்கையில் ஒரு
புத்தகம் இருந்தது. குட்டிப் புத்தகம்.
“ஆம் ஆம் அதுதான் — முழுவதாக முக்கியமானதை
அமுக்கிவிட்டு ஏமாற்றிவிட்டால் ஆகிவிட்டதா?”
அவர் முகத்தில் லேசாக விசனம் படலம் ஆடிற்றோ? இந்த ஓயாத அதிருப்தியேதான் மனிதகுலத்தின் முடிவா? தனால்தான் பிறவிக்கு விடிவே கிடையாதா? புத்தகம் அவர் கையினின்று நழுவி ஓமத்துக்கு ஆஹுதி ஆயிற்று.
ராஜனுக்கு மூண்ட சீற்றம் தலைகால் தெரியவில்லை. கண் மண் தெரியா இந்த அரச கோபம் முட்டுக் கொடுக்கா விடின், மாயா வினோதக் கதைகள். சரித்திரக் கதைகள் பாதியிலேயே குப்புறக் கவிழ வேண்டியதுதான்.
சதக்! நின்றவிடத்திலிருந்து எறிந்த கத்தி விலாவி இறங்கி முதுகுப் புறமாக வெளிவந்த ஆச்சரியமும் அதிர்ச்சி யும்தான். முன் வலி பின்னால். வலி என்பது அவரவர் அனுபவம், மனநிலை, சஹிப்பைப் பொறுத்தபடி. ஆனால் அவர் கண்களில் தெரிந்தது மாபெரும் விசனம்தான். ஆண்டவனே! என் மகன் தெரியாமல் செய்துவிட்டான் அவனை மன்னித்துவிடு!’ என்கிற மாதிரி.
ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. வருடக்கணக்கில் தன் ஆலிங்கனத்தில் அவரைக் குழைத்து விழுங்கிக்கொண் டிருக்கும் மௌனத்தில் நாக்கு எந்நாளோ செயலிழந்து விட்டது.
ஆனால் அரசன் கண்கள் பயத்தில் சுழன்றன. அவன் கண்டது வேறு. அந்தப் பயத்தில் போதை சட்டென அவனை விட்டால் குதிரைமீது அப்படியே தாவி பின்னால் யாரோ அவனைத் துரத்துவதுபோல் அதை விரட்டு விரட்டென விரட்டி அரண்மனையில் அடைந்து படுக்கையில் மல்லாக்க விழுந்தான்.
“போன காரியம் என்ன? மகளே உனக்கென்ன வந்தது”
“அம்மா! அப்பா என்னெதிரே உருமாறுவதைக் கண்டேன்!”
“புரியும்படி சொல்லேன்!’ திரை ஓட்டுவாரொட்டி. அதனாலேயே அவள் குரல் சற்றுப் பொறுமை இழந்தது.
அரசன் கண்ட காக்ஷி அவன் கண்முன் திரும்பவும் நின்றது. கண்களைப் பொத்திக்கொண்டான். மறையவில்லை.
“அப்பா, முகம், உடல் எல்லாம் நிமிஷத்தில் மாறிப் போச்சு. அறையில் கோவணம்கூட இல்லாமல் ஒரு ஆள். தாடியும் சடையும் பூமியில் புரண்டன. நகங்கள் கூரியக் கத்திகள். உடல் குளி கண்டு எந்த நாளோ? கண்களுள் நெருப்புச் சக்கரங்கள். தரையிலிருந்து ஒரு புல்லைப் பிடுங்கி இரண்டு துண்டுகளாகக் கிள்ளி என்மேல் எறிந்தான். இதுவரை நான் அறிந்திராத பயங்கண்டு ஓடிவந்து விட்டேன்.
ராணிக்கு முகம் வெளுத்தது ‘மகனே! அது ஒரு பாஷை’ மகன் விவரித்த ஆளை அவளுக்குத் தெரியுமே! ‘மகனே, பெரிய இடத்துப் பகையைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டாய்!”
என்னை ஏன் சொல்கிறீர்கள் நீங்கள்தானே என்னை அனுப்பினீர்கள்? உங்களால்தானே, நீங்கள் இப்பொழுது பயமுறுத்தும் நிலை.
“சரி, பெரிய இடத்துப் பகையைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டோம்” ராணிக்கு அலுப்பாயிருந்தது. இந்த, வார்த்தைகளின் நுட்பத்தில் என்ன அக்குசோ? என்ன லாபம் அதனால் கண்டது?
“உன்னைச் சுற்றிக் காவலை இரட்டிப்பாக்கு. நீயும் எப்பவும் ஆயுதபாணியாகவே இரு.எச்சரிக்கை! எச்சரிக்கை! இதுவே இப்போதிலிருந்து உன் மூச்சின் ஜபமாக இருக்கட்டும்!”
படுக்கையறையைக் காவலாளிகள் எதிருக்கெதிர் ப்ரதட்சணத்தில் ஓயாமல் சுற்றினர். அறை உள்ளே. ஒரு மரத்தடுப்பின் பின்னால், உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரை முகத்தையும் மூடியதோர் உருவம் மறைந்து கொண்டு ஊஞ்சலில் படுத்திருக்கும் அரசனையே கண்கூடக் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தது. சமயத்துக்குக் காத்துக்கொண்டிருந்தது. அதன் பிரசன்னம் யாவரும் அறியார்.
பயம் ஒரு பக்கம், குடிபோதை இன்னொரு பக்கம், உடல் அசதி ஒரு பக்கம். கோழித் தூக்கத்தில் அரசன் ஏதோ முனகினான். அவன் புரளலில், ஊஞ்சல் ஆடி,முனகிற்று.
ஆ! அது என்ன, சங்கிலிமேல்? இத்தனை காவல் தாண்டி எப்படி வந்தது? ஆனால் அதனால்தான் வரமுடியும்.
கரும் பட்டில் தங்க நூலில் கட்டான்கள் நெய்தாற்போல் உடல் பளபளத்தது. கட்டுகள் பளபளத்தன. தங்கச் சிறகு கள் உடலினின்று விசிறித் தகதகத்தன.
பிளந்த நாக்கு அவ்வப்பொழுது எட்டி எட்டிப் பார்த்து அது என்ன ஓயாத தேடலோ? சங்கிலிமேல் ஊர்ந்து வரும் அதன் பாதையை, சாமணையின் நாஸுக்குடன், அவ்வளவு அவகாசமாய்த் தேர்ந்து எடுத்துக்கொண்டு சங்கிலியில் வழிந்து…
அரசனின் கால்மாட்டை அடைந்ததும், தலைதூக்கி ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்த்தது. கொட்டாத விழி களில் முழு நீலம் கொதித்தது. அடிவானத்தில் திடீரென நட்சத்திரச் சிதர்போல், மண்டையிறக்கத்தில் தங்கப் பொட்டுக்கள் பளபளத்தன.
அபயகரம்போல் படம் விரிந்தது.
வாள் வீச்சின் வேகம் காற்றை ‘விர்ர்’ரென வெட்டிற்று பாம்பு சங்கிலியினின்று தரையில் இரண்டு துண்டுகளாக விழுந்தது.
“ஏமாந்து போய்விட்டேனோ?” பதறியபடி அங்கி போர்த்த உருவம் அரசன்மேல் குனிந்தது. அரசன் விழித்துக் கொண்டான். அப்படிச் சொல்வதைக் காட்டிலும், கோழித் துயில் கலைந்த திடுக்கில் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியே தன் தன் செயலின் முழுமையுடன் விழித்துக்கொண்டது என்பதே பொருந்தும். இந்த விழிப்பு சுய விழிப்பல்ல. ஏற் கெனவே எச்சரிக்கையில் கூர்கண்ட உணர்வுகளின் ஒரு பங்கைப் பல பங்கு மிகைப்படுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி விழிப்பு. தலையணை அடியிலிருந்து ஒரே குத்து.
பிடிவரை புதைந்த கத்தியைத் தன் மார்பிலிருந்து பிடுங்க. பிடியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே பின்னடைந்துபோய்த் தரையில் தடாலென்று விழுந்ததும், முட்டாக்குக் கலைந்து முகம் வெளிப்பட்டது.
“அம்மா!” மகன் அலறினான். அப்பவே ஊஞ்சலின் கால்மாடில், தரையில், தன் தந்தை இரு துண்டங்களாகக் கிடப்பதையும் கண்டான்.
ஊஹும். கத்தியைப் பிடுங்கமுடியவில்லை. விழிகள் அவைகள் கண்ட கடைசிப் பிம்பத்தில் செருக ஆரம்பித்து விட்டன. கண்ணாடி கண்டுவிட்டது.
கடைசி மூச்சின் வார்த்தைகள் அரசன் குனிந்த செவிக்கு எட்டின.
“கணவனுக்கு மனைவி எமன்.
தாய்க்கு மகன் எமன்.”
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.