முற்றும் துறந்த மன்னர்!





அடர்ந்த காட்டின் நடுவிலே குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார் ஒரு முனிவர். அவர் வருடக் கணக்கில் தவம் செய்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார்.
ஒரு நாள் அந்தப் பகுதிக்கு நாட்டின் மன்னன் வீரர்கள் புடைசூழ யானையில் வந்து இறங்கினார். விலங்குகளை வேட்டையாடி பொழுதுபோக்குவதற்காகத்தான் அங்கே வந்திருந்தான் மன்னன். படைவீர்கள் மரங்களை வெட்டித்தள்ளி ஒரு திறந்த வெளியை ஏற்படுத்தினார்கள். கூடாரங்களை அமைத்தார்கள்.
மன்னன் தங்குவதற்கு ஆடம்பரமான கூடாரம் போடப்பட்டது. பட்டு மெத்தையும் தேக்கு மரக் கட்டிலும் வந்து இறங்கின. அவன் படுக்கை அறை மணம் வீசும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. உட்கார்வதற்கு சிம்மாசனம் ஒன்றும் போடப்பட்டது.
மன்னனுக்கு சாமரம் வீசவும் பணிவிடை செய்யவும் அறுசுவை உணவு சமைக்கவும் பெண்கள் சிலர் பல்லக்கில் வந்து இறங்கினார்கள்.
மன்னன் குளிப்பதற்கென்றே தனியாக ஒரு கூடாரம்! பன்னீரும் சந்தன எண்ணெயும் கலந்து வெந்நீர் போடப்பட்டது.
கொடிய விலங்குகள் வாழும் காட்டுக்கு வேட்டையாட வரும்போதுகூட அந்த மன்னனுக்கு இவ்வளவு ஆடம்பரங்கள் தேவைப்படுவதை அருகிலே இருந்த முனிவர் கவனித்தார். அவரையும் அறியாமல் அவன் மேல் அவருக்குப் பொறாமை எழுந்தது. முற்றும் துறந்து ஆசையை அடக்கி முனிவரான அவருக்குள்ளும் ‘இந்த மன்னனைப் போல் ஆடம்பரமாக வாழ்ந்தால் எப்படி இருக்கும்…’ என்ற நப்பாசை துளிர்விட்டது.
மறுநாளிலிருந்து வேட்டை விளையாட்டு தொடங்கியது. மன்னன் வேட்டை முடிந்து ஓய்வெடுக்கத் திரும்பி கூடாரத்துக்கு வரும்போதெல்லாம் அவனையே பொறாமையோடு பார்க்கத் தொடங்கினார் முனிவர்.
ஒரு நாள் நள்ளிரவு தன் குடிசையில் உறங்கிக்கொண்டு இருந்த முனிவர் திடுக்கிட்டு விழித்தார். ஏதோ கெட்டது நடந்திருக்கிறது என்று அவரது உள்ளுணர்வு உணர்த்தியது.
வெளியே வந்தார் முனிவர். எதிரே தீப்பந்தங்களின் ஒளியில் மன்னனின் கூடாரமும் படைவீரர்களின் கூடாரங்களும் தென்பட்டன. மன்னனின் கூடாரத்தில் இருந்து ஆவி வடிவம் ஒன்று மேலெழுந்து செல்வதை முனிவரின் ஞானக் கண்கள் கண்டன. உடனே முனிவர் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தினார். சில நிமிடங்களுக்கு முன் மன்னனின் கூடாரத்தின் உள்ளே நடந்தவை அவர் மனக்கண்ணில் தெரிந்தன.
மன்னனின் படுக்கை அறையை அலங்கரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூக்குவியலில் இருந்து வெளிப்பட்ட ஒரு சிறிய நாகம் மன்னனைத் தீண்ட, நஞ்சு ஏறி மன்னனின் உயிர் பிரிந்துவிட்டது. அப்படிப் பிரிந்த ஆவியைத்தான் முனிவர் பார்த்தார்.
நடந்ததை அறிந்த முனிவருக்கு திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. உடனே காட்டுக்குள்ளே சற்றுத் தொலைவு நடந்து சென்ற முனிவர், அங்கே இருந்த ஓர் ரகசிய குகைக்குள் சென்று தன் உடலைக் கிடத்தினார். பின்னர் கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் மூலம் தன் உடலில் இருந்து தன் உயிரைப் பிரித்த முனிவர் கூடாரத்திலே இறந்து கிடந்த மன்னனின் உடலுக்குள் தன் உயிரை செலுத்திக்கொண்டார்.
மறுநாள் பொழுது விடிந்தபோது மன்னனாக விழித்தெழுந்தார் முனிவர். அந்தப் பொழுதில் இருந்து மன்னனாகவே ஆகிவிட்டார் முனிவர். இறந்துபோன மன்னனைப் போலவே நடந்துகொள்வது அவருக்குக் கடினமாக இருக்கவில்லை.
மன்னனின் உடலுக்குள்ளிருந்த முனிவர், அவனுக்குக் கிடைத்துவந்த அத்தனை ஆடம்பரங்களையும் அனுபவித்தார். வேட்டை முடிந்து திரும்பி அரண்மனை வாழ்வையும் தொடர்ந்தார்.
தன் மேல் யாருக்கும் எந்தவித ஐயமும் வரவில்லை என்பதை மகிழ்ச்சியோடு உணர்ந்துகொண்ட முனிவர், இனி வாழ்வின் மிச்சமிருக்கும் நாட்களையும் மன்னனாகவே சுகமாகக் கழிக்க ஆசைப்பட்டார்.
எனவே, ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் வந்து குகையில் ஒளித்து வைத்திருந்த தன் உடலை எரித்து அழித்துவிட்டு மகிழ்ச்சியோடு அரண்மனை திரும்பினார்.
அதன் பிறகுதான் அது நடந்தது. பக்கத்து நாட்டுப் பகையரசன் பெரும்படை திரட்டிக்கொண்டு வந்து போர் தொடுத்தான். மன்னன் வேட முனிவரால் அந்தப் போரைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவருடைய படை தோற்று ஓடியது. மன்னன் வேட முனிவரை சிறையில் அடைத்த பகையரசன், நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான்.
மன்னனாக வாழ ஆசைபட்ட முனிவர் இப்போது இருண்ட பாதாளச் சிறை ஒன்றில் கந்தல் உடைகளுடன் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கால் வயிற்று உணவுடன் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறார்.
அய்யோ பாவம், ஆசை யாரை விட்டது..?
– வெளியான தேதி: 01 ஏப்ரல் 2006