முன்னையிட்ட தீ
அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய் ஆழ்ந்து சுழித்து, ஆயிரம் இரகசியங்கள் தன் ஆழத்தில் பொதிந்திருப்பதை அழுத்திச் சொல்வதைப் போல. வனத்தின் இயல்புக்கு மிகவும் முரணாக கரையோரத்தில் ஆற்றின் வெள்ளம் உஷ்ணமாயிருந்தது ஏன் என்பது விளங்காமால் அவன் கைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு நேரமாக ? அவனுக்கே அது துலங்கவில்லை. நேரமா அல்லது நாட்களா அல்லது மாதங்களா அல்லது .. .. ? பிடி பட வில்லை. சமீப நாட்களாய் இந்த கால வர்த்தமானத்தைக் குறித்து அவன் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சிப்பது அவனுக்கே புரிவது போலவும், அல்லது புதிர் போலவும். கரங்களில் படிந்த கரை போனால் போதும் என்பதான அக்கறையுடன் தொடரும் அவனுடைய முயற்சி. ஆற்றின் மறுகரை அடர்ந்து செறிந்திருக்கும் மரங்கள் புதர்களின் ஊடாய் இவனுக்கு அதிகம் புலப்படுவதில்லை. ஆதலால் அக்கரைக்கு அப்பாலும் என்ன என்பது பற்றிய ஆர்வமும் அதிகமில்லை. ஆனால் இவனிருக்கும் இந்தப் பக்கத்திலிருந்து வெகு எளிதாக கடந்து செல்லக் கூடிய தூரத்தில் ஆற்றின் மத்தியில் ஒரு சிறிய தீவு போல சிறிதும் பெரிதுமான நான்கைந்து மரங்கள், பாறைகள், புதர்கள் மண்டிய பசும் புல்தரையில் ஒரு பெரிய மரத்தினடியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டேயிருக்கிறது; தீயின் வெம்மை மரத்தை எரிப்பதாகத் தெரியவில்லை; நீர் சூழ்ந்த புல் தரையின் ஈரமும் தீயை அணைப்பதாகத் தெரிய வில்லை. எரியும் தீயை விட்டு பக்கவாட்டில் சற்று தள்ளி ஈரமான புல் தரையில் , ஆற்றின் நீரில் அதன் நிழல் அலை அலையாய் படர, அடர்ந்த பிடரியுடன், சிம்மாசனமே தேவையற்ற தன் கம்பீரத்தின் ஆளுமையை அறிவிக்கிற விதமாய் முன்னங்கால்களை நீட்டி , கண்களில் தெறிக்கிற தீர்க்கத்துடன் , அதன் கனத்த சரீரத்தை அவ்வப்பொழுது லேசாக உதறிக் கொண்டு இவனையே கவனிப்பதைப் போல. காவலிருக்கும் அந்த சிங்கத்தை குறித்து அதிகமாய் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் பயம் தெளிந்து விட்டது என்றும் சொல்ல முடியாது. இப்பொழுதும் அதை நேருக்கு நேராக அவன் பார்ப்பதில்லை. அது தன் கால்களைக் கொண்டொ அல்லது பற்களினாலோ தன் உடல் சொறியும் நேரங்களிலும் அதன் சிறிய நடைப் பயிற்சி நேரங்களிலும் மட்டுமே அவன் அதை பார்க்க முயற்சிப்பான். அதன் காவல் தீரவோ இவன் காத்திருப்பு முடியவோ – அது இன்னும் எத்தனை காலமோ ? – அதிலும் ஒரு தெளிவில்லை. அவன் எழுந்து நின்று நீர் துளிகளை விலக்க கை உதறிய போது – சுரீரென்று
விரல்களில் வலி தெறிக்க நாராயணன் கட்டிலிலிருந்து பதறி எழுந்து உட்கார்ந்தான். பக்கத்தில் மர ஸ்டூலில் இருந்து சிறிய டிக் டிக் ஒலி எழுப்பிக் கொண்டிருந்த கடிகாரமும், அவன் கட்டிலை விட்டு சற்று தள்ளி, முகிழப் போகிற மலர் போல பக்கவாட்டில் ஒருக்களித்து அயர்ந்த உறக்கத்திலிருந்த அருமை மகளும் அவனுடைய கலைந்த கனவின் சாட்சிகளாக. களவும் காவலும் போல கனவும் உறக்கமும் துரத்தும் அவனுடைய நாட்கள்; புரையோடிப்போய் மரத்துப் போனாலும் முற்றிலுமாய் மறைய மறுத்து முள்ளாய் உறுத்தும் சில இரவுகளாய்.
காலையில் நாராயணன் தன் அன்றாடத்தை துவங்கினான்; சற்று வழக்கத்திற்கு முன்னதாகவே. அவன் இன்று விமான நிலையத்தில் நகருக்கு வந்திறங்கும் சில முக்கியமான நபர்களை வரவேற்று, நகரத்தில் அவர்கள் தங்கவிருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விட்டு, பின் அவர்களுடனேயே காத்திருந்து, நகரில் அவர்களுடைய பயணத் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். இன்னும் நான்கைந்து தினங்களுக்கு அநேகமாக அவர்களுடன்தான் அவன் நகர் வலம் வரவேண்டியிருக்கும் என்று தன்னுடய வாகனத்தை அவன் பதிவு செய்திருக்கும் அவனுடைய சேவை நிறுவனம் அவனுக்கு கோடு காட்டியிருந்தது. வழக்கத்திற்கும் சற்று அதிகமாகவே வருகிறவர்கள் சில முக்கியமான வேலைகளுக்கு வருவதாகவும், பொருத்தமான நபராக அவன்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும் எல்லா ஜோடனைகளுடனும்தான் அவனுக்கு இந்த வேலை தரப் பட்டிருந்தது. பதினைந்து வருட ஓட்டுனர் தொழிலில் நாராயணனுக்கு இந்த வார்த்தைகளெல்லாம் பழகியிருந்தன. தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்கள் எத்திறத்தினராய் இருந்தாலும் முடிந்த வரை அவர்கள் மனது நிறைவுறும் படி அவர்களை அழைத்துச் செல்வது நாராயணனுக்கு இயல்பானது. அது அவன் இரத்தத்தில் வந்தது. ஓடி உருளும் உணர்வற்ற இந்த இயந்திர வாகனத்திற்கு , பயணிகளின் சவ்கரியத்தையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி பயணத்தை இனிதாக்குவதுதான் ஓட்டுனரின் திறமையும் கலையும் என்பது அவன் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டது. பயணிகளை தூக்கிச் சுமப்பதென்னவொ வாகனம்தான்; என்றாலும் பயணிகளின் வலி அறியாமல் அவர்களை வழி நடத்திச் செல்வதுதான் திறமையான ஓட்டுனரின் தொழில் இரகசியம். அப்பாவிற்குப் பின் அவருடைய மோறீஸ் மைனரும் சொற்ப காலத்தில் அவருடனேயே விடை பெற்றுக் கொண்டது. அப்பாவும் அவருடைய மோரீஸ் மைனரும் தங்கள் திராணிக்கும் அதிகமாகவே அவர்களது ஒட்டத்தை ஓடி முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மோரீஸ் மைனருக்குப் பின் சில வருடங்கள் வாடகைக்கு ஓட்டி அதன் பிறகு ஒரு பழைய அம்பாஸடர் என்று துவங்கி தற் சமயம் ஒரு மாருதி ஸ்விஃப்ட் என்று வளர்ந்திருக்கும் நாராயணனுக்கு, தற்கால சேவை நிறுவனங்கள் பேசுகிற, அதிகம் சிரத்தையெடுத்துக் கொள்கிற வாடிக்கையாளர் சேவை என்கிற விஷயங்களெல்லாம் சில சமயங்களில் சிரிப்பைத்தான் தரும். எந்த வேலையாயிருந்தால் என்ன? அவனவன் தன் வேலையில் உண்மையோடும் பொறுப்பாயும் இருந்தால் போதாதா? இந்த வார்த்தை ஜோடனைகளெல்லாம் வரைமுறையற்ற வணிகப் போட்டியின் நிர்ப்பந்த நிதர்சனங்களாய்த்தான் அவனுக்குத் தெரிந்தது.
நகரம் தன் காலை சோம்பல் முறித்து பளிச்சிடும் வெளிச்சத்தில் வீதியில் சுறுசுறுப்பாகியிருந்தது. அந்த காலை வேளையிலும் நகரத்தின் பிராதான சந்தையின் முன் ஒரு வாகன நெரிசலில் நாராயணன் வேகம் குறைந்து, ஊர்ந்து நின்றான். சரக்கு மூட்டைகளால் கர்ப்பமாகியிருக்கும் பெரிய வாகனங்களின் சந்தைப் பிரவேசமும் , அவைகளின் ஹார்ன் சத்தம் பிரசவ வேதனயைப் போலவும், உடல் வழியும் வேர்வையின் ஊடாக தள்ளு வண்டிகளில் உள் நுழைய முயற்சிக்கும் உழைப்பின் சாகஸம், சிறிய பெரிய இரு சக்கர வாகனங்களில் அன்றையக் கொள்முதலை முடித்து தீவிரிக்கும் சிறிய வியாபரிகள், தலை சுமை பெண்கள் , இவர்கள் அத்தனை பேரையும் ஒழுங்கு படுத்துவதான கோதாவில் கைய்யில் ஒரு சிறிய பிரம்புடன், தனக்கு காலை பணி தந்த, தன் தலைமைக் காவலரை திட்ட முடியாமல் திருவாளர் பொது ஜனத்துடன் திட்டி தீர்த்துக் கொண்டு ஒரு போக்குவரத்து காவலர், – சந்தையின் இயல்பான இந்தக் களேபரங்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் வழி கோரி, வழி தேடி, வாழத் துடிக்கும் வலி மிகுந்த மனித வாழ்வின் துடிப்பான சித்திரம். ஒரு வாகனத்தோடு இரைச்சல் மிகுந்த வீதிகளில் உருளுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிற நாராயணனுக்கு இது பழகிப் போன ஒன்று. அவனும் இதற்குள் ஒளிந்து நெளிந்து உருண்டு புரண்டுதான் தொடர்கிறான். ஒவ்வொரு நாளும் தன் ஓட்டத்தை துவங்கி ஓடி முடிக்கிறான். எதுவானாலும் கால ஓட்டத்தில் மானுடம் என்கிற பயணம் தடை படுகிறதா என்ன?
இது வரையிலும் தனது பாடப் புத்தகத்தில் மூழ்கியிருந்த அவனுடைய மகள், கார் நின்றதும் தலையை உயர்த்தி பார்த்து “இன்னும் மார்க்கெட்ட தாண்டலியா?” என்ற பதில் எதிர் பாராத கேள்வியை அவனிடம் வீசி விட்டு மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினாள். அவள் அவசரம் அவளுக்கு. அநேகமாக முடிந்த வரை காலையில் தன்னுடன் பள்ளிக்கு பயணமாகும் மகளின் அந்த அருகிருப்பே நாராயணனுக்கு ஒரு இதமான நிறைவான அனுபவம். ஒரே மகள் ஸ்வேதாதான் அவனுடைய வாழ்வின் அர்த்தம், வாஞ்சை, நிறைவு, அருமை, பெருமை எல்லாமும். மகளின் சீறுடை, ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அவளுடைய ஆங்கிலம், பள்ளியிலும் பாடத்திலும் அவள் காண்பிக்கும் சுறு சுறுப்பு இவை எல்லாவற்றையுமே தன்னுடைய சொந்த சாதனையாக நினைத்து பூரிக்கிற சராசரி இந்தியப் பெற்றோரின் வரிசையில்தான் நாராயணன் என்றாலும், மகளை இப்படியாய் அவையத்து முந்தியிருப்ப செய்வதில், நாராயணன் அதிகமாய் உரிமை பாராட்டுவதில் நியாயமுண்டுதான். தன்னுடைய தகப்பன் அவனுடைய படிப்பு விஷயத்தில் அவ்வளவாய் அலட்டிக் கொள்ள வில்லை என்கிற ஆற்றாமை நாராயணனுக்கு இப்பொழுதும் உண்டு. அவருடைய மோறீஸ் மைனருக்கு செய்ய வேண்டிய முறைவாசல்களாக தினசரி துடைப்பது, வாரம் ஒரு முறை கழுவுவது, பேட்டரி நிலவரத்தை உறுதி செய்வது, ஸ்டெப்னி உட்பட டயர்களின் காற்றழுத்தம் என்பவற்றில் தவறினால்தான் ஏச்சும் பேச்சும், கைகளில் என்ன கிடைக்கிறதோ அது எரியப் படுவதுமாய் என்கிற உபசரிப்புகள் கிடைக்கும். அவரைப் பொறுத்த மட்டும் நாராயணனும் மோறீஸ் மைனரின் பராமரிப்பு உதிரி பாகம்தான். பிள்ளைகள், அதிலும் ஆண் பிள்ளைகள் குடும்பத்தின் உபரி வருமானத்தின் ஊற்றாய் உருவகிக்கப் படுகிற சூழ்நிலைகளில் அவதரித்த நாராயணனுக்கு அவனுடைய உயர் நிலைப் பள்ளி முடித்த நிலவரமே பெரிய சாதனைதான். காலங்கள் மாறும்; நாராயணனைப் போன்றவர்கள் தம் பெற்றோர் செய்தது தவறு என்று உணர்ந்து தங்கள் வாரிசுகளின் கல்விக்காய் கடுமையாய் ஈடுபடுகிற ஒரு சமூக விழிப்பை இந்த தேசம் சாதித்திருக்கிறது. இப்படியொரு ஆர்வத்தை தந்து கல்வியில் அரைக் கிண்று தாண்டியிருக்கிற தேசம் உயர் கல்வியை இலவசமாக இல்லா விட்டாலும், நியாய விலையில் கிடைப்பதைக் கூட உறுதி செய்யாமல் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு , அதை வெளியே நின்று ஒரு பார்வையாளனைப் போல வேடிக்கை பார்ப்பதாகத்தான் நாராயணனுக்கு தோன்றியது. அவன் என்றோ தீர்மானித்து விட்டான். தலையை அடகு வைத்தாவது மளுடைய இந்த சீறுடை மருத்துவத்தின் வெள்ளை கோட்டா, வக்கீலின் கறுப்பு அங்கியா, விமானியின் பளிச்சிடும் வண்ணச் சீருடையா, ஒரு பொறியாளனின் சாதனை உடையா ? எதுவாக மேம்படுவதோ? அது மகளின் விருப்பம். ஆனால் அவனுடைய அடுத்த தலைமுறை இந்த சமூகத்தின் அடுத்த மேலடுக்கில் நிச்சயமாய் நிலை கொண்டாக வேண்டும் என்பதில் நாராயணன் உறுதியாயிருந்தான். மறுபடியும் வேகம் குறையும் கார், பள்ளி நெருங்குவதை உணர்த்தியது; கீழே இறங்கி பின் இருக்கையிலிருந்து தன் புத்தக சுமையை எடுத்து தோள்களில் போட்டுக் கொண்டு, கைய்யில் உணவுப் பைய்யுடன் அப்பாவுக்கு “பை” சொல்லிவிட்டு ஸ்வேதா மின்னல் வேகத்தில் உயர்ந்த இரும்புக் கதவுகளினூடாய் விரிந்து பரவும் பள்ளி வளாகத்தின் மைதானத்திற்குள் சீருடைகளின் பட்டாம் பூச்சி படபடப்புக்குள் மின்னலாய் கலந்து மறைந்தாள்.
ஒரு நிமிஷம் மகளின் முதுகை தரிசித்து விட்டு நாராயணன் விமான நிலையம் நோக்கி வேகமெடுத்தான். காலைக் கதகதப்பில் தனக்கேயுரிய பரபரப்பில் விமான நிலையத்தின் வருகை பிரிவு சுறுசுறுப்பாகியிருந்தது. சந்திப்பிலும் பிரிவுகளிலும் மலர்கிற மனித உறவுகளின் உயிர்ப்புகளாய், கைகளில் பூங்கொத்துகளுடனும், காத்திருந்த வருஷங்களை தங்கள் விழிகளில் விரியும் பரபரப்புடனும் மகனுக்காய், மகளுக்காய், கணவனுக்காய், மனைவிக்காய், அப்பாவிற்காய், நண்பனுக்காய் காத்திருக்கும் கூட்டத்தோடு, செய்யும் தொழிலுக்காய் நாராயணனும் அவனைப் போன்ற மற்ற ஓட்டுநர்களும் தங்கள் விருந்தினர்களின் பெயர்கள் எழுதிய ஹோட்டலின் அறிவிப்பு பலகைகளுடன் அந்த நாளின் தங்கள் பணி துவங்கத் தயாராயிருந்தனர்.
ஒரு சாம்பல் வண்ண திறந்த மேல் கோட்டுடன், கழுத்தில் டை இல்லாமல், அகன்ற நெற்றி, ஒன்றிரண்டு முடிகளுடன் அலை பாயும் வழுக்கைத் தலையுடன் ஒரு மத்தி வயதுக் காரரும், இடது தோளில் தொங்கும் பெரிய பை, கைய்யில் மடித்த கோட்டுடன் அலை பாயும் கேசம் நெற்றியில் புரள தீர்க்கமான கண்களுடனான இளைஞன் என ஜோடியாக வந்த இருவரும் நாராயணனை நோக்கி கை காட்டினர். ஓடிப்போய் அவர்கள் உடமைகளை வாங்கிக் கொண்டு தன் வாகனத்திற்கு அவர்களை வழி நடத்தினான். போகிற வழியில் இளைஞன் நகரின் சில இடங்களைக் குறித்த தூரம், தங்கும் விடுதியிலிருந்து அந்த இடத்திற்கு போய்ச் சேரும் நேரம் குறித்து இவனை விசாரித்தான். விடுதிக்கு போய்ச் சேர்ந்த இருபது நிமிடங்களில் இவனை மேலே அவர்கள் அறைக்கு அழைத்தனர்.
இளைஞன் அவர்களுடைய மூன்று நாள் வேலை திட்டத்தை விவரித்தான். நகரின் பிரதான இரயில் நிலையம், நகரின் ஊடாகப் பரந்து செல்லும் நதியின் இரு கரைகளையும் இணைக்கும் கம்பீரமான நீண்ட பாலம், முக்கியமான கடை வீதியில் ஒரு குறிப்பிட்ட இடம், புற நகர் பகுதியில் இருக்கும் ஒரு ப்ரசித்தி பெற்ற குடியிருப்பு பகுதி என்று ஒவ்வொன்றாக அந்த இளைஞன் பட்டியலிடும் போது ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் அந்த பட்டியல் நீள்வதைப் போல பட்டது. எதுவானால் என்ன? இரண்டு வருடங்களுக்கு முன்னால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் நகரின் பிரதான சாலையில் தன்னுடன் பயணிக்குமாறு வற்புறுத்திய ஒரு அமெரிக்க சுற்றுலா பயணிக்கு உடன் பட்டவன் நாராயணன். ஆகையினால் இவர்களுடைய பார்வையிடும் ஸ்தலங்களின் பட்டியல் அவனுக்கு எதுவும் வித்தியாசமாகப் படவில்லை. தலையசைத்த நாராயணன் மறுபடியும் திட்டவட்டமாய் போகும் இடத்தின் தூரம், அதற்கு போய்ச் சேர எடுத்துக்கொள்ளும் நேரம், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கணக்கிலெடுத்து ஒரு பயண திட்டத்தை முன் மொழிந்த போது, அந்த இளைஞன் , நாராயணனுடைய வரிசையில் சிலவற்றை முன்னும் பின்னுமாக கலைத்து, அவனுடைய ஒழுங்கின் படியே பயணம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தினான். காலம், பண விரயம் ஒரு விஷயமில்லையென்று கூறவும் நாராயணன் உடன் பட்டான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூவருமாய் முதலில் நகரின் பிராதான இரயில் நிலையம் நோக்கி, முன் பகலின் போக்குவரத்து நெரிசலில் மூழ்கியிருந்த வீதிகளின் வழியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். பிறந்து வளர்ந்து கடந்த நாற்பது வருட காலமாக தான் இந்த நகரத்தில்தான் உழல்வதாக இளைஞனின் “ எத்தனை வருஷமாக இந்த நகரத்தில் இருக்கிறீர்கள்?” என்ற இளைஞனின் கேள்விக்கு பதிலளித்தபோது அந்த இளைஞன் ஆங்கிலத்தில் “ஓ கிரேட்” என்று ஆங்கிலத்தில் வரவேற்றான். சட்டென்று தன் கூட்டாளியிடம் திரும்பி “ஹீ வில் பீ ஓஃப் மச் ஹெல்ப்ஃபுல் டு அஸ்” என்று நாராயணன் நிச்சயமாய் தங்களுக்கு மிகவும் உதவியாயிருப்பான் என்பதை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டான்.
இரயில் நிலையத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனம் நின்ற போது இளைஞன் நாராயணனையும் அவர்களுடன் வரச் சொன்னான். அவர்கள் இருவரும் இரயில் நிலையத்தின் தலமை மேலாளருடன் உரையாடிய இருபது நிமிடங்கள் அவன் அவர்களுக்காக வெளியே காத்திருந்தான். இரயில் நிலயம் தன் முன்பகலின் குறைவான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. விளம்பரத் தொலைக் காட்சியில் எழுபதுகளில் வெளி வந்த இந்தி திரைப் படத்தின் இளம் நாயகனாக அமிதாப் பச்சன் தன்னந்தனியனாக ஐந்து நபர்களை பந்தாடிக் கொண்டிருக்கும் ஒரு சண்டைக் காட்சி. அந்தக் காட்சியின் அடியில் மெதுவாய் ஊர்ந்து மறையும் ஒரு பிரபல கருத்தடை சாதனத்தின் விளம்பரம். இந்தக் கலவையை பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் ஒரு காத்திருக்கும் பயணியர் குடும்பம். அவனுடைய விருந்தினர்கள் இருவரும் ஒரு மத்தி வயது இரயில்வே அதிகாரியுடன் வெளியே வந்தனர். இளைஞன் நாராயணனையும் தங்களுடன் வருமாறு சைகை காட்டினான். நால்வருமாய் சிறிது தூரம் நீண்ட நடை மேடையயை கடந்து, மின் தூக்கியில் ஏறி மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து ஏழாவது நடை மேடையில் இறங்கினர். இரயில்வே அதிகாரி “ இந்த நடை மேடையில்தான்” என்று சொல்லி அவர்களை இன்னும் சற்று முன்பு வழி நடத்தி “ சரியாக மூன்று பெட்டிகளும் இங்கேதான் எரிந்து தணிந்தன” என்றார். இரும்புத் தண்டவாளங்களை நிதானமாய் கண்களால் அளவெடுத்த இளைஞன் முன்னும் பின்னுமாக போய் சில மாறு பட்ட கோணங்களில் நடைமேடையையும், தண்டவாளங்களையும் தன் கேமிராவில் பதிவு செய்து கொண்டான். மூவரும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறிய ஒரு குரூரத்தை நினவு கூர்ந்த அவர்கள் உரையாடலில் உஷ்ணமில்லை. மெளனமாய் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த நாராயணனின் கண்களில் கொளுந்து விட்டெறிந்த அந்த தீயின் வெம்மை தெறித்தது. நகரவாசிகளுக்கு அது எளிதில் மறந்து விடக் கூடிய சம்பவமல்ல. சாவின் கோரம் இப்படியும் எரிந்து கருகிய மனித உயிர்களின் மேல் ஒரு சாபமாய் பிரவேசிக்கும் என்பதை எவரும் எதிர்பார்த்திருந்ததில்லை. நாராயணனுக்கோ ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கூட அங்கு நின்று கொண்டிருப்பதே மிக மிகத் துரதிர்ஷ்டமாகவும், துயரமாகவும், சிரமமாகவும். அவர்கள் மூவரும் இன்னமும் தணிந்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தனர். தன் கைய்யிலிருந்த ஒரு சிறிய அரை நோட்டில் அந்த இளைஞன் அதிகாரியிடம் பேசிக் கொண்டே குறிப்புகள் எடுப்பதை நாராயணன் கவனித்தான். இருவரிடமும் ஒரு கைகுலுக்கலுடன் அந்த இரயில்வே அதிகாரி விடை பெற்ற பின்னரும், அவர்கள் இருவரும் இன்னும் அந்த இடத்தை தங்கள் கண்களாலும் வார்த்தைகளாலும் அளந்து கொண்டிருந்தனர். வந்த வேலையில் ஓரளவு திருப்தியாகி அவர்கள் புறப்படத் தயாராகி விலகி நின்றிருந்த நாராயணனை நெருங்கி போகலாம் என சகை காட்டினர். “ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த இடத்தில் இரயில் பெட்டிகள் தீ வைக்கப் பட்டு எழுபது எண்பது பேர் உயிரோடு எரிக்கப் பட்டார்களே அது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா?” என்று நடந்து கொண்டே கேட்ட இளைஞனின் கேள்விக்கு நாராயணனிடமிருந்து மிக மிக இறுகிய ஒரு அழுத்தமான கசந்த சிரிப்புதான் வெளிப் பட்டது. தன் பதிலுக்காக நாராயணனின் முகத்தை இப்பொழுதுதான் பார்த்த இளைஞன் சற்றே அதிர்ந்தான். நிச்சயமாய் காலையில் தங்களை விமான நிலையத்தில் அத்தனை உற்சாகமாய் வரவேற்ற முகமல்ல அது; இரயில் நிலையம் வரும் வரை கூட சுறு சுறுப்பாய் ஒத்துழைப்பாய்த்தான் இருந்தான். இந்த அரை மணி நேரத்தில் என்ன நடந்தது? ஏன் இத்தனை இறுக்கம்? பதில் நாராயணனிடமிருந்து வந்தது. “ முழு நகரம் மட்டுமல்ல; இந்த நாடே கொதித்தெழுந்த சம்பவத்தை இவ்வளவு லேசாய் கேக்றீங்களே? அது ரொம்பவே மோசமான நாள். இன்னொரு மாதிரி பாத்தா அந்த கஷ்ட்டத்துக்கும், நஷ்ட்டத்துக்கும், துக்கத்துக்கும் பின்னாலும் கூட, எத்தனயோ ஜாதி சனம் இருக்ற நம்ம நாட்ல ஒறவுக்கும், பழக்க புழக்கத்துக்கும் ஒரு வேற வழியையும் யோசனையும் தீர்மானமான நாள்ன்னு கூட சொல்லலாம். வேண்டாம் ஸார், விடுங்க” என்றவன் நிதானமாக முயற்சித்தான். “ சரி; இப்ப வேண்டாம் சாப்டதுக்கப்றம் இதப் பற்றிப் பேசலாம்” என்ற இளைஞன் அருகிலிருக்கும் ஏதாவதொரு நல்ல உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லக் கூறினான். நாராயணனையும் வற்புறுத்தி உடன் அழைத்துச் சென்று மதிய உணவருந்தினார்கள்.
நாராயணன் அமைதியாய் அதிக ஆர்வமில்லாமல் உணவை அளைந்து கொண்டிருந்ததை இளைஞன் கவனித்தான். சாப்பாடு முடிந்து பெரியவர் ஒரு புகையில் இளைப்பாறினார். போக வேண்டிய அடுத்த இடத்தை இளைஞன் சொன்ன போதுதான் , காலையில் பார்க்க வேண்டிய இடங்களாக அவன் கொடுத்த பட்டியலின் தொடர்பு அவனுக்கு இப்பொழுது புலப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் நகரில் நடந்த, இந்த நாட்டையே உலுக்கிய மதக் கலவரம் நடந்த இடங்களையெல்லாம் பார்வையிடுவதுதான் அவர்களின் பயணத் திட்டம். அஞ்சு வருஷத்துக்கப்றம் இவ்ளவு மெனெக்கெட்டு பாத்து? பாத்து என்ன செய்யப் போறாங்க? இவங்க யாரு? இன்னும் ரெண்டு நாள் இன்னும் ஆறாம இருக்ற புன்னக் கீறி விடவா? நாராயணனுக்கு தேவயில்லாமல் ஒரு கிடுக்கிக்குள்ள மாட்டிகிட்டோமோ என்ற சின்ன எரிச்சல் ஏற்பட்டது. மாசத்தில மூனு நாலு வாட்டி சொப்பனமா தூக்கம் கலயற தொந்தரவு தவிர , போராடி ரெண்டு வருஷமா எல்லாத்தயும் மறந்து இயல்புக்கு திரும்பியிருக்ற நாராயணனுக்கு இன்னும் ரெண்டு நாளும் அதுக்கப்றமும் பெரிய தல வலியாயிருமோங்ற பயம் பிடித்துக் கொண்டது. நகரின் கேந்திரமான கடை வீதியில் சம்பவம் நிகழ்ந்திருந்த மும்முனை சந்திப்புக்கு வந்து சேர்ந்தார்கள். வீதி மதிய சோம்பலில் ஒரு சிறிய உறக்கத்திலிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இருவரையும் இறக்கி விட்டு காரை காவல் துறை அனுமதித்திருக்கும் இடத்தில் தேடி பிடித்து நிறுத்திய நாராயணன் தன் இருக்கையில் சாய்ந்து அமைதியாக முயன்றான். மறு படியும் மனம் ரணகளமாகும் போல அவனுக்கு தோன்றியது. எதுவானால் என்ன? அவனுடைய தொழில் வாடிக்கையாளர்கள் போகச்சொல்லும் இடத்திற்கு போவது. அந்த இடத்திற்கும் அவனுக்குமுள்ள மனப் பிராந்திகளையெல்லாம் வாடிக்கையாளர்களின் வேலையோடு போட்டு குழப்பிக் கொள்வது நியாயமில்லை; அது சிறு பிள்ளைத் தனமும் கூட என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். நடந்து முடிந்த கலவரத்திற்கு பின் இந்த நாட்டுக்கு முழு நகரமுமே ஒரு காட்சிப் பொருளாத்தான் மாறுச்சு; இப்பவும் அப்டித்தான் தொடருது. கலவரத்தின் காயம் ஆறிருச்சுன்னு சொல்ல முடியாது; அது நீறு பூத்த நெருப்பா கனண்டுக்கிட்டுதான் இருக்கு. ஒரு கூட்டம் வாரத்ல ஒரு நாள் இதப் பத்தி ஞாபகப் படுத்திகிட்டே இருக்குன்னா மத்தவங்க நேரம் வாய்க்கரப்பல்லாம் அதப் பத்தியே பேசி டென்ஷன அப்டியே வச்சு குளிர் காய்ற நெலவரம்தான் தொடர்ந்துகிட்டிருக்கு.
ஆகையினால்தான் நாராயணன் மாதிரி எத்தனை பேர் மன உளைச்சலில் உறக்கம் தொலைத்து கனவில் களைத்துப் போகிறார்கள் என்பதைப் பற்றி நகரில் யாருக்கும் அக்கரை இருப்பதாகத் தெரியவில்லை. நடந்த குரூரத்தை, அசிங்கத்தை, அவலத்தை ஒரு கெட்ட கனவாகத் துடைத்து விட்டு, மனசில ஏற்பட்ட காயங்களை மட்டும் ஆறாமல் காப்பாற்றுகின்ற மிகப் பெரிய கபட போதனையிலிருந்து இந்த நகரம் விடுபட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் கலவரங்களில் சம்பத்தப் பட்டவர்களும், சம்பத்தப் படாதவர்களும், பாதிக்கப்பட்டவர்களும், தப்பித்துக் கொண்டவர்களுமாக எல்லோருமே சேர்ந்து அதிக உறுத்தலில்லாமலேயே நாட்களை நகர்த்த முடிகின்றது. வருஷங்கள் ஓடியும் யார் யாரோ வந்து இன்னும் இது பற்றி பார்க்கிறார்கள் பேசுகிறார்கள் என்றால் அவ்வளவாய் நகரத்தின் முழு சகஜமும் இனனமும் ஒரு நச்சாய் புகைந்து கொண்டிருப்பதால்தானே? இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் தனக்கு வாய்த்த வாடிக்கையாளர்களை அதற்க்காக எப்படி குறை கூற முடியும்? எதுவானாலும் நாராயணன் பிழைப்பிற்கான தன் வேலையில் உண்மையாய் இருக்க வேண்டும். மற்றவையெல்லாம் பிறகுதான்.
அவனுடைய வாடிக்கையாளர்கள் இருவரும் இப்பொழுது ஆய்வு செய்து கொண்டிருக்கும் இடத்தை நடந்து முடிந்த கலவரத்தின் ஒரு சிறிய ஆனால் முக்கிய குருஷேத்ரம் என்றுதான் சொல்ல வேண்டும். கடை வீதியில் குறிப்பிட்ட அந்த ஒரே இடத்தில் அவர்கள் அலங்கார தரை விரிப்புகள் மற்றும் மரத்திலும் இரும்பிலுமான ஆடம்பர இருக்கைகள் தயார் செய்கிற தொழில் வியாபாரத்தில் சிறிதும் பெரிதுமாய் அடுத்தடுத்தும் எதிருமாய் முப்பது நாற்பது கடைகளாக கோலோச்சியிருந்தார்கள். நகரத்தில் அவர்களுடைய பொருளாதார அடிப்படைக்கும் செழுமைக்கும் அந்த தொழிலும் இடமும்தான் கேந்திரம்; அடிப்படை உத்தரவாதம். எனவே எதிரணியினர் அதை குறி வைத்தனர். இன்னமும் புகை படிந்து, கருகிய கதவுகளுடன் வழக்குகள் முடியாததாலோ அல்லது வணிகத்தை ஒரேயடியாக முடித்துக் கொண்டதாலோ ஏழெட்டு கடைகள் மெளன சாட்சிகளாய் கடை வீதியில் வெறித்துப் பார்த்த வண்ணம் நிற்கின்றன. சரக்குகளோடு மனித உயிர்களும் எரிந்து கருகின; உள்ளேயிருந்து முதுகில் தீயோடு ஓடி வந்தவர்களை வெளியே இருந்த வன்முறைக் கும்பல் கைய்யிலிருந்த ஆயுதங்களைக் காட்டி மறுபடியும் உள்ளே ஜீவ சிதையாக்கியதுதான் குரூரத்தின் உச்சம். கண் தெரிய எரிந்ததா? அல்லது உயிர் பிழைக்க ஓடி வந்தவனை மறு படியும் உள்ளே துரத்திய வன்முறைக் கும்பலின் வரை முறையற்ற வண்மமா? உண்மையில் எது தீ? கருகும் மனிதத் தோலின் நாற்றம் பொறுக்க முடியாமல் முழு அலங்காரக் கடை வீதியும் சுடுகாடானது. உண்மையிலேயே கருகியது எது?. நாராயணனுக்கு பெரிய வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் ஒரு முறை உள்ளமும் உடலும் லேசாக நடுங்கி ஒடுங்குகிறது. எத்தனை பேர் எரிந்தார்கள்? சரியாகத் தெரியாது. குடும்ப பொது விநியோக அட்டைகளில், ஓட்டுனர் உரிமங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தேடிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. சரியாகச் சொல்வதென்றால் ஏற்கனவே அழுகிக் கொண்டிருந்த முழு நகரத்தின் ஒட்டு மொத்த மன சாட்சியும் எரிந்ததாகத்தான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை சரி செய்து சுத்தம் செய்து மறு படியும் அந்த வழியாக மனித நடமாட்டத்தை உறுதி செய்யவே பத்து தினங்களுக்கு மேல் ஆகியது. காவல் துறையும் இராணுவமும் தங்கள் கடமை தவறாமல் எரிந்து கருகிய பிணங்களையும், கசிந்து உருகிய ஆவிகளையும்தான் காவல் செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
கிட்டத் தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை ஆய்வு செய்தபின் நாராயணனை அழைத்தார்கள். அந்த இளைஞன் சோர்ந்து போயிருப்பது போலத் தெரிந்தது. அவனுடைய குறிப்பு புத்தகத்தில் நிறைய பக்கங்கள் எழுதி புரட்டப் பட்டிருந்தன. பெரியவர் இன்னும் அமைதியாயிருந்தார். இளைஞன் எங்காகிலும் அமர்ந்து ஒரு நல்ல டீ குடிக்க வேண்டுமென்று நாராயணனிடம் விண்ணப்பித்தான். நகரின் பழமையான பெரிய தேவாலயத்தின் எதிராக இருந்த ப்ரசித்தமான சிற்றுண்டி கடைக்கு நாராயணன் அவர்களை அழைத்துச் சென்றான். டீக்குப் பின் இருவரும் சற்று உற்சாகமடைந்ததைப் போலிருந்தது. கடை வீதியில் நடந்த கலவரம் பற்றி நாராயணனுக்கு எதுவும் தெரியுமா என்று இளைஞன் கேட்டபோது அவன் பெருமூச்செறிந்தான். சம்பவம் நடந்த சமயத்தில் அந்த இடத்திலிருந்த தனக்கு நெருக்கமான சிலர் மூலம் கிடைத்த தகவல்களை – அவன் இவர்களுக்கு காத்திருந்த போது மனதில் போட்டு உளைந்ததை – பாதி தயக்கத்துடனும், மீதி முந்தய தினம் ரயில் நிலயத்தில் நடந்ததற்கு பதிலான நியாயமான எதிர்வினையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்துடன் பதிலுரைத்தான். இவர்களுடைய உரையாடலை பெரியவர் நிதானமாக உள்வாங்குவதாக நாராயணனுக்கு தெரிந்தது. “ உங்களுக்கு நெருக்கமானவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் எப்படி?” அவனை சீண்டி விடக் கூடாது என்ற மிகுந்த எச்சரிக்கையுடன் இளைஞன் கேட்டபோது நாராயணன் அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்தான் ; இன்னும் புரிய வில்லையா என்பதைப் போல. ஒரு கசந்த நகையுடன் “ நான் தான் சொன்னேனே – ரயில் எரிப்புக்கு பிறகு நகரில் எல்லோருமே பற்றி எரிய ஆரம்பித்தார்களென்று? யார் யாரை என்பதுதான் விஷயம். ஏன் எதற்கு என்கிற நிதானங்கள் எல்லாம் எரிகிற தீயோடு எரிந்து வெந்து விட்டது என்றுதான் சொல்ல முடியும்”. இளைஞன் மெளனமானான். அவர்கள் இருவரும் எதிர் பார்த்து வந்ததை விட இரு திறத்தாரின் மத்தியில் சூடு கொண்டிருந்த பகையின் பயங்கரம் மிக மிக ஆழமானதும் வண்மம் நிறைந்ததாகவும் அவனுக்கு புலப்பட்டது.
இதற்கு மேல் நாராயணனால் பொறுமை காக்க முடியாமல் “ நீங்க தப்பா எடுத்துக்கலன்னா நீங்கள் யார்? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கலவரத்தில் இப்ப என்ன அக்கறை?” என்று கேட்டு விட்டு நிறுத்தி விட்டான். “மன்னிக்கவும் – சொல்லவே இல்லை அல்லவா? நான் விஜய் சந்த் –தேசத்தின் ஒரு முண்ணனி ஆங்கில வார இதழின் நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர்; ஸார் டெல்லியின் ஒரு பிரபல பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை பேராசிரியர். தேசத்தின் சமீபத்திய மதக் கலவரங்களின் பாதிப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்” என்ற இளைஞனின் பதிலுக்கு புரிந்து கொண்டதைப் போல நாராயணன் தலையசத்தான். இப்பொழுது பேராசிரியர் விஜய்யிடம் இன்றைக்குப் போதுமா என்பதை “ஷால் வீ கால் ட் எ டே?” என்று ஆங்கிலத்தில் கேட்க விஜய் தலையசத்த வண்ணம் எழுந்தான். அவர்களை விடுதியில் இறக்கி விட்டு விடை பெறும் போது தன் காமிராவையும் பைய்யையும் தோளில் தொங்க விட்டுக் கொண்டே “ இன்னும் இரண்டு தினங்களிலும் நீங்கள்தான் வருகிறீர்கள். உங்கள் அலுவலகத்தில் அதை உறுதி செய்து விட்டேன். நாளை நாம் திட்டமிடும் இடங்களை முடித்து விட வேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினான்.
இன்றோடு இந்த அவஸ்தையிலிருந்து விடுபட்டு விடலாம் என்று திட்டமிட்டிருந்த நாராயணனுக்கு இளைஞனின் வசதியான தேர்வு எரிச்சலையும் ஏமாற்றத்தையுமே தந்தது. வீடு திரும்பி மகளின் முகம் பார்த்த பிறகு சற்று அமைதியானான். நடந்து முடிந்ததையெல்லாம் இனி எந்த ப்ரம்மாவினால் மாற்றி எழுத முடியும்? நடக்கப் போகிறதாவது நல்லதாயிருக்கட்டும் என்ற நினைவு கூட இன்னும் கனியாத இந்த நகரத்தில் இவர்களின் ஆராய்ச்சியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இவர்களை விட்டு ஒதுங்கிக் கொண்டால் மாத்திரம் நாரயணனுக்கு அமைதி கிடைத்து விடப் போகிறதா என்ன? உத்ரவாதமான ரெண்டு நாள் வருமானம்தான் நஷ்டமாகும். அவர்கள் வேலயை அவர்கள் பார்க்கட்டும்; நம் வேலையை நாம் பார்ப்போம் என்று சமாதானமாகிக் கொண்டான்.
சிங்கம் முன்னங்கால்களை உயர்த்தி பயங்கரமாய் அந்த நதிப் படுகையே நடுங்கும் வண்ணம் கர்ஜித்துக் கொண்டிருந்தது. அமைதியின்றி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதனுடைய ஜொலிக்கும் கண்களில் தெரிக்கும் தீட்சண்யத்தையே இவனால் எதிர் கொள்ள முடியவில்லை. மரத்தை சுற்றி எரிந்து கொண்டிருந்த தீ இப்பொழுது பசும் புல் தரையெங்கும் பரவியிருந்தது. எத்தனை முறை நாராயணன் இரவில் உறக்கம் கெட்டு முழித்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை. காலையில் எழுந்து பாதுகாப்பாய் வாகனத்தை ஓட்ட முடியுமா என்பதே அவனுக்கு கேள்விக் குறியாகியது. காலையில் எழுந்து தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளாமல் உடம்பு மட்டும் கழுவிக் கொண்டு தன்னுடைய வாடிக்கயாளர்கள் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி விரைந்தான். இப்படியொரு சத்திய சோதனையை சந்திக்க வேண்டியிருக்குமென்று நாராயணன் நினைத்திருந்ததேயில்லை. கலவரம் நடந்து முடிந்த பின் நாடு முழுதும் ஒலித்த கண்டனங்களினாலும், எல்லோரும் தங்களை சுத்த சுயம்பிரகாசிகளாய் காண்பித்துக் கொள்ள முயன்ற அரசியல் தேவைகளினாலும் ஏற்பட்ட நெருக்கடிகளினால் பிரசவித்த காவல் துறையின் வழக்குகளிலிருந்து நாராயணன் தப்பித்து விட்டான். நண்பர்கள் சம்பத்தப்பட்ட நான்கு காவல் நிலையங்களின் எந்த முதல் தகவல் அறிக்கையிலும் அவனுடைய பெயர் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்தபோது நிம்மதியடைந்தான். ஆனால் அது அற்ப சந்தோஷம்தான். வழக்குகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் அதிலிருந்து விடுபட்டவர்களுக்கும் இயல்பாகவே இடையில் விழுந்த மெல்லிய திரை நாட்கள் செல்லச் செல்ல அனுபவத்திலும் அனுமானத்திலும் பெரிய மதிலாக வியாபித்து உயர்ந்து வளர்ந்து விட்டது. வழக்கென்கிற கோடின் உள்ளேயும் வெளியேயும் இருந்த தொண்டர்களிடையே வளர்ந்து வியாபித்த இந்த இடைவெளியைப் பற்றி இவர்களை வழி நடத்திச் சென்ற ஸ்தாபனங்கள் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்குகளில் சிக்கிக் கொண்டவர்களை வீரர்களாகவும், தீரர்களாகவும், தியாகிகளாகவும் தங்கள் கூடுகைகளில் மாத்திரம் உயர்த்தி விட்டு, மற்றவர்களும் அந்த இடத்தை அடைவதுதான் ஸ்தாபனக் கடமை என்று சமரசம் செய்து விட்டு, நீதி மன்றத்தில் வழக்குகளை எதிர் கொள்கிற போது குற்றம் சாட்டப் பட்டிருப்பவர்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை என்பது போன்ற வாதம்தான் முன்னெடுக்கப் பட்டது. அவர்கள் அப்பாவிகள்; அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப் பட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் நியாயமாக முன்னெடுக்கப் பட்டது. தாமதமாய் உணரப் பெறும் உண்மை சுடும் போதுதான் , தன்னுடைய பங்களிப்பு சரியா? தவறா? அல்லது நடந்து முடிந்த சமரே சரியா? தவறா? என்றெல்லாம் மனம் அரற்றுகின்றது. ஒரு ஸ்தாபனம் தன் பயணம் தொடர சில சமயங்களில் தன் தொண்டர்களையே பலியாய் தர வேண்டியிருக்கிறது. இப்படியொரு சிக்கலில் நாராயணனின் சில நல்ல நண்பர்கள் அவனுக்கு தூரமாய் போனது மிகப் பெரிய இழப்பும் சோகமும்தான். எவ்வளவு முயன்றும் அதை சமன் செய்ய முடியவில்லை. வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலை பெற்று இயல்பு வாழ்க்கைக்குள் வந்தாலும் பழைய உறவைத் தொடர முடியுமா என்பது கேள்விக்குறிதான். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ மனப் புண்களை வாடிக்கையாளர்களுடனான அந்த முதல் நாள் மறு படியும் விசிறி விட்டிருந்தது.
அன்று அவர்கள் நான்கு இடங்களை பார்வையிட்டனர். தூக்கமில்லாத இரவின் களைப்பில் உடல் தொய்ந்ததே தவிர நராயணன் சிரமப் பட்டு தன் மனதை தேற்றிக் கொண்டிருந்தான். தன்னுடைய கேள்விகளுக்கு நிதானமாய் பதிலளிக்க வேண்டுமென்கிற அதீத கவனத்தில் நாராயணனுடைய வார்த்தைகள் எச்சரிக்கையாய் வெளி வருவதை விஜய் உணர்ந்தான். ஒரு பள்ளி வாகனம் எரியூட்டப்பட்டு இரண்டு இளம் மாணவர்கள் பலியான இடத்தை பார்த்துவிட்டு புறப்படும் போது நாராயணனிடம் “இந்த மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?” என்று இயல்பாகத்தான் கேட்டான். நாராயணன் நிதானமாக “ இதற்கு முந்திய ஸ்தலத்தில் வீதி வழியாய் நடந்து போய்க் கொண்டிருந்த மூன்று முதியவர்களும்தான் என்ன செய்தார்கள்?” என்று எதிர் கேள்வி கேட்டான். “அப்படியானால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது என்று அர்த்தமா? ஒன்றுக்கொன்று சங்கிலியாய் கேள்விகள் மட்டும்தான் மிஞ்சும் என்றால் பதில் குறித்த அக்கறையே இல்லை என்றுதானே அர்த்தம்?” “ எனக்குத் தெரியல ஸார்” என்று சொல்லி விட்டு நாராயணன் மெளனமானான். மதியம் உணவருந்தும் போது விஜய் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்தினான். “ சில கூடுதல் தகவல்களை நீங்கள் தருவதாலோ, சில சந்தேகங்களை உறுதி படுத்துவதாலோ உங்களுக்கு எவ்வித பின் தொந்தரவும் வராது என்று உறுதி கூறுகிறேன். அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்: ஒரு முக்கியமான பெரிய பணியில், ஆய்வில் நீங்களும் உதவுகிறீர்கள்; அவ்வளவுதான்”. சட்டத்தின் பிடியின் விளிம்பு வரை சென்று திரும்பியிருந்த நாராயணன் மெலிதாய் சிரித்தான்.
மாலையில் டீக்காக ஒதுங்கும் போது நாராயணன் “ இரயில் எரிப்பு சம்பவம்தான் கலவரத்தின் பிள்ளையார் சுழி; அதுக்கு முந்தின நாள் வரை அவனவன் வேலையை அவனவன் பார்த்துக் கொண்டு, பகிர்ந்து கொண்டு , சிரித்துக் கொண்டு, சொந்தச் சண்டைகளைப் போட்டுக் கொண்டு சாதரணமாகத்தான் இருந்தார்கள். ஆனால் கலவரம் ஆரம்பித்த பிறகு ஒவ்வொருவனும் நீ யார் என்று எதிர் படுபவனை கேட்க ஆரம்பித்து விட்டான்? ஏதாகிலும் ஒரு பக்கம் சார்ந்துதான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு. அவ்வளவு கலவரத்திலும் என் தெருவிலேயே வசித்து வந்த அப்பாவின் நண்பர், ரயில் எரிப்புக்கு மறு நாள் இரவு நான் வீடு திரும்ப தாமதமான போது தெரு முனையிலேயே கவலையோடு காத்திருந்தாரே? குறைந்த பட்சம் அவருடைய வயதிற்காகவாவது ஒரு மரியாதை உண்டே என்கிற அடிப்படை அறிவு கூட குலைந்து “ இப்ப மட்டும் என்ன அக்கறை? எந்த வேஷமும் வேண்டாம்” என்று அவரை வார்த்தைகளால் கடித்துக் குதறி கைய்யினால் விலக்கி விட்டு நான் செய்த அந்த களேபரம்; அது இனி நான் சுமந்து தீர்க்க வேண்டிய தீராப் பழிதான். கலவரம் முடிந்து விட்டாலும், கலவரத்திற்கு பின் இரு தரப்பினருக்குமிடையேயான இடைவெளி அதிகரித்து விட்டது. நகரவாசியான எனக்கே கலவரம் சம்பந்தமான அநேக கேள்விகளுக்கு இன்னும் பதில் தெரியாத போது மூன்றே நாட்களில் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்து விடும்?” என்கிற கேள்வியை முன் வைத்தான். “உண்மைதான்; சிரமம்தான்” என்று விஜய் அதை அங்கீகரித்தான்.
பேராசிரியர் அறைக்கு சென்று ஒய்வெடுக்க விரும்பினார். அவரை இறக்கிய பின் விஜய் தன்னை நகரின் மைய்யத்திலிருக்கும் அந்த பெரிய பூங்காவில் கொண்டுவிடச் சொன்னான். இன்னுமொரு டீ விஜய் முன் மொழிய பூங்காவின் சிமிண்ட் பெஞ்ஜில் அமர்ந்து , பூங்காவின் சிறிய காண்டீனிலிருந்து நாராயணன் டீ வாங்கிவர இருவரும் சற்று இளைப்பாறினார்கள். விஜய் “கலவரத்தின் மூலம் என்றால் அது கர சேவையில் இருந்து என்று வைத்துக் கொண்டால் மசூதி இடிப்பை சரி என்று நினைக்கிறீர்களா?” நாராயணன் விஜய் டீயை முடிக்கும்வரை காத்திருந்து அவன் மறுத்தும் அவனுடைய காலி காகித கோப்பையையும் தன்னுடயதையும் கொண்டுபோய் அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசி விட்டு “ ஒரே ஒரு மசூதியை ஒரே ஒரு முறைதான் இடித்தோம்; நீங்கள் படித்தவர்; கஜினி முகமது சோமநாதர் ஆலயக் கதைகளையெல்லாம் மறந்து விட்டு பாபர் மஸூதி இடிப்பை மட்டும் கேள்வி கேட்பது என்ன நியாயம்? இந்த தேசத்தின் பெருவாரி மக்களின் மிகப் பெரிய வலியாக சித்தரிக்கப் படுகிற, கொம்பு சீவப் பட்டிருக்கிற ஒரு வரலாற்றைதான் நாராயணனும் முன்னிறுத்துகிறான். விஜய் சிரித்துக் கொண்டே “ உண்மைதான்; கஜினி முகம்மது சோமநாதர் ஆலயத்தை சூறையாடியதை யாரும் மறுக்க வில்லை. அது நடந்து முடிந்த வரலாறு. ஆனால் ஒரே ஒரு கேள்விதான்; கஜினி முகம்மதை அன்று ஏன் யாரும் தடுக்க முன் வரவில்லை? ஒரு சிறிய எதிர்ப்பு கூட இருந்ததாகத் தெரியவில்லையே? ஏன்?” நாராயணனுக்கு பகீரென்றிருந்தது. இதே கேள்வியைத்தான் கலவரம் நடந்து கொண்டிருந்த போது மகளும் கேட்டாள். என்ன சமாதானம் சொன்னான் என்பது அவனுக்கு இப்பொழுது மறந்து போயிருந்தது.
விஜய் தொடர்ந்தான். “தங்களை ஆளுபவர்களின் முகவிலாசம் பற்றிய எவ்வித அக்கறையுமற்ற ஒரு மக்கள் கூட்டம்; ராமன் ஆண்டால் என்ன / இராவணன் ஆண்டால் என்ன என்று சொல்லித் தரப்பட்டதால் அது ராமர்களுக்கே ஆபத்தாகி இந்த தேசம் நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு அந்நிய நுகத்திற்குள் அகப்பட்டுக் கொண்டு விட்டது என்பதுதானே நடந்த உண்மை.”
“ஓரளவுக்கு தடியெடுத்தவன் தண்டல் காரன் என்கிற காலச் சூழ்நிலமைகளில் நடந்த ஒரு சம்பவத்தை காரணம் காட்டி ,அரசியல் சட்டம், ஜனநாயகம், உயர் நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று வளர்ச்சியடைந்த ஆரோக்ய சமூகத்தில், அதை சரி செய்வதாகவும் சமன் செய்வதாகவும் நியாயம் சொல்லி அழிவு சமரங்களை நிறைவேற்றலாமா? படையெடுத்து வந்து அவமானத்தை உண்டாக்கிய அந்நியன் வேறொரு மதம் சார்ந்தவன் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் சாதகமாக்கி அதையே பெரிது படுத்தி, இந்த தேசத்தின் சொந்தமான சிறிய பெரிய மன்னர்களே அந்த ஆலயத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ததையும், பக்தர்களை கொள்ளையடித்ததையும் கண்டு கொள்வதில்லையே? ஏன்?”
“படையெடுத்து வந்த கஜினிமுகதுவின் சேனையில் கணிசமான இந்திய வீரர்களும் இருந்தார்கள் என்பது நாரயணனுக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் அதுவும் வரலாறுதான். அதே போல் வணிகத்திற்காக வட மேற்கு இந்தியாவில் வந்து அங்கேயே குடியேறிய இஸ்லாமிய படை வீரர்களும் இந்திய வீரர்களோடு இனைந்து, படையெடுத்து வந்த அந்நிய அராபியர்களை எதிர்த்த வரலாறுக்கான குறிப்புகளும் உண்டு. கஜினி முகம்மது ஆலயத்தை முதல் முறை சூறையாடிப் போன இரண்டே நூற்றாண்டுகளுக்குள்ளாகவே அதே சோமநாதா பட்டணத்திலேயே, ஆலயத்திற்கு சொந்தமான இடத்திலேயே, ஆலயத்தை நிர்வகித்து வந்த நகரத்தின் செல்வாக்கு மிகுந்த நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு அன்றைக்கு இருந்த சாளுக்ய அரசன் பெர்சியாவின் ஹோர்மூஸ் நகரத்தை சேர்ந்த ஒரு பிரபலமான கடல் வணிகனுக்கு மசூதி கட்டிக் கொள்ள நில தானம் செய்ததற்கான கல்வெட்டு குறிப்புகளும் உண்டு.”
“வரலாறும் உண்மையும் சுடும்; பாடங்கள் கற்றுத் தரும். தேவையானதை மாத்திரம் ஊதி பெரிதாக்கி, இடரலானவற்றை வசதியாய் மறந்து, மறைத்து உயர்த்தப் படுகிற வரலாறால் என்ன பயன்? ஆயிரம் வருடங்கள் கழிந்து இந்த நகரம் பற்றியெறியவும், நாராயணனை போன்றவர்கள் உறக்கமற்ற இரவுகளை சுமப்பதும்தான் மிச்சம்.”
விஜய்யிடம் இவ்வளவு விஷயதானம் இருக்குமென்று நாராயணன் எதிர் பார்த்திருக்கவில்லை. “நீங்கள் சொல்கிற பழைய தவறுகளைத்தான் சரி செய்ய முயல்கிறோம், அது தவறா?” என்ற நாராயணனின் உரத்த குரலுக்கு “அடுத்தவன் குடியை கெடுக்காத வரை; அவனை ஆக்ரமிக்காத வரை” என்று விஜய் பதில் தந்த போது நாராயணன் தலயசைத்தான். “எல்லா சித்தாந்தங்களுக்கும், தத்துவார்த்த ஆன்மீக சமூக இயக்கங்களுக்கும் மனிதனைப் போலவே பிறப்பு,துடிப்பு,வேகம், சிறப்பு, மேன்மை, உன்னதம், பின் ஒரு மிதப்பு,தொய்வு, சோர்வு, சரிவு என்கிற பரிணாமம் உண்டென்பதுதான் வரலாறிலிருந்தும் நாம் தெரிந்து கொள்வது. மறுபடியும் உயர்த்தி பிடிக்க விரும்புகிறவன் அதன் தொய்வு எங்கே தொடங்கியது என்பதை ஆய்ந்து, அந்த நோய் களைய அதற்கான கசப்பான மருந்தை உட்கொண்டு சரி செய்வதை விட்டு விட்டு பழம் பெருமை பேசி பழைய பகையை விசிறி விட்டு என்ன பயன்? இந்த தேசத்தின் கலாச்சர விருட்சத்தின் தொன்மத்தை பறை சாற்றுவதே அதன் விழுதுகள்தானே? விழுதுகளை அறுத்துவிட்டால் விருட்சத்திற்கே ஆபத்தாயிற்றே? வெளியே தெரியாத வேர்களின் ஆழம் மற்றும் ஆளுமையின் அடையாளங்களாத்தானே விழுதுகளும் கிளைகளும்? முன்னேறிச் செல்லும் மனித வாழ்வின் அழகை கண்களின் முன் விரிய வைக்க முடியாத போதுதான் , நம் கலாச்சார விழுமியங்களை கல்லறைகளில் தேடுகிற ஆக்ரமிப்பும், அவலமும் நேரிடுகின்றது. சரிதானா?”
“உயர்ந்த கட்டிடங்களையும், விரிந்த சாலையில் விரையும் வாகனங்களையும், புகை கக்கும் பெரிய சிறிய ஆலைகளையும், மனிதர்களின் நவ நாகரீக நடை உடை பாவனைகளையும் ஒரு நிமிஷம் இல்லையென்று வைத்துக் கொண்டு, நடந்து முடிந்த கொலை வெறியாட்டத்தை பார்த்தால் இது அந்நாட்களில் இனக் குழுக்களிடையே நடந்த போராட்டம்தான்; அது அதன் இயல்பு; தவிர்க்க முடியாதது; சகஜமானது; தாக்குதல் எப்பொழுது எங்கிருந்து எப்படி வரும் என்கிற பய வழிகளிலேயே வாழ்ந்த குழுக்கள் அதே பயத்தை மறுபடியும் அரங்கேற்றுகிற முயற்சி போலத்தான் இதுவும். “தானே உண்மை” என்று மார் தட்டிய சமூகத்தின் இன்றைய உண்மை.”
விஜய் எழுந்தான். “படிச்சவங்கள்ளயே ஒங்கள மாதிரி எல்லாரும் யோசிப்பாங்கள என்ன?” என்ற நாராயணனின் கேள்விக்கு “வாழ்வையும் சக மனிதனையும் நேசிக்க யாரும் யோசிக்க வேண்டாம்; குறைந்த பட்ச இரக்க உணர்வும் அன்பும் மட்டும் இருந்தால் போதும்” என்ற விஜய் தான் விடுதிக்கு நடந்து போகப் பிரியப் படுவதாக சொல்லி நாராயணனுக்கு விடை கொடுத்தான்.
முந்திய இரவின் உறக்கமின்மை, பகல் பொழுதின் உழைப்பும் அலைச்சலுமாக அன்று விஜய்யின் சில வாதங்களை அசை போட்டவாறே நாராயணன் ஓரளவு உறங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். காலையில் எழுந்தவுடனேயே ஒரு வழியாய் இந்த வேலை இன்றோடு முடிகின்றது என்ற நினைவே நாராயணனுக்கு திருப்தியாயிருந்தது. மகள் முக்கியமான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். நகரம் தன் வழக்கமான ஒரு நாளைத் துவங்கியிருந்தது. விடுதியின் வரவேற்பறையிலேயே பத்திரிகைகளை புரட்டியவாறே அவர்கள் நாராயணனுக்காக காத்திருந்தனர். கலவரத்திலேயே அதிகமான உயிர்களை பலி வாங்கிய புற நகர் பகுதியை நோக்கி வாகனம் விரைந்தது. நாராயணனின் சிந்தை போர்க் களமாகத் துவங்கியது. இன்று அவர்கள் போகும் இடங்களை காண்பிப்பது தனக்கு ஒரு அக்கினி பரீட்சையாக பற்றியெரியலாம் என்பதை காலையிலேயே நாராயணன் உணர்ந்திருந்தான். அவர்களின் முக்கால் மணி நேர கள ஆய்வுக்கு பிறகு விஜய்”யெஸ் நாராயணன் – என்ன நடந்தது என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்” என்றான். நாராயணன் மனதிற்குள்ளேயே என்ன நடந்ததா? எப்படி நடந்ததா? என்று பொறுமிக் கொண்டான்.
இங்கு ஒரு நவீன யுத்தமே நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும்; கிட்டத்தட்ட காலை பதினோரு மணியிலிருந்து ஐந்து மணி வரை, கட்டுப் படுத்துகிற அளவு பலத்துடன் இராணுவம் வந்து சேருகிற வரை ஒரு ஆறு மணி நேர போர்க்களம். இதை இறுதி யுத்தமாக்கி யாராகிலும் ஒருவர் எதிராளி இனி தாக்குதலை பற்றி யோசிக்கவே முடியாத அளவுக்கு தங்கள் பலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிற வெறியில் இரு அணியினரும் மோதினர். எல்லைப் புறங்களில் நடக்காமல் நகருக்குள்ளே நடந்தது என்கிற ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர அது இரு தரப்பினருக்கும் ஒரு மக்கள் யுத்தம்தான். சிறுவர் சிறுமிகள் தங்கள் மேற் சட்டைகளை அவிழ்த்து அதில் கற்களை கொண்டு வந்து குவித்தார்கள். நிலவிய மூர்க்கத்தின் உச்சத்தில் இந்த சிறுவர்களும் வெறியேற்றப்படும் இந்த அசிங்கத்தை நிறுத்த வேண்டுமென்று கூட இரு தரப்புக்கும் தெரிய வில்லை. கலவரம் வெடிக்கும் முன் அது தீவிரமடைந்து கொண்டிருக்கும் பொழுதும் இராணுவமோ காவல் துறையோ வந்து விடாதபடி எல்லா வழிகளையும் பழைய புதிய வாகனங்களை வைத்து வழி மறித்துவிட்டனர். துப்பாக்கியிலிருந்து, நாட்டு வெடி குண்டுகள், பெட்ரோல் பாட்டில்கள், கற்கள், கழிகள் என்று கைய்யில் கிடைத்தையெல்லாம் வைத்து மோதினர். ஒரு சாரார் பெருவாரியாக வசிக்கும் குடியிருப்பு பகுதி என்பதுதான் அந்த இடத் தேர்வுக்கு காரணம். திட்டமிட்டுதான் அரங்கேற்றப் பட்டது. எதிராளிகள் இவ்வளவு தூரம் தாக்குதலை எதிர் கொள்ள தயாராயிருப்பார்கள் என்பதை தக்குதல் தொடுத்தவர்கள் எதிர்பாரமாலிருந்ததால்தான் இரு தரப்பிலும் அவ்வளவு உயிர் சேதம். விளையாட்டுச் சண்டை தங்களுக்கு நிஜமாகவே கிடைத்த வினையில் இந்த தீயில் இரு தரப்பிலும் பிஞ்சுகள் கருகி வெந்ததுதான் பரிதாபம். என்னவென்று தெரியாமலே முதுகில் பற்றியெரியும் தீயுடன் ஒடி வந்த இரண்டு இளம் சிறுமிகளை தடுத்து மறுபடியும் ஓட விட்டு முழுவதுமாய் எரிய விட்டு வஞ்சம் தீர்த்த குரூரம்தான் பெருந்திரள் மூர்க்கத்தின் உச்சம். ஐந்து வருடங்கள் ஓடி விட்டன; ஏன் செய்தோம்? எப்படி செய்தோம் என்று இன்று வரை புலப் படாததைப் போலவே கள வரலாறு சொன்ன நாராயணனின் முகம் இறுகிச் சிவந்திருந்தது. நாராயணனின் விவரனையில் பேராசிரியர் அதிர்ந்து போயிருந்தது விஜய்க்கு புரிந்தது. மூன்று நாட்களில் இன்றுதான் நாராயணன் வாகனத்தில் இருந்த பாட்டில் தண்ணீரை எடுத்து ஒரே மிடராய் குடித்துத் தீர்த்தான். தண்னீரிலும் டீயிலும் அமைதியாவது அல்ல நாராயணனின் தவிப்பு என்பது விஜய்க்கு புரிந்தது.
அவர்களுடைய கடைசி ஸ்தலத்திற்கு வந்து சேர்ந்து விட்டிருந்தனர். வெயில் ஏறியிருந்தது. நகரில் நுழையும் முன் இல்லாமலும் மத்தியில் இல்லாமலும், நகரின் பரப்பில் கால் வாசி பகுதியில் நகரின் குறுக்காய் கடந்து செல்லும் அந்த பெரிய நதியின் கரைகளை இனைக்கும் நீண்ட பாலம். கிட்டத் தட்ட கலவரம் சற்று ஓய்ந்து நகரம் மூச்சு விடுவோமா என்று யோசிக்க ஆரம்பித்த போது மறுபடியும் ஒரு வாண வேடிக்கையாய் வெடித்துச் சிதறி, கலவரத்தின் மிகப் பெரிய கடைசி காட்சியாய் நடந்து முடிந்திருந்த இடம். விஜய்க்கும் பேராசிரியருக்கும் இந்த பாலத்தில் விசாரிப்பதற்கு ஒருவரும் கிடைக்கச் சாத்தியமில்லை. விஜய் கேமிராவில் சில கோணங்களில் பதிவு செய்து கொண்டான். பாலத்தின் கைபிடிச் சுவரில் சாய்ந்து கீழே சோம்பி ஓடும் நதியின் நீரை முகம் கவிழ்ந்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த நாராயணனை பேராசிரியர் அழைத்தார். நதியின் மறு கரையை ஒட்டி இது வரையிலும் நீருக்குள் அமிழ்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த எருதுகளின் கூட்டம் கரையேருவது வரை அவற்றின் முதுகில் அமர்ந்து அவற்றுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த காகங்களும் கொக்குகளும் சடசடத்து பறந்தன. நதியின் மத்தியில் மூன்று நான்கு மர உருளைகளை இனைத்துக் கட்டிய ஒன்றிரண்டு சிறிய மிதவைகளில் மீனவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
விஜய்யிடம் இந்த மூன்று நாள் பழக்கம் தந்திருக்கிற உரிமையோடு “ எல்லா சண்டைகளயும் சேர்த்து என்ன இன்னொரு மஹா பாரதமா?” என்று கசந்த புன்னகையுடன் கேட்டுவிட்டு தொடர்ந்தான். ஒரு சாராரின் திருமணக் கோஷ்டி ஒரு பெரிய வேன் , இரண்டு கார்கள் என நகரின் போக்குவரத்து நெரிசலை கடந்து வந்த போது ஏற்பட்ட சாதாரண முன்னுரிமை கோதா இந்த பாலத்தில் இரன்டு அணியினரின் சுயம் பாதித்த சச்சரவாக மாறி வார்த்தைகள் தடித்து அடிதடி, கொலை, பெண்களின் மீது அசிங்கம் என்று முடிந்தது. நருக்குள் அந்த கோஷ்டியின் முதல் தாவா ஒரு வாடகை கார் ஓட்டுனருடன் ஆரம்பித்ததால் அந்தப் பகுதியிலிருந்த பத்து பதினைந்து வாடகைக் கார்கள் வந்து பாலத்தில் இவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு முன்னேற முடியாமல் தடுத்து தாக்குதலை ஆரம்பித்தனர். ஒன்றிரண்டு கார்கள் தவிர மற்ற எல்லா வாடகைக் கார்களிலும் ஒவ்வொன்றிலும் கூடவே தொண்டர்களும் ஆயுதங்களும் குவிக்கப் பட்டதுதான் கலவரத்தின் இலக்கணத்திலிருந்து நகரம் இன்னும் முழுமையாக விடுபட வில்லை என்பதற்கு ஆதாரம். இரு தரப்பிலும் கடுமையாகத் தாக்கிக் கொண்டார்கள். பத்துக்கும் மேல் உயிர்கள் பலியாகின. வழக்கம் போலவே வாகனங்கள் தீக்கிரையாகின. வாழ்வின் மங்களமான காரியத்தை துவக்க பயணித்தவர்கள் மரணத்துடன் பயணமானார்கள். பதட்டத்திலும் பயத்திலும் என்ன செய்கிறோம் என்று தெரியமால் இரண்டு இளம் பெண்கள் கைப்பிடிச் சுவரின் மேல் ஏறி நதிக்குள் குதித்து, அதிக ஆழமில்லாத இடத்தில் விழுந்து பாறைகளில் அடிபட்டு சிதைந்தார்கள். இவர்களைப் பார்த்து ஒன்பது அல்லது பத்து வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகள்; என்ன அழகு? சாக வேண்டிய வயதா அது? அந்த பிஞ்சுகளும் நதிக்குள் விழுந்து ஜல சமாதியானார்கள். நான் சாகுமட்டும் அந்தப் பிஞ்சுகள் என் கண்ணை விட்டு மறைய மாட்டார்கள். கண் முன்னே நடந்த அந்த கொடூரத்தை தடுக்காமல் என்னை மரத்துப் போகச் செய்தது எது என்பதுதான் இன்று வரை புரியவில்லை. நாராயணன் பொங்கி குலுங்கித் தீர்த்தான் . அவனுடைய ஈரம் காய்ந்த சிவந்த விழிகளில் நீர் சொரிய மறுப்பது போல. விஜய்க்கு பாலம், நதி, போக்குவரத்து எல்லாமே சில கணங்கள் உறைந்ததை போலாயிற்று. தொடர்ந்த சில நிமிடங்களுக்கு அவர்கள் மூவரையும் மெளனத்தின் பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. நாராயணன் மறுபடியும் திரும்பி நதியின் ஆழத்தில் கவனம் செலுத்தினான். நதி வேகமாய் சுழித்தோடும் இடத்தில் சிறிய மீன்கள் துள்ளி மேலெழும்பிக் குதித்து மறுபடியும் நீருக்குள் பாய்ந்த வண்ணமிருந்தன. பேராசிரியர் இவர்கள் கார் நின்றிருந்த இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். விஜய் நாராயணனிடம் கிளம்புவோமா என்பதை தன் கைகளால் காண்பிக்க இருவரும் நகர்ந்தனர்.
மதிய உணவை நாராயணன் மறுத்த போது விஜய் அவனை கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்றான். மூவரும் உணவருந்தும் போதும் அவர்களிடையே நிலவிய மெளனம் கரைய மறுத்தது. உணவிற்குப் பின் பேராசிரியர் அறையிலிருந்து மிச்சமிருக்கும் வேலைகளை முடித்து விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவதாகக் கூறி பிரிந்தார். நாராயணனும் விஜய்யும், நகராட்சியால் நடத்தப்படும் நூலகத்தில், விஜய் விண்ணப்பித்திருந்த பழைய செய்தித் தாள்களை பரிசீலிக்கும் வேலைக்காக அங்கு சென்றனர். ஒரு மணி நேரத்தில் திரும்புவதாகவும் அது வரை நாராயணன் ஒய்வெடுத்துக் கொள்ளுமாறும் கூறி விட்டு விஜய் உள்ளே நுழைந்தான். வாகனத்தை நிறுத்தி விட்டு முன் இரண்டு கண்ணாடிகளையும் இறக்கி விட்டு, தன் இருக்கையை எவ்வளவு சாய்க்க முடியுமோ அவ்வளவு சாய்த்து சரிந்தான் நாராயணன். நூலகத்தின் முன் புறமாக இருந்த பெரிய மரங்களின் கீழ் போடப்பட்டிருந்த சிறிய சிமிண்ட் பெஞ்சுகளில் இளம் கல்லூரி மாணவ மாணவிகளின் கூட்டம் சுவராஸ்யமான விவாதத்தில் கலகலத்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவி பளீரென்று ஒளிரும் நிலவு முகம் தவிர உடல் பூராவும் கறுப்பு அங்கிக்குள் மறைந்திருந்த தனது மெல்லிய தேகத்துடன் உரையாடலில் உற்சாகமான ஈடுபாட்டிலிருப்பது நாராயணனின் கண்களில் விழுந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் இந்த கலவர பூமியில் இந்தப் புரிதலும் புனைவும் ஏன் பொய்த்தது? நாராயணன் பெரு மூச்செறிந்தான். இப்பொழுதும் இளைஞர்கள் மத்தியில்தான் சற்றே துளிர் விட்டிருக்கிறதேயல்லாமல் இந்த நகரம் முற்றிலுமாய் தன் காயங்களிலிருந்து குணப் பட்டிருப்பதாக சொல்ல முடியாதுதான்.
சொன்னபடி திரும்பி வந்த விஜய் “ நம் கடையில் கடைசியாக ஒரு டீ குடிக்கலாம்; வேலைகள் அநேகமாக முடிந்து விட்டன. போவோம்”. நாராயணன் தன் இருக்கையை சரி செய்துவிட்டு இஞ்சினை உறும விட்டு நகர்ந்தான். டீக் கடையில் மாலை டீக்கான கூட்டம் இன்னும் கூடியிருக்கவில்லை. சற்று ஒதுக்கமான வசதியான மேஜையின் முன் அமர்ந்தார்கள். “சரியாய்ட்டீங்களா?” விஜயின் விசாரிப்பில் தொனித்த அக்கறை நாராயணனுக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது. “நம்முடைய வாழ்வில் சில நிமிஷங்கள் மறக்க முடியாமல் உறைந்து போய் விடலாம்தான். ஆனால் அதைக் குறித்து அதிகமாய் அலட்டிக் கொள்ளாமல் இருந்தால்தான் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக நடத்த முடியும். எல்லாவற்றையும் ஒரு கெட்ட கனவாக மறக்க முயலுங்கள்” என்ற விஜய்யின் ஆலோசனைகளுக்கு “ என் மனம் பிராண்டும் கனவையெல்லாம் உன்னிடம் சொன்னால் நீ என்னாவாய்?” என்று நாராயணன் மனதில் நினைத்துக் கொண்டான். டீயை ருசித்த வாறே “புண்ணாகி புரையோடிப் போயிருக்கும் ஒரு ரணத்தை வருடங்கள் கழித்து கீறி விட்டதைப் போல; என்றாலும் அநேக சமயங்களில் என் மகளின் முகம் பார்க்கிற பொழுதெல்லாம் அந்த இரண்டு சிறுமிகளின் முகம் வந்து வந்து மறைந்து போகிறதுதான். ஏன் இப்படி மிருகமானோம் என்று இன்று நினைத்தாலும் எனக்கு என் மேலேயே ஒரு வெறுப்பும் நடுக்கமும்தான் ஏற்படுகிறது. இந்த நதியின் பாலத்தில் நடந்த சமரிலும் பங்கேற்றேன். தார்மீகக் கடமையாய் அன்றைக்கு தெரிந்த – திட்டமிட்டு தெரிய வைக்கப் பட்ட -அந்த அழித்தலும் ஆக்ரமிப்பும் இன்றைக்கு முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. கலவரத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நெடுஞ்சாலயில் தீ விபத்துக்குள்ளாகியிருந்த ஒரு காரிலிருந்து ஒரு சிறுவனை உயிரையும் பணயம் வைத்து மீட்டுக் கொடுத்த நான் ஏன் நேர் எதிர் முனைக்கு வந்து சேர்ந்தேன். இவ்வளவும் செய்து விட்டு இந்த நாட்களும் ஓடி விட்டன. இவ்வளவு நாட்களுக்குப் பின் கலவரத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு மூன்றாவது நபராகிய உங்களிடம் எந்த பய உணர்வும் இல்லாமல் எப்படி பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பது எனக்கே புரியவில்லை. ஒரு வேளை இந்த முழு நகரமும் அந்த அத்து மீறல்களிலும் ஆக்ரமிப்புகளிலும், வன்முறைகளிலும் மூழ்கி மரத்துப் போனதினால் நானும் அப்படி இருக்கிறேனோ என்னவோ? அதுதான் உண்மையும் கூட. அதே சமயம் இந்த மூன்று நாளும் உங்களோடு மறுபடியும் அந்த அகோர மீள்நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் கொஞ்சம் பாரம் இறங்(க்)கிய திருப்தியும் இருக்கிறது. இதுவும் ஒரு அனுபவம்தான்; நான் உங்கள் இருவருக்கும் நன்றி சொல்லித்தானாக வேண்டும்.”
கடையின் எதிரே பரந்து விரிந்திருந்த தேவாலயத்தின் கோபுர நிழல் மாலை வெயிலில் சரிந்து நீண்டு இவர்களை நோக்கி படர்ந்திருந்தது. அவர்கள் இருவரின் மத்தியிலும் நிலவிய சில நிமிஷ இளைப்பாறுதலின் அமைதியை தேவாலயத்தின் மின்சார இசை கடிகாரம் நான்கு முறை மணியடித்து அந்த வேளையின் வேத வசனமாக “ இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைபெற்றிருக்கிறது; இவைகளில் அன்பே பிரதானம்” என்று அறிக்கையிட்டு உறுதி செய்வது போல ஒலித்து முடிந்தது. “ ஆரறை மணிக்கு ஃப்ளைட்; அறைக்குப் போய், புறப்பட்டுப் போக சரியாயிருக்கும்; போகலாம்” என்ற வண்ணம் விஜய் எழுந்தான். எழுந்து கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்த நாராயணன் தொடர்ந்தான்.
விமான நிலையத்தில் இறங்கி நுழை வாயிலில் அவர்களுடைய உடமைகளை அவர்களிடம் கொடுத்து விடை பெற்ற போது விஜய் இவன் கை குலுக்கி “ பார்க்கலாம் ;மறுபடியும் சந்திப்போம்” என்று சொல்லி விடை பெற்றான். பேராசிரியர் “ ஆல் தெ பெஸ்ட்” என்று வாழ்த்தி விடை பெற்றார். கண்ணாடிக் கதவுகளினூடாய் பரந்து விரிந்திருந்த அந்த விமான நிலையத்தின் ஹாலில் விஜய்யின் முதுகு மறைந்த போது நாராயணனின் விழிகளில் மிக மிக மெல்லிதான ஒரு நீர் திரை போல.
அன்றிரவு சிங்கம் தன் பின் புறத்தை இவனுக்குக் காண்பித்தபடி படுத்திருந்தது. மரத்தை சுற்றி எரிந்து கொண்டிருந்த தீ தணிந்து, தீயின் கங்குகள் புல் தரையில் சிவந்த மலர்களைப் போல் சிதறி கணன்று கொண்டிருந்தன. நதியின் கரையில் நின்று கொண்டிருந்த நாராயணன் கால்களில் வெம்மை படர்வதைப் போல உணர்ந்த போதுதான் அவன் நிற்கும் கரையிலும் தீயின் கங்குகள் சிதறிப் பரந்து கணன்று கொண்டிருப்பதை கவனித்தான். ஒரு பதற்றத்துடன் அவைகளையெல்லாம் எடுத்து ஆற்று நீரில் எரியலாம் என்று கணல்களை பொறுக்க குனிந்த போது, கால் தரையில் தட்டி கட்டிலிலிருந்தும் நாராயணன் பதறி விழித்தெழுந்தான். வழக்கம் போல் மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் மகளின் நிர்மலமான முகத்தையும் சீரான உறக்கத்தையும் தரிசித்து, நீண்ட பெருமூச்சு விட்டு மறு படியும் கட்டிலில் சாய்ந்த நாராயணனின் விழிகளிலிருந்து நீர் பெருக்கெடுக்க தலையணைகளுக்குள் முகம் புதைத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு குலுங்கும் உடலுடன் அழுகையில் அவன் கரைய ஆரம்பித்தான்…