மொட்டை கடுதாசி
“தாத்தா! இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டுவிழா நடக்கப்போகுது! நீங்க வரணும். சிறப்பு விருந்தினராய் கலெக்டர் மஹாராணி வரப்போறாங்க” என்று பேரன் நந்து சொன்னதும் திகைத்தார் வாலீஸ்வரன்.

“கலெக்டரம்மாவுக்கு பதவிக்கு ஏத்த பெயரா இருக்கேடா நந்து! சக்கரை வியாதியில் கண்பார்வை இந்த அறுபது வயசில் மங்கிப் போய் விட்டதால் அந்த கலெக்டரம்மா படத்தைக் கூட என்னால் சரியாய் பார்க்க முடியாது. நேரில் ஓரளவு கண்ணாடி போட்டதால் பார்க்க முடியும்.” என்றார் வாலீஸ்வரன்.
பள்ளி அருகாமையிலிருந்ததால் தாத்தாவும் பத்து வயதுப் பேரன் நந்துவுமாக நடந்து செல்ல ஆயத்தமானார்கள்.
போகிற வழியில் ஒரு பெரிய சிவப்பு நிறத்த பால்பெட்டியைப் பார்த்து கேட்டான் நந்து.
“ஒரு காலத்தில் இந்த தபால்பெட்டி தான் எல்லார் குடும்பத்துக்கும் பாலமாய் இருந்ததாம் நேத்து தபால்பெட்டி பற்றி க்ளாஸ்ல டீச்சர் நெறய சொன்னாங்க” என்றான்.
தபால்பெட்டியை நீண்ட நாளைக்குப் பிறகு அருகில் நின்று பார்த்த வாலீஸ்வரனுக்கு இதே போல் தனது கிராமத்து சிவப்பு தபால்பெட்டியில், தான் காதலிப்பதாய் சொல்லியும் பதில் தராமல் தன்னைக் கடந்து போன பங்கஜவல்லியின் மீது அவதூறாய் ஒரு மொட்டைக்கடிதம் எழுதிப் போட்டு அதனால் அவள் பள்ளிப்படிப்பே நின்று போய் ஊரைவிட்டு குடும்பத்தோடு அவள் சென்றது நினைவிற்கு வந்தது.
42 வருடங்கள் இருக்குமா!
அப்போது வாலீஸ்வரன் ப்ளஸ் டூ படித்துக்கொண்டு இருந்தான்.பங்கஜவல்லிக்கு பதினைந்து வயது. தளதளவென தக்காளிப் பழமாய் இருப்பாள். உயரும் நல்ல உடல்வாகும் கொண்ட அவள் மீது பார்த்ததும் காதல் வந்துவிட வாலீஸ்வரன் ஒரு நாள் அவள் பள்ளிவிட்டு வரும் போது அவள் முன் போய் நின்றுகொண்டு ’ஐ லவ் யூ’ என்றான். அவள் பதிலே சொல்லவில்லை.முகம் சிவக்க வீட்டிற்கு ஓடிப்போய் விட்டாள்.
வந்த கோபத்தில் அவளைப்பற்றி அவதூறாய் கையெழுத்து போடாமல் கோணல் எழுத்தில் ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அவள் வீட்டு முகவரிக்கு அனுப்பிவிட்டான்.
ஒரே வாரத்தில் அவள் குடும்பம் ஊரை விட்டு ஓடிவிட்டது. காற்றுவாக்கில் பங்கஜவல்லி சீக்கிரமே தான் தூக்குப் போட்டு சாகப்போவதாய் சொன்ன செய்தி வாலீஸ்வரன் காதுக்கும் எட்டியது.
வாலீஸ்வரனுக்கு மனம் வேதனையில் மூழ்கிவிட்டது..
அதிலிருந்து தபால்பெட்டிப்பக்கம் அவன் போனதே இல்லை.
அதற்கு தண்டனையாகத்தான் ஒரே பையன், விட்டல் பிறந்ததும் தன் மனைவியை கடவுள் பறித்துக் கொண்டார் என வாலீஸ்வரன் எண்ணி பெருமூச்சு விடுவார்.
பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் முடிந்து எல்லோரும் போய்விட வாலீஸ்வரனும் புறப்பட இருந்தபோது, “கலெக்டரம்மா உங்களோட பேசணுமாம் அந்த ரூமுக்கு வாங்க” என ஒரு பணியாள் அவரை அழைத்துப் போனான்..
தனி அறையில் மங்கலான பார்வையுடன், ”வணக்கம் கலெக்டரம்மா”என கை குவித்து நின்றார் வாலீஸ்வரன்.
கலெக்டர் மெல்ல நடந்து வாலீஸ்வரன் அருகில் வந்தவள் “வாலீ ! என்னைத் தெரியலையா? நான் உன் பங்கஜா … அதே பங்கஜவல்லி. அன்னிக்கு நீ ஐலவ் யூ சொன்னதும் வெட்கமாய் போய் விட்டது.. ஒரே சந்தோஷம்.. இரண்டொரு நாளில், நான் என் விருப்பம் சொல்ல, தயாராய் இருந்தேன். அதுக்குள் ஒரு மொட்டைக் கடிதம் தபாலில் வந்தது. என்னைப் பற்றி அவதூறாய் எழுதி இருந்தது. அவமானம் தாங்கல. நாங்க ஊரை விட்டுக் கிளம்பிட்டோம். முதலில் தூக்குப்போட்டு சாகத்தான் நினைத்தேன். அப்புறம் யாரோ அபாண்டமாய் எழுதின கடிததுக்கு நான் ஏன் சாகணும், ஒரு மஹாராணியாய் வாழ்ந்து காட்ட வைராக்கியம் வரவும் பெயரையும் மஹாராணி என்று மாத்திட்டேன், படிச்சேன், கலெக்டரானேன். ஆனால் கல்யாணம் பண்ணிக்கல! வாலி.. மனசு ஒரு தடவை ஒருத்தரிடம் தான் காதல் கொள்கிறது! ஆனா விரும்பினவரோடு தப்போ, தவறோ மானசீகமாய் குடும்பம் நடத்தறேன். அவரை இப்போ நேரிலும் பார்த்து விட்ட திருப்தியில் இருக்கிறேன்” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
வாலீஸ்வரனுக்கு அவளைப் பார்க்க முடியாமல் கண்ணீல் நீர் திரை போட்டுக்கொண்டே இருந்தது.