யாரைத்தான் நம்புவதோ…!




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு நல்லாத்தெரியுது. இப்போ பஸ் நேராகத்தான் போகுது. ஆனாலும் இந்த கருமம் பிடிச்சவன் அப்படியே சாஞ்சி ஒரசிக்கிட்டு வாறான். சனியன்… சனியன்… என்னதான் புத்தியோ? அப்படியே செருப்பை கழட்டி அடிச்சிட்டால் என்ன? என்ன செய்யிறது பொம்பிளையா பொறந்து தொலைச்சிட்டு, வேலை செய்யவும் துணிஞ்சிட்டா இதையெல்லாம் சகிக்கத்தான் வேணுமோ? அதுக்காக! அப்பன் வயசுல இருக்கிற இந்த கிழவன்கிட்ட உரசுப்பட்டு அவஸ்தைப்படணுமா என்ன? மெல்ல விலகி முன்னால் போயிடலான்னா, ம்ஹும் விறகுக்கட்டையை அடுக்கி வச்ச மாதிரி வேர்த்து வடிஞ்சி ஒவ்வொருத்தரும் நெருப்பில நிக்கிற அவஸ்தையோட நிக்கிறாங்களே. இந்த லட்சணத்துல இவனுக்கு வந்த ஆசையைப்பாரேன்… எழவெடுத்த டிரைவர் இந்த நேரத்திலா பிரேக் போட்டுத் தொலைக்கணும். நானே போய் அந்த கிழட்டு மூதேசி மேலில அடிபடுறேன். வெத்தில கறபடிஞ்ச பல்லை காட்டி கேவலமா சிரிக்கிறான். அவனுக்கு அதுல அப்படியொரு சந்தோஷம் போலிருக்கு. போகட்டும் போகட்டும். இவனுக்கெல்லாம்…
நினைக்கமட்டும் தான் என்னால் முடிகிறது. வெளிக்காட்டவோ எதிர்க்கவோ முடியாமல் பயம் தடுத்து விடுகிறது. அப்படியே மௌனமாகி விடுகிறேன். நினைக்கவாவது சுதந்திரம் இருக்கிறதே இதுவரைக்கும் சந்தோஷம்தான். முடிந்தவரைக்கும் ஆட்களை சேர்த்து உள்ளே அமுக்கி கொண்டிருக்கிறான் அந்த கண்டக்டர். நேரத்தைப் பார்க்கிறேன். பயப்படத் தேவையில்லை. பைல்களையும் ஒருமுறை தடவிப்பார்த்துக் கொள்கிறேன். இது ஒரு முக்கியமான இன்டர்வியூ. எனக்குத்தான் அந்த வேலை கிடைக்க வேண்டும். பார்க்கலாம். எல்லாம் கடவுள் செயல்.
இப்போது எனக்கு முன் சீட்டில் ஒரு பெண். இருபது வயதிருக்கும். அழகாய்த்தான் இருக்கிறாள். அவளுக்கருகில் நிற்கும் அந்த இளைஞன் தன்கால்களால், அமர்ந்திருக்கும் அவளது தோள்களை உரசிக்கொண்டு வருகிறான். அவனுக்குள் மறைவாக ஒரு விஷமச்சிரிப்பு. பாவம் அந்தப்பெண். அவளைப் பார்க்கிறேன். என்ன இது! அவளுக்குள்ளும் ஒரு வெட்கச்சிரிப்பும் நாணமும் இளையோடியபடி… அப்போ அவள் இதை அனுமதிக்கிறாளா? விருப்பத்துடன்தான் இந்தக் கூத்து நடக்கிறதா? என்ன ஜென்மங்களோ! என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை காதலர்களாய் இருக்குமோ? இல்லையில்லை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எனக்கென்ன? எவன் எப்படிப்போனால் எனக்கென்ன? இருந்தாலும் இந்த சமுதாயம் மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் ஒரு சில ஆண்வர்க்கங்களை அங்கீகரிக்கவே முடியவில்லை. வெளியே எத்தனை மரியாதையாக நடந்துகொள்கிறார்கள்! மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப்படும் எங்களுக்குத்தானே தெரிகிறது அவர்களின் அந்தரங்கத்தின் அசிங்கம். இளைஞர்களென்றால் ஏதோ ஒரு இளமைவேகம் என்று மன்னித்துகூட விடலாம். ஆனால் இந்த கிழவன்களது புத்தியும் ஏன்தான் இப்படி போகிறதோ?
கிழவன் என்றதும் நாகேந்திரன் மாஸ்டர் தான் ஞாபகத்திற்கு வாறார். ரொம்பவும் நல்ல டைப். ஊருக்குள் அவருக்கென்று ஒரு தனி மரியாதையே இருக்கும். எப்பவும் நெற்றியில் விபூதி வச்சிருப்பார். அதுபோலவே அவரது உள்ளமும் நல்லதூய்மைதான். நல்ல தாராள குணம். யாருக்கெண்டாலும் தயங்காமல் உதவிசெய்வார். என்மேலும் அவருக்கு நிறைய விருப்பம். இந்த இன்டர்வியூ சக்ஸஸ் ஆகினால் அவர்கிட்டத்தான் முதல்ல போய்ச் சொல்லணும்.
நாகேந்திரன் மாஸ்டர் நிறைய பொம்பிளைப் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுக்கிறார். நான் கூட ஒருகாலத்துலஅவரிட்டதானே டியூசன் படிச்சேன். ஆனாலும் அந்த மனிசனுக்கு ரொம்பத்தான் நல்லமனசு. கஷ்டப்படடுற பிள்ளைகள் கிட்ட காசு வாங்க மாட்டார். அந்த நன்றிக்கோ என்னவோ தெரியாது, அதுமாதிரி சும்மா படிக்கிற பிள்ளைகள் அவர் வீட்டுக்குப் போய் ஏதாவது உதவிசெய்து கொடுப்பார்கள். பாவம் அவர் இன்னும் கலியாணம் கூட செய்யல்ல. அவருக்கும் பொம்பிளைகள் மேல ஏதாவது வெறுப்பு இருக்குமோ? யார்கண்டது. எது எப்படியோ நான் பழகிய ஆம்பிள்ளைகள்ள ஒரு மனிசனாவது மனிதாபிமானத்தோட வாழுறானே! அதுவே பெரிய திருப்தி. எல்லா ஆம்பிளைகளுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சால் புத்தியை காட்டிடுவாங்க. அந்த வகையில நாகேந்திரன் மாஸ்டரை கட்டாயம் பாராட்டித்தான் ஆகணும்.
மிஸ்டர் பரமசிவம் எவ்வளவு நல்ல மனுசன். அவரே ஒரு சமயத்துல மாறினாரே! அவராலேயேதான் அந்த வேலையை விடவேண்டியதாய் போயிடுச்சி. அவர் அப்படி நடப்பார்னு யாருக்குத் தெரியும். வயசு அதிகம்தான் ஆனாலும் நல்ல ஸ்மார்ட்டா இருப்பார்.
அப்போ நல்ல மழை பெய்திட்டு இருந்தது. ஒபிஸ்லேயே இருந்திட்டுப் போயிடலாமேன்னு ஏதோ பைலை புரட்டிட்டு இருந்தேன். திடீரென முன்னால் நிழல் தெரிய மிஸ்டர் பரமசிவம் நின்னுட்டிருந்தார். எப்ப வந்தாரோ எப்படி வந்தாரோ. சத்தமே கேட்கல்லையே.
“என்ன அங்கள் எப்ப வந்தீங்க”
நான் அங்கள் என்றுதான் அவரைக் கூப்பிடுவேன்.
“நல்ல மழை பெய்யுதில்ல. ஒரே குளிரா இருக்கு” என்றார்.
“அதுதான் மழைவிட்டவுடன போக நினச்சிட்டு இருக்கேன்”
“வாங்களேன் கார்ல கொண்டுப்போய் விடுறேன்”
“உங்களுக்கு எதுக்கு சிரமம். இப்ப மழை விட்டுடும் அங்கள்”
“இந்த சல்வார் உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்கு. எம்ரோடிங் வேர்க் பண்ணியிருக்கோ?”
சொல்லியபடியே என் சல்வாரைப் பிடித்துப் பார்ப்பதுபோல் கழுத்துப்பகுதியில் கையை வைக்கிறார். நான் ஓரடி பின்வாங்கினதுதான் தாமதம் மனுசன் கையை பிடிச்சிட்டார்.
“பயப்பட வேணாம் யாரும் வரமாட்டாங்க…” என்றபடியே நெருங்கி வந்துட்டார்.
“ச்சீ…..”
அருவருப்புடன் ஹேன் பேக்கை எடுத்திட்டு ஓடிவந்திட்டேன்.
நெஞ்செல்லாம் படபடப்பு. எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன். அவருக்கு என்னளவில் ஒரு மகளும் இருக்கே! இப்படி பண்ணிட்டாரே… சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாருமே இப்படித்தானோ?
படபடப்பைக் குறைத்துக் கொள்ள நெஞ்சை அழுத்திப்பிடித்துக் கொண்டே போனேன். இதோ இப்பவரைக்கும் அதை யாரிடமும் சொல்லவில்லை. எப்படி சொல்ல முடியும்? அவரைப்பற்றி ரொம்ப உயர்வா சொல்லி வச்சிருந்தேனே. கலிகாலம்…கலிகாலம்…
இன்னும் ஐந்து நிமிட தூரத்தில் நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ஏதேதோ யோசனையில் அந்த உரசல் கிழவனை மறந்தே போனேன். அவன் இறங்கிட்டான் போலிருக்கே. கவனிக்கவே இல்லை. இடித்து இடித்துக்கொண்டு இறங்குவதற்காய் மெதுவாக முன்னால் போகிறேன்.
“மே ஐ கம் இன் சேர்”
“இயஸ் கம் இன்”
இன்டர்வியூ நடக்கின்றது. ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். உருவத்தில் நடிகர் பிரகாஷ்ராஜை ஞாபகப்படுத்துகிறார். அனேகமாக திருமணமாவராய் இருக்க வேண்டும்.
கேள்வி பதில்கள் தொடர்கின்றன.
“உங்களுக்கு திறமை இருந்தால் நிச்சயமா சந்தர்ப்பம் கொடுப்போம். எப்பவும் ரூல்ஸ் என்ட் ரெகியுலேசன் தான் முக்கியம்…”
அவர் தன்னை நேர்மையானவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறாரோ?… அவர் நேர்மையானவர்தான். ஏன்! நேர்மையற்றவராய் கூட இருந்துவிட்டுப் போகட்டுமே. என் மனம் ஏன் அடுத்தவர்களைப் பற்றி ஆராய வேண்டும்?
“கலியாணமாகி விட்டதா”
இல்லையென்றேன்.
“குட்…வெரி குட்… உங்களமாதிரி யங் ஆக்களைதான் எதிர்பார்க்கிறோம்”
முதல் தடவையாய் சிரிக்கிறார். நானும் மரியாதையுடன் சிரித்து வைக்கிறேன். யாரோ கதவை திறந்துகொண்டு உள்ளே வருகிறார்கள். இவர் உடனே ரூல்ஸ் என்ட் ரெகியுலேசன் பற்றி வலியுறுத்தி சத்தமாக கதைக்கிறார். வந்தவர் சென்ற அடுத்தநிமிடம் இவரது குரல் அமைதியாகிறது. மெதுவாக சற்று குரலைத் தாழ்த்தி,
“யூ லுக் ப்ரிட்டி” என்றார்.
அழகாக இருக்கிறேனாம். சந்தேகப்பட்டது சரியோவென தோன்றுகின்றது.
“தேங்ஸ்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்கின்றேன். தர்மசங்கடமாய் இருக்கிறது. ஒழுக்கக்கட்டுப்பாடுகளை அத்தனை சத்தமாய் விளகும் போதே ஒரு சந்தேகம் தட்டியது.
“நீங்க ஒரு பெண்பிள்ளை. உங்க பேர் கெடாமல் இருக்கணும். எனக்கு முதலில் என் போஸ்டில் இருந்தவர் ஒரு பொம்பிளப்பிள்ளை பிரச்சனையாலதான் விலகிட்டார். சோ நான் அந்த விசயத்துல ரொம்ப ஜாக்கிரதை. எனக்கு ரூல்ஸ் என்ட் ரெகியுலேசன் தான் முக்கியம்”
திரும்பவும் அவரது நேர்மையை நிரூபிக்கிறார். எனக்கு சத்தியமாய் அடித்து சொல்ல முடியும். அவரிடம் ஒரு போலித்தனம் இருக்கிறது. வெளியில்தான் அவர் நல்ல மனிதர்.
“ஒ கே வீ வில் மீட் நெக்ஸ்ட் டைம்.”
என்றபடியே பைலை மூடி கையில் தருகிறார்
ஏதோ ஒரு எரிச்சலில்தான் வெளியேறுகிறேன். இப்போ எனக்கு நாகேந்திரன் மாஸ்டரை பூப்போட்டு கும்பிடணும் போல இருக்கு. இனி அப்படியொருவரை கண்டுபிடிப்பது கஷ்டம்தான். நான்கூட நாகேந்திரன் மாஸ்டர் மாதிரி ஒருத்தரை தேடி, அவரைப்போல குணம் உள்ளவரைத்தான் கலியாணம் செய்துக்கணும்.
ஏதேதோ எண்ணங்கள்… நாகேந்திரன் மாஸ்டரை பார்க்க வேண்டும் போல் ஓர் உணர்வு. அவரைப் பார்த்த நாளே ஞாபகத்தில் இல்லை. இன்று எப்படியாவது அவரைப் பார்த்துவிட்டுதான் போக வேண்டும். கொஞ்சநேரம் இதுபற்றி பேசிட்டு, அப்படியே ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு…
என் அப்பாவிற்கு பின் காலில் விழக்கூடிய ஒரே ஆண்ஜீவன் நாகேந்திரன் மாஸ்டர் மட்டும் தான். என் கணவன் எப்படி அமையப்போகிறானோ…!
தனியாக சிரித்தும் கொள்கிறேன். அடடே! கலியாண நினைப்பில் எனக்கு கூட வெட்கம் வந்துவிட்டதோ…?
இன்று சனிக்கிழமையல்லவா. பாடசாலை பூட்டியிருந்தது. நாகேந்திரன் மாஸ்டர் குவாட்டஸ்கூட மூடித்தான் இருக்கிறது. உள்ளேதான் இருப்பார். ஏதாவது படித்துக்கொண்டு… எழுதிக்கொண்டு… பாவம் மாஸ்டர் நானென்றால் அவர் வீட்டுக்குப் போய் உதவி செய்ததே இல்லை. பிரியதர்சினி சமைத்தும் கொடுப்பாளென்று கேள்விப்பட்டிருக்கிறேன். மோகனா கூட வீடெல்லாம் கழுவியதாய் கூறினாள். இந்த விஷயத்தில் ஊரார், மாஸ்டரை கொஞ்சம் தப்பாய் கதைப்பதாய் கூட ஒரு கேள்வி. நான் அவரை நூறு சத வீதம் நம்புகிறேன். சுட்டாலும் தங்கம் தங்கம் தானே.
இன்று ஏதாவது வேலை செய்து கொடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே கதவை தட்டுகிறேன். சத்தமேயில்லை. ஒருவேளை பின்னால் இருப்பாரோ…? பின்னால் போய் யன்னல் கண்ணாடியில் பார்த்தால் தெரியப்போகிறது. என்னைக் கண்டதும் மாஸ்டர் சிரித்துக்கொண்டே வரவேற்கப்போகிறார்.
டோனி வாலை ஆட்டிக்கொண்டே மேலில் தாவுகிறது. மாஸ்டரது செல்ல நாய்தான் டோனி. ஏனோ அப்போதில் இருந்தே டோனிக்கு என்மேல் நல்ல விருப்பம். மாஸ்டர் மாதிரியே டோனிகூட எல்லோரிடமும் அன்பாய் இருக்கும். யாரையுமே கடிக்காது. என் கைகளை பாய்ந்து நக்குகிறது. நான் டோனியின் தலையை தடவிக்கொண்டெ யன்னல் கண்ணாடியில் மாஸ்டரது ரூமை நோட்டம் விடுகிறேன்.
டி.வி போய்க்கொண்டிருக்கிறது. ஆ….! இதென்ன அநியாயம்? கருமம் கருமம் மாஸ்டர் என்னத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். அரைகுறை ஆடையுடன்…. இல்லையில்லை ஆடையே இல்லாத பெண்களது ஆட்டமும் பாட்டமுமாய். டி. வி. க்கு முன்னால் கட்டிலில் நாகேந்திரன் மாஸ்டர். பக்கத்தில் யாரது? பிரியதர்சினி மாதிரி இருக்கிறதே. மாதிரியென்ன அவள்தான் அவளேதான். வெட்கம் கெட்ட ஜென்மம். இப்படி ஒட்டி உரசி கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறாளே.
எனக்கு நெஞ்சு வேகமாய் துடிக்கிறது. ஏன் இப்படி வியர்க்கிறது? கைகள் நடுங்குகிறதே! உடல் அப்படியே தளர்ந்து சோர்ந்து விட்டதாய்…. இல்லை இது உண்மையில்லை. என் கண்கள் எதையோ பொய்யாகப் பார்த்து தொலைக்கிறது. நாகேந்திரன் மாஸ்டர் ஒருநாளும் இப்படிச் செய்யமாட்டார். ஓவென்று கத்தி அழவேண்டும் போல் தோன்றுகிறது. நடக்க முடியாமல் கால்கள் தடுமாறுகின்றன.
தள்ளாட்டத்தில் தவறுதலாய் டோனியின் காலை மிதித்து விடுகிறேன். டோனி உறுமிக்கொண்டு என்னை கடிக்கப் பாய்கிறது.
– சுடரொளி
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |