யாகம்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த ஒலகத்ல, மொதல்ல வந்தது ஈஸ்வரி. மொதல்ல வந்து, ஆண் தொண இல்லாம வாழ்றதுக்கு கஷ்டமா இருந்திச்சு. வனத்ல, கொஞ்ச நா தனியா இருந்து பாத்தா. அவளால் தாக்குப் பிடிக்க முடியல.
இயற்கை நல்ல பாடங்குடுத்துச்சு. விலங்குகளெல்லாம் கூட்டங் கூட்டமா, சோடி சோடியா இருந்துச்சு. விலங்குகள், தம் – தம் இனத்தோடு கூடி இன்புற்று வாழ்றதக் கண்ட ஈஸ்வரி, வாய் பேசாத வெலங்குக எவ்வளவு சந்தோசமா இருக்கு. தனிமையில இருக்கோம்ண்டு நெனச்சு, தனக்குத் தொணக்கி மனித உயிர்கள உருவாக்க நெனச்சா.
ஆலங்குச்சி அரசகுச்சிகளப் பெறக்கி, யாகஞ் செய்ய ஆரம்பிச்சா. அந்த யாகத்தல இருந்து ஒரு ஆண் உருவாகி வெளிய வந்துச்சு. ஈஸ்வரி, யாரப்பா? நிய்யிண்டு கேட்டா. அதுக்கு, அந்த ஆண் என்னம்மாண்டு பதில் சொன்னர். என்னம்மாண்டு சொன்னதினால, நிய்யி, ஏ – மகிங்ண்டு சொல்லிட்டா.
கொஞ்ச நேரங்கழிச்சு, இன்னொரு ஆண் உருவம் வெளியாச்சு. நிய்யி ஆருண்டு கேட்டா ஈஸ்வரி. அதுக்கு என்ன பெண்ணே ண்டு பதில் சொல்லுச்சு. என்ன பெண்ணேண்டு சொன்னதுனால எங்கணவன்டு சொன்னா.
இப்டி, ஈஸ்வரி செய்த யாகத்ல மும்மூர்த்திகளும் வி நாயகரும் வெளியானாங்க. இவர்களோட, ஈஸ்வரி சந்தோசமா இருந்தா.
ஒருநா, மும்மூர்த்திகளும் வேட்டக்கிப் போனாங்க. அப்டி, போகும்போது, ஈஸ்வரி வழியனுப்பி வச்சா. வேட்ட விட்டு வீட்டுக்கு வரும்போது, எப்பயுமே சிவந்தர் (சிவன்) முன்னால வருவாரு. அண்ணக்கி, பிரம்மா முன்னால வந்துட்டாரு. கணவந்தா முன்னால வர்ராருண்டு, ஈஸ்வரி பிரம்மாவ கட்டித் தழுவி வரவழச்சா. அப்ப, சிவனுக்கு கோபம் வந்திருச்சு. ஈஸ்வரிய ரெம்ப கோவிச்சு, அடிக்கப் போனாரு. அப்ப, ஈஸ்வரி சொல்லுச்சு, நானென்ன செய்யுறது, ரெண்டு பேருக்கும் அடயாளந் தெரியலண்டு சொல்லுச்சு.
ரெண்டு பேரயும் ஈஸ்வரி அடையாளம் கண்டுகிறதுக்காக, பிரம்மாவோட அஞ்சு தலைகள்ல ஒண்ண கிள்ளினாரு. கிள்ளுன தல, சிவன் கையக் கவ்வி கிருச்சு. எடுத்து – எடுத்துப் பாத்தாரு எடுக்க முடியல.
இதப் பாத்த திருமாலு, பெண்ரூவம் எடுத்து பிரம்மா முன்னால ஆடுனாரு. ஆட்டத்தப் பாத்திட்டு, பிரம்மா சிரிச்சாரு. சிரிக்கவும் பிரம்மாவோட வாயி விட்டு வெலகிக்கிருச்சு. அப்ப இருந்து, ஈஸ்வரி பிரம்மனயும் – சிவனயும் அடையாளந் தெரிஞ்சுக்கிட்டா.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.