முடியவில்லை; தொடராது!
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 104
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒன்று… இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு… ஏழு!
அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக ஒலித்த அந்தக் கடிகா ரத்தின் மணியொலிகள் ஏழும் அடங்கிப் போயின. ஒளி மங்கி விட்டது. வண்ணச் சித்திரங்கள் பலப்பல படர்ந்து பளிச்சென் றிருந்த வானம் மெருகு குலைந்து காணப்படுகிறது. ஊர்ந்து நகர்ந்து வரும் அந்த வெண்ணிலா வெள்ளி முலாம் பூசிய வெறும் இரும்புத் தகடு.. அதுவும் கொஞ்சம் முலாம் உதிர்ந்து போய்த் தேய்ந்திருக்கிறது! ஓடி ஆடித் திரிந்த உற்சாகம் நிறைந்த உடல்களையும் உள்ளங்களையும் ஏதோ ஒருவித மயக்கம் தழுவித் தலைசாய்க்கச் செய்யும் அந்த நேரம் சத்தமுஞ் சந்தடியும் அடங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. ஆடாது அசைவற்றுக் கிடக் கும் உலகம் அருவருப்பு நிறைந்த சவம்போல என்னெதிரே காட்சி அளிக்கிறது
கம்பிகள் பதித்த இரும்புக் கதவுக்கும் கற்களால் எழுப்பிய சுவர்களுக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கிறேன் நான். காற்றில் பறந்து கதிரவனைக் கட்டி அணைத்து, ஒளி வீசும் தண்ணிலவின். உதடுகளில் முத்தம் விதைத்து, தனித் தனியே சிதறிக்கிடக்கும் தாரகைகளை ஒன்று திரட்டி ஒளிவிடும் சுடர்மாலையாக்கி மார்பில் அணிந்து மகிழ்ச்சி அடையும் என் எண்ணங்களோடு ஒத்துழைக்க முடியாமல் உடல் சிறைவைக்கப்பட்டிருக்கிறது. சிறை…..! அதற்கும் சர்க்கஸ் கொட்டகைக்கும் உள்ள அந்த மாபெரும் முரண்பாடு!…மிருகங்களை மனிதர்கள் பழக்குகிறார்கள் சர்க்கஸ் கொட்டகையில்-மனிதர்களை மிருகங்கள் பழக்குகின்றன இந்தச் சிறைச்சாலையில்!
என் உடலின் ஒவ்வொரு அங்கமும் காய்ச்சி உருக்கப்படு வதைப் போன்ற உணர்ச்சி என்னை யறியாமலே எனக்கேற்படுகிறது. “அகலாத இருள்” என்ற அருமையான நூலுக்கு அமைந்த அழகான முன்னுரைதான் எனக்கும் உலக வாழ்வுக்கும் இடையே இருக்கும் இறுதித் தொடர்பான இந்த இரவு! நாளை…? எனக் கேற்படப் போகாத அந்த நாள்! சாகப்போகிறேன்.. இல்லை…… கொல்லப்போகிறார்கள் என்னை! பிறகு ? கடவுள் மோட்சம். உரத்து வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது. ஆனால்! சிந்தனை அந்தச் சிரிப்பைத் தடுத்து நிறுத்துகிறது.
மோட்சம்…!… சுயநலமே உருவான பிறவிச் சோம்பேறியின் மூளையில் உதித்த பித்தலாட்டம் நிறைந்த கற்பனை! மது இருக் கும் – மங்கை இருப்பாள்-மனோகரமான வாழ்விருக்கும் – ஆனால் இத்தனைக்கும் உழைக்கவோ, பாடுபடவோ வேண்டியதே இல்லை! குவியல் குவியலாகப் பொன்னும் மணியும் கொட்டப்பட்டிருக்கும் குபேரப் பட்டணத்தில் – விற்பனை வரி விதிக்கும் சர்க்காரோ, வரு மான வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர்களோ இருக்கமாட்டார் கள்! கருத்தில் பட்டதை யெல்லாம் கண் முன்னே கொண்டுவரக் காமதேனுவும், கற்பக விருட்சமும் இருக்கும்-ஆனால் பசி தாகம் பற்று இவை மூன்றும் ஏற்படா! உதவாக்கரைச் சரக்குகளும்- உளுத்துப்போன உலுத்தர்களும்! இதைக் கற்பனை செய்த மனித னுடைய உடலில் ஊறிப்போயிருந்த சுயநலமும் சோம்பேறித்தன மும் பேராசையும்…!
என் இதயத்தை மத்தளமாக்கி யாரோ ஓங்கி ஓங்கித் தட்டு கிறார்கள். உடலில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் நரம்புகளை மீட்டும் ஒலி கேட்கிறது. கொதிக்கும் குருதியிலிருந்து ஜலதரங்க ஓசை கிளம்புகிறது. அவலமே உருவான இந்தப் பின்னணி. அதற்குத் தகுந்தாற்போல் என் இதய அரங்கில் படமெடுத்தாடும் பயம்… ஒருவேளை அதன் சீற்றங்கள் தாம் எனக்கு அடிக்கடி ஏற் படும் பெரு மூச்சுகளாக இருக்குமோ? இல்லை இல்லை, உயிரற்ற ஒரு முழக் கயிறுதான் உயிர்பெற்று என் உள்ளத்தில் கூத்தாடு கிறது. கண்களை மூடினால் அது என் கழுத்துக்கு அருகேயே வந்து வட்டமிட்டு வட்டமிட்டுக் கண்ணாமூச்சி விளையாடுகிறது!
என் இதயம்…! இன்னதென்று எவராலுமே விளக்க முடியாத அதிசயமான அந்தப் பொருள்…! மரணத்தின் நினைவு அதைத் தொடும்போது உருகும் மெழுகு… கரையும் உப்பு… காற்றில் கலந்து காணாமலே போகும் பீடியின் புகை…சீச்சீச்சீ… இவை யெல்லாம் உதவாக்கரை உவமைகள் சுருக்கமாகச் சொன் னால் மரணத்துக்குப் பயந்து சாகிறேன்! ஏன்…? அது எனக்குப் பழக்கமில்லாத நிகழ்ச்சி. செத்துத் தொலைந்தவர்களாவது ஒரு முறை வந்து அதை எனக்கு விளக்கியிருந்தால் இந்தப் பயமே ஏற்படாது. அனுபவித்தறியாத எந்த நிலையும் நமக்கு அச்சத் தைத்தான் உண்டாக்கும்! வாழ்நாள் முழுதும் ஒத்துத்தான் வாழப்போகிறோம் என்பது தெரிந்தும் ஆணும் பெண்ணும் முதல் தடவை சந்திக்கும்போது எவ்வளவு நாணிக்கோணி வெட்கி வேத னைப்படுகிறார்கள்? அப்படியிருக்க, சாவின் சாயலே படாத என் னைச் சாகச் சொன்னால்…
இரத்தஞ் செத்துச் சோகையேறி வெளுத்துப்போன நோயாளிகளின் முகத்தை நினைவூட்டும் இந்தப் பரிதாபத்துக் குரிய நிலா ஏன் என்னை இவ்வளவு பரிவாகப் பார்க்கிறிது? எங்கோ ஒலித்துச் சிறையின் சுவர்களில் எல்லாம் எதிரொலிக்கும் சாவின் குரல் ஏன் என்னைச் சுற்றி நின்று கட்டாமாலை ஆடுகிறது ?
எத்தனையோ ஜீவராசிகளை அணைத்து ஆறுதல் அளிக்கும் அமைதியும் நிம்மதியும் ஏன் எனக்கு மட்டும் பிணக்காட்டை நினைவுபடுத்துகின்றன ? லேசாகத்தானே வீசுகிறது காற்று ! அது பட்டவுடன் உரோமங்கள் சிலித்து என் உடல் நடுங்குவானேன் ? எங்கெங்கோ நடமாடிக்கொண்டிருக்கும் சிறை வார்டர்களின் காலடி ஓசைகள் கடந்துசெல்லும் காலத்தை அறிவுறுத்தும் கடிகார முட்களின் அசைவொலிகளைப் போல என் காதுகளில் விழுகின்றனவே. அது ஏன்? ஏன்…? ஏன்…? அதுதான் எனக்குத் தெரியவில்லை-விளங்கவில்லை-விளக்க எவரும் இல்லை-விளக்கி னாலும் புரிந்துகொள்ளும் நிலையில் நானில்லை 1
ஐயோ! இதென்ன? நான் அழுதிருக்கிறேன். கதறிக் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். சீYகையாலாகாதவர்கள் அல்லவா கண்ணீர் சிந்துவார்கள்! சாகவா அஞ்சுவது? அது சகலருக்கும் ஏற்படும் சகஜமான நிகழ்ச்சிதானே ? பூச்சி விழுந்த கதிர்களுக்கும் உறுதியிழந்த இயந்திரங்களுக்கும வாழ்வளிக்க வழி கண்டு பிடித்துவிட்டோம். தேய்ந்து சத்திழக்கும் சதை எலும்பு நரம்பு இவைகளைப் பாதுகாக்க ஒருவித சாதனமும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் அவை தெம்பிழந்து விழுந்துவிடுகின்றன. சாறற்ற எந்தச் சக்கைக்கும் இயற்கையாக ஏற்படும் இறுதி முடிவுதானே சாவு! இதற்காகவா அழுவது?
ஆனால்…! நான் சாவதற்கும் மற்றவர்கள் சாவதற்கும் உள்ள அந்த மாறுபாடு…! கிளையிலேயே வாடி வதங்கிக் காய்ந்து சருகாகிக் கீழே விழும் இலைகள் அவர்கள்-காலண்டரிலிருந்து! கிழித்தெறியப்படும் கடந்துபோன நாளைக் குறிக்கும் தேதித்தாள் நான்!
பொறியில் சிக்கிய எலியிடம் எவரும், ”நாளைக் காலையில் உன்னை ஒரு பூனைக்கு முன்னால் திறந்துவிடப் போகிறோம்” என்று சொல்வதில்லை – சொன்னாலும் அது புரிந்துகொள்ளாது! ஆனால் என்னை இங்கே அனுப்பும்போதே நாள் குறித்து நல்ல நாழிகை நிச்சயித்து அதை என்னிடமும் தெரிவித்து அனுப்பிவிட்டார்கள். என்னைப் பூட்டிப் பாதுகாக்கிறார்கள். ஏன்? சாக அடிக்க! இவர் களை எல்லாம் ஏமாற்றி விட்டேன் நான். என்னை நாளைக்குக் காலையில்தானே சாகவேண்டும் என்று கட்டளையிட்டார்கள் ஆனால் இவர்கள் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டு இத்தனைக் கட்டுக்காவலையும் மீறி இப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருக்கிறேனே !
நான் சாவதா ? இல்லை! முடியாது ! என் இதயத்துக்குள்ளே மூடிப் பதுக்கி வைத்திருக்கும் அந்த இன்ப நினைவுகள்…! தூக்கம் வராத சில இரவுகளில் என் உள்ளத்திலிருந்து உதிர்ந்து கொட்டிய அந்த இன்பக் கற்பனைகள்…1 சத்தற்ற என் வாழ்வைக் கசக்கிப் பிழிந்து வடித்தெடுத்த அந்தத் திட்டங்கள்…! என்றாவது ஒருநாள் இவை யத்தனையும் ஈடேறும் என்றுதானே ஈவிரக்க மில்லாத சூழ்நிலை என்னைக் கொட்டிக் கடித்து என் இதயத்தைக் குமுற வைத்தபோது பொறுத்துக் கொண்டிருந்தேன். அந்த இன்பம் சொட்டும் நாட்கள் நான் செத்துப் பிணமான பிறகு வந்தால் அனுபவிக்க நானிருக்க மாட்டேனே ! ஐயோ ! நான் சாகப் போவதில்லை. வாழத்தான் விரும்புகிறேன். ஆனால் சாகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறதே இந்தச் சதிகார உலகம் !
வாழ்க்கை ! இளமை, வளமை, ஜீவசக்தி, நிறைந்த இன்ப வாழ்க்கை! வாழவேண்டும் என்ற ஆசை, குருதியில் கொட்டிக் கிடக்கும் சிவப்பு அணுக்களோடு சேர்ந்துகொண்டு கூத்தாடு கிறது. இதைத்தான் உலகத்துக்குச் சொன்னேன். அதற்காகத் தான் எனக்குத் தூக்குத்தண்டனை ! உழைப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்வோம்- உல்லாசத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் ! மனித ஜாதியின் நல்வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையான இந்தக் கருத்தை நான் வாய்விட்டுச் சொன்ன போது கைதட்டி வரவேற்ற உலகம் அதைச் செயலில் செய்து காட்ட முனைந்தபோது “செத்துத் தொலை” என்று கட்டளையிட் டிருக்கிறது. உலகம்…! மிகவும் உயர்ந்தது ! பொன்னைப்போல மின்னும் பித்தளைகள் அதை அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டிவைக் கிறார்கள் ! மதகுருக்கள், புரோகிதர்கள், பாதிரிகள், மௌல்விகள்- இந்த வேலையற்ற சோம்பேறிக் கூட்டம் நரகத்தைக் கற்பித்து உலகத்தைத் தம் கட்டுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. கொத்துப் பூக்கள் குரங்கின் கையில் சிக்கியிருக்கின்றன! கன்னி மாடத்தின் காவலர்களாகக் காமுகர்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். சீ! இந்த மந்தையோடு சேர்ந்தா வாழவேண்டும்?
நான் செத்த பிறகு…? அந்தக் காட்சி என் கண்முன்னே வருகிறது. என் பிணத்தைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக வட்ட மாக வட்டமிட்டு வலம்வரும் அந்தக் கழுகுகள்? அவைகளுக்குந் எவ்வளவு பசி? அவைகள் என் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திக் கொத்திச் சதைத் துண்டங்களைத் தின்னும்போது என் உடலில் துளிக்கூட வலி இல்லை-உள்ளந்தான் துடிக்கிறது ! சாவு! எவ்வளவு புனிதம் நிறைந்த பொதுநலம் ! செத்துப் பிணமான உடல் வறண்ட நிலத்தை வளம் நிறைந்த வயலாக்கும்- பாழடைந்த நிலத்தைப் பழத்தோட்டமாக்கும்! ஒருவேளை தன்னல மற்ற தியாகத்துக்குக் கொடுக்கப்பட்ட பயங்கரம் நிறைந்த பெயர்தான் ‘சாவு” என்றிருக்குமா ? வாழ்வு…! கொடுமையும் கொடூரமும் நிறைந்த கலப்பில்லாத சுயநலம்! பலரைப் பாடுபட வைக்காமல் எவராலுமே வாழமுடியாது. நான் சாகத்தான் போகி றேன். சாவதில் பெருமை அடைகிறேன்!
சிறைக் கதவை யாரோ திறக்கிறார்கள்.
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது; சிறுத்தையே வெளியே வா!” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏட்டில் எழுதி என் எண்ணத்தில் பதித்த அந்தக் கவிதையின் அடிகள் என் காதுகளில் ஒலிக்கின்றன. இரவே ! நீ என்னைவிட்டுப் பிரிந்து விட்டாய்-நான் உன்னைவிட்டுப் பிரியப் போகிறேன். உனக்கு என் இறுதி வணக்கம் ‘ வெளுத்துப்போன வானத்தில் ஒளியிழந்து உருவிழந்து நாதியற்றுக் கிடக்கும் நிலவே, உனக்கு என் அனுதாபங்கள்! மானம்-மரியாதை, சடங்கு சாஸ்திரம், மதம்- கடவுள் இவைகளைக்கொண்டு ஆடப்பட்ட சூதாட்டத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு வீணர்களான மனிதப் புழுக்களே! நீங்கள் இருப் பதைவிட அழிந்து போவதேமேல் என்று வாழ்த்துகிறேன்- மனப் பூர்வமாக!
கழுத்தில் கயிறு மாட்டப்பட்டுவிட்டது. கருப்புத்துணியால் முகத்தை மூடி மறைத்துவிட்டார்கள். கடைசி மணி அடிப்பதற் காகக் காத்திருக்கிறார்கள்.
ஆவி பிரியும் அந்த நேரம் … ! வாழ்நாள் எல்லாம் அணைத்து ஆலிங்கனம் செய்து அனுபவித்த மனைவி “எனக்கு என்ன ஆதரவு?” என்று கதறி நிற்பாள். வளர்த்து ஆளாக்கிய தாய், “LD & C60T, நீ மறுபடியும் வந்து என் வயிற்றில் பிறக்கவய போகிறாய்?” என்று மாரடித்துக் கொள்வாள். சுற்றி வளைத் தேறிய கொடிகளான பிள்ளைகள், ‘அப்பா! இனி எங்களுக்கு ஏது பற்றுக்கோல்?” என்று பதறிக் கண்ணீர் வடிப்பார்கள். இதயத் தின் ஆழத்தில் ஒளித்து வைத்திருந்த பாவங்கள், பழிகள்; கொடுமைகள் எல்லாம் ஒன்று திரண்டு ஓருருவாகி யாரோ கற்பித்துக் கொடுத்த அந்த நரகத்தைக் கவனப்படுத்தும். வெளியே கலங்கித் தவிக்கும் கண்கள் – உள்ளே கருக்கித் தீய்க்கும் கருத்து! வாழ்வின் கடைசிக் “கோரஸ்” பாடப் பாடு வதற்கு முன்னால் நடக்கும் அந்த இறுதிக் கட்டம்…!
இவற்றிலிருந்து நான் தப்பிவிட்டேன். வேதனைப்படுத்தும் சூழ்நிலை என்னிடமிருந்து வெட்டித் துண்டுபடுத்தப்பட்டுவிட்டது. என்னிடம் எஞ்சியிருந்த ஒரே உடமை நான் எவருக்கும் தெரி யாமல் கடைசி வரையில் பதுக்கி வைத்திருந்த பீடிகள்தாம் ! அவைகளையும் நேற்றிரவே புகைத்துத் தீர்த்துவிட்டேன்! கயிறு கழுத்தை இறுக்குகிறது. இதயததுக்கும் மூளைக்கும் இடையே உள்ள அந்த இணைப்பு அறுபடுகிறது. மணியொலிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே வருகின்றன.
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து… ஆ….
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
இளையவேணி கிருஷ்ணா
October 9, 2026
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
