முதியோர் இல்லம்




சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட் ஆன்சிலரி யூனிட் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தான். அதன் மூலம் பணத்தில் கொழித்தான்.
ஆனால் அவன் மனைவி மேகலாவுக்கு தன் வீட்டில் மாமனார், மாமியார் இருப்பது மிகப் பெரிய எரிச்சலாக இருந்தது. அதேசமயம் அவளின் இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட, வளர்க்கப்பட அவர்களின் உதவியும் தேவையாக இருந்தது. அதனால் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்வரை காத்திருந்தாள்.
தற்போது இரண்டுபேரும் கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பமாகி விட்டது. இந்தக் காலத்துப் பெண்களுக்கு புருஷனுடன், சொந்த வீடு, கார், கொழுத்த பேங்க் பாலன்ஸ் எல்லாம் வேண்டுமாம். கல்யாணம் வேண்டுமாம். ஆனால் புருஷனின் உறவினர்கள் எவரும் உடன்வரக் கூடாதாம். வீட்டில் வேறு எவரும் வேண்டாமாம். தனிக் குடித்தனத்தில்தான் வாழ்க்கையே ஆரம்பிக்க வேண்டுமாம். அவர்கள் போடும் விதவிதமான கண்டிஷன்களில், மேகலாதான் தன் மாமனார், மாமியாருக்கு இந்த முதியோர் இல்ல பேச்சை தூபம் போட்டு முதன் முதலில் ஆரம்பித்து வைத்தாள்.
எனினும் சிவகுமார் அதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மேகலாவின் தொடர்ந்த முயற்சியில் அம்மியும் நகர்ந்தது. சிவகுமார் தன் தாயார், தகப்பனாரை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் விட்டு வைப்பது என்பது முடிவாயிற்று.
அவனுடைய அப்பாவிடம் இதுபற்றி பேச்சை ஆரம்பித்தபோது, “உன் வசதி எப்படியோ அப்படியே பண்ணுப்பா. எனக்கு இப்ப வயசு எழுபது ஆச்சு. தயவுசெய்து உன் அம்மாவை மட்டும் என்னிடமிருந்து பிரித்துவிடாதே. நாற்பது வருடங்களுக்கு முன்பு, என்று நான் அவளை அக்னிசாட்சியாக திருமணம் செய்து கொண்டேனோ, அன்றிலிருந்தே என் உயிர்மூச்சு அவளிடம்தான் இருக்கிறது.” என்று ஏக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
“அதெப்படிப்பா உங்களை மட்டும் தனியா நான் அனுப்புவேன், அம்மாவும்தான் உங்களுடன் இருப்பாள்….முதியோர் இல்லமும் தாம்பரத்துல என் பிளாஸ்டிக் யூனிட் கிட்டதான் இருக்கு” எதோ அப்பாவுக்கு பெரிய உதவி செய்துவிட்ட மாதிரி பேச்சில் கரிசனம் காட்டினான்.
அடுத்தவாரமே மயிலாப்பூர் சொந்த வீட்டில் இருந்து தாம்பரம் முதியோர் இல்லத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மாதா மாதம் இருவருக்கும் சேர்த்து இருபதாயிரம் ரூபாயாம். பாவம் சிவகுமாரின் அம்மாவுக்கு தினமும் மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு போக முடியாமல் அது பெரிய தண்டனையாக அமைந்தது. .
அடுத்த இரண்டு மாதங்களில் சிவகுமாரின் மூத்த மகனுக்கு தடபுடலாக திருமணமாயிற்று. பெரிய இடம். வீட்டுக்கு வந்த மருமகள் பெரியமனது பண்ணி தன் மாமனார், மாமியார் தன்னுடன் இருக்கலாம் என்று சம்மதித்தாள். ஆனால் அவர்களிடம் அடிக்கடி சண்டை போட்டாள். வரணாசியும், வாடிகனும்கூட ஒரே இடத்தில் இருந்துவிடலாம். ஆனால் இரண்டு பெண்கள், அதிலும் குறிப்பாக மாமியாரும், மருமகளும், ஒரே கிச்சனில் புரிதலுடன் புழங்குவது என்பது நடக்கவே நடக்காத காரியம்.
மேகலாவுக்கு புதிய மருமகளுடன் தினமும் மல்லுக்கட்டவே நேரம் சரியாக இருந்தது. தான் தன் மாமியாரை ஆட்டி வைத்ததைவிட, புதிய மருமகள் தன்னை நன்கு ஆட்டி வைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள். முற்பகல் செய்யின்…..சொலவடைதான் அடிக்கடி அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஒரு நாள் திடீரென சிவகுமாரின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் மரணித்தார்.
அதன் பிறகு அவன் அம்மா மட்டும் முதியோர் இல்லத்தில் தனித்து விடப்பட்டாள். ஆனால் கணவரின் இறப்பிற்கு பின்பு அவள் மிகவும் வதங்கிப் போய் ஒடுங்கிப் போனாள்.
ஒருநாள் மதியம் சிவகுமார் அலுவலகத்தில் இருந்தபோது முதியோர் இல்லத்திலிருந்து, “அவனுடைய அம்மாவின் உடல்நிலை சீரியஸாக இருப்பதாகவும், உடனே வரும்படியும்” போன் வந்தது.
அருகிலிருந்த இல்லத்திற்கு ஓடிப்போய் அம்மாவைப் பார்த்தான். அம்மா மிகுந்த சிரமத்துக்கிடையே மெல்லிய வாஞ்சையான குரலில், “நான் சீக்கிரம் போய்விடுவேன் சிவா. நீ உடம்ப பாத்துக்கடா… உனக்கு சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்கு. உனக்கும் வயதாகிவிட்டது. என்னோட அடுத்த பேரனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணு.” என்றாள்.
“சரிம்மா…வேறு என்ன சொல்லணும் உனக்கு?”
“எவ்வளவோ சம்பாதிக்கிற, இந்த இல்லத்துக்கு எல்லா ரூம்லயும் பேன் வாங்கிப் போடுடா. இங்குள்ள வயதானவர்கள் உன்னை மனசார வாழ்த்துவார்கள். நான் இங்கு சம்மர்ல ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்படியே முடிஞ்சா ப்ரிட்ஜ் வாங்கிப்போடு…இப்பவே நீ எல்லாத்தையும் செஞ்சு வச்சிடு…வசதியாக இருக்கும்.”
“நீ என்னம்மா சொல்ற? யாருக்கு வசதியாக இருக்கும்?”
“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்தான்டா….உன்னோட பிள்ளைங்க உங்கள இந்த இல்லத்துக்கு அனுப்பறதுக்கு ரொம்ப நாளாகாதுடா. ஏன்னா, நீ என்ன வேல்யூ சிஸ்டம் உன் குழந்தைகளுக்கு கற்பித்து வளர்த்தாயோ அதுதான உனக்கும் நடக்கும். அது இயல்புதான…பாவம் நீ சின்ன வயசிலிருந்தே ரொம்ப சொகுசா வாழ்ந்தவன், அதுனால சொன்னேன்.”
அம்மா சொன்னது முற்றிலும் உண்மை. எனவே பதில் சொல்ல முடியாமல் சிவகுமார் எச்சில் கூட்டி விழுங்கினான். அமைதியாக கிளம்பிச் சென்றான்.
அடுத்த வாரம், மேகலாவின் காதுபட, அவள் மருமகள் தன் கணவனிடம், “பாட்டிக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகறதுக்கு முன்னால அதே இடத்தை உங்க அம்மா அப்பாவுக்கு இப்பவே புக் பண்ணி வைங்க. ராசியான இடம். அதே ரேட்ல கன்டினியூ பண்ணச் சொல்லுங்க….அப்பாவுக்கும் பிளாஸ்டிக் யூனிட் கிட்டக்கத்தான். ரொம்பதூரம் அலைய வேண்டாம். நாமும் இனிமேல் சுதந்திரமா இருக்கலாம் பாருங்க” என்றாள்.
மேகலா உறைந்துபோய் நின்றாள்.