கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2025
பார்வையிட்டோர்: 133 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு விஷயம் மட்டும் நவீனுக்குப் புரியவே இல்லை அதைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியிலும் அவன் ஈடுபடவில்லை. 

“இதற்கு என்றைக்குமே ஒரே தீர்வு கிடையாது. அவரவர் தேவைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்பத் தீர்மானிக்க வேண்டிய விஷயம்”, என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வான். 

அதுதான் வெளிநாட்டு மோகம்! 

உயர்நிலை நான்கிலேயே இதுபற்றிச் சக மாணவர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். புகுமுக வகுப்புக்குச் செல்லத் திட்டமிடும்பொழுதே எந்தெந்த வெளியூர்ப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லலாம் என்பதையும் சேர்த்துத் திட்டமிட்டு விடுகின்றனர். பெற்றோருக்கு நிதி வசதி இருக்கிறதோ இல்லையோ! பிள்ளைகள் தங்கள் வெளியூர்க் கல்வியைத் தொடரப் பல வழிகளை ஆராயத் தொடங்கிவிடுகின்றனர்; வெளியூரிலேயே தங்கிவிடவும் திட்டமிடுகின்றனர். 

“ஏன் நம் உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களுக்கு என்ன குறை?” என்று கேட்டால், 

“அதுல இடம் கிடைச்சாத்தானே.. நமக்கெல்லாம் வெளியூர்ப் பல்கலைக்கழகந்தான் பொருந்தும்…” 

“ராமு சொல்றது ரொம்பச் சரி… அதிலும் சில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்ல.. நல்ல சுவாரசியமான பாடத்திட்டங்கள் இருக்கின்றன… படிக்கிற பளுவும் குறைவு… மிக முக்கியமா, சில பாடங்களுக்கு ஒரு வருஷம் வரைக்கும் ‘கிரடிட் எக்ஸம்ஷன்’ கொடுக்கிறாங்க.. அப்படின்னா, குறைஞ்ச வருஷத்துல ‘டிகிரி’ யை முடிச்சுடலாம் .”, இன்னொரு மாணவரின் அங்கீகரிப்பு. 

“எனக்குத் தெரிஞ்சு சில பேர் இங்கேயே ‘டிஸ்டன்ஸ் டிகிரி’ படிக்கிறாங்க, ஆனால், கடைசி வருஷத்துல மட்டும் அங்கே போய்ப் படிச்சு முடிக்கணும்.. அதிலும் ‘டிப்ளோமா’வை முடிச்சவங்களுக்கு இன்னும் குறைஞ்ச வருஷத்துலேயே ‘டிகிரி’யை முடிச்சுடலாம்! ” அடுத்த நண்பரின் பங்களிப்பு இது. 

இதுதான் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை மேற்கொள்ளத் துடிக்கும் மாணவர்களின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டினால், கிடைக்ககூடிய பாடம்; படிப்பு. 

பல்கலைக் கழக வாழ்க்கையில் முன்பு நடந்த இந்த உரையாடல்களை நவீன் இன்றளவும் மறக்கலில்லை. இப்பொழுது எல்லாரும் வெவ்வேறு இடமாகப் பிரிந்துவிட்டாலும் சிலர் நவீனைப் போல் வெளியூரிலேயே வேலை செய்துகொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். 


“என்ன இங்கே உட்கார்ந்திருக்கீங்க.. குமார் எங்கே?”, என்று வினவியபடியே வந்தாள் காந்தா. 

“அதோ அங்கே கடலோரத்துல விளையாடிக்கிட்டிருக்கிறான்..” 

“சாப்பாடெல்லாம் அதோ அங்கே அடுக்கி வச்சிருக்கேன்.. வேணும்னா போய்ச் சாப்பிடுங்க.. வெறும் ‘சேன்விச்’ மட்டுந்தான் கொண்டு வந்திருக்கேன்..” 

“அது போதும்..” 

“ம்.. ஆஹா.. கடற்கரைக் காற்று ரொம்ப இதமா இருக்குதுல்லே..” 

“ஆமாம்..” 

வார இறுதி நாள்களில், இப்படி வெளியே குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிப்பது நவீனுக்கு வழக்கம். அதுவும் இந்தக் கடற்கரைக்கு வருவது அவன் குடும்பத்தினருக்கு அலாதி விருப்பம். வாரத்தில் ஒருமுறையாவது இங்கே வந்து பொழுதைக் கழிக்கா விட்டால் அந்த வாரத்தில் எதையோ இழந்ததுபோல் அவர்களுக்குத் தோன்றும். பலர் இங்கே அலையாடல் செய்வது வழக்கம். சிறியோர் முதல் பெரியோர் வரை இந்தக் கடற்கரைக்குக் கூட்டங்கூட்டமாக வருவார்கள். ஒருநாள் பொழுதைக் கழிப்பார்கள். கையோடு சிற்றுண்டியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள். 

“என்ன இன்றைக்குக் கடலுக்குப் போய்க் குளிக்ககலியா?… வந்ததிலிருந்து பார்த்துக்கிட்டிருக்கேன்.. ஒரு மாதிரியா இருக்கீங்க?..” 

“ஒண்ணுமில்லே காந்தா… நேற்று அம்மாகிட்டே பேசுனேன்..” “மாமாவுக்குத் திரும்பவும் பிரச்சினையா?…” 

“ஆமாம், அப்பாவுக்கு இதய அறுவைச் சிகிச்சை செஞ்சே ஆகணும்னு டாக்டர் சொல்றாங்களாம்.. வேறே வழியே இல்லையாம்..” 

“’பை பாசா?’… ஆனால், அப்படிச் செஞ்சாலும் ஆபத்துதானே.. மாமா இதயம் ரொம்பப் பலகீனமாயிருக்குதே..” “ஆமாம் காந்தா, செஞ்சாலும் ஆபத்துதான், செய்யா விட்டாலும் ஆபத்துதான்… அதுதான் அம்மா ரொம்பக் கவலையாக இருக்காங்க..”

“போன மாசந்தானே போய்ப்பார்த்துட்டு வந்தோம்.. மாமா நிலைமை சீரா இருக்குதுன்னு டாக்டர் சொன்னாரே..” 

“ம்.. அப்பாவுக்குத் திடீர்னு என்ன கவலையோ..” 

பெற்றோரை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்வதால் இத்தகைய அசெளகரிங்கள் ஏற்படத்தான் செய்யும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்தான் நவீன். வெளியூருக்குச் சென்று வேலை செய்வதில் அவனுக்கு அவ்வளவு விருப்பமில்லை. ஆனால், தான் படித்த ரசாயனப் பட்டப்படிப்புக்குத் தகுந்த வேலை உன்ளூரில் கிடைக்காததால்தான், வேறு வழியின்றி இப்பொழுது இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் தங்கி வேலை செய்கிறான். ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் இப்பொழுது வெளியூர் வாழ்ககை அவனுக்குப் பிடித்துவிட்டது. 


“வெளியூருக்குப் போறதுக்கு முன்னாலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுப் போ… இல்லாட்டிபோனா கல்யாணங்கிற எண்ணமே உனக்கு வராது.. என்ன புரியுதா?” 

தாயின் கட்டளை இது. 

“அம்மா சொல்றதும் சரிதான்.. எனக்கும் உடம்பு சரியில்லே.. அடிக்கடி நெஞ்சு வலி வந்துகிட்டிருக்கு.. செய்யவேண்டியதைச் சீக்கிரமா செஞ்சா நல்லது..” 

தந்தையின் பங்களிப்பு இது. 

“ஏம்பா இப்படியெல்லாம் பேசுறீங்க.. அப்படின்னா இந்த வெளியூர்ப் பயணம் எனக்கு வேண்டாம். உள்ளூரிலேயே வேலையைத் தேடிக்கிறேன். கல்யாணம் எல்லாம் இப்போ வேணாம்…முதல்லே அக்காவுக்குப் பாருங்க..” 

“பார்க்காமலா இருக்கிறோம்.. அவள்தான் கல்யாணமே வேண்டாம்னு ஒத்தக்கால்லே நிக்கிறாளே… உனக்கு வெளியூருலே வேலை கிடைச்சது பற்றி நாங்க ஒண்ணும் சொல்லலே.. ரொம்பக் கஷ்டப்பட்டுக் கிடைச்ச வேலை வாய்ப்பை நழுவ விடாதே.. ஆனால், ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுப் போ..” 

“வெளியூருக்குப் போறதுக்கு முன்னாலே இரண்டு வருஷம் இங்கேயே தங்கி வேலை செஞ்சுட்டுத்தானே போகணும்?..” 

“ஆமாம்பா” 

“அப்புறம் என்னா? அதுக்குள்ளே கல்யாணத்தைப் பண்ணிக் கிட்டுப் போ…”, என்று தந்தை வற்புறுத்தினார். 

பெற்றோரின் ஆசையையும் அக்காவைப் பற்றி அவர்கள் படும் துயரத்தையும் நவீன் நன்கு அறிவான். முப்பது வயதைக்கடந்தும் கல்யாண ஆசையே இல்லாமலிருக்கும் அக்காவிடம் பல முறை அவன் இது பற்றிப் பேசிப் பயனில்லாமல் போய்விட்டது. அப்பா நெஞ்சு வலிக்காரர். அதனால், வேறு வழியின்றிக் கல்யாணத்துக்குச் சம்மதித்தான் நவீன். பெற்றோரின் ஆசையைப் பூர்த்தி செய்வதே அவன் முதல் கடமை. 


வெளிநாட்டு மோகம் நவீனுக்கு ஆரம்பத்தில் துளிகூட இல்லையென்றாலும் பிறகு அது விஸ்வரூபமாக உருவெடுத்தது. கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் மனம் உள்ளூர்ப் பல்கலைக் கழகத்தையே நாடியது இங்கேயே எல்லா வசதிகளும் இருக்கும்போது ஏன் வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. நம் மாணவர்கள் வெளிநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று படித்து அங்கேயே தங்கக் கடுமையாக முயன்று வருவதுபோல, மற்ற நாட்டு மாணவர்கள் இங்கு நம் நாட்டுக்கு வந்து படித்து இங்கேயே நிரந்திரவாசிகளாக வாழத் துடிக்கிறார்களே! இக்கரைக்கு அக்கரை பச்சையோ என்று நினைத்த காலம் மாறிப்போய் இப்பொழுது வெளிநாட்டு மோகம் அவனையும் பற்றிக்கொண்டது. 

நவீன் வெளியூருக்குப் போய்த் தங்குவதில் அவன் பெற்றோருக்கு அவ்வளவு உடன்பாடு இல்லையென்றாலும், அவனை அவர்கள் தடுக்கவில்லை. அவன் சந்தோஷமாக இருந்தால்போதும் என்று நினைத்தார்கள். குமாரசாமிக்குத் தன் மகன் பட்டதாரியானதில் பெருமகிழ்ச்சி தன் இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளையாவது பட்டதாரியாகக் கூடாதா என்று நெடுங்காலமாக அவர் ஏங்கிக் கொண்டிருந்தது, இப்பொழுதுதான் நிறைவேறியிருக்கிறது. அதுவும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பெற்றோர் பார்த்த பெண்னியே கல்யாணம் செய்துகொள்வதாக நவீன் சம்மதித்தது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘இந்தக் காலத்தில் இப்படி ஓரு பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையா’, என்று சிலர் பேச ஆரம்பித்தனர். அதிரஷ்ட வசமாக நவீனுக்கு ஏற்ற மனைவியாகக் காந்தாவும் அமைந்துவிட்டாள். உண்மையில் இது இறைவன் கொடுத்த வரமே! 

மகன் வாழ்க்கை நல்லபடியாக அமைந்துவிட்டாலும், மகள் சுமதி வாழ்க்கையைப் பற்றிப் பெற்றோர் இருவரும் கவலைப்படத்தான் செய்தனர். ஆனால், அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை அது வேரொரு அதிர்ச்சியில் கொண்டு வந்துவிட்டது! “நவீன், உன் அக்காவைப் பாருடா.. இவளும் ஒருத்தனைக் கட்டிகிட்டு வெளியூருக்குப் போகப் போகிறாளாம்.. அங்கேயே தங்கி விடப்போகிறாளாம்.. இப்படி நீங்க இரண்டு பேரும் வெளியூருக்குப் போயிட்டால்.. நாங்க இரண்டு பேரும் இங்கே இருந்து என்னடா பண்றது?… நீ எங்ககூட இல்லாவிட்டாலும் உன் அக்காவாவது நம்மகூட இருக்கிறாளேன்னு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.. இப்போ அவளும் போயிட்டா எப்படிப்பா?” 

நவீனுக்கு ஒரே அதிர்ச்சி! கல்யாணமே வேண்டாம் என்று மார்தட்டிகொண்டிருந்த அக்காவா இப்பொழுது கல்யாணத்துக்குச் சம்மதித்துவிட்டாள். 

“ஏம்பா கவலைப்படுறீங்க?.. கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த அக்கா இப்பவாவது சரின்னு ஒத்துக்கிச்சே.. அதுவே பெரிய விஷயமில்லையா.. உடனே சரின்னு செல்லுங்கப்பா.. மற்றதைப் பிறகு பேசிக்கலாம்” என்றான் நவீன். 

“இதைத்தான் நானும் உன் அப்பாகிட்டே சொல்லிக் கிட்டிருக்கேன்.. கூட வேலைசெய்ற ஒரு பையனை உன் அக்கா விரும்புறாளாம்.. வெளியூருலே சொந்தத் தொழில் செய்றதுக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்காம்.. அதுதான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியூருக்குப் போறதா திட்டம்..” 

விசாரித்துப்பார்த்ததில், இரண்டு ஆண்டுகளாகப் பழகி வந்த அவர்கள், இப்படி ஒரு வெளியூர் வாய்ப்புக்காகத்தான் இதுநாள்வரை காத்திருந்தார்களாம். நல்ல யோசனைதான். ஆனால், அக்காவுக்கு இப்படி ஓரு வெளிநாட்டு மோகம் இருக்கிறது என்று இப்போழுதுதான் நவீனுக்கே தெரிந்தது. அக்கா மட்டுமில்லை; இப்படிப் பலருக்கு வெளிநாட்டு ஈர்ப்பு இருப்பதை அவன் பள்ளிக்கூட நான்களிலிருந்தே அறிவான் அது மட்டுமில்லை; வெளிநாட்டுத்குச் செல்வதற்காகவே தங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் செய்யும் பலரை அவன் பார்த்திருக்கிறான். படிக்கப்போய்ப் பிறகு நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பிப்பது, வேலை தேடிக்கொண்டு போவது போன்றவை இப்பொழுது அதிகரித்து வரும் போக்கு. அவனும் அதற்கு விதிவிலக்கில்லை. 

நண்பர்கள் முன்பு சொன்னதை அடிக்கடி அசைபோட்டுக் கொள்வதில் அவனுக்கு அலாதி ஆசை. 

“ஆயிரந்தான் இருந்தாலும். வெளியூர் வாழ்க்கை ஒரு தனி வாழ்க்கைதான்டா. என்னதான் அங்கே பிரச்சினைகள் இருந்தாலும், ஏதோ ஒரு விதச் சுதந்திர உணர்வு கிடைக்குது. அது இளையர்களாகிய நமக்குப் புதுத் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்குது..” என்று முன்பு நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்றுணர்ந்தான். 

தன் நிலையைப் பற்றிச் சற்று யோசித்தான். 

ஆரம்பத்தில் வெளியூரில் உணவு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் சற்றுக் கடினமாக இருந்தாலும் வெகு விரைவிலேயே அவை நவீனுக்குப் பழக்கமாகிவிட்டன; காலவோட்டத்தில் பிடித்தும் விட்டன. நண்பர்கள் சொன்னதுபோல், ஏதோ ஒருவித காந்த சக்தியும் சுதந்திரக் காற்றும், மனப் பளு குறைந்த வாழ்க்கைச் சூழலும் அந்த நாட்டில் இருப்பதை அவன் உணர்ந்தான். அவன் மனைவி காந்தா வெகுவிரைவிலேயே எல்லாவற்றையும் பழகிக்கொண்டாள். இதுவரை நண்பர்கள் சொல்லி வந்ததை அனுபவபூர்வமாக அவன் உணரத் தொடங்கினான். 

இரண்டு ஆண்டுகள் மட்டுமே வெளியூரில் தங்க வேலை இடத்திலிருந்து அனுமதி கிடைத்திருந்ததால், அதை மேலும் ஈராண்டுக்கு நீட்டிப்பதற்கு அனுமதி கேட்டான் நவீன். அனுமதி கிடைத்தது. உடனே அந்த நாட்டிலேயே நிரந்தரவாசி தகுதியைப் பெறுவதற்காகவும் விண்ணப்பித்தான். ஆனால், அவன் கவலை யெல்லாம் பெற்றோரைத் தனியாகவிட்டு வெகு தூரம் இருப்பதுதான். 

“அதனாலே என்னப்பா…உங்க சந்தோஷந்தான் எங்களுக்கு முக்கியம்… அதுதான் இரண்டு பேரும் அடிக்கடி எங்களை வந்து பார்த்துட்டுப் போறிங்களே.. அதுபோதும்…” என்று அம்மா சொன்னதைக் கேட்டுச் சற்று ஆறுதல் அடைந்தான் அவன். 

“நாங்கெல்லாம் எங்கும் போக முடியாதுப்பா… வயசாயிடுச்சு எங்களுக்கு இதுதான் வீடு… கடைசிவரைக்கும் நாங்க இங்கேயேதான் இருப்போம்.. உங்களுக்கெல்லாம் சிறு வயசு.. மற்ற நாடுகளுக்குப் போய் வேலை செஞ்சி அங்கேயே தங்க நினைப்பீங்க.. தப்பில்லே.. ஆனால், இந்த நாட்டையும் கொஞ்சம் நெனச்சுப்பார்த்துக்குங்க… இங்கே என்ன குறைச்சல் உங்களுக்கு.. எல்லா வசதிகளும் இருக்குதே.. வேலை, பிள்ளைங்க படிப்பு, சட்டத்திட்டங்கள், சுகாதாரம் எல்லாந்தான் இங்கே இருக்குதே.. எந்த நாட்டுலேதான் பிரச்சினை இல்லே.. எல்லா நாட்டிலும்தான் பிரச்சினை இருக்குது. . ஆயிரந்தான் இருந்தாலும் இது நீங்க பிறந்த நாடு.. நீங்க படிச்சு வளர்ந்த நாடு… அதை எப்போதுமே மறக்காதீங்க…” என்று அப்பா சொன்னது, அதோ அந்த அலைகள் உருண்டோடி வருவதுபோல் அவன் சிந்தனைக் கூட்டுக்குள் ஓடிவந்துகொண்டிருந்தது. 

“சரிங்க.. அப்போ மாமாவைத் திரும்பவும் போய்ப் பார்த்துட்டு வருவோமா?..” 

காந்தாவின் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிந்தனை கலைந்தான் நவீன். 

“போறது நல்லதுதான்னுதான் நானும் நினைக்கிறேன்…” 

“சரி கிளம்புவோம் வாங்க…” 


“உங்க அப்பாவுக்குத் திடீர்னு இதயத் துடிப்பு ரொம்ப மோசமா போயிடுச்சு.. பெரும்பாலான ரத்த நாளங்களின் அடைப்பினாலே, இதயத்துக்குப் போதிய ரத்தம் போக முடியலே.. அதனாலதான் உடனே அவருக்குப் ‘பை பாஸ்’ ஆறுவைச்சிகிச்சைக்கு நாங்க பரிந்துரைசெஞ்சோம்.. நீங்கெல்லாம் அதற்கு ஓப்பதல் அளிச்சாத்தான் நாங்க இந்த ஆறுவைச்சிகிச்சையைச் செய்ய முடியும்… உங்களுக்கு நல்லாத் தெரியும் இது ரொம்ப ஆபத்தான அறுவைச் சிகிச்சைன்னு.. எங்களுக்கு வேறே வழியில்லை, மிஸ்டர் நவீன்.. நினைவில வச்சுக்குங்க. உங்க அப்பா அடுத்த சில ஆண்டுகளுக்கு நல்ல தரமான வாழ்க்கை வாழணும்னா, இப்போ இந்த அறுவைக் சிகிச்சையைச் செஞ்சாதான் நல்லது” 

டாக்டரின் பரிந்துரை ஏற்கப்பட்டது. 

தெய்வாதீனமாக் ஆபத்தான அந்த அவைச் சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. 

“நவீன், நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே.. உன் அப்பாவுக்கு உங்களையெல்லாம்விட்டுப் பிரிஞ்சிருக்க முடியலே.. பேரப் பிள்னையோட கொஞ்சி மகிழ அவருக்கு ரொம்ப ஆசை அவரு ரொம்ப ஏங்கிப்போயிட்டாரு.. இதனாலேதான் அவருடைய நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு.. நீங்கல்லாம் அவர் பக்கத்துல இருந்தா அவருக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. அதனால, கொஞ்ச நாளைக்கு நீங்கெல்லாம் எங்களோட தங்கியிருங்களேன்..” 

கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு அம்மா சொல்லும்போது நவீனுக்கு ஏதோ ஒருவிதக் குற்ற உணர்வு மேலிட்டது. அம்மாவின் நியாயமான கோரிக்கைக்கு அவனால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. 

“சரிம்மா, அப்பா குணமாகிறவரைக்கும் நாங்க இங்கேயே கொஞ்ச நாளைக்குத் தங்குறோம்…” 

“அத்தை, மாமா குணமடைஞ்ச பிறகு, அவரும் நீங்களும் எங்களோடு வந்து இருங்களேன்… இங்கே இரண்டு பேரும் எப்படித் தனியா இருக்கப்போறீங்க?” யோசனை கூறினாள் காந்தா. 

“அது சரிதாம்மா, ஆனால், அவரு ஒத்துக்கணுமே… அவருக்கு இந்த நாட்டைவிட்டு எங்கும் தங்கப் பிடிக்காது… அதுவும் இந்த நிலையிலே அவருக்குத் தூரப் பயணமெல்லாம் ஒத்துவராது…”

“அப்படின்னா கொஞ்சம் குணமான பிறகு முதல்லே ஒரு வாரம், இரண்டு வாரம்போல வந்து தங்கட்டும்.. ஊரைச்சுற்றிப் பார்க்கட்டும், பிறகு மெல்ல மெல்ல அப்பாவுக்குப் பிடிச்சுப் போயிடும்..” 

“எனக்கு என்னவோ, உங்க அப்பா இதுக்குச் சம்மதிப் பாருன்னு தோணலே… அப்பாவோட பிடிவாதம்தான் உனக்குத் தெரியும… நீங்க ரெண்டு பேரும் அங்கேயே நிரந்தரமா தங்குறதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்.. இருந்தாலும் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நாங்கள் ரெண்டு பேரும் உயிரோடு இருக்கிற வரைக்குமாவது எங்களோட இருங்களேன்… உன் அக்கா மாதிரி நீயும் முடியாதுன்னு சொல்லிடாதேப்பா…”, அதுவரையில் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்த் துளிகள், கனம் தாங்காமல் கன்னங்களில் வழியத் தொடங்கின. 

நவீனும் காந்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அம்மாவின் பேச்சைக் கேட்டு வாயைடைத்துப்போய் நின்றனர். வேறு வழியின்றிச் சம்மதித்தனர். ஆனால், ஏனோ தெரியவில்லை வெளிநாட்டு நிரந்தரவாசத் தகுதியை மட்டும் அவர்களால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்தில் புரியாத புதிராக இருந்த விஷயம் இப்பொழுது தெள்ளத் தெளிவாக விளங்கியது நவீனுக்கு. 

வெளிநாட்டு மோகம் செய்யும் மாயமோ?

– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *