யாரோ அவள்…
கதையாசிரியர்: செல்வகிருத்திகா கௌரிநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 188

அது ஒரு நள்ளிரவு.
ஊரின் சப்தங்கள் அனைத்தும் அடங்கி, உள்ளத்தின் சப்தம் மட்டும் தெளிவாகக் கேட்கும் இரவு.நிலவும் தென்றலும் மட்டுமே துணையாக இருக்க, அவள் விழித்திருந்தாள்.அந்த இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வீட்டின் மொட்டை மாடியில் இருந்த பழைய மர நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தாள். வயது ஐம்பத்தைக் கடந்திருந்தாலும், அவளுடைய கண்களில் மட்டும் அந்த இளமைக்கால இரவுகளின் ஒளி இன்னும் அணையாமல் இருந்தது.
வானத்தைப் பார்த்தாள்.நிலா, மேகங்களுக்கிடையே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
இதே நிலவு தானே அன்றும் ஒளிர்ந்தது..அவளுக்குள் மெலிதாக ஒரு கேவல் எழுந்து அடங்கியது.
பல வருடங்களுக்கு முன்பு, இதே நிலவின் கீழே அவனுடன் நின்றிருந்தாள்.அவனது வார்த்தைகள்…அவனது புன்னகை…அவனது பார்வை…எல்லாமே காலத்தைக் கடந்து, இன்றும் அவளுக்குள் உயிரோடு இருந்தன.
அது ஒரு சந்திர கிரகண நாள்.கிரகணம் முடிந்து, மீண்டும் முழு ஒளியுடன் பிரகாசித்த நிலவை அவனுடன் இணைந்து நின்று பார்த்த அந்த நிமிடம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவளுக்குள் பசுமையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஊழிக்காற்றாய் வாழ்க்கை அவர்களைச் சுழற்றி, இரு வேறு திசைகளில் வீசி எறிந்து, வருடங்கள் பல ஓடிவிட்டன.அவளைச் சுற்றி எல்லாமே மாறிவிட்டிருந்தது.மாறாதது ஒன்று மட்டுமே.அவன் மீதான அவளது உயிர் நேசம்.
சில காதல்கள் வாழ்க்கையில் துணையாக வருவதில்லை. நினைவாக மட்டுமே தொடர்கின்றன.
அவள் மெதுவாகக் கண்களை மூடினாள்.பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனை மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே அவளுக்குள் சொல்ல முடியாத ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்தாலும், அந்த நொடியில் அவளுக்குள் ஒளிந்திருந்த சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்தாள்.
ஒரு விபத்துக்குப் பிறகு அவள் செய்துகொண்ட முகமாற்று அறுவை சிகிச்சையால், அவளுடைய முகம் பழைய முகத்திலிருந்து கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் மாறியிருந்தது.ஒருகாலத்தில் அவளை நன்கு அறிந்தவருக்குக்கூட, முதல் பார்வையில் அவளை அடையாளம் காண்பது கடினமாக இருந்திருக்கும்.அதுவே இப்போது அவளுக்கு ஒரு வரமாகத் தோன்றியது.
கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தைப் பார்த்தாள்.காலம் அவளது முகத்தில் தன் ரேகைகளை ஆழமாகப் பதித்திருந்தது.அத்தனைக்கும் நடுவில் மாறாமல் இருந்தது ஒன்று மட்டும்தான்..அவளது கண்கள்…அவனைக் கண்டதும் ஒளிரும் கண்கள்…அவனைத் தனக்குள் முழுவதுமாக ஒளித்து வைத்துக்கொள்ள முயலும் கண்கள்…அவனது பார்வையில் நாணி நிலம் நோக்கும் கண்கள்.
அவன் பார்த்து ரசித்த…அவனைப் பார்த்து ரசித்த…அந்தக் கண்கள் இன்னும் அவனுக்காகவே காத்திருந்தன.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சி, அவளது ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருந்தது. அந்த மகிழ்ச்சியில் வெறும் காதல் மட்டும் இல்லை. அவனோடான நினைவுகள் இருந்தன.அவனைத் தேடித் தவித்த ஏக்கம் இருந்தது.அவள் தொலைத்த காலத்தின் வலி இருந்தது. அவனிடம் ஒருபோதும் கேட்க முடியாமல் போன கேள்விகள் இருந்தன.சொல்ல மறந்த பதில்கள் இருந்தன.
பல வருடங்களுக்குப் பிறகு, முதன்முறையாக, அடுத்த நாளைப் பற்றிய எதிர்பார்ப்பு அவளை மீண்டும் உயிரோட்டமாக உணரச் செய்தது. அவனும் அவளும் சிரித்துக்கொண்டிருந்த பழைய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.நடுங்கும் விரல்களால் அந்தப் புகைப்படத்தை மெதுவாக வருடினாள்.
“இத்தனை வருடங்களாக என்னை மறந்திருந்தாயா, என்னவனே? ஒரு கணமும்… ஒரு நொடியும்… உன் நினைவுகளின்றி நான் கடந்ததில்லை. இதை நீ அறிவாயா? எனக்குள் சுவாசமாய் நிறைந்திருப்பவன் நீ தானே…”
அவளது விரல்கள் புகைப்படத்தில் உறைந்திருந்த அவனது முகத்தை வருடிக்கொண்டிருந்தன. அவள் அவனுடைய வீட்டிற்குச் செல்லப் போகிறாள்.காதலியாக அல்ல.சமைத்து, வீட்டைப் பராமரித்து, அவனுடைய தேவைகளை முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் பணியாளராக… அவனுக்கே தெரியாமல், அவனுடைய வாழ்வின் ஓரத்தில் மீண்டும் நிற்கப் போகிறாள்.
விதியின் விசித்திரம்!
யாருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ, அவனுடைய நிழலில் தன் இறுதி நாட்களைக் கழிக்கப் போகிறாள்.
மறுநாள் அணிய வேண்டிய பழைய சேலையை எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்தாள். அருகில் ஒரு சிறிய பை. அதில் அவளுக்குத் தேவையான சில பொருட்கள்.அந்தப் பையை மூடியபோது, அவளுடைய கைகள் சற்றே நடுங்கின.நிச்சயமாய் அது வயதினால் அல்ல…
பல வருடங்களாக மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு அத்தியாயம்…நாளை மீண்டும் திறக்கப் போகிறது.
ஒரே வீட்டில்.ஒரே கூரையின் கீழ்.அவனோடு…
அவளது உதடுகளில் மீண்டும் ஒரு புன்னகை மலர்ந்தது.வெட்கமும் குழந்தைத்தனமான மகிழ்ச்சியும் கலந்த புன்னகை.பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஏக்கத்தின் நடுக்கம் உறைந்த புன்னகை.
“அவன் என்னை யாரென்று அறிந்துகொள்வானா?” இதயத்தின் கேள்வியில் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“வேண்டாம்… வேண்டாம்…” மனம் பதறியது.
அவன் என்னை அறிந்துகொண்டால் மீண்டும் அவனைப் பிரிய வேண்டியிருக்கும். வேண்டவே வேண்டாம்.
அவன் முகம் பார்த்து கண் விழித்து ,சுவையறிந்து பரிமாறி , அருகமர்ந்து பசியாறி, சொற்களன்றி மனமறிந்து , சப்தங்களின்றியே அவன் வரவுணர்ந்து , களைப்பறிந்து உணவளித்து , அவன் சுவாசம் தொடும் தூரத்தில் நடமாடி உயிர்த்து வாழப் போகிறாள். எந்த காரணம் கொண்டும் இதை இழக்க அவள் தயாரில்லை.
அவள் விளக்கை அணைத்தாள்.படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவன் அவளை ஒரு அந்நியப் பெண்ணாக மட்டுமே உணர்வானா?
அல்லது…
பல வருடங்களாகத் தொலைந்துபோன, அவனை மட்டுமே நேசித்து வாழ்ந்த அந்த இதயத்தை அவன் உணர்வானா?
அவளுக்குத் தெரியவில்லை.வெளியே நிலா இன்னும் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
சில காதல்கள் என்றும் முடிவதில்லை. அவை காலத்தின் ஆழத்தில் அமைதியாகக் காத்திருக்கின்றன..
அவற்றுக்கான ஒரு கதவு மீண்டும் திறக்கும் நாளுக்காக.அந்தக் கதவு…நாளை திறக்கப் போகிறது.
காலை பொழுது..பல பல வருடங்களுக்குப் பிறகு ,இத்தனை வருடங்கள் அவள் வாழ்ந்த தவ வாழ்வுக்கு அர்த்தம் தந்த காலை பொழுது.. பல ஆண்டுகளாக வறண்டிருந்த உள்ளத்தில், மீண்டும் உயிர் துளிர்க்க வைத்த காலை பொழுது..குளித்துவிட்டு, நேற்று இரவே மடித்து வைத்திருந்த சேலையை அணிந்தாள்…எளிமையான சேலை. ஆனால் அதில் ஒரு சொல்லமுடியாத கம்பீரம் இருந்தது.
கண்ணாடி முன் நின்று ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவள், சிறிய குங்குமச் சிமிழை எடுத்தாள்.உச்சி வகிட்டில் மெதுவாகக் குங்குமம் இட்டாள். பல வருடங்களாக விரல் தொடாத குங்குமம் .. அவனைப் பிரிந்த நாளோடு சேர்ந்து, அந்த மங்கலத்தையும் தன் வாழ்விலிருந்து விலக்கி வைத்திருந்தாள்.குங்குமத்தை இட்டவுடன் கண்களை மூடியவள்,
‘முருகா…இது என்றும் என்னோடு நிலைத்திருக்க அருள் செய்.இந்த உயிர் இருக்கும் வரை, இனியொரு பிரிவைத் தந்து விடாதே.. ‘ சண்முகனின் சரணங்களை மானசீகமாக பற்றிக் கொண்டு வணங்கினாள்… மனதெங்கும் அவனோடான கடந்த காலங்களின் சுவடுகள் நிறைந்திருக்க, தற்காலிகமாக தங்கி இருந்த அறையில் கதவுகளை பூட்டினாள்…
இன்னும் சில நிமிடங்கள் தான்..பயணம் முழுவதும் அவளது விழிகள் சாலையைப் பார்த்தன. ஆனால் மனம்.. இதென்ன உணர்வு?..பயம்? பரவசம்? ஏக்கம்?..அவள் இதயம் கேள்விகளுடன் துடித்தது ..வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருளும் உருவமில்லா உருண்டையை வைரமுத்துவின் வரிகளில் மட்டுமே கண்டிருந்தவள், இன்று அனுபவத்தில் அறிந்தாள்.. என்னவனே..உன் நிழல் தேடி வருகிறேன்..ஏற்றுக் கொள்வாயா..கால ஓட்டத்தில் சருகாய்ப்போனவள் உன் அருகில் உயித்தெழுவேனா.. என் மரணம் மட்டுமே இனி நம்மைப் பிரிக்கும்…தனக்குள் சொல்லி கொண்டாள்..
இறுதியாக அந்த வீடு அவள் முன் நின்றது.அவள் ஒரு கணம் அசையாமல் நின்றாள்.இத்தனை காலமாய் கற்பனையில் மட்டுமே கண்டிருந்த வீடு..அவனது காலடித் தடங்களை தனக்குள்ளே கர்ப்பம் தாங்கியிருக்கும் வீடு..அவனது சுவாசம் நிறைந்த வீடு..ஆழமாக மூச்சை இழுத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள், நடுங்கிய விரல்களால் அழைப்புமணியை அழுத்தினாள்.
சில வினாடிகளில் கதவை திறந்தவனைப் பார்த்தவளுக்குள், காலடியில் பூமி நழுவியது..இது அவன் தானா..அவனாய் இருக்க முடியாது..அவனன்றி வேறு யாராகவும் இருக்க இயலாதே.. அதே உயரம்..அதே நிறம்..அதே கம்பீரம்..அதே புன்னகை..எல்லாவற்றையும் விட, அதே தீர்க்கமான கண்கள்…
இந்த இளைஞன் அவனது மகன்..தந்தையின் வார்ப்பாக நின்றவன், “வாங்கம்மா…” என்று இயல்பாகப் புன்னகைத்தான்.அந்தப் புன்னகையில் கூட அவனது தந்தையின் சாயல் தெரிந்தது. ‘அம்மா’ என்ற அழைப்பில் விதிர்த்து நிமிர்ந்தவளின் கண்களில் சட்டென நீர் திரண்டது.அதை அவன் கவனிக்கும் முன், முகத்தைத் துடைப்பதுபோல் விரைவாக துடைத்துக்கொண்டாள்.
“வீட்டை பார்த்துக்க வரதா சொன்னவங்க நீங்கதானே..வாங்க ..அப்பா உள்ளேதான் இருக்காங்க..வாங்க..”
அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. விழிகளில் நிரம்பிய அதிர்ச்சியையும், இதயத்தில் எழுந்த பேரலையையும் யாரும் அறியாதபடி மறைத்துக்கொண்டு மெதுவாகத் தலையசைத்தாள்.
“உள்ள வாங்கம்மா ..உக்காருங்க..உங்க பேரு??..” அப்போது தான் பெயரொன்று யோசித்துக் கொண்டு வராத தன் மறதியை உணர்ந்தாள்…
“சா..சாரதா..” வாய்க்கு வந்ததொரு பெயரை சொன்னவள், சாரதா சாரதா என மனதுக்குள் உருபோட்டுக் கொண்டாள்.
“அப்பா.. ” தன் தந்தையை அழைக்கும் அவன் குரல் தேய்ந்து மறைந்தது..
அந்த ஒரு “அப்பா…” என்ற அழைப்பு, அவள் இதயத்தில் அத்தனை ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த நினைவுகளை ஒரே மூச்சில் எழுப்பியது. உள்ளே எங்கோ ஒரு நாற்காலி நகரும் சத்தம் கேட்டது.அழுத்தமான காலடிச் சத்தம்… ஒவ்வொரு அடியும் அவள் இதயத்தின் மீது விழுவது போலிருந்தது.அவளது விரல்கள் தன்னையறியாமல் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன. வாசலின் உள்ளிருந்து வந்தவனைக் கண்டவள் பேச்சிழந்தாள்..
உள்ளிருந்து வந்தவன், வாசல் வரை வந்து நின்றான்.அவளுக்கு எதிரில் கிடந்த ஆசனத்தில் அமர்ந்தவன், அப்போது தான் அவளை ஊன்றி பார்த்தான்.
ஒரு கணம்…அவளது உலகம் இயக்கத்தை நிறுத்தியது.அவளுடைய இதயம் துடிப்பதை மறந்தது.இதுதான் அவன்…அவளது உயிரில், உணர்வில் கலந்தவன் .. அவளது கனவிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்தவன்..காலம் அவனது கோலத்தில் பல மாறுதல்களை செய்திருந்தது . முகத்தில் அனுபவத்தின் ரேகைகள் பதிந்திருந்தன. ஆனால் அந்த நிமிர்வு… அந்த கம்பீரம்… அந்த தீர்க்கமான கண்கள்…அவனது கைகள் இயல்பாக மீசையை வருடின..
ஒருகாலத்தில் இதேபோல் மீசையை வருடிக் கொண்டு அவளை பார்த்து புருவம் உயர்த்துவான்..
அவள் காதலித்த மனிதன் இன்னும் அப்படியே இருந்தான்.
“ம்மா….” அவள் மனம் கதறியது..அவள் கடைசி வரை அவனை அப்படித்தான் அழைத்தாள் ..
ஒரு வினாடி தான் யார் என்பதை வெளிப்படுத்தி விடலாமா என்ற தவிப்பு சுனாமி பேரலையாய் உள்ளுக்குள் எழுந்தடங்கியது..உறைந்த பனிச் சிற்பமாய் தன்னை உணர்ந்தாள்.
அவன் அவளை சாதாரணமாகப் பார்க்க நினைத்தான்.ஆனால்…ஏனோ பார்வை அவளிடமிருந்து விலக மறுத்தது.அந்த முகம் அவனுக்குப் புதிது.அவனது நினைவில் இல்லாத முகம்.ஆனால்… அதில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை வெகுவாக சலனப்படுத்தியது.
அந்தக் கண்கள்…ஒரு யுகத்துக்கான தவிப்பை ஒருங்கே சுமந்த கண்கள்..அதில் தெரிவது என்ன.. ஒரு கணம் அவனது புருவங்கள் சற்றே சுருங்கின. காரணமே இல்லாமல், மனம் பழைய நினைவுகளின் கதவைத் தட்டியது.
‘இல்லை…’ அவன் மனம் உடனே மறுத்தது.’அது முடியாது…’ இதனை காலத்துக்குப் பிறகு, இப்படியொரு சந்திப்பு நிகழ வாய்ப்பே இல்லை.
“அப்பா…” மகனின் குரல் அவனை நிகழ்காலத்திற்குத் திருப்பியது.
“இவங்கதான் வீட்டைப் பார்த்துக்க வந்திருக்காங்க .”
அவன் மெதுவாகத் தலையசைத்தான். “உங்க பேரு…?”
அவள் தன் நடுங்கும் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொண்டாள்.
“சா… சாரதா…”
அந்தப் பெயரைச் சொல்லும்போது , அவள் குரல் அவளுக்கே அந்நியமாகக் கேட்டது.
“சாரதாவா…”
அவன் மெதுவாகத் திரும்பச் சொன்னான். பெயரை மனதில் பதிப்பதற்காக அல்ல… தன் உள்ளம் தேடிக் கொண்டிருக்கும் பெயருடன் அதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக.
இல்லை..இது அவள் பெயர் அல்ல. ஆனால்… இந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்க்கிறேன் என்று ஏன் மனம் ஏற்க மறுக்கிறது?
அவனைக் கண்டதும் அவள் கண்களில் ஒரு நொடி மின்னி மறைந்த வலி…அதில் தெரியும் தவிப்பு..அவனது இதயத்தின் மிகப் பழைய கதவொன்றை மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.
“இங்க துணி துவைக்க , வீடு பெருக்க, துடைக்க ஒரு சின்ன பொண்ணு வருவா..நீங்க சமையல், அப்புறம் வீடு நிர்வாகம் எல்லாம் பார்த்துக்க வேண்டி இருக்கும்.வீட்டோட தங்கி இருக்கற மாதிரி தான் நாங்க தேடிட்டு இருக்கிறோம்..உங்களுக்கு அது சம்மதம் தானே..”
சொல்லிக்கொண்டே வந்தவன்..” சம்பளம் எவ்ளோ எதிர் பாக்கறீங்க ..” என்று கேள்வியாய் நிறுத்தினான் ..
சம்பளம் என்ற வார்த்தையில் அடி பட்ட பறவையாய் நிமிர்ந்தவள், “அது..நீங்களே முடிவு பண்ணிக்கோங்க சார்..எனக்கு உறவு-னு பெருசா யாரும் இல்ல..பெருசா தேவையும் இல்ல..” என்று சுருக்கமாகவே முடித்துக் கொண்டாள்.
“இது என்னோட பையன் கெளதம்..நாங்க 2 பேரும் டாக்டர்ஸ்..அதனால வீட்டை பார்த்துக்க பெருசா டைம் கிடைச்சது இல்ல..இவங்க அம்மா என்னோட பொண்ணு வீட்டுல அவ பிள்ளையை பார்த்துக்க னு போயிருக்காங்க ..அதனால இப்போதைக்கு நாங்க 2 பேரும் தான்..” என்று அவளுக்குத் தேவைப் பட கூடும் என தான் நினைத்த விபரங்களை தந்தான்.. மௌனமாகக் கேட்டுக் கொண்டாள்..
“அப்பாக்கு சுகர் பிரஷர் னு ஏதும் இல்லனாலும் , டயட்ல இனிப்பு காரம் , எண்ணெய் எல்லாம் அதிகம் சேர்த்துக்கறதில்ல..காய்கறி நிறைய, சாதம் கம்மியா எடுத்துப்பாங்க..மத்தபடி வேற எந்த கண்டிஷன்-ம் இல்ல..இது உங்க வீடுனு நினைச்சுக்கோங்க. என்ன வேணும்னாலும் என்கிட்டே சொல்லுங்க..”
புன்சிரிப்புடன் சொன்னவனைத் தலை வருடி மகிழ கிளர்ந்த ஆசையை அடக்கிக் கொண்டு , மெதுவாக ” சரிங்க சார் ” என்றாள்.
“சார் எல்லாம் வேண்டாம்..உங்களுக்கு என் அம்மா வயசு..அதனால் நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்கம்மா” என்றவனை கனிவாய்ப் பார்த்தாள்..
விளையாட்டு போல ஒரு மாதம் ஓடி விட்டது..வந்த சில மணி நேரத்திலேயே அவளால் அந்த வீட்டின் நடைமுறைகளுடன் இயல்பாக ஒன்றிப்போக முடிந்தது.அதிகாலையில் கண்விழிப்பவள், பம்பரமாக சுழல ஆரம்பிப்பாள். ஒவ்வொரு வேளை உணவிலும், காய்கறிகளும், பழங்களும் அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்வாள்.
“காலைல காபி வேணுமே சாரதாம்மா ..” என்று முகம் சுருக்கிய கௌதம் , அவள் என்ன மந்திரம் போட்டாளோ , அவள் கொடுக்கும் சத்துமாவு கஞ்சியை குடிக்க பழகிவிட்டான் ..
“நேரம் காலம் இல்லாம கண் விழிக்கிற கண்ணா…இவ்வளவு காபி உடம்புக்கு நல்லதில்லை தானே..” கனிவும் அதில் புதைந்திருக்கும் கண்டிப்புமாக அவள் சொல்லும் போது, அவனுக்கும் மறுக்க தோன்றவில்லை..
இருவருக்கும் தனித்த தனியே காலை உணவு, மதிய உணவு என அவர்களுக்கு பிடித்த மாதிரி சமைப்பாள்..
“சாரதாம்மா ..நான் என்ன ஸ்கூல் போற சின்ன பையனா..ஸ்னாக்ஸ் எல்லாம் வச்சு விடறீங்க..கூட வேலை பாக்கறவங்க எல்லாம் கிண்டல் பண்ணறாங்க..அப்பாவோட லஞ்ச் பாக் இன்னும் மோசம்..விட்டா தொட்டில் கட்டி தாலாட்டுவிங்க போல..ஆனாலும் ரொம்ப பொறுமை உங்களுக்கு..” என்று சிரித்தவனிடம், “எனக்கென்னவோ நீ சின்ன பையனாதான் தெரியற… இல்லனா சொல்லு…நானும் தெரிஞ்சுக்கறேன் ..”என்று சிரித்தாள்..அவனது தந்தை பற்றிய பேச்சில் சிவந்த முகத்தை தன் சிரிப்பில் மறைத்துக் கொண்டாள்..இதெல்லாம் அவளது பல வருட ஏக்கம் என்று அவன் எப்படி அறிவான்..
காலையில் எழுப்பி விடுபவளிடம் , இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவதாய் தவணை வாங்குபவனை, “சார்..வெளியில அவ்வளவு நல்லா காத்து வருது..மொட்டை மாடில சின்னதா ஒரு வாக் போன அருமையா இருக்கும்..வைட்டமின்-டி வேற இலவச போனஸ்.. எழுந்துக்கோங்க சார்.. ” என்று வற்புறுத்தி எழுப்பி விடுவாள்..சிறு நடையை முடித்து வருபவரிடம் நீர்க்க கரைத்த சத்து மாவு கஞ்சியை இதமான சூட்டில் கொடுப்பாள்..அதற்குள் கெளதம் தன் காலை ஓட்டத்தை முடித்து வந்து விடுவான்..அப்பாவும் மகனும் குளித்து வருவதற்குள், சூடான காலை உணவை எடுத்து வைப்பவள், அருகில் நின்று பரிமாறி உண்ண வைப்பாள்..
“நீங்களும் எங்க கூடவே உக்காருங்கம்மா..காலைலயே எழுத்துக்கறிங்க..உங்களுக்கு மட்டும் பசிக்காதா” என்றவனிடம்,
“இருக்கட்டும் கெளதம்..நீங்க கிளம்பின பிறகு பொறுமையா சாப்பிட்டுக்கறேன்..” என்று மறுத்து விட்டாள்..அவள் மட்டும் தானே அறிவாள், அவன் சாப்பிட தட்டில் சாப்பிடுவது எத்தனை சுகம் என்று..
ஒருநாள் சாப்பாட்டில் சிறு மிளகாயை கடித்து விட்டவன் புரையேறித் தவிக்க, தண்ணீர் தருவதும், தலையில் தட்டி விட இயலாமல் தவிப்பதுமாய் அலை பாய்ந்து விட்டாள்..அந்த அலை பாய்தலில், “மா..இப்போ ஓகேவா மா..” என்று பதறியவளை நல்லா வேளை கெளதம் கவனிக்க வில்லை..அவனது கவனம் தந்தையிடம் இருந்தது… அவளது அழைப்பையும் , தவிப்பையும் கண்டவனது புருவங்கள் முடிச்சிட்டன.. அவள் தன்னிடமும் தன் மகனிடமும் காட்டும் அக்கறையும், கனிவும் நிச்சயம் நடிப்பில்லை….
அவளது நடை, உடை பாவனைகளில் தெரியும் மேல்தட்டு தோற்றம், அவளை ஒரு பணிப்பெண்ணாகக் காட்டவில்லை.. உண்மையில் அவள் யார்..
அன்று ஒருநாள் இப்படித்தான்..மறுநாள் அனுப்ப வேண்டிய ஒரு முக்கியமான கோப்பில் அப்பாவும் மகனும் அலை பாய்ந்து கொண்டிருந்தார்கள்.கெளதம் ஒரு அவசர வேலையாய் வெளியே செல்ல வேண்டி இருந்ததால் அந்த சலிப்பு வேறு அவனிடம் பொறுமையை இழக்கச் செய்து கொண்டிருந்தது .கொஞ்ச நேரம் தள்ளி நின்று பார்த்திருந்தவள், அதற்க்கு மேல் தாள மாட்டாமல், ” கெளதம் ..நீ உன் வேலைய முடிச்சிட்டு வா..சார்..உங்களுக்கு பிரச்சனை இல்லனா நான் ஹெல்ப் பண்ணறேன்..என்கிட்டே கொடுங்க” என்றவாறு மடிக் கணினியை கைப்பற்றினாள்..
“சாரதாம்மா ..உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியுமா..” என்று கெளதம் வியக்க, அப்போது தான் தன் தவறை உணர்ந்தவள், ” ஏதோ கொஞ்சம்..களவும் கற்று மற- னு கத்துக்கிட்டது தான்” என்று சமாளித்தாள்..பின்னே , வெளிநாட்டில் புகழ் வாய்ந்த மென்பொருள் அலுவலகத்தில் அதிகாரியாய் இருந்தவளிடம்,”கம்ப்யூட்டர் தெரியுமா..” என்றால் என்ன சொல்ல முடியும்..
அவள் வேலையை முடித்த லாவகத்தில் அயர்ந்து போனவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் மனதுக்குள் அவள் பணிப்பெண் அல்ல என்று உறுதியாகத் தெரிந்து விட்டது..அவளது பார்வையும், பேச்சும், செயல்களும் அவள் தவறானவள் அல்ல என்று சத்தியம் செய்தன…அப்படியென்றால் அவள் யார்..அவனுக்குள் கேள்விகள் வண்டாய் குடைந்தன..
அன்று அவனுக்கு பிறந்தநாள்..அவள் அறியாத நாளா..கெளதம் தந்தைக்கு தெரியாமல் அவளிடம் விஷயத்தை சொல்ல வந்தான்..அவன் வரும் போது அவள் கேரட் அல்வாவை கிண்ணத்தில் வைத்துக் கொண்டிருந்தாள்.. “சாரதாம்மா.. சூப்பர்..இன்னிக்கு அப்பா பர்த்டே…உங்கள ஸ்வீட் பண்ண சொல்லத்தான் வந்தேன்.உங்களுக்கு எப்படித் தெரியும்..” என்று வியந்தவனிடம், “அது..தெரிஞ்சி எல்லாம் பண்ணல..கேரட் இளசா கிடைச்சது..சரி ஸ்வீட் பண்ணலாமே னு சும்மா பண்ணுனேன்..பார்த்தா இன்னிக்கு ஸ்பெஷல் டே..” என்று சமாளித்தாள்..அவள் தன் சிறு வயதில் அவனுக்கென ஆசையாசையாய் செய்து கொடுத்த முதல் இனிப்பு அது..
“ஹாப்பி பர்த்டே சார்..” என்றவாறு இனிப்பை பரிமாறியவளை பார்த்தவன்..” இன்னிக்கு நைட் டின்னர் பண்ண வேண்டாம் சாரதா..எல்லாரும் வெளிய போகலாம்..” என்றான். வந்த மறுநாளே அவன் தன்னை சாரதாம்மா என்று அழைப்பதை நிறுத்திவிட்டாள்..
“சார்..நீங்க என்னை சாரதானு பெயர் சொல்லியே கூப்பிடலாம்..” என்று விட்டாள்.
அன்று மாலை மூவரும் அறுபடை வீடு முருகன் கோவிலுக்குச் சென்றார்கள் .நடை பாதை ஓரத்தில் அவர்களை இறக்கி விட்ட கெளதம் , காரை நிறுத்துமிடம் நோக்கி செல்ல, கோவில் வாசலில் இருந்த பூக்கடையில் அர்ச்சனை தட்டு ஒன்றை வாங்கி கொண்டாள்.,
“பூ வாங்கிகோங்கம்மா ..:” என்ற பூக்கடைக்காரம்மா , இவள் கையில் பூச்சரத்தைத் திணித்தாள். அர்ச்சனை தட்டுக்கான பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தவன், அவளது பூவுக்கும் சேர்த்து பணம் கொடுத்து விட்டான்..அதை எதிர்பாராதவள், ஆனந்தத்தில் முகம் மலர அந்தப்பூவைத் தலையில் சூடிக் கொண்டாள்.
“இப்போ அம்மா முகத்தை பாருங்க சார்..பொண்டாட்டிக்கு பூ வாங்கி கொடுக்கறது ஒரு சந்தோசம் தான் சார்..” பூக்காரம்மா தன போக்கில் சொல்லி விட்டு அடுத்த வாடிக்கையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள்..தன் முக சிவப்பை மறைக்க முடியாமல் திண்டாடியவளை பாராதது போல் பார்த்தவனுக்குள் யோசனைகள் சுழன்றன .. அவள் கூட அப்படிதான்..பூச்சரம் அவன் வாங்கித் தர வேண்டும் என்றே எதிர்பார்ப்பாள்..இவள் ஏன் அவளை தன் ஒவ்வொரு அசைவிலும் நினைவு படுத்துகிறாள்??
பூஜைத் தட்டும், பூச்சரமுமாய் நின்றவளுக்கு மனம் நிறைந்து விட்டது.. அதற்குள் வந்து விட்ட கெளதம், “வாங்கம்மா.. வாங்கப்பா..போலாம்..” என்று முன்னே நடந்தான்.. ஒரு புறம் மகனும், மறுபுறம் அவனுமாய் ஷண்முகனின் சன்னதியில் நின்றவளுக்கு மனம் விம்மியது..
“இந்த நிமிடம் என் வாழ்வில் நிலைத்திருக்க அருள் செய் முருகா..” என்று மனதார வேண்டிக் கொண்டாள்.. அத்தனை சன்னதிகளிலும் மனதார வேண்டி முடித்தவள், “போலாமா..” என்று வினவ, “கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம் அம்மா ..: என்றவாறு கெளதம் படியில் அமர, அவர்களும் உடன் அமர்ந்தார்கள்.
பூஜை கூடையில் இருந்த பழத்தை இயல்பாய் கௌதமிடன் பாதியும் தன்னிடம் மீதியும் தந்தவாறு பேசிக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்குள் எண்ணங்களின் ஊர்வலம்..
இவள் வந்த பிறகு கெளதம் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்திருப்பதை உணர்ந்தான்..அவளது கவனிப்பில் தன்னிடமும் ஒரு வித அமைதி வசப்பட்டிருப்பதை உணர்ந்தான் .அவளது பாவனைகளில் நிச்சயமாய் பணிப்பெண்ணின் சாயல் தெரியவில்லை..பேசியவாறு இயல்பாய் திரும்பியவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் முகம் சிவக்க தலை குனிந்தாள்..வினாடிக்குள் தன்னை இயல்பாக்கிக் கொண்டவள், போலாமா என்று எழுந்தாள்..
“நீங்க வெளில நில்லுங்க..நான் கார் எடுத்துட்டு வரேன்..” என்றவாறு கெளதம் விரைந்தான்..
பல வருடங்கள் கழித்து அவனுடன் இணைந்து நடந்தவளுக்குள், ஆயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன..
அன்று வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வீடு திரும்பிய கெளதம் ஏனோ அமைதியின்றி தெரிந்தான்..வழக்கமாக வந்தவுடன் அவளிடம் வந்து இரண்டொரு வார்தைகளாவது பேசிச் செல்லும் அவன் இன்று ஏனோ அறைக்குள் சென்று விட்டான்.” யாரு வந்தது ..கௌதமா..எங்கே அவன்..” கேள்விகளுடன் வெளியே வந்தவள் பூட்டப் பட்டிருந்த அவனது அறைக்கதவை வெறித்தாள்..சற்று நேரம் கழித்து கையில் காபி உடன் வந்தவள், கதவு இன்னும் திறக்க படாததைக் கண்டு திகைத்தாள்..அது அவர்களிடையே ஒரு விளையாட்டு உடன்படிக்கை.அவன் வந்த 10 நிமிடங்களில் அவள் காபி தர வில்லை என்றால், அவன் சொல்வதை அவள் செய்ய வேண்டும்,.இல்லை என்றால் அவள் சொல்வதை அவன் செய்வான்..அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஆழ்ந்த நட்பின் பிணைப்பு இருந்தது..
இன்று எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நடப்பதை கண்டவள் அவன் தந்தையும் யோசனையுடன் அவனது அறைக்கதவை வெறிப்பதைக் கண்டாள்.
“கெளதம் தான்..அவன் முகமே சரி இல்லை..என்னனு கேளுங்க சாரதா..இப்போதெல்லாம் அவன் உங்களுக்கு தான் ரொம்ப செல்லம் ..” என்றவாறு அவள் கையில் இருந்த காபியை வாங்கி கொண்டான்..
“கெளதம் …கதவை திற..எல்லாம் ஓகே தானே..” என்றவாறு கதவைத் தட்டியவள், தலை கலைந்து கண் சிவந்து கதவைத் திறந்தவனைக் கண்டு திகைத்தாள்..
” என்னாச்சு தங்கம்..ஏன் இப்படி இருக்கற..” என்று பரிதவிப்புடன் கேட்டவள் கையை பற்றிக் கொண்ட கெளதம்,” அம்மா ..என்கிட்டே உக்காருங்க..” என்றபடி அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்..ஒன்றும் பேசாமல் அவன் தலையை வருடியபடி அமைதியாக இருந்தவள், அவன் தன்னை நிதானப் படுத்திக்க கொண்டு விட்டு எழவும் , “என்னாச்சு கெளதம்..என்கிட்டே சொல்ல முடியும்னா சொல்லு..” என்றாள்.
“அது அம்மா…நான் ரொம்பவும் நம்பிக்கையா இருந்த ஒரு ப்ரோபோசல்.. சரியா நடக்கல..
நான் லீட் பண்ணின ஒரு டீம்..செலெக்ஷன் லிஸ்ட்ல வரல..செலக்ட் ஆயிருவோம் னு ரொம்பவே நம்பிட்டு இருந்தேன்..எத்தனை நாள் தூங்காம இதுக்காக ரிசெர்ச் பண்ணி இருப்போம் தெரியுமா..ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா..” என்றபடி மறுபடி மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.ஒருவினாடி தோல்வியில் துவண்டு தாய் மடி தேடும் குழந்தையாய் அவனைக் கண்டவளுக்குள் தாய்மை சுரந்தது..
அமைதியாய் அவன் தலையை வருடியபடி பேச ஆரம்பித்தாள்..” கெளதம் ..நீ என்னைய வெறும் வீட்டு வேலை செய்ய வந்தவளா பார்க்கலன்னு எனக்கும் தெரியும்..அந்த உரிமைல சொல்லறேன்..” என்றவளை இடைமறித்தவன் , ” அம்மா …நான் உங்களை வெளி ஆளா பார்க்கலனு உங்களுக்கு தெரியாதா..” என்றான்.. பேச்சளவில் கூட அவளை வீட்டு வேலைக்கு வந்தவள் என்று சொல்ல இயலாத அவனது பாசத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது…
“கெளதம் …வாழ்க்கை எல்லாருக்கும் எப்போதும் நியாயம் செய்யறது இல்லை..ஆனாலும் வாழ்க்கை ரொம்ப அழகானது தெரியுமா..அடுத்த நொடி தனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கிற ஆச்சர்யங்கள் ஏராளம் கெளதம் .. உனக்குனு விதிக்கப்பட்டது , அதுக்கு நீ தகுதியானவனா நடந்துக்கற பட்சத்துல உன்னை விட்டு எங்கயும் போகாது.கண்டிப்பா உனக்கு கிடைச்சே தீரும்.. அம்மா என்னோட அனுபவத்துல சொல்லறேன்..மனச போட்டு குழப்பிக்காம அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்க ஆரம்பி..எழுந்துக்கோ..என் தங்கம் இல்ல நீ..” என்று கொஞ்சி கெஞ்சி எழுப்பி விட்டவள், அவன் எழுந்து முகம் கழுவ சென்றதும் அறையை விட்டு வெளியேறினாள்..
அவள் அறியாத ஒன்று..கௌதமை தேற்றும் கவனத்தில் இருந்தவள் கவனிக்காத ஒன்று..அவள் பேசியதை வெளியில் நின்று அட்சர சுத்தமாய் அவனும் கேட்டு விட்டான்.ஒரு காலத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் அவளிடம் அவன் சொன்ன வார்த்தைகளை அணுவும் மாறாமல் அவள் சொல்வதை கேட்ட பின்பும் அவள் யார் என்ற சந்தேகம் அவனுக்குள் எப்படி எழும்..ஆனால் இது எப்படி சாத்தியம்..இவள் தான் அவளென்றால் அவள் சாராதாவாக எப்படி இருக்க முடியும்? அவள் எப்படி இங்கே வர முடியும் ..அவளது உருவமும் இவளது உருவமும் ஒன்றில்லையே…சில பல தோற்றங்களில் அவளை இவள் ஒத்திருப்பதென்னவோ உண்மை தான்..
ஆனாலும்…அவனுக்குள் கேள்விகள் மரங்கொத்தியாய் குடைய ஆரம்பித்தன..இனிமேலும் இதற்கு விடை தெரியாமல் விட அவனுக்கு மனமில்லை..சரியான நேரத்துக்காக காத்திருந்தவனுக்கு அது சில நிமிடங்களிலேயே கிடைத்தது..
“அம்மா…வெளிய சின்ன வேலை..போய்ட்டு சீக்கிரமே வந்துருவேன்…எனக்கு பிடிச்ச சப்பாத்தியும் சிக்கனும் தான் இன்னிக்கு டின்னர்..ஓகேவா..” என்று செல்லம் கொஞ்சி விட்டு சென்றவனை, முகம் மலர பார்த்திருந்தவளுக்குள்,மெலிதான நிம்மதி பிறந்தது..
தன் போக்கில் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு சமையற்கட்டில் நின்றிருந்தவள் காதில்,
“ஷண்மதி ..” என்ற கனத்த குரல் கேட்டு விதிர்த்து போய் திரும்பினாள் ..கைகளை மடித்து கட்டிக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு வாயடைத்துப் போனாள் ..பேச்சு வராமல் தொண்டை அடைக்க மிரண்டவளை ஒரே எட்டில் அணுகியவன், ” இது என்ன வேஷம் ஷண்மதி..நீ எப்படி சாராதாவா இங்க வந்த ? ” என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டவனை வெறித்தவள், ” எப்படிம்மா தெரியும்??..” என்று காற்றாகிப் போன குரலில் கேட்டாள்.
“தெரியாம எப்படிப்போகும்?? உன்னை பார்த்த முதல்நாள்ல இருந்தே எனக்குள்ள ஏதோ ஒரு சலனம்..ஏதோ ரொம்ப பரிச்சயமான உணர்வு..நீ என்மேலும் கெளதம் மேலும் காட்டின அக்கறை.. பாசம்.. என்னை பாக்கற போதெல்லாம் உன் கண்ணுல தெரியல உணர்வுகள்..என் பார்வைல சிவந்து போகற உன் முகம்.. அன்னிக்கு மிளகாயை கடிச்சிட்டு நான் தவிச்சப்போ, உன்னை அறியாம நீ என்னய ‘ம்மா’ னு கூப்பிட்ட..பதட்டத்துல நீ கவனிக்கல..ஆனா நான் கவனிச்சேன்..அன்னிக்கு கோவில்ல பூ வாங்கி கொடுத்ததும் கண்ணீரும் சிரிப்புமா நீ அத வாங்கிகிட்ட விதம்.. அன்னிக்கு அந்த மெயில் அனுப்ப , நீ டாக்குமெண்ட் ரெடி பண்ணின வேகம்..என் பிறந்த நாளுக்கு நீ பண்ணின ஸ்வீட்..எல்லாத்தையும் விட, இன்னிக்கு கௌதம்கிட்ட நீ சொன்ன வார்த்தைகள்..அத உனக்கு யார் சொன்ன னு ஞாபகம் இருக்கா குட்டிம்மா?.. இப்போ சொல்லு.. இதுக்கு மேலும் உன்னை எப்படி நான் கண்டு பிடிக்காம போவேன்..ஆனா உன் முகம்?.. என்னாச்சு டா…எதையும் மறைக்காம சொல்லு..”
அவன் பேச பேச கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டிருந்தவன், அவனது குட்டிம்மா என்ற அழைப்பில், முற்றிலுமாக உடைந்து விட்டாள்..
கைகளில் முகம் மூடி கதறியவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.அதனை வருட பிரிவின் ஏக்கம் தீர , மனதில் அழுத்திக் கொண்டிருந்த இறுக்கம் தீர அழுது ஓய்ந்தவளிடம்..” ஏன்டா…இப்படி…என்னாச்சு குட்டிம்மா…நீ எப்படி இங்க..” என்று வினவினான்..
“பசங்க வளர்ந்துட்டாங்க ..2 பேரையும் டாக்டர் ஆக்கி பார்த்துட்டேன்..இனி என்னோட நிழல் அவங்களுக்கு தேவை இல்ல…எதுக்காக இத்தனை வருஷம் ஒரு தவம் போல வாழ்ந்தேனோ அது நல்ல படியா முடிஞ்சு போச்சு..இனிமே என்னோட இடம் அது இல்லனு தோணுச்சு..இங்க வந்து 3 மாசம் ஆச்சு..என் வீட்டுல வேலை செய்யற பொண்ணு டைஅப் ஆகிருக்கற ஏஜெண்சில தான் நீ வேலைக்கு ஆள் கேட்டிருந்த …அவ மூலமாத்தான் எனக்கு ஏதேட்சையா தெரிய வந்தது. உன்னை தூரத்துல இருந்து பார்த்தாலே போதும்னு உன்னை தேடிட்டு இருந்தவளுக்கு இது எவ்வளவு பெரிய ஜாக்பாட் ..அந்த ஏஜெண்சில நானும் வேலைக்கு இடம் தேடறேன்னு சொல்லி அவன் சொன்ன அநியாய கண்டிஷன்ஸ்க்கு எல்லாம் தலை ஆட்டிஒரு மாதிரி இங்க வந்து சேர்ந்தேன்..நான் அப்ராட்ல இருந்தப்போ நடந்த ஒரு ஆக்சிடென்ட் என் முகத்துல சில மார்க்ஸ் வந்திருச்சு. அங்கேயே காஸ்மெட்டிக் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டேன்.அது முக அமைப்பை கொஞ்சம் மாத்தி விட்டது எனக்கு வசதியா போச்சு..ஆனா இவ்வளவு சீக்கிரம் நீ என்னை கண்டுபிடிப்ப-னு நான் நினைக்கல..
அழுகையினூடே சொல்லி முடித்தவளை, ஆச்சர்யமாக பார்த்திருந்தவன், “ஆனாலும் பெரிய மலையைத்தான் நகர்த்தி இருக்கற..ஏன்டா இப்படி…நீ இருக்கற பொசிஷன் விட்டு வீட்டு வேலைக்குனு வர உனக்கு எப்படி மனசு வந்தது..” என்று தாள மாட்டாமல் வினவினான்..
“இது எனக்கு வரம்..என்னோட இத்தனை வருஷ ஏக்கம்..அது உண்மை ஆகும்னு இருக்கறப்போ எதை தான் நான் விட்டு குடுக்க மாட்டேன்..கெளதம்..அவனோட பாசம் .. எனக்கு எதிர்பாராத சந்தோஷமான ஆச்சர்யம்..அவன் எனக்கு மகன் இல்லையா..” என்றவளை ஆதூரமாகப் பார்த்திருந்தவன், அழுகையில் கலைந்திருந்த அவளது நெற்றி முடியை கோதி விட்டான் ..
“சரி ..இன்னும் எத்தனை நாளுக்கு இந்த சாரதா வேஷம்..” என்றவனிடம்,
“என் உயிர் இருக்கற வரைக்கும்..நாளைக்கு உன் மனைவி திரும்பி வந்தாலும் இந்த வீட்டுல சமையல்காரியா கன்டினியூ பண்ணறது எனக்கு சந்தோசம் தான்..எனக்கு தேவை உன் வீட்டுல உன்னை பார்த்துக்கற ஒரு வாய்ப்பு..அது போதும்” என்றவள், ஏதோ நினைவுக்கு வந்தவளாய்,
“இப்போ உனக்கு உண்மை தெரிஞ்சிட்டது..என்னை போக சொல்லிருவியாம்மா..” என்று பதறினாள்..
“பைத்தியமே …” என்றவன், “நான் வேண்டாம் னு சொன்னாலும் உன் மகன் விட்டுருவானா??உன் புடவை முந்தானைல தூளி கட்டி ஆடிட்டுல இருக்கிறான்..” என்று சிரித்தான். “ஆனா ஒண்ணு குட்டிம்மா..நீ வந்தப்பறம் அவன் ரொம்பவே உற்சாகமா இருக்கிறான்..” என்றவனை தலை சரித்து குருவியாய் நோக்கினாள்..
சட்டென சிரித்தவன், “விட மாட்டியே..சரி…நானும் தான்..” என்று மறுபடி சிரித்தான்..
“உன்னை பாக்கற வாய்ப்பு , உன்னோட பேசற வாய்ப்பு மறுபடி கிடைச்சா திருச்செந்தூர்க்கு வந்து தங்கத்தேர் இழுக்கறேன் -னு வேண்டி இருக்கிறேன் தெரியுமா.. முதலாளி ஐயா , 2 நாள் மட்டும் லீவு கொடுங்களேன்..” என்றவளிடம், “சரியான மங்குனி அமைச்சர் நீ..அசமஞ்சம்..” என்று சிரித்தான்..
“கௌதம் கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம்..அவனை பொறுத்தவரைக்கும் , நான் என்னிக்குமே அவனோட செல்ல சாரதாம்மா தான்..நானே என்னை அப்படி நம்ப ஆரம்பிச்சிட்டேன்..உன்னை பிரிஞ்ச ஷண்மதி எப்போவோ செத்து போய்ட்டா..அது அப்படியே இருக்கட்டும்..அது தான் எல்லாருக்கும் நல்லது “என்றவளை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்..
கெளதம் உள்ளே நுழைந்த சத்தம் கேட்டதும் அழுத முகத்தை துடைத்துக் கொண்டு சாதாரணமாக காட்டிக் கொண்டாள்..
“அம்மா..ஒரு சூப்பர் நியூஸ்..ஈவினிங் வந்த லிஸ்ட் தப்பு…லேட்டஸ்ட் லிஸ்ட்ல எங்க டீமும் இருக்கு…நீங்க சொன்னது உண்மை தான் அம்மா…
அடுத்த நொடி தனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கிற ஆச்சர்யங்கள் ஏராளம்..உனக்குனு விதிக்கப்பட்டது, அதுக்கு நீ தகுதியானவனா நடந்துக்கற பட்சத்துல உன்னை விட்டு எங்கயும் போகாது.கண்டிப்பா உனக்கு கிடைச்சே தீரும்-னு சொன்னிங்களே..உண்மை தான் அம்மா..”
என்றவன், “நாம எல்லாரும் திருச்செந்தூர் போலாம் அம்மா…தங்கத்தேர் இழுக்கனும்..” என்றபடி அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்..
அவனது அணைப்பு சொன்ன செய்தியை நம்ப முடியாதவளாய் , “கெளதம்..” என்றவள் அழுது விட்டாள்…”சாரிம்மா..கேட்கணும் னு கேட்கல..ஆனா உங்க வாக்குமூலம் எல்லாம் காதுல விழுந்தது..நான் அப்போவே வந்துட்டேன்.. லிஸ்ட் பார்த்ததும் உங்ககிட்ட சொல்ல ஓடிவந்தேன்..அப்போ தான் எல்லாத்தையும் கேட்டேன்…நீங்க நிஜமாவே கிரேட் தான் அம்மா..” என்றவன் அவளறியாமல் விழிநீரை துடைத்துக் கொண்டான்..
பிரபஞ்சம் அவளது காத்திருப்புக்கு பதில் சொல்லி விட்டது..வெளியே வானில், காலம் தாண்டி இணைந்த இதயங்களை நிலா தன் ஒளியால் நனைத்து வாழ்த்தியது..
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதுரியம்
சந்திரா மனோகரன்
August 31, 2026
கனவுகளை விதைத்தல்
திசேரா
August 31, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
August 31, 2026