கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 96 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது நடந்த மூன்று நாட்களாகிவிட்டன. முதலியாருக்கு அன்றிருந்த கோபம் இன்றில்லைதான். கோபம் அவிந்திருந்தது. ஆனால் தீ அவியாமல், அன்றை விட இன்று தீச் சுள்ளி பறக்க, உள்ளச் சொக்கப்பனையில் தழல் கொழுந்துகளைச் சுழற்றிச் சுழற்றி வீசியது. 

“அப்படி அக்கிரமமாக வந்து தொட்ட கையை ஒடித்து நாய்க்குப் போட்டிருக்க வேண்டாம்? படவாப் பயல்!” என்று அன்று குமுறிய மைத்துனர் பாபநாச முதலியாரின் சொற்களும் சங்கரலிங்க முதலியாரின் ஞாபகத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தன. 

‘பயலைக் கண்டிச்சுத்தான் இருக்கணும். இப்படி விட்டது தப்பு. இனியும் அவன் மனசு திருந்திச் சும்மா இருப்பானா? போன இடத்திலேயும் நாலு பெரிய மனுஷாள் வீட்டில் நிறை பொலியிலே இந்தக் கழுதை வாய் வைக்காமல் இருக்கப்போகுதா? சும்மா விட்டது தப்புத்தான். 

இந்த முறையிலும் சங்கரலிங்க முதலியார் தம்மைத் தாமே தாக்குப் பிடித்து, ‘மன உளைச்சலை எட்டி மிதிக்கப் பார்த்தார். ஆண்மை செயலிழக்கவில்லை. தப்புப் பண்ணிவிட்டோம்’ என்ற நினைப்பே அவருக்கு ஆதரவு. ஆனால், அந்த நெஞ்சுத்தீமடியில் கட்டிய நெருப்பைப்போல நெஞ்சைச் சுட்டு அரித்தது, அதைச் சகிப்பதற்கு, தாம் செய்யத் தவறிய முட்டாள்தனம், அந்த ‘முட்டாள்தன’த்துக்கு மைத்துனர் பாபநாச முதலியாருக்கு முன் பெருந்தன்மை யென்று வியாக்கியானம்- அதாவது ‘அதிகப்பிரசங்கித்தனம்’ செய்து கொண்ட தப்பிதம்-எல்லாவிதத் தவறு தப்பிதங்களும் அவருக்கு இருப்புக் கவசங்களாக, வஜ்ராங்கிகளாக வந்து உதவின. என்ன இருந்தாலும்… ‘எதுக்கு நம்ம புத்தி அப்படிப் போச்சு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கொலை செய்யக் கூடத் தயாரா இருந்தோம் அப்புறம் அந்தப் பயலையும், அந்தச் சிறுக்கியையும் (‘உம். ஜாக்கிரதையாப் பேசுடா சங்கரலிங்க முதலி! என்ன இருந்தாலும் அவள் பெத்த மகள்; சிறுக்கின்னு சொல்லுதையா நீ?” – இப்படியும் தம்மைத் தாம் அதட்டிக் கொண்டு சிந்தனையைத் ? தொடர்ந்தார்) அந்தக் கழுதையையும் பார்த்த பிறகு அப்படி என்ன எழவுக்குச் சாந்தம் பிறந்தது? பயல், வசிய மை வைத்திருந்து, நம்மைப் பணிய வச்சுட்டானா? 


அன்றிருந்த கோபம் இன்றில்லை. ஆனால் கோபம் குறையக் குறையத் தீ வளர்ந்தது; நினைத்துப் பார்க்கப் பார்க்கத் தீ வளர்ந்துகொண்டே வந்தது.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு என்றோ ஒரு நாள் அம்பா சமுத்திரத்தில் ஒரு கல்யாண வீட்டில் வைத்து முதலியார் தியாகராஜனைப் பார்த்தார். கல்யாணத்துக்குப் போய் முகூர்த்தம் முடித்து எழுந்திருப்பதற்கு முன்னமேயே அந்தச் சொற்ப காலத்தில் ஸ்ரீ வைகுண்டம் பக்கத்தில் நாலைந்து ஊர்களிலிருந்து வந்தவர்களின் வாய்மொழியில் தியாகராஜனைப்பற்றிய பாராட்டுகளுக்கும் அவன் சாமாத்தியத்தையும் குணபாவத்தையும் பற்றிய புகழ்ச்சியுரைகளுக்கும் கணக்குக் கிடையாது. முதலியாரே இதைக் கேட்டுக் கேட்டு அசந்து போய்விட்டார். ஒவ்வொருவரும் வந்து, தியாகராஜனைப் பற்றிச் சொல்லும்போது, அவன் முகத்தைச் சற்று ஏறிட்டுப்பார்ப்பார். அப்போது அந்தப் பாராட்டுரைக்கும், முதலியாருடைய கற்பனைக்கும் ஏற்றவாறு அவன் முகம் அவருக்குக் காட்சி யளிக்கும். தியாகராஜன் ஊராகிய முரப்ப நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, “தியாகராசன் பி.ஏ. தான் படிக்காமல் வந்துட்டான். அதுகூட எம்.ஏ. படிக்கும் போது உடம்புக்குச் சொகமில்லாமே போகப் போய்த்தான். இந்தக் காலத்துப் பயல்களைப் போல் ஒரு பீடி சிகரட்டு, பொடிபோயிலை, வெத்தலை பாக்கு-இப்படி ஏதாவது ஒண்ணுண்ணு அவன் தன் சென்மத்திலே தொட்டறிஞ்சிருக்கமாட்டான்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வரும்போது வழக்கம் போல முதலியார் தியாகராஜனைப் பார்த்தார். அப்போதுதான் ஒருவர் தாம்பூலத் தட்டை எடுத்துத் தியாகராஜனுக்கு முன்பாக நீட்ட அவன் பக்கத்திலே இருந்த பெரியவர்களுக்குக் கொடுக்கும் படி மிகவும் பவ்வியமாய் ஆக்ஞாபித்தான். 

(ஆஹா! பெரிய வீட்டுப் பிள்ளைன்னா இதுதான்! – இது முதலியார்) பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தாம்பூல சேவையானபின் பழையபடியும் தியாகராஜன் முன் தட்டேந்திய ஆசாமி வரும்போது, இரண்டு விரல்களால் எண்ணி எடுப்பது போல இரண்டே இரண்டு வெற்றிலை, சின்னப் பாக்குத் துண்டு, இவைகளை எடுத்து, பக்கத்திலே சமுக்காளத்தில் வைத்துவிட்டு வழக்கம் போல் உட்கார்ந்துகொண்டான். 

‘பாத்திகளா? வெத்திலை எடுத்ததைப் பாத்திகளா இன்னேன்…? என்றார் முரப்பநாட்டு முதலியார்’. 

இரண்டு வெத்திலைகளை உபசாரத்துக்கு எடுத்துக்கிட்டது..’ என்று பூரிப்போடு சிரித்தார் முதலியார். 

‘இதில்லையா பிள்ளைக்கு லெச்சணம்?’ 

சங்கரலிங்க முதலியாருக்குத் தியாகராஜனோடு ஒரு நிமிஷமாவது உட்கார்ந்து பேசவேண்டும் என்ற ஆசை. திருநெல்வேலிச் சீமையில் நம்ம முதலிகள் எந்தக் காலத்திலேயும் அடுத்தவனை இறக்கி வச்சுப் பேசற வலிமை யாச்சே. அப்படியிருக்க இந்த முரப்ப நாட்டுப் பிள்ளையாண்டானைப்பத்தி வந்தவனுலே ஒருத்தனாவது ஒரு சொட்டைச் சொல் சொல்லட்டுமே?’ இந்தச் சந்தோஷத்தில் மூழ்கிய முதலியார் கடைசியில் தியாகராஜனோடு கொஞ்சம் உட்கார்ந்து பேசினார். அவனுக்கும் கல்யாணமானதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு, குலம் கோத்திர விசாரணை விளக்கிக் கொண்டிருந்தபோது அவன் தம் மனைவியுடைய பாட்டனார் வகையில் ஒட்டிய, தமக்கு மகன் முறையாக உள்ள உறவினனாகப் போய்விடவே, முதலியார் மனம் மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியை உலகத்துக்குப் புலப்படுத்தும் முறையில், “ஐயா, அந்த ரத்தத்திலே ஒட்டின உறவு எங்கே போகும் பாடடன் பூட்டன் காலத்திலே யிருந்து மனுசத்தரம் சம்பாதிச்ச குடும்பத்திலே பிறந்தவக நாமொ.. தம்பியைப் பத்தி நல்லாக் கேள்விப்பட்டுக்கிட்டேன். தம்பி முரப்ப நாட்டுக்குத் திரும்பறப்போ, நம்ம ஊருக்குக் கொஞ்சம் விலகிட்டுப் போகலாமே!” என்று திருநெல்வேலிப் பேட்டைக்கு வந்து போகச் சொன்னார் முதலியார். 

‘மன்னிக்கணும். இன்னொரு சமயம் வர்ரேனே!” 

‘மன்னிக்கணும்’ சம்பிரதாய பூர்வமாக ஆங்கிலத்தில் பிரயோகிக்கும் பதம் இது வென்று முதலியாருக்குத் தெரியாது. ‘மன்னிக்கணும்’ என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்னவோ அதை அப்படியே வியாக்கியானம் செய்து, தியாகராஜனுடைய பெருந்தன்மையைப் பாராட்டினார் முதலியார். 

பேட்டைக்கு வந்த முதலியாருக்கு, ஒரு யோசனை உதித்தது, ‘பண்ணைக் காரியங்களைக் கவனிப்பதற்கு ஆண் வாரிசு இல்லை. வயசு அறுபதை எட்டிப் பிடிக்க இன்னும் கோடி வருசமா இருக்கு அப்படியிருக்கிறப்போ, தியாகராஜனைக் கொண்டு வந்து பண்ணைக்குக் காரியஸ்தனாக்கி விட்டால் என்ன? 

இந்த யோசனை கோழிக் கர்ப்பம் போல் மாதம் கழியும் முன்பே பூரண உருப்பெற்று விட்டது. முரப்ப நாட்டுக்கே போய்க் காரியத்தை முடித்து முதலியார் வெற்றிகரமாகத் திரும்பிய இரண்டொரு நாட்களுக்குள்ளாகத் தியாகராஜன் பேட்டை வந்து சேர்ந்தான். 

அவன் வருவதற்கு முன்னாலேயே தம் வீட்டுக்கு எதிர் வரிசையில் நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த சௌகரியமான வீட்டில் வேண்டிய தயாரிப்புகளோடு தியாகராஜனைக் கொண்டு போய்க் குடியமர்த்தினார். உடல் அசௌகரியத்தினால் தியாகராஜனுடைய மனைவி அப்போது அவனோடு வரவில்லை யென்ற போதிலும், குடும்பக் காரியங்களுக்கு வேண்டிய பண்ட பாத்திரங்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் வீட்டை அடைத்துக்கொண்டிருந்தன. மனைவி வரும் வரையில் முதலியார் வீட்டிலேயே சாப்பாடு வைத்துக்கொள்வது என்ற ஏற்பாடு. 

தியாகராஜன் வந்து இரண்டு வருஷங்களாகப் போகின்றன. துரதிர்ஷ்டவசமாக அவனுடைய மனைவி இன்னும் க்ஷயரோகம் குணமாகாமல் நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் க்ஷயரோக ஆஸ்பத்திரிலேயே இருந்து வந்தாள். மாதத்துக்கு ஒரு தடவை தியாகராஜனிடமிருந்து ஆஸ்பத்திரியில் அவன் மனைவியோடிருக்கும் தாயாருக்குப் பணம் போகும். மாதத்துக்கு இரண்டு தடவைகள் தியாகராஜன் போவான். 

இந்த இரண்டு வருஷங்களிலும் முதலியாரின் நெல் மகசூலின் வரவு முந்திய வருஷங்களைவிட இரட்டிப்பாக இருந்தது. பண்ணையில் ஏற்படும் செலவுகளும் ஒன்றுக்குப் பாதியாகக் குறைந்தன. முதலியாருக்கு இப்போது நிம்மதியான வாழ்க்கை. தேவார திருவாசக பாராயணங்களும் தற்கால யுகதர்மமாகிய அரசியல் சர்ச்சைகள் கொஞ்சமும் அதை ஒட்டிச் சுற்று வட்டாரத்தில் அதாவது அரசியல் வட்டாரத்தில் கொடையாளிப்பட்டமும் – இப்படியாகத் தாம் வாழ்வதற்கும், வீட்டில் சுபிக்ஷம் பெருகியதற்கும், தியாகராஜன் தம் வீட்டில் காலெடுத்து வைத்த நேர பலன், அவன் கைராசி, அவனுடைய சாமர்த்தியம் – இவைகள் தாம் காரணங்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. 

ஆம்பளைப் பிள்ளையில்லேன்னு குறைப்பட்டத்துக்குப் பகவான் அனுப்பிவைச்ச ஜேஷ்டபுத்திரன் ராசையா (அதாவது தியாகராஜன்) பார்வதிக்கும் அண்ணன் கிடைச்சான். 

இப்படிப்பட்ட மனத்தீர்மானத்தின் அடிப்படையில் உலக வழக்கத்துக்குப் பொருந்த தியாகராஜனைப் பற்றி ஊராரிடம் புகழ்ந்து ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளாக’ முதலியார் காலம் கழிக்கும் சந்தர்ப்பம். 

அன்று இரவு பத்து மணிக்குத்தான் ஒரு ஜோலியாகப் பாளைங்கோட்டைக்குப் போன முதலியார் திரும்பி வந்தார். சமையல்காரன் தன் வீட்டுக்குப்போய்விட்டான். அதனால், முதலியாரின் மகள் பார்வதியே வந்து முதலியார் சாப்பிடுவதற்கு இலை போட்டாள். கூழ்வடகத்தையும், முறுக்கு வற்றலையும் இலையில் வைத்துக்கொண்டே,  ‘இன்னிக்கு அண்ணாச்சியும் சாப்பிட வரக்காணமே? எங்கே போயிருக்காகளோ?’ என்று மனப்பாசம் கட்டிப் பிடித்து ஒலியை நிதானப்படுத்திவிட, மெல்லிய குரலில் சொன்னாள் பார்வதி. 

‘என்ன, இன்னுமா சாப்பிடலே? டவுனுக்குப் போன பிள்ளை இன்னும் திரும்பலியா? யாரையும் அனுப்பிப்பார்த்துட்டு வரச் சொல்லக் கூடாதா? மணி பத்தாகியும் சாப்பிட வரல்லேன்னா, இப்படிக் கவனிக்காமலா இருக்கிறது? வெளியே யாரும் இருந்தாக் கூப்பிட்டு போகச் சொல்லு’ என்று படபடப்பாகச் சொல்லிவிட்டு அரை குறையான மனத்துடன் ஒரு கூழ் வடகத்தை எடுத்துவாயில் போட்டுக்கொண்டார் முதலியார். 

பார்வதி ஆளனுப்பிவிட்டு, உள்ளே வந்து சாதத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது, முதலியார் சிரித்துக்கொண்டே, ‘எனக்கு முறுக்குவத்தல் எதுக்குவச்சே, பார்வதி? பல் பூராவும் தான் காத்தடிச்சாலும் தலை சுத்தியாடுறது உனக்குத் தெரியுமே?” என்று சொல்லிவிட்டுக் குனிந்து சாதத்தை நெய்யில் குழைத்தார். 

உள்ளே போன பார்வதிக்கு சிரிப்பு வந்தது; லஜ்ஜையும் வந்து விட்டது. கீழுதட்டை இறுக, ஆனால் சுகமாகப் பல் பதியக் கடித்துக் கொண்டு, பக்கத்திலிருந்த தூணில் நாலைந்து தடவை காரணமில்லாமல் தொடர்ந்து தட்டினாள். சபையில் சந்தோஷத்தால் கரகோஷம் செய்யும் தாளகதி அவள் தட்டிலே நிதானித்தது. அப்பாவுக்கும் தியாகராஜனுக்கும் வித்தியாயம் தெரியாமல், தன்னை மறந்த தன் அசட்டுத் தனம் என்ற பேரின்பத்தில் ஆழ்ந்து, வற்றல் குழம்போடு பார்வதி வெளியே வந்தபோது, வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. 

– முல்லை – 13, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.

கு. அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர்.[1] தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *