மையத்து வீடு




ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார்.
இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே இல்லை. அந்தளவுக்கு மக்களிடையே அறிமுகமானவர் தான் இல்யாஸ் காக்கா.
மரணவீடு, திருமணவீடு, வருத்தக்காரர் வீடு என்று எங்கு வேண்டுமானாலும் காக்காவைக் காணலாம். அதனால் இல்யாஸ் காக்கா ஊரில் எல்லோருக்கும் பரிச்சயமானவர்.
ஊரில் பெரியவர் முதல் சிறியவர் வரை இல்யாஸ் காக்கா என்றே அழைப்பர். காய்ச்சல் வந்து ஒரு கிழமையா விடல, என்றபடியால் வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்குப் போகவும் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கி அனுப்பிட்டாங்க. அங்குக் கொண்டு போய் மூன்று நாட்களில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்து விட்டார்.
அவரது ஆறு பிள்ளைகளில் ஒரேயொரு பெண் பிள்ளையான அனீஸாவைக் குவைத்தில் தொழில் செய்யும் சொந்த ஊர் பெடியன் கேட்கவும், வெளிநாட்டில் தொழில் செய்பவன், நல்ல சம்பளம், பிள்ளையை வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போவதாகவும் சொல்றாங்க, எங்க இருந்தாலும் பிள்ளை நல்லா இருந்தால் சரி, என்று வெளிநாட்டில் எஞ்சினியராக தொழில் செய்பவருக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டார்.
இல்யாஸ் காக்காவுக்கு சுகமில்லை என்று வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலிருந்து அம்புலன்சில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கி அனுப்பிய உடனயே சகோதரர்கள் தங்கைக்கு உடன் தொலைபேசியில் தகவல் சொல்லியிருந்தார்கள். உடன் வருகிறேன் என்று சொன்னவள், அவர் மரணித்த இன்று காலைதான் கொழும்புக்கு வந்திறங்கினயாம். தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் ஜனாஸா வீட்டில் தகவல் சொல்லப்பட்டது.
அவர்களின் வரவை எதிர்பார்த்துத்தான் ஜனாஸாவை வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் இப்ப வந்துவிடுவார்கள் என்று மோதினாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“ஜனாஸாவை குளிப்பாட்டி கபன் செஞ்சி தாமதப்படுத்திக் கொண்டிருக்காமல் ஜனாஸாவைத் தூக்குங்கள்” மோதினாரின் குரல் மீண்டும் ஒலித்தது.
“கொஞ்சம் பொறுங்கமோதினார். இந்தா தம்புள்ளயால வந்திக்கிட்டு இருக்காங்க” ஒருவரது சத்தம் வந்தது”, தம்புள்ளையில இருந்து ஊருக்குவாறத்திற்கு குறைந்தது மூன்று மணித்தியாலயமாவது செல்லும். ஜனாஸாவைத் தூக்குங்க. இறைவனின் நாட்டமிருந்தால் பள்ளிக்குப் போகக்குல்ல அவங்களும் வந்தா பார்க்கட்டும்” என்று சொல்லி மோதினார் முன்னோக்கிச் சொல்ல ஜனாஸாவைத் தூக்கிக் கொண்டு அவருக்குப் பின்னால் உறவினர்களும் ஊரவர்களும் சென்றனர்.
இல்யாஸ் காக்காவுக்கு அனீஸா ஒரே ஒரு பெண் பிள்ளை என்ற படியால் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார். அவள் எதைக் கேட்டாலும் தனது கஷ்டம் எதையும் வெளிக்காட்டாது வாங்கிக் கொடுத்து விடுவார். இதனால் இலியாஸின் செல்லம் என்றுதான் குடும்பத்தாரும் அயலவர்களும் அவளை அழைப்பது வழக்கம்.
இல்யாஸ் காக்காவுக்கு வறுமை இருந்தாலும் தனது ஆண் பிள்ளைகளுக்கு கஷ்டத்தைக் காட்டினாலும் தனது பெண் பிள்ளைக்கு எந்தவித கஷ்டமும் காட்டாமல் வளர்த்தார். அதனால் அனீஸாவுக்கு… கார் மாடி வீடு வேலைக்கு ஆட்கள் என்று இருக்கவேண்டும் தான் கலியாணம் பண்ரவர்ரு நல்ல சம்பளம் எடுக்கிறவரா பெரிய உத்தியோகத்தில இருக்கிறவாரா இருக்கணும் என்ற கற்பனையிலயே வாழ்ந்து வந்தாள்.
வெளிநாட்டில் என்ஜினிராக கடமையாற்றும் ஒருவரின் வரண் வரவும் அனீஸாவுக்கு கைகால் புரியவில்லை. தான் ஆசைப்பட்ட மாதிரி வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்றுதான் பார்த்தாலே தவிர வேறு எதைப்பற்றியும் அவள் சிந்திக்கவில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளையை முடிப்பதற்கு இல்யாஸ் காக்காவுக்கு விருப்பமில்லை. நாளைக்கு ஒரு நல்லது கெட்டது என்றா என்ன செய்ற! என்ட ஒரே ஒரு பிள்ளையைக் கண்காணாத இடத்துல விட்டுவிட்டு என்ன செய்ற? என்டெல்லாம் யோசித்து அந்த சம்மதத்தைக் தட்டிக் கழிக்கவே விரும்பினார். ஆனால் மகளின் பிடிவாதமும் கெஞ்சலும்தான் அவர் சம்மதிப்பதற்கு காரணமாயிற்று.
“ஏன் வாப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் என்டுமட்டும் யோசிங்களம். நான் என்ன, ஊர் பேர் தெரியாத யாரையுமா கலியாணம் முடிக்கப் போறன் இல்லையே.. நம்மட அடுத்த தெருவுல குடியிருக்கிற இளைய நானாட கூட்டாளியத்தானே முடிக்கப் போறன் இதற்குப் போய் இப்படி அலட்டிக்கிறீங்க.
எனக்கெண்டு யார் இருக்கா உம்மாட முகத்தையே தெரியாத எனக்கு, தாய்க்குத் தாயாகவும் தகப்பனுக்குத் தகப்பனாகவும் இருந்து என்னை வளர்த்து இருக்கீங்க. எங்கட நலன பெரிதா மதித்தே வாழ்ந்தீங்க. நான் புறந்த இடத்தில உம்மா மெளத்தாகினத்திற்குப் பிறகு, எங்களவ வளர்க்கிற கஷ்டம் எண்டு வேறு திருமணம் முடிக்காம பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தநீங்க. இப்படிப்பட்ட உங்களப் பிரிஞ்சி போறது எனக்கு மட்டும் என்ன சந்தோசமா? வாழ்க்கையில நல்லா இருக்கணும் பொருளாதார ரீதியாக கஷ்டமில்லாமல் இருக்கலாம் என்றதற்காக இந்தத் திருமணத்திற்கு ஆசப்படுறன்”
தனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு தான் என்ன சொன்னாலும், தனது மகளின் முடிவில் மாற்றம் வராது என்று தீர்மானித்தவராக…
“இஞ்சப்பாரும்மா நீ உட்டுட்டுப் போன பிறகு என்ட மையத்திற்கு வந்து தலமாட்டில் வந்து கத்துவதால என்ன பலன்? உன்னப் பிரிஞ்சி நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. உனக்குத் திருமணம் என்டா அது நம்மட ஊர்ல தான் முடிக்கிற. நான் எப்படியும் உன்ன வந்து பாரத்துக்கணும். அதான் என்னட விருப்பம். நீ எதக் கேட்டாலும் வாப்பா வாங்கித் தந்திருக்கன். இத மட்டும்தான் வாப்பா உனக்கிட்ட கேட்கன், என்ன செய்வியா? என்று அவளின் முகத்தை பார்த்தபடியே கேட்டார்.
“ என்ன வாப்பா நீங்க சின்னப் பிள்ளை மாதிரி கதைக்கிறீங்க. நான் ஊருல ஒருத்தர திருமணம் முடித்ததற்குப் பிறகு, அவர் தொழில் நிமித்தம் குடும்பத்தோட வெளிநாட்டுக்குப் போகணும் என்டு சொன்னா மாப்பிள்ளையை விட்டுப்போட்டு இரி என்டா சொல்லப் போறீங்க? இல்லையே! அப்ப இது திருமணத்துக்கு முதலே நடக்குது என்டு நினைத்துக் கொள்ளுங்களம்..” என்று சொல்லி வாப்பாவின் பதிலுக்காய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். “இனி நான் என்ன சொல்லியும் நீ ஏத்துக்கப் போறதில்ல. உன்ட வாழ்க்கையை நீயே தீர்மானிக்கிற வயசு. நீ என்ன முடிவு எடுத்தாலும், நான் அதற்கு சம்மதம் தான்” என்று கூறி தேம்பித் தேம்பி அழுகிறார்.
“என்ன வாப்பா நீங்க சின்னப்பிள்ள மாதிரி கத்துற! உங்களுக்கு ஏதும் என்டா உடனே இஞ்ச நிக்கமாட்டேனா? என்ன சின்ன வருத்தம் என்டாலும் எவ்வளவு கெதியா வரமுடியுமோ அவ்வளவு கெதியா உங்களுக்கு முன் வந்து நிப்பன் வாப்பா. சந்தோசமாக இந்தக் கலியாணத்திற்கு ஒத்துக்குங்க வாப்பா” என்று சொல்லித்தான் கனவு கண்டுகொண்டிருந்த திருமணத்திற்கு சம்மதம் எடுத்துக் கொண்டாள்.
திருமணம் முடித்து இரண்டு வாரத்தில் வெளிநாட்டுக்குப் போனவள் இரண்டு வருடம் கழித்து இல்யாஸ் காக்காட மையத்துக்குத்தான் வந்திருக்காள்.
ஜனாஸாவை வாழைச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்துவிட்டு, அஸர் தொழுகையின் பின்னர் மையத்து வீட்டுக்கு ஜனாஸாவோடு சென்றவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் வருகை தந்து கொண்டிருந்தனர்.
மரணவீட்டில் நின்றவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இல்யாஸ் காக்காவின் நெருங்கிய நண்பர் முஜாஹித் “இன்னும் அனீஸாவும் அவட மாப்புள்ளயும் வரலாயா” என்று கேட்டார்.
அங்கு நின்ற இல்யாஸ் காக்காவின் சகோதரியின் மகன் பாஹிம் சொன்ன பதில் முஜாஹித்துக்கு யாரோ தனது தலையில் பொல்லால் ஓங்கி அடித்தது போலிருந்தது.
“பிரயாணம் செய்ததுல அனீஸாட முகம் ஒரு மாதிரியா இருக்காம். அதனால் “பேசியல்” செய்யணுமாம் என்று “பியுட்டிசலுன்”க்குப் போகியிருக்கா. இஞ்ச மையத்து வீடு என்றபடியால் நிறையப் பேரு வருவாங்களாம். அவங்க வரக்குள்ள அவட முகம் அசிங்கமா இருந்தா நல்லாயில்லயாம் என்று போகியிருக்கவாம்.
“வெளிநாட்டு கலாசாரத்துல வாழ்ந்த பெண்ணாச்சே அவள் அப்படித்தான் செய்வாள்” என்றார் அங்கிருந்த ஒருவர்.
“இதுக்கிடையில நம்மட ஊர் பண்பாடுகள மறந்து அவள் முகத்த அழகுபடுத்த பெயித்தாளா எல்லாம் பணம் படுத்துறபாடு” என்றார் மற்றவர்.
இல்யாஸ் காக்கா, இல்லாத ஒரு மனிசன் தான், அவர்ர மையத்த அடக்கம் பண்றத்துக்கு என்டாலும் இவள் கொஞ்சப் பணத்தைக் கொடுத்து மையத்துச் செலவுகளை ஏற்பாடு செய்திருக்கலாம் தானே! சாகக்குள்ள இந்தப் பணத்தையெல்லாம் கட்டிக்கிட்டா போற எல்லாரும் ஆறடி மண்ணுக்குள்ளதானே புதைபடுகிற” என்றெல்லாம் பலவாறு அங்கு நின்றவர்கள் கதைத்துக் கொண்டு நின்றார்கள்.
மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு அனீஸா ஒரு வாகனத்தில் வந்து இறங்கினாள். அவள் முகத்தில் வாப்பா மௌத்தாகினார் என்றதற்கான எந்தச் சலனமும் இல்லாமல், மையத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
அப்போது இல்யாஸ் காக்காவின் நண்பர் முஜாகித் கதைத்துக் கொண்டிருந்தார். “காசி பணத்திற்கு ஆசைப்பட்டவன் இல்ல இல்யாஸ். யார்ரையும் உழைப்பில தங்கி வாழணும் என்டும் அவன் ஒருபோதும் நினைத்ததும் இல்ல. மரணிக்கும் வரை அவன்ட உழைப்பிலயே வாழ்ந்தவன். எங்க அவன்ட ஒரு பிள்ளை சொல்லட்டும், வாப்பாட செலவுக்கு நான் மாதா மாதம் பணம் கொடுத்த என்றடு. அவர்ர எந்தப் பிள்ளையும் சொல்ல ஏலா. ஏனென்டா எனக்குத் தெரியும் என்ட நண்பனப்பத்தி” என்று சற்று உரத்த குரலில் கதைத்துக் கொண்டு போனார்.
முஜாஹித் கதைப்பது அனீஸாவுக்கும் கேட்டது. அந்த வார்த்தைகள் அவரது செருப்பால் அவளுக்கு அடிப்பதுபோல் இருந்தது.