மோசடிக் கல்யாணம்..




மவுன்ட் ரோடு தேவா திரையரங்கம். காதலுக்கு மரியாதை படம் ஓடியது. சகல மரியாதையுடன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் நடக்கிறது.

துப்பட்டாவை தலையில் கட்டிக்கொண்டு இரண்டு கண்கள் மற்றும் தெரிய ப்ரீத்தி ஓரமாக நின்று கொண்டிருக்க.. ராகுல் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான். உள்ள போலாமா ப்ரீத்தி, வா வா.. என்றவனிடம்..
படம் போடட்டும். வெயிட். இப்போ போனா வெளிச்சத்துல யாராவது பாத்துட போறாங்க.
Hey.. No chance.. உன்ன பெத்தவங்களே எதிரில் வந்தாலும் இந்த கோலத்துல உன்ன யாராலும் கண்டு பிடிக்க முடியாது டியர்..Don’t worry..
டேய்.. எங்கப்பா, எங்கப்பா என்று அவளை கடந்து சென்ற ஒரு நபரைப் பார்த்து கூறிய ப்ரீத்தியிடம்.. Hey உங்கப்பா விஜய் ரசிகரா.. தனியா வந்திருக்காரா இல்ல அவரும் எதாவது ஜோடியோடவா.. இடைவேளையில பார்த்து சொல்றேன் என்று கண்ணடித்தான்..
எங்கப்பா விஜய்யோட தீவிர ரசிகர். தனியாத்தான் போவாரு படத்துக்கு எப்பவுமே. சரி அதவிடு. உங்க வீட்ல பச்சைகொடி காமிச்சிட்டாங்க. எங்க வீட்ல அம்மா காதுல நம்ம காதல போட்டு வெச்சிருக்கேன். ஆனா அப்பா against ஆ இருக்காருன்னு சொல்றாங்க அம்மா.. என்ன பண்றதுன்னே தெரியல.
எல்லா வீட்லேயும் காதலுக்கு எதிரி அப்பாதான். ஆனா பாரு காதலுக்கு மரியாதை படம் மட்டும் பாக்க வந்துட்டாரு இப்போ. படம் முடிவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே இருவரும் கிளம்பினர்.
ஒரு நாள்..
என்னம்மா ப்ரீத்தி ஒரு மாதிரியா இருக்க என்று கேட்ட அம்மா மீனாட்சியின் காலில் மண்டியிட்டு.. என்ன மன்னிச்சிடுமா.. சாரி எங்கள மன்னிச்சிடுமா.. நான்.. நான்.. !!!???
அடிப்பாவி. என்னடி சொல்ற? ஏன்டீ அவசரப்பட்ட. ச்சீ.. நீ என் பொண்ணுன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்கு. ஏற்கனவே உன்மேல கடுப்பா இருக்காரு உங்கப்பா. இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான் என்று கன்னத்தில் பளார் பளார் என அறையும் அதே சமயம் அப்பா சரவணன் உள்ளே என்ட்ரி..
என்னங்க..பாத்தீங்களா உங்க பொண்ணு செஞ்ச காரியத்த. இப்போ என்னங்க பண்றது..
என்ன கேளு இப்ப வந்து. வளத்து வெச்சிருக்க பாரு. தருதல. தருதல என்று இவரும் ரெண்டு சாத்து சாத்தினார். இவ்வளவு அடியும் வாங்கிக் கொண்டு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் குத்துக்கல் மாதிரி முகத்தை மட்டும் சோகமாக வைத்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்..
அடிக்கடி வாந்தி மயக்கம்.. சோர்வாக இருந்த ப்ரீத்தியின் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு.. என்னங்க இப்படி பிடிவாதமா இருந்தா எப்படி.. போய் அந்தப் பையன் வீட்ல பார்த்துப் பேசுங்க. கண்ணும் காதும் வெச்சாமாதிரி சீக்கிரம் பேசி முடிங்க. வயிறு காமிச்சி குடுத்துடும் லேட் பண்ணிங்கன்னா. கிளம்புங்க, நானும் வரேன்..
பிள்ளைகளகள் செய்த தவறுக்கு பெற்றவர்கள் தானே தலைகுனிய வேண்டும். கல்யாணம் நடந்தேறியது.
அன்றிரவு..
நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சரவணன்-மீனாட்சி இருவரும். இரவு ப்ரீத்திக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க.. எல்லாரும் நெனச்சிகிட்டிருக்காங்க உனக்கு இது தான் முதலிரவுன்னு. எங்களுக்குத் தானே தெரியும் உங்க ரெண்டு பேரோட லட்சணம் என்று சொல்லும்போது ராகுல் அங்கு வர..
ஆன்டி..உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும். உண்மையிலேயே இன்னிக்கித்தான் எங்களுக்கு முதலிரவு. ப்ரீத்தி.. அம்மா கிட்ட இனிமேலும் மறைக்காத. உண்மைய சொல்லிடுவோம்.
அம்மா.. சாரிம்மா. எங்களுக்கு வேற வழி தெரியல. இப்படி சொல்லலைன்னா அப்பா கன்வின்ஸ் ஆயிருக்கவே மாட்டாரு. எங்க கல்யாணம் நடந்தே இருக்காது.
அடிப்பாவி..ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்வாங்க. இது மகா பொய்யா இருக்கேடி. எப்படியோ போ.. கல்யாணம் ஆச்சே. விடு. அவர்கிட்ட எப்படி சொல்லப் போறேனோ..
இரண்டு மாதம் முடிந்து பெண்ணும் மருமகனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். சரவணன், ப்ரீத்தியின் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அன்றிரவு..மீனாட்சி, என்ன நம்ம பொண்ணு இங்க இருக்கும் போது அடிக்கடி வாந்தி, மயக்கம்னு படுத்துப்பா. துள்ளி ஓடிகிட்டிருக்கா. வயிறு ஒண்ணும் உப்பினாப் போல தெரியல. என்னன்னு கேட்டியா.. கர்ப்பம் கலஞ்சிடுச்சா என்ன..
அதெல்லாமே நடிப்புன்னு சொல்லிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவளை, உசுப்பி.. என்னடி நான் சொல்றது கேட்டுதா இல்லையா காதுல..
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..கர்ப்பம் ஆனாதானே கலையறதுக்கு.. இதுங்க ரெண்டும் ஆடின நாடகம் அது. நான் என்ன பண்றது. எனக்கே first night அன்னிக்கித்தான் தெரியும் என்று அன்று நடந்த்தை கூறினாள். நிதானமா உங்க கிட்ட சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுதான் என் தப்பு. சாரிங்க.
அப்பா.. நாங்க போய்ட்டு வரோம். மாமா கெளம்பறோம் என்று இருவரும் சொல்லியும்.. முகம் கொடுத்து பேசாமல் இருந்தான் சரவணன்.
என்னம்மா அப்பாகிட்ட சொல்லிட்டியா. அதான் உம்முனு இருக்காரா.
ஆமான்டி.. நீ கெளம்பு.
நான் சமாதானப் படுத்தறேன் உங்கப்பாவ.
மாதங்கள் ஓடின. ப்ரீத்தி என்னடி எதாவது விசேஷமான சேதி உண்டா. நாள் ஏதாவது தள்ளி போயிருக்கா. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற.
அம்மா..நான் என்னத்த சொல்றது. அதுக்கு குடுப்பன இல்லை உன் பொண்ணுக்கு. டாக்டர் சொல்லிட்டாரு. அடுத்த வாரம் ஒரு பேமஸ் டாக்டர போய் பார்க்கலாம்னு இருக்கோம்.
வாரங்கள் ஓடின. ப்ரீத்தி கால் செய்து புலம்பினாள் அம்மாவிடம். அம்மா.. எதுக்குமே வாய்ப்பில்லைங்கிறாங்க. என்ன வேளையில கர்ப்பம்னு பொய் சொல்லி கல்யாணத்த பண்ணிக்கிட்டேனோ.. என் கர்ப்பம் பொய்யாவே போயிடிச்சி. நாங்க செஞ்ச மோசடிக்கு ஆண்டவன் எங்கள மோசடி பண்ணிட்டாரு. இவர் அதையேதான் சொல்லி சொல்லி வேதனை படறாரும்மா..
புரிஞ்சா சரி என்று மனதில் நினைத்து வேதன அடைந்தாள் மீனாட்சி..
பெற்ற பிள்ளைகள் மீது சத்தியம் செய்வது, பிள்ளைய போட்டு தாண்டுறது, கர்ப்பம்னு சொல்ற பொய்.. இவற்றிர்க்கு உடனடி தண்டனை கண்டிப்பாக உண்டு