முப்பது ருபா முணகல்..!
அது நடந்து ஒரு முப்பது வருஷமிருக்கலாம். அவன் ஒர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த சமயம் அது. எங்காவது கம்பெனி விஷயமாக டூர் போனால் டிஏ டிஏ எனப்படும் பயணப்படியும் சாப்பாட்டுப் படியும் உண்டு.
அப்போது சம்பளமே முன்னூறு ரூபாதான். அளவு சாப்பாடு ஐந்து ருபா. அன்லிமிடட் முப்பது ருபா. கம்பெனி கணக்கில் முப்பது ரூபா சாப்பாடு ஒருநாளாவது சாப்பிடுவோம் என்று ஆசைப்பட்டு ஹோட்டலுக்குள் நுழைய கிட்டத்தட்ட மெயின் ரோட்டலிருந்து அரை கிலோமீட்டர் நடந்து ஹோட்டலில் டோக்கன் வாங்கி ஒதுக்குப்பறமாய் ஒர்சீட்டில் அமர்ந்தான்.
அப்போதுதான் பசிக்க ஆரம்பித்தது வயிறு.
இலை போட்டு பரிமாற ஆரம்பித்தார் சர்வர். இலையில் வைக்கப்படுபவற்றை ஓரக்கண்ணால் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். வைக்கப்படும் வரிசை தொடர்ந்தது கொண்டே இருந்தது.

ஸ்வீட்ஒன்று வாழைப்பழம் ஒன்று அவியல் பொரியல் துவரம் சட்னி பச்சடி இப்படி எதைஎதையோ வைத்துக் கொண்டே இருந்தார் சர்வர்.
இலையில் சாதத்தைக் கொட்டி ஆறுவதற்காக கைக் கரண்டியாலே பரப்பிவிட்டார் இலை மறைந்து கண்முழுக்க மல்லிப்பூவாய் சாதம் பள்ளி கொண்ட பெருமானாய் படுத்துக் கொண்டது.
பருப்புபோட்டு அடுத்து குழிக்கரண்டியில் சர்வர் நெய் வார்க்க மஞசளாச்சாதம் மாறியது. இத்தனையும் சாப்பிட வயிறில் இடமிருக்குமா சந்தேகம். இருந்தாலும் கம்பெனி காசுதானே என்கிற நினைப்பு உரமூட்ட எடுத்து விழுங்க ஆரம்பித்தான்.
சாப்பிட சாப்பிட கவளம் கவளமாய் போடப்பட்ட உணவு தொட்டை தொட்டு இறங்க மறுத்து அடம்பிடித்தது. எகிறியது மேலே! சர்வர் சாம்பார் ரசம் தாண்டி பாயாசம் பொழிய விட மறுத்து வழிச்சு நக்க விக்கல் வெகுண்டு எழுந்தது.
தண்ணி குடிக்க இடமில்லாமல் விழிக்க ஐஸ்கிரீம் வந்தது. தந்த பணத்துக்கு தயவு தாட்சண்யம் பார்க்காது இறக்குமதி செய்து இலை மூடக்கூட முடியாமல் எழுகையில் ஐஸ்பீடா தந்தார். வாங்கி வாயில் அதக்கி நடந்து மெயின்ரோடு திரும்ப எழுந்த போது கால்கள் ஒத்துழைக்க மறுத்து உதறலெடுத்தது.
ஏண்டா சாப்பிட்டோம் என்றாகி மனசு கடவுளிடம் கெஞ்ச ஆரம்பித்தது ‘ஆண்டவனே! எப்பிடியாவது என்னைக் கீழே விழாமல் மெயின்ரோடு கொண்டு சேர்த்துடு! உனக்கு ஒரு ஐந்து ருபாய் உண்டயலில் சேர்த்துடறேன்.!’
தடுமாறித்தடுமாறி மெயின் ரோடடு எட்டுகையில் ஒருகையில்லாத பிச்சைக் காரன் ‘தர்மம் சாமி ‘ என்று கெஞ்ச …
‘அடுத்தவன் காசில் கம்பெனி காசில் அளவுக்கு மீறி உண்ட அவஸ்தை தீர்க்க ஆண்டவனுக்கு எதுக்கு ஐஞ்சு ரூவா? கடவுளைவிட கையில்லாதவனுக்குத் தருவதுதான் சரி. நியாயம். கடவுளின் தர்மத்தைவிட கையில்லாதவனுக்குப் பசியாற்றச் செய்யும் நியாயமே மேல்’ என்று காசை போட்டுவிட்டு இனி தகுதிக்குமீறி கம்பெனி காசில் உண்பதில்லை என்ற தீர்மானத்தோடு நடந்தான் தெம்பாக.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |