மேட்டுத் தீவு மர்மம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 925 
 
 

சிங்கபுரி அழகான கிராமம். ஊருக்கு மேற்கே ஒரு பெரிய கண்மாய். அதற்குப் பெரியகுளம் என்றே பெயர். மத்தியில் குட்டித்தீவு போன்ற ஒரு மேடு. அங்கே சுற்றிலும் பாழடைந்த கோயில்கள். அதற்கு ஒற்றையடிப் பாதை போல மேட்டுப் பாதை. கோயிலைச் சுற்றிலும் அடர் மரங்கள். சடையாண்டி கோயில், முனியாண்டி கோயில், சுடலையாண்டி கோயில், பிடாரி கோயில் இப்படிப் பல கோயில்கள்.

ஒரு காலத்தில் அங்கே கோலாகலமாக திருவிழாக்கள் நடந்தன. உழைப்பாள விவசாயிகள் கொண்டாடும் திருவிழாக்கள். விவசாயம் குறைந்த பிறகு திருவிழாக்களும் தேய்ந்து நின்றேபோயின. பேய்க் கோயில்கள் எனப் பெயராகி பயமுறுத்தின.

இரவில் சிரிப்புச் சத்தங்கள் கேட்கும். ‘கொள்ளிவாய்ப் பிசாசு தீவட்டியோடு ஆடுது’ என்றனர் சிலர். இரவில் அந்தப் பக்கம் பார்வையைச் செலுத்தவே பயந்தனர்.

அந்த ஊரின் அமுதன், பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவனது நண்பன் இளவரசன். அன்று இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் அந்த மேட்டுத் தீவு பற்றிய பேச்சும் வந்தது.

“இளவரசா, பேய் என்பது உடலற்ற உயிர் என்கிறார்கள். உடல் இல்லாமல் சிரிப்பு எப்படி வரும்? உறுப்புகள் இல்லாமல் எப்படி தீப்பந்தத்தைச் சுழற்றும்?” என்றான் அமுதன்.

“ஊர்க்காரங்க பொய் சொல்லும் அவசியம் என்ன?” எனக் கேட்டான் இளவரசன்.

“அவங்க பொய் சொல்லலை. அறியாமையால் ஒருவர் சொல்வதை சொல்றாங்க. நாம ஒண்ணு செய்வோம். உன் வீட்டில் படிக்கச் செல்கிறேன் என்று நானும், என் வீட்டுக்கு வருவதாக நீயும் சொல்லிவிட்டு இன்று இரவு அங்கே செல்வோம். பதுங்கி இருந்து என்ன நடக்கிறது என கவனிப்போம்’’ என்றான் அமுதன்.

இளவரசன் முதலில் பயந்தான். ஆனால், எதையும் சந்திக்க வேண்டும் என்ற அந்த வயதுக்குரிய ஆவல், அவனை சம்மதிக்க செய்தது.

அன்று மாலை குட்டித் தீவுக்குச் சென்றனர். பாழடைந்த சுவரின் மறைவில் அமர்ந்தனர். எதையோ எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

நடுச்சாமத்தில் மூன்று பேர் ஒரு கையில் துணிப் பந்தமும் இன்னொரு கையில் மண்பானையும் எடுத்து வந்தார்கள். கொளுத்திய பந்தங்களைத் தூக்கி ஆட்டினார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு மர்மம் புரிந்தது.

இருட்டில் நடந்து அமுதனும் இளவரசனும் பாழடைந்த கோயில் கட்டடங்களிலும் எட்டிப் பார்த்தார்கள். கம்பூட்டர், அச்சு இயந்திரம் என அந்த இடமே பரபரப்பாக இருந்தது. இருட்டு உருவங்கள் சுறுசுறுப்பான பணியில் இருந்தன. இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள்.

“நேத்து வரை எட்டுப் பெட்டிகள் போய்விட்டது.”

“இன்னிக்கி ரெண்டு பெட்டிகள் போகணும்.”

அமுதனும் இளவரசனும் அங்கே நடப்பதை புரிந்துகொண்டார்கள். இருட்டில் கரைந்து ஊருக்குள் வந்தார்கள்.

ஊரில் விஷயத்தைச் சொல்லி, காவல்துறை மேலதிகாரி செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பினார்கள்.

சற்று நேரத்தில், பெருங்காவல் படை பேய்க் கோயில்களைச் சூழ்ந்தன. ஊர்மக்களின் இரும்புக் கோட்டை போன்ற அரணும் அந்த கள்ளநோட்டு பேய்களைப் பிடிக்க உதவின.

அடுத்த நாள், தலைப்புச் செய்தியில் அமுதனும் இளவரசனும். இருவருக்கும் மேல் படிப்புச் செலவுகளை ஏற்பதாக மாநில அரசு அறிவித்தது. கிடைத்த பரிசுப் பணத்தில் தங்கள் ஊர்க் கோயில்களை சீரமைக்கப்போவதாகவும், விவசாயத்துக்கு உதவப்போவதாகவும் இருவரும் அறிவித்தனர்.

– மார்ச் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *