கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 18,147 
 
 

ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள்.

ஊதல் – அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து…. இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக வெறும் விசில் சத்தம்தான் வரும் என்ற நிலைவரும் அளவுக்கு அலுப்பில்லாமல் கர்ம சிரத்தையாக சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கலாம். வேலை மும்முரத்திலோ அல்லது மனம் ஒடிந்துபோன சோகக் கட்டங்களிலோ (கெட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய கெட்டப் பழக்கம். சிறுசிறு தோல்விகளுக்கெல்லாம்கூட தேவதாஸ் ஆக மாறிவிடுவார்கள்.) ஊதிவிடும் புகை மேலே சென்று மேகமாக மாறி மழை பொழியும் அளவுக்கு இவர்கள் செயின் ஸ்மோக்கர்களாக மாறிவிடுவதுண்டு.

உறிஞ்சுதல் – நாசித்துவாரங்களில் ரத்தினத்தையோ மாணிக்கத்தையோ டப்பிடப்பியாக நிரப்பி நாசித்துவாரங்களை நாசமாக்கும் கலை இது! ‘இப்பொழுது தும்மலாம் அல்லது இன்னும் இருபது மணி நேரம் கழித்தும் தும்மலாம்’ என்ற வேதனை கலந்த சஸ்பென்ஸ்!

வானிலை அறிவிப்பைச் சதா வதனத்தில் தேக்கிவைத்துக் கொண்டு இந்தப் பொடி போடுபவர்கள் பக்கத்திலுள்ளவர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். ஊதல் கலை அதிகமாகிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை. உறிஞ்சுதலாகிய இந்தப் பொடி போடும் குடிசைத் தொழில் இருபதாம் நூற்றாண்டில் போஷகர்கள் இன்றி நசிந்து வருகிறது.

கடைசியாக வருவது உமிழ்தலாகிய வெற்றிலை, சீவல், புகையிலை போடும் பழக்கம். பார்ப்பதற்குப் பந்தாவாக இருந்தாலும் இது பழகுவதற்குச் சற்று சிரமமான கலை!

வெற்றிலை, சீவல், புகையிலை போடுவதற்கு வாய் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் குதப்பிய சாற்றை ஊர்பேர் தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல் கண்ணில் பட்ட இடத்தில் (வீட்டின் சொந்தக்காரர் கண்ணில் படாத சமயத்தில்…) துப்பிவிடும் சாமர்த்தியம்! இந்தப் பழக்கத்தில் கொட்டை போட்டவர்கள், வாயில் குதப்பிய வெற்றிலைச் செல்லத்தைத் துப்ப மனமில்லாமல், போட்டவுடன் வந்த காபி, டீ, பிஸ்கட்டை வாயின் மறுஓரம் வழியாகத் தொண்டைக்குக் கொண்டு செல்லும் சாமர்த்தியத்தைக் கண்டு மெய்சிலிர்க்கக் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கிறேன்!

மேலே கூறிய மூன்று வகை கெட்டப் பழக்கங்கள் உடையவர்கள் திடீரென்று ஞானஸ்நானம் பெற்று ஒரு நாள் அதிகாலையில் அவற்றை நிப்பாட்டி…. பின், காலம் முழுவதும் திடமாக அவற்றைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பழுத்த சுமங்கலியாக வாழ்ந்ததுண்டு. ஆனால், மேனரிஸங்கள்’ என்ற தொட்டில், கெட்ட பழக்கத்துக்கு இரையானவர்கள் சுடுகாடு வரை அப்பழக்கங்களைச் சுமந்து செல்வதை நாம் நிதர்சனமாகப் பார்த்திருக்கிறோம்.

ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் இம்மூன்று கெட்டப் பழக்கங்களும் சாதாரணமாக சம்பந்தப்பட்ட ஆசாமியைத்தான் பாதிக்கும். மேனரிஸங்களோ அவர்களுக்கே தெரியாமல் செய்வதால் அவர்களைத்தவிர மற்ற அனைவரையும் எரிச்சலடையச் செய்யும்.

உதாரணமாக, எனது உறவினர் ஒருவருக்குச் சதா சிறுசிறு திவலைகளாக எச்சிலைத் துப்பிக்கொண்டே இருக்கும் மேனரிஸம். அவருக்கு எப்பொழுதும் வாயில் Saliva நயாகரா நீர்வீழ்ச்சியாகக் கொட்டிக் கொண்டிருப்பதாகப் பிரமை! சொல்ல வந்த விஷயம் எவ்வளவுதான் தங்கமலை ரகசியமாக இருந்தாலும், இந்த மேனரிஸத்தால் வாசற்படிகளில் நின்று கொண்டே சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.

பிச்சைமூர்த்தி என்ற பெயர் கொண்ட என் நண்பர் ஒருவரை ஆபீசில் எச்சை மூர்த்தி என்று அழைப்பதாகக் கேள்வி!

அழுகையா… கொட்டாவியா… தூக்கமா..? எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி தும்மல் மேனரிஸம்!

“என்ன ஆனாலும் பரவாயில்லை, தைரியமாகத் துப்பாமல் இருங்கள்” என்ற வைத்தியர் ஆலோசனைப்படி எச்சிலைத் துப்பாமல் அடக்க நினைத்தவர், பத்தாவது நிமிடத்தில் வாய் உப்பி மூச்சுத் திணறிக் குடம் எச்சிலைக் கொப்புளித்தார்.

உறவினருக்கு எச்சில் துப்புவது மேனரிஸம் என்றால் எனது நண்பன் கணேசனுக்கு நகம் கடிப்பது நித்யகர்மா. எப்பொழுதும் வாயில் இரு கை விரல்களையும் பதித்து நகங்களைக் கடித்தபடி கணேசன் மோர்சிங் வாசிக்கும் அபிநயம் பிடித்துக் கொண்டிருப்பான். யாரும் இல்லாத சில சமயங்களில் கணேசன் கை விரல் நகங்களைக் கடித்து அலுத்துப்போய் மாறுதலுக்குக் கால் விரல் நகங்களைக் கஷ்டப்பட்டு வாயால் எட்டிப் பிடித்துக் கடித்தபடி டி.எஸ்.ஆர். ஆலிலைக் கண்ணன் போஸ் கொடுப்பான்.

நெற்றிப் புருவங்கள் சுருங்க ஒருவித உத்வேகத்துடன் அவன் நகம் கடிப்பதைப் பார்க்கும் போது கணேசனே தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொள்ள முயல்வது போல தென்படும். கடிப்பதற்கு நகம் இல்லாமல் விரல் சதையைக்கூட விட்டு வைக்காமல் பதம் பார்ப்பதால் கணேசனின் விரல்கள் மருதாணி பூசியதைப் போல சிவந்து காணப்படும். இவன் வந்து போனால் இவன் அமர்ந்த இடத்தைச் சுற்றி நகமும் சதையும் சிதறிக் கிடக்கும். என்ன செய்வது? நகமும் சதையுமாகப் பழகிவிட்ட நெருங்கிய நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக கணேசனைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

சிலருக்குத் தலையை லேசாக ஸ்லோமோஷனில் தஞ்சாவூர் பொம்மை போல ஆட்டிக்கொண்டே இருக்கும் மேனரிஸம். புதிதாக இவர்களுடன் பேச வருபவர்கள் தாங்கள் சொல்வதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா , இல்லை முடியாது என்று மறுக்கிறார்களா என்று குழம்பும் அளவுக்கு சூட்சுமமாகத் தலையை ஆட்டுவார்கள். இவர்களாவது பரவாயில்லை. எப்பொழுதும் சாவி கொடுத்த பொம்மை போல், தொடர்ச்சியாகத் தலையை ஆட்டுவதால் புதிதாக வருபவர்கள் பழகிய பத்தாவது நிமிடத்தில் இவர்களைப் புரிந்து கொண்டு விடுவார்கள். நான் படித்த பள்ளியின் உபாத்தியாயர் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அலாரம் வைத்தது போல, கழுத்தை வளைத்துத் தலையை இடமும் வலமுமாக கராத்தே பாணியில் ஐந்தாறு முறை ராட்சஸ வேகத்தில் திரும்பிச் சிலிர்த்துக்கொள்வார். பயந்த சுபாவம் உடையவர்கள் புதிதாக இவரைச் சந்திக்கும்பட்சத்தில் இவரது இந்த சேஷ்டையினால் வெலவெலத்து மரண மூச்சை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வேறு சிலருக்கு எப்பொழுதும் ஒற்றைக் காலில் பகீரதப் பாணியில் நிற்பது ஒரு மேனரிஸம். இவர்கள் பிரயத்தனப்பட்டு ஒற்றைக் காலில் தள்ளாடி பாலன்ஸ் செய்வதைப் பார்க்கும் போது எங்கே விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில் நமக்கு வயிற்றைப் புரட்டும். வலது காலில் சிறிது நேரம் பாலன்ஸ் செய்தவர்கள் தொய்ந்தாலும், இடது காலுக்கு தாவுவார்களே ஒழிய இரண்டு காலால் நிற்கமாட்டார்கள்…

தில்லை நடராஜரைவிட வேகமாகக் கால் மாற்றி நிற்கும் இந்த சபாபதிகளோடு நாம் என்னதான் ஆத்மார்த்தமாகப் பேசிக்கொண்டு இருந்தாலும் நமது விழிகள் இந்த பாலன்ஸ் விளையாட்டில் தான் லயித்திருக்கும்.

மேனரிஸங்களிலேயே மிகவும் மோசமானது கண் சிமிட்டுதல், படபடவென்று சதாசர்வகாலமும் கண்களைச் சிமிட்டுவதால் பாதகமில்லை. ஆனால், நல்ல இடைவெளி கொடுத்து நபும்சகத்தனமாகக் கண்ணைச் சிமிட்டுபவர்களைத் தெரியாதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும். கண்சிமிட்டும் கெட்டப் பழக்கத்தை எப்படியாவது நிறுத்த முயல வேண்டும். இப்பொழுது பரவாயில்லை இளம் வயது, அப்படித்தான் இருக்கும் என்று மன்னித்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். எழுபது வயது கிழவர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் நின்றபடி பெண்களைப் பார்த்த வண்ணம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆவது? கண் சிமிட்டுவது என் மேனரிஸம்’ என்று கிழவர் தன் நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளவா முடியும்..?

மேனரிஸங்களிலேயே ஆபாசமானது கைக்குட்டையின் நுனியைக் கயிறாகத் திரித்து நாசியில் நுழைத்துச் செயற்கை முறையில் தும்மலைத் தயாரிக்கும் அன்னத்வேஷம். இவரோடு பேசும் நேரங்களில் நாம், எப்போது இவர் நாசி வெடிக்கும்?’ என்ற அச்சத்தோடு டென்ஷனாக இருக்கவேண்டிவரும். சில சமயங்களில் வலது நாசியில் கர்சீப்பை நுழைத்து இடது நாசி வழியாக இழுத்தும் தும்மல் வராமல் இவர் தத்தளிப்பதைப் பார்க்கும் போது நமக்குப் பரிதாப உணர்வுதான் இவர்மீது ஏற்படும்.

தன்னையும் ஒரு கேலிப் பொருளாக ஆக்கிக்கொண்டு, பிறரையும் குழப்பவைக்கும் இந்த மேனரிஸங்களை எப்படித்தான் நிறுத்துவது?

சதா எச்சில் உமிழும் உறவினரை அழைத்துக்கொண்டு ஒரு முறை மனோதத்துவ வைத்தியரிடம் சென்றேன். அவர் கூறினார்: “சிறு வயதில் ஏழ்மை காரணமாக உமது உறவினர் மற்ற சக சிறுவர்களைப் போல ஐஸ்க்ரீம், கமர்கட், பர்பி சாப்பிட முடியாமல் ஏங்கியேங்கி, வாயில் எச்சில் ஊறச் சாப்பிடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்…. அல்லது ஏதாவது ஒரு பயங்கரத்தை நேரில் பார்த்தால் ஸலைவா சுரப்பது அதிகமாகி இருக்கலாம்…” என்று இரண்டாவது உலக மாக யுத்தம் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும், எச்சில் ஊறுவதற்குக் காரணம் காட்டினார் அந்த மனோதத்துவ நிபுணர்.

“இந்த மேனரிஸத்தை எப்படித்தான் போக்குவது?” என்று நான் கேட்டதற்கு, மனோதத்துவ டாக்டர், “அவருடைய சரித்திரத்தைக் (எஸ்.எஸ்.எல்.ஸி. புத்தகத்தில் ஆரம்பித்து பென்ஷன் சர்ட்டிபிகேட் வரை…) கொடுத்தால் தான் அதை நான் படித்துக் காரணத்தை அறிந்துக் கொண்டு அதற்குத் தகுந்த மாற்றுக் காரியத்தைச் செய்யலாம்” என்றார்.

எங்களை வழியனுப்ப வந்த இந்த டாக்டர் என்னைப் பார்த்து, “மற்றவர்களின் மேனரிஸத்தை ஆராய்ச்சி செய்வதே ஒரு மேனரிஸம்தான்” என்று கூறிவிட்டு, குதிகாலால் ஐந்தாறு முறை எம்பியெம்பிக் குதித்தார். விசாரித்ததில் தெரிந்தது – குதிகாலால் அடிக்கொருதரம் எம்பியெம்பிக் குதிப்பது அந்த மனோதத்துவரின் மேனரிஸமாம்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

1 thought on “மேனரிஸம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *