யாரையும் பகைக்காமல்…




வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை கொள்வது.
தன்னைப் பற்றி ஒரு முறை ஆசிரியரிடம் ராமு கோள் மூட்டினான் என்பதை அறிந்தபோது “அவ்வளவுதானே… சொல்லிட்டுப் போகட்டும்’’ என்றான் சிரித்துக்கொண்டே. இதற்குப் பிறகும் ராமுவிடம் நட்புடனேயே இருந்தான்.
அவ்வளவு ஏன்? ஒரு நாள் அவன் பேனாவை பாஸ்கர் திருடியதைப் பார்த்தபோதுகூட “என்னடா, நண்பனோடதுதானே என்று உரிமையாக எடுக்கிறாயா? தப்பில்லை. இனிமேல் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடு” என்றான். பாஸ்கருக்கு அழுகையே வந்துவிட்டது.
அன்று அவர்கள் வகுப்பில் புதிதாக ஒரு மாணவன் சேர்ந்திருந்தான். பெயர் கணேசன். புதியவன்போல் இல்லாமல் எல்லோரிடமும் வளவளவென்று பேசினான். அறிவியல் ஆசிரியர்கூட ‘வகுப்பில் பேசக்கூடாது’ என்று அவனைக் கண்டித்தார்.
அன்று மதியம் உணவுக்குப் பிறகு ‘‘வாயேன், வெளியில்போய் வேர்க்கடலை சாப்பிடலாம்’’ என்று வசந்தனை அழைத்தான் கணேசன்.
‘‘இன்னைக்குத்தான் சந்திச்சோம். ஆனா ரொம்ப நாள் பழகின மாதிரி இருக்கு” என்று கணேசன் கூறியதும் வசந்தன் மகிழ்ந்து போனான்.
“யாரையுமே சட்டுனு நண்பன் ஆக்கிக்கிறது என் குணம் வசந்தன். உன் சிறப்பு குணம் என்னன்னு சொல்லு… அட, தயங்காமல் சொல்லுடா…”
“யார் என்ன செய்தாலும் நான் அவங்களை விரோதிகளாக நினைச்சதில்லை” என்று தொடங்கிய வசந்தன் ‘ராமு, பாஸ்கர், கோபு, வீரராகவன்’ போன்ற பலரும் தனக்கு இழைத்த தவறுகளையும், தான் பெருந்தன்மையாக அவற்றைப் பெரிதுபடுத்தாமல் விட்டதையும் விவரித்தான்.
அதற்கு அடுத்த நாள் வசந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராமு, பாஸ்கர் உள்பட பலரும் அவனிடம் முகம் கொடுத்துப் பேச மறுத்தார்கள். வசந்தனே வலியப் பேசினாலும் ஓரிரு வார்த் தைகளில் மட்டுமே பதிலளித்தார்கள். என்ன ஆயிற்று எல்லோருக்கும்..? வசந்தன் குழம்பினான்.
கொஞ்சம் தள்ளி கணேசன் விஷமமாகச் சிரித்துக்கொண்டிருந்தான். வசந்தன் தன்னிடம் கூறியதை சம்பந்தப் பட்டவர்களிடம் ஒன்றுக்கு நான்காக திரித்துக் கூறியவன் அவன்தானே!
வசந்தனின் இடத்தில் வள்ளுவர் இருந்தால் என்ன செய்திருப்பார்?
புதியவனை சில நாட்கள் நன்கு கவனித்துவிட்டு, அவன் நம்பிக்கையானவன் என்பதை உறுதி செய்து கொண்டு, பிறகே மனம்விட்டுப் பேசியிருப்பார்.
ஏனென்றால்
‘ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்’
என்று ‘நட்பாராய்தல்’ என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார். அதாவது ‘‘ஆராயாமல் கொள்ளும் தீயநட்பு, பகைவர் இல்லாமலேயே துன்பம் தரும்’’ என்ற பொருள் கொண்ட குறள் இது.
– வெளியான தேதி: 01 டிசம்பர் 2006