முரட்டு நண்பன்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)
ஒரு மனிதக் குரங்கின் சாயல் அவனது தோற்றத்திற் தெரியும். உடலமைப்பும், முகத்தோற்றமும் மட்டுமல்ல. அவன் தாண்டித் தாண்டி நடப்பது, நின்று திரும்பிப் பார்ப்பது எல்லாமே அதே சாயலிற்தான். அதிகம் பேச மாட்டான். ஏதாவது பேச வேண்டிய தேவையிருந்தால் விழிகளை ஒருபக்கம் திருப்பி உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பான். ஏற்கனவே அவனைப் பழக்கமில்லாதவர்களுக்கு, சற்று பயத்தையோ கலவரத்தையோ ஏற்படுத்தக்கூடிய பார்வை அது. அவன்தான் நிக்கோலாஸ். பொதுவாகக் காட்டு வாழ்க்கை வாழ்கிற சிலர், மனித வாடையே இல்லாது மிருகங்களோடு வாழ்கிற சிறுவர்கள் மனிதக் குரங்கின் பழக்கவழக்கங்களை ஒத்திருப்பது போல கதைகளிலோ சினிமாக்களிலோ பார்த்திருக்கின்றோம். ஆனால் நிக்கோலஸ் முன்னேற்றமடைந்த ஒரு நகரத்தைச் சேர்ந்தவன்.
இத்தாலிய புறஜெக்ட்டிற்கு, அந்நாட்டிலிருந்தே பணிக்கு அமர்த்தப்பட்டவர்களில் அவனும் ஒருவன். என்ஜினியர்கள், தொழில்நுட்பத் தரத்திலுள்ளவர்கள் மற்றும் லேபரர்கள் போன்ற வேலைகளுக்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைத்தலத்திற்கு எடுக்கப்பட்டிருந்தனர். விற்பனை, விநியோகம் சம்பந்தமான பகுதிகளுக்கான வேலைகளுக்கு இத்தாலியைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
வேலைகள் ஆரம்பித்தபோது நாப்போலி நகரைச் சேர்ந்த துறைமுக லேபரர் மட்டத் தொழிலாளர் சங்கத்திலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கையிலிருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டுத் தங்களுக்கே வேலை வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்து வேலைகளுக்குத் தடங்கல் போட்டார்கள். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வேலைகளை இடைநிறுத்தம் செய்தார்கள். எங்களுடைய கம்பனியினருக்கோ முற்று முழுதாக இத்தாலியர்களை எடுக்கவும் விருப்பமில்லை. இலங்கைத் தொழிலாளர்களை விட்டுவிடவும் விருப்பமில்லை. இறுதியாக அவர்களுடன் ஒரு உடன்பாடு எடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையிலிருந்து இதற்கும் மேலதிகமான வேலையாட்களை எடுப்பதில்லை. இத்தாலியர்களையும் குறிப்பிட்டளவு பேரைச் சேர்த்துக் கொள்வது.
அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவன்தான் நிக்கோலாஸ். அந்தத் தொழிலாளர்களின் லீடர் போன்றவன். கம்பனியின் வாகன ட்றைவராகச் சேர்க்கப்பட்டிருந்தான்.
வேலைக்குச் சேர்க்கப்பட்டாலும் அவர்களிடமிருந்து வேலை வாங்குவதில் பல பிரச்சினைகள் தோன்றின. எங்கள் வேலைத்தலம் அமைந்திருந்ததோ நாப்போலித் துறைமுகத்தில். அந்தத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாயிருந்த அவர்களின் நட்டாமுட்டித் தனத்துக்குக் குறைவில்லாதிருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள். வேலைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை ஏழு மணி. அவர்கள் அந்த நேரத்திற்கு வந்து சேர மாட்டார்கள். எட்டு மணியாகும். அதுவரை வேலை செய்யும் ஏனையவர்களும் சீமெந்து லோட் பண்ணப்பட வேண்டிய லொறிகளும் காத்திருக்க வேண்டும். வேலைகளிலும் உற்சாகத்துடனோ சுறுசுறுப்புடனோ ஈடுபட மாட்டார்கள். இது குறித்து அவர்களுடன் பலமுறை ஏச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. அவர்கள் அந்த நேரத்திற்கு வர விரும்பவில்லை. அவர்களின் லீடர் என்ற வகையில் நிக்கோலாஸுடன் பேசியும் முரட்டுத்தனமான பதில்கள்தான் கிடைத்தன.
சாதாரண தொழிலாளர் மட்டத்திலான அவர்களிடம் பென்ஸ், அல்பா -ரோமியா போன்ற ஆடம்பரக் கார்கள் இருந்தன. அந்த வாகனங்களில் தொழில் அதிபர்களைப் போல வந்திறங்குவார்கள். லேபரர் வேலை செய்கிறவர்கள் இவ்வளவு வசதியாக இருக்கிறார்களே எனச் சந்தோஷமாய் இருக்கும். ஆனால் தொழில் சார்பாக அவர்களது செயற்பாடுகள் எரிச்சலை ஊட்டும்.
அவர்களது கடமைகளை இலங்கையைச் சேர்ந்த வேறு தொழிலாளர்களைப் போட்டுச் செய்யவும் விட மாட்டார்கள். (தங்களது முக்கியத்துவம் இல்லாவிட்டால் வேலைகள் பறிபோய்விடக்கூடும் என்ற எண்ணமாய் இருக்கலாம்.) இதுபற்றி ஏதாவது பேசப் (ஏச) போனால் அவர்கள் எல்லோரும் சேர்ந்துவிடுவார்கள். விழல் நியாயம் கதைப்பார்கள். இது எனக்குப் பெரிய தலையிடியாய் இருந்தது. தினமும் ஓரிரு மணித்தியாலங்களை இழப்பது உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள, நிக்கோலாஸைத்தான் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிதேன். அவனோடு தனிமையில் பேச வேண்டும்.
நிக்கோலாஸ் சாப்பாட்டுப் பிரியன். அவனது தோற்றமும் நடைபாவனைகளும் போல சாப்பாட்டு விஷயத்திலும் அந்த மாதிரித்தான். நிறையச் சாப்பிடுவான். ஒருநாள் அவனைச் சாப்பாட்டிற்கு அழைத்து விருந்தளித்த போது இதைக் கவனித்துவிட்டேன். எனக்குப் பிடி கிடைத்து விட்டது.
தொடர்ந்தும் இரண்டொரு முறை சாப்பிட அழைத்தேன். விதவிதமான சாப்பாட்டு வகைகளைப் படைத்தேன். ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் அவனிடத்தில் திருப்தியையும், நன்றியுணர்வையும் கவனிக்கக் கூடியதாய் இருந்தது.
இத்தாலியத் தொழிலாளர்களைக் கையாள்வதில் நிக்கோலாஸுடனான நெருக்கம் உதவி செய்தது. அவர்களும் படிந்து வந்தனர். வேலைகள் ஓரளவு சுமுகமாகப் போகத் தொடங்கின. எனினும் காலையில் நேரத்திற்கு வரமாட்டார்கள். மதியத்திற்குப் பிறகு அங்கு இங்கு என மாறிவிடுவர்கள். இதுபற்றி நிக்கோலாஸுடன் பேசினேன். அவனது தொழிலாளர் நண்பர்களையும் ஒரு முறை விருந்துக்கு அழைத்தேன். நிக்கோலாஸுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். அவன் மூலம் பக்குவமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
“இங்கு யாரும் யாருக்கும் எதிரியல்ல. உங்களுடைய தொழிலைப் பறிக்க நாங்கள் இங்கு வரவில்லை. எங்கள் வயிற்றுப்பாட்டுக்கு உழைக்கவே வந்திருக்கிறோம். நீங்களும் உங்கள் வயிற்றுக்கு உழைக்கத்தான் வந்திருக்கிறீர்கள். நீங்களும் நாங்களும் நண்பர்கள். இங்கு வேலைகளில் கணக்கம் ஏற்படக்கூடாது. உங்களுக்குப் பல சோலிகள் இருக்கலாம். நீங்கள் வரும்வரை காத்திருக்க முடியாது. இலங்கைத் தொழிலாளர்களைப் போட்டு காலையில் வேலையைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய நேரத்திற்கு வாருங்கள்.”
அது வேலை செய்தது. சம்மதித்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அவர்களும் படிப்படியாக நேரத்தோடு வரத் தொடங்கிவிட்டார்கள். இதில் நிக்கோலாஸின் பங்கு கணிசமானது என்பதையும் அறிந்து கொண்டேன்.
நாளடைவில் இன்னொரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. வேலை ஒப்பந்தப்படி, அவர்களுக்குக் கம்பனி சாப்பாடு வழங்க வேண்டியதில்லை. இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படும். வேலைத் தலத்துடன் சேர்ந்திருந்த குசினியில் தினமும் சமையல் நடக்கும். சமையல் வாசனை கிளம்பி வரும்போது சாப்பாடு ரெடியாகிவிட்டதை மோப்பம் பிடித்துக் கொண்டு நிக்கோலாஸ் குசினிப்பக்கம் போய்விடுவான். பன்னிரண்டு மணிக்கு மதியச் சாப்பாட்டு நேரம் தொடங்குவதற்கு முதலே நிக்கோலாஸும், அவனது நண்பர்களும் வந்திருந்து ஒரு பிடி பிடித்து விடுவார்கள். என்னுடனான நட்புரிமையை அவர்கள் இவ்விதம் பாவிக்கத் தொடங்கியிருந்தார்கள். சமைத்த உணவை அவர்கள் வந்து எடுக்கும்போது சமையல்காரனாலும் அதைத் தடுக்க முடியாமலிருந்தது. இது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
சாப்பிடுபவனை எப்படி வேண்டாமென்று சொல்வது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு பக்கம். இதனால் எதிர்கொண்டுள்ள நிருவாகச் சிக்கல் மறுபக்கம். மற்றவர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை பத்துப் பன்னிரண்டு பேர்களாக வந்து தீர்த்துவிட்டுப் போனால், சாப்பிட வேண்டியவர்களுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இன்னொரு பக்கம். இவற்றையெல்லாம் விட, மேலதிகமான சமையலை எந்தக் கணக்கில் போய் எழுதுவது?
அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது டைனிங் ஹோலுக்குப் போனேன். சற்றுக் கடுமையான தொனியில் அவர்களது கவனத்தைத் திருப்பினேன்.
“நான் இன்றைக்குச் சாப்பிடப் போவதில்லை…” “ஏன்?” நிக்கோலாஸ் கேட்டான்.
“நீங்கள் வந்திருந்து இப்படிச் சாப்பிட்டுத் தீர்த்துவிட்டால் எனக்குச் சாப்பாடு ஏது? நான் மட்டுமல்ல… இங்கு கஷ்டப்பட்டு வேலை செய்கிற மற்றவர்களுக்கும் மதியச் சாப்பாடு இல்லை. நிக்கோலாஸ், இது எனது வீடு அல்ல. இது ஒரு கம்பனி. அதற்கென சில விதிமுறைகள் உண்டு. அதைக் கடைப்பிடிக்க வேண்டும்… உங்களைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. எனக்குச் சங்கடத்தைத் தரவேண்டாம். தயவுசெய்து இதை உன் நண்பர்களுக்குப் புரிய வை..!”
அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதன்பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை. ஆனால் நிக்கோலாஸைச் சமாளிப்பது கஷ்டமாகவே இருந்தது. சாப்பாட்டு வாசனை கிளம்பியதும் அவனுக்கு மற்ற அலுவல்கள் மறந்து போகும்.
குசினிப்பக்கம் போய் விடுவான். அவனைப் பற்றிய முறைப்பாடு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் அந்த இடத்திற்குப் போய் தடுக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் கோபம் தலைக்கு ஏறி கடுமையாக சத்தம் போட்டிருக்கிறேன். ஆனால் பதிலுக்கு அவன் ஏதும் பேசமாட்டான். ஒரு குற்றவாளியைப் போல பணிந்து கொண்டு நிற்பான். பின்னர் அதே கதைதான் தொடரும். சில சமயங்களில் நான் போகும் அசுகை அறிந்து பின் பக்கமாக உள்ள அரைச் சுவர் போன்ற பகுதியால் ஏறிக் குதித்து ஓடி மறைவான். பாவமாகவும் இருக்கும்.
ஆறு மாதங்களின் பின் நான் லீவில் இலங்கைக்கு வரும் நாள் வந்தது. வீட்டுக்கு வருவதென்றால் சந்தோஷம்தானே?
நாப்போலியிலிருந்து ரோம் விமான நிலையத்திற்கு நிக்கோலாஸ்தான் என்னைக் கூட்டிப் போவதாய் இருந்தது.
ஏற்கனவே எனது குடும்பத்தைப் பற்றியும், பிள்ளைகளைப் பற்றியும் நிக்கோலாஸ் கேட்டு அறிந்திருக்கின்றான். குடும்பத்தை விட்டு இங்கு வெகு தூரம் பிரிந்து வந்திருப்பதையிட்டு அவனது கவலையையும் அவ்வப்போது உணர்ந்திருக்கின்றேன்.
நான் வீட்டுக்குப் போவது நிக்கோலாஸிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எனது அறைக்கே வந்து பொதிகளை அடுக்கும் அலுவல்களில் எனக்கு உதவினான்.
மாலை நாலு மணிக்கு ஃபிளைட்.
நாப்போலியிலிருந்து ரோமுக்கு சுமார் முன்னூறு கிலோ மீற்றர் தூரம் என நினைக்கின்றேன். பன்னிரண்டு மணியளவில் கிளம்பினால் மூன்று மணிக்குப் போய்விடலாம் என நிக்கோலாஸ் கூறினான். அதன்படி கிளம்பினோம்.
கம்பனியின் ட்றைவராக அவன் பணிபுரிந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக அவனோடு காரில் போகிறேன். வழக்கமாக வேலைக்கு வரும்போதும் போகும்போதும் அந்தக் குறுகிய இடத்திற்குள்ளேயே கண் இமைக்கும் ஸ்பீட்டில் வந்து கிறீச் என பிரேக் அடித்து நிற்பான். உறுமிக்கொண்டு றிவேஸ் எடுத்து சட்டென வெட்டிக் கொண்டு போவான். இது அவனது வழக்கமான ஸ்டைல். எனினும் ‘ஹை வே’யில் இப்படி கண் மண் தெரியாமல் ஓடுவது எனக்குக் கலக்கத்தை அளித்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அவனது வேகம் அதிகரித்துக் கொண்டே போனது.
சில தடவைகள்… “ஸ்லோ…ஸ்லோ…” எனக் கூறிக் கொண்டே வந்தேன்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்… நான் நல்லபடி வீடு போய்ச் சேர வேண்டும்… தயவு செய்து மெல்லப் போ…”
அவனது வேகம் குறைந்தது. என்னை ஒரு கடைக்கண் பார்வை மட்டும் பார்த்தான்.
இந்த வேகம் கூட அதிகம் என்பது போல ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டம் சீக்கிரமே வந்தது. வாகன நெருக்கடி ஹைவேயின் நான்கு பாதைகளும் நிரம்பியிருந்தன. அவற்றின் இடைவெளிகளூடு ஒருவாறு நுழைத்துப் புகுந்து வாகனத்தைச் செலுத்தினான் நிக்கோலாஸ். பல தடவைகள் வாகனங்கள் நகர முடியாது நின்றன. நிக்கோலாஸ் இறங்கி எதிர்த் திசையில் வரும் வாகனக்காரர்களிடம் விசாரித்தான்.
‘அந்தப் பக்கம் பெரியதொரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இரண்டு கொன்டைனர் லொறிகளும் இன்னும் சில வாகனங்களும் ஒன்றடி மன்றடியாக அடிபட்டுக் கிடக்கின்றன. பல கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகன நெருக்கடி.’
இந்த விஷயத்தை நிக்கோலாஸ் சொன்னதும் ஏற்கனவே எனக்குள் இருந்த பரபரப்பு அதிகரித்தது. இன்றைக்கு விமானத்தைத் தவறவிடத்தான் நேருமோ? நிக்கோலாஸிடம் கேட்டேன்.
“விமானத்தைப் பிடிக்க முடியாதா?”
அவன் மென்மையாகக் கூறினான். “மிஸ்டர் ராஜா… மெதுவாகப் போ, அப்படி இப்படி ஒன்றும் சொல்லக் கூடாது. உங்களை மூன்று மணிக்கு விமான நிலையத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எனது பொறுப்பு.”
இந்தக் கட்டத்தில் அவனுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. “சரி” என்றேன். “எப்படிப் போகப் போகிறாய்..?”
“ஹைவேயில் போகமுடியாது. திரும்ப நாப்போலிக்குச் சென்று கிராமங்களுக்கூடான வேறு பாதையில் போகலாம்.”
நான் வாயை மூடிக்கொண்டேன். ஒருவாறு காரைத் திருப்பி எடுத்தான். வேறு பாதையில் கார் ஓடியது. ஓடியது என்று சொல்ல முடியாது… பறந்தது. விமானத்தில் பயணிக்கும்போது அமுக்க வித்தியாசங்களைக் காதில் உணர்வது போல இந்தக் கார் பயணத்திலும் உணரக்கூடியதாய் இருந்தது. பெரும் மரங்களும், சிறு வீடுகளும் கொண்ட வளைவுப்பாதைகள். நிக்கோலாஸ் மிருகத்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தான். எதிர்ப்படும் வாகனங்களையும் முன்னே போகும் வாகனங்களையும் உரசி வெட்டி விலத்திப் போகும் லாவகம் பிரமிப்பை ஊட்டியது.
“எயார் போட்டுக்கு இன்னும் எவ்வளவு தூரம்?’ என்று கூட நான் அவனிடம் கேட்கவில்லை. வீதியிலிருந்து அவனது கலனம் திரும்பிவிடுமோ என்ற பயம்.
விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும்தான் எனக்கு மூச்சு வந்தது. காரை நிறுத்திவிட்டு அப்போதுதான் என்னைத் திரும்பிப் பார்த்தான் நிக்கோலாஸ். தனது கையில் மணிக்கூட்டைத் தொட்டுக் காட்டினான்.
சரியாக மூன்று மணி.
பொதிகளைச் சுமந்து கொண்டு என்னுடன் விமான நிலையத்துக்குள் வந்தான். புறப்படுவதற்கு முன் அவனிடம் நன்றியுடன் விடை பெற்றேன்.
“தாங்க்ஸ்… நிக்கோலஸ்..!”
ரிவோல்வரினால் தனது கன்னத்தில் தானே சுடுவது போல தனது கை விரலை நீட்டிக் கன்னத்தில் பதித்துப் பாவனை செய்தவாறு நிக்கோலாஸ் கூறினான்.
“மிஸ்டர் ராஜா… மூன்று மணிக்கு எயார் போட்டுக்கு உங்களைக் கொண்டு வந்து சேர்க்காவிட்டால்… நான் செத்துவிடுவது என்றே தீர்மானித்திருந்தேன்.”
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |