முடிவு தெரியாத குறைகள்
இந்த பில்லுல கையெழுத்து போட்டுட்டீங்கண்ணா நல்லா இருக்கும் தலையை சொறிந்து கொண்டு கையை பவ்யமாய் வைத்துக்கொண்டு கூனி குறுகி முதுகை வளைத்து நின்ற காண்ட்ராகடர் மயில்வாகனனை உற்றுப்பார்த்த நமசிவாயம் நாளைக்கு பாக்கலாம் சொல்லியபடி எழுந்து நின்றார்.
அதுவரை கூனி குறுகி நின்று கொண்டிருந்த மயில்வாகனன் இன்னைக்கு போட்டுட்டா நல்லாயிருக்கும், இல்லையின்னா மேலிடத்துலயிருந்து என் மேலே கோபிச்சுக்குவாங்க. பதவிசாய் சொன்னாலும் குரலில் மெல்லிய மிரட்டல் தொனித்ததை கவனித்தார் நமசிவாயம். “மேலிடம்” என்பதில் இருந்த அழுத்தம் அவரை புரிய வைத்தது.
பெருமூச்சுடன் மயில்வாகனனை பார்த்த நமசிவாயம் கொஞ்சம் புரிஞ்சுக்குங்க, அந்த பில்லுல கையெழுத்து போட்டு நீங்க பணத்தை வாங்கிட்டு போயிட்டீங்கன்னா அதுக்கப்புறம் நாங்க சொன்ன வேலைகள் அப்படியே நின்னுடும். உங்களுக்கே கொஞ்சம் மனசாட்சி இருந்தா கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அந்த கிராமத்துகாரங்க இத்தனை வருசமா போராடி, இப்பத்தான் கவர்ண்ட்மெண்டு மனசு வச்சு அந்த ஊருக்கு ஒரு பாலம் கட்டி கொடுத்திருக்குது. அதுல அவங்க சொன்ன சிமிண்ட் கலவையில கூட நீங்க அந்த பாலத்தை கட்டலை. ஏதோ கடனேன்னு அவசர அவசரமா அதை கட்டி முடிச்சு எல்லாம் முடிஞ்சுது இந்த பில்லுல கையெழுத்து போட்டுக்கொடுன்னு நிக்கறீங்க.!
சார் நீங்க வாயில சொல்ற அறிவுரை நல்லாத்தான் இருக்கு, நான் இல்லைங்கலே, சரி அரசியல் கட்சிகளுக்கும், உங்க ஆபிசுல இருக்கற மேல இருந்து கீழ் மட்ட ஆளுக வரைக்கும் இந்த பாலத்துக்கு காண்ட்ராகட் எடுக்க நான் எவ்வளவு செலவு பண்ணியிருக்கேன்னு நீங்க யோசனை பண்ணி பாருங்க. நீங்க யாருமே என் கிட்டே இதுக்காக பணம் வாங்காம இருந்திருந்தா நான் ஏன் சார் பாலம் கட்டறதுல கை வைக்கறேன். எனக்கும் மனசாட்சி இருக்கு, ஆனா நானும் என் குடும்பமும் சாப்பிட்டு உயிர் வாழணுமில்லை. இதை ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க?
இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தார் நமசிவாயம். இருந்தாலும் விட்டு கொடுக்காமல் ஒத்துக்கறேன் உங்க கஷ்டத்தை, இருந்தாலும் என் மனசாட்சி ஒத்துக்கணும் இல்லையா? அந்த பாலம் இத்தனை “டன்” எடையை தாங்கணும்னு இருக்கு, ஆனா நீங்க கட்டி இருக்கறதை பார்த்தா எப்படி தாங்கும்? நாளைக்கே ஏதாவது ஒண்ணு ஆகிப்போனா எங்க தலையை உருட்டுவாங்க இல்லையா?
சார் நீங்க கையெழுத்து போடுங்க, உங்களுக்கு அதை பத்தி எந்த கவலையும் வேண்டாம். இதுல ஆளும் கட்சி, எதிர் கட்சி எல்லா கட்சி வரைக்கும் பங்கு இருக்கு. அதுனால எந்த பிரச்சினையும் வர வாய்ப்பில்லை. புரியுதா? இன்னும் உங்களுக்கு டவுட்டுன்னா மேலிடத்துல இருந்து யாரையாவது பேச வைக்கட்டுமா?
நமசிவாயம் சிரிப்புடன் அப்பா மயில்வாகனா இப்ப என்னை மேலிடம் மேலிடம்னு சொல்லி மிரட்டி மிரட்டியே கையெழுத்து கேக்கறே. என் மனசாட்சிக்கு விரோதமா கையெழுத்து போடறேன். கண்டிப்பா நான் இது சம்பந்தமா உன் கிட்டே எதுவும் கையூட்டு வாங்கலை, இருந்தாலும் நாளைக்கு ஏதாவதொண்ணு ஆகிப் போச்சுன்னா நான்தான் பணத்தை வாங்கிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தேன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது, நாங்களும் அரசாங்கம் கொடுக்கற சமபளத்துலாதான வாழவேண்டி இருக்குது.
அப்ப நான் வரேன் சார் மீண்டும் பதவிசாய் கையெடுத்து கும்பிட்டு கையெழுத்து வாங்கி “கொல்லும்” மயில்வாகனனை ஏதும் செய்ய முடியாமல் இருப்பது போல் பார்த்தார் நமசிவாயம்.
பாலம் கோலாகலமாக திறக்கப்பட்டு ஆளும் கட்சியால் இந்த பாலம் எங்களால் கட்டப்பட்டது என்று தெரிவித்தது. எதிர் கட்சியோ நாங்கள் ஆட்சி செய்த காலத்திலேயே இது ஆரம்பிக்கப்பட்டது என்று அறிக்கை விட்டது. மற்ற கட்சிகளோ இதை இரண்டும் சொல்ல முடியாமல் விழித்து எங்களின் தொடர் போராட்டங்களால்தான் இந்த பாலம் கட்டும் யோசனையை உருவாக்கி கொடுத்தோம் என்று முழக்கமிட்டன.
பாலம் உபயோகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் தொடர் வாகன போக்குவரத்தாலோ அல்லது கட்டுமான குறைபாட்டு குறையாலோ இடிந்து விழ உடனே எதிர்க்கட்சிகள் பொங்கி பெருகி கேள்வி எழுப்பவும், பத்திரிக்கைகள் அப்பொழுதுதான் விழித்து எழுந்து இந்த குற்றங்களை கண்டுபிடித்து எழுதுவது போலவும் எழுதி மக்கள் டீக்கடைகளிலும், கடை வீதிகளிலும் இதை பற்றி பேசி பொழுது போக்குவதற்கு இரண்டு நாட்களுக்கு வாய்ப்பளித்தன.
மறு நாள் பாலம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பாக கட்டுமான பொறியாளரை துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டும், பாலம் கட்டிய காண்ட்ராக்டரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பத்திரிக்கையில் அறிக்கை வந்தது. மேலும் இது சதியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று காவல்துறையும் தன் விசாரணையை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது.
சில நாட்கள் கழித்து மக்கள் இதை மறந்து அடுத்த பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்தனர். வழக்கு வாய்தாவாக இழுத்துக்கொண்டும், துறைரீதியான பொறுப்பானவர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்த காண்ட்ராகடரிடம் பயந்து பயந்து கையெழுத்து போட்டு கொண்டும். காவல்துறையும் ‘இது சதி வேலை காரணமா’ என்று விசாரித்துக்கொண்டும் இருந்தது. இருக்கிறது, இருக்கும்.