மூன்று கரடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2025
பார்வையிட்டோர்: 610 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் மூன்று கரடிகள் இருந்தன; ஒன்று ஆண் கரடி; ஒன்று பெண் கரடி; மற்றொன்று குழந்தைக் கரடி. ஆண் கரடி பெரியது; அது அப்பாக் கரடி. பெண் கரடி நடுத்தரமானது; அது அம்மாக் கரடி, குழந்தைக் கரடி சிறியது; அது பாப்பாக் கரடி. அவை மூன்றும் மெத்தை வீடொன்று கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தன. அந்த வீடு காட்டின் நடுவில் இருந்தது. 

ஒரு நாள் அக்கரடிகள் பாயசம் காய்ச்சின; காய்ச்சிய பாயசத்தைப்பெரிதுஞ் சிறி துமான மூன்று கிண்ணங்களில் ஊற்றின. பாயசம் சூடாக இருந்தது. ஆதலால், அது ஆறுவதற்குள் சற்று உலாவிவர எண்ணி அவை மூன்றும் வெளியே சென்றன. 

அப்பொழுது சிறு பெண்ணொருத்தி அவ்விடம் தனியே வந்தாள். அவள் பெயர் கருங்குழலி. கரடிகளின் வீட்டை அவள் அணுகினாள். “இவ்வீட்டினுள் யார் இருக்கிறார்களோ பார்க்கலாம்,” என்று சொல்லிக்கொண்டே அவள் உள்ளே எட்டிப் பார்த் தாள்; ஒருவரையுங் காணவில்லை. ஆகவே, துணிந்து அவள் உள்ளே நுழைந்தாள். 

உள்ளே யிருந்த மேசையொன்றின் மீது மூன்று கிண்ணங்களிற் பாயசம் ஊற்றி வைக்கப்பட் டிருந்ததை அவள் கண்டாள். பாயசம் என்றால், கருங்குழலிக்கு மிகுந்த விருப்பம். பெரிய கிண்ணத்தி லிருந்த பாயசத்திற் சிறிது அவள் குடித்தாள். அது மிகவும் சூடாக இருந்தது. ஆகவே, அதை அப்படியே வைத்துவிட்டு, அடுத்த கிண்ணத்திலிருந்த பாயசத் திற் சிறிது குடித்துப் பார்த்தாள். அதுவோ மிகவும் ஆறிச் சில்லென்றிருந்தது. அதையும் அப்படியே வைத்துவிட்டுச் சிறிய கிண்ணத்திலிருந்த பாயசத்தைக் குடித்துப் பார்த்தாள். அது மிகுந்த சூடாகவு மில்லாமல் மிகுதியாக ஆறியுமில்லாமற் பதமாக இருந்தது. எனவே, ஆசையோடு முழுவதையும் அவள் மட மட வெனக் குடித்துவிட்டாள். 

மேசையினருகே மூன்று நாற்காலிகள் கிடந்தன. பெரியதாயிருந்த நாற்காலியில் அவள் உட்கார்ந்தாள். அது கல்தரையைப்போற் கடினமாயிருந்தது. அதற் கடுத்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அதுவோ மிகவும் மெதுவாக இருந்தது. ஆகவே, அதையும் விட்டுச் சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாள். அது அவள் உட்காருவதற்கு ஏற்றதாக இருந்தது. ஆனாலும், அவளுடைய உடற்கனம் தாங்காமல் அது மளமளவென்று முறிந்தது. அவள் கீழே விழுந்தாள். 

விழுந்தவள் மெல்ல எழுந்து மெத்தைமேல் ஏறிச் சென்றாள். அங்கே மூன்று கட்டில்கள் கிடந்தன. பெரிய கட்டிலில் ஏறிப்படுத்தாள்; அது கல்லைப்போற் கடினமா யிருந்தது. அதை விட்டு இறங்கி, அடுத்த கட்டிலின் மீது ஏறிப் படுத்தாள்; அதுவோ மிகவும் மெதுவாக இருந்தது. ஆகவே, அதையும் விட்டுச் சிறிய கட்டிலின் மீது ஏறிப்படுத்தாள். அது அவள் படுப்பதற்கு ஏற்றதாக இருந்தது. சற்றுத் தூங்கிப் பார்க்கலாம் என்று கண்ணை மூடினாள்; அயர்ந்து அப்படியே தூங்கிவிட்டாள். 

உலாவச் சென்ற கரடிகள் மூன்றும் திரும்பி வந்தன. வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, யாரோ வேற்றாள் உள்ளே வந்திருக்க வேண்டும் என்பதை அவை உணர்ந்து கொண்டன. அப்பாக் கரடி நேரே மேசையருகே சென்று, தன் கிண்ணத்தைப் பார்த்தது. பார்த்ததும், “என் பாயசத்தை யாரோ குடித்துப் பார்த்திருக்கிறார்கள்,” என உறுமிற்று. தன் கிண்ணத்தைப் பார்த்த அம்மாக் கரடியும், “என் பாயசத்தையும் யாரோ குடித்துப் பார்த்திருக்கிறார்கள்,” என உறுமிற்று. “ஐயையோ என் பாயசத்தை யாரோ முழுவதும் குடித்து விட்டார்களே!” என்று பாப்பாக் கரடி அலறிற்று. 

அப்பாக் கரடி தன் நாற்காலியைத் திரும்பிப் பார்த்து, “யாரோ என் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்திருக்கிறார்கள்,” என்று கத்திற்று. அம்மாக் கரடி தன் நாற்காலியைப் பார்த்து, “என் நாற்காலியிலும் யாரோ உட்கார்ந்து பார்த்திருக்கிறார்கள்,” என உடன் கத்திற்று. தன் நாற்காலியைப் பார்த்த பாப்பாக் கரடியோ, “ஐயையோ! என் நாற்காலியில் யாரோ உட்கார்ந்து ஒடித்து விட்டார்கள்!” என்று கதறிற்று. 

மூன்று கரடிகளும் மெத்தை மேல் ஏ றிச் சென்றன. அப்பாக் கரடி அங்கிருந்த தன் கட்டிலைப் பார்த்துவிட்டு, “யாரோ என் கட்டிலிற் படுத்துப் பார்த்திருக்கிறார்கள்,” என்று கூவிற்று. அம்மாக் கரடியும் தன் கட்டிலைப் பார்த்துவிட்டு, “யாரோ என் கட்டிலிலும் படுத்துப் பார்த்திருக்கிறார்கள்!” என்று கூவிற்று. இதற்குள், “இதோ இருக்கிறாள்!” என்று கீச்சுக்குரலில் பாப்பாக் கரடி கூவிற்று. அவ் வோசை கேட்டுக் கருங்குழலி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். விழித்தவள் கரடிகளைப் பார்த்ததும் சட்டென்று கீழே குதித்தாள்; திறந்திருந்த சன்னல் அருகே ஓடினாள். ஓடி அங்குப் படர்ந்திருந்த கொடி யொன்றைப் பற்றிக் கீழே சரசரவென இறங்கினாள்; இறங்கினதும் எடுத்தாள் ஓட்டம்; மா(குதிரை) வேகம் மரை (மான்) வேகமாக ஓடினாள். 

கரடிகளுக்கோ சாளரத்தின் வழியாக இறங்க முடியவில்லை. மெத்தைப் படிக்கட்டின் வழியாக அவை உருண்டு புரண்டு வெளியே வந்து பார்த்தன. அதற்குள் கருங்குழலி நெடுந்தொலை சென்று விட்டாள். 

– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *