முத்தழகன் வீட்டுத் தோட்டம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 681
முதல் பகுதி
முத்தழகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்தாள் சிறுமி பொன்னி
தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள் தன் தம்பி இளவரசன் உடன் .
அப்பொழுது அவள் பாடுகிறாள். –
“முத்தழகன் வீட்டுத் தோட்டம்
எங்கும் செடிமரங்கள் கூட்டம்
தாவித் தாவி விளையாடும் குரங்குக் குட்டி
பூவைத் தொட்டுத் தொட்டுப் பேசும் பட்டாம்பூச்சி
கிட்டே வந்தால் ஓடிப் போகும் அணிலே வா
கடலை ,கனிகள் தருவேன் எடுத்துக் கொண்டு போ
மனிதனுக்கு மட்டுமா வீடு ?
பறவைக்கும் உண்டு ஒரு வீடு அதுதான் அதுவே கட்டிக் கொள்ளும் வீடு
துள்ளித் திரியும் வண்ணத் தும்பி
அதைப் பிடித்து வாட்டோதே தம்பி
கீழே பார் கலையாமல் வரிசையில் செல்லும் எறும்புக் கூட்டம்
அது போல்தான் நாம் இருக்க வேண்டும் எப்போதும்
டொக் டொக் என்று மரத்தைக் கொத்தும் மரங்கொத்தி
குழந்தை போல் மிழற்றிப் பேசும் பச்சைக் கிளிகள் இரண்டு
பூப் பூவாய்த் தேனெடுக்கும் தேனீ
அதன் உழைப்பால் அலைந்து முயன்று சேகரித்த தேனை நாம் எடுத்துக் கொள்கிறோம்
சிலர் உழைப்பு , பலருக்குப் போய்ச் சேரும் என்பதை எடுத்துரைக்கிறது
தேனீயின் கதை
தொட்டால் சுருங்குகிறதே இந்தச் செடியின் இலை
ஓ இதுதான் தொட்டால் சிணுங்கியோ
முத்தழகன் வீட்டுத் தோட்டம்
எங்கும் செடிமரங்கள் கூட்டம்”
சிறுவன் முத்தழகன் அங்கு வந்தான் –
கைகளைத் தட்டினான்
பொன்னி : நன்றி
முத்தழகன் : உன் தம்பியோ உன் பாட்டை செவி மடுக்கவில்லை போலிருக்கிறதே ….
பொன்னி : அதுவா ? சோலைகளைப் பார்த்தால் அவனுக்குப் படித்த கதைகள் நினைவுக்கு வந்து விடும் அவன் அந்த கதை உலகத்திற்கே சென்று விடுவான். அவனை நாங்கள் படாத பாடு பட்டு இந்த உலகுக்கு அழைத்து வர வேண்டும் அல்லது அவனே வரும் போது வருவான் …
முத்தழகன் : அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்வதைக் கேட்காமல் இருக்க இந்தப் புதுவழியை உன் இளவல் கைகொள்கிறான் போலும் கெட்டிக்காரன்தான் உன் தம்பி இளவரசன் …
பொன்னி : ஏமாற்றும் இயல்பு அவனுக்கு இல்லை. தாத்தா சொல்வார் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நடித்த அன்பைத் தேடி படம் பற்றி .. அதில் அந்தப் படத்தின்
நாயகன் , புத்தர் சிலையைப் பார்த்தால் , தன்னிலை மறந்து புத்தனாகவே மாறி விடுவார்
முத்தழகன் : அது போல் உன் தம்பியா … என்னவோ பேச வருகிறான் என்ன என்று கேட்போம் …
இளவரசன் : அன்றொரு நாள் . மாலை நேரத்தில் சோலையில் அமர்ந்து இருந்த இளைஞன் மடியில் ஒரு புறா வந்து விழுந்தது. அதன் உடலில் அம்பு பட்ட காயம் . இளைஞன் உடையில் அதன் இரத்தம் . இளைஞன் உடனே அதற்கு சிகிச்சைகள் செய்தான். தெம்பு பெற்ற புறா , சின்னக் கண்ணால் நன்றியுடன் அவனைப் பார்த்தது.
அப்பொழுது மற்றொரு இளைஞன் வந்தான் – இது நான் அம்பால் வீழ்த்திய பறவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றான். காப்பாற்றியவன் கொடுக்க மறுத்தான் . இருவரும் அரசனின் சபைக்குச் சென்றனர். காப்பாற்றிய இளைஞன் இளவரசன் அரசனின் மகன் . அம்பு தொடுத்தவன் அரசனின் தம்பி மகன் .
அரசன் தீர்ப்பு அளிக்கும் பொறுப்பை அவையில் இருந்த பெரியவரிடம் தந்தான்.
அம்பு எய்தி வீழ்த்தியவனை விட உடனடியாக உயிர் காத்தவனே உயர்ந்தவன் . காப்பாற்றியவனுக்கே பறவை மீது உரிமை என்றே பெரியவர் தீர்ப்பு அளித்தார். அன்று அந்த இளவரசனின் பெயர் சித்தார்த்தன் . அந்த சித்தார்த்தனே பின்னாளில் ஆசிய ஜோதியான புத்தர் பெருமான் …
முத்தழகன் : புத்தரின் இளமைக் கால சம்பவத்தை நன்றாகச் சொன்னாய் இளவரசா கைகொடு . எங்கள் வீட்டுத் தோட்டம் , உனக்கு புத்தர் உலவிய சோலையை நினைவுப்படுத்தி விட்டது. இதற்காகவே உனக்குப் பரிசு தர வேண்டும் ? என்னிடம் தர என்ன இருக்கிறது. என்னுடைய அக்கா ஆதிரை தரும் தின்பண்டங்களை உனக்குத் தருக்கிறேன். வா . பொன்னி வா வீட்டுக்குள் போகலாம்.
( மூவரும் வீட்டுக்குள் செல்கிறார்கள் )
முத்தழகன் வீட்டுக் கூடம். ஆதிரை , இவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள். தொலைக்காட்சியில் ஓடிய சார்லி சாப்ளின் படம் , மின்வெட்டால் மறைகிறது.
இளவரசன் பேசுகிறான். பொன்னி நெளிகிறாள்
இளவரசன் : உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நபர்கள் யார் என்று சார்லி சாப்ளிடம் கேட்டார்கள் . நகைச்சுவை மேதை அந்தக் கேள்விக்கு சொன்ன பதில் – என் அன்னையும் அண்ணனும் என்னால் மறக்க முடியாதவர்கள். பதின்பருவத்தில் நாடக நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாதவர்களாக இருந்தோம். என்னுடைய தாய் , வீட்டில் ஜன்னல் அருகே நின்றபடி தெருவில் செல்லும் நபர்களின் குணங்கள் பற்றி எனக்கு எடுத்துச் சொல்வார். நாடகங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற என் எண்ணத்தைமாற்ற அவரே சில வழிப்போக்கர்களைப் போல் நடித்துக் காட்டுவார். பேசிக் காட்டுவார். பின்னாளில் அம்மாவின் அந்த திறமைகளே எனக்குள் முகிழ்த்து என்னை அனைவரும் அறிந்த சார்லி சாப்ளின் ஆகப் பரிணாமம் பெறச் செய்தது.
ஆதிரை கை தட்டுகிறாள்.
ஆதிரை : என்ன பொன்னி உன் தம்பி , பேசும் போதே நல்ல துணுக்குச் செய்திகளைச் சொல்கிறானே ..
பொன்னி : படித்ததை இடம் நேரம் சந்தர்ப்பம் தெரியாமல் சொல்லிக் கொண்டே இருப்பான் அக்கா ..
ஆதிரை : பொருத்தமான சந்தர்ப்பத்தில் , சார்லி சாப்ளினை திரையில் பார்த்தவுடன் அவரைப் பற்றிய சேதியைத் தானே சொல்லி இருக்கிறான் இந்த தம்பி .. முத்தழகன் , இந்தப் பேனாவை அவனுக்குப் பரிசாக கொடு .
( முத்தழகன் ,அவனுடைய அக்கா கொடுத்த பேனாவை இளவரசனிடம் கொடுக்கிறான். இளவரசன் , பொன்னியின் முகத்தைப் பார்க்கிறான். அக்கா, முக குறிப்பால் இசைவு தந்ததும் வாங்கிக் கொள்கிறான். )
முத்தழகன் : அக்கா , மாடியில் இருக்கும் பாட்டி , கீழே வராமல் இருக்க வேண்டுமே
ஆதிரை : ஏனடா முத்து அப்படி சொல்கிறாய் ?
முத்தழகன் : பாட்டி சொன்ன கதைகளை எடுத்து இயம்பத் தொடங்கி விடுவானே பொன்னியின் இளவல் ..
ஆதிரை : பொன்னியின் முகம் மாறுகிறது பார் … அப்படி எல்லாம் பேசக் கூடாது.
முத்தழகன் : நான் விளையாட்டுக்குச் சொன்னேன் . சரி எங்களுக்குத் தின்பண்டங்கள் கொடு …
ஆதிரை : தருகிறேன். செவிக்கு உணவு இல்லாத போது தானே வயிற்றுக்கு .. நீ பாட்டி என்றதும் வரலாற்றின் ஒரு நாயகி பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.கேளுங்கள் ..
ஆறு அரசர்களின் ஆட்சியைப் பார்த்த ராணி
சோழப் பேரரசின் மகாராணி – செம்பியன் மாதேவி தம் வாழ்நாளில் சிவபெருமானுக்குப் பல கற்றளிகளைப் பார்த்துப் பார்த்து உருவாக்கியவர் இவர். சேர மன்னர்களின் கிளை மரபினரான மழவர் குடியில் பிறந்தவர். முதல் பராந்தக சோழரின் இரண்டவது மகன் கண்டராதித்த சோழரின் கரம் பிடித்தார். அவருடைய முதல் மனைவி வீர நாராயணியின் மரணத்திற்குப் பின் இவர் பட்டத்து ராணி ஆனார். கண்டராதித்தர் மரணம் அடையவே அவருடைய தம்பி அரிஞ்சயன் ஆட்சி புரிந்தார். அவருக்குப் பின் , கண்டாராதித்தரின் மற்றொரு தம்பி 2 ஆம் பராந்தக சோழன் அரியணை ஏறினார். சுந்தர சோழருக்குப் பின் , கண்டராதித்தருக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்த உத்தம சோழன் ஆட்சியில் அமர்ந்தார். உத்தம சோழனுக்குப் பின் , உத்தம சோழன் இருக்கும்போதே மக்களின் விருப்பத்தை ஒட்டி , சுந்தர சோழரின் புதல்வர் அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழன்( முதலாம் ராஜராஜன்) அரியணை ஏறினார். இப்படியாக , மாமனார், கணவர் , இரண்டு மைத்துனர்கள் , பெற்ற புதல்வர் , மைத்துனரின் புதல்வர் ஆகிய அரசர்களின் ஆட்சியைப் பார்த்தவர் செம்பியன் மாதேவி .
இரண்டாம் பகுதி
காலை நேரம் . சின்னஞ்சிறு மருத்துவமனை. (கிளினிக்)
பொன்னியும் இளவரசனும் அங்கே காத்திருக்கிறார்கள் .
மருத்துவர் ஜெயச்சந்திரன் வருகிறார்.
வா பொன்னி …என்ன ஆச்சு உடலுக்கு என்று கேட்டபடியே தமது இருக்கையில் அமர்கிறார் மருத்துவர்.
பொன்னியும் இளவரசனும் மருத்துவர் அருகில் செல்கிறார்கள் .
பொன்னி : எனக்கு என்ன ? ஒண்ணும் இல்லை. ஐயா என் தம்பி இளவரசனுக்கு காய்ச்சல் ….
ஜெயச்சந்திரன் : வேலை வேலை என்று ஓடும் உன் பெற்றோர்கள் , இவனை என்னிடம் அழைத்து வரும் பணியை உன் தலையில் கட்டி விட்டார்களோ ?
பொன்னி : அவர்கள் இருவருக்கும் எங்களைக் கவனிக்க எங்கே நேரம் ? நானே தான் பார்த்தேன் . தம்பி உடல் கொதித்தது . உடனே அழைத்து வந்தேன்.
ஜெயச்சந்திரன் : பொறுப்பான பாசக்கார அக்காதான் நீ …
( அவர் இளவரசனைப் பரிசோதிக்கிறார் . மாத்திரைகளை எழுதித் தருகிறார். )
ஜெயச்சந்திரன் : இந்த மாத்திரைகளைக் கொடுத்து வா .. இரண்டு நாளில் குணமாகி விடும் …
பொன்னி : என்ன டாக்டர் ஐயா .. மேசையில் படகை வைத்திருக்கிறீர்களே ..
போச்சு போங்கள் …
ஜெயச்சந்திரன் : அதுவா வெளிநாட்டில் இருக்கும் என் மகன் அனுப்பி வைத்த பிறந்த நாள் பரிசு .. அதனால் என்ன ? என்ன போச்சு ?
பொன்னி : அதைப் பார்த்து விட்டானே…. என் தம்பி கதை சொல்ல ஆரம்பித்து விடுவானே ..
ஜெயச்சந்திரன் : அப்படியா ? இத்தனை சுரத்திலும் சுரம் மாறாமல் கதை சொல்லுவானா ? சொல்லு இளவரசா …. இந்தப் படகு உருவம் உனக்கு என்ன கதையை சொல்கிறது …. செவி மடுக்கிறேன் சொல்லப்பா
இளவரசன் : பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அந்த கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் நான்கு பேர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த படகில் சவாரி செய்து கரையை நோக்கி அலைகடல் நடுவே சாகச பயணம் போகின்றனர். நான்கு பேரில் ஒருவர் பத்திரிகை நிருபர் , ஒருவர் கப்பல் சமையல்காரர் , ஒருவர் கேப்டன் , மற்றொருவர் ஆயிலர் . கடல் நடுவே சிக்கித் தவிக்கும் இந்த நாலு பேரின் போராட்டத்தை விவரிப்பதே Open Boat ஆங்கில நாவல் . நால்வரும் கரையைக் கண்டுபிடித்து அடைவதற்குள் நால்வரில் ஒருவர் இறந்து விடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான நாவல் இது ஸ்டீபன் கிரேன் என்ற எழுத்தாளர் எழுதிய நாவல்.
ஜெயச்சந்திரன் : அட .. ( இளவரசனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறார். )
இளவரசு . …. நீ சொன்ன நாவலை ராமச்சந்திரன் என்ற எழுத்தாளர் தமிழில் திறந்த படகு என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
பொன்னி … உன் தம்பி நிறைய படிக்கிறானோ ….
பொன்னி : எனக்கு பள்ளிப் பாடம் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இவனோ … பாடப் புத்தகங்களைத் தவிர வேறு நிறைய தேடித் தேடிப் படிக்கிறான்.
ஜெயச்சந்திரன் : பள்ளிப் பாடங்களைத் தாண்டிய வாசிப்பு நல்லதுதான் பொன்னி … .. உன் தம்பியை நினைத்து நீ பெருமைதான் கொள்ள வேண்டும். இளவரசு ஊக்கமது கைவிடேல் …. நிறைய படி … அதே நேரம் … பள்ளிப் படிப்பில் கோட்டை விட்டு விடாதே அதுதான் உன் அக்காவின் அச்சம்
இளவரசு : சரிங்க ஐயா ..
ஜெயச்சந்திரன் : பொன்னி இவனை குடத்தில் இட்ட விளக்காக வைத்திருக்க வேண்டாம். உடம்பு தேறி விரட்டும். நான் எங்கள் ரோட்டரி சங்க கூட்டங்களில் இவன் அறிந்த கதைகள் பற்றி மேடையேறி உரையாற்ற வாய்ப்பு உருவாக்கித் தருகிறேன். போய் வாருங்கள் … இளவரசு .. அப்பா அம்மா இருவரும் தங்கள் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள் . பாசமுள்ள அக்கா … அந்த அக்காவைத் தொந்தரவு செய்யாமல் அவள் சொல்படி நடந்து கொள் …
பொன்னி : விடை பெறுகிறோம் . ஐயா … வணக்கம்
ஜெயச்சந்திரன் : வாழ்த்துக்கள் …
(நிறைந்தது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
