ஆனந்த பைரவி
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 16
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலவொளி… நீரோடை… நிம்மதி நிறைந்த நேரம்! துறவி ஆனந்தனுக்குத் தூக்கம் வரவில்லை.
இரவு, நிலவொளியால் தன்னை ‘மேக்கப்’ செய்துகொண்டு பட்டப்பகலைப்போல நடித்துக் கொண்டிருந்தது. பளிச்சென்று ஒளிவீசும் உடையணிந்து உலவப் புறப்பட்ட நிலா உடலைச் சரிவர மூடி மறைத்துக்கொள்ளாமல் காணப்பட்டது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்தன். வெட்கங்கெட்ட அந்த நிலா கொஞ்சங்கூட நாணமடையாமல் நகைமுகங் காட்டி யது. ‘பச்’சென்று அவன் உள்ளத்தில் துளிர்த்த பருவ உணர்ச் சிகள் வளர்ந்து பொன்னிறம் பெற்றன. யார் யாரோ அவனுக்கே அறிமுகமாகாத பெண்கள் பலர் அவன் இதயத்தை நிலைக் கண்ணாடியாக்கிக் கொண்டனர். பலவித கோணங்களில் இருந்து அதில் பார்த்தனர்-சிரித்தனர்-பரிகாசம் செய்தனர் !
எதிரே சலசலவென்று சதங்கையொலி எழுப்பும் தெள்ளிய நீரோடை கரையில் வளர்ந்திருந்த ஒரு மகிழமரத்தின் வேரைத் தொட்டு முத்தமிட்டுச் சென்றது. கூச்சம் தாங்காது மரத்தின் உடல் சிலிர்த்துத்தான் இருக்கவேண்டும் ‘பொல பொல’ என்று மலர்களை உதிர்த்தது அந்த மரம். விழுந்த மலர்களை ஏந்தி யிழுத்துக்கொண்டு வேகமாக ஓடிற்று அந்த ஓடை ! வேட்கை யைத் தூண்டிவிட்டுத் தாபத்தைத் தணிக்காது மறையும் தன்னலம் மிகுந்த சில பெண்களைப் போன்ற அந்த ஓடை…! மாயை ஆனந்தன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது!
அங்கிருந்து எழுந்து நேரே தன் குருநாதர் எதிரே வந்து நின்றான்.
“சுவாமி! ஒரு சந்தேகம் ?”
“என்னப்பா அது ?”
“ஏன் கடவுள் உலகைப் படைத்தார் ?”
குருநாதர் அவனைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தார். அவ ருக்குக் கிடைத்த அந்தச் சீடன் அவரை ஆச்சரியத்தால் திகைக்க வைத்தான்.
“கடவுள் உலகத்தைப் படைக்கும்போது நீ அவர் பக்கத்தி லிருந்து புத்தி சொல்லாததால்தான்!”
“சந்தேகத்தைச் சஞ்சலமாக்காதீர்கள் சுவாமி 1 கடவுள் ஏன் உலகைப் படைத்தார்? உலகைப் படைத்தார் ஏன் மனிதர்களைப் படைத்தார்? மனிதனைப் படைத்தவர் ஏன் அவனைச் சுற்றிப் பாவங்களைப் படையெடுக்க வைத்தார் ? எனக்கொன்றும் விளங்கவில்லையே சுவாமி !”
“எவருக்குமே அது விளங்கியதில்லையே, ஆனந்தா! வேத வேதாந்த வித்தகர்கள் எல்லாம் விடைதேடித் தத்தளித்த கேள்வி அல்லவா அது !”
பயிற்சியில்லாத முரட்டு விரல் பட்டுத் துடித்துத் தணிந்த வீணைத் தந்திபோல ஆனந்தனின் உள்ளக் குமுறல்தானே அடங் கிப் போனது.
“ஆனந்தா! உடல் சாந்தியடைந்து உள்ளம் மட்டும் சலனத்திலிருந்தால் சஞ்சலம் ஏற்பட்டுத்தான் தீரும். இன்று திருவிழா. தேவன் ஊர்வலம் வந்துகொண்டிருப்பார். போ. நிம்மதி ஏற்படும்வரை அவரோடு சுற்றிவிட்டு வா. எல்லாம் சரி யாய்ப் போய்விடும்.”
“தனியாக உங்களை விட்டுவிட்டா சுவாமி ?”
“என்னை எவரும் களவாடிவிட மாட்டார்கள். கலங்காமல் போய்வா.”
ஆனந்தன் அங்கிருந்து அகன்றான்.
சுற்றிலும் வேலியமைத்துக் கொத்தி, நீர்பாய்ச்சி விதைத்துக் காத்து வளர்த்த செடியாக இருந்திருந்தால் ஆனந்தன் செழிப்பாக வளர்ந்திருப்பான். காட்டில் பிறந்து கண்காணிப்புப் போதாமல் வளர்ந்ததால் அவனைச் சுற்றிக் கள்ளி படர்ந்தது- கரையான் புற்றெடுத்தது ! வேதனையில் பிறந்து வேதனையிலேயே வளர்ந்த அவனுக்கு வேதனையோடு வாழமட்டும் பிடிக்கவில்லை. கவைக் குதவாத இந்த உலகத்தைக் காறி உமிழ்ந்துவிட்டுப் பேசாமல் துறவியானான்
உலகைப் படைத்துக் காத்துப் பரிபாலிக்கும் பரமன்- நித்தியன், நிர்மலன், நிரஞ்சனன்-பவனி வந்துகொண்டிருந்தார். விண்ணில் ஒட்டிக்கொண்டிருந்த தாரகைகள் மண்ணில் விழுந்து ஊர்வது போன்ற விளக்கு வரிசைகள். ஒழுங்கோ கட்டுப்பாடோ இல்லாத அந்த ஜனத்திரளில் சத்தமும் சந்தடியும் மொய்த்துக் கொண்டிருந்தன. பளபளப்பான பட்டுப்பட்டாடைகள் அணிந்து பார்வையைப் பற்றியிழுக்கும் பதுமைகளைப் போன்ற பாவைகள்- கூட்டமாகக் கூடிய குருவிக் கூட்டத்தைப்போல ஓயாமல் ஒழி யாமல் கூச்சல் போட்டுக்கொண்டே நடந்தனர். ஆண்டவனே மாயையின் மத்தியில் சிக்கித் தவிப்பதை ஆனந்தன் கண்ட போது…
பளிச்சென்று அவன் கண்ணெதிரே ஒளிவிட்டது ஒரு கத்திரிக்கோல். ஒரே வெட்டு. அந்தத் தங்கச் சங்கிலியின் இணைப்பு அறுந்தது. பறிகொடுத்த கழுத்துப் பரதவித்தது- ஏந்திப் பிடித்த கை இறுமாப்போடு அங்கிருந்து அகன்றது. கூட்டத்தில் கலந்து கரையப்போன அந்தத் திருடனைத் தொடர்ந் தோடினான் ஆனந்தன். இவனையும் இவன் கருத்தையும் எப் படியோ கண்டுபிடித்து விட்டான் அவன். பிறகு…? பறந்தோடும் புறாவும் – அதைப் பாய்ந்து துரத்தும் ராஜாளியும்! நீதிக்கும் அதன் பிடிப்புக்கு அகப்படாமல் தப்பிப் பதுங்க ஓடும் பாவத்துக்கும் இடையே நெடுநேரம் ஓட்டப்பந்தயம் நடந்தது. நிம்மதி நிறைந்த பல வீதிகளில் விறைக்க விறைக்க ஓடிவரும் குதிரையின் குளம்படி யோசைகள் கிளம்பின. கடைசியில் திறந்திருந்த ஒரு வீட்டுக்குள் ஓடிப் புகுந்தான் அந்தத் திருடன். கதவு தாழிடப் பட்டது. தொடர்ந்தோடி வந்த ஆனந்தன் தேக்கி நிறுத்தப் பட்டான்.
ஆண்டவன் ஊர்வலம் அந்த வீதியைக் கடந்துபோய் அத்தனை நாழிகையான பிறகும் ஏன் அந்த வீட்டுக் கதவு திறந் திருந்தது ? ஒருவேளை வெளியே போன யாராவது திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால்…! அப்படியானால் கள்வன் புகுந்த செய்தி தெரியாமல் கவலையற்றுத் தூங்கும் ஆத்மாக்களின் கதி…? ஓங்கிக் கதவைத் தட்டினான் ஆனந்தன்.
“யார்?”
அந்தக் கேள்விக் குரலைத் தொடர்ந்து கதவு திறந்தது. உள்ளே பாய்ந்த ஆனந்தனுடைய பார்வை எதிரேயிருந்த அந்த உருவத்தை அப்படியே படம் பிடித்தெடுத்து வந்து அவன் இதயத்தில் பதிந்தது. சிந்தித்துச் செதுக்கிய சிலை அவள்-உயிர். பெற்று மெருகேறி ஒளிவிட்டு நின்றாள். அவன் கண்ணெதிரே ! உறக்கத்தின் சாயலே படாத மலர்விழிகள். ஆடம்பரமற்ற அலங் காரம், தவழும் தென்றலில் மிதந்துவந்த மல்லிகையின் மணம். இமை வில்லில் விழிக்கணையைக் கோர்த்து இவன்மேல் எய்தாள் அவள் !
“உள்ளே வாருங்கள்”
தளிர்விரல் தந்தியில் படும்போது வீணை யெழுப்பும் இன்ப ஒலி இல்லை இல்லை. ஜோடிப் புறாவின் ஜாடைமொழி ‘தத்தோம்’ என ஆண்டவன் எதிரே தாளம்போடும் இரு மத்தளங்கள் இவன் நேரெதிரே யிருந்து ஒலிப்பதுபோல இவனுக்குத் தெரிந்தது. மயக்கம் இவனைக் கவ்விப் போதையாக உருப்பெற் றது… போதை வெறியாகப் பரிணமிக்கும் நேரம் தன்னைத்தானே சமாளித்துக்கொண்டான் ஆனந்தன்.
“உள்ளே யாரோ…”
இவன் சொல்லி முடிப்பதற்குள் அதைப் பாதியிலே வெட்டித் துண்டித்துவிட்டுப் பதில் அளித்தாள் பேசிய பழக்கப்பட்ட அந்தக் கூவுங்குயில்!
“எவருமில்லை! கதவு தாழிடப்பட்டுத்தானே இருந்தது.”
கண்ணால் கண்டதும் பொய்-காதால் கேட்டதும் பொய்-. தீர விசாரிப்பதே மெய்!
“இல்லை! என் கண்ணாலேயே பார்த்தேனே!”
“இருக்காதே! இத்தனை நேரமும் நான் கதவருகில்தானே காத்திருந்தேன்,”
“யாருக்காக?”
“எல்லாம் உங்களுக்காகத்தான்”
தேனருவி பாலாற்றில் கலந்து அதைக்கொண்டு பாய்ச்சிப் பயிரிட்ட பழக்குலைகளைப்போல் அந்தப் பதில் இனித்தது ஆனந்த னுக்கு. அவன்-ஒரு துறவி! உலகத்தைத் துச்சம் என்று உதறித் தள்ளிவிட்டு வெளியேறியவன். அவனுக்காக அந்த எழில் வல்லி அந்த நள்ளிரவு நேரத்தில்கூடக் காத்துக்கொண்டிருக் கிறாள். அந்த இளவயதில் அவளுக்கிருந்த பக்தியும் பண்பாடும் பக்குவ நிலையும்! மெய்மறந்தான்-உள்ளம் நெக்குவிட்டுருகியது! ஆண்டவன் அருகே நாதஸ்வரக்காரன் ‘புன்னாக வராளி’ வாசித் துக் கொண்டிருந்தது தெளிவாகக் காதில் விழுந்தது.
“ஏன் தயங்குகிறீர்கள்? உள்ளே வாருங்கள்!”
உள்ளே நுழைந்தான் ஆனந்தன். நீலநிறம் தீட்டப்பட்ட சுவர்கள். அதில் பச்சை ஒளி வீசும், விளக்கு. எதிரேயிருந்த ஒரு பெரிய நிலக்கண்ணாடியில் இவன் உருவமும் தெளிவாகத் தெரிந்தன. அவள்…? ஒரு மலர்ந்த ரோஜா! இவன்..? அதை வட்டமிட்டுச் சுற்றிவரும் வண்டு! சீ! மாயை மறுபடியும் அவன் மனதை…! அந்த மலரைப் பறித்துப் பரமனுக்குப் பூஜை செய்யும் பூஜாரி! முக்திநிலைக்கேற்ற ‘மோகனம்’ அவன் உள்ளத்தில் மலர்ந்து மணம்விட்டது!
கட்டில் -பட்டுமெத்தை-பால்-பழம் – வெற்றிலைத்தட்டு புகைந்துகொண்டிருந்த ஊதுவர்த்திகள் – பிறந்த மேனியைத் திறந்து காட்டும் பெண்கள் ஆனந்தனுக்கு நேரெதிரே ‘நீலாம்புரி’ பாடக் காத்துக்கொண்டு நின்றனர்!
“ஏன் கலங்குகிறீர்கள்? பயப்படாதீர்கள். போலீசார் பயங் கூட இங்கே கிடையாது!”
தாளம் தவறியதால் ராகம் குலைந்தது. நீலாம்புரிக்குப்பதில் ‘முகாரி’ எழுந்தது!
“அப்படியானால் நீ…”
அவள் உரத்துச் சிரித்தாள். சிந்திச் சிதறிய அந்தச் சிரிப் பொலிகட்கு மட்டும் உருவம் இருந்திருந்தால் அவைகளைத் திரட்டிச் சேகரித்திருக்கலாம். அந்தப் பெண்ணின் உதடுகள் வழியாக ஓடிவந்த அத்தனையும் வெறும் மண்ணாக இல்லை- பொன்னாக மின்னின!
“இது தெரியாமலா கதவைத் தட்டினீர்கள்? பரவாயில்லை. சுவாமி! குறுகிய என் வாழ்வில் பலர் குறுக்கிட்டிருக்கின்றனர். இளமை இழந்தவர்கள்-வளமை யொழிந்தவர்கள் வாழ்ந்து கெட்டவர்கள்! அவர்களுக்கெல்லாம் அணைக்கும்போது அமிர்த சஞ்சீவியாக தழுவும்போது தளிர்க்கொடியாக, வெறி கிளம்பும் நேரத்தில் வெறும் பிணமாகத்தான் கிடந்தேன். எப்போதும் பெண்ணாக இருந்ததே இல்லை! ஊர்ந்து – தவழ்ந்து-ஓடியாடி தாண்டிக் குதித்து தளர்ந்து-தடுமாறும் இந்த மனித சமுதாயத் தில் பலரைப் பார்த்திருக்கிறேன். உங்களைப் போன்ற கவர்ச்சி நிறைந்த தோற்றம் என் கண்களுக்குப் புலப்பட்டதேயில்லை. களையொழுகும் உங்கள் முதத்தின் கம்பீரம் என் கன்னிப் பருவ உணர்ச்சிகளை எழுப்பிவிட்டது. உட்காருங்கள்.”
“பாவத்தில் ஊறிப்போன நீ என்னையுமா பாவஞ் செய்யத் தூண்டுகிறாய்?” ஆனந்தன் குரலில் ‘அடாணா’வின் சாயல்தான் இருந்தது!
“நான் மட்டுந்தான் பாவியா? என்னிடம் வந்து போகிற வர்கள்…? அவர்களும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். உள்ளே புகுந்தவுடன் அவர்கள் ஏதோ புனிதம் நிறைந்தவர்கள் போலவும் நான்தான் பாவம் சூழ்ந்தவள் என்றும் பேசுவார்கள். பிறகு கெட்டுப்போன என்னை மேலும் கெடுத்துவிட்டு நான்தான் அவர்களைக் கெடுத்தேன் என்றும் குற்றஞ்சாட்டுவார்கள். சுவாமி ! உலகத்தில் பாவத்துக்கு இருக்கும் சக்தி பரமனுக்கே கிடையாதே!” ‘அடாணா’வைச் ‘சகானாவால் சாந்தப்படுத்தினாள் அந்த வேசி!
ஆனந்தனுடைய தொண்டை வரண்டு போன குறிப்பறிந்து கொஞ்சம் பாலை ஊற்றிக் கொடுத்தாள். உலகம் மெல்லச் சுழலத் தொடங்கியது! ‘இந்தோளம்’ இன்னிசையாகக் கேட்டது எங்கோ இருந்தது!
“உன் பெயர் என்ன?”
“பைரவி’
அவன் அவளைப் பார்த்தான். மூச்சுவிட்டால் ஆடியசையும் பூங்கொடி – அவள் நின்று கொண்டிருந்தாள். தரையில் அல்ல- தகிக்கும் தாபம் நிறைந்த அவன் இதயத்தில்! அவள் மெல்ல அவன் தோளைப் பற்றினாள். பொங்கும் பாலில் அள்ளித் தெளித்த குளிர்நீர்
அவளுடைய தளிருடல்! உதடுகளை உதடுகளால் பொத்திப் போதை யேற்றினாள்.
“சுவாமி! கதிரவன்-அவனைச் சுற்றிவரும் பூமி-அதைச் சுற்றிச் சுழலும் சந்திரன்! ஆண்-அவனைத் தழுவும் பெண். அவனுக்குப் பிறக்கும் குழந்தை! இயற்கையின் அமைப்பே இல்லறத்தைத்தானே கற்பிக்கிறது. அப்படியிருக்க நீர் மட்டும்…
நள்ளிரவு – இன்பவல்லி-எவருக்கும் தெரியாத இடம்- விஸ்வாமித்திரரே மேனகையிடம் தவறித்தானே போனார்! தொட்டுப்படர்ந்த பாவம் அவன் மனதைத் துவளச் செய்யும் நேரம். அவன் கண்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டன. அந்தப் படம்! பாவத்தின் சந்நிதானத்தில் பரமன் ‘நந்தி’யாக்கப் டிருந்தார்!
“படுக்கையறையில் பூஜைக்கூடமா?”
“பதறாதீர்கள் சுவாமி! இங்கே கடவுள், பூஜைக்காக இல்லை. வியாபாரிக்குத் தராசு போல விபசாரிக்குக் கடவுள்! என் கன்னித் தன்மைக்குச் சாட்சி! அவ்வளவுதான்.”
அந்தரத்தில் சுற்றிச் சுழலும் பந்து—அந்தப் பந்தின் சுழற்சி வேகத்தால் கட்டுப்பட்டுக் கரை தாண்டாது குமுறிக் கொந்தளிக் கும் அலைகடல்கள்-கடலின் ஆழத்தை ஈடு செய்யும் அளவுக்கு ஓங்கி உயர்ந்த மலைகள்-கதிரவனால் காய்ச்சப்பட்டுக் கருமுகி’ லான கடல் நீர் மலைகளால் தடுக்கப்பட்டு மழையாகப் பொழியும் விந்தை – மழை நீரால் வளமடையும் வயல்கள்- வயலின் வளத்தை நம்பி வயிறு வளர்க்கும் மனித ஜாதி-கோடானு கோடி மனிதக் கூட்டத்திலே ஒருத்தியான இவள்-அதுவும் ஒரு விபச் சாரி! துரும்பிலும் துரும்பு- துளியிலும் துளி-அணுவிலும் அணு ஆண்டவனைத் துச்சமாகப் பேசிவிட்டாள்!
துள்ளி எழுந்தான் ஆனந்தன் படுக்கையிலிருந்து. ஓங்கி ஒரு அறை! அவளுடைய கன்னம் கன்றிச் சிவந்தது.
“பாதகி! கடவுளையா கயமைக்குத் துணைபுரிய வைக்கிறாய்?”
அவள் அலறவில்லை. துடிக்கவில்லை. ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாள்.
“பரவாயில்லை சுவாமி. இது ஒன்றும் எனக்குப் புது நிகழ்ச்சி யல்ல! பலரிடம் பட்டுப் பழகியிருக்கிறேன். நானே கேட்கிறேன். உம்மை. நானாவது என் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுளைச் சாட்சிக்கண்டில் ஏற்றி வைத்திருக்கிறேன். ஆனால் நீர் கடவுளைக் கைதிக் கூண்டிலேயே நிறுத்தியிருக்கிறீரே ! உழைக் காமல் பாடுபடாமல் வாழ நீர் பயன்படுத்தும் கருவியே கடவுள் தானே!”
வெங்கலத்தில் கூழாங்கற்களை வீசியெறிவது போல ஒரு முறை சிரித்தான் ஆனந்தன்.
“சேறு, சந்தனத்தை வாதத்துக்கு அழைக்கிறது! போடி! பிழைப்பற்றவளே! பாவத்தினால் பிழைக்கும் நீயா பரமன் அடியார் களுக்கு அறைகூவல் விடுக்கிறாய்?”
“கற்றுத் தேர்ந்தவரே! உம்மையே கேட்கிறேன். நான் பிறக்கும்போது கள்ளங் கபட.மற்றவளாகத்தானே பிறந்தேன். ‘குழந்தை உள்ளம்’ என்று உவமையாக்க கூறியிருப்பீரே உபதேசத்தின்போது! என்னோடு கூடப் பிறக்காத பாவங்கள் நான் வளரும்போது என்னை வந்து பற்றினால் அதற்கு நான் பொறுப்பாளியா? அல்லது என்னைப் பாவியாக்கிய இந்த உலகம் பொறுப்பாளியா?”
“ஏன் நீ திருந்தி நல்ல வாழ்க்கை வாழக்கூடாது ?”
“சேறு சகதியும் நிறைந்த இந்தச் சமுதாயத்தில் குப்பையுங் கூளமுந்தான் அதிகமே தவிரக் குன்றிமணிகள் குறைவுதான் சுவாமி சேற்றைச் செம்மைப்படுத்த உழைக்க வேண்டிய உம்மைப் போன்றவர்கள் ஆண்டவனைத் தேடித் திரிந்தால் நான் எப்படி நல்வாழ்க்கை நடத்த முடியும் ?”
துரும்பென்று அவன் எண்ணிய அந்தப் பொருள் இரும்பாக அவன் எதிரே நின்றது ! தோல்வி ! இனி அவனுக்கு அங்கே வேலையே கிடையாது. பேசாமல் அங்கிருந்து நகன்றான்.
வெளியே அந்தத் திருடன் நின்றுகொண்டிருந்தான்.
“அகப்பட்டாயா? வா! போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்று அவன் கையைப் பற்றினான் ஆனந்தன்.
“என்னாய்யா? நீ தேவடியா வீட்டுக்கு வந்துட்டுப் போனதை நான் பார்த்ததுக்கா என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்புடுறே ?” என்று அந்தக் கையை உதறிவிட்டுப் பதிலளித்தான் திருடன்.
பூபாளம் ஒலிக்கும் நேரம். கதிரவன் அப்போதுதான் பழுத்துக்கொண்டிருந்தான். ஆசிரமத்தை அடைந்தான் ஆனந் தன். குருநாதர் தூங்கி விழித்தெழுந்தார்.
“வெற்றி பெற்றுவிட்டேன், சுவாமி! மாயை மண்ணானது” என்று உற்சாகந் தாங்க முடியாமல் உரத்துக் கூவியேவிட்டான்.
“இல்லையப்பா ! அது இன்னும் பொன்னாகத்தான் ஒளி விடுகிறது.” என்று நிதானமாகப் பதிலளித்தார் குருநாதர்.
குருவின் படுக்கையில் வாடி வதங்கிய மல்லிகைச் சரம் ஒன்று கிடந்தது. கசங்கிக் கிடந்த தலையணையில் எண்ணெய்க் கறை படிந்திருந்தது. எப்போதும் வரண்டிருக்கும் குருநாதரின் மொட்டைத் தலை வழக்கம் போலத்தான் காணப்பட்டது
அன்று முழுவதும் ‘சிந்து பைரவி ஆனந்தன் சிந்தையைக் கலக்கியது. இரவு வந்ததும் அவன் அந்த வேசியைத் தேடிப் போனபோது பாவங் குறுக்கிடவில்லை! பரமன் தடுக்கவில்லை ! ஒன்றுபட்டு வாழத் தொடங்கிய அந்தத் துறவிக்கும் வேசிக்கும் எப்போதும் ‘ராக மாலிகை’ கேட்கவேயில்லை. துவளாத, துண்டிக்கப்படாத ஆனந்த பைரவி’ தான் அசைந்து வளைந்து தவழ்ந்து கொண்டிருந்தது!
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
இளையவேணி கிருஷ்ணா
October 9, 2026
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
