மேன்மைமிகு மேனாள் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 5,577 
 
 

அவள் ஆற்றங்கரையின் ஓரத்தில், கீழே சாய்ந்து கிடந்த ஒரு வேப்பமரக் கிளையின் மேல் மெல்ல சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்வை ஆற்றுப்பக்கம் பாய்ந்தது.

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.

நாற்பத்து நான்கு வயதிலும், ஆற்றின் கழுத்தளவு நீரில் ஒரு சிறுவனைப் போல சிரித்தபடி நீந்தி விளையாடும் அந்த மனிதரை — அவளின் நினைவுகளோடு உயிராய் இன்னும் இணைந்திருக்கும் அந்த இனிய நேசரை பார்த்தபடி அவள் காத்திருந்தாள்.

அவளின் கண்கள், அவர் ஆற்றில் குளித்து கும்மாளம் இட்டபடி செய்யும் சேட்டைகளை பார்த்து ரசித்தபடி , நீரில் அலைந்துகொண்டிருந்தன.

அவள் மனம்,

“அவர் கரையேறும் வரை காத்திருக்க வேண்டும்…
அவரோடு நிறைய பேச வேண்டும்…”

என்று எண்ணியபடி அவர் கரையேறும் வரை, ஆற்றங்கரையில் காத்திருந்தது.

அவள் மீண்டும் ஆற்றின் பக்கம் பார்வையை திருப்பினாள். அவளது நேசத்துக்குரியவர் ஆற்றுப்படித்துறையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் பாலத்தை நோக்கி நீந்தி சென்று கொண்டிருந்தார். அவள் ஆற்றுப்படி துறையில் இறங்கினாள். அங்கே அவரின் ஏழெட்டு துணிமணிகள் துவைப்பதற்காக, நீரில் நனைத்து ஒரு முட்டாக, மேலே இருந்து கீழே இறங்கி செல்லும் நான்காவது படிக்கட்டில் படர்ந்து கிடந்தது.

அவர் குளித்து முடித்து கரையேறுவதற்கு இன்னும் அதிக நேரம் ஆகும் என்பதை அவள் உணர்ந்தாள்.

அப்போது அவளது பாட்டி அவளை கூப்பிட, அவளது திட்டத்தில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து கொண்டு அவள் ஆற்றங்கரையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் சிறிய பாதை வழியே வயல் வரப்புகளில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் தனது பாட்டியை நோக்கி மெல்ல நடந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவர் குளித்து முடித்தார். அடுத்து அவர் எடுத்து வந்த துணிமணிகளை ஆற்றுப் படிக்கட்டில் அமர்ந்து துவைத்தார். எல்லாம் முடிந்தபின் தலை துவட்டினார். உடைகளை மாற்றினார். துவைத்த துணிகளை தனது வாகனத்தில் இருந்த வாளியில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அப்போது—

அவரது பார்வை சற்று நேரத்திற்கு முன்பு அங்கு நின்ற அந்த பெண்ணை ஆர்வத்துடன் தேடியது. அவளைக் காணவில்லை. அவர் முகம் சற்று வாடியது. அந்த இளம் பெண் அவரையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் அவளது முகம் சரியாக தெரியவில்லை.

அவள் யார் என்பது அவருக்கு முழுமையாக புரியவில்லை.

அந்தப் பெண் யார்? அவள் ஆற்றில் குளிக்க வந்தவளா? ஆடு மாடுகளை மேய்க்க வந்தவளா? இல்லை அவரைப் பார்க்க வந்தவளா? அவர் எதையும் இறுதியாய் உறுதி செய்ய முடியாமல் குழம்பிப் போனார். அவர் குழப்பத்தை மடியில் சுமந்தபடி தனது வாகனத்தில் ஏறி தனது வீட்டிற்கு புறப்பட்டார்.

அவர் வீட்டை நெருங்கியபோது வீட்டிற்கு முன்பு உள்ள வேப்பமர நிழலில் ஒரு பெண் அவரது வீட்டையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அவரது பார்வை அவள் மீது நிலைத்தது.

அவர் அவள் அருகே சென்று அவளை உற்றுப் பார்த்தார். சற்று நேரத்திற்கு முன்பு ஆற்றங்கரையில் பார்த்த அதே பெண் தான் அவள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

“ஏய்… நீ ஆர்த்தி தானே?”

அவள் பதில் சொல்லவில்லை.

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்,

அவளின் பெயரை அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதை உணர்ந்த அவளின் உள்ளம் ஆனந்தத்தில் மூழ்கி திளைத்தது.

“இங்க நீ என்னடி பண்ணிட்டு இருக்க? என்ன விஷயம்?”

அவள் இன்னும் மௌனமாய் அவரையே பார்த்தாள்.

“ஏய்… பதில் சொல்லுடி!”

அப்போது அவள் மெதுவாக வாய் திறந்து மென்மையாக பேசினாள்.

“என் மேல உங்களுக்கு இன்னும் அன்பும் அக்கறையும் இருக்குன்னு உங்க குரலிலேயே தெரியுது. அது போதும்… எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனா…அப்போ நான் உங்களை சுற்றி சுற்றி வந்தப்ப ஏன் என்னை விட்டு விலகிப் போனீங்க?”

அவர் சற்று நிதானமாய் சொன்னார்.

“ஏய்.. அப்போ உனக்கு வயசு பதினாறு. அந்த வயசுல வர்றது காதல் இல்ல, அது வெறும் கவர்ச்சிதான். நீ மட்டும் இல்ல… உன்னைப் போல ஏழு பேருக்கும் மேல என்னை காதலிச்சாங்க. உன்னையும் சேர்த்து எல்லாரையும் நான் புறக்கணிச்சேன். காரணம், “ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவியை மாணவியாக மட்டுமே தான் பார்க்கணும். அவர் அந்த மாணவியை ஒருபோதும் மனைவியாக நினைக்கவோ ஆக்கவோ கூடாது” என்பது என்னுடைய அழுத்தமான எண்ணம்.”

அவள் குரல் உடைந்தது.

“நான் மத்தவங்க மாதிரி இல்ல. உங்களை உண்மையா விரும்பினேன். இன்னமும் நான் உங்கள நினைச்சுக்கிட்டே தான் இருக்கேன்.”

“ஒரு ஆசிரியரின் நடை உடை பாவனைகள் பழக்கவழக்கங்கள் இதை பார்த்து அவரிடம் படிக்கும் ஒரு மாணவி அல்லது பல மாணவிகள் அவர் மீது ஆசைப்படலாம். அது இயல்பு. ஆனால் அந்த ஆசிரியர் மனதில் அப்படிப்பட்ட ஆசைகள் துளியும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது அவர் அந்த தொழிலுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“அத பத்தி இப்ப உனக்கு புரிய வைக்க முடியாது. அதுக்கு ரொம்ப நேரம் பேசினால் தான் அது உனக்கு புரியும்! சரிடி, இப்ப உள்ள வாடி. உள்ள போயி உட்கார்ந்து பேசுவோம்”

இருவரும் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்து கூடத்தில் இருந்த நாற்காலிகளில் இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

“சரிடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ ஆத்து பக்கம் வந்திருந்தியா? உன்ன மாதிரியே ஒருத்தி அங்கு ஆத்தங்கரையில நின்னுகிட்டு என்னையே பார்த்துட்டு இருந்தா அதான் கேட்கிறேன்”

“அது நானே தான். 14 வருஷத்துக்கு அப்புறம் உங்கள பாத்ததுல அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உங்க வகுப்புல நான் படிக்கிறப்ப நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படியே தான் இப்பவும் இருக்கீங்க. என்னோட ஆசிரியர் தன்னோட உடம்ப இன்னும் சிறப்பாக கட்டுக்கோப்பா வச்சிருக்கறத பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு”

“அது சரிடி, நான் குளித்து முடித்துவிட்டு வந்து பார்த்தப்ப உன்ன காணோம். நீ எங்க போயிருந்த?”

“எங்க பாட்டியோட நிலம், இங்க ஆத்தங்கரைக்கு பக்கத்துல தான் இருக்குது. பாட்டி வீட்டுல ஒரு பசு மாடு நிக்குது! அதுக்கு புல்லு அறுத்துகிட்டு வர்றதுக்காக பாட்டி என்ன வயலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அப்பதான் நான் உங்கள பார்த்தேன். புல்லு அறுத்து முடித்த பிறகு புல்லுக்கட்ட தூக்கி விடுறதுக்காக பாட்டி என்ன கூப்பிட்டாங்க. அப்புறம் நான் போயிட்டேன்.”

“சரிடி உங்க பாட்டியோட வீடு எங்கடி இருக்கு?”

“இங்கதான் பக்கத்துல ஒரு அஞ்சு தெரு தள்ளி!”

“அப்படியா! சரிடி என் வீடு உனக்கு எப்படி தெரியும்? எப்படி இந்த வீட்ட நீ கண்டுபிடிச்ச?”

அவள் சிரித்தாள்.

“நீங்கதான் வகுப்புல ஒவ்வொரு நாளும் உங்க வாழ்க்கையையே பாடமா சொல்லி இருக்கீங்களே! நீங்க தங்கி இருக்கிறது, காலையில் குளிக்கிறது எல்லாத்தையும் தான் அப்பப்ப வகுப்புல சொல்லிக்கிட்டு இருந்தீங்களே! அத வச்சு தான் நான் உங்க வீட்டை கண்டுபிடிச்சேன்”

“நான் உங்க வகுப்புல வகுப்புல பாடம் நடத்திக்கொண்டு இருந்தப்ப நான் எப்போதும் காலையில மூணு மணிக்கு எந்திரிச்சு புத்தகம் படிப்பேன், தியானம் செய்வேன்னு…சொன்னேன். ஒரு வாரம் கழிச்சு விடிகாலையில் மூணு பத்து மணிக்கு ஒரு பொண்ணு அலைபேசி வழியா என்ன தொடர்பு கொண்டு பேச முயற்சி பண்ணுனா. நான் எடுத்து ஹலோ சொன்னேன். ஆனா அந்த பொண்ணு எதுவும் பேசாம உடனே வச்சுட்டா. ரொம்ப நாளைக்கு அப்புறம் அது நீதான்னு சொன்னாங்க. சரி உண்மையிலேயே அது நீ தானடி?”

“ஆமா அது நான்தான்.”

“ நான் தினமும் விடிகாலைல மூணு மணிக்கு எழுந்திருக்கிறேனா இல்ல சும்மா பொய் சொல்றேனான்னு அப்படி சோதிக்கிறதுக்குதான் பண்ணுனியாடி?”

“நான் அதுக்காக பண்ணல. உங்கள பத்திதான் எனக்கு நல்லா தெரியுமே. நீங்க பொய் எதுவும் சொல்ல மாட்டீங்கன்னு. நான் உங்ககிட்ட “உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு படிச்சு முடிச்ச பிறகு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புறேன். நீங்க என்ன சொல்றீங்க?” அப்படின்னு கேட்கணும்னு தான் நான் நினைச்சேன். ஆனா என்னால கேட்க முடியல.”

“அப்போ எனக்கும் உன் மேல ஆசை இருந்துச்சுடி…”

அவள் கண்கள் ஆனந்த பரவசத்தில் சற்று கலங்கின.

“உள்ளுக்குள்ள ஆசை இருந்தும் ஏன் என்னை விட்டு போனீங்க?”

அவர் மெதுவாகச் சொன்னார்:

“அப்போ…நான் என் பொண்டாட்டியையும் ரெண்டு பிள்ளைகளையும் ஒரே விபத்துல இழந்த துக்கத்துல இருந்தேன்.”

அவள் துடித்தாள்.

“நான் படிச்சு முடிச்ச பிறகு கூட நீங்க வந்து பார்த்திருக்கலாம்…ஏன் வரல?”

“நீ படிச்சு முடிச்ச பிறகு உங்க வீட்டுக்கு வந்து நேரிலேயே பேசலாம்னு நினைச்சேன். ஆனா…அப்ப நீ யாரையோ கூட்டிகிட்டு ஓடிப்போனதாக கேள்விப்பட்டேன்.”

அவள் கண்ணீரோடு சொன்னாள்:

“அது பொய்! எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் என்னையே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒத்த கால்ல நின்னான். அந்த குடிகாரனிடமிருந்து தப்பிக்கிறதுக்கு நாங்க போட்ட நாடகம் தான் அது. அப்ப நான் மதுரைக்கு போய் எங்க பெரியம்மா வீட்டில் இருந்துகிட்டு வேலைக்கு போயிட்டு இருந்தேன்..”

அவர் மௌனமானார்.

“எனக்கு வயசு தாண்டி போச்சுடி…நீ உனக்கு ஏத்த மாதிரி வேற யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்க .”

“அது முடியாது. என்னால உங்களை மறக்கவே முடியல.”

அவள் அழுது கதறினாள்.

அவர் அருகே வந்து அவள் கண்களைத் துடைத்தார்.

“எனக்கும் உன் மேல ஆசை இருக்குடி. ஆனா…காலம் கடந்து போச்சு.”

அவள் தொடர்ந்தாள்:

“உங்க தயாள குணம்…அன்பு…எதிர்பார்ப்பில்லாத உதவி—இதெல்லாம் தான் என்னை உங்க பக்கம் இழுத்தது.”

அவர் கேட்டார்:

“இந்த வயசுலயும் என்ன விரும்புறியா?”

அவள் உறுதியாய் சொன்னாள்:

“உங்க அன்பு போதும். உங்க துணை போதும். ஒரு ஆணுக்கு பெண்ணின் துணையும் ஒரு பெண்ணுக்கு ஆணின் துணையும் அவசியம். நான் முடிவு பண்ணிட்டேன்.”

“என்ன முடிவு பண்ணி இருக்க?”

“இனி நான் இங்கதான் இருக்க போறேன். இன்னமும் நீங்க தனியா இருந்து அவஸ்தப்படுறத என்னால பாத்துகிட்டு இருக்க முடியாது.”

அவர் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ சரி மாமா, வீட்ல அரிசி பருப்பு, காய்கறி எல்லாம் எங்க இருக்குன்னு சொல்லுங்க. நான் இப்ப சமைக்க ஆரம்பிக்கணும். சொல்லு மாமா?”

“ஏய்…நீ என்ன தாலி கட்டுன பொண்டாட்டி மாதிரி பேசுற?”

“நான் மனசால பதினான்கு வருஷமா உங்க பொண்டாட்டியா நினைச்சுகிட்டு தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.”

அப்போது –

திடீரென ஒரு பெரும் சத்தம் விமானப்படை தளத்திலிருந்து வெளிப்பட்டு அந்த வீட்டையே அதிர வைத்தது.

அந்த நொடியில்-

அவள் தன் நெடுநாள் ஏக்கத்தின் தாக்கத்தினால் அவர் அருகில் சென்று அவரை கட்டி அணைத்தாள். கன்னங்களில் முத்தமிட்டாள்.

அந்த அணைப்பு –

காலத்தை மறக்க வைத்தது. அவளின் நீண்ட நாள் காதலை மீண்டும் மீட்டெடுத்தது.

அந்த இரவு-

அமாவாசை இருளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அவளின் மனம் பௌர்ணமி நிலவாய் பளிச்சிட்டபடி ஒளிர்ந்து. கொண்டிருந்தது

அவளின் காதல் – ஒரு குறுங்கதையோ சிறுகதையோ அல்லது குட்டிக்கதையோ அல்ல. அது அவளை என்றும் எப்போதும் பின் தொடரும் ஒரு தொடர்கதையாய் மாறி இமயத்தின் உச்சியை நோக்கி இதமாக நெருங்கிக் கொண்டிருந்தது.

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *