கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 11,499 
 
 

பரமனுக்கு உறக்கம் வரவில்லை. உணவை வயிறு ஜீரணிக்க மறுத்தது. 

“அறுபதுக்கப்புறமும் இருபது மாதிரி வாழவா முடியும்? உசுரு போகற வரைக்கும் உளறாம படுத்திருந்தா வாழற வயசுல இருக்கிறவங்க நிம்மதியா இருப்பாங்க” மருமகளின் முனகல் சத்தம் லேசாக காதில் கேட்டதும் வேதனையை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டார்.

அறுபது வயது பின்னோக்கி அசை போட்டது அவரது மனம். ஓலை வேய்ந்த கூரை வீட்டில் மண் தரையில் விரித்த கோரைப்பாயில் படுத்து உறங்கி குழந்தைப்பருவத்தில் வாழ்ந்தது நினைவில் வந்து போனது. கூரையைப்பார்த்துக்கொண்டே பாயில் தாயின் அணைப்பில் கவலையேதுமின்றி கண்ணணனைப்போல் பற்கள் முளைக்காத பொக்கை வாயில் சிரித்தபடி படுத்திருப்பது நிழலாடியது.

பாம்பு, பூரான் வருகிறது. குழந்தையை தீண்டினால் என்னாவது? எனும் பயத்தில் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி  கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றினர் அவரது பெற்றோர். படித்து முடித்து வேலையில் சேர்ந்து பெண் பார்க்கையில் ‘ஓட்டு வீடா…?’என பெண் கொடுப்பவர்கள் ஒதுங்க, அலுவலகத்தில் லோன் போட்டு பக்கத்து இடத்தில் கான்கிரீட் வீட்டைக்கட்டி முடிக்கையில் திருமணம் முடிவானது.

“நீங்க டவுனுக்கு வேலைக்கு போறீங்க. நானும் பையனும் எதுக்குங்க இந்த கிராமத்துல வாழனம்? பேசாம இந்த வீட்ட வித்துட்டு கொஞ்சமா லோன் போட்டு டவுன்ல புதுசா சைட்போடற பக்கம் ஒரு வீட்ட வாங்கிப்போடலாங்க” மனைவியின் விருப்பத்திற்கு இணங்கினார். வருடங்கள் ஓடின.

“ஏப்பா பரமா தனி வீட்ல ஒவ்வொன்னுக்கும் நாமதான் ஓடோணும். அபார்ட்மெண்ட் போயிட்டம்னா எல்லாத்துக்கும் பொதுவான ஆள் போட்டிருக்காங்க. தண்ணி வரலேன்னு கவலையில்ல, பிளம்பர் வரலைன்னு தேட வேண்டியதில்ல, வேலைக்காரி கூட ஈசியா கெடைச்சிடுவா. பக்கத்து போர்ஷன் டிரைவரை நம்ம கார் ஓட்டக்கூப்பிட்டுக்கலாம். நான் வாங்கி குடி போயிட்டேன். ஏழாவது மாடி. படில ஏற வேண்டியதில்ல. லிப்ட்தான். சுத்தமான காத்த சுவாசிக்கலாம். வண்டி வாகன சத்தமே கேக்காது. பறவைகள் பறக்கறத, மேகக்கூட்டம் நகர்ந்து போறத நல்லா பார்க்கலாம்” என அலுவலகத்தில் உடன் பணி புரியும் நண்பர் ரகுவரன் சொன்னதும் சம்மதித்தார்.

வயது அறுபதைத்தொட்டிருந்தது. வேலையிலிருந்து ஓய்வு கிடைத்திருந்தது. பென்ஷன் பணம் செலவுகளுக்கு போதுமானதாக இருந்தது.

“அப்பா மேட்ரிமோனில ஜாதகம் பதிவு பண்ணியிக்கேன். ப்ரொபைல் பார்த்த பொண்ணு வீட்டுக்காரங்க அபார்ட்மெண்ட் வீட்டுல இருக்கிறது பிடிக்கலைன்னு சொல்லறாங்க.  தனி வீடு வாங்கலாம்னு பார்க்கறேன். நான் ஐ.டி கட்டறதுனால ரெண்டு கோடி லோன் கெடைக்கும். இந்த வீடு ஒரு கோடிக்கு போகும். ஊர்ல இருக்கிற காடு ரெண்டு கோடிக்கு கேக்கறாங்க. அஞ்சு கோடில பங்களா மாதிரி கேட்டேடு கம்யூனிட்டில பார்த்திருக்கேன். அந்த வீடு வாங்கீட்டா எங்கூட வேலை செய்யற பொண்ணு அனிதாவே என்னக்கல்யாணம் பண்ணிக்கறேங்கறா…” பரமனால் மறுக்க இயலவில்லை.

வீடு வாங்கிய அடுத்தமாதமே திருமணமும் மகனுக்கு நடந்தது. வீட்டில் வழுக்கி விழுந்த பரமனுக்கு இடுப்பு எலும்பு உடைந்ததில் மூன்று மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தவரை தற்போது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். 

“ஏனுங்க…. ஏனுங்க….” மனைவி தட்டி எழுப்பி கஞ்சி கொடுத்ததை வாங்கிக்குடித்தார். மனைவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததைக்கண்டு அதிர்ந்தார். காரணம் கேட்டதற்கு பதில் இல்லை. நடு இரவு அழுகை சத்தம் கேட்டதும் எழுந்து பார்த்தார். ஸ்டிக்கை எடுத்து ஊன்றியவாறு மெதுவாக மனைவியின் அறைக்குச்சென்றார். மருமகளும், மகனும் அழுது கொண்டிருந்தனர். மனைவி உயிரற்ற உடலாய் கிடந்தாள்.

சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிந்திருந்தது. உறவுகளின் வருகை நின்று போன பின் ஒரு நாள் ” அப்பா நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே….?” கேட்ட மகன் முகனை ஏறிட்டார். ‘சொல்லு’ என்பதாக ஜாடை செய்தார். அப்போது மருமகள் அனிதா குறுக்கிட்டு பேசினாள்.

“எதுக்குங்க சும்மா அநியாயத்துக்கு தயங்கறீங்க. சட்டுனு பேசுனா பட்டுனு முடிஞ்சு போகுது. அது வேற ஒன்னுமில்லைங்க மாமா. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிடறோம். நீங்க மட்டும் இவ்வளவு பெரிய பங்களாவுல அதுவும் அத்தை போன வருத்தத்துல தனியா இருந்தீங்கன்னா, அத்தை மாதிரியே கவலைல விசத்த குடிச்சு செத்துட்டீங்கன்னா சொந்த பந்தம் என்னைத்தான் தப்பா பேசுவாங்க. அதனால முதியோர் இல்லத்துல விட்டுடலாம்னு டிசைட் பண்ணியிருக்கோம். ஏங்க முகன் அப்படித்தானே….?” மனைவி பேச்சை மறுக்காமல் ‘ஆமாம்’ என்பதாக தலையாட்டினான்.

செய்தியைச்சொன்னார்கள். விருப்பத்தைக்கேட்கவில்லை என்பதைப்புரிந்த பரமன் வேதனை மேலோங்க அமைதியானார்.

முதியோர் இல்லத்தில் கூரை வீட்டில் ஒரு கோரைப்பாயில் ஒரு குழந்தையைப்போல் படுக்க வைக்கப்பட்டார்.

குழந்தையில் இருந்தது போன்ற அதே நிலை. பூஜியத்தில் ஆரம்பித்த வாழ்க்கை திரும்பவும் பூஜ்ஜியத்துக்கே வந்திருப்பதாகப்பட்டது. அன்று தாயின் அரவணைப்பு, குழந்தை மனம் சிரிப்பு வந்தது. இன்று வெறும் பாயின் அரவணைப்பு, முதிர்ந்த மனம் அழுகை வந்தது. வேதனையின் உச்சத்தைக்கண்டார். அன்றைய முதல் நாளின் இரவில் தூக்க மாத்திரை தந்த தூக்கத்திலேயே உதிர்ந்து போனது அவரது உடலிலிருந்து உயிர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *