மேடைப் பேச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 9,938 
 
 

குலோத்துங்க சோழன் இன்று தமிழகத்தில் தலை சிறந்த பேச்சாளன். மேடைக்கு மேடை தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றி அவன் பேசுவதைக் கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு விடுவார்கள்.

குலோத்துங்க சோழனின் தேதி கிடைப்பது ரொம்ப கஷ்டம்! தமிழ் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு இலக்கிய மன்றங்கள் அவனிடம் தேதி வாங்க நடையாய் நடப்பார்கள்.

நான்கு நாள் பயணத்தை முடித்து விட்டு, அன்று காலை தான் அவன் வீடு திரும்பியிருந்தான்.

அன்று மாலை தாய், தந்தையைப் பார்க்க முதியோர் இல்லத்திற்குப் போயிருந்தான்.

“ குலோத்துங்கா!…இங்கு கவனிப்பு சரியில்லையடா!…குழம்பு, பொரியல் எல்லாம் தினசரி ஒரே மாதிரி இருக்கிறது!…சாப்பாடே கொஞ்சம் கூட பிடிக்கலை!…..நாங்க இரண்டு பேரும் நம்ம வீட்டிற்கே வந்து விடுகிறோம்! ….நமக்கு என்ன வசதியா இல்லை?…”

“ இந்த ஹோமில் சீட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியுமா?…அவனவன் பாம்பே, டெல்லியிலிருந்தெல்லாம் இங்கு வந்து சேரறான்….வயசானா முதலில் வாயைக் கட்டிப் பழகணும் …. அதை விட்டுட்டு ஏன் இப்படி திங்க பறக்கிறீங்க?…”

அதன் பின் அந்தப் பெரியவர் பேசக் கூட வாயைத் திறக்க வில்லை!

அன்று மாலை மனைவி தமிழ் செல்வியோடு ஒரு ஆங்கிலப் படத்திற்குப் போயிருந்தான். இரவு பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பாடு.

அவன் ஓய்வாக இருக்கும் பொழுது தமிழ் செல்வி சொன்னாள்.

“ நமக்கு இருக்கிறது ஒரே பையன்…..அவனுக்கு மூணு வயசாயிடுச்சு……நானும் காலையில் ஆபிஸுக்குப் போய் விடுகிறேன். வேலைக்கார ஆயாவை நம்பித்தான் விட்டுட்டுப் போறேன்!…சமீபத்தில் பேஸ் புக்கில் ஒரு காட்சியைப் பார்த்தேன்!…நம்ம மாதிரி வேலைக்காரியை நம்பி பெற்றோர் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு போயிடறாங்க!……அந்த வேலைக்காரி குழந்தையை ரொம்பக் கொடுமை படுத்தறா!…பார்க்கவே பயமா இருந்தது!….நம்ம குழந்தையைப் பார்த்துக் கொள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் மாமாவையும், அத்தையையும் வீட்டிற்கு கூட்டி வந்திடலாங்க!…”

“ ஏண்டி இப்படி அறிவு கெட்டதனமா பேசறே?…நீ ரண்டு டிகிரி வாங்கி என்ன பிரயோசனம்?..காலத்துக்கு தகுந்த மாதிரி நாகரிகமா இருக்கத் தெரியலே!….இப்ப எத்தனை நவீன வசதிகள் வந்திருக்கு தெரியுமா?…இப்படி பத்தாம் பசலித்தனமா இருக்கிறே?..அடுத்த தெருவிலேயே ஒரு நல்ல குழந்தை காப்பகம் இருக்கு!…நீ காலையில் வேலைக்குப் பொகும் பொழுது அங்கு கொண்டு போய் குழந்தையை விட்டு விடு!…மாலை நீ வீட்டிற்கு வரும் பொழுது கூட்டிக் கொண்டு வந்திடு!…பிரச்னை சால்வ்டு!…”

“ சரிங்க!…” என்றாள் தமிழ் செல்வி.

குலோத்துங்க சோழன் அடுத்த இலக்கிய கூட்டத்தில் தமிழர் பண்பாடு பற்றி பேச சங்க இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்களை தேடத் தொடங்கி விட்டான்!

– பதுகைத் தென்றல் நவம்பர் 2014 இதழ்

துடுப்பதி ரகுநாதன் கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *