முழுமையான முயற்சி தோற்பதில்லை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 10,636
”எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று நொந்து சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“ஏன், என்னாச்சு”
“என்னால் எந்த காரியத்தையும் முடிக்க இயலவில்லை ஏதாவது தடங்கள் வருகிறது. அதன்பின் என்னால் தொடர இயலவில்லை” என்று சொன்னான் வந்தவன். அதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பெரு நாட்டில் சியுலா க்ராண்டே என்று ஒரு மலை இருக்கிறது. 21000 அடி உயரம். அந்த மலை மேல் ஏற வேண்டும் என்ற வெறி இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்களுக்கு இருந்தது. ஒரு நாள் அந்த மலையில் ஏறத் துவங்கினார்கள். கரடுமுரடான மலை. கடும் குளிர்.பனி. எதையும் பொருட்படுத்தாமல் இருவரும் ஏறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வழுக்குப் பாதையில் சிம்சன் என்பவன் விழுந்துவிட்டான். விழுந்ததில் அவன் காலில் பயங்கர அடி. அவனால் நடக்க இயலவில்லை. அவனை என்ன செய்வதென்று அடுத்தவன் சைமனுக்குப் புரியவில்லை. நண்பனாயிற்றே, அதனால் அவனை அப்படியே விட்டுவிடாமல் கயிற்றில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டே மலை ஏறினான். அதிக தூரம் ஏற முடியவில்லை. ஒரு விளிம்பில் கை வழுக்க சிம்சன் பாதாளத்தில் விழுந்துவிட்டான். மேலே நின்றிருந்த சைமன் கயிறு மூலம் இழுத்துப் பார்த்தான். எந்த அசைவும் தெரியவில்லை. குரல் கொடுத்தான், அப்போதும் பதிலில்லை. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிம்சன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து, அங்கிருந்து அவன் மட்டும் மலை ஏறத் துவங்கினான். இதில் கொடுமையான சங்கதி என்னவென்றால் சிம்சன் விழும்போது அவர்கள் கொண்டு சென்றிருந்த உணவுப் பொருடகலும் விழுந்துவிட்டன.
இந்த சூழலில் பசி பட்டினியுடன் மேலே ஏறத் துவங்கினான் சைமன். அவன் மேலே ஏறிச் செல்ல மூன்று இரவுகள் ஆனது. அவன் மேலே ஏறியது ஒரு ஆச்சர்யம் என்றால். காலில் அடிபட்டு கீழே விழுந்த, இறந்துவிட்டதாக கருதப்பட்ட சிம்சனும் தங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான்.
இந்த இருவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம். ‘நீங்கள் வந்து சேருவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?’என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ’இவ்வளவு வந்துவிட்டோம், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணிதான் பார்ப்போமே என்று முயற்சித்தோம்’ என்று ஒரு சேர சொன்னார்கள்.
இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தான் எங்கே தவறு செய்கிறோம் என்பது புரிந்த்து.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: முழுமையான முயற்சி தோற்பதில்லை.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)