ரத்தம் வழியும் ரொட்டி





குருநானக் ஒரு முறை சைத்பூர் என்னும் நகரத்திற்கு விஜயம் செய்ய இருந்தார். அதை அறிந்த அந் நகரத்தின் தலைவரான மாலிக் பாகோ, குருநானக் தனது வீட்டில் தங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.
அவர் ஓர் ஊழல்வாதி. மக்களிடம் அதிக வரி வசூல் செய்ததோடு, ஏழைகளிடமிருந்து அவர்களின் விளைச்சலையும் பறித்துக்கொள்வார். அதனால் ஏழை மக்கள் மிகுந்த துன்பத்திற்கும் பட்டினிக்கும் ஆளாயினர்.
சைத்பூர் நகரத்திற்கு விஜயம் செய்த குருநானக், லாலு என்னும் ஏழைத் தச்சரின் வீட்டில் தங்கினார். லாலுவால் குருநானக்கிற்கு வகை வகையான சிறந்த உணவுகள் எதையும் வழங்க இயலவில்லை. அவர் ஏழையானதால் மிக எளிய உணவை மட்டுமே வழங்க முடிந்தது. எனினும் குருநானக் அதை மகிழ்ச்சியோடு உண்டு, அவரது வீட்டிலேயே தொடர்ந்து தங்கிக்கொண்டிருந்தார்.
மாலிக் அதைக் கேள்விப்பட்டு லாலுவின் வீட்டிற்குச் சென்று, குருநானக்கைத் தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார். குருநானக் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமுற்ற மாலிக், தனது காவலர்களை அனுப்பி, குருநானக்கை வலுக்கட்டாயமாகக் கொண்டு வரும்படி செய்தார்.
“குருஜி,… என் வீட்டில் நீங்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளையும் செய்து, உங்களுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ, அந்த ஏழைத் தச்சன் வீட்டில் தங்கி சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே…?” என்று கேட்டார்.
“நீ சம்பாதித்த பணம் ஏழை மக்களை சுரண்டிச் சேர்த்தது. ஆனால் லாலுவின் பணமோ அவனது உழைப்பினால் வந்தது” என்றார் குருநானக்.
மாலிக் அதை ஏற்றுக்கொள்ளாமல், “உங்களால் அதை நிரூபிக்க இயலுமா?” என்று கேட்டார்.
“நிரூபிக்கிறேன். லாலு வீட்டிலிருந்து ஒரு ரொட்டியை வாங்கி வரச் சொல்!”
ஆளனுப்பி, லாலுவின் வீட்டிலிருந்து ஒரு ரொட்டி கொண்டுவரப்பட்டது. அது மலிவான, காய்ந்துபோன ரொட்டி.
“இனி உன் வீட்டில் இருக்கிற ஒரு ரொட்டியையும் கொடு!”
மாலிக் தனது வீட்டில் இருந்த சிறந்த ரொட்டியைக் கொண்டு வந்து கொடுத்தார்.
குருநானக் அந்த இரு ரொட்டிகளையும் ஒவ்வொரு கைகளில் பிடித்துக் கொண்டு, அவற்றைப் பிழிந்தார். லாலு வீட்டு காய்ந்த ரொட்டியிலிருந்து பால் வழிந்தது. மாலிக்கின் வீட்டு ரொட்டியில் இருந்து ரத்தம் வழிந்தது.
அதைக் கண்டு திகைத்துப் போன மாலிக், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
“ஏழை மக்களை மிரட்டியும், அவர்கள் மீது கடுமையான வரி விதித்தும், தகாத வழியில் நீ சேர்த்த சொத்துக்கள் யாவற்றையும் அந்த ஏழை மக்களுக்கே திருப்பிக் கொடுத்துவிடு! இனிமேல் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல், கண்ணியமாகவும் நேர்மையாகவும் வாழ்!” என குருநானக் உபதேசித்தார்.
மாலிக்கும் அவ்வாறே செய்து அதன் பிறகு நேர்மையாக வாழ்ந்தார்.
இது ஓர் ஆன்மிகப் புனைவுதான். இத்தகைய புனைவுகளின் குறியீட்டுப் பொருளே முக்கியம். ரத்தம் வழியும் ரொட்டி என்னும் படிமத்தை ஒரு முறை கேட்டவர், வாழ்நாள் முழுக்க அதையும், அதன் பொருளையும் மறக்க மாட்டார் என்பது நிச்சயம்.