ராங் நம்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2025
பார்வையிட்டோர்: 320 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

”இதுவரை பல முறை தவறு செய்து விட்டாய். நீ திருந்துவதாக இல்லை. என்னால் இனி பொறுக்க முடியாது. கிளம்பு, உன் அம்மா வீட்டிக்கு.நானே உன்னை விட்டு விட்டு வருகிறேன்” என்றான் ரகு.

”வேண்டாங்க. இனிமேல் தப்பு செய்ய மாட்டேன். இந்தத் தடவை என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்கள்.” கண்களில் கண்ணீர் மல்கக் கதறினாள் தீபிகா.

”அதெல்லாம் முடியாது . கிளம்பு. வருண், வா போகலாம்.” அவன் இளம் மனைவியின் கையை ஒரு கையில் பிடித்துத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே கார் அருகில் வந்தான் ரகு.

விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயசு குழந்தை வருண், அப்பா டாடா என்று கையில் வைத்திருந்த இரண்டு பொம்மைகளுடன் ஓடி வந்தான்.

காரின் பின் சீட்டில் தீபிகாவையும் வருணையும் ஏற்றி விட்டு முன் சீட்டில் அமர்ந்து காரைக் ஸ்டார்ட் செய்தான் ரகு. அவன் மனத்தில் நினைவலைகள் ஓடின.

அம்மா மட்டும்தான் தீபிகாவிற்கு. அப்பாவோ, சகோதரனோ, சகோதரியோ யாருமில்லை. சிறிய வயதிலேயே தந்தையை இழந்து விட்டாள். அம்மா லலிதா ஆசிரியர் பணி செய்துகொண்டே அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். அவளும் கல்லுரியில் படித்து பட்டதாரி ஆகி விட்டாள்.. தீபிகா ரொம்பவும் வெகுளி.

கருப்பு நிறமாக இருந்தாலும் கேட்போரைக் கவரும் கவர்ச்சிக் குரல் அவளுக்கு. ஆண்களிடம் ஜோவியலாக பேசுவாள். எப்போதும் சிரித்த முகம்

லலிதா தீபிகாவிற்கு பத்து பவுன் நகையைப் போட்டு கல்யாணம் செய்து கொடுத்தாள்.

ரகு மாம்பலத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தத் தொடங்கினான். அடுக்கு குடியிருப்பில் இருக்கும் ஒரு சின்ன வீடுதான் என்றாலும் எல்லா வசதிகளும் உள்ள வீடு.

அவன் காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவான். சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும்.

தீபிகா எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் குணம் உடையவள் என்றால் ரகு அவளுக்கு நேர் எதிர் குணம் உடையவன். குறைவாகப் பேசுவான். அமைதியாக இருப்பான்.

வாழ்க்கை என்ற நதி ஒட்டத்தில் அவர்களுடைய சம்சார படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

அவன் அவளிடம் மிகவும் பாசமாக இருப்பான். தீபு, தீபு என்று மனைவியைக் கொஞ்சுவான்.

கல்யாணம் ஆகி இரண்டாவது மாதமே தீபிகா உண்டாகி விட்டாள்.ரகு அவளிடம் ரொம்ப ஆசையுடன் நடந்து கொண்டான். அவளுக்கு ஆசையுடன் விலையுயர்ந்த கைபேசியை வாங்கிக் கொடுத்தான்.

தீபிகா மகிழ்ச்சியால் துள்ளினாள். நாய்க்குட்டியை நாய்க்குட்டியை அன்போடு எடுப்பதுபோல் கைபேசியை எடுப்பாள். எப்போதும் கைபேசியும் கையுமாக இருப்பாள். இரவில் தூங்கும் போது கூட கைபேசியைத் தலயனணக்குப் பக்கத்திலேயே வைத்திருப்பாள்.

மாதங்கள் ஓடின. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டது. அழகான ஆண் குழந்தை. வருண் என்று பெயர் வைத்தார்கள்.

ரகுவிற்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது. நேரமே கொஞ்சம் கூட இல்லை. அவன் பிராஜக்ட் டீம் லீடராக இருப்பதால் அவனுக்குப் பொறுப்புகள் அதிகம். காலையில் அலுவலகம் கிளம்பிப் போனால் திரும்பி வருவதற்கு நேரம் ஆகும்.

வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ஒரு பிரச்சனை. தீபிகாவிற்கு இருக்கும் பிரச்சனை. நேரத்தை எப்படி போக்குவது என்பதுதான். அவளுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசை. ரகு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. “வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்துக் கொள். எனக்கு வருகிற சம்பளமே போதும். நீ ஒன்றும் சம்பாதிக்க வேண்டாம் “ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

ஒரு நாள் அவளுக்குச் கைப்பேசியில் ஒரு ராங் நம்பரிடமிருந்து கால் வந்தது. அப்படி ஆரம்பித்தது தான் அந்தப் பழக்கம். அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் பேச ஆரம்பித்து, வளர்ந்து நெருங்கிய நட்பாகியது. ராங் நம்பர் என்று ஆரம்பத்திலேயே போனைத் துண்டிக்காதது அவள் செய்த தவறு.

தீபிகாவுக்கு அவன் பேச்சு மிகவும் பிடித்துப் போயிற்று தினந்தோறும் காலை நேரம் பத்து மணிக்குப் பிறகு அந்த ஆண் நண்பரிடமிருந்து அழைப்பு வரும்.. கொஞ்ச நாள் ஆனதும் விரசமாகப் பேச ஆரம்பித்தார். தீபிகா மறுக்கவோ தடை செய்யவோ இல்ல. அதனால் வரம்பு மீறி கிளர்ச்சி ஊட்டும் விதத்தில் பேசத்தொடங்கினார்.

கைபேசியில் ஆபாசமாகப் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு வித போதைதான். அந்தப் போதைப் பழக்கத்தில் தீபிகா சிக்கிக் கொண்டாள்.

கெட்ட பழக்கத்தை தொட்டுவிட்டால் போதும் . நாம் நினைத்தாலும் அதை விட முடியாது.

ரகு காலை அலுவலகம் போனதும் சரியாக பத்து மணிக்குப் போன் வரும். ஆண் நண்பர் கதைக்க ஆரம்பித்து விடுவார்.

ஒரு நாள் ரகு அலுவலகம் போக முடியவில்லை. உடம்பு சரியில்லை என்பதால் வீட்டில் இருந்தான். எப்போதும் போல் தீபிகாவிற்கு கைப்பேசி வந்தது. கணவன் அருகில் இருக்கும் போது மாற்றானிடம் பேச முடியுமா? அவளுக்குச் சங்கடமாக இருந்தது.”அப்புறம் பேசறேண்டி” போனை வைத்து விட்டாள்.

தீபிகா உடனே குளிக்க போய் விட்டாள். அவள் குளித்துக் கொண்டிருக்கும் போது மறும்படியும் அதே நெம்பரிலிருந்து போன் வந்தது.

ரகு போனை எடுத்தான். ஆண் குரலை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. “யார் நீங்க?” என்றான். போன் பேசியவன், ராங் நெம்பர் என்று போனை கட் செய்துவிட்டான்.

ரகு செல் போனை யார் யார் போனில் பேசியது என்று பார்த்தான். அப்போது பேசிய அதே செல் நெம்பர் பல தடவை வந்திருந்தது. இதில் எதோ வில்லங்கம் இருக்கிறது என்று தோன்றியது தினந்தோறும் அவன் தீபிகாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்றும் புரிந்தது.

தீபிகாவும் குளித்துவிட்டு மிகவும் புத்துணர்ச்சியுடன் வந்தாள்.

“தீபு, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உண்மையான பதிலை உன்னிடம் எதிர் பார்க்கிறேன்.நீ குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆம்பளை பேசினான். தினந்தோறும் அவன் போன் செய்கிறான். யார் அவன்?”

தீபிகாவால் உடனே பதில் கூற முடியவில்லை. கையும் களவுமாக பிடிபட்ட திருடி போல் முழித்தாள். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு சுதாரித்துக் கொண்டு ”எனக்கு அவர் ஒரு நாள் ராங் நம்பர் போன் செய்தார். அதிலிருந்து நண்பர். நான் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை“ என்றாள்.

ரகு தன் மாமியாரிடமும் இந்தச் சம்பவத்தை சொல்லி வருத்தப்பட்டான். லலிதா போன் செய்து தீபிகாவை திட்டினாள்; அறிவுரை கூறினாள்.

தீபிகா சரி என்று சொன்னாலும் அவளால் அந்தக் கெட்ட பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. போன் வரும்போது அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. மறுப்பு சொல்ல முடியவில்லை. முடியவில்லை. குடிகாரன் குடிகாரன் குடியை நிறுத்த முடியாததுபோல் அவள் தத்தளித்தாள்.

ஒரு தடவை ரகு ராங் நம்பர் நண்பன் பேசுவதை ரிகார்ட் பண்ணிக் கேட்டான் . பச்சை பச்சையாக பேசுவதைக் கேட்டு மனம் நொந்தான்.

அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்தான். அவன் வரும்போது தீபு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததால் மாட்டிக்கொண்டாள்.

ஒருவனால் எவ்வளவு நாள் தான் பொறுக்க முடியும்? ரகு ஒரு முடிவுக்கு வந்தான்.

கார் மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. வருண் மேலே பறந்து கொண்டிருந்த விமானத்தைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கை ஆட்டினான்.

கொஞ்ச நேரத்தில் கார் தாம்பரத்தை அடைந்தது. லலிதாவின் வீட்டு முன் நின்றது. தீபிகா காரிலிருந்து இறங்கினாள். லலிதா “வாங்க, வாங்க “என்று வரவேற்றாள்.

ரகு சோபாவில் உட்கார்ந்தான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது. லலிதாவைப் கோபத்துடன் பார்த்தான்.

“என்ன விஷயம் சொல்லுங்க ரகு”.

“தீபுவிற்கு எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அவள் கேட்க மாட்டேன் என்கிறாள். யாரோ ஒருவனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறாள்.. இதைப் பற்றி முன்பே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். சே,சே… நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. ஒழுக்கம் கெட்டவள். அவளுடன் எப்படிச் சேர்ந்து வாழ்வது.. அவளை இங்கு விட்டு விட்டுப் போகலாம் என்று வந்தேன். உங்கள் பெண்ணை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அவள் இங்கேயே இருக்கட்டும். அதுதான் சரி என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர முயற்சித்தான்.

தீபிகா கற்சிலை போல் அமர்ந்திருந்தாள். கண்களில் சஞ்சலம் படர்ந்திருந்தது. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவள் வெகுளி. அவள் தெரியாமல் தவறு செய்து விட்டாள். கழுதைக்குச் சொன்னாலும் தெரியாது. நான் புத்திமதி சொல்கிறேன் நீங்கள் அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.” என்றாள் லலிதா.

பிறகு தீபிகாவை பார்த்து “அடி கூறு கெட்டவளே!. கண்டவன் கிட்டே எல்லாம் ஏண்டி பேசுகிறாய். எத்தனை தடவைச் சொல்வது ?உனக்கு வெட்கமே இல்லையா?. ஒரு ஆண் அத்துமீறிப் பேசும்போது போனைத் துண்டிப்பதை விட்டு விட்டு அவனுடன் பேசிக் கொண்டிருப்பது தவறு இல்லையா? பெண்ணுக்கு மன ஒழுக்கம் வேண்டும்.” கோபத்துடன் கத்தினாள்.

“நான் நட்புடன்தான் பேசினேன். போன் நட்பில் என்ன தவறு இருக்கிறது?”.

“ச்சீ, நாயே, மனசால் கெட்டாலும் தவறுதான்….. நான் ரொம்பச் செல்லம் கொடுத்து உன்னை வளர்த்து விட்டேன்.. எவனோ வக்ரபுத்திகாரன் வசீகரமாய் பேசியதற்கு மயங்கி விட்டாயே. வெளுத்ததெல்லாம் பால் என்று நினனத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும். பெண்களாகிய நாம்தான் ஜாக்கிதையாக இருக்க வேண்டும்.“ என்று கடிந்து கொண்டாள்.

“அவனுடன் ஃபிரண்டிலியாத்தான் பேசினேன்..”

“நாசமாப் போச்சு. நீ பேசியது போதும். நாம் செய்யும் சிறுசிறு செயல்களின் தொகுப்புதான் வாழ்க்கை. நல்லதே செய்தால், பேசினால், கேட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். உன்னிடம் பக்தியை வளர்க்கத் தவறிவிட்டேன். பக்திதான் ஒரு குடும்பத்தின் அமைதிக்கு ஆணி வேர் தினமும் இறைவனை வழிபடு. உள்ளத்தூய்மை அவசியம். இனிமேல் ஒழுங்காய் இரு.”

ரகுவின் பக்கம் திரும்பிய லலிதா, “மாப்ளே, தீபு எவ்வளவு வெகுளியாக இருக்கிறாள் பாருங்கள். அவள் செய்தது தவறுதான். அவள் நல்லவள் : இனிமேல் தப்பு செய்ய : மாட்டாள். இனிமேல் ஒழுங்காய் இருப்பாள். அவளை உங்களுடன் கூப்பிட்டுப் போங்கள்.”

அங்கு விளையாடிக் கொண்டிருந்த வருண், ஒரு பொம்மையை தள்ளி வைத்து “நீ தப்பு செய்து விட்டாய். “ என்றது.

“பார்த்தீங்களா மாப்ளே. பெரியவங்க செய்றது குழந்தை மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. குழந்தையின் முகத்தைப் பாருங்கள். குழந்தைக்காவது நீங்கள் அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.” லலிதா அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

ரகு சிறிது நேரம் யோசித்தான். வருண் அவனைப் பார்த்துச் சிரித்தான். குழந்தையின் சிரிப்பு அவன் மனசை என்னமோ செய்தது.

“அவளுடன் எப்படி நான் இனி குடும்பம் நடத்துவது. வார்த்தைகளால் எழுத முடியாத அளவுக்கு ஒரு கயவன் ஆபாசமாகப் பேசியிருக்கிறான். அதை அவள் ரசிக்கிறாள். அவளுடன் படுக்கையில் படுப்பதை நினைத்தாலே கசப்பாக இருக்கிறது நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லுவதாலும் குழந்தைக்காகவும் நான் சம்மதிக்கிறேன். அவள் என் கூட வாழலாம். ஆனால் குழந்தைக்குக் தாயாக, அம்மாவாக மட்டும்தான். இந்த நிபந்தனைக்குச் சம்மதமானால் என்னுடன் வரட்டும்.” என்றான் நெஞ்சில் ஈரமில்லாமல்.

வலக்கையால் தன் காது தோடுகளை தடவிக்கொண்டிருந்த தீபிகா, தேள் கொட்டியதுபோல் துடித்தாள். “நான் அம்மா மட்டுமாய் இருக்க சம்மதிக்க மாட்டேன். மனைவியாய் வாழ்வேன். எல்லாப் பெண்களும் அதைத்தானே விரும்புவார்கள். அம்மா நீதான் அவரிடம் சொல்லவேண்டும்.” என்றாள்.

அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற லலிதா, “அடி அசடே! அவர் இறங்கி வரும் போது பேசாமல் ஒப்புக்கொள். முரண்டு பிடிக்காதே. போகப்போக எல்லாம் சரியாகிவிடும்.” என்று தழுதழுத்த குரலில் லலிதா சொன்னாள்.

தீபிகாவிற்கு அம்மா சொல்வது சரி என்று பட்டது. தலையை ஆட்டினாள்.

“எல்லாமே உன் கையில்தான் இருக்கிறது” என்று லலிதா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

தீபிகா, ரகுவின் கரத்தைப் பிடித்து கம்மிய குரலில் கண்களில் நீர் மல்க “என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். செல்போனால்தான் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

“இனி மேல் அவனிடம் பேச மாட்டேன்” என்றாள்.

அப்போது அலைபேசி ஒலித்தது . அவள் அதை எடுத்தாள்.

ராங் நம்பரிடமிருந்துதான் போன்..

“அடப்பாவி, குடும்பத்திலே குழப்பம் உண்டாவதற்கு இப்ப போய் போன் வருதே. தீபு ஏதாவது பேசி சொதப்பிடப் போறா” பயத்துடன் அவளைப் பார்த்தாள் லலிதா.

”இந்தக் கைபேசியால்தான் எல்லாத் தொல்லையும் குழப்பமும். இந்த கைபேசி எனக்கு வேண்டாம்” என்று கோபத்துடன் தீபிகா வீசிய செல்போன் பறந்து சென்று வீதியிலே விழுந்து சிதறியது.

அழகான அந்தக் கைபேசி உடைந்ததிற்காக ரகு வருந்தவில்லை. மாறாக மிகவும் குதூகலத்துடன் தீபிகாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

வறண்டு கிடந்த அவன் உறவுப்பூவில் ஈரம் படர்ந்து விட்டதை லலிதா கவனித்து மனசுக்குள் மகிழ்ந்தாள்.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *