பக்தி
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 92
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுக்கடுக்காக ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளிபட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும்போது. ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும் பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி…! எவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியி லிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டான். சேர்ந்து வாழ்ந்தபோது அவைகளுக்கு. ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன் கருக்கித் தீய்த்துவிட்டது. என் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்…! மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட் டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடிதுடித்துப் போனேன்.
பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த அந்த ஆழமான நட்பு கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை, ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது ! அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான். ஒருநாள் பேச்சு வாக்கில் தற்செயலாகக் கவிராயர்.
‘திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தானே துணை’ என்று சொன்னார்.
தங்கப்பன் கொஞ்சம் சு. ம. வாடை படிந்தவன் ! அவனும் விளையாட்டாகவே.
“தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே. அது எங்கே துணை செய்யப் போகிறது?”
என்று சொல்லிவிட்டான். இந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பை பிரித்தது. அந்த ஊர்ப்பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான” சோதாக்களுக்குப் பதிலாகச் கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்தச் சோகச் சித்திரத்தைச் சுட்டிக்காட்டுவது போலக் கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து ‘அபயம்’ அபயம்’ என்று கதறினார். அன்றி லிருந்து தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன!
“ஏமாளித்தனத்தின் சின்னம்” என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன்.
“தடிகொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப்பாம்பு” என்று ஆத்திரப்பட்டார் கவிராயர்.
வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை – திராவிட நாடு – போர்வாள் கொஞ்சம் சொந்தப்புத்தி – இவைதாம் தங்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங் களும். அஸ்திரங்களும் ! ஊர் இரண்டுபட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம்! மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது!
இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன்’ மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டி யாருக்கு அக்கரை பிறந்தது வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத் துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்தால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத் தன. நினைந்து நினைந்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து சாய்ந்தது! பக்தர்களை ரட்சித்துத் துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்!
அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளிகொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப்பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம் – அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள்! நீர்வீழ்ச்சியிலிருந்து தெறித்துவிழும் நீர்திவலைகள் உடல்மேல் படும்போது உண்டா கும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது.
அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்ப னுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள் மேல் பதிந்திருந்தது. காய்ந்து வரண்டு போன அவர்களுடைய உடல்கள்-அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவன் வெம்மை!” இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்குந் தானே” என்பதை நினைத்தபோது அவன் நெஞ்சு பிளந்தது.
அவர்கள் இருவரும் கோவிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவது போல வேகம் வேகமாக மௌனமாக ஒருவரொடொருவர் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.
“ஐயா! ஏழை காலணாக் கொடுங்கோ! கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்!”
தீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக் கூடு” பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள்” என்று சொல்லாமற் சொல்லி நின்றது.
“கடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா” என்று உருக்கமாகச் சொல்லிக்கொண்டே நடந்தார் கவிராயர்.
தங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடங் கொடுத்தான், கவிராயரைக் குறும்பாக ஒருமுறை பார்த்தான்.
“நல்ல வேளை! கடவுள் இதற்காவது உபயோகப்படுகிறாரே! அதுவரையில் லாபந்தான்!” என்று சொல்லிக்கொண்டே நடந்தான்.
இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங் கூட்டத்தையே கூட வைத்துவிட்டது.
கவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்ச லிட்டார் அவர் கட்சி ஆட்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட உருவான பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒரு சில எலும்புகள் ஒடிந்து விழுந் ததுதான்! குற்றுயிரும் குலைஉயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது. இந்த நிகழ்ச்சி செய்தி யாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித் தாள்களிலும், “நாத்தீகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர். என்ற தலைப்போடு வெளியாய்ப் பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா வரைப் பரவியது.
அடுத்த நாள் மாலை வந்துவிட்டார்.
கவிராயரைத் தேடிச் செட்டியாரே!
‘நம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித் தரணும்’ என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார்.
உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்குமே தெரியாது. ஆனால் அப்போது கவிராயர் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங்கழிக்கத் தொடங்கினார்!
ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக் காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்? அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவ தைப் போலத் தோன்றியது: அவற்றை எழுதும்போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார்! கவனிப்பா ரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன!
கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டித் தமிழ் நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்கவொட்டாமல் செய்தது. அத்தனைப் புத்தகங்களையும் அப்படியே எடுத்துப்போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு வேக வேகமாக ஓடினார். செட்டியார் வீட்டை நோக்கி !
உள்ளே செட்டியார் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது.
‘ஏது, இடிஞ்சுக்கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே யிருக்கே?’
புதுக்குரல் கவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது ‘ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக் கரையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான் அப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார் வாயிலிருந்து எதிர் பார்த்தார் கவிராயர்.
“இல்லை. புதிசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறுவேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப் பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சு செலவோடு செலவா இதைக் கட்டித்தொலைச் சுட்டா நாலுபேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில் லாமே இருக்கும் என்றுதான்…’
“டணார்” என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள். கவிராயர் கையி லிருந்த புக்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன. திரும்பி வேகமாக நடந்தார்-ஓடினார் பறந்தார். அடிதாங்காது உயிர்துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப்போய்க் கொண்டிருந்தனர். அதன் எதிரில் போய்விழுந்து “தங்கப்பா என்று கதறினார் கவிராயர். அப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள்மட்டும் நிதானந்தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன!
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
இளையவேணி கிருஷ்ணா
October 9, 2026
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
